இன்றைக்குப் புதுவையிலிருந்து கிளம்பறோம். நண்பர் 'போகும் வழியில் வந்துட்டு போங்க..... ஃபிஸியோ தெரபிஸ்ட்டை வரச் சொல்றேன்'னார். ஐயோ..... வேணாம்னு தோணுச்சு. தோழியும், வந்துட்டுப்போங்கன்னு கூப்பிட்டாங்க. அடுத்தமுறைனு சொன்னேன்.

இதோ ரெடியாகி, பொட்டிகளை மூட்டை கட்டிட்டு, ப்ரேக்ஃபாஸ்டுக்கு ரெஸ்ட்டாரண்ட் போனோம். வழக்கம்போல் பஃபேதான். காலையில் விஸ்தாரமா சாப்பிட என்னால் முடியாது. என்னோட இட்லி & வடை போதும். கூடவே கொஞ்சம் சுண்டல் & உருளை.
அக்கார்ட் அதிகாரிகளில் ஒருவர் வந்து கொஞ்சநேரம் குசலவிசாரிப்பு. இன்றைக்கு நாம் செக்கவுட் என்ற விவரம் அவுங்களுக்குத் தெரிஞ்சுருக்காதா என்ன ? ரெஸ்ட்டாரண்ட் மேனேஜர் 'வசீகரன்' வந்து பேசிட்டு, நான் சரியாவே சாப்பிடறதில்லைன்னார் ! அடராமா..... பயணம் பத்திரமாக இருக்கட்டுமுன்னு சொல்லி, ஒரு பெரிய கண்டெய்னரில் குக்கீஸ் கொண்டுவந்து கொடுத்தார். ஒரு முக்காக் கிலோ தேறும்.
பத்துமணிக்குக் கிளம்பிட்டோம். பாலராமர் இருக்கும் ஷோல்டர்பேகை, கவனமா எடுத்துக்கிட்டோம். ராமர் இருக்கார்னதும் பையைத் தொட்டுக் கும்பிட்டாங்க சில பணியாளர்கள். சமீபத்தில் ட்ராஃபிக் போலிஸ் யூனிஃபார்ம் மாத்தியிருக்காங்க போல ! மாநில எல்லையைக் கடக்க அரைமணி ஆகி இருக்கு !
மாமல்லபுரம் நோக்கி, வண்டி பாயுது. நல்ல தரமான சாலைதான். ஆனாலும் விரிவாக்க வேலைகள் அங்கங்கே...... மரக்காணம் வருது போல..... உப்பு கண்ணில் பட்டது.
ஊருக்கு ஓரு கிமீ தூரம் இருக்கும்போதே சிற்பக்கலைத்தூண் நம்மை வரவேற்கிறது.... நேரம் பனிரெண்டடிக்க எழு நிமிட்..... கோவில் மூடிடப்போறாங்களேன்னு கொஞ்சம் பதைச்சது மனம்.....
அடுத்த அஞ்சாவது நிமிட்லே கோவில் வளாகத்துக்குள் போய் வண்டியை நிறுத்தினார் விஜி. வழக்கம்போல் க்ளிக்க நிக்காமல் உள்ளே ஓடினேன் நொண்டிக்காலோடு ! நல்லவேளை நடை சாத்தலை..... உச்சிகாலபூஜைக்கான கோவில்மணி ஓங்கி ஒலிக்குது ! கயிற்றை நல்லா இழுத்து அடிக்கிறார் கோவில் ஊழியர்.
https://www.facebook.com/share/v/1C8AwCiU2m/
வெறும் தரையில் கிடக்கிறான், நம்ம பெரும் ஆள் !
ஒரு சமயம்.... இங்கே தாமரைப்பூக்கள் ஏராளமாப் பூத்து நிற்கும் பொய்கை இருந்தது. இங்கே ஆசிரமக்குடில் ஒன்னு கட்டி தவம் செஞ்சுக்கிட்டு இருந்தார் புண்டரீக மகரிஷி. புண்டரீகம் என்ற சொல்லுக்கே தாமரை என்றுதான் பொருள்! தாமரைக் குளத்தாண்டை குடில் இருந்ததால் கூட இவருக்குப் புண்டரீக மகரிஷி என்ற பெயர் வந்துருக்கலாம்!
தாமரையின் அழகைப் பார்த்தவர், இவையெல்லாம் எம்பெருமாளுக்கேன்னு நினைச்சு பூக்களைப் பறிச்சு ஒரு கூடையில் எடுத்துக்கிட்டுப் பாற்கடலில் பள்ளிகொண்டவனைத் தேடிப்போறார். குறுக்கே வந்தது வெறுங்கடல். இதைத் தாண்டினால்தான் பாற்கடல் வரும் போல! எப்படித் தாண்டிப்போறது? யோசிச்சார். ஐடியா கிடைச்சிருச்சு.
பேசாம, இந்தக் கடல் தண்ணீரைக் கோரி அப்பாலிக்கா ஊத்திட்டா கடலின் அடியில் தரை தெரியும். அதன் வழியே நடந்தால் பாற்கடல் போய்ச் சேர்ந்துடலாமே! ஆஹான்னு ஒரு ஓரமா உக்கார்ந்து தன் கைகளால் கடல் தண்ணீரை அள்ளி இந்தாண்டை ஊத்த ஆரம்பிச்சார்.
பக்தி மனசுக்கு, இது நடக்கற வேலையான்னு கூட சந்தேகம் துளிகூட வரலை. நாட்கள், மாதங்கள், வருசங்கள்ன்னு கடந்து போய்க்கிட்டே இருக்கு. வேற ஒரு கவனமும் இல்லை.... இவருக்கு. ஒருநாள் கை வலி பொறுக்கமுடியாமல் போய் ஒரு நிமிசம் தண்ணி அள்ளப்போன கைகள் அப்படியே நின்னுச்சு.
அப்ப அங்கே ஒரு கிழவர் வந்தார். 'கடலாண்டை உக்காந்துக்கிட்டு என்ன செய்யறீர்'னு ரிஷியைக் கேட்க, 'கடல்தண்ணியை இறைச்சு ஊத்திட்டு, கடல்தரையில் நடந்துபோய் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாளை ஸேவிச்சு இந்தத் தாமரைப் பூக்களை அவருக்குச் சமர்ப்பிக்கணும். அதான்.......'
"அதுவரைக்கும் இந்த பூக்கள் வாடாம இருக்குமா என்ன?"
"அதெல்லாம் பெருமாள் பார்த்துக்குவார். பறிக்கும்போதே இது பெருமாளுக்குன்னு சொல்லிட்டேன். இனி அவர் பொறுப்பு."
"ஓ.... அதுவும் சரிதான். ஆமாம்....தனியா உக்கார்ந்து சிரமப்படுகின்றீரே ஐயா. நான் வேணுமுன்னா கூடச்சேர்ந்து தண்ணியை இறைக்கவா?"
"இது என்ன கேள்வி? கமான் ஹெல்ப் மீ."
"ஆனால் எனக்கு இப்போ பசி அதிகமா இருக்கே. மயக்கம் வர்றது ..... எனக்கு எதாவது சாப்பாடு கொடுத்தால் அதை உள்ளே தள்ளிட்டு உமக்கு உதவுவேன்..."
"முதல்லே இந்த வேலை முடியட்டும்... உமக்கு சோறு போடறேன்."
"அப்படிச் சட்னு முடியுமா? கொலைப் பசி வேற. இந்த பாவம் உமக்கு வந்துடப் போகுது...."
"அப்டீங்கறீர்? சரி. இந்த பூக்கூடையைப் பத்திரமாப் பார்த்துக்கும். நான் போய் உமக்கு எதாவது கொண்டு வரேன்...."
கிளம்பி ஊருக்குள் போய் கொஞ்சம் சாப்பாடு வாங்கி வர்றார். வந்து பார்த்தால்.... பூக்கூடையையும் கிழவரையும் காணோம். அப்புறம்? கடலில் தண்ணியைக்கூடக் காணோம். ஹா.... தரை பளிச்ன்னு கிடக்கு.
அதுலே இறங்கி விடுவிடுன்னு நடந்து போறார். தூரக்கே பாற்கடல் வெள்ளையாத் தெரிஞ்சது. அதில்....
அதில்?
கிழவர் ஒய்யாரமாப் படுத்திருக்க, அவரை அலங்கரிக்கும் கூடைத் தாமரைப் பூக்கள்!
"பெருமாளே.... நீரா? நீரா?"
இதே போல அனைவருக்கும் எப்போதும் சிம்பிளாக ஸேவை சாதிக்கணும் என்று கேட்டுக்கிட்டார். அதே போல் ஆச்சு.
பாம்புப் படுக்கை இல்லாமல் வெறும் தரையில் கிழக்கு நோக்கிக் கிடந்த கோலம்! உச்சிகால பூஜையும் முடிஞ்சது. கோவிலை வலம் வரணும். ரொம்பப்பெரிய கோவில்னு சொல்ல முடியாதுகொஞ்சம் மீடியம் சைஸ்தான்.
மேலே படம்: வலையில் இருந்து ! நன்றி
தல சயனப்பெருமாள் என்றுதான் பெயர்! ஆழ்வாரே அப்படித்தான் சொல்லியிருக்கார். எப்போ இப்படி ஸ்தல சயனப்பெருமாள் ஆனாருன்னே தெரியலை! உற்சவருக்கு இங்கே உலகுய்யநின்றான் என்று நாமம். கையில் ஒரு தாமரைப்பூவுடன் நிக்கறார். இந்த நூற்றியெட்டு திவ்யதேசங்களில் கையில் தாமரையுடன் நிற்பவர் இவர் மட்டும்தானாம்! ரொம்ப விசேஷமாச் சொல்றாங்க. தாயார் நிலமங்கை என்ற பெயருடன்! பூதேவி!
நூற்றியெட்டு திவ்யதேசக்கோவில்களில் இதுவும் ஒன்னு ! யார் வந்து மங்களாசாஸனம் செஞ்சுருப்பாங்கன்னு நினைக்கிறீங்க ?
எங்கே போனாலும் பத்துப்பாட்டுக்குக் குறைவில்லாமல் பாடிப்போவது யாரோ அவரேதான் ! நம்ம திருமங்கை ! (இவர் அபூர்வமாக ஒரு பெருமாள் மீது ஒரே ஒரு பாசுரம் பாடியதும் உண்டு. அதுவும்...... பின்னாடியே ஓடிவந்த பெருமாளே கேட்டுக்கிட்ட பின்னேதான் ! எங்கே ? ஹாஹா.... இதே சந்நிதியில்தான்....)
விவரம் இங்கே ! நேரம் இருந்தால் பாருங்கள்.
https://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_11.html
ஆதியில் ஒன்பதாம் நூற்றாண்டில் கடற்கரையிலேயே பல்லவர்கள் கட்டிய கோவில் இருந்ததாகவும், அதன்பின் இப்போ இருக்கும் கோவில் பதினாலாம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் பராங்குசன் என்பவரால் கட்டப்பட்டு, பிள்ளை லோகாச்சாரியார் முன்னிலையில் பெருமாளை இங்கே ப்ரதிஷ்டை செஞ்சதாயும் கோவில் வரலாறு சொல்கிறது.
நம்ம பூதத்தாழ்வார் அவதாரம் இங்கேதான். தனிச்சந்நிதியில் இருக்கார். நம்ம ஆண்டாள் சந்நிதி.... வழக்கம்போல். மார்கழி ஸ்பெஷல்.....
வெளியே மண்டபம் கடக்கும்போது..... கையில் மணிமாலைகளுடன் ஒரு பெண் விற்பனையாளர். ஒரு அஞ்சு மாலைகளில் என் பெயர் இருந்துருக்கு ! (இங்கே நியூஸிக்கு மட்டும் இவுங்க வந்தாங்கன்னா.... கொஞ்சநாளிலேயே கோடீஸ்வரி ஆகிறலாம் ! )
எப்படியும் பகல்சாப்பாட்டுக்கு நேரம் ஆச்சேன்னு நம்ம இன்டீக்கோ ரெஸ்ட்டாரண்டைத்தேடிப் போனால்..... அதை எப்பவோ மூடிட்டாங்களாம். அடராமா......
பேசாம சென்னைக்கே போயிடலாமே.... அதிக தூரமோன்னு பார்த்தால் வெறும் அம்பத்தியிரண்டு கிமீதானாம் ! இடைவேளை நேரம்னு வசீகரன் கொடுத்த குக்கீஸ் கொஞ்சம் உள்ளே தள்ளித் தண்ணீரும் குடிச்சதும்..... புத்துயிர் வந்துருச்சு. வழக்கம் போல் ரதங்கள் பார்ப்பதெல்லாம் இந்தமுறை கிடையாது. கால்வலி...... ப்ச்..... காரிலேயே ச்சும்மா ஒரு சுத்துச் சுத்திட்டுக் கிளம்பினால் போதாதா ?
தொடரும்........ :-)

0 comments:
Post a Comment