அப்பெல்லாம்.... (மத்ராஸ் ) பட்டணத்துக்குச் சுத்திப்பார்க்க வர்ற மக்கள்ஸ் எல்லோரும் ரெண்டு காலேஜுகளுக்குக் கட்டாயம் போவாங்க. படிக்கறதுக்கா ? ஹாஹா..... வேடிக்கை பார்க்கத்தான். ஒன்னு உயிர்க்காலேஜ் இன்னொன்னு செத்த காலேஜ். ஏன் இப்படி ஒரு பெயர் ? கீழே படம் பாருங்க..... அதேதான் காரணம் ! (படம் , வலையில் இருந்து !நன்றி !)
ரொம்பப்பாவம் செஞ்சவங்களைக் கொதிக்கும் எண்ணெய்க்கொப்பரையில் போட்டு பொரிச்சு எடுப்பாங்களாம். எனெக்கெப்படித் தெரியும் ? மெட்ராஸ் செத்தகாலேஜுலே எமலோகம் சீன் ஒன்னு இருக்கும். பார்த்துருக்கேன். நரகத்துக்குப் பயந்தே சனம் பாவம் செய்யறதைக் குறைச்சுக்கிட்டு இருந்தது !
மேலே படம்.... வலையில் இருந்து, நன்றி !
ஒரு பத்துப்பதினைஞ்சு வருசங்களுக்கு முன், மகளின் இந்தியப்பயணத்தில், இதைக் காமிக்கறதுக்குன்னே அந்த செத்த காலேஜுக்குப் போனால் நரக ஸீனைக் காணோம். எடுத்துட்டாங்க போல ! அதான் குளிரு விட்டுப்போயிருக்கு ! நரகமே இல்லையேன்ற நெனப்பில்.... என்னென்னெவோ நடந்துக்கிட்டு இருக்குல்லே ?
லோட்டஸில் இருந்தால்... காலை எட்டரைக்குப்போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்குவோம். ( இப்பவும் நான் ரொம்ப மிஸ் செய்வது லோட்டஸின் ப்ரேக்ஃபாஸ்ட்தான். )
பத்து மணிக்கு என் டைம், ஆயுர்வேத சிகிச்சை நடக்கும் சாந்தா ஹாஸ்பிடலில். இடையில் ரெண்டு வாரம் லீவில் கோவில்கள் சுத்திட்டு வந்துருக்கேன் . வழக்கம்போல் முதலில் ரத்த அழுத்தம் பார்ப்பாங்க. டென்ஸி, செக் பண்ணி முடிச்சதும், 'எத்தரையா ? 'ன்னு நான் கேட்பதும், 'நோர்மல்தன்னே... குழப்பமொன்னும் இல்லா' ன்ற பதிலும் வழக்கம்போல். சிகிச்சை முடிஞ்சு வெளியில் வந்ததும் திரும்ப ஒருமுறை ரத்த அழுத்தம் பரிசோதிப்பது பதிவு.
(மகளிர் தினத்துக்கு டிஸ்கவுண்ட் கூப்பான் எல்லாம் போட்டுருக்காங்க !) லோட்டஸுக்குப் பக்கம்தான் (வெறும் 350 மீட்டர்) என்றாலும் நடக்க முடியாதுன்னு ஒரு ஆட்டோ எடுத்துக்குவோம். நம்மவர், அங்கே வரவேற்பில் உக்கார்ந்து லோட்டஸில் இருந்து கொண்டுவந்த தினசரியைப் படிச்சுக்கிட்டே ஒரு மணி நேரம் போக்கிருவார். 'அறைக்குப் போயிட்டு நிதானமா வாங்க'ன்னாலும்...... கேக்கறதில்லை. சில சமயம் வாசலையொட்டி இருக்கும் பழமுதிர் நிலையத்து ஷாப்பிங் முடிச்சுக்குவார். முக்கியமாத் தயிர், வாழைப்பழம், வெள்ளரிக்காய் இப்படி.....
சிகிச்சை அறைக்குள் போனால்.... சின்ன சைஸ் எண்ணெய்க்கொப்பரையில் எனக்கான தைலம் காய்ச்சிக்கிட்டு இருக்காங்க. கொஞ்சமாத்தான் பாவம் பண்ணியிருக்கேன் போல !
எண்ணெய் நல்லாச் சூடானதும் மருந்து மூட்டைகளை அதில் முக்கி எடுத்து ஆளுக்கு ஒருபக்கமா நின்னு நம்ம கால்களில் தேய்க்கறாங்க. முதலிலேயே சூடு ரொம்ப இருந்தால் சொல்லுங்கன்னதால், அப்பப்ப 'ஐயோ சூடு சூடு' ன்னு சின்னதாக் கத்திக்கிட்டு இருப்பேன். அவுங்க சொல்றபடி நேராகப்படுத்தும், குப்புறப்படுத்தும், ஒருக்களிச்சுப்படுத்துமா, என் கால்களை சூட்டுக்கு ஒப்புக்கொடுத்துட்டேன். சுருக்கமாச் சொன்னா காலை பார்பக்யூ பண்ணிருவாங்க. இதுலே எண்ணெய் வழிஞ்சு, அந்த தோல்மெத்தையில் பரவி நம்ம உடம்பை நனைச்சுக்கிட்டு இருக்கும். எந்தொரு ஸல்யம்?
மொத்தம் ஒரு மணி நேரம் கால்களுக்கு ஆயில் மஸாஜ். அப்புறம் ஒரு மருந்துப்பொடியை ஆப்பிள் ஸைடர் வினிகரில் கலக்கிக் கொதிக்கவச்சு முழங்கால்களுக்குப் பத்துப்போட்டு விடுவாங்க. ஆச்சு. ஆட்டோவில் அறைக்குத் திரும்பிருவோம். ரெண்டு மணி நேரம் கட்டோடு இருக்கணும். அப்புறம் எல்லாத்தையும் சுத்தம் செய்து கழுவிட்டு, ஒரு குளியல் போட்டால் அன்றைய சிகிச்சை முடிஞ்சது. எப்படியும் பகல் ரெண்டு மணி ஆகும். அதுவரை வலை மேய்தல். படுக்கையில் எண்ணெய்க்கறை படியாமல் இருக்க செய்தித்தாள் போட்டுக்குவேன். ஹௌஸ் கீப்பிங் மேனேஜரும், அவருடைய உதவியாளர்களுமா வந்து அறையைச் சுத்தம் செஞ்சுட்டுப்போறதும் உண்டு. மணி ரெண்டு ஆச்சா ? இனி நம்ம வேலைகளைப் பார்க்கலாம்.
பகல் லஞ்சுக்குத்தான் வெளியே போக முடியறதில்லை. பழங்களும், காய்களுமா இயற்கை உணவு !!! சில நாட்கள். ரூம் சர்வீஸில் கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து சௌத் இண்டியன் தாலி மீல்ஸ் வாங்கிக்கறதும் உண்டு. நம்ம தேவை அனுசரிச்சு விஜியைக் கூப்பிட்டுக்கறோம்.
இந்த முறை பயணத்தில் எனக்கு சிங்கையில் தங்கல் இல்லை. வழக்கமாச் சில மளிகை சாமான்களை (!) சிங்கை முஸ்தாஃபாவில் வாங்கிப்போவேன். அதனால்.... இங்கே சென்னையில் வாங்கிக்கலாமுன்னு நம்மவர் வலையில் தேடிக் 'கொத்தவால் சாவடியில் கிடைக்கிறது. போய் வாங்கிக்கலாம்'னு சொன்னார்..... நான் முதலில் கொஞ்சம் நடுங்கிப்போயிட்டேன். அகலமே இல்லாத சின்னத்தெருக்களில் அலைஞ்சு திரிஞ்சு காளிகாம்பாள் கோவில் போன அனுபவம் எல்லாம் நமக்கு இருக்குல்லே ?
https://thulasidhalam.blogspot.com/2011/01/blog-post_19.html
கூகுள் மேப் வழிகாட்ட, கொத்தவால் சாவடிக்குப் போறோம். நம்ம விஜி , இளங்கன்று என்பதால் பயமில்லாமல் ஓட்டிக்கிட்டுப்போறார். எதிரில் சாமான்கள் ஏற்றி இறக்கும் ட்ரக் வகை வண்டிகள் வரும்போது சர்க்கஸ்தான் ! இந்தக் கோயம்பேடு மார்கெட் வருமுன் கொத்தவால் சாவடிதான் மெட்ராஸின் முக்கிய சந்தை. வெளியூர்களில் இருந்து சரக்கு கொண்டுவரும் லாரிகளின் நடமாட்டம் எக்கச்சக்கம். மற்ற சிறு வியாபாரிகள் எல்லாம் இங்கே வந்துதான் பொருட்களை வாங்கிப்போய் விற்பனை செய்வார்கள்.
இப்பவும் அந்த ஏரியாவில் மொத்தவிற்பனை வியாபாரம் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு போல ! காய்கறிக் கடைகள் அங்கங்கே...... நாம் தேடிப்போன கடையின் பெயர் ஸாஃப்ரான் ஹோம்..... கிரானா பவன், ஆதியப்ப நாய்க்கன் தெரு, சௌகார்பேட்டை.
தேடிவந்தது கிடைச்சது. குங்குமப்பூ ! கூடவே கொஞ்சம் நட்ஸ் வகைகள். நல்ல பெரிய சைஸ் பிஸ்தாவும் கிடைச்சது. முக்கால் மணி நேரத்துக்குள் இந்தப்பகுதியில் நுழைஞ்சு, போன வேலையை முடிச்சுக்கிட்டு வெளியே வந்துருக்கோம் ! பெரிய சாதனைதான் இது ! விஜியைப் பாராட்டினேன் !
சென்ட்ரலாண்டைப் பொதுமருத்துவமனை அலங்கார முகப்போடு இருக்கு ! இதே அளவு முன்னேற்றம் உள்ளேயும் இருக்குமுன்னு நினைக்கிறேன்.
நாம் நியூஸிக்குத் திரும்பும் நாள் நெருங்கிக்கிட்டு இருக்கு. இன்னும் ஒரே ஒருவாரம் தான் இங்கே என்பதால்..... வாங்கிப்போகும் பொருட்களுக்கானக் கடைகளுக்குப் போகத்தான் வேணும். ஷாப்பிங் ஓரளவுக்கு முடிஞ்சால்தான் லக்கேஜ் எடை பார்த்து ஆவன செய்யவேணும். எல்லாம் ஒன்னோட ஒன்னு தொடர்பில் இருக்கும் வேலைகள்தான். இதுலே பகல் ரெண்டு வரை சிகிச்சை என்பதால் தினமும் கிடைக்கும் அரை நாளில் சோம்பல் படாமல் இருக்கவேணும்..... ப்ச்.....
சலோ மயிலை.... விஜயா ஸ்டோர்ஸ். நமக்கு ஆகி வந்த இடம். கொஞ்சம் சாமி சமாச்சாரங்கள் (அலங்காரம் ! ) வாங்கினதும், நம்ம காப்பிக்கடையில் டீ குடிச்சுட்டு, லோட்டஸ் திரும்பினோம். கொஞ்சநேர ஓய்வுக்குப்பின் டின்னருக்கு எங்கே போகலாமுன்னு சின்னதா யோசனை செஞ்சு கீதம் போனோம்.

இந்த வாரம் தோசை வாரமாம் ! நமக்கு தோசையே போதும். விஜி, சப்பாத்தின்னார் !
கீதம் வாசலில் நம்ம சென்னை !

லோட்டஸ் திரும்பியபோது மணி ஒன்பது.
இனி தினமும் அநேகமா இப்படித்தான் இருக்கப்போகுது......
தொடரும்........... :-)

1 comments:
தேடித்தேடி எப்போதும் வாங்கும் கடைகளிலேயே உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொள்கிறீர்கள். அப்புறம் நிறைய புதுக் கடைகள் சிறப்பான கடைகள் வந்திருக்கலாம் என்றாலும் நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை போலும்!
கீதம் எனக்குப் பிடித்த ரெஸ்ட்டாரெண்ட்!
Post a Comment