Wednesday, May 23, 2012

கண் முன் எழுந்த கோபுரம் !!!

நான் நினைச்சுக்கூட பார்க்கலை இப்படி ஒரு அனுபவமும் வாய்க்கப் போகுதுன்னு! சண்டிகரில் போய் குப்பை கொட்ட வாய்ச்சதும் சனிக்கிழமைக்குக் கோவில்தேடி, பஞ்ச்குலா என்ற இடத்தில் பெருமாளைக் கண்டேன். அங்கே கீதா & சீனிவாசன் என்ற இளம்தம்பதிகளைச் சந்திக்க நேரிட்டது. சாமி கும்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் சாஸ்திரத்துக்காக முன்வாசல் படிகளில் உக்கார்ந்து இருந்தப்ப .... இவுங்களும் வந்து உக்கார்ந்தாங்க. கீதா (அப்புறம் பெயர் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்) வின் புடவையில் யானை எம்ப்ராய்டரி! நல்லா இருக்குன்னு ஹிந்தியில் சொன்னேன். கொஞ்சம் முழிச்சாங்க! அதையே இங்கிலிபீஸில் சொன்னதும் அவுங்களுக்கு மகிழ்ச்சி!

 பேச்சுவாக்கில் அவுங்க கோயமுத்தூர்ன்னு சொன்னதும், ஊருக்குபோய் வரும்போது யானை டிஸைனில் புடவை வாங்கி வரவான்னு கேட்டதும் மகிழ்ச்சி என் பக்கம் வந்துச்சு! அப்பதான் சொன்னாங்க சண்டிகரில் ஒரு முருகன் கோவிலும் இருக்குன்னு! விலாசம் கேட்டால் சரியாச் சொல்லத் தெரியலை. அவுங்க மொஹாலியில் இருக்காங்க. இந்த பஞ்ச்குலாவும் மொஹாலியும் சண்டிகருக்கு ரெண்டு கைகள் போல! பஞ்ச்குலா ஹரியானாவையும் மொஹாலி பஞ்சாபையும் சேர்ந்தவை. வசந்தி என்றவுங்களுக்கு எல்லா விவரமும் தெரியுமுன்னு சொல்லி அவுங்க தொலைபேசி எண்களைக் கொடுத்தாங்க.

 இந்த பெருமாள் கோவிலுக்கு முதல்முறையா வந்தோமுன்னும் சொன்னாங்க. இதுலே ஒரு வியப்பு என்னன்னா........ இந்த சந்திப்புக்குப் பிறகு அவுங்களைக் காணோம். ஊருக்குப் போனவுங்க திரும்ப வரவே இல்லை! ஒருவேளை பெருமாளே நமக்கு கீதோபதேசம் சொல்ல அவுங்களை அனுப்புனானோ என்னவோ!

 தென்னிந்தியர்களுக்கு இந்தக் கோவில் ஒரு மீட்டிங் ப்ளேஸ். கோவையைச் சேர்ந்த ஜோடியைச் சந்திச்சோம். இந்த ஊர் வந்து ஒன்னரை வருசமாச்சாம். முதல்முறையா இந்தக்கோவிலுக்கு வந்துருக்காங்க. பாலாஜியைத் தேடித்தேடி இப்போதான் கிடைச்சாராம்!!!! இங்கே தமிழ்ச்சங்கம் ஒன்னு இருக்குன்னு இவுங்க மூலமாத் தெரியவந்துச்சு. விலாசம், தொலைபேசி எண் எல்லாம் வாங்கிக்கிட்டோம். நல்ல நட்புணர்வு உள்ள இளம் தம்பதிகள். யானை பார்டர் போட்ட புடவையால் அறிமுகம் ஆச்சு

 மேற்படி பாரா ரெண்டு வருசத்துக்கு முன்னே எழுதிய ஒரு பதிவில் இருந்து!

 ஒரு வாரம் கழிச்சு முருகன் கோவிலைத்தேடிப்பிடிச்சுப்போன வரலாறு இங்கே இருக்கு பாருங்க:-)

 ஏழாம்படைவீட்டில் ஏழு வயசு பாலகனுக்கு................பூ நூல் போட்டாச்சு இப்படியாக கோவிலுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் கூடிப்போய் இது நம்ம சொந்தக்கோவில் என்ற எண்ணம் வந்துருச்சு. சண்டிகரை விட்டு வரும்போது கோவிலை விட்டுட்டு வர்றோமேன்னு கலங்குனது நிஜம்.
போன வருசம் மார்ச் ஆறு தேதிக்கு ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டினோம்.  திருநெல்வேலி  மாவட்டத்தில் வள்ளியூர் அருகில் இருக்கும் Pothai Hill என்ற பொத்தை(பொதிகைமலைத் தொடர்) குன்றில் ஸ்ரீ முத்துக்கிருஷ்ணஸ்வாமி மிஷன் அமைத்து நடத்தி வந்தவர் திரு மாணிக்கவாசகம் பிள்ளை அவர்கள். அவர்களின் மறைவுக்குப்பின் அவருடைய மகள் வித்தம்மா ஆசிரமப் பொறுப்பேற்று நடத்திவருகிறார். குருஜி மாதாஜி வித்தம்மா என்று அறியப்படும் இவர் முன்னிலையில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

கோவிலின் பக்கத்தில் இருக்கும் மைதானத்தை நோக்கி இருக்கும்படி அமைந்த மதிள் சுவரை இடித்துவிட்டு அங்கே கோபுரவாசல் இருக்கும்படி கட்ட வேண்டும்.

 வேலைகள் மளமளவென்ன நடக்கத் தொடங்கி கண் முன்னே கோபுரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது. வாரம் குறைஞ்சது மூன்று முறையாவது கோவிலுக்குப்போய் வந்துக்கிட்டு இருந்தோம். ஸ்தபதியும் அவர் குழுவும் கோவில் மாடியில் உள்ள டைனிங் ஹாலில் தங்கி இருந்தாங்க. அவுங்க சமையலுக்குன்னு ஒருத்தர் வந்து மாடியிலே சமைச்சுப் போட்டுக்கிட்டு இருந்தார்.

 நிதி சேர்க்கப்படாதபாடு பட்டுக்கிட்டு இருந்தார் கோவில் நிர்வாகி திரு ஆல் இன் ஆல் ராஜசேகர். நல்ல மேலாண்மை திறமை இவருக்கு. கோவிலில் விசேஷ பூஜைகள் வாராவாரம் நடக்கும். அதுக்கு நிறையப்பேர் ஸ்பான்ஸார் செய்வாங்க. கோவில் கட்ட வந்து இறங்கி இருக்கும் செங்கல்லைக்கூட நாம் 'வாங்கி' கோவிலுக்குக் கொடுக்கலாம். மூணு செங்கல் 11 ரூபாய். மக்களுக்கு இது ஒன்னும் பெரிய தொகையாத் தெரியாது. சின்ன செலவில் நாமும் திருப்பணியில் பங்கு எடுத்தோம் என்ற திருப்தியும் கிடைக்கும். சிறுதுளி பெருவெள்ளம் ஆனது இப்படித்தான்! கருவறை முன் மயில்வாகனத்தருகில் ஒரு பத்திருவது செங்கல் எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கணும்:-))))

 கோவில் குருக்கள் திரு பிரகாஷ் அருமையா  ஸ்வாமி அலங்காரங்கள் செய்கிறார். பூஜைகளையும் அழகா நடத்தறார். எல்லாம்  'முருகன் ' செயல்! 


அதுக்காக கோவில் அன்னதான திட்டத்தை எல்லாம் குறைக்கவே இல்லை. எல்லா விழாக்களுக்கும் விருந்து சாப்பாடு உண்டு. அதுக்கும் நிறைய ஸ்பான்ஸார்ஸ் கிடைத்தாங்க. ஆ.வியில் கோபுரநிதி சமாச்சாரத்தை மக்களிடம் சொல்ல ஒரு கட்டுரை எழுதித்தரக் கேட்டார். அதுக்காக (நம்ம நடையைக் கொஞ்சம் மாத்திக்கிட்டு எழுதிக் கொடுத்தது இது.)கோபுரம் எழுப்ப ஒரு கை கொடுங்களேன், ப்ளீஸ்.......... 


 படியேறியதும் நேராகக் கண்முன்னால் கருவறை! சந்நிதியில் வள்ளி தேவசேனாவுடன் கண்களில் அருள் பொங்கி வழியக் கோவில் கொண்டுள்ளான் எங்கள் சண்டிகர் முருகன். கைகூப்பி நிற்கிறோம். இடதுபுறம் குட்டியா ஒரு ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களுடன் செல்லம் போல் நிக்கறார். சட்னு தூக்கி இடுப்பில் வச்சுக்கலாம் போல கொள்ளை அழகு. குட்டியா அழகான சந்நிதியின் வாசல் மேல்நிலையில் சீதாபிராட்டியுடன் ராமலக்ஷ்மணர்களும் அருள்பாலிக்கிறார்கள். அனுமனின் சந்நிதிக்கு நேராக சதுரமேடையும் விதானமுமாய் அழகாக அமைந்த இடத்தில் நவகிரஹ நாயகர்கள். வட இந்தியாவில் முருகா முருகா என்று சொன்னால்........ அந்த சேவற்கொடியோன் நினைப்பு வருமா..... சேவல் நினைப்புதானே வரும்? அதனால் கார்த்திகேய ஸ்வாமியாக இருக்கார்.
பல ஆண்டுகளுக்கு முன்னே ஒற்றை வேல் வடிவில் உருவான கோவில். தமிழ்நாட்டைவிட்டு இங்கு வந்தோருக்கு 'நான் இருக்க பயமேன்?' என்று சொல்லாமல் சொல்லி காக்கும் கரமாய் நின்ற வேல்.

(ஒவ்வொரு சந்நிதியாக் கட்டி வந்த நேரம்!  பிள்ளையார்  வந்துட்டார்.)


காலப்போக்கில் மெள்ள மெள்ள மூணரையடி கருங்கல் சிலையாக மூலவரும் அவருக்குப் பாந்தமான உயரத்தில் மனையாட்டிகளுமாக கருவறைக்குள்ளில் ஜொலிக்கும் நம் தமிழ்க்கடவுள் அழகன் என்றால் அவன் முருகனே என்பதில் ஐயம் உண்டோ?

 ஒரே ஒரு பிரகாரம். நடுவில் திருச்சந்நிதி. அர்த்தமண்டபத்தில் மயில் வாகனத்தை தன் முன் நிறுத்தி வைத்துள்ள உற்சவர்கள். கருவறையின் சுற்றுச்சுவர்களில் அழகிய மாடங்களில் நர்த்தனகணபதி, தக்ஷிணா மூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை. பிரகாரத்தின் ஒரு புறம் கேட்ட வரம் சித்தி விநாயகர், இன்னொரு புறம் க்ருஷ்ண மாரியம்மன். சண்டிகேஸ்வரர் சாட்சிக்கு நிற்கிறார்.

 நவகிரஹ சந்நிதிக்கு அருகே சதுரமான ஒரு அரங்க மேடை. பின்புலத்தில் பார்வதியின் திருக்கல்யாணக்கோலம். தங்கையை தாரை வார்த்துக்கொடுக்கும் அண்ணன் மஹாவிஷ்ணு. அழகான முகலக்ஷ்ணங்களோடு அமைந்த சுதைச்சிற்பங்கள். கோவிலில் நடக்கும் விழாக்களுக்கும், விசேஷ பூஜையாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குமான மேடை.


 இந்துப் பண்டிகைகள் எல்லாமே இங்கே கோவிலில் கூடிக் கொண்டாடுறோம். முக்கியமா பிள்ளையார் சதுர்த்தி கந்த சஷ்டி, தைப்பூசம், ஸ்ரீராமநவமி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி , ஒன்பது நாட்களும் நடக்கும் நவராத்திரி விழா எல்லாமே கோலாகலம்தான். ஆடிமாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் திருவிளக்கு பூஜை உண்டு. தினப்படி பூஜைகள் ஒரு பக்கம் தினசரி நடந்துகொண்டு இருக்கும்போது சனிக்கிழமைகளில் பெருமாள் முன்பு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும், பௌர்ணமி நாளில் சத்தியநாராயண பூஜையும், அன்று மாலை ஸ்ரீ கிருஷ்ணமாரி அம்மனுக்கு மஹா அபிஷேகமும் தவறாமல் நடத்துகிறார்கள்.

தர்மசாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டபடி கோவில் விசேஷங்களில் அன்னதானம், எளியவருக்கும் அனாதாலயங்களில் இருக்கும் சிறார்களுக்கும் உணவு, உடை, கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடப் புத்தகங்கள் இவைகளை ஏழாம்படை வீடாக சண்டிகரில் குடிகொண்ட ஸ்ரீகார்த்திகேய ஸ்வாமி தாராளமாக அருள்கின்றார்.


 நம் கோவிலில் கீர்த்தி வடதேசங்களில் பரவி, ஜம்மு, பானிபட், அம்பாலா என்ற ஊர்களில் இருந்தும் தெற்கே பெங்களூருவில் இருந்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற வந்து போகிறார்கள். காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும், சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஜகத்குரு ஸ்ரீ வித்யாபினவ கிருஷ்ணநாத தீர்த்த சங்கராச்சாரிய ஸ்வாமிகளும், ஸ்ரீ கோவர்தன பீடம் பூரி (ஒடிஸா) பீடாதிபதி ஜகத்குரு நிஸ்சலநந்தா சரஸ்வதி ஸ்வாமிகளும் நம் கார்த்திகேயஸ்வாமி கோவிலுக்கு வருகை தந்து சிறப்பித்துள்ளானர்.

 கோவிலின் முதல் மஹாகும்பாபிஷேகம் 1992 வது ஆண்டும் இரண்டாம் முறையாக மஹா கும்பாபிஷேகம் 2002 வது ஆண்டும் நடத்தப்பட்டன, உற்சவர் இங்கே குடிகொண்டது 1996வது ஆண்டு. குறைவொன்றும் இல்லாத கோவிந்தனின் மருகனுக்கு ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மனதில் குறையாகத் தோன்றி அதற்கான முயற்சிகளை எடுத்து இந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி திருப்பணி தொடக்கமாக அஸ்திவாரம் தோண்டி அடிக்கல் நாட்டப்பட்டது. கோபுரத்தின் கூடவே ஒரு கொடிமரமும் கட்ட ஏற்பாடாகி உள்ளது.


 தமிழ்நாட்டில் இருந்து ஸ்தபதிகள் வந்து வேலைகளை ஆரம்பித்து விட்டனர். பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை மனம் உவந்து முருகன் ஏற்றுக்கொள்வதில் நம் யாவருக்கும் மகிழ்ச்சி. இந்த வேலை தடைபடாமல் மளமளவென்று நடந்து முடிப்பது எல்லாம் உங்கள் கையில் இருக்கிறது. கோபுர வேலைகளுக்குத் தேவையான செங்கல், மணல், இரும்பு, சிமெண்ட்டு, ஜல்லி, பெயிண்ட் என்று உங்களுக்கு விருப்பமான பொருட்களுக்கு நன்கொடை அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தத் திருப்பணியில் சேர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

 எஸ்.பி. இராஜசேகரன்,
பொதுச்செயலாளர்.

 திருப்பணிக்கு நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி:

 Lord Murugan Bhaktha Samajam (Regd)
 Sri Karthikeya Swamy Temple
 Air Force Temple Complex
 sector 31 D Chandigarh- 160047

 வங்கியில் நேரடியாக பணம் செலுத்த:

Canara Bank SB Account # 1625101010866

 கோவிலில் வலத்தளத்தில் முழுவிவரத்தையும் பார்க்க. http://www.chandigarhtamilsangam.in/

 தொலைபேசித் தொடர்புக்கு: 0172 2611191 செல்பேசி எண் 09417340609 மின்மடல்: karthikeyaswamychd@gmail.com ========================================================================
ஏற்கெனவே கருவறை விமானம் ஒன்னு அழகிய சுதைச்சிற்பங்களுடன் இருந்துச்சு. டைனிங் ஹால் வழியா அங்கே போக வழியும் இருக்கு. உயரம் குறைவு என்றபடியால் தெருவில் இருந்து பார்த்தால் இது தெரியாது. மேற்கூரை முழுதும் தளம் அமைச்சு மொட்டை மாடியாகவும் நடுவிலே ஒட்டிப் பிடிச்சதைப்போல இந்த விமானமும் இருக்கும்.


 கட்ட ஆரம்பிச்சு நாலே மாசத்தில் அஞ்சு நிலையும் முடிஞ்சுருச்சு. நாங்க சண்டிகரில் இருந்து கிளம்பும் சமயம் அது. சுதைச்சிற்பங்கள் எல்லாம் இனிமேல்தான் செய்வோமுன்னு ஸ்தபதி தியாகராஜன் சொன்னார். அதுக்குதான் நாள் நிறைய ஆகுமாம்.இவருக்கு வெளிநாடுகளில் நிறைய கோவில்களுக்கு ஸ்தபதியா இருந்த அனுபவம். நம்ம சென்னை எல் பி ரோடில் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சுக்கு எதிரில் இருக்கும் மாரியம்மன் கோவில் கூட இவர் கைவண்ணம்தான். மகாபலிபுரம் சிற்பக்கலைக் கல்லூரியில் படிச்சவர்.
பொம்மை செய்யறதைக் கூட இருந்து பார்க்க முடியலை என்று மனவருத்தப்பட்டேன். கோபுரத்தில் வச்சுப்பிடிக்க நிறைய காங்க்ரீட் சமாச்சாரங்கள் மோல்ட் பண்ணி வச்சுருந்தாங்க.


ஆச்சு. 15 மாசங்களில் எல்லா வேலைகளும் முடிஞ்சு கோபுரம் கும்பாபிஷேகத்துக்குத் தயாரா நிக்குது. ஸ்ரீதேவி பூதேவியருடன் ஸ்ரீநிவாசப்பெருமாள், பத்மாவதித் தாயாருடன் ஸ்ரீவெங்கடேசன், பாற்கடலில் பள்ளி கொண்ட அநந்த பத்மநாபன், வெண்ணைத்தாழிக் கண்ணன், காளிங்க நர்த்தனம், ஈசனும் உமையும் என்று அருமையான சிற்பங்களுடன் நூதனராஜ கோபுரம்!

 கோவிலுக்குள்ளே கடவுளர்கள் மீனாட்சி, நர்மதேஸ்வரர், காலபைரவர், பாலமுருகன், சரஸ்வதி ஆகியோருக்கு கூடுதல் சந்நிதிகளும் கட்டி இருக்காங்க.
விழாவுக்கான அழைப்பிதழ் இத்துடன் அனுப்புகிறேன். நேரில் போக முடிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் இருந்த இடத்தில் இருந்தே மானசீகமா தரிசனம் செஞ்சு அருள் பெறலாம் எங்களைப்போல!

 முருகா முருகா! 


 PIN குறிப்பு: அதான் கோவில் கட்டி முடிச்சாச்சேன்னு இருக்காமல் பொருளுதவி செய்ய யாருக்காவது விருப்பம் இருந்தால் மேலே உள்ள இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஆவிக்கு சொன்னதே உங்களுக்கும்:-))))

14 comments:

said...

//கன்யாகுமரி மாவட்டத்தில் வள்ளியூர் அருகில் இருக்கும் Pothai Hill என்ற பொத்தை(பொதிகைமலைத் தொடர்)//

துள்சிக்கா.. வள்ளியூர் திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குது. இதோட தங்கையான தெற்கு வள்ளியூரும் பக்கத்துலேயேதான் இருக்குது.

கண்ணுல கண்டதும் சொல்லாமப் போக முடியலை. அதான் இங்கே குறிப்பிட்டேன்.

இடுகையை முழுசும் படிச்சுட்டு வரேன்.

said...

இருக்கும் இடத்தில் இருந்தே (பூசலார் போல) மானசீகமாக தரிசனம் செய்து ஆசி பெறும் நிலைதான் என்னுடையது. கோயிலைப் பற்றிய இந்தப் பதிவும், ஆ.வி.க்காக நீங்கள் எழுதியரும் அருமை டீச்சர்!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆஹா...... அடி சறுக்கிருச்சே!!!!!

கன்யாகுமரி நோக்கிப்போகும்போது கண்ணில் பட்ட ஊர்! அதான் தவறா நினைச்சுக்கிட்டேன்:(

தலையில் ஒரு குட்டு வச்சுகறேன்ப்பா.

திருநெல்வேலின்னு இதோ போய் மாத்திடறேன்.

நன்றிப்பா.

said...

வாங்க கணேஷ்.

நானும் பூசலார் வழிதான்.

வருகைக்கு நன்றி.

said...

//கோவில் கட்ட வந்து இறங்கி இருக்கும் செங்கல்லைக்கூட நாம் 'வாங்கி' கோவிலுக்குக் கொடுக்கலாம். மூணு செங்கல் 11 ரூபாய். மக்களுக்கு இது ஒன்னும் பெரிய தொகையாத் தெரியாது. சின்ன செலவில் நாமும் திருப்பணியில் பங்கு எடுத்தோம் என்ற திருப்தியும் கிடைக்கும்.//

அருமையான ஐடியாவா இருக்கே.

சில கோயில்களில் சின்னதா பூஜை நடந்தாக்கூட ஒருத்தர் பூவுக்குப் பொறுப்பேத்துப்பார். இன்னொருத்தர் பிரசாதம் செஞ்சு கொண்டாருவார். இன்னொருத்தர் பூஜைப்பொருட்களுக்கான உபயத்தை ஏத்துக்குவார். ஆக மொத்தம் அருமையா விழாக்கள் நடக்கும். அந்த மாதிரி இருக்கு.

said...

கணேஷ் சொன்னது போலப் பூசலார்
செட் தான் நானும். நீங்கள் செய்த உதவி முருகன் மனதில் நன்றாகப் பதிந்திருக்கும். ஒருவேளை உங்க ஊரிலியே வந்தாலும் வந்துவிடுவார் பாருங்கள்.
தினம் நான் பார்க்கும் கந்தசஷ்டி கவசம் ஒளிபரப்பில் வள்ளிமலை குமரி என்று காட்டுவார்கள் .ஒரு குட்டி முருகன் மாலைகளுக்கு நடுவில் இருப்பார். இரண்டு வள்ளியூர் இருக்கோ என்னவோ.

said...

ஆமாம் அமைதிச்சாரல்.

இங்கே கோவிலில் ஒரு பெரிய அறிவிப்புப் பலகை வச்சு அன்னதானத்துக்கோ இல்லை விசேஷ பூஜைகளுக்கோ என்னென்ன வேணுமுன்னு எழுதி அதுக்குண்டான செலவையும் எழுதிப்போட்டுருவாங்க.

முழுசா வாங்கித்தர முடியலைன்னாலும் முடிஞ்சதைக் கொடுக்கலாம். உடனுக்குடன் அவர்கள் பெயர்களை அதே போர்டில் எழுதிருவாங்க.

மனுசனுக்குத் தன்பெயர் பார்க்கும்போது அடுத்த முறை இன்னும் கொஞ்சம் கூடவே கொடுக்கலாமுன்னு தோணும் இல்லையா?

அருமையான உளவியல் நடவடிக்கைப்பா!!!!!

said...

வாங்க வல்லி.

ஆஹா.... ரெண்டு வள்ளியூரா??? பேஷ் பேஷ்.

முருகன் இங்கே ஆக்லாந்துக்கு வந்துட்டார்ப்பா.

நம்மூர்க்கு எப்போன்னு தெரியலை:(

said...

//கந்தசஷ்டி கவசம் ஒளிபரப்பில் வள்ளிமலை குமரி என்று காட்டுவார்கள் .ஒரு குட்டி முருகன் மாலைகளுக்கு நடுவில் இருப்பார்//

@வல்லிம்மா.. நீங்க சொல்றது குமரி மாவட்டத்துல இருக்கும் வெள்ளி மலையைத்தான். மண்டைக்காடு போகும் வழியில் இருக்குது.

நீங்க குறிப்பிட்ட மாதிரி வடக்கு, தெற்குன்னு ரெண்டு வள்ளியூர் இருக்குதுதான், ஆனா, ரெண்டும் திருனேலி மாவட்டத்துல மட்டுமே இருக்குது. இன்னொரு உபரித்தகவல்,.. என்னோட ரெண்டு பாட்டி வீடுமே தெ.வள்ளியூரில்தான் இருக்கு :-)

said...

எப்போது உங்கள் பதிவில் உள்ள படங்கள் படபடவென்று தரவிறக்கம் ஆகி விடும். இந்த முறை சற்று தாமதம் ஆகிவிட்டது.

அப்புறம் இந்த கோவில் சமாச்சாரங்களுக்கு நிதியுதவி போல பள்ளிக்கூட சமாச்சாரங்களுக்கு நிதியுதவி கேட்பவர்களைப் பற்றியும் எழுதுங்களேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வல்லி இங்கே பாருங்க.

உள்ளூர்காரவுஹ சொல்லிட்டா அப்பீலே இல்லை:-)

said...

வாங்க ஜோதிஜி.

ரொம்பநாளாச்சே இந்தப்பக்கம் உங்களைப் பார்த்து! நலமா?

சமயம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளிநிதி கேக்கறது(ம்) உண்டு.

//பொதுவா நாம் செய்யும் நல்ல காரியங்களை ஓசைப்படாமச் செய்யறதுதான் உத்தமம். வலது கை கொடுக்கறது இடது கைக்குக்கூடத் தெரியக்கூடாதுன்னு சொல்வாங்க அந்தக் காலத்துலே. ஆனாப் பாருங்க, இந்த மாதிரி சேவைகளுக்கு எப்பவுமே நிதி உதவி தேவைப்பட்டுக்கிட்டே இருக்கு. நிலமை அவ்வளவுக்குத் தீவிரம். இதைப் படிக்கும் நல்ல உள்ளங்கள் எதாவது கொடுக்கவேணுமுன்னு நினைச்சால் உதவலாமேன்றதுக்காகத்தான் இதை இங்கே எழுதுனது. //

இந்தப் பாரா முன்பு ஒரு நிதிப்பதிவில் எழுதுனதுதான். நேரிடையாக் கேக்காம கேட்பேன். விருப்பம் இருப்பவர்கள் தொடர்பு கொண்டு உதவி செய்யறாங்க.

நிறைய சுட்டிகள் கொடுக்கலாம். தேட இப்போ நேரம் டைட்.

ஒரு மாதிரிக்கு இங்கே பாருங்க.

http://thulasidhalam.blogspot.co.nz/2009/10/blog-post_26.htmlhttp://thulasidhalam.blogspot.co.nz/2006/03/blog-post_19.html


http://thulasidhalam.blogspot.co.nz/2007/02/2.html

said...

தர்சனம் பெற்றுக்கொண்டேன்.

said...

வாங்க மாதேவி.

தினமலரில் கோவில் கும்பாபிஷேகம் பற்றிய தகவல் வந்துருக்கு. முதல் பக்கத்தில் பிற மாநில தமிழர் செய்திகள் பகுதியில் பாருங்க.