Monday, September 28, 2009

கிடைக்கணும் என்பது ..... கிடைக்காமப் போகாது!

தோழி வீட்டுக்குக் கொலுவுக்குப் போயிருந்தோம்.(கொலு விவரம் அப்புறம் சொல்றேன். முதல் விஷயம் முதலில்:-) ரங்கமணிகள் பேசிக்கிட்டே உள் ஹாலில் இருந்தாங்க. திடீர்னு 'ராகசுதா ஹால்' எங்கே இருக்குன்னு இவர் கேட்டார். இங்கேதான் ரொம்பப் பக்கமுன்னு தோழியின் ரங்க்ஸ் சொன்னார். அங்கே நடன நிகழ்ச்சி இருக்கு அதுவும் கதக் எனக்கு ரொம்பப் பிடிக்குமுன்னு சொன்னார். 'இன் ஹி லோகோனே.....' ஆஹா....

தினசரியில் இருந்த தொலைபேசி எண்ணைக் கூப்பிட்டு உங்க நிகழ்ச்சி நடக்கும் ஹால் எங்கேன்னும் கேட்டுக்கிட்டார் நம்ம முன் ஜாக்கிரதை முத்தண்ணா. 'வாங்க வாங்க. கட்டாயம் வாங்கன்னு வரவேற்பு. இதென்ன ஆறேகாலுக்கே இப்படி இருட்டிப்போச்சு...... அங்கங்கே முக்குலே இருக்கும் கோவில்களில் எரியும் கற்பூரார்த்திகளைவச்சு வழி கண்டுபிடிச்சுப் போய்ச் சேர்ந்தோம்.(வழக்கம்போல தப்பான சில டர்னிங் எல்லாம் எடுத்துட்டுத்தான்) அசப்புலே பார்க்க ஒரு வீடு போல இருக்கு. சின்னதான வாசலைத் திறந்து உள்ளெ போனால் ஆடம்பரம் இல்லாத சின்ன ஹால். ஒரு முப்பதுபேர்போல இருந்தாங்க. ஆறரைக்கு நிகழ்ச்சி. 'டான்'னு ஆரம்பமாச்சு.
திவ்யா மலையப்பனின் பரதநாட்டியம். 'என்ன சோதனையோ....' வர்ணத்துக்கு அபிநயம். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. சொல்லித் தந்ததைப் பிழையில்லாம ஆடும் பாவம். திரைக்குப் பக்கவாட்டில் நின்னு நடனத்தைப் பார்த்து ஏதோ ரிப்போர்ட் குறிப்பு எழுதும் ரெண்டு (நடன)ஆசிரியைகள்.

நாங்கள் ரெண்டாவது வரிசையில் இருந்தோம். எனக்கு முன்னால் 'எங்கியோ பார்த்த முகம்'. பிரதீபா பாட்டீல் ஸ்டைலில் ஜாக்கெட்.(ஐயோ...இந்தச் சூட்டில்....) அவுங்களுக்குப் பக்கத்தில் வைரம் டாலடிக்கும் பெரிய கம்மலுடன் ஒரு முதிய பெண்மணி. கொஞ்சம் சின்னக் கம்மலுடன் இன்னொருத்தர். (முகத்தைப் பார்த்தவுடன் ஒளிவெள்ளம் வெட்டி இழுக்கும் தோடுகள் பார்வைக்குத் தப்பலை.இல்லேன்னா கவனிச்சே இருக்கமாட்டேன்.ஹிஹி)


ஜெய துர்கா என்ற பாட்டுக்குக் குச்சுப்புடி நடனம் ஆடுச்சு பாருங்க ஒரு பொண்ணு........ஹைய்யோ..........அஷ்ரிதா கேஷவின் அட்டகாச நடனம்! என்னை மட்டும் மார்க் போடச் சொன்னால் நூத்துக்கு நூறு என்ன....இருநூறு போட்டுருப்பேன்! பாட்டும் அருமை. இங்கே எல்லாப் பாட்டுகளும் ஏற்கெனவே சிடியில் பதிவு செய்யப்பட்டவைகள்தான். பொழுதன்னிக்கும் லைவ் ம்யூஸிக்குக்கு எங்கே போறது?

நம்ம கோபிகா வர்மாவின் மோகினியாட்டம் பள்ளிக்கூடத்தில் இருந்து விபினா & ரெம்யான்னு ரெண்டு 'குட்டிகள்' வந்நு மூணு டான்ஸ் ஆடுனாங்க. அபிநயம், தில்லானான்னு தூள் கிளப்பிட்டாங்க. எல்லாம் மகாராஜா ஸ்வாதித் திருநாளின் பாட்டுகள்.

தமிழ்நாடு, ஆந்திரா கேரளான்னு ஆச்சு....கருநாடகத்துக்குத்தான் ஒன்னுமில்லைன்னதும் கோபால், அதெப்படி அதெப்படி''ன்னு துடிச்சுப் போயிட்டார்.
பூஜா & ப்ரார்த்தனான்னு மெடிக்கல் காலேஜ் மாணவிகள். தாதீம்தா..தித்தீம்தா...... ஜல்ஜல்ஜல்ன்னு கதக். ஸ்ரீ ராம்சரிதத்தில் இருந்து அகல்யா கதை! ஒரு பஜன் அப்புறம் தனியா ரெண்டு மைக் தரையில் செட் செஞ்சதும் தாளக்கட்டு ஜதி சொல்லி ஒரு நடனம். உரக்க ஆரம்பிச்சு.........கடைசியில் ஒரு சலங்கை ஒலி மட்டும் மெள்ள வர்றதுபோல.... இதுக்கும் 'சலங்கை ஒலி'ன்னு தலைப்பு எடுத்துக் கொடுத்தார் கோபால். ஆஹா......இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிடுவாங்களே.....
(பேசாம நீங்களே ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சுருங்கன்னு 'ஊக்கு'விச்சேன்:-)
சிறப்பு விருந்தினர் (பெரிய கம்மல்) சின்னத் தள்ளாட்டத்துடன் மேடைக்குப் போனாங்க. கூடவே சின்னக் கம்மலும், எங்கியோ பார்த்த முகமும். 'ந்ருத்திய கான லயா ட்ரஸ்ட்' நடத்தும் நிகழ்ச்சி. ட்ரஸ்டின் நிர்வாகி தேவி கிருஷ்ணா மேடைக்கு வந்து இவுங்களை வரவேற்றுப் பேசினாங்க. இந்த ட்ரஸ்ட்டு தொடங்கி இது நாலாம் ஆண்டு. தன்னுடைய தந்தை நினைவாகத் தொடங்கி இருக்காங்க.
இதுக்கெல்லாம் ஊக்கம் கொடுத்தது , ஒரு காலத்துலே திரை உலகில் இருந்த தன்னுடைய தாய் ராஜசுலோசனான்னு சொல்லி 'பாட்டீல் ப்ளவுஸை'ப் பார்த்தவுடந்தான் 'ஆஹா.... இப்ப ஞாபகம் வருதேன்னு .......

சின்னக் கம்மல் அம்மாதான் கலைமாமணி ராஜலக்ஷ்மி. நடனக்கலைஞர். தேவி கிருஷ்ணாவின் நடன ஆசிரியர். நடுவில் அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடைகள் போத்தினார்கள். மூத்த கலைஞர். அந்தக் காலத் திரை உலகத்தாரகை. பி.எஸ். சரோஜா அவர்கள். எண்ணி நாலே வரி பேசுனாங்க. இன்னும் கொஞ்சம் பேசுங்கம்மான்னதும் 'எல்லாம் போறும்'ன்னாங்க. (அவுங்க நடிச்ச படங்கள் என்னெவெல்லாம் நான் பார்த்துருக்கேன்னு நினைச்சு மண்டையை குழப்பிக்கிட்டதுதான் மிச்சம். ஒரு படத்துலே உலக உருண்டையில் எம்ஜிஆரோடு பாடுன நினைவு. உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம்தானிரண்டு........ பழைய சினிமாக்களைத் துரத்தித்துரத்திப் போய்ப் பார்த்தக் காலம் போச்சே.... வெஸ்ட் மாம்பலம் நேஷனல் தியேட்டர் இன்னும் இருக்கா?)

கலைமாமணி ராஜலக்ஷ்மி அவர்கள், இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்குக் கூட்டமே வர்றதில்லைன்னு வருத்தப்பட்டார். ராஜசுலோசனா அவர்கள் இந்த வயதிலும் நல்லாப் பளிச்ன்னு இருக்காங்க. மகள் செய்யும் கலைச்சேவையைப் பாராட்டி வெறும் பரதநாட்டியம் மட்டுமுன்னு வச்சு ரசிகர்களைப் போரடிக்காம விதவிதமான வகைகளுடன் நாட்டியங்களைத் தேர்ந்தெடுத்து வழங்குனதைப் பாராட்டுனாங்க. அந்தக் காலத்தில் அவுங்க எப்படி வெவ்வேறு நாட்டியங்களைக் கத்துக்கிட்டாங்கன்னும் சொன்னாங்க.. பேத்தியின் தூண்டுதலினால்தான் மகளும் இந்தச் சேவையில் ஈடுபட்டுருக்காங்களாம். கலைக்குடும்பம். நல்லா இருக்கணும்.

(நாட்டியம் ஆடத் தெரிஞ்சுருக்கறது நடிக்க வருபவர்களுக்கானக் கட்டாயக் குவாலிஃபிகேஷனாத்தானே இருந்துச்சு. இப்போ? யார் இதுக்காக மெனெக்கெடுறா? பரதநாட்டிய உடைகளைப் போட்டுக்கிட்டுச் சாணி மிதிச்சால் ஆச்சு)
நாமெல்லாம் வளரும் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தரணும்னு சொல்லி நடன மணிகளுக்கு, நாம் வசிக்கும் பூவுலகைப் பசுமையாக மாற்றும்
விதமா துள்சியைக் கொடுத்தாங்க.தேவி. (எல்லாம் சிம்பாலிக்கான ஒரு அடையாளம்தான். போகட்டும் மேடைவரை போயிருக்கேன்:-)
நிகழ்ச்சி முடிஞ்சதும் கொஞ்ச நேரம் தேவி கிருஷ்ணாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கிட்டுப் பேசினோம். நீங்கதான் ஃபோன்லே வழி எல்லாம் கேட்டீங்களான்னு சொல்லி மகிழ்ந்து போயிட்டாங்க. சிலசமயம் இப்படிக் கத்துக்குட்டிகள் நடனத்தின் போது ஒரு இருபதுபேர்கூட வரமாட்டாங்களாம். அடப்பாவமே...... ஆடும் பிள்ளைகளுக்குக் காலி ஆடிட்டோரியம் பார்த்தா மனசு எப்படி இருக்கும்? நாங்க இன்னும் கொஞ்சநாள் இருப்போம். நிகழ்ச்சி வச்சா சொல்லுங்கன்னேன். நம்மாள் இன்னும் ஒரு படி மேலே போய் , 'ஏதாவது உதவி வேணுமுன்னாச் சொல்லுங்க'ன்னார்.

நாமோ புதுசு. என்ன உதவி செய்யமுடியுமுன்னு திரும்பிவரும் வழியில் கேட்டால்........ வந்த பதில் 'ரெண்டு இருக்கையை நிரப்புவொம்லெ' !!!


தலைப்பை நியாயப்படுத்த: நிகழ்ச்சி நடக்குதுன்னோ, அங்கே போகப் போறோமுன்னோ, ஒரு பதினைந்து நிமிசத்துக்கு முன்வரை தெரியாது. திடீர்னு பார்வையில் பட்டது. ஜஸ்டிஃபைடா? :-))))

30 comments:

Anonymous said...

//தலைப்பை நியாயப்படுத்த: நிகழ்ச்சி நடக்குதுன்னோ, அங்கே போகப் போறோமுன்னோ, ஒரு பதினைந்து நிமிசத்துக்கு முன்வரை தெரியாது. திடீர்னு பார்வையில் பட்டது. ஜஸ்டிஃபைடா? :-)))) //

சில சமயம் இப்படி போகும்பொது கிடைக்கும் அனுபவம் ரொம்ப நல்லா இருக்கும்.

ராஜசுலோசனா அந்தக்காலத்து கவர்ச்சிக்கன்னி தானே

said...

//ஜஸ்டிஃபைடா? :-)))) //

ஜஸ்டிஃபைட்:)!

//'ரெண்டு இருக்கையை நிரப்புவொம்லெ' !!!//

இதுதான் அவர்களை ஊக்கப் படுத்தும் உண்மையான உதவி! சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

said...

வளரும் கலைஞர்களை ஊக்கப்படுத்துவது ரொம்பவும் அருமை, அதிலும் இரண்டு சீட் நிரப்புவது நல்லா சொல்லியிருக்கார். டீச்சர் நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க, அவர் இரண்டு சீட் சொன்னது உங்களுக்குதான், அவரும் சேர்த்துனா மூனு சீட் இல்ல சொல்லியிருப்பார். இதில் அண்ணாவின் உள்குத்து உள்ளது என சந்தெகம் உள்ளது.அடுத்த தடவை நீங்க இது மாதிரி கூப்பிட்டா அண்ணா எஸ் ஆக வாய்ப்பு உள்ளது. எனது பிளாக்கில் திருப்பதி பற்றி ஒரு சம்பவம் எழுதியுள்ளேன் அவசியம் படிக்கவும். நன்றி.

தொடர்ந்து மழை பொழிவதற்காக சென்னையில் இருக்கும் உங்களுக்கு நன்றி.

said...

கடைசியாக தலைப்பு விடை சொல்லிட்டிங்க ;))

\\பேத்தியின் தூண்டுதலினால்தான் மகளும் இந்தச் சேவையில் ஈடுபட்டுருக்காங்களாம்.\\

அவர்கள் பேத்தியும் ஒரு நடனக்கலைஞர். ;)

தனிப்பட்ட முறையில் இந்த குடும்பத்தை பத்தியும் திரு. கிருஷ்ணா சார் அவர்கள் பற்றியும் நிறைய சொல்லாம்.நிறைய பேருக்கு நிறைய செய்திருக்காங்க. அதை பெற்ற வார்களில் நானும் ஒருவன்.

\\கலைக்குடும்பம். நல்லா இருக்கணும்.\\

உங்கள் ஆசிர்வாதத்தை அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்.

நன்றி டீச்சர் ;)

said...

சரி சரி விடுங்க.. டான்ஸ் நல்லாயிருந்துச்சா..? ஓகே என்ஜாய்..!

said...

நல்லா உதவி செய்யறீங்க.. :)

said...

டீச்சர்!கர்நாடக சங்கீதம்,நடனம் பற்றியும் அதுக்கு 200 மார்க்கே போடுவேன்னு சொன்னதும் எனக்கு சுப்புடு நினைவுக்கு வந்துட்டார்:)

said...

டீச்சர்!முடியல!உங்க வீடு முழுவதும் வேக வேகமா சுத்தி வந்துட்டேன்.ஆனா உன்னைப் போல் ஒருவன் வசனம் பற்றியோ உங்கள் தம்பி பற்றியோ ஒரு வார்த்தை....ம்ஹும்!

said...

தலைப்பைப் பார்த்தவுடன்...போயஸ் கார்டனில்...தலைவர் ரஜினி வீட்டுக் கொலுக்கு போயிட்டீங்களோ-ன்னு ஒரு கணம் புல்லரிச்சிப் போயிட்டேன் டீச்சர்! :))

said...

thank you for the lovely write-up about our NGL program.

said...

வாங்க சின்ன அம்மிணி.

//ராஜசுலோசனா அந்தக்காலத்து கவர்ச்சிக்கன்னி தானே//

அதிலென்ன சந்தேகம்? குழிவிழும் கன்னத்துடன் அழகான சிரிப்புடனும் நாயகியாவும் வில்லியாவும்கூட நடிச்சுருக்காங்க.

இப்பவும் பல பழைய படங்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கிட்டு இருக்கேன். ப்ளாக் & ஒயிட்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அடுத்தமுறை தகவல் வந்தவுடன்,
பதிவர் சந்திப்பு அங்கேயே வச்சுக்கலாம்:-)

said...

வாங்க பித்தன்.

அதெல்லாம் ஊக்கப்படுத்தாம விட்டுருவொமா?

அண்ணந்தான் ஊ(தூ)க்க ஸ்பெஷலிஸ்ட்:-)

சென்னைக்கு வந்து சூட்டோட சூடா இளைச்சுப் போயிட்டேனாம்!!!!!!

said...

வாங்க கோபி.

உண்மையைச் சொன்னால் இப்படி ரெண்டாம்பேருக்குத் தெரியாம செய்யும் உதவிதான் அவுங்க பரந்த மனசைக் காட்டுது.

பேத்தி (வித்யாதானே பேரு?) அச்சுஅசலா எங்களுக்குப் ஃபிஜியில் இருக்கும் தோழியின் மகளை ஞாபகப்படுத்திட்டாங்க. நல்ல பொண்ணு.

பதிவின் விவரம் அவுங்களுக்கு அனுப்புனதுக்கு நன்றிப்பா. தேவியின் பின்னூட்டம் வந்துருக்கு!!!!!

said...

வாங்க கயலு.

நம்மால் ஆன 'உதவி'யை எப்பவாவது செய்யாமல் விட்டுருக்கோமா?:-))))

said...

வாங்க ராஜ நடராஜன்.

சுப்புடு அவர்கள் இப்போ இல்லை என்ற தைரியம்தான் நானெல்லாம் 'விமரிசனம்' பண்ண வந்தது:-)

இன்னும் உ.போ.ஒ. பார்க்கலை. அதான் ஒன்னும் இதுவரை எழுதவும் இல்லை;-)

said...

வாங்க கே ஆர் எஸ்.

கனவு காணச் சொல்லி நம்ம கலாம் அவர்கள் சொன்னதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்களா? :-)))))

said...

Dear Devi,

You have done a good job. The program was excellant.


God Bless You.

Thanks for visiting Thulasidhalam.

said...

சுந்தர் முதன் முதலில் உங்களை அறிமுகபடுத்திய போது டீச்சர் என்று தான் சொன்னார். எனக்குப் புரியவில்லை. ஆனால் ஏற்கனவே நீங்களே வந்து பின்னூட்டமெல்லாம் இட்ட போது நான் முழுமையாக உங்களைப் பற்றி உணர வில்லை. மின் அஞ்சல் வாயிலாக உங்கள் பின்னூட்டம் வந்து சேரும் போது நான் உணர்ந்து கொள்வது என்னுடைய மூத்த சகோதரி தலைமை ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டுருப்பவரை. காரணம். தம்பி என்ற முறையில் பத்து நிமிடம் தான் பேச முடியும். மற்றவை எல்லாமே டீச்சர் முறையில் தான் அவர்களின் கண்டிப்பு இருக்கும். அவர்களில் பாதிஅளவுக்கு நானும் கடைச்சரக்கை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்திக்கொண்டுருப்பதால் அவர் என்னிடம் மட்டும் (மொத்த உறுப்பினர்களில்) தொலைபேசி வாயிலாக விரும்பி அழைத்து உரையாடுவார். பேச்சு கூட அத்தனை ஒழுக்கமாய் இருந்தால் அடுத்த தொடர்பு வரும். இல்லாவிட்டால் துண்டிக்கப்பட்டு விடும். ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது. நேர்த்தி, தரம், அர்பணிப்பு, எடுத்துக்கொள்ளும் விசயங்கள். அடேங்கப்பா? நானும் இது போல் ஆசைப்பட்டு படம் போட்டு பாடம் காட்ட நினைத்த போது தொழில் ஒரு பக்கம் இருப்பதால் நுட்ப அறிவு இல்லாத என்னைப் போன்ற ஜீவன்கள் உங்கள் படங்களைப் பார்த்து பொறாமையாக பெருமையாக இருக்கிறது. வணக்கம் டீச்சர். வளர்க பல்லாண்டு. மூன்று தேவியர்கள் சார்பாக திருப்பூரில் இருந்து அனுப்பும் பூங்கொத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.


ஜோதி கணேசன்.

தேவியர் இல்லம். திருப்பூர்.

said...

வாங்க ஜோதி கணேசன்.

பூங்கொத்துக்கு நன்றி. அதிலும் தேவியர் மூவர் இந்த நவராத்ரி சமயத்தில் வந்து அளித்தது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

ஏதோ டீச்சர் மேல் இருக்கும் அபிமானத்தால் புகழ்ந்துதள்ளிட்டீங்க. இன்னும் நிறையச் செய்யவேண்டியது பாக்கி இருக்கு.

படிக்கப் போரடிக்காமல் இருந்தால் சரின்னுதான் நினைக்கிறேன்.

மீண்டும் நன்றி.

said...

ஜஸ்டிஃபைடா?/

ஆமா.. ஆமா

said...

ஏன்பா, பி.எஸ் சரோஜாவா பெரிய கம்மல் போட்டு இருந்தாங்க?
குமுதம் படத்தில எம்.ஆர்.ராதா ஜோடி.
வண்ணக்கிளி படத்தில மனோஹர் ஜோடி...அடிக்கிற கைதான் அணைக்கும்....:) சின்னப் பாப்பா எங்க ச்செல்லப்ப்பாப்பா..
ம்ம்ம் அப்படியே இருக்காங்க.

நல்ல '' எஞ்சாய் ''செய்து எழுதி இருக்கீங்க.


உண்மையாவே இப்படி நிகழ்ச்சிகளுக்குப் போலாம்னு தம்பி கோபால் சொல்றதைக் கேட்டுக்குங்கப்பா.:))))))

said...

Thank you for the wonderful words of encouragement. Looking forward to your presence and support for Ashrita's Kuchipudi programmes. If you are interested she is performing for Karthik Fine Arts on the 21st of October at 7pm in the Narada Gana Sabha Mini Hall and on Jan 13th for Thyaga Brahma Gana Sabha, Vani Mahal, in the Bharatham Series.
Uma Keshav (mother)

said...

வாங்க நசரேயன்.

டீச்சர் பெரிய 'நியாயவாதி':-)))))))

said...

வாங்க வல்லி.

ஏம்ப்பா....அப்படியேவா இருக்காங்க?

நமக்குமட்டும்தான் வயசாகுதோ?

அச்சச்சோ:-)))))))))))))))))

said...

வாங்க உமா கேஷவ்.

எங்களுக்கே இவ்வளவு பெருமையா இருக்குன்னா.... உங்களுக்குச் சொல்லவேண்டியதே இல்லை. அஷ்ரிதாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஒரு கலையை மனப்பூர்வமா ஆராதிச்சு, சிரத்தையோடுச் செய்யும்போது அழகு எப்படி ஜொலிக்குதுன்னு பாருங்க.

உங்க அழைப்புக்கு நன்றி. ச்சும்மாவே வருவேன், இப்பச் சொல்லிட்டீங்களே.... வராமல் இருப்பேனா?

hope you can read the above Tamil words.

Thanks Uma. We would love to attend the show.

God Bless your daughter. She is a great artist.

said...

அருமையான பகிர்வு.

அடுத்த நிகழ்ச்சி எப்போன்னு தெரிஞ்சா முன்னாடியே அறிவிப்பு போடுங்க டீச்சர். விருப்பமுள்ளவர்கள் வருவார்கள்.கோபால் சார் சொன்னது மாதிரி கூட கொஞ்சம் சீட்டுகளும் நிறையும்....

said...

//வெட்டி இழுக்கும் தோடுகள் பார்வைக்குத் தப்பலை//

கிடைக்கணும் என்பது கிடைக்காமப் போகாது... சார் வாங்கி கொடுத்துட்டாரா இல்லையா?:)))

said...

வாங்க துபாய் ராஜா.

எல்லாம் உள்ளூர் தினசரியிலே 'விலாவரி'யா இருக்கேப்பா.

பார்க்கணும். போகணும். அம்புட்டுத்தான்.

said...

வாங்க குசும்பன்.

ஒரு பத்து வருசத்துக்கு முன்னால் வாங்கிக் கொடுத்தார். ச்சும்மா ஒரு கேரட்(?)

இப்போ வேற ஒன்னுக்கு அடி(??) போட்டுக்கிட்டு இருக்கேன்.

'கேளுங்கள் கொடுக்கப்படும்' னு கூட ஒன்னு இருக்கு, தெரியுமா? :-)