இந்த வருஷப் பிள்ளையார் பிறந்தநாள், நம்ம வீட்டில் ரொம்பச் சிறிய அளவிலும் (! ) நம்மூரில் இருக்கும் ரெண்டு பிள்ளையார் கோவில்களில் சிறப்பாகவும் நடந்தது.
நம்ம வீட்டில் நானே பிள்ளையார் பிடிக்க ஆரம்பிச்சது 2015 வது வருசத்திலேயிருந்துதான். (மேலே உள்ளவர் !) ஆச்சு இது பதினோராவது வருஷம். நம்ம நியூஸியில் தெற்குத்தீவில் இருக்கும் நெல்சன் என்ற ஊர்தான் களிமண்ணுக்குப் பெயர் போனது. அந்த ஊரில் பாட்டரி செய்யும் சிறுதொழிற்சாலைகளும் ஏகப்பட்டவை உண்டு. மற்ற ஊர்களிலும் பாட்டரி வகுப்புகள் அங்கங்கே நடத்தறாங்க. நாம் அதில் சேர்ந்து கைவினைப்பொருட்களாக களிமண் சமாச்சாரங்களைச் செய்யக் கத்துக்கலாம். நம்மூரில் ஒரு க்ராஃப்ட் ஷோ போனபோது, இப்படி ஒரு பாட்டரி செய்யும் வகுப்பிலிருந்து கொஞ்சம் களிமண் வாங்கி வந்துருந்தேன். நல்ல வெள்ளைக் களிமண். இதை வச்சே நாலு வருஷம் சமாளிச்சாச் !
சில வருசங்களுக்கு முன் நம்ம 'ஹிந்து ஸ்வயம் ஸேவக்' குழுவில் , பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னே வரும் ஞாயிற்றுக்கிழமையில் 'கணேஷ் மேக்கிங் வொர்க்ஷாப்' னு ஆரம்பிச்சாங்க.
களிமண் இலவசமாக் கொடுப்பாங்க. கணேஷ் செஞ்சு, கடைசியில் ஒரு வரிசை வச்சுட்டு, அவரவர் வீட்டுக்கு எடுத்துப்போய் நம்ம வீட்டுப்பூஜைக்கு வச்சுக்கலாம்.
இந்த வருசம் ஆகஸ்ட் 24க்கு பதினொருமணிமுதல் ஒருமணிவரை பிள்ளையார் செய்ய நேரம் குறிச்சாச்சு. நாங்கள் வழக்கம்போல் போனோம். கூடவே பேரனும் மகளும் வந்தாங்க.
இப்ப என்னன்னா.... இந்த ஈவன்ட்க்கு ரொம்பப் புகழ் கிடைச்சு, கணேஷ் செய்யணுமுன்னா... பெயரை முன்கூட்டியே பதிவு செஞ்சுக்கணுமுன்னு சொல்லும்படி ஆச்சு. எத்தனை பேர் வர்றாங்கன்னு தெரிஞ்சால்தானே எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் களிமண் வாங்க முடியும் இல்லையோ ? இந்த வருஷம் 180 பேர் ! ஹாலில் இடப்பற்றாக்குறை என்பதால் பதிவு செய்வதை இதோடு நிறுத்தும்படி ஆச்சு !
.
நான் முதலில் கணபதி வந்தனம்னு சின்னதா ஒரு புள்ளையார் பிடிச்சேன். பேரன் (2 வயசு, 5 மாசம்) பார்த்துட்டு 'எலிஃபன்ட்'னு சொன்னான். வெற்றி வெற்றி !
நம்ம வீட்டுப்பூஜையில் கோபால், மகள் & துல்ஸியின் கைவண்ணத்தில் மூணு புள்ளையார்கள்! கொஞ்சம் உடம்பு சரியில்லாததால் (எனக்குத்தான்) ரொம்ப மெனெக்கெடாமல் ரெண்டுவித மோதகமும், கேரட் பால் ஹல்வாவும், சுண்டலும் மட்டும் செஞ்சேன்.
முதல் முறையாக அவல் மோதகம் ! நல்லாவே வந்துருச்சு.
அரைக் கப் அவல் எடுத்து, வெறும் வாணலியில் நல்லா வறுத்து எடுத்துக்கிட்டேன். சூடு இருக்கும்போதே அரைக்கப் துருவிய தேங்காய் ( டெஸிக்கேட்டட் தான்) சேர்த்து வச்சுட்டுச் சூடு நல்லா ஆறினதும் அரைக்கப் வெல்லத்தூள், அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நல்லாப் பொடி பண்ணிட்டுக் கடைசியில் ஒரு ஒன்னரை டீஸ்பூன் நெய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து . கொஞ்சம் ஈரப்பதமா கையில் உருண்டை பிடிக்கும் விதமா ஆச்சா..... அதை எடுத்து ஒரு தட்டில் போட்டுட்டு, மோதக அச்சுக்குள் நிறைச்சு எடுத்துட்டால் போதும். இப்படித் தயாரிச்ச மோதகங்களை ஸ்டீமரில் ரெண்டு நிமிட் வச்செடுத்தேன்.
ரெண்டாவது ரகம் எனர்ஜி மோதக் (! )இது மகள் வச்ச பெயர்!!!
நட்ஸ் & டேட்ஸ் மோதகம்
முந்திரி, பாதாம், வால்நட்ஸ் எல்லாம் நூறு நூறு கிராம். எடுத்துத் தனித்தனியா வெறும் வாணலியில் நல்ல சூடு வரும்வரை வறுத்து எடுத்துக்கணும். நல்லா ஆறினதும் மிக்ஸியில் பொடி செய்யணும். முதலில் பாதாம் அரைச்சுட்டு, மற்ற நட்ஸ்களை அப்புறம் சேர்க்கணும். பாதாம் அரைபடக் கொஞ்சம் நேரம் ஆகும். கடைசியில் நூற்றைம்பது கிராம் பேரீச்சம் பழம் சேத்து அரைச்சால் போதும்.
அப்புறம்? இருக்கவே இருக்கு மோதக அச்சு ! கடைசியாக் கொஞ்சம் பாக்கி ஆனதைச் சின்னதா சீடைபோல உருட்டி வச்சுட்டேன். பேரன், வாயில் அப்படியே போட்டுக்க வசதி !
கேரட் பால் ஹல்வா..... கேரட்டைப் பாலில் வேகவச்சு, ஸ்டிக் ப்ளன்டரால் மசிச்சுட்டு, சக்கரை சேர்த்து வாணலியில் ஹல்வாக் கிளறணும். கொஞ்சம் கொஞ்சமா நெய் சேர்த்துக்கிளறிக்கிட்டே இருக்கணும். ஹல்வாப் பதம் (! ) வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராக்ஷை , ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறினால் ஆச்சு. தட்டில் பரப்பித் துண்டு போட வேண்டியதில்லை. சின்னக் கிண்ணத்தில் வச்சு ஸ்பூனால் சாப்பிடும் பதம் போதும்.
சுண்டல்...... நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச வழக்கப்படி !
ப்ரசாத சமையலில் பிஸியாக இருந்ததால் சமைக்கும்போது படம் எடுக்க வாய்ப்பில்லாமல் போயிருச்சு.
நம்ம் வீட்டில் பூஜை ஒருமாதிரி முடிஞ்சது !
நம்மூரில் இப்போ ரெண்டு பிள்ளையார் கோவில்கள் இருக்கு. பெரிய பிள்ளையார் வந்து மூணுவருஷம் ஆச்சு. தனியார் கோவில்னு ஆரம்பிச்சு, இப்போ பொதுக்கோவிலா மாத்தியிருக்காங்க. ரொம்பப் பெருசா ஒரு கோவில்கட்ட ஏற்பாடுகள் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு. ரொம்பவே அழகான பிள்ளையார் இவர். அன்பு விநாயகர் என்று பெயர். முகூர்த்தக்கால் பூஜை, என் கையால் ஆரம்பிச்சது! மூத்த குடிமகள். வயசுக்கு மரியாதை ! நியூஸி தெற்குத்தீவில் முதலில் குடியேறிய தமிழ்க்குடும்பம் நாம்தான் ! நமக்கு இது 38 வது வருசம் நியூஸியில் !
கீழே முதல் மூன்று படங்கள் : கோவில் ஆரம்பகாலம்.


இங்கே மூணு காலப் பூஜை. மூன்று வித அலங்காரங்களுடன் !!!! நாம் நம்ம வீட்டுப்பூஜை முடிஞ்சாட்டு, அங்கே போனோம்.. ரெண்டு கிமீ தூரம்தான் நமக்கு. உச்சிகால பூஜை முடிஞ்சதும், கோவில் போட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டுக் கிளம்பியாச்சு.
சாயங்காலம் நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போனோம். இது ஆரம்பத்தில் இருந்தே பப்ளிக் கோவில்தான். இடம் வாங்குமுன் அஞ்சு வருஷம், எங்க சிட்டிக்கவுன்ஸில் ஹாலை, வாடகைக்கு எடுத்து மாசம் ஒருமுறை சத்சங்கக் கூட்டம் நடத்திக்கிட்டு இருந்தோம். அப்புறம் வணிக வளாகத்தில் ஒரு கட்டடம் விலைக்கு வாங்கினோம். மக்கள் கொடுத்த அன்பளிப்புத் தொகைகள் போக மீதி பணத்துக்கு வங்கிக்கடன் வாங்கியிருக்கோம்.
வாங்கிய கட்டடத்துக்கு உள்ளே, சிலபல மாற்றங்கள் செய்து , இருந்த அறைகளின் தடுப்புகளையெல்லாம் அகற்றி, ஒரு ஹால் போல அமைச்சுக்கோவிலாக மாத்தி, 2022 வருசம் டிசம்பர் 11 ஆம் தேதி குடியமர்த்தியாச்சு நம்ம 'செல்லப்பிள்ளையாரை' ! இவருக்குப் பெயர் வச்சவள் நாந்தான். முதல்முதலில் இங்கே பிள்ளையார் கோவில் கட்டலாம் என்ற எண்ணத்தை எங்கள் மனதில் விதைச்சவர் செல்லா என்ற பெயருடைய மலேசிய இந்தியர்தான். நாங்கெல்லாம் அப்புறம் அவர் கூடச் சேர்ந்துக்கிட்டாலும் ஆரம்பிச்சவர் அவரே. உற்சவமூர்த்திதான் அப்போதைய மூலவர்.
அப்புறம் போனவருஷம் ஏப்ரலில் மூலவர் (கற்சிலை ) நம்மூருக்கு வந்திறங்கினார். சாஸ்திர சம்ப்ரதாயங்கள் படி, தண்ணீர், தான்யம், ரத்தினம், புஷ்பம் இப்படி ஒவ்வொரு மண்டலம் அவர் கடந்ததும், செப்டம்பர் மாதம் பதினைஞ்சாம் தேதி, அவரை பிரதிஷ்டை செஞ்சோம். மிகவும் கோலாகலமாகக் கும்பாபிஷேக விழா நடந்ததுன்னு சொல்லவும் வேணுமோ !!!! எங்கள் ஏழு வருசக்கனவு நிறைவேறிய நாள் !!!!
நம்ம பிள்ளையாரின் அதிர்ஷ்டம், பூஜை செய்ய ரெண்டு பண்டிட்களும் கிடைச்சுருக்காங்க.
இன்றைக்குப் பிள்ளையார் சதுர்த்தி என்பதால் காலை ஆறு முதல் விசேஷ அபிஷேகம், பூஜை எல்லாம் நடந்து பகல் ஒன்னரை மணி போலதான் முற்பகல் நிகழ்ச்சிகள் முடிந்தன. நமக்குக் காலையில் கோவிலுக்குப்போக நேரமில்லாததால்..... (கோவில் பக்தர் சபை, வாட்ஸப்பில் அனுப்பும் லைவ் வீடியோவில் ஒரு கண் வச்சுருந்தேன்) மாலைநேரப் பூஜையில் பங்கெடுத்தோம்.
நல்ல கூட்டம்...... கால் வைக்க இடமில்லாமல் போச்சு ! பூஜைகள் முடிஞ்சதும், அன்னதானம் ஆரம்பம். நம்மவருக்குப் பிடிச்ச சேவை, பந்தி விளம்பல் என்பதால் அதில் ஈடுபட்டார். கால்வலி காரணம், இங்கே அங்கேன்னு வழக்கம்போல் ஓடமுடியாமல் நான் ஒரு பக்கமாக உக்கார்ந்திருந்தேன்.
இன்னும் கொஞ்சம் பெரிய இடமாக இருந்தால் நல்லது. அதுக்கான ஏற்பாட்டை அந்தப் புள்ளையாரே நடத்திக்கணும்னு வேண்டுகோள் வச்சுட்டு , விழா எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதுன்னு ஒன்பதரைக்குக் கிளம்பி வீடு வந்தோம்.
இந்த வருசப் பிறந்தநாள் இப்படி நடந்தது !
ஹேப்பி பர்த்டே புள்ளையாரே !
PIN குறிப்பு : நம் வீட்டில் செய்யும் 'சொந்தப்பிள்ளையார்'களை, நம் சொந்தப் பிள்ளைகளாகவே நினைப்பதால்... விஸர்ஜன் என்ற பெயரில் தண்ணீரில் கொண்டுபோய் கரைப்பதில்லை. எல்லோரும் பச்சைமண்ணுங்கப்பா ! நம்ம சாமி அறையில் ஒரு இடம் பிடிச்சு உக்கார்ந்துருக்காங்க.

0 comments:
Post a Comment