சென்னையில் எனக்கு இன்னொரு மூத்த அண்ணன் இருக்காருன்னு உங்களுக்குத் தெரியுமோ? ச்சும்மா ஒரு பத்து வருசமாத்தான் இவர் கிடைச்சார்! உண்மையில் இவர் நம்ம துளசிதளத்தின் வாசகர்! ஒரு பயணத்தில் இவரை சந்திக்கப் போனதும், குடும்பம் அப்படியே என்னை தத்து எடுத்துக்கிச்சு. அப்புறம் அப்படியே வலைப்பதிவராகவும் ஆனார். ஏனாம்? அவரே சொல்றதைப் பாருங்க.....
நான் ஏன் வந்தேன்?
மே 26, 2006 sivagnanamji ஆல்
எனக்கு பொழுது போகனும்.புத்திசாலிகளோட கருத்து பரிமாற்றம் செய்யனும்.புதிய விவரங்களை தெரிஞ்சுக்கனும்
எல்லா வலைப்பதிவாளர்களும் எல்லா நாளும் எழுதுவதில்லை.
டிபிஆரின் என்னுலகமும் என்கதைஉலகமும் வாரத்திற்கு
3 நாள் வ்ராது.துளசி அம்மா “
“நா இன்னா தினசரியா ந்டத்றேன்”இம்பாங்க.திடீர்னு காணாமப்போறது
“என் பிறப்புரிமை(பெரிய சுயராஜ்ஜியம்)னு கைப்புள்ளை சொல்வார்.
மதுமிதா நம்மளப்பத்தி ஆராய்ச்சி பண்ணனுமாம்.
அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன். படிங்க.ஆண்டவன்(கடவுள்யா
உங்களைக் காப்பாற்றுவார்.என்னையும் கூட காப்பற்றக்கூடும்.
பேராசிரியர் ரொம்ப எழுதலைன்னும் சொல்லலாம். 2008 ஆகஸ்ட் ... எழுதுனது கடைசிப் பதிவு. எவ்வளவோ சொல்லியும் ரைட்டர்ஸ் ப்ளாக் வந்துருச்சுன்னு கலாட்டா பண்ணியும் கூட..... ஒன்னும் எழுதலை. ஆனால் தினசரி நம்ம துளசிதளத்தை வாசிச்சுருவார். (அப்பெல்லாம் வாரம் அஞ்சு, ஆறு பதிவுகள் எழுதிக்கிட்டு இருந்தேன் :-) புதுத் துடைப்பம் ரொம்ப நல்லாப் பெருக்குமுல்லே? ) ஒருநாள் பதிவு வரலைன்னா உடனே மெயில் அனுப்பிடுவார். பேராசியர்.... ஒரு சரித்திர டீச்சரை மிரட்டுவாருன்னா நம்புவீங்கதானே? :-)
இவரது வலைப்பக்கம்... இது !
வீட்டுக்கு வர்ரோமுன்னு சேதி சொல்லிட்டா... அவ்ளோதான்... நாம் போய்ச் சேரும்வரை குட்டி போட்ட பூனைதான் :-) அண்ணி சொல்லி ஆச்சரியப்படுவாங்க. ஏன் இப்ப இவரைப் பத்தி இங்கே விஸ்தரிக்கிறேன்னா.... இப்ப இவர் நம்முலகில் இல்லை.... சாமிகிட்டே போயிட்டார் :-( (இப்ப இதை எழுதும்போது மனசு கனத்துப்போயிருச்சு....
அந்த இழப்பு இங்கே...
சேதி வந்தப்ப என்னால் நம்பவே முடியலை.... அவரை ஒரு மூணு வாரத்துக்கு முந்திதான் பார்த்துட்டு வந்து இருக்கோம். அதுக்குள்ளேயா............ ப்ச்....
ஒவ்வொரு பயணத்திலும் கொஞ்சநேரமாவது சிஜி அண்ணன் வீட்டுக்குப் போய்வரும் வழக்கபடி இன்றைக்கும் நாம் அங்கே போனோம். மகனுக்கு ரெண்டாவது குழந்தை பொறந்துருக்காள். செல்லம் அப்படி ஒரு அழகு!
அண்ணந்தான் ரொம்ப முடியாமல் கிடப்பில்.... மகன் பிரஸன்னாதான் முழுப்பொறுப்பையும் ஏத்துக்கிட்டு, அப்பாவைக் கண்போல் பார்த்துக்கிட்டு இருக்கார். அந்தக் கம்பீரமான உடம்பு பாதியா இளைச்சுக்கிடக்கு. ஒரு மணி நேரம்போல இருந்து பேசிட்டுக் கிளம்பினோம். இவருடைய கவலையால் அண்ணியும் இளைச்சுப்போயிட்டாங்க. பெருமாள் காப்பாத்தணும்....
மனசே கொஞ்சம் சரி இல்லைன்னு வேறெங்கும் போகாம அறைக்குத் திரும்பிட்டோம். நம்மவர்தான்.... துக்கப்பட்டு என்ன ஆகப்போகுது.... எல்லாம் கடவுள் கையில்னுட்டு, ஒரு ஸூட்கேஸ் வாங்கிக்கணும். போயிட்டு வரலாமுன்னார். பிக்பஸார் போய் ஒரு பெட்டி வாங்கிக்கணும்.
நியூஸியில் இருந்து கிளம்பும்போது வழக்கத்துக்கு மாறா சின்னப் பெட்டிகள் ரெண்டு எடுத்துப்போயிருந்தோம். இந்தப்பயணத்தில் நேபாள் முக்திநாத்துக்கு முன்னுரிமை கொடுத்துருந்தோம் இல்லையா? அங்கே உள்நாட்டு விமானங்களில் பெரிய பெட்டிகளைக் கொண்டு போக முடியாதாம். சின்ன சின்ன விமானங்கள்தான். பொதுவா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அனுமதிக்கும் எடையில் பாதிதான் கொண்டு போனோம். இங்கே திரும்பி வரும்போதுதான் ஏர்லைன்ஸ்க்காரன் கொடுக்கும் எடையில் நூறு கிராமைக்கூட விடாமல் கொண்டு வந்துருவேன். பெரிய பெட்டி வாங்கினால் ஆச்சுன்னு..... இருந்ததுதான்.
பாண்டிபஸாரில், ஒரு வணிக வளாகம் இருக்கு தெரியுமோ? சென்னை கார்ப்பரேஷன் கட்டி விட்டுருக்குது. நடைபாதைக் கடைகளை ஒழிக்கும் முயற்சி. இங்கே ஸூட்கேஸ் , பைகளில் ஸிப் ரிப்பேர்னு செஞ்சு கொடுக்கறார் ஒரு பெரியவர். அங்கேயே சில பெட்டிகளை விற்பனைக்கு வச்சுருந்ததைப் போன பயணத்தில் பார்த்த நினைவு. முதலில் அங்கே போய் பெட்டிகள் ஏதும் கிடைக்குமான்னு பார்க்கணும்.
வணிகவளாகத்தின் முன்புறம் எல்லாம் பூக்கடைகள். உள்ளே போறப்பயே மழை பிடிச்சுக்கிச்சு. பெரியவரிடம் நமக்கு வேண்டிய அளவில் பெட்டிகள் ஒன்னுமில்லை. மழை நிக்கட்டுமேன்னு கீழ்தளத்தில் கொஞ்சம் சுத்துனதில் செயற்கைப்பூச்சரங்கள் கிடைச்சது. மாலைகளும் கூட.... ரொம்பவே அழகானவைகள்தான்.....
பிக்பஸாரில் பெட்டி வாங்கிக்கிட்டு, கீதா கஃபேயில் என்னத்தையோ சாப்பிட்டுட்டு அறைக்கு வந்தாச்சு. கொஞ்ச நேரம் வலை, தினசரின்னு மேய்ச்சல்.
சென்னைக்கு வந்தால் எனக்கு ஹிந்து பேப்பர் கட்டாயம் வேணும். அதில்தான் சென்னையில் அன்றாடம் நடக்கும் கலைநிகழ்ச்சிகள் பற்றி இருக்கும். நம்ம லோட்டஸில் ஹிந்து மட்டும் ஒன்னே ஒன்னு வாங்குவாங்க. டைம்ஸ் ஆஃப் இண்டியாதான் நிறைய காப்பி பார்த்த நினைவு. வர்ற ஒரு ஹிந்துவை எனக்கு எடுத்து வைக்கச் சொல்லி ஒரு வேண்டுகோள் கொடுத்து வைச்சால் ஆச்சு:-)மேலோட்டமாப் பார்த்துட்டு, முக்கிய நிகழ்ச்சிகளைக் கவனிச்சால் எனக்குப் போதும். கூடிவந்தால் ஒரு அரைமணி மேய்ச்சல். அம்புட்டுதான் :-)
அன்றைக்கு ஒரு சுவாரஸியமான (!) நிகழ்ச்சி இருக்குன்னு நம்மவருக்கு ஒரு அபிப்பிராயம். பார்க்கலாம்..... டிக்கெட் கிடைக்குமான்னு .....
சாயங்காலம் தில்லக்கேணி போகணும். நம்ம பார்த்தஸாரதி கூப்புட்டுருக்கார். போனோம். தரிசனம் ஆச்சு. இங்கே இலவச தரிசன வரிசையில் போறதுதான் நல்லது. மூலவரை ஸேவிக்குமுன் ராமரையும், ரெங்கனையும் ஸேவிச்சுக்கலாம். இங்கே மட்டும் அஞ்சு பெருமாள்ஸ் இருக்காங்க, தெரியுமோ? மேலே சொன்ன மூவரும், கஜேந்திர வரதரும், யோகநரஸிம்ஹருமா...... ஐவர்! தாயார் வேதவல்லிக்கும், நம்ம ஆண்டாளம்மாவுக்கும் தனித்தனிச் சந்நிதிகள்.
மூலவருக்குப் பளிச்ன்னு வெளிச்சம் போட்டுருப்பதால், உள்பிரகாரத்துலே இருந்தே கூட இவரை தரிசனம் செஞ்சுக்கமுடியும். எளியவர்! ஒன்பதடி உசரம்! முட்டைக் கண்ணும் முறுக்கு மீசையுமா..... ஆஹா.... கையில் கூட சக்கரம் கிடையாது. அதான் பாரதப்போரில் ஆயுதம் எடுக்கறதில்லைன்னு சொல்லி இருந்தாரே....
கிட்டே போய் தரிசனம் செஞ்சால் மூலவர்கூட , மனைவி ருக்மிணி, அண்ணன், தம்பி, மகன், பேரன்ன்னு அவர் குடும்பமே இருக்கும்! இது ஒரு திவ்யதேசக்கோவிலும் கூட ! பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க.
இங்கத்துச் சக்கரைப்பொங்கல் கொஞ்சம் விசேஷமானதும் கூட... மறந்துடாதீங்க..... திருப்பதிக்கு லட்டு போல....ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பால்கோவா போல.... ஹிஹி...
இன்னும் ஒரு முக்கிய விசேஷமுன்னா.... நம்ம யோகநரஸிம்ஹர் சந்நிதியில் இருக்கும் மணிகளுக்கு நாக்கு கிடையாது. ஆழ்ந்த நிஷ்டையில் இருக்கும்போது மணியே ஆனாலும் பேசப்டாது, கேட்டோ! மூச்! (அடுத்த முறை போகும்போது கவனிச்சுக்குங்க!)
நிம்மதியான தரிசனம் முடிச்சுட்டு, வெளியே மண்டபத்துக்கு இடதும் வலதுமா இருக்கும் கடைகளில் நமக்கிடதுபக்கக் கடைகளில் போய் எதாவது பொம்மை (எனக்கில்லைப்பா.... கொலுவுக்குத்தான்!)இருக்கான்னு பார்க்கலாமுன்னு போனா.... அங்கே இருக்கும் இன்னொரு மண்டபத்தில் ஸ்வாமி புறப்பாட்டுக்கான பல்லக்கு தயாராகிக்கிட்டு இருக்கு!
நமக்கு இதுதான் முதல்முறை இப்படிப் பார்க்கிறதே..... ஆனாலும் இன்னும் ரொம்ப நேரம் ஆகுமுன்னு பட்டர்ஸ்வாமி சொன்னதால்..... பல்லக்கில் பெருமாள் இருப்பதை மனக்கண்ணில் பார்த்துட்டுக் கிளம்பிப்போனது நாரதகான சபாவுக்கு!
பாரத் சங்கீத் உற்சவம் 2016 (பத்து நாட்கள்!!) நடத்தறது யார் தெரியுமோ? அப்பொல்லோ ஹாஸ்பிடல்ஸ்! ( அங்கே அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக்கிட்டு இருக்கும்போது என்ன உற்சவம் வேண்டிக்கிடக்குன்னு யாரும் பொங்கல் வைக்கலைபோல !!! இது அப்போ.... இப்போ அம்மாவையே காலி பண்ணி அனுப்பிச்சுருச்சு அப்பல்லோ.....)
இதோ அடுத்த மாசம் டிசம்பர் கச்சேரிகள் ஆரம்பிச்சுத் தூள் கிளப்பப்போகுது. நாம்தான் இங்கே இருக்கமாட்டமே.... சபா வாசலை ஒருதடவையாவது மிதிக்காட்டா சாமிக் குத்தம் வந்துடாது?
டிக்கெட் கிடைக்காதுன்ற நம்பிக்கையோடு போனால் கிடைச்சே கிடைச்சுருச்சு. சினிமாப் பிரபலங்கள் பங்கெடுக்கறாங்கன்னாலும்.... மக்களுக்கு நிழல் பிடிக்கறது போல நிஜம் பிடிக்கறதில்லை......
Naughty நாரதரின் பாட்டு மன்றம்.
இன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு :
மக்களிடையே பக்தி, ஞானம், இசை ஆர்வம் வளர பெரிதும் உதவியது கர்நாடக இசையா? திரை இசையா?
சுபஸ்ரீ தணிகாசலம் நடத்திக்கொண்டு போன நிகழ்ச்சியில்...
நாரதர் : ஒய் ஜி மகேந்திரன்
கர்நாடக இசையின் சார்பில் பங்குபெற்றவர்கள்.
நெய்வேலி சந்தானகோபாலன்
குமரேஷ் (வயலின் கலைஞர்)
சுசித்ரா (ஹரிகதை காலஷேபம் செய்பவர்)
கூடவே கணபதிராமன் மிருதங்கம், நர்மதா வயலின் இசைத்தனர்)
திரை இசை சார்பில்:
கங்கை அமரன்
தீபன் சக்ரவர்த்தி
வழுவூர் மாணிக்க விநாயகம்.
கூடவே கீ போர்டு, தப்லா இசைத்த இருவர்.
கங்கை அமரன், அண்ணன் பாட்டைக் கொண்டாடிக்கிட்டு
ஜனனி ஜனனி, அம்மா என்றழைக்காத ,
காற்றில் வரும் கீதமே....ன்னு கல்யாணியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்...
தீபன் சக்ரவர்த்திக்குத்தான் நிறைய பாடல்கள். அவருடைய ஏற்பாடோ இந்த நிகழ்ச்சி!
வாராய்.... நீ வாராய்.......
ஹப்பா...... அப்பா பாட்டு! இன்னமும் கூடக் கேக்கச் சலிக்காத எவர்க்ரீன் ஸாங் !
அப்புறமும் அப்பப்ப
எல்லோரும் கொண்டாடுவோம்....
கல்யாண சமையல் சாதம்
நீயல்லால் தெய்வமில்லை.... எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா...
நிகழ்ச்சியின் மாஸ்டர் பீஸ் ..... 'கிருஷ்ணா முகுந்தா ' கண்ணை மூடிக்கிட்டுக் கேக்கணும்! கேட்டேன்.....
எதிர்தரப்பில் சுசித்ரா..... கர்நாடக இசைதான் பக்திக்கே ஆதாரமுன்னு ஆணித்தரமாப் பேசுனாங்க.....
நிகழ்ச்சி....ரொம்ப ஓஹோன்னு சொல்ல முடியாது. ஆனால் நல்லாதான் இருந்தது.
நாரதரின் தீர்ப்பு : இரண்டும்தான் :-)
நேத்து இந்தப் பதிவை எழுத ஆரம்பிச்சதும் பழைய நினைவுகள் மனசுக்குள் கொசுவத்தியாப் புகைய ஆரம்பிச்சது..... நம்மவரிடம் கொஞ்சம் இதைப் பற்றிப் பேசிக்கிட்டு இருந்தேனா..... அப்படியே வாராய் நீ வாராய் பாட்டு பாடுனதும்.... எப்படி பாடல்வரிகள் நினைவுலே இருக்குன்றார்!
அப்பெல்லாம் சிம்பிள் பாட்டுகள். சிசுவேஷனுக்குத் தகுந்தாப்லெ எழுதி இருக்காங்க. இந்த வாராய் லேயே பாருங்க..... நாயகன் எதுக்காக மலை உச்சிக்குக் கூட்டிப்போறான்னு பாட்டுலேயே கோடி காட்டறான்.... நாயகிதான் பேமாலமாட்டம் கூடவே தொடர்ந்து பாடிக்கிட்டே போறாள்! கடைசியில் ஏமாந்தது யார்? ஹிஹி....
பாடல் வரிகளும் இசையும் கூட அப்படி ஒரு அழகுதான்!
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
ஆனந்தம் பொங்குதே
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
அங்கே வாராய்
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ (2)
அழிவிலா மோன நிலையைத் தூவுதே
முடிவிலா மோன நிலையை நீ
முடிவிலா மோன நிலையை நீ
மலை முடியில் காணுவாய்
வாராய் வாராய்
ஈடில்லா அழகை சிகரம் மீதிலே கண்டு இன்பமே கொள்வோம்
இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவாய் அங்கே
வாராய்
புலியெனைத் தொடர்ந்தே புதுமான் விழியே வாராய்
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
எனக்குப் பழைய படங்கள் என்றால் உசுரு. அதுவும் நான் பொறக்கறதுக்கு முந்தி வந்தப் படங்கள்னா வெல்லம். ஒரு காலத்துலே நம்ம வெஸ்ட் மாம்பலம் நேஷனல் தியேட்டரில் (இன்னும் இருக்கா என்ன?) பழைய படங்கள்(தான்) போடும்போது நானும் என் தோழியும் ரெகுலர் கஸ்டமர்ஸ். தேடித்தேடிப் பார்த்ததெல்லாம் இப்ப நினைச்சாலும் இனிக்குது!
அப்போ பாட்டில் இருந்த இனிமை கிட்டத்தட்ட 2000 வரை தொடர்ந்தது உண்மை. அதுக்கப்புறம் வந்த பாடல்களின் இசை அவ்வளவாச் சொல்லிக்கிறமாதிரி இல்லை.......ஆனாலும் தாக்குப்பிடிச்சது..... இப்ப சமீபகாலமா வர்ற பாட்டுகளும் இசையும்..... வெறும் சத்தமும் இரைச்சலும்தான்...... ப்ச்....
என்னைப் பொறுத்தவரை ஒரே வார்த்தையில் சொல்லணுமுன்னா.... த்ராபை.
(இசை ரசிகர்கள் கோச்சுக்காதீங்க ப்ளீஸ்!)
பழசு நல்லா இருப்பதால்தானே சூப்பர் சிங்கர் மொதக்கொண்டு எல்லா போட்டிகளிலும் இப்பத்துக் குழந்தைகளும், இளைய தலைமுறையும் பழசையே பாடுது இல்லையோ!!!
இப்படியாக அன்றையப் பொழுது ஒருவித மனநிறைவுடன் கடந்து போச்சு :-)
தொடரும்..........:-)
19 comments:
படித்தேன், (வருந்தினேன்) ரசித்தேன்.
ஒரே பதிவில், பதிவர் சந்திப்பு, ஷாப்பிங்க், இசை நிகழ்ச்சி என அனைத்தும்.
சந்தித்த பதிவர் இப்போது இல்லை என்பதில் வருத்தம்.....
தொடர்கிறேன்.
சகோதரரைப் போன்றவரின் இழப்பினைப் படித்தபோது மனம் கனத்தது. அதனை நீங்கள் பகிர்ந்த விதம் உங்களின் பாசத்தை வெளிப்படுத்தியது.
இன்றைய இசை வெறும் சத்தம் என்பது உண்மையே.
சிவஞானம்ஜியைப் பற்றி முன்னமேயே எழுதியிருக்கீங்க.
யோக நரசிம்ஹர் சன்னிதியின் மணி - அடுத்த முறை கவனிக்கிறேன்.
பார்த்தசாரதி கோவில் சர்க்கரைப் பொங்கல் - அது எங்க கிடைக்குதுன்னு தெரியலை. ஆனால் பிரசாத ஸ்டாலில், இதுவரை சர்க்கரைப் பொங்கல் நன்றாக இருந்தது இல்லை (சென்ற முறை தவிர)
இடையில் பாட்டுமன்றத்துக்கும் போனீர்களா? கேன்டீன் இல்லை போலிருக்கு. இருந்திருந்தால் அதைப்பற்றியும் சொல்லியிருப்பீங்களே.
நன்றி
சுபஸ்ரீ நடாத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் தேடித்தேடிப் பார்க்கும் விசிறிகள் நாங்கள். இதை தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை. உங்களின் அனுக்கிரகத்தில் பார்த்தாயிற்று வாசித்து அறிந்தாயிற்று
கேண்டீன் வடை, காஃபிலாம் பதிவில் வரல
mika Arumai Thulasi.
உங்களுக்குத்தான் எத்தனை ரசனைகள்
வாங்க ஸ்ரீராம்..
வாழ்க்கையில் எப்படி இன்பமும் துன்பமும் ஒன்னோடொன்னு கை கோர்த்துக் கூடவே வருதுன்னு பாருங்க.....
வாங்க வெங்கட் நாகராஜ்.
தனித்தனியா எழுதலாம்தான்.... ஆனால்..... தொடர் இழுத்துக்கிட்டே போகுதேன்னு..... கோர்த்து விட்டுட்டேன்:-)
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
சிஜி & குடும்பம் இணையம் கொடுத்த கொடை! எழுத்து எப்படி ஒரு கூட்டத்தைச் சேர்த்துருது பாருங்க !!!
வாங்க விஸ்வநாத்,
கொஞ்சம் பயந்துக்கிட்டேதான் எழுதினேன். .... உண்மையைச் சொல்லக்கூட ... தயக்கமா இருக்கு இப்பெல்லாம். அததுக்கு ஒரு கூட்டம் இருக்கே!
வாங்க நெல்லைத் தமிழன்.
சிஜி.... ப்ச்.....
சரியான நேரத்துக்கு அங்கிருந்தால் சுடச்சுடக் கிடைக்கும் சக்கரைப்பொங்கலின் ருசியே தனி! எது சரியான நேரமுன்னு அடுத்தமுறை விசாரிக்கணும் :-)
நாரதகானசபாவில் வுட்லேண்ட்ஸ் கேன்டீன் இருக்கு. கச்சேரி சீஸன்னு இல்லாம எப்பவுமே இருக்குன்னு நினைக்கிறேன். அங்கேதான் நாங்களும் கோபாலுக்கு ஊத்தப்பம், எனக்கு உப்புமான்னு முடிச்சுட்டு வந்தோம். என்னமோ எழுதத்தோணலை !
முந்தி ட்ரைவ் இன் இருந்தது பாருங்க.... அந்த இடம் செம்மொழிப்பூங்கா ஆனதும் வுட்லேண்ட்ஸ் இங்கே சின்னதா ஆரம்பிச்சுட்டாங்க. பழைய இடத்தில் வழக்கமாப் பார்க்கும் சிலபல பிரபலங்களை இங்கேயும் பார்த்திருக்கேன். நம்ம பிபிஸ்ரீநிவாஸ் ரெகுலர் கஸ்டமர்!
வாங்க பராசக்தி.
எங்களுக்கு சுபஸ்ரீயைப் பார்ப்பது இதுதான் முதல்முறை. அவுங்க கதாகாலக்ஷேபம் இதுவரை போனதில்லை. அடுத்த பயணத்தில் தேடணும்!
வாங்க ராஜி.
பதிவில்தான் வரலை. நேரில் வந்து வயித்துக்குள் போயாச் :-) ஊத்தப்பம் & உப்புமா !!!
வாங்க வல்லி.
வருகைக்கு நன்றிப்பா !
வாங்க ஜிஎம்பி ஐயா!
போறபோக்கில் எல்லாத்தையும் ரசிச்சுக்கணும். இதுக்காக் இன்னொரு முறை பிறக்க வேண்டாம் என்ற முடிவிலே இருக்கேன் :-)
Post a Comment