கட்டாயமா நான் மிஸ் பண்ணப்போறது இந்த லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்டைத்தான்.... ப்ச்...
பத்துமணிக்குச் சிகிச்சைக்குப்போனோம். வழக்கமா எனக்கு ஒதுக்கிய அறையில் இருக்கும் காஸ் அடுப்புக்கு என்னமோ ஆகி இருக்கு. அதனால் வேறு அறைக்குக் கூட்டிப்போனாங்க. இது வளாகத்துக்குள்ளேயே இருக்கும் இன்னொரு கட்டடம். கொஞ்சம் புதுசா இருக்கு. சமீபத்துலே விரிவாக்கம் நடந்துருக்கு போல! நான் நினைச்சது சரின்றாப்போல சிகிச்சிக்கும் மரக்கட்டில் புத்தம் புதுசு ! அங்கங்கே இருக்கும் படங்களும் ஓவியங்களும் கூட அருமை ! இங்கேயும் மாடிகளில் உள்நோயாளிகள் தங்கி இருக்காங்களாம்.
சிகிச்சை என்னவோ வழக்கம்போலவே ! முடிஞ்சதும் நம்மைக்கூட்டிப்போக வந்த ஆட்டோவில் முக்கியவிவரம் பார்த்தேன் ! நல்லதே!
மதியம், கூரியர் அனுப்பலாம் என்ற திட்டத்தின்படி, நமக்கு உதவி செய்ய, நம்ம கார்த்திக் வந்தார். எனக்கு ஒரு அருமையான அன்பளிப்பும் கூட ! அவருடைய தங்க்ஸின் ஐடியாவாம் ! நம்ம ஃப்ரைபேன் அடிக்ஷன் எப்படித் தெரிஞ்சதுன்னு தெரியலை. அனுப்பவேண்டியவைகளை ஒரு ஸூட்கேஸில் எடுத்துக்கிட்டுப்போனோம்.
வளசரவாக்கம், தீபாராம் பார்ஸல் சர்வீஸ். போனமுறை மகளுக்குப் பார்ஸல் அனுப்பிய இடம்தான். எல்லாப் பொருட்களையும் குறிச்சுப் பட்டியல் போட்டு, அருமையாக ரெண்டு அட்டை பெட்டிகளில் பேக் செஞ்சு கொடுத்தார் ராஹுல். அவருக்கு நன்றி சொல்லிட்டுக் கிளம்பி லோட்டஸுக்கு வந்தோம். நம்ம காப்பிக்கடையில் டீயும் ஆச்சு.
இன்றைக்குக் கொஞ்சம் நேரம் இருப்பதால்.... நம்ம தங்கை வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு கிளம்பினோம். மயிலையில் முந்தி இருந்த வீட்டை விட்டுட்டுப் பொழிச்சலூரில் புது வீடு வாங்கிப் போயிருங்காங்க. அந்த வீட்டுக்கு இப்போதான் முதல்முறையாகப் போறோம். கூகுளார் வழிகாட்ட, போய்ச் சேரவே ஒன்னேகால் மணி நேரம் ஆச்சு.
விருப்ப ஓய்வுக்குப்பின் தங்கையின் கணவர், பிரபந்தம் ஸேவிக்கும் கோஷ்டியில் இருக்கார். ஒரு குழுவாக வெவ்வேறு ஊர்களுக்குப் போய் வருகின்றார்கள். இன்றுமே இரவுப் பயணம் கிளம்புகிறார். நம்ம மகர் கார்த்திக்கையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியாச்சு.
ரெண்டு நாட்களுக்கு முன்பு திருப்பதி போயிட்டு வந்துருக்காங்க. பெருமாள் அவங்களோடு கிளம்பி வந்து எனக்காகக் காத்திருந்தார் ! சண்டை ஒத்து துல்ஸி. சமாதானங்கா போதாமான்னு கேக்கறார் போல !
அங்கிருந்து அப்படியே மகர் வீட்டுக்கும் ஒரு விஸிட். மருமகள் அருமையான டிஃபன் தயாரிச்சு வச்சுருந்தாங்க. . என்னுடைய மசால்வடையும் இருந்தது. பேரன் கீதாப்ரியனோடு சில க்ளிக்ஸ்.
திரும்பி தி நகர் வர்றோம். மழை பெய்ய ஆரம்பிச்சது. ரொம்ப காலமாப் (பல வருஷங்கள்) போகணும்னு நினைச்சுப் போகாமலே இருந்த கோவில் எப்பவும்போலக் கண்ணுலே பட்டதும், போகலாம்னு அங்கே போயிட்டோம்.

.webp)
அழகான முன்மண்டபம். அதிலேயே பலிபீடமும் கொடிமரமும் அடுத்து சிம்மமும். நேராக உள்ள கருவறைக்கு மூணு வாசல்கள். அதில் வலப்பக்க வாசல் வழியாகப் போறோம். மூலவர் சந்நிதியும் உற்சவர் சந்நிதியும் அடுத்தடுத்து இருக்கு.
ஸர் தியாகராயா ரோடும் மௌண்ட்ரோடும் சேரும் இடத்தில் இருக்கும் ஆலையம்மன் கோவில்தான் இது ! இன்றைக்குத்தான் அம்மன் கூப்பிட்டு இருக்காள் ! எதிர்பார்க்கவே இல்லை.... இப்படி அழகான கோவிலாக இருக்குமுன்னு !
அருமையான தரிசனம் ! பூசாரி ஐயா.... கோவில் வந்த விவரங்களைச் சொன்னார். ஆற்றின் அலையில் மிதந்துவந்த அம்மன் ! தலப்புராணம் அங்கே கரும்பளிங்கில் இருந்ததை க்ளிக்கினேன். அலையில் மிதந்து வந்த அம்மனைத்தான் , காலப்போக்கில் சனம் ஆலையம்மன்னு சொல்லிக்கிட்டு இருக்கு.
இந்தக்கோவிலின் பின்பக்கம் புத்து மண்டபம் இருக்குன்னும்.... அங்கே நாகர்கள் சந்நிதி, மற்ற சந்நிதிகள் இருக்குன்னும் சொன்னார்தான், அம்மனுக்கு செய்யும் பால் அபிஷேகத்துப்பால் முழுசும் நேரடியா அங்கே புத்துக்குப்போய்ச் சேர்ந்துருதுன்னார்.
முருகன், கணபதி, லக்ஷ்மி, நவக்ரக சந்நிதிகள் எல்லாம் இங்கே இருக்குன்னாலும்.... ஒரே மழையா இருந்ததால், பின்பக்கம் போய்ப் பார்க்கலை. படங்களும் எடுக்கலை. அடுத்த பயணத்தில் ஒரு பகல் நேரத்தில் வந்து கோவிலின் மற்ற சந்நிதிகளைத் தரிசிக்க வேணும்தான்.
மழை இன்னும் நிக்கலை. அறைக்குப்போய், கால் வலிக்கான மருந்தை முழுங்கிட்டு, டின்னருக்கு கீதம் போனோம்.
தேடி வந்த பெருமாளைக் குழந்தைக்குக் காண்பிச்சேன் !புதுசா ப்ரேக்ஃபாஸ்ட் காம்போ வருதாம். தேங்காய்ப்பால் கஞ்சின்னு பார்த்துட்டு, ஆசை வந்தது..... ஆனால் ஞாயிறு ஆரம்பமாம். நம்ம பெயர் அங்கே எழுதலை. ப்ச்..... போயிட்டுப்போகுது....போங்க.....
எனக்கு இடியாப்பம் கிடைச்சது. நம்மவர் வெஜ் பிரியாணி, விஜி பாவ்பாஜின்னு.......
கூடியவரை சந்திப்புகளை முடிச்சாச்சுன்னு நினைக்கிறேன்.
தொடரும்......... :-)

0 comments:
Post a Comment