Monday, August 04, 2025

என்ன ஸ்டைலுமா............... (2025 இந்தியப்பயணம் பகுதி 54 )

புள்ளையார் மாதிரி  மனுஷனுக்கு இணக்கமான ஒரு சாமி இல்லவே இல்லைன்னு எனக்குத் தோணும்.  என்ன வேஷம் கட்டினாலும் 'நான் ரெடி'ன்னுருவார்.  மனுஷனின் கற்பனைக்கு  ஈடு கொடுக்கும் கில்லாடி ! 
 ஊரைச்சுத்திவந்ததில் ஏகப்பட்ட சிற்பங்கள் செய்யும்/ விற்பனை  நிலையங்கள்.  புள்ளையார் விதவிதமா இருக்கார்.  கருங்கல் சிலை என்றாலும்  உடலில் அங்கங்கே கரும்பளிங்கு மினுமினுப்பை எப்படிக்கொண்டு வர்றாங்கன்னு தெரியலை.   எனக்கு ஒன்னு வாங்கிக்கணும் என்ற தீராத ஆசை நடக்கச் சான்ஸே இல்லை.....  ஹூம்...


பழைய  கலங்கரை விளக்கத்துக்குப்பக்கம் இருக்கும் பகீரதன் தவத்தின் மாதிரியைப் பார்த்த கையோடு,  'அர்ஜுனன் தபஸ்' ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்  முழுசுமாய் செதுக்கி முடிக்கப்பட்டப் பெரும்பாறை சிற்பங்களையும் ( இது கோவிலுக்குப் பக்கம்தான். ஏகப்பட்ட தீனி வண்டிகள் நின்னதால்.... நம்மவர் இறங்கிப்போய் க்ளிக்கிட்டு வந்தார்) பார்த்துட்டுக் காரில் இருந்தே சிலபல க்ளிக்ஸ் ஆனதும் சலோ சென்னைன்னு கிளம்பிட்டோம்......


கிழக்குக்கடற்கரைச் சாலை அருமை! ஆனால் எல்லாம்  சென்னையைச் சமீபிக்கும் வரைதான்.... ஆர் கே கன்வென்ஷன் சென்டரைத் தாண்டியவுடன் கூட்டமும் நெரிசலும் ஆரம்பம். மத்யான நேரம் என்பதால் அவ்வளவா ட்ராஃபிக் இல்லைன்னு விஜி சொல்லிக்கிட்டு வந்தார்.
சென்னை/ மெட்ராஸ் பொறுத்தவரை எனக்கென்னமோ லவ் & ஹேட் உணர்வுதான்.  ஆனால் தெரியாத தேவதைகளை விடத் தெரிஞ்ச பேய்கள் பரவாயில்லை, கொஞ்சம்  ஒத்துப்போகலாம் என்பதுதான் உண்மை.

லோடஸ் வந்து சேரும்போது மணி ஒன்னு அம்பது.  அறைச் சாவி நம்மிடமே நின்னுபோச்சுன்றது ஞாபகப்படுத்தப்பட்டது..... அதையே திரும்பச் செயல்படவச்சுக் கொடுத்தாங்க.  பெட்டிகளை வச்சுட்டுக் கிளம்பிப் பகல் சாப்பாடு,  ஜி என் சாலை சங்கீதாவில்.  பார்க்கிங் தேடவேணாம்.  அவுங்களே கொண்டுபோய் நிறுத்திட்டு, நாம் சொன்னதும் திரும்பக்கொண்டு வந்துடறாங்க. 


நம்மவருக்கும் விஜிக்கும் தாலி. எனக்கு ப்ரெட் பட்டர் ஜாம்.  லோட்டஸ் திரும்பி வந்ததும்  விஜியை வீட்டுப்போகச் சொன்னோம். அம்மா அப்பா காத்திருப்பாங்கதானே ? சாயங்காலம் வெளியே போக ஒரு  ஆட்டோ பிடிச்சால் ஆச்சு.  ஆனால்.....  விஜிக்கு சம்மதம் இல்லை.  ஃபோன் பண்ணுங்கம்மா  .....  வந்துடறேன்னுட்டார்.

அறைக்குப்போய் முதல் வேலையா, பாலராமரை வெளியில் எடுத்து அலமாரியில் வச்சதும், சிரிச்சமாதிரி தோணுச்சு.  ரெண்டு வாரமா பபுள்ராப்லே கட்டிவச்சுருந்ததுக்கு..... மன்னிப்பு கேட்டுக்கிட்டேன். சாயங்காலம் வெளியே போகும்போது கொஞ்சம் பூ வாங்கிவந்து சமர்ப்பிக்கணும்.  எல்லாம்  இங்கே இருக்கும்வரைதான். நியூஸி போனால்.....  மல்லிகை எல்லாம் இல்லையாக்கும்.....
சாயங்காலம், ஆறுமணிக்குக் கிளம்பிப்போய் டெய்லர்  கடை. பேரனுக்குத் தைக்கக் கொடுத்துருந்தவை எல்லாம் தயார். இந்த டெய்லர் நல்லாவே தைக்கிறார். ஜெண்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட்.  நியூ ஸ்டைல் டெய்லர்ஸ்னு கடைப்பெயர். சௌத் உஸ்மான் ரோடு. ஹொட்டேல் அருணாவுக்கு எதிர்வாடை.  லேடீஸுக்குத் தைக்கறீங்களான்னு கேட்டால்..... ஆமாம்ன்னார்.  சரி ஒரு செட் கொடுத்துப்பார்க்கலாம்.     
நாம் ஏற்கெனவே சிலமுறை வந்துருந்தாலும்,  டெய்லர் கடைக்குப்பக்கம்  இருந்த  ஒரு சமாச்சாரத்தைக் கவனிக்கலை. அப்படிக் கவனிக்க முடியாத வகை இல்லைதான்.  மூடி இருந்துருக்கு போல !  பழக்கமான சத்தம்..... சின்ன வயசு நினைவுகளை மீட்டெடுத்தது.  
இந்த முறை  எனக்குக் கைராசியில்தான் அமைஞ்சது என்பதால்  பாண்டி பஸாருக்கு வந்து ஒரு செட் துணிகள் வாங்கினேன். நாளைக்குப் புது டெய்லரிடம் கொடுத்துப் பார்க்கலாம்.  வாசலில் வா வா என்று கூப்பிட்டது மாம்பழம். சீஸன் இல்லைன்னாலும் ஆசை விடுதா என்ன ? 

கொஞ்சம் பூவும் பழமுமா வாங்கிவந்து குழந்தைக்குக் கொடுத்தாச்சு. ராச்சாப்பாட்டுக்கு வெளியே போகலை.  

நாளை முதல் ஆயுர்வேத சிகிச்சைக்கு மீண்டும் போகவேணும். 

தொடரும்........... :-)

0 comments: