Monday, April 15, 2013

மேடும் காடும் வீடும்!


முன்னொரு  காலத்துலே அடர்ந்த வனப்ரதேசமா இருந்துருக்கு  இங்கெல்லாம்.  முனிவர்கள் வந்து குடில் அமைச்சுத் தங்கி தவம் செய்வாங்களாம். காட்டுப்பகுதி என்றபடியால்  கொடிய விலங்குகளும் யானைகளும் ஏராளம். இதுலே ஒரு யானைதான் ஜம்புகேஸ்வரருக்கு அபிஷேகம் பண்ணியிருக்கணும்!

போற போக்கில் முனிவர்களின் குடிலை தள்ளிவிடுவது, அவுங்க பயிரிட்டு இருக்கும் காய்கனிகளைத் தின்னுட்டுப்போறதுன்னு தொந்திரவு. பிடி சாபம்னு  முனிவர்களால்  அவைகளை  அழிக்கமுடியும் என்றாலும்,  தவமிருந்து கிடைச்ச   தவ வலிமைகள்  சக்திகள்  எல்லாம்  கொடுக்கும் ஒவ்வொரு சாபத்துக்கும்  மைனஸ் ஆகிக்கிட்டே போயிருமே!  எல்லோருமா பெருமாளை வேண்ட அவரும் யானைகளையும் மற்ற விலங்குகளையும் விரட்டணுமுன்னா  சிம்ம ரூபம்தான் சரின்னு  நினைச்சார்.  சிம்ஹம் காட்டரசன் இல்லையோ?
(சுட்ட படம்.நன்றி செங்கோட்டை ஸ்ரீராம்)


நரசிம்ம  ரூபத்தில் இங்கே வந்தவர்  துணைக்கு ,  ஐ மீன் பேச்சுத்துணைக்கு  மனைவியையும் கூடவே கூட்டியாந்தார்.   எட்டு அடி உசரம்!   இடது தொடையில் மஹாலக்ஷ்மியை உக்காரவச்சு,  இடது கையால் சேர்த்து அணைச்சுக்கிட்டு வலது கையால் நமக்கெல்லாம் அபயஹஸ்தம் காட்டும் அழகிய சிங்கர் இங்கே வந்த கதை இப்படித்தான்.

கோவிலுக்கு வயசு ஒரு ஆயிரத்தைஞ்நூறு வருசங்கள் இருக்குமாம்.   காடெல்லாம் போய் இப்போ நாடாக இருக்கு இடம். 1961 வது வருட மக்கள் கணக்கெடுப்பில் இந்தப்பகுதி(ஸ்ரீரங்கம்) யில்  42 ஆயிரம் பேர்கள்தானாம்.  இந்த  அம்பது வருசங்களில் இது அஞ்சு மடங்கா  ஆகி இருக்கு.

ரொம்பவே அமைதியான காடாக இருந்துருக்கும் காலத்தில்   மூலவர் முன்னே வந்து நின்னாலே மனசுக்குள் பேரமைதி  வந்துருக்கும் இல்லையோ? உள்ளூர்க்காரர்  நம்ம ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியார்  என்னும் மகான் இந்த சந்நிதியில் இருந்துதான்  ஸ்ரீ வசநபூஷணம் முதலிய 18 ரஹஸ்ய க்ரந்தகளை இயற்றிப்பாடி இருக்கார். முமுட்சுப்படி, யாத்ருச்சுப்படி என்று இருக்கு, கோவில் புத்தகத்தில்.  முக்தி அடைய விரும்பினால் கட்டாயம் திருமந்திரம், திவ்யம், சரமஸ்லோகம் என்ற மூன்று விஷயம் தெரிஞ்சுருக்கணுமாம். நாராயணன், நரனுக்கு பத்ரியில் செய்த உபதேசம் திருமந்திரம். மார்பில் உறையும் மஹாலக்ஷ்மிக்கு திவ்ய விபூதியில் உபதேசித்தது திவ்யம்,  பாரதப்போர்  ஆரம்பிக்குமுன் உறவினர்களுடன் சண்டையிட்டு அவர்களைக் கொல்லத்தான் வேணுமான்னு அர்ஜுனன் மனம் கலங்கி நின்ன சமயம்  கலங்காதேன்னு சொல்லி உபதேசிச்சது  சரமஸ்லோகம். இவை மூன்றும் சாஸ்திர தாத்பர்யம் எனப்படுமாம்.  முழுவிவரங்களும் அடங்கிய புத்தகம் எதாவது கண்ணில் படுமான்னு பார்க்கணும்.

ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில்  சேஷராய மண்டபத்துக்கு சமீபம் ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியாருக்கு ஒரு தனி சந்நிதி இருக்கு. உள்ளூரில் பிறந்து வளர்ந்தவர். ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர். தில்லிப்படைகள் கோவிலைச் சீரழித்த காலத்தில், ஒளிச்சு வைக்கக்கொண்டுபோன  நம்பெருமாளுடன் கூடவே போன சிலரில் இவரும் ஒருவர்.

முன் முற்றக் கொடிமரம் கடந்து உள்ளே போனால்  ஒரே ஒரு ப்ரகாரம். நடுவில் நரசிம்மர் சந்நிதி.  வல்லப தேவ பாண்டியன் கட்டுன கோவிலாம்.  ரெங்கன்  இருக்கும்  பூலோக வைகுண்டம்  நோக்கி, மேற்குப் பார்த்து உக்கார்ந்துருக்கார் மூலவர்.  உற்சவர் இங்கே இல்லை. அவர் ரெங்கன் கோவிலுக்கே போயிட்டார்.  நாள் கிழமைன்னா இங்கே வந்துட்டு  மறுபடி பெரிய கோவிலுக்கே போய் பாதுகாப்பா இருப்பார் போல!
(சுட்ட படம்.நன்றி.திவ்யதேசம்)

ரெங்கன்னதும்  ஞாபகம் வருது இன்னொரு விஷயம்.  இங்கே இருப்பது காட்டழகி சிங்கர் என்றால் பெரிய கோவிலில் ரங்கநாயகித் தாயார் சந்நிதிக்குப் பக்கத்தில் , கம்பராமாயண மண்டபத்துக்கு அருகில் ஒரு   உக்ர நரசிம்ஹர் சந்நிதி இருக்குன்னு  எழுதி இருந்தேன் பாருங்க. அவர் மேட்டு அழகிய சிங்கர். அவர் சந்நிதிக்குக் கொஞ்சம்  படிகள் ஏறித்தான் போக வேண்டி இருக்கு. பெரிய கோவிலில் படிகளுடன் மேடான சந்நிதிகள் ரெண்டே ரெண்டு. ஒன்னு நரசிம்ஹர்.  மற்றது தன்வந்த்ரி.  சரியா எண்ணிச் சொன்னால் நரசிம்ஹர்  ரொம்பவே மேட்டில்தான் இருக்கார்.ரெண்டு நிலையா 20 படிகள் ஏறணும்..


காட்டழகிய சிங்கரை தரிசனம் செஞ்சுக்கிட்டு  பிரகாரம் சுத்தி வந்தோம். வெளிப்புறம்  கொடி மரத்துக்கு  அந்தாண்டை  ஒரு மேடையில்  வரிசைக்கு மூணா மூணு வரிசையா  ஒன்பது துளசி மாடங்கள். அதில் தளதளன்னு நிற்கும் 'நான்'!!!  அதென்ன ஒன்பது கணக்குன்னு தெரியலை!  ஆனால் மாடங்கள் ஒவ்வொன்னும் பெருசாவே இருக்கு.   சைஸ் ரொம்பச் சரி:-))))

வெளியே  வளாகத்தில் இருக்கும் மண்டபத்தில் விஜயதசமியன்னிக்கு  ரெங்கன்  நம்பெருமாள் வந்து  எழுந்தருளுவார். வழக்கமான பூஜைகள்  தீபாராதனை அமுதுபடி (லஞ்ச்) எல்லாம் ஆனதும் பரிவேட்டைக்குக் கிளம்புவார். எப்படி?   வேறெப்படி? அதே பரியின் மீது  ஏறித்தான்! தங்கக்குதிரை  வாகனம். கையில் வேட்டையாட வில்லும் அம்புமா ஒரு கம்பீரம்!  வளாகத்துலே இருக்கும் வன்னி மரத்தைப் பார்த்து ஒரு அம்பு விடுவார். கோவில் தல விருக்ஷமே வன்னி மரம்தான். ஆச்சு!  கிளம்பிப் போய்க்கிட்டே இருக்கணும் இனி. நேராப் பெரிய கோவில்தான்!
(சுட்ட படம்.நன்றி செங்கோட்டை ஸ்ரீராம்)

நம்ம  சேஷராயர் மண்டபத்துக்குப் பக்கம் இருக்கும் வெள்ளைக் கோபுரத்துக்குள் நுழைஞ்சு கலியுகராமன் கோபுரவாசல்(கிழக்கு ராஜகோபுரம்) வழியா  கீழ அடையவளஞ்சான் தெருவழியாப் போனாலொரு கிலோமீட்டர் தூரத்துலே  காட்டுக்குள் வந்துடலாமாம்.

காடும் மேடுமா தரிசனம் செஞ்சாப்போதாதுன்னு   இன்னொரு நரசிம்ஹர்  லக்ஷ்மியோடு  அமர்ந்த கோலம் காண்பிப்பது  ஆத்து அழகிய சிங்கர் கோவிலில். இதுவு இங்கே பக்கத்தில்தான் இருக்கு.காவிரியின் தென்கரையில் இருக்கார் இவர்.  இந்த ஆத்தை   ஆறாவும் எடுத்துக்கலாம். இல்லைன்னா  ஆமாகவும்(அகம்)   என்னைப்போல் எடுத்துக்கலாம்:-) அஃபீஸியல் பெயர் என்னமோ  ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கப் பெருமாள் திருக்கோவில்.ஓடத்துறை, கீழச் சிந்தாமணின்னுதான் !
(சுட்ட படம்.நன்றி ). 


அந்தக் காலத்துலே காவிரிக்கு ஏது பாலம்? படகில்தான் அக்கரைக்குப் போகணும்  ரெங்கனை தரிசிக்கணுமுன்னால். அப்படிப் போகும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கணுமுன்னு இங்கே வந்து கோவில் கொண்டாராம்.  எல்லாரும் நல்லபடியா அக்கரைக்குப் போய்ச்சேர அருள்புரியும் என்று கைகூப்பி வேண்டுவதுபோல  இடது தொடையில் அமர்ந்திருக்கும் தாயார் கைகூப்பித் தொழுத நிலையில் இருக்காராம். நாமும் இந்தக் கோவிலுக்குப் போகலை. அதான்  பாலமும் வந்தாசு, வாகனமும்  இருக்கே! ஆனாலும் அடுத்த முறை 'ஸ்ரீரங்கத்தில் தங்கும் காலம்' ஒரு நடை போய்ப் பார்த்து வரணும். சின்னக்கோவில்தானாம். காலை ஏழரை டு ஒன்பதரை, மாலை ஆறு டு ஏழுதானாம்  கோவில் திறப்பதே!
(சுட்ட படம்.நன்றி .)
  அடுத்து எங்கேன்னு கேட்ட கோபாலை, 'இது என்ன கேள்வி ?'னு பார்த்தேன். அகிலாவைக் கண்டது முதல்  ஆண்டாள் இதுவரை கண்ணுலேயே ஏன் படலை என்று மனசில் ஒரு குடைச்சல். மேலும் அன்னமூர்த்தியைக் கட்டாயம்  தரிசிக்கணும். வயசான காலத்துலே சோற்றுப்பஞ்சம் வராமல் இருக்கணுமேடா பெருமாளே! இங்கே  எல்லாம் வெறும் ப்ரெட்டாத்தானே கிடக்கு? ஒரு பருப்பு சாதமோ ரசஞ் சாதமோ  'இருக்கும்வரை' கிடைக்கணுமே! அதுவுமில்லாமல்  கிளி மண்டபத்தை வேற  பார்க்கலை ? எப்படிக் கோட்டை விட்டேன்?  ரெங்கா ரெங்கன்னு கொஞ்சுமொழி பேசுமாமே!

கேமெராச் சீட்டு விற்கும் கவுண்டரைக் காணோம். சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிமடலில் வேண்டுகோள் அனுப்பிட்டு,  சில படங்களைச் சுட்டுப் போட்டுருக்கேன்.

தொடரும்..........:-)))

பதிவுலக நண்பர்களுக்கும் வாசகப் பெருமக்களுக்கும்,  விஜய வருச ஆண்டுப்பிறப்பு அண்ட், விஷுப்பண்டிகைக்குமான இனிய வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கின்றது உங்க துளசிதளம்! 

எல்லோரும் நல்லா இருங்க.


32 comments:

said...

பிள்ளைலோகாசாரியாரைப் பத்தி ‘ரங்கராட்டினம்’ நாவல்ல படிச்சது மனசுல ஓடிச்சு. அழகிய சிங்கர் தரிசனம் அருமை. (பாக்கும் போதே அழகிய Singerனா மடோனாவான்னு தசாவதாரம் கமல் கிண்டலிச்சதும் மனசுல ஓடிச்சு) உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருககும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் டீச்சர்!

said...

சுட்ட படங்கள் என்றாலும் அருமை... தரிசனம் கிடைத்தது...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

said...

அதென்ன ஒன்பது கணக்குன்னு தெரியலை! ஆனால் மாடங்கள் ஒவ்வொன்னும் பெருசாவே இருக்கு. சைஸ் ரொம்பச் சரி:-))))

அவை பிருந்தாவனங்ள் என்று கேள்விப்பட்டேன் ...

said...

அதுவுமில்லாமல் கிளி மண்டபத்தை வேற பார்க்கலை ? எப்படிக் கோட்டை விட்டேன்? ரெங்கா ரெங்கன்னு கொஞ்சுமொழி பேசுமாமே!

ஒருகாலத்தில் கேட்டுக்கொண்டிருந்தது ..ரங்கா ரங்கான்னு கிளிகள் கூட பேசிப்பேசி மகிழ்ந்து கொண்டிருந்தோம் ..

பிறகு கிளிகள் போய் பொம்மைக்கிளிகள் இருந்தன ..

கொஞ்ச வருடங்ளில் அந்த பொம்மையையும் காணோம் ..

இப்போ வைத்திருக்கிறார்களா ???

said...

அற்புதமான படங்களுடன்கூடிய விளக்கம் அருமை.அழகிய சிங்கர் தரிசனம் அருமை

said...

ஒரு காலத்தில் காவிருமணலில் மூழ்கி மறைந்திருந்த அரங்கன் ஆலயத்தை கிளிகள் தான் இடைவிடாமல் மணல் மேட்டில் அமர்ந்து ரங்கா ரங்கா என்று கூவிதைக்கேட்ட சோழமன்னன் மணலை அகழ்ந்து கோவிலைக்கண்டுபிடித்து புனருத்தாரணம் செய்தாராம் ..

சமீபத்தில் கூட ஆயிரங்கால் மண்ட்பத்தின் அருகே கட்டடம் கட்ட தோண்டியபோது கிடைத்த சிலைகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள் ...

said...

அழகிய சிங்கர் இங்கே வந்த கதை இப்படித்தான்.//

கதை அற்புதம் பார்க்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.

இராராஜேஸ்வரி அவர்கள் சொன்ன விபரங்களும் அருமை.
உங்களுக்கும் , எங்கள் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

said...

அவை துளசி மாடங்களான பிருந்தாவனங்கள் துளசி. பெரிய ஆச்சார்ய ஸ்வாமிகளின்

நித்ய வாசஸ்தலம்.
ஆப்பா எவ்வளவு நரசிம்ஹர்கள்.
நன்றிப்பா. அத்தனை சிங்கமும் அழகு.

said...

ஹைய்யோ.. எத்தனை நரசிம்மங்கள்!!!

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் துள்சிக்கா.

said...

//கேமெராச் சீட்டு விற்கும் கவுண்டரைக் காணோம்//

ஒரு தலை சிறந்த நகைச்சுவை நடிகரை, இப்பிடிச் சீட்டு விக்குறவரா ஆக்கீட்டீங்களே டீச்சர்:)

இந்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்; விசய ஆண்டு வாழ்த்துக்கள்;
---

//இங்கே எல்லாம் வெறும் ப்ரெட்டாத்தானே கிடக்கு?//

அவருக்கும் Bread தான்!
லுங்கி கட்டி ரொட்டி நைவேத்தியம்:)

கேட்க மறந்து போச்சு; அரங்கத்தில் துலக்கா நாச்சியாரைக் கண்டீரோ?
(கதிர்காமம் முருகனைப் போலவே, ஓவியச் சீலை தான்; சிலை அல்ல)

said...

//திருமந்திரம், திவ்யம், சரமஸ்லோகம்//

அது திவ்யம் இல்லை டீச்சர்;
= துவயம் (த்வய மகா மந்திரம்)
= த்வயம்/ துவயம் -ன்னா ரெண்டு; அவளுக்கும் அவனுக்குமாய் இரண்டு நிலை உடையதாகையாலே = துவயம்

//முழுவிவரங்களும் அடங்கிய புத்தகம் எதாவது கண்ணில் படுமான்னு பார்க்கணும்//

18 முறை நடக்க வுட்டாங்களே, இதைச் சொல்லுறத்துக்கு; ஒங்க வசதி எப்படி?:)

//ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர். தில்லிப்படைகள் கோவிலைச் சீரழித்த காலத்தில், ஒளிச்சு வைக்கக்கொண்டுபோன நம்பெருமாளுடன் கூடவே போன சிலரில் இவரும் ஒருவர்//

பிள்ளை உலகாசாரியர்;
இவர் இராமானுசரின் சீடர் அல்ல; அவருக்கு இரண்டு தலைமுறைக்குப் பின் வந்தவர்;

*இன்று நீங்கள் கண்ட நம்பெருமாள் திருமேனியைப்,
*அன்று படையெடுப்பின் போது, காத்துக் குடுத்தவர்;
ஆனால் நடு வழியிலேயே, தாள மாட்டாமல் உயிரும் விட்டவர்;

said...

அந்த நம்பெருமாள் திருமேனி (சிலை),
மதுரை, கேரளம், திருப்பதி-திருமலை -ன்னு எங்கெங்கோ அலைந்து/ ஒளிந்து,
48 வருசம் கழிச்சி, கம்பண்ண உடையார் முயற்சியால்,
மதுரையை மீட்டுக் குடுத்து, பின்பு அரங்கம் வந்து சேர்ந்தது; (மதுரா விஜயம்)

* இராகவனுக்கு வனவாசம் = 14 வருசம் தான்;
* நம்பெருமாள் வனவாசம் = 48 வருசம்

ஆனா, கோயிலில் ஒப்புக்குப் பூசை நடக்கணுமே-ன்னு,
ஒப்புக்கு வேற சிலையை வைத்து விட்டார்கள்...
நம்பெருமாள் சிலையை அறிந்தவர்கள் பலரும், காலம் கடந்து இறந்தும் விட்டார்கள்;

இப்போ திடீர்-ன்னு வந்திருக்கறவரு "Original" நம்பெருமாள் என்பதற்கு என்ன தரவு/ஆதாரம்?:)
அப்பாவாகிய அவரே -ன்னாலும் தரவு கேப்போம்-ல்ல?:)

அப்போ, கண் பார்வை மங்கிய, பழைய கோயில் வண்ணான்...
(ஈரங் கொல்லி உடையார் -ன்னு இராமானுசர் வச்ச பேரு)

அவன், சிலைக்கு அருகே வந்து, ஒரு idea குடுத்தான்;
சிலையை நீராட்டச் சொல்லி, அந்த ஈரவாடை தீர்த்தம் (ஈர ஆடை நீர்) பருகிப் பார்த்தால், அந்த விசேட உலோகத் திருமேனியின் வாசம் தெரிந்து விடும்-ன்னு சொன்னான்...

அப்படியே ஈர ஆடை நீர் பருகிய போது,
அதிர்ச்சியில்/ மகிழ்ச்சியில், அவன் கத்தினான்; "இவரு தான், இவரு தான்; இவரே நம் பெருமாள், இவரே நம் பெருமாள்"!

* அன்னிக்கு ஒரு so called "தாழ்ந்த" வண்ணான் வச்ச பேரு!
* அதுவே = "நம்பெருமாள்"
* காலத்துக்கும் நின்று விட்டது;

அந்த வண்ணான் (ஈரங் கொல்லி உடையார்) திருவடிகளே சரணம்!
----

பிற்பாடு, அருணகிரி நாதரும், திருப்புகழில் இதைப் பாடுவாரு;
"பெரிய பெருமாள்" என்ற மூலவரின் பேரையும் சேர்த்து...

உரக படம் மேல் வளர்ந்த
பெரிய பெருமாள் அரங்கர்
உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே!

ரங்கநாதன் -ன்னு சம்ஸ்கிருதப் பேரைக் காட்டிலும்...
"பெரிய பெருமாள்" என்பதே ஆழ்வார், ஆசாரியர்கள் உகந்த தீந்தமிழ்ப் பேரு!

நாமும் அரங்கன்/ பெரிய பெருமாள் என்றே புழங்குவோம்; (ரெங்க நாதன் அல்ல)

said...

அட, ஆளரிப் பெருமாள் பத்தி ஏதாச்சும் சொல்லணும்-ல்ல? பதிவு அவருது தானே? அப்பறம் "சிங்க வல்லியம்மா" என் கிட்ட கோச்சிக்கப் போறாங்க:)

ஆள் + அரி = நர சிம்மம்
ஆளரிப் பெருமாள்!

கரண்டம் ஆடும் பொய்கையுள்
- கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய்
- குறுங் குடி நெடுந் தகாய்
திரண்ட தோள் இரணியன்
- சினங் கொள் ஆக ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த
- சிங்கம் என்பது உன்னையே!

இரணியனை வதைத்துக் கொண்டே தூணில் இருந்து வந்தானாம்!

அது எப்படி வதைத்துக் கொண்டே வர முடியும்?
வந்த பின் தானே வதைக்க முடியும்? ஆழ்வார் பாட்டுல "மிஸ்டேக்கு" நக்கீரா:)

பெண்கள் வீட்டில் Chips வறுக்கும் போது,
வறுத்த Chips, கிண்ணியில் விழும் முன், கொஞ்சம் அவர்கள் வாயிலும் விழும்:))

எப்படி Chips தின்று கொண்டே கிண்ணியில் விழுதோ...
அப்படி வதைத்துக் கொண்டே வந்தானாம்:)
= "அங்கப்போதே அவன் வீயத் தோன்றிய"

பிள்ளையின் நம்பிக்கை "ஜெயித்து" விட்டதே என்று அவமானத்தில்...
அப்போதே சிறுகச் சிறுக, உயிர் விட ஆரம்பித்து விட்டான் என்று காட்டுகிறார்...

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப

அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே!!

said...

கால அளவை (48 years) மட்டும் சரி பார்த்துக் கொள்க;
பிழையான தகவல் சொன்னேன்-ன்னு ஆயீறக் கூடாது; ஏதோ ஞாபகத்தில் இருந்து சொன்னது;

ஆனா "ஈரங் கொல்லி" வச்ச பேரு என்பதை உண்மை தான்;
* அரங்கனுக்கு = பிராமணோத்தமர்கள் வச்ச பேரு அல்ல!
* அரங்கனுக்கு = வேதம் வச்ச பேரு அல்ல!

* வண்ணாரப் பேட்டை(Washermanpet) -ன்னு சென்னையில் இன்னிக்கும் ஒதுக்கியே வச்சிருக்கோமே;
* அந்த வண்ணாரப் பேட்டையான் வச்ச பேரு = "நம்பெருமாள்"

இன்றும், வடகலை-தென்கலை, ஆச்சாரம்-ன்னு சண்டையிடும் மெத்தப் படித்தவர்கள் மத்தியிலே...
இந்த எளிய / கரிய மக்களுக்குத் தான் இறைவனிடத்தில் என்ன கரிசனம்!

கரி சனத்துக்கே உண்டான கரிசனம்!
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

said...

எத்தனை விவரங்கள்! மலைப்போடு வாசித்தறிந்து மகிழ்கிறேன். அழகிய சிங்கரின் மடியில் எத்தனை பெருமிதமாய் அவர் மனைவி! அழகு! அழகு! நன்றி டீச்சர்.

said...

படங்களும் விளக்கமும் அருமை . உங்கள் பதிவை போலவே பின்னூட்டங்களும்
விவரச் சுரங்கங்கள்.!!

said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!

said...

லக்ஷ்மி நரசிம்மரை நிம்மதியாய் தரிசிக்க முடியும் இங்கு.....

துளசி மாடம் என்னையும் கவர்ந்த ஒன்று.

நல்ல விவரங்கள். நீங்கள் சொன்ன மற்ற கோவில் நானும் சென்றதில்லை. அடுத்த முறை செல்லும்போது செல்கிறேன்.

said...

வாங்க பால கணேஷ்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

ரங்கராட்டினத்தை எனக்காக எடுத்து வச்சுருங்க. உங்க வீட்டுக்கு வருவதற்கான காரணங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது:-)))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

சிங்கங்களை மட்டுமே நன்றியோடு சுட்டேன்.வேற வழி இல்லை.


மற்ற படங்கள் எல்லாம் வழக்கம்போல் சொந்த சாஹித்யங்களே!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஆஹா... அவை ப்ருந்தாவனங்களா?

யார் யார் என்று பெயர் இருந்தால் தெரிஞ்சுக்க ஹேதுவாக இருக்குமே!

விளக்கத்துக்கு நன்றிகள்.

பொம்மைக்கிளி.... இருக்கு:(

said...

வாங்க கவியாழி கண்ணதாசன்.

சிங்கரின் ஆசிகள் உமக்கு!

said...

வாங்க கோமதி அரசு.

கொஞ்சம் உள்ளே தள்ளி இருப்பதால் கூட்டமில்லாமல் இருக்கு. இங்கே திருமண மண்டபம் கட்டி விட்டுருக்கார் ரெங்கன்.

கோவில் நிர்வாகம் அவர் கையில்தான்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வல்லி.

எனக்குத் தெரியாதா....உங்களுக்கு ரொம்பப் பிடிச்சதே சிம்ஹம்தானே:-))))

ஆச்சார்யர்களின் பெயர் குறிப்பு அங்கே இருந்துருந்தால் சந்தேகம் வந்தே இருக்காது!

ஒருவேளை இருந்து நான் கவனிக்கலையோ?

அடுத்தமுறை தெளியலாம்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

பிடரி சிலிர்த்து பார்க்கும் பார்வையில் அன்பு இருக்குப்பா!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கீதமஞ்சரி.

அழகு அழகு என்பதே ஓர் அழகுதான்!!!!

said...

வாங்க சசி கலா.

விவரச் சுரங்கங்கள்!

சபாஷ்! சரியான சொற்பிரயோகம்! எனக்குத் தோணலை பாருங்க!

புதையல் கிடைச்சமாதிரி இருக்கு!!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அடுத்தமுறை செல்லும்போது பிருந்தாவனத்தில் ஆச்சார்யார்கள் பெயர் இருக்கின்றனவா என்று பார்த்துச் சொல்லுங்கள்.

அப்போதைக்கு இப்போதே அதற்கான நன்றி.

said...


வாங்க கே ஆர் எஸ்.

'பின்னூட்டச் சுரங்கம் இங்கே'ன்னு நம்ம பதிவுகளுக்கு விளம்பரம் கொடுக்கப்போறேன்:-)

நாளையப்பதிவில் நம்பெருமாள் வருகிறார்!

அலைந்து திரிந்தது 60 ஆண்டுகள் என்று கூட ஒரு இடத்தில் வாசிச்சேன்.

அதனால் ஆண்டுக்கணக்கு பிரச்சனை இல்லை. கோவிலை விட்டு வெளியே போனான். பல ஆண்டுகளுக்குப்பின் திரும்பி வந்தான்!

அவர் 18 முறை நடந்தால் நான் 18 முறை பறக்கலாம், இல்லையா? இதுவரை பறந்ததைக் கணக்கில் வச்சு கொஞ்சம் கருணை காட்டக்கூடாதான்னு கெஞ்சுவேன்.

//பிள்ளை உலகாசாரியர்; இவர் இராமானுசரின் சீடர் அல்ல; அவருக்கு இரண்டு தலைமுறைக்குப் பின் வந்தவர்;//

அதனாலென்னப்பா.... நேரடி சிஷ்யப்பிள்ளை இல்லை என்றாலும் குருவுக்கு குருவுக்கு குருன்னு ஒரு பந்தம் தொடராதா?

இருக்குமாயிருக்கும்,இல்லெ?
நம்பெருமாள் என்றதும் முந்தி வேறெங்கோ வாசித்த கதை ஒன்னு நினைவுக்கு வருது. தில்லிக்குப்போய் இவனை மீட்டு வரும்போது நடந்தது. இளவரசியின் விளையாட்டுச் சாமான்களினிடையில் இவனை அடையாளம் தெரியாமல் காவலர்கள் குழம்பி நிற்க, ராமானுஜர் அங்கே வர்றார். அழகிய மணவாளன் தன் சிறுகாலடிகளால் தானே நடந்து வந்து அவர் மடியில் ஏறி அமர்ந்தான் என்று இருக்கும்.

எல்லாம் ஒரு அதீத அன்பால் ஊதிப்பெருக்கிச் சொல்லப்படும் கதையே! ஆச்சாரியார் மறைந்தது பனிரெண்டாம் நூற்றாண்டு! மாலிக்காபூர் தலைமையில் தில்லிப்படைகள் வந்தது பதினாலாம் நூற்றாண்டில்தான்.

ஒதுக்கியா வச்சுட்டாங்க? இப்போ அந்த வண்ணாரப்பேட்டையைப்போய்ப் பாருங்க.... முழுக்க முழுக்க சேட் குடும்பங்கள்தான்!

அவன் சாமி! யாரையும் ஒதுக்கலை. எல்லாம் அவனருள் விளங்காத ஆசாமிகள் செய்யும் அக்கிரமங்கள்:( சிறு தீயை ஊதி ஊதி பெரும் நெருப்பாக்கிய வியாதிகளைச் சொல்லணும்:(

சரி சரி. அடுத்த இடுகைக்கும் கட்டாயம் வந்து அருள் மழை பொழியவேணுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்!

said...


அன்புள்ள துளசி தளம் நண்பர்களே,

இதோ.....சென்னை அரங்கம் மேடையேற்றும் ‘கடவுள் வந்திருந்தார்!’ நாடகத்தின் அழைப்பிதழ் உங்கள் கையில். மேள தாளத்தோடு, வெற்றிலை பாக்கு சகிதம் உங்களை அன்போடு அழைக்கிறேன். நாடக ஆர்வலர்கள் அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.

IPL கிரிக்கெட், குழந்தைகள் பரீட்சை, டி.வி.யின் ’விடுமுறை தினக்கொண்டாட்டங்கள்’ அனைத்தையும் மறந்து, வரும் 23, 24-ம் தேதி மாலை ம்யூசியம் தியேட்டரை நிரப்ப வாருங்கள். உங்கள் உன்னதமான மன மகிழ்ச்சிக்கு நாங்கள் ‘கேரன்டீ’! எண்பதுகளில் நான் தில்லியில் பலதடவை போட்ட எனக்குப்பிடித்த நாடகம். சுப்புடுவுக்கும்! அவர் ”60 Laughters a Minute!” என்று தலைப்பிட்டு தில்லி ஸ்டேட்ஸ்மனில் விமர்சனம் எழுதினார். முப்பது வருடத்திற்குப்பிறகும் அதே கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறேன்.

ஒரு நல்ல நாடகம் போடுவது ஒரு கல்யாணம் பண்ணிப்பார்ப்பதையும், வீடு கட்டுவதையும் விட சிரமமான காரியம்!

அனைவரும் வாருங்கள்!............ஊர் கூடி தேர் இழுப்போம்!

அன்புடன்,

பாரதி மணி


said...

அழகிய சிங்கர் வந்த கதை எல்லாம் தெரிந்து கொண்டோம்.

said...

காட்டழகிய சிங்கர் கோவிலை நிதானமாக தரிசிக்கலாம்.

மற்றொரு கோவிலை இனி தான் பார்க்க வேண்டும்.