Friday, January 26, 2018

சிங்கைத் தோழியர் சந்திப்பு......... (இந்திய மண்ணில் பயணம் 106)

காலை ஒன்பது மணிக்கு முன்னால் செராங்கூன் ரோடில் நடப்பது சுகம்!  கடைகள் திறந்துருக்காது. நிம்மதியா விறுவிறுன்னு நடந்து போகலாம்.


அதுவும் காலையில் கடை திறந்தவுடன், கடைக்காரர்கள்  சாமி கும்பிட்டுட்டு, சனங்களும் சாமிப் பாட்டுகளைக் கேக்கட்டுமேன்னு  பாட்டுகளைப் போட்டுருவாங்க.  கடை கடைக்கு வெவ்வேற இஷ்ட தெய்வங்கள், வெவ்வேற பாட்டுகள். எல் ஆர் ஈஸ்வரி தொடங்கி விதவிதமாக் கேட்டுக்கிட்டே நடக்கணும். மாரியம்மா...கருமாரியம்மா மருதமலை மாமணியே முருகைய்யா சரணம் அய்யப்பா சஷ்டியை நோக்க சரவண  திரிசூலி.....ஓங்காரி....
வீரமாகாளியம்மனுக்கு, எதிர்வாடையில் இருந்தே  ஒரு கும்பிடு போட்டுட்டு கோமளவிலாஸ் போய் ஆளுக்கொரு ஃபில்ட்டர் காஃபி ஆச்சு.
மேலே படம்: பார்க் ராயல் பக்கத்துலே இருக்கும் கோமளவிலாஸ். ஃபாஸ்ட் ஃபுட். எனக்குப் பிடிக்காது. கொஞ்சம் நடைன்னாலும் பழைய கோமளவிலாஸ்தான் எனக்குப் பிடிக்கும். இதுதான் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு எதிர்வாடையில் இருக்கும் :-)

அறைக்குத் திரும்பலாமா இல்லை க்ருஷ்ணன் கோவிலுக்குப் போகலாமான்னு சின்னதா  ஒரு பேச்சு :-)   பத்து மணிக்கு நெருங்கிய தோழி  வர்றாங்க நம்மை சந்திக்க  என்பதால்   ஸிம்லிம் ஸ்கொயர் தாண்டிப் போய் வர நேரம் இருக்காதுன்னு அறைக்கே திரும்பலாமுன்னு முடிவு.

முஸ்தாஃபா கடை இப்பெல்லாம் (ஒரு ஏழெட்டு வருசமா?) இருபத்தினாலு மணி நேரமும் திறந்துருக்காங்கல்லெ.... அதுக்குள்ளே நுழைஞ்சாச்சு. எனக்குப் பவுடர் வாங்கிக்கணும்.  எப்பவும் இங்கேதான் வாங்கிக்கிட்டுப் போறது வழக்கம்.  அஞ்சாறு டப்பா(!) வாங்கினால் அடுத்த பயணம் வரை தாக்குப் பிடிக்கும். சின்ன காம்பேக்ட்தான்....  மிஞ்சிப்போனா மொத்தமே நூத்தியம்பது கிராம் எடைதான் இருக்கும் :-)

நம்மவருக்கு ஷர்ட் வாங்கிக்கணுமாம்.  அந்த செக்‌ஷனுக்குப் போனால்.... நீலக்கட்டத்தை விட்டால் வேறேதும் எடுக்கமாட்டேங்கறார்.  ஏற்கெனவே இதே கட்டம் இருக்கேன்னா, அது  கொஞ்சம் பெரிய கட்டம், இது சின்னது... நெடுக்காப் போகும் எக்ஸ்ட்ரா கோடு, இப்படி எதாவது வித்தியாசம் கண்டுபிடிச்சுச் சொல்லுவார்.   கடைசியில்.... ஒரு ஷர்ட் மட்டும் வாங்க முடிவாச்சு.  ஏற்கெனவே பேகேஜ்  அலவன்ஸ்  ஃபுல் ஆகிருச்சே.  கேபின் பேகில் ஏழுகிலோ மட்டும்தானே...
அறைக்குப் போய்ச் சேர்ந்த அஞ்சாவது நிமிட்  என்  நீண்டகால, நெருங்கிய தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்  வந்துட்டாங்க.  வெயிலில் அல்லாட வேணாமுன்னு அறையிலேயே இருந்து பேசிக்கிட்டு இருந்தோம் பனிரெண்டு வரை.

செக்கவுட் நேரம் வந்தாச்சுன்னு பெட்டிகளை எடுத்துக்கிட்டு அறையைக் காலி பண்ணி, கீழே பில்லை செட்டில் செஞ்சதும், பெட்டிகளை எல்லாம் concierge service இல் ஒப்படைச்சுட்டுப் பகல் சாப்பாட்டுக்கு  எங்கே போகலாமுன்னு  யோசிச்சுக்கிட்டே கிளம்பி இதே செராங்கூன் சாலையில் நடந்து போறோம்.  கலகலன்னு கூட்டம். மகளுக்கு  நீலக்கலர் வாட்ச் ஒன்னு வாங்கிக்கணும். கல்யாண காக்ராவுக்கு மேட்சா!  ஒருநாள் கூத்து என்பதால்....  விலை அதிகமா இருக்கறது வேணாம்தானே....

தேடிக்கிட்டே  போகும்போது  ஒரு கடையில்   கிடைச்சது.   பையருக்கும் பொண்ணுக்குமான  ஹிஸ் & ஹெர்  :-) கல்யாண கிஃப்டா இருக்கட்டுமுன்னு  ஜெயந்தியே வாங்கிக் கொடுத்துட்டாங்க !       'அடடா.... தெரிஞ்சுருந்தால்  இன்னும் கொஞ்சம் நல்லதா வாங்கி இருக்கலாமே'ன்னேன் :-) :-) :-)   'ஓ அப்படியா.... வேற ஒன்னு செலக்ட் பண்ணுங்கோ  அதையும் வாங்கிடலா'முன்னு சொல்றாங்க !!! 
செராங்கூன் ரோடு  முழுக்க எங்கே பார்த்தாலும் யானைகளும், மயில்களும், 'தாமரை'யுமா இருக்கு அலங்காரத்தில்!  தீபாவளிக்கு  அலங்கரிச்சது அப்படியே  சீனர்களின் புது வருசம் வரை இருக்கும்  இங்கே!   அந்த சமயத்தில் சிங்கையின்  இந்தப்பகுதி ரொம்பவே அழகுதான்!
வீரமாகாளியம்மன் கோவிலைத் தாண்டும்போது, உள்ளே போகலையேன்னு போய் சாமியைக் கும்பிட்டுக்கிட்டோம். 
இந்தக் கோவிலில் அனைத்து மக்களுக்கும் அனுமதி உண்டு. சுற்றுலாப் பயணிகளான  வெள்ளைக்காரர்களுக்கும்,  மற்றும்  கோவிலுக்குள் நுழையத் தகுதியான  உடைகளைப் போட்டுக்கிட்டு வராதவங்களுக்கும் ஒரு கூடை நிறைய  கலர் துணிகளை போட்டு வச்சுருக்காங்க. அதுலே ஒன்னு ரெண்டை எடுத்து இடுப்பில் வேஷ்டி போலவும், இடுப்புக்கு மேலே  தோளைச்சுத்தி ஷால் மாதிரி மூடிக்கிட்டும் கோவிலுக்குள்  தாராளமா வந்து  போகலாம். ரொம்ப நல்ல விஷயம்!
பேசிக்கிட்டே நடந்ததில்  கேம்பெல் லேன் ஆரம்பத்துக்கு வந்துருந்தோம். இந்த இடத்தில் இருக்கும் காய்கறிக்கடை மேலே எனக்கு எப்பவும் ஒரு கண்ணு. என்னென்ன அருமையான(இங்கே நியூஸியில் கிடைக்காத)வகைகள் இருக்குன்னு  பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கேமெராக்   கண்ணாலே தின்னுட்டுதான் வருவேன் எப்பவும் :-)

இதே சந்துலேதான்  ஜோதி புஷ்பக்கடையும். 'கொஞ்ச தூரம்  நடந்தால்   இந்திய மரபுடமை  நிலையம் (இண்டியன் ஹெரிடேஜ் சென்டர்) இருக்கு. அங்கே போயிட்டுப்போகலாம். உங்களுக்குப் பிடிக்கும்' னு சொன்னாங்க ஜெயந்தி.  அட!  இதுவரை போனதே இல்லையேன்னு   போனால், நம்ம அதிர்ஷ்டம்.... இன்றைக்கு விடுமுறை தினமாம்.  (ஞாபகம் வச்சுக்குங்க....திங்கட்கிழமை லீவு) புத்தம்புதுசா பளபளன்னு மின்னும் கட்டடம்.
போனவருசம் மே 8,  2015 இல் திறந்து வச்சுருக்காங்க. சட்னு மனசுக்குள் கணக்குப் போட்டேன்.... இன்றைக்கு  7 நவம்பர் 2016 இல்லே! ஒன்னரை வருசம்தான் ஆகி இருக்கு. அடுத்த பயணத்தில் கட்டாயம் போய்ப் பார்க்கணும்.(மூளையில் முடிச்சு!)  சிங்கை மக்களுக்கு இலவசம். வெளிநாட்டவர்களுக்கு  ஆறு டாலர் கட்டணம்.

வாசலில் தீபாவளி வாழ்த்துகளோடு விளக்கமும் வச்சுருந்தாங்க.
1929 ஆம் ஆண்டுதான் தீபாவளிக்குப் பொதுவிடுமுறை தினம் அறிவித்தார்களாம்.  1985 முதல்தான் சிங்கை பயணத்துறை மேம்பாட்டுக் கழகமும், வியாபாரிகள் சங்கமும்     சேர்ந்து  இந்த விளக்கு அலங்காரங்களை ஆரம்பிச்சுருக்காங்களாம். (அட!  நாங்களும் முதல் முறை சிங்கை போனது 1985 இல்தான்!  ஆனால் அது மார்ச் மாசம். தீபாவளி சமயம் இல்லை)

ஒவ்வொரு வருஷமும் ஒரு தீம். இந்த வருஷத்துக்கு மயில்! இந்த வருசத்துக்கான  அலங்காரம்  செப்டம்பர் 17 இல் திறந்து வச்சது அதிபர் Tony tan keng yam. இவர் 2017, ஆகஸ்ட் 31 வரை அதிபர் பதவியில் இருந்துருக்கார். இப்போதைய அதிபர் ஒரு பெண்மணி.  மேடம் ப்ரெஸிடென்ட்.

அப்பதான் ரெண்டு இளம் பெண்கள், என்னிடம் சில கேள்விகளைக் கேக்கலாமான்னாங்க. சுற்றுலாத்துறையாம். ஒரு படிமத்தில்  சில கேள்விகளும் பதிலுக்கான இடமுமா இருக்கு. அதை நிரப்பித் தரணும். தந்தேன் :-)

 சின்னப்பசங்களுக்கு வேட்டி செட்!  அட்டகாசமா இருக்கு!

லிட்டில் இண்டியா ஆர்கேடுக்குள் நுழைஞ்சு அப்படியே டெக்கா  சென்டர் போகலாமுன்னு  போனால், நம்ம ஜெயந்தியின் தோழி ஒருவருடன் எதிர்பாராத சந்திப்பு!   க்ளிக் க்ளிக் :-)
 டெக்கா சென்டரில் ஒரு கேரளா உணவகம் இருக்கு. அங்கே போனால் தாற்காலிகமா மூடி இருக்காங்க(ளாம்) திரும்பக் கோமளவிலாஸுக்கே வந்தோம். அங்கத்து தோசையில் நம்ம பெயர் இருந்துருக்கு, பாருங்க :-)
பொடிநடையில் பார்க் ராயல்.   வரும் வழியில் இளநீர் வழக்கம்போல் :-) கொஞ்ச நேரம்  லாபியில் இருந்தே பேசிட்டு, அவுங்களும் கிளம்பிட்டாங்க.
பெரிய ஹொட்டேல்களில் இது ஒரு  தொந்திரவு.  செக்கின் டைம் பகல் மூணு மணி. செக்கவுட் டைம் பகல் பனிரெண்டுன்னு.....    ப்ச்....





எதிரில் இருக்கும்  ஸிட்டி ஸ்கொயர்  வழியா அவுங்களோடு ஃபேர்ரர் பார்க் ஸ்டேஷன் வரை போயிட்டு வந்தோம் :-)
லாபி முழுசும் இந்தியப் பயணிகள்தான். பெரிய பெரிய குழுவாக் குடும்பத்துடன் வர்றாங்க. உக்காரப் போதுமான இடமும் இல்லை.  பிள்ளைகளோ போரடிச்சுப்போய் இங்கேயும் அங்கேயுமா  ஓடி விளையாடி கூச்சல் போட்டுக்கிட்டுன்னு களேபரமாத்தான் இருக்கு.  அதையெல்லாம் கொஞ்சம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும்போதுதான் இன்னொரு  சமாச்சாரம் வாங்கிக்கலைன்னு நினைவுக்கு வந்துச்சு.
பக்கத்து பில்டிங்தான் முஸ்தாஃபா.  அங்கே போனால் ஆச்சு.  மணி மூணேகால்தான்.  குங்குமப்பூ வாங்கிக்கணும்.  அவ்ளோதான்.  கொஞ்ச நேரம் விண்டோ  ஷாப்பிங்.  ஹொட்டேல் லாபிக்கு இது தேவலை :-)
சிங்கை முன்னைப்போல இல்லை.... விலைவாசி எல்லாம் தாறுமாறாய் ஏறிக்கிடக்கு.....
நாலேகாலுக்குத் திரும்பி  வந்து  நம்ம பெட்டிகளை (கேபின் பேக்ஸ் ரெண்டுதான்) எடுத்துக்கிட்டு டாக்ஸிக்குச் சொல்லிட்டுக் காத்திருந்தோம்.  சாயங்காலங்களில் டாக்ஸி கிடைப்பதும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு இப்பெல்லாம்....

வண்டி கிடைச்சதும், இன்னொரு நெருங்கிய தோழியைப் பார்த்து ஹை சொல்லிட்டு ஏர்ப்போர்ட் போகணும். அநேகமா ஒரு பத்து நிமிட் வெயிட்டிங் போடவேண்டி இருக்குமுன்னு  ட்ரைவரிடம் சொல்லிட்டு, தோழி வீட்டுக்குப் போறோம்.

சிங்கையில் தமிழ்வட்டாரத்தில், தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில் புகழ் பெற்றவங்க இவுங்க.   எழுத்தாளர் சித்ரா ரமேஷ்!  உபதொழிலா டீச்சராவும் இருக்காங்க .  பள்ளிக்கூடத்து ஆண்டுவிழா நிகழ்ச்சி தயாரிப்பிலும், ஒத்திகை பார்ப்பதிலும் கொஞ்சம் பிஸியாகிட்டாங்க. வருஷ முடிவு வருது பாருங்க.... அவுங்க வேலை விட்டு வரும் நேரத்துக்குத்தான்  நாமும் போய்ச் சேர்ந்தோம்.  வளாகத்தின் வாசலில்  காத்திருந்தாங்க.
டாக்ஸி காத்திருக்குன்னு   சொல்லி,  சட்னு நாலு  வார்த்தை பேச்சும் ரெண்டு க்ளிக்ஸுமா அவசரடியில்  எல்லாம் ஆச்சு. நலம் நலம். போதாதா?

சிங்கையில் நமக்கு வேண்டியவர்கள்  நிறையப்பேர் இருக்காங்கன்னாலும் சந்திக்க நேரம் இல்லாமல் போச்சு.  வேலைநாள் பாருங்க............. எல்லோரும் பிஸிதானே?

ஏர்ப்போர்ட் வந்ததும்  நேரா உள்ளே போக வேண்டியதுதான்,  சென்னையிலேயே போர்டிங் பாஸ் கொடுத்துட்டாங்களே...  சிங்கையில்  பொருட்களை  வாங்கும்போது  நாம்    கொடுக்கும் வரிகளை, அந்த ரசீது காமிச்சு  திரும்ப வாங்கிக்கலாம்.  மோதிரத்துக்கான  ரசீது காமிச்சப்ப, மோதிரத்தையும் காமிக்கச் சொன்னாங்க.   அதை எடை போட்டுப் பார்த்தால்  ரசீதில் எழுதுன எடையைவிடக் கொஞ்சம் கம்மியா இருக்கு.  ரெண்டு மோதிரத்திலும் .07 கிராம் குறைவு.  ஒருவேளை ஏர்ப்போர்ட்   டாக்ஸ் ரீஃபண்ட் கவுன்ட்டரில் இருக்கும்  மெஷீன் செட்டிங் சரி இல்லையோ.....  எப்படி  ரெண்டிலும் ஒரே அளவு கம்மி?  இங்கே சரின்னா....   மெர்லின் கடையின் மெஷீன் சரி இல்லை. ஏதோ ஒரு இடத்தில்  தப்பு.  வரிகளைத் திரும்பக் கொடுத்ததும் வாங்கிக்கிட்டு அப்படியே ட்யூட்டி ஃப்ரீயில் ஒரு சின்ன சுத்து.

இங்கே  செப்டம்பரில் வந்தப்பக் கிடைச்ச வவுச்சர்கள் (  80 சாங்கி டாலர்ஸ்)வேற இருக்கே. செலவு பண்ண வேணாமா?  ஏர்ப்போர்ட்  கொடுக்கும் ஃப்ரீ வைஃபையில் மகளுக்கு என்ன வேணுமுன்னு  சேதி அனுப்புனதும் பெரிய லிஸ்ட் ஒன்னு (ஏற்கெனவே தயாரிச்சு ரெடியா வச்சுருக்காள்  :-))அனுப்பிட்டாள்.  எல்லாம் முக அலங்காரப் பொருட்கள்தான்.  அந்த லிஸ்டில் இருக்கும் பொருட்களில் சிலது கிடைக்கலை.... போகட்டும்..... மற்றதை வாங்கிக்கிட்டு,  வேறொரு கடையில் பெர்ஃப்யூம் ஒன்னும்  வாங்கி  என்  ட்யூட்டிஃப்ரீ ஷாப்பிங் கடமையை ஆத்தினேன் :-)
அப்புறம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லவுஞ்சுக்குப்போய் சாப்பாடு என்ன இருக்குன்னு பார்த்தால்....  நமக்கான செலக்‌ஷன் ஒன்னும் சரி இல்லை.  கப்புச்சீனோவும், கொஞ்சம் மஃப்பின், பிஸ்கெட்ன்னு  உள்ளே தள்ளிட்டு நம்ம டிபாச்சர் கேட்   வர்றதுக்கும்,  கேட் திறக்கறதுக்கும் சரியா இருந்துச்சு.
நம்ம வண்டி  ஏழு அம்பதுக்குக் கிளம்பணும்.  கிளம்புச்சு. பத்தரை மணி நேரம் ....  ஒரே போர்....  நைட் ஃப்ளைட்  ஆனதால்    வெளியில் வேடிக்கை பார்க்கவும்  இருட்டைத் தவிர வேறொன்னும் இல்லை.

ஒன்பதுக்கு சாப்பாடு வந்தது, கொறிச்சுட்டுத் தூங்கணும்.

காலையில் பார்க்கலாம், ஓக்கே  ?

தொடரும்........... :-)


9 comments:

said...

என்ன அழகான ஊர்...

said...

ஒரு பயணம் முடிகிறது. அடுத்து என்ன? வேகமா எழுதி (வாரத்துக்கு 2,3) ஓரிரண்டு மாத வித்யாசத்துக்குக் கொண்டுவாங்க. ஒவ்வொரு இடுகை படிக்கும்போதும் நாமும் இந்த இடங்களுக்குச் செல்லணும் என்ற எண்ணத்தைக் கொண்டுவரீங்க.

said...

தோழியர்களின் சந்திப்புப் பகிர்வு அருமை.

said...

அழகான ஊர் சிங்கை சந்தோஷா பார்க் எல்லாம் போகவில்லைப்போலும்? முஸ்தப்பாவில் வரவர விலைவாசி ஏறிக்கிட்டேதான் போகின்றது.

said...

இன்னும் சிங்கை பற்றி எழுதுங்கள் மேடம்!

said...

வாங்க ஸ்ரீராம்.

எனக்கும் ரொம்பப்பிடிச்ச ஊர்தான் சிங்கை! கூட்டம்தான் அதிகம் :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இப்பவே வாரம் மூணு பதிவுகள் வந்துக்கிட்டுத்தானே இருக்கு !

இந்தப் பயணத்தொடர்தான் கொஞ்சம் நாள் எடுத்துக்கிச்சு. மகள் கல்யாண ஏற்பாடு, விருந்தினர் வருகை, அப்புறம் ஒரு அஸ்ட்ராலியா பயணம், குளிர் முடக்கம், இன்னொரு அமெரிக்கா & கனடா பயணம் இப்படி 2017 ஒரே களேபரம்தான்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நட்பு என்றாலே இனிப்புதான், இல்லையோ!!!

said...

வாங்க தனிமரம்.

நீங்க சொல்லும் இடங்கள் எல்லாம் மகள் சின்ன வயசா இருக்கும்போது பலமுறை சுத்தி வந்தவைதான்.

எழுத ஆரம்பிச்ச இந்த 13வருசத்தில் சிங்கை பற்றி நிறைய எழுதி இருக்கேன். சிங்கை துளசிதளம் என்று கூகுள் பண்ணிப் பாருங்களேன்!

எங்களுக்கு இந்தியா போக சிங்கை வழிதான் எப்பவும். போகும் போதும் வரும்போதும் முடிஞ்சவரை தங்கித்தான் வருவோம். அதனால் பயணக் கதைகளில் சிங்கை இல்லைன்னாதான் வியப்பு !!!!