Showing posts with label அனுபவம் கொலு. Show all posts
Showing posts with label அனுபவம் கொலு. Show all posts

Tuesday, September 22, 2009

நகர்வலத்தில் கொலு வாரம். விஸிட் 1

அந்தந்தக் காலத்துலே கிடைக்கிறதை விட்டுட்டு...அப்புறம் நியூஸி போனபிறகு ஹோம்சிக் ஹோமாத சிக்குன்னு சொல்லிப் பீலா விடவேணாமுன்னு ......

முதல்லே செஞ்சது, 'டைம்ஸ் ஆஃப் இண்டியாவை நிறுத்து. ஹிந்து வாங்கு'. அதுலேதான் விலாவரியா எங்கெங்கே என்னென்ன, முக்கியமா ஓசிகள் என்னன்னு வந்துக்கிட்டு இருக்கு. டைம்ஸ்லேயும் வருதாம்.ஆனா....'பழைய நாய்க்குப் புது வித்தை படிப்பிப்பது ......ரொம்பக் கஷ்டம்'.


'எங்கூட்டுலே கொலு. வந்து பார்த்துட்டுப்போங்க'ன்னு இருக்குப்பா. நம்ம ஆளு சும்மா இருக்காம,'பத்திரிக்கையிலே போடுறாங்கன்னா பிரமாதமா இருக்கும். போலாம். என்ன எங்கேன்னு விவரம் கேளு'ன்னார்.

புருஷன் பேச்சைத் தட்டுன பாவம் நமக்கெதுக்கு? 'கண்டிப்பா வாங்க. அஞ்சு(ம்) வரை இருப்போம். கோவிலிலும் நாங்களேக் கொலு வச்சுருப்பதால் அஞ்சுப்பிறகு அங்கே போயிருவோமுன்னு சொல்லி வழியும் சொல்லி, சரியான விலாசத்துக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்புறேன்'னு , அடுத்த நிமிசமே அனுப்பியும் வச்சார். நான் பெற்ற இன்பம் வகையில் 'போட்டோ எடுக்கலாமா?' ன்னு கேட்டுவச்சேன். இல்லீங்க. நீங்க வந்து 'அட்மையர்' பண்ணுங்கன்னார் டாக்டர் அமர்நாத்.

இப்படியெல்லாம் சொல்லி அழைச்சா..... நமக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க? கிளம்பிப்போனா.... அந்த ஏரியாவில் மழை பேய்ஞ்சுருக்கு. நல்லவங்க இருக்காங்க போல இருக்கே.... (சிவாஜி கணேசன் ஸ்டைலில் படிக்கவும்)

கொலு? நிம்மதி ! நாலுமணி கூட ஆகலை. மூணே முக்கால். ஆனா வீடு பூட்டி இருக்கு. கீழ்வீட்டு மாமி சொன்னாங்க,'கோயிலுக்குப் போயிட்டார்'

நாமும் இங்கே முடிச்சுட்டுக் கோவிலுக்குப்போறத் திட்டம்தான். கோவிலில் அஷ்டதிக்கு கொலு இருக்காமே. அதுவும் நவராத்ரி என்பதால் கோவிலைப் பகலில் மூடுவதில்லையாம். சலோ சலோ..... மாடவீதியில் ஊர்ந்து, மயிலையாம் கயிலை, கயிலையாம் மயிலைன்னுக் கபாலியை அடைந்தோம். ராஜகோபுரத்தில் குளம், எனக்கோக் கால் வைக்க பயம். அடுத்த வாசல் வழியா நுழைஞ்சாச்சு.
பெரிய மண்டபத்தில் அட்டகாசமா அஷ்ட திக்கும் பார்க்கும் அலங்காரக்கொலு. கோவில்களுக்கானத் தங்க வெள்ளிக் கவசங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஏற்பாடு செஞ்சுருக்கு. நாங்கள் வந்துருக்கும் விவரம் தெரிஞ்சு சில பூனையார்களும் கொலுவுக்குள்ளே போய்ச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. பரிபூரணம். எல்லாப் பொம்மைகளும் பிடிச்சதுன்னாலும் கீதை உபதேசத்தின்போது அர்ஜுனனுக்குக் காமிச்ச விச்வரூபக் காட்சிக் கொள்ளை அழகு. கார்த்திகைப் பெண்கள், முப்பெரும்தேவியர், இடும்பன், பொய்க்கால் குதிரையுடன் ஸ்வாமி ஊர்வலம், பூரணகும்பம் ஏந்திய பாவையர் அடடா.......

அடுத்து இருக்கும் சின்ன மண்டபத்தில் பதினெட்டு சித்தர்கள் இமாலயத்தைச் சுற்றி. இந்தப்பக்கம் கர்ப்பக்கிரகத்துக்கு முன் இன்னொரு கொலு அலங்காரம்( படம் எடுக்கலை. அடக்கி வாசிச்சேன்) ஆனா அங்கே இருந்த இளமங்கையர் குழுவைப் பேட்டிக் கண்டாச்சு. எதிராஜ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவு மாணவிகள். ப்ரீத்தி அண்ட் கோ:-)

( கோபால்தான்..... வீடியோ கேமெராவோட இருக்காங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சுக்கோன்னார். எனக்கு எழுத ஐடியாக் கொடுக்கறாராம்ப்பா!!!!)
மண்டபத்துக்குப் பக்கத்துலேயே கோவில் நந்தவனம். நட்சத்திர மரங்களை வச்சு வளர்க்கறாங்க. உங்க நட்சத்திரத்துக்கு என்ன மரம்? மேலே படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்:-) தோட்டத்தில் கோவில்மியாவ்ஸ் ஜாலியாச் சுத்திக்கிட்டு இருக்குதுங்க.
>மக்கள் வெள்ளத்தில் நீந்தி, எதிர்நீச்சல் போடத் தெம்புக்காகப் பெட்ரோல் ஊத்திக்கச் சரவணபவனில் நுழைஞ்சோம். நமக்கு எதிர்ப்பக்கம் வந்து உக்கார்ந்த ராமமூர்த்தி ஐயர், 'அறுபதோ, எழுவதோ இல்லை எம்பதோ எல்லாக் கல்யாணங்களையும் பண்ணிவைக்கிறேன். சார்ஜ் கொஞ்சம் கூடுதலா இருக்கும். ஆனால் மந்திரங்கள் எல்லாம் சுத்தமாச் சொல்லிவைச்சுச் செஞ்சுதரேன்'னு உறுதியாச் சொல்லி இருக்கார். யாருக்காவதுத் தேவைன்னா சொல்லுங்க. நமக்கும் ஏஜன்ஸி எடுத்தமாதிரி ஆச்சு. தினந்தினம் தட்டுலே மட்டும் ஆயிரம் வரை விழுதாம் ஒவ்வொரு சந்நிதியிலும்! நெசமாவா?