Monday, August 25, 2025

பை பை இந்தியா, பை பை சென்னை ....... (2025 இந்தியப்பயணம் பகுதி 61 ) நிறைவுப்பகுதி

காலை ஆறரைக்குத் தயாராகிட்டோம்.  நம்ம விஜியும்  ட்ராவல் ஓனர் சதீஷும் பெரிய வண்டியுடன் வந்துட்டாங்க. வழக்கமா சதீஷ் மட்டும்தான் வருவார். இந்த முறை விஜியும் வழியனுப்ப வந்துருக்கார்..

நேத்து ரெஸ்ட்டாரண்ட் மேனேஜர்,  காலையில் உங்களுக்காக டிஃபன் ஏதாவது ரெடி பண்ணிடரேன்னார்தான்.  லோட்டஸில் பொதுவா,  ப்ரேக்ஃபாஸ்ட் நேரம் காலை ஏழரைக்கு ஆரம்பம். நாங்களும் சிரமப்படவேணாம்னு சொல்லிட்டோம்.
 
வழக்கம்போல்  கிளம்பும் நாள் ப்ரேக்ஃபாஸ்ட் நமக்கு கீதாவில்தான்.  எப்பவோ ஒரு சமயம்....  சட்னி ரெடியாகலைன்னு பாலாஜியில் சாப்பிட்டுருக்கோம். 
நம்ம ஃப்ளைட் காலை பத்துமணிக்கு.  ப்ரேக்ஃபாஸ்ட் விளம்ப எப்படியும் பதினொரு மணி ஆகிரும். வெறும் வயத்தில் அவ்ளோ நேரம் இருப்பது கஷ்டம் இல்லையோ ? 
நாங்க நாலுபேரும் கிளம்பி கீதாவுக்குப் போனோம்.  போறதுக்கு முன்னால், லோட்டஸ் வரவேற்பில் பில் ரெடியாக்கச் சொல்லிட்டுப் போனோம்.  கூட்டமே இல்லாத காலை நேரத்து பாண்டிபஸார் எனக்கு ரொம்பப்பிடிக்கும்.  
இட்லி வடை காஃபி முடிச்சுட்டு லோட்டஸ் திரும்பி பில் அடைச்சுட்டு, ஏழரைக்குக் கிளம்பியாச்சு.  எட்டுமணிக்குT2 புது டெர்மினல். உண்மையில் விஜியைப் பிரிவதுதான்..... ஏதோ சொந்தப்பிள்ளையைப் பிரிவதுபோல இருந்தது....
உள்ளே போய் செக்கின் ஆச்சு. அம்பது கிலோதான் . நிம்மதி! எனக்கு வீல்ச்சேர் சொல்லியிருந்தார். அவுங்க வந்து என்னை உக்காரவச்சாச்!  ச்சும்மாச் சொல்லக்கூடாது..... உள்ளே அட்டகாசமா இருக்கு.  ஓடியோடிப் படம் எடுக்க ஆசைதான். ஆனால் எங்கே.... பரபரன்னு சேரைத் தள்ளிக்கிட்டுப்போகும்போது கிடைச்சவரைதான் க்ளிக்ஸ்.  உண்மையில் எனக்கெல்லாம்  இந்த வீல்ச்சேர்  சல்யம்தான்.   கட்டிப்போட்டாப்ல இருக்கும்.  நம்மவர்தான் விடாப்பிடியா அதுலே போயே ஆகணும் என்கிறார். 




வீல்ச்சேர் மக்களுக்கு முதலில் அனுமதி என்பதால்...  ஒன்பதே காலுக்கு  உள்ளே போயிட்டோம்.  பத்துமணிக்குக் கிளம்பி, நாலுமணி நேரம் பறக்கணும். அப்பதான் ரிமைண்டர் அனுப்புது ஏர்லைன்ஸ்.  க்ரிஸ் ஷாப்லே உனக்கு $75க்கு ஏதாவது வாங்கிக்கோன்னு !  நம்மவருக்கும் ஒரு $75. இதை நான் மறந்தே போயிருந்தேன்.  இப்பப் பார்த்து வச்சுக்கிட்டு,  நியூஸி ஃப்ளைட்லே வாங்கிக்கணும்.  ஆமாம்.... எதுக்கு நமக்கு கிஃப்ட்  கொடுக்கறான் ப்ளேன்காரன்? ஙே.....    
ப்ளேன் கிளம்பும்போதே லேட்.  போற போக்கில் சரியாகிருமுன்னு பார்த்தால் இல்லை.  அதே இருபத்தியஞ்சு நிமிட்டை மெயின்டைன் பண்ணிக்கிட்டாங்க.  ஆனால் அதுக்கப்புறமும்  மேலே சுத்திக்கிட்டே இருக்காங்க.  தரை தொடும்போது  நாலே முக்கால்.  போகட்டும்.... நமக்கு நியூஸி ஃப்ளைட்டுக்கு நேரம் இருக்கு.  ஓட வேணாம்.  
வெளியே வந்தால் வீல்ச்சேர் மக்களையெல்லாம்  சேர்த்து ஒரு வண்டியில் (Buggy )ஏத்திக்கிட்டுப்போய்  ஸ்கை ட்ரெய்னாண்டைக் கொண்டுபோய் இறக்கிட்டாங்க. இப்ப இருப்பது   T3.  இங்கிருந்து  T2 போகணும்.  போனோம்.  அங்கே போய் இறங்கினதும், இன்னொரு வண்டியில் நம்மை ஏத்தி நம்ம கேட்டாண்டை கொண்டுபோய் இறக்கிவிட்டாச். 

அட ராமா......    தலையிடிக்கு ஒரு காஃபி/ டீ குடிச்சாத்தேவலை. ஆனால் இங்கே ?  மெயின் ஏரியாவுக்குப் போனால்தானே......   நான் சொல்லலை..... வீல்ச்சேர் ஒரு சல்யம்னு..... 

கொஞ்ச தூரத்துலே இருக்கும் ட்ராவலேட்டரில் போய் பாடாவதியா ஒரு டீ குடிச்சுட்டு வந்தோம்.  ஷோல்டர் பேகில் குழந்தையும் நம்மோடு இங்கே அங்கேன்னு அலையறான்..... 
சிங்கை நேரம் 7.50க்கு நியூஸி ஃப்ளைட். வீல்ச்சேர் மக்களை ஏழுக்கே உள்ளே அனுப்பிட்டாங்க.  ராத்ரி ஃப்ளைட் என்பதால் வேடிக்கை ஒன்னும் கிடையாது.  சாப்பாடு வந்தாட்டு, முடிச்சுட்டுத் தூங்கிடணும்.    நல்ல வேளையா இப்பெல்லாம் ஃப்ளைட்டில் முழு நேரத்துக்கும்  ஃப்ரீ  வைஃபை கிடைக்குது. போன பயணத்தில் எல்லாம் ஒரு செக்டருக்கு ரெண்டு மணி நேரம் மட்டும். அதுவும் லாக்கின் செஞ்சால்  ஒரேடியா ரெண்டுமணி நேரத்தைத் தொடர்ச்சியா பயன்படுத்திக்கணும். நடுவிலே நிறுத்திட்டு அப்புறம் பார்க்கலாமுன்னா நோ நோ தான் ! 

நூத்தியம்பதுக்கு என்ன வாங்கலாம்னு கொஞ்சம்  மண்டையிடி.  பாண்டா பொம்மை கேட்டால்  இல்லையாம்.  சின்ன காஃபி ஃப்ளாஸ்க், ஷாப்பிங் பேக்,  நம்ம ஜன்னுவுக்கு ஒரு நகை செட் இப்படி நாலைஞ்சு ஐட்டம். ஒரு அஞ்சு சிங்கப்பூர் டாலர் கூடுதலாக் கொடுக்கவேண்டியதாப் போச்சு.  பையை அப்படியே வாங்கிவச்சுட்டோம்.  அப்பவே செக் பண்ணியிருக்கணும். வீட்டுக்கு வந்து பார்க்கும்போதுதான் ஏர்ஹோஸ்டஸ் செஞ்ச குழப்பம் தெரிஞ்சது. காஃபி ஃப்ளாஸ்க் மூணு இருக்கு.  ஓசிக்காசுதானே.... போனாப்போகட்டும்னு இருந்துட்டேன்.

காலை ப்ரேக்ஃபாஸ்ட்க்கு எழுப்பினதும் ,  நமக்கு  வடையாம்ப்பா !!!!!
சதர்ன் ஆல்ப்ஸ்  மலைத்தொடர்கள் பார்த்ததும்.....  ஊர் வருதுன்னு ஒரு மகிழ்ச்சி.  சம்மர் முடிஞ்சு இப்போ இலையுதிர்கால ஆரம்பம்.   ஐயோ..... வீட்டுத்தோட்டம் என்ன கதியில் இருக்கோ ?

தரை தொட்டு, வெளியில் வந்ததும்..... வீல்ச்சேர் காத்திருக்கு.  எல்லா ஃபார்மாலிட்டீஸும்  காமணியில்......  பாலராமன்..... பளிங்குக்கல் என்றதும்  ஓக்கேன்னுட்டுத் திறக்கச் சொல்லலை.

வெளியே வந்தால்  மகள் குடும்பம் !  பேரன் தாத்தாகிட்டே தாவிக்கிட்டு வர்றான்.  ஆறுவாரப் பிரிவு ! 

https://www.facebook.com/share/v/1M5KtvAHQY/

வீட்டுக்கு வந்து சேர்ந்து, கதவைத்திறந்ததும்  சாமி அறைக்கு ஓடிப்போய் தாத்தாவுக்கு விபூதி வச்சுவிட்டார் பக்திமான் !
சட்னு குளிச்சுட்டு சாதம், பருப்பு தயாராக்கி குழந்தைகளுக்கு பப்பு மம்மு !
நம் பயணம் முடிஞ்சது.
பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ,  கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும். ஆனா ஒன்னு.... உடலில் கொஞ்சம் வலு இருக்கும்போதே போய் வந்தால் நல்லது. முட்டிவலி, முழங்கால் வலி, தலை சுத்தல் இப்படி  வலிகள்   வர்ற வயதான காலம்வரை  தள்ளிப்போடாதீங்க.....

ஆதலினால் பயணம் செய்வீர்!

1 comments:

said...

நல்ல தொடர். எனக்குமே தொடர்ந்து பயணம் செய்யத்தான் ஆசை. இதோ... பிருந்தாவனம், கண்ணன் பிறந்த இடம், தவழ்ந்த இடம், கோவர்தன், குருக்ஷேத்திரம் என்று பத்துநாள் பயணம் புறப்பட்டாச்சு நாளை மறுநாள்