Thursday, February 01, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 1)

அது இருக்கட்டும். இந்த ' பாமரன்' சொல்லுக்குப் பெண்பால் என்னவா இருக்கும்? நீங்க சொல்லுங்களேன்.......'பாமரள்'ன்னு வச்சுக்கலாமா?


ஏழுவயசா இருக்கறப்போ, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சின்னு மொத்தம் அறுவது பாட்டை மனப்பாடம் பண்ணி, அதுக்குண்டான ராகத்தோடு(?) பாடி காஞ்சி மடத்தின் தங்கக் காசைக் குன்றக்குடி அடிகளார் கையாலே முதல் பரிசா வாங்கினதும் பாட்டிக்குப் புல்லரிச்சுப் போச்சு. சங்கீத தேவதையே பேத்தியா வந்துட்டாளாம். ஏன்னா, அவுங்களே பாட்டு டீச்சர். 'ஹிமகிரிதனையே, தீராத விளையாட்டுப்பிள்ளை, அருள் புரிவாய் கருணைக்கடலே'ன்னு இன்னும் சில பாட்டுகளை பாடுவேன். இதையெல்லாம் வச்சே சமாளிச்சுருவேன்,கொலுவுக்குச் சுண்டல் வாங்கப் போகும்போது. இந்த அழகுலே டான்ஸ் வேற! 'தூண்டிற் புழுவினைப்போல்' பாட்டுக்குஅபிநயம் என்னமா இருக்கும்? 'பாலத்து ஜோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்'ன்னு இருக்கறது என்கிட்டே அகப்பட்டுக்கிட்டு, 'பாலத்து ஜோசியனும் கிரகம் படுத்து மென்று விட்டான்'ன்னு தலையைச் சாய்ச்சுத் தூங்கும் பாவனையில் வாய் மெல்லும். பாவம் பாரதி(-:


அந்த ஊரோடு அதுவும் போச்சு.

அதுக்கப்புறம் பாட்டுன்னா சினிமாப் பாட்டுத்தான். ரேடியோவிலே ' தரநன்னா........'ன்னு ஆரம்பிச்சதும், விவிதபாரதிக்குத் திருப்பணும். பாவம்..பாட்டி. ஒரு கச்சேரி கேக்கவிட மாட்டேன்.


ஒரே ஒருக்காப் பார்த்த சினிமான்னாலும் பாட்டுங்க மட்டும் அப்படியே 'பச்சக்'குன்னு மனசுலே ஒட்டிக்கும்.பாடல் வரிகளுக்கு இருக்கவே இருக்கு, பத்து பைசா பாட்டுப் புத்தகம். ட்யூன்லெ வர்ற சந்தேகம் எல்லாம் சிலோன் ரேடியோ தீர்த்து வச்சுரும். ஊஊஊஊய்ங்........ஹொய்ங்...........ன்னு கத்திக்கிட்டே இருக்கும் ரேடியோவின் 'மேஜிக் ஐ' யையே உத்துப் பார்த்துக்கிட்டு சரியா ட்யூனிங் செய்யறதுக்குள்ளெ சிலசமயம் பாட்டே முடிஞ்சுரும். அப்படியும் விடாமக் கேட்டு உருப் போட்டுருவேன்.



பாட்டும் ரொம்ப நல்லாப் பாடறதா (!!!) வீட்டுலே எல்லோருக்கும் எண்ணம். அதிலேயும் சோகப்பாட்டுன்னா கேக்கவே வேணாம். விக்கல், தேம்பலுடன் ஒண்ணுவிடாமப் பாடிருவேன்:-)

" என் சிந்தை நோயும் தீருமா..........
தீயன் சூழ்ச்சி மாறுமா......
ஸ்நேகம் ஒன்று சேருமா......." தொடரும் தேம்பல்...........


சிந்தை நோய்ன்னா என்னன்னு அப்ப யாராவது கேட்டுருக்கணும்:-)


நல்ல சங்கீதத்தோட அருமை புரியும் வயசுலே, வாழ்க்கையே தடம்மாறிப் போச்சு. அதுக்கப்புறம் வாரப் பத்திரிக்கைகளிலே வர்ற இசைவிழாச் செய்திகள், சுப்புடுவின் காரசாரமான விமரிசனங்கள் எல்லாம் படிச்சு,'அடடா.... நல்ல சங்கீதம் படிக்கவும், கேக்கவும் ' இருந்த வாய்ப்பையெல்லாம் இப்படித் தண்டம் பண்ணிட்டோமேன்னுஒரு குற்ற உணர்ச்சி. பாட்டுக் கத்துக்கப் பாட்டி கூப்புட்டப்பெல்லாம் பாவி, எப்படி ஓடி ஒ(ழி)ளியறதுன்னு இருந்தேனே(-:



ஊருக்குப் போகும்போது ஒண்ணு ரெண்டுன்னு கொஞ்சம் கொஞ்சமா ஆடியோ டேப்களை வாங்கிவந்து 'பாட்டு' கேட்டுக்கிட்டு இருக்கும் பழக்கம் வந்துச்சு. என்ன ராகம், என்ன தாளமுன்னு கண்டு பிடிக்கும் அளவுக்கெல்லாம் இசை ஞானம் இல்லைன்னாலும்,நல்ல பாட்டை ரசிக்கத் தெரிஞ்சுக்கிட்டேன். ராகங்களைப் பத்தித் தெரிஞ்சக்கலாமேன்னு தோழியிடம் சொன்னதுக்கு,அவுங்க, 'Ragas of South India' ன்னு தலையணையாட்டம் 'ம்யூஸிக் அகடெமி ( அகெடமியோ?)யிலே இருந்து ஒரு புத்தகம் வாங்கிவந்து கொடுத்தாங்க.( நல்லாவேணும் எனக்கு. தலையும் புரியலை, கா(வா)லும் புரியலை)



எனக்கு மனசுக்குள்ளே சில நம்பிக்கைகள் எப்பவும் இருக்கு. (அது தவறானதுன்னு எங்க இவர் சொல்லிக்கிட்டு இருக்கார்,அவருக்கென்ன?) உதாரணமா ரெண்டு........ட்ரெட்மில் கண்பார்வையிலே இருந்தாலெ உடம்பு இளைச்சுரும். தலையணை சைஸுலே இருக்கறதைத் தலைக்கு வச்சுப் படுத்துக்கிட்டா 'சரக்கு' தானே மண்டையிலே ஏறிக்கும்.


இதையெல்லாம் படிச்சுட்டு நான் இசை ஞானமே இல்லாத மூடள்( பெண்பால் ?)னு நினைச்சுக்காதீங்க. இந்த இசைஅறிவைக் கொஞ்சம் பட்டை தீட்டிக்க ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன். நியாயமான ஆசைகளா இருந்ததாலே நிறைவேறும் நாளும் வந்தது.


இங்கே இருந்து கிளம்பறதுக்கு முன்னேயே, வலையில் மேய்ஞ்சு, கிடைச்ச இசைவிழா நிகழ்ச்சி விவரங்களைப் பிரிண்ட் எடுத்துக்கிட்டுப் போனேன். அதுலெ பாருங்க, சில முக்கிய சபா விவரங்கள், அதுவும் மாலைநேரக் கச்சேரிகளை மட்டுமே கொடுத்திருந்தாங்க. எல்லாமே 'பெரிய பெரிய ஆட்கள்'.


ச்சென்னைக்குப் போய்ச் சேர்ந்தும்கூட எங்கே இருந்து ஆரம்பிக்கணுமுன்னு தெரியாத ஒரு த(ம)யக்கம். நான் தங்கி இருக்கற இடமோ, இசைவிழா நடக்கும் இடங்களிலே இருந்து தொலைதூரம். ராத்திரி வீட்டுக்குத் திரும்பறதுக்கு வாகனம் கிடைக்காமப் போயிட்டா? சரி. இன்னும் 12 நாளுலே இவர் வந்துருவார். அதுக்குள்ளெ கடைகண்ணி வேலைகளைமுடிச்சுக்கலாம். வாங்க வேண்டியவை(???)களை வாங்கிக்க இதைவிட்டா நல்ல ச்சான்ஸ் கிடைக்காது. கொஞ்சம் பூந்து வெள்ளாடிறலாம். கூடவே சிட்டிக்குள்ளே ஒரு இடமும் தேடிக்கணும்னு புறப்பட்டதுலே பல தோல்விகளுக்கப்புறம் தி.நகர் வாணி மகால் ( ஒரு ஆறேழு நிமிஷ நடை) பக்கம் தங்குமிடம் கிடைச்சது.


'சென்னையில் திருவையாறு'ன்னு விழா தொடங்கி ரெண்டு நாளா நடந்துக்கிட்டு இருக்கே,அது என்னன்னு பர்க்கணும்.காமராஜர் அரங்கம். காலை பதினொரு மணி இருக்கும். மத்தியானம் 1 மணிக்கு எதோ ராமாயணம் இசை நடனமாம்.அதுக்குப் போகலாமுன்னு இவர் சொன்னார். அரைகுறை மனசோட போனேன். அரங்கின் வெளியே டிக்கெட் விற்பனை.200 ரூபாய் டிக்கெட் ரெண்டு. அட! அழகான வயலின் வடிவில் நுழைவுச்சீட்டு! உள்ளே போறப்ப டிக்கெட்டைக் கிழிக்கறேன்னு இதைக் கிழிச்சிடுவாங்களோ? "அதெல்லாம் இல்லை. காமிச்சிட்டு நீங்க வச்சுக்கலாம்" ஆறுதல். வேற என்னென்ன நிகழ்ச்சிகளாம்?


தினமும் காலையில் 10 மணிக்கு ஆரம்பிச்சு, ராத்திரி 10 வரை நாளுக்கு அஞ்சு நிகழ்ச்சி வீதம் அஞ்சு நாளைக்கு நடக்குதாம். நிகழ்ச்சி நிரலைக் கொடுத்தாங்க. அடடா....... ஏற்கெனவே ரெண்டு முழுநாள் வீணாப் போயிருச்சே(-:


சரி, இதுக்கெல்லாம் சீஸன் டிக்கெட்டுபோல எதாவது இருக்கா? ஒரு நாலைஞ்சு நிகழ்ச்சிகளைத் தவிர மற்றதெல்லாம் அனுமதி இலவசமாமே! அட்றா சக்கை:-)


"இப்போ 'மல்லாடி ப்ரதர்ஸ்' பாடிக்கிட்டு இருக்காங்க. உள்ளே போறதுன்னா போங்க."


"இசைவிழாக்களில் இன்னொரு முக்கிய அம்சம் அங்கே நடக்குற கேண்டீனாமே! இங்கேயும் இருக்குங்களா? "


"இதோ.....இந்தப் பக்கம் போங்க.நல்லா டேஸ்ட்டியா இருக்கும்"


சூடா ஒரு காஃபியைக் குடிச்சு நம்ம இசைவிழா ரவுண்ட்ஸை ஆரம்பிச்சோம். அடுத்து மல்லாடி பிரதர்ஸ்.அருமையாப் பாடிக்கிட்டு இருக்காங்க. அரங்கம் முக்காவாசி நிறைஞ்சிருந்துச்சு. மூணு பாட்டுதான் கேக்கமுடிஞ்சது. 12.15க்கு நிகழ்ச்சி முடிஞ்சு, ஸ்பான்சாரிலே ஒருத்தர் பரிசும் வழங்குனார். இன்னும் முக்கால் மணி நேரத்துலேராமாயணம். மதுரை முரளீதரன் குழுவினர்.


திரை விலகல். ஏனோதானோன்னு உக்காந்திருந்த நான் உலுக்கிவிட்டாப் போல உணர்ந்தேன். 12 நடனமணிகள்.எல்லாரும் ஒரே மாதிரி 'க்ரீம் & மரூன்' கலரில் பரதநாட்டிய உடைகளில். அநேகமா ஒரே உயரம் போல இருக்கே!எல்லாருக்கும் வயசுக்கூட கிட்டத்தட்ட ஒண்ணுதானோ? கடவுள் வாழ்த்து, வரவேற்பு, ராமன் பெருமைன்னு எல்லாம் சேர்ந்த ஆரம்ப நடனம். இந்த ஒரு நடனத்துக்கே பன்னெண்டு பன்னெண்டாய் மூணு செட் பசங்க வந்து ஆடிருச்சுங்க.அடுத்த ஸீனுக்குன்னு திரை போடாமலேயே நொடியில் காட்சி மாற்றம். ராம லக்ஷ்மண பரத சத்ருகன்கள் பிறப்பு. அடுத்து விசுவாமித்திரர் வந்து ராம லக்ஷ்மணர்களை வேள்வி காக்க அழைத்துப் போறார்.


எதோ மாயாஜாலம் போல ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடைவெளியே இல்லாமல் நொடியிலேயே மாற்றம். அரச சபையின் வெளியிலே வாயிற்காப்போன் ஈட்டியுடன் நிக்கறதென்ன, உள்ளே அரசனுக்குச் சாமரம் வீசும் பாங்கியர் என்னன்னு எல்லாமே நம்ம கண்முன்னே கொண்டு வரும் அபிநயம். ஈட்டியும், வாளும்,சாமரமும், இன்ன பிற அம்சங்களும் கண்ணுக்குத் தெரியலையே தவிர அது எல்லாம் அங்கே இருக்கறதை அப்படியே உணர முடியுது. இத்தனைக்கும் முக்கிய சில கதாப் பாத்திரங்களைத் தவிர மத்த எல்லாருமே பரத நாட்டிய உடையில்தான்!


அகலிகை உயித்தெழுந்தது, தாடகை யாகத்தை அழிக்கப் பார்த்து, ராமன் கையால் மடிவது, மிதிலைக்குப் பயணம்,சிவ தனுசை நாணேற்ற வந்த மன்னர்கள், இதுலே ராவணனும் உண்டு, ராமன் நாண் பூட்டி வில்லை ஒடித்தது,சீதா கல்யாணம்னு காட்சிகள் போய்க்கிட்டே இருக்கு. கண்ணைக்கூட இமைக்காம அதிசயிச்சு மூச்சு அடைக்க உக்கார்ந்துருக்கேன்.


சீதையைக் கொண்டு போகும் ராவணனிடம் சண்டை போட்ட ஜடாயு, மரணவேதனையில் தவிச்சுக்கிட்டே குற்றுயிரும்,குறைவுயிருமா தவிச்சு, ராமனிடம் சேதி சொல்லியபின், துடிதுடிச்சுச் செத்தது............... ஆஹா......... ஜடாயுவா வந்தபெண் அட்டகாசம். நமக்கே குலை நடுங்குச்சு.


அசோகவனத்தில் சீதை. அரக்கிகள் உல்லாசமாக சோழிகளைக் குலுக்கிப்போட்டுத் தாயம், ஏழாங்கல்ன்னு ஆடிக்கிட்டேக் காவல் காக்கறது, சீதையின் கண்ணீர், தவிப்பு.


பிராட்டியைத் தேடி வந்த அனுமான். வாயு புத்திரன். என்ன ஒரு தாவல். என்ன ஒரு மிடுக்கு, என்ன ஒரு குறும்பு. அதே சமயம் அன்னையைக் கண்டதும் காமிச்ச விநயம், கணையாழியைக் கொடுத்துச் சூடாமணியை வாங்கிப்போகும் பணிவு.அப்பப்பா........ சொல்ல வார்த்தையே இல்லை.



இலங்கைக்கு பாலம் கட்டுனாங்க பாருங்க......... அரங்குலே யாரும் மூச்சு விட்டுருப்பாங்களான்னு சந்தேகம்தான்.


ராம ராவண யுத்தம் முடிஞ்சு அயோத்தி திரும்ப வந்து பட்டாபிஷேகம் வரை அப்படியே சிலைமாதிரி உக்கார்ந்துருந்தோம்.


கடைசியில் மொத்த குழுவினரையும் மேடையில் ஒவ்வொருவரா அறிமுகப்படுத்தினாங்க. தாடகையாவும், சூர்ப்பநகையாவும், காவல் காத்த அரக்கியர்கூட்டத் தலைவியாவும் வந்தது ஒரே பெண்தான். அமர்க்களம் போங்க. மொத்தம் 45 நடனமணிகள். ஏழெட்டு வயசுலே கூட சிலர் இருந்தாங்க.


தயாரிப்புக்கு என்னமா மெனெக்கெட்டுருக்காங்கன்றதைப் பார்த்தால்தான் புரியும்!


நிகழ்ச்சி முடிஞ்சவுடந்தான் திரும்பிப் பாக்கறேன், அரங்கம் பூராவும் நிறைஞ்சு வழியுது. எத்தனை ஸீட் இருக்குமோன்னு அதிசயப்பட்டப்ப, அங்கிருந்த ஒருத்தர் சொன்னார், ' இதுதாங்க ச்சென்னையிலேயே பெரிய அரங்கம். 2000 பேர் உக்காரலாம்'.


வெளியே வரும்போது அப்படி ஒரு திருப்தி மனசுலே. ராமாயணமான்னு சலிச்சுக்கிட்டு, நல்ல நிகழ்ச்சியைக் கோட்டைவிடப் பார்த்தேனே(-:


கோபாலுக்குத்தான் நன்றியைச் சொல்லணும்.

சொன்னேன்:-)


தொடரும்.

33 comments:

said...

//வெளியே வரும்போது அப்படி ஒரு திருப்தி மனசுலே. ராமாயணமான்னு சலிச்சுக்கிட்டு, நல்ல நிகழ்ச்சியைக் கோட்டைவிடப் பார்த்தேனே(-://

ரசிச்சீங்களே.... கொடுத்து வெச்சிருக்கீங்க...., இப்ப கொஞ்சம் கொஞ்சமா திரும்பி வருது போல ;-)

நல்லா விவரிச்சிருக்கீங்க.

Anonymous said...

சில பேர் வாயைவிட்டு பாடும் போது நன்றாக இருக்கும்.நம் மனதுக்கு பிடித்தவர் க்கும்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று வாய்குள் பாடினாலும்....? பிடிச்சாகனும்.
வேறு வழியில்லை.:-))
அந்த டிக்கட்டை கிழிக்காமல் கொடுத்தது... எவ்வளவு நல்லதா போச்சு?நாங்க முழுசா பாக்கமுடிந்தது.

Anonymous said...

பாமரள்...ம்ம்ம்..சரிதான். நல்லாத்தான் இருக்கு. நானும் பாமரந்தான்.

கேண்டீன் போய் ஒரு காப்பி மட்டுந்தானா?

ஒங்கள மாதிரியே தற்செயலா நான் ஒரு நடன நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. மயிலைக் கோயிலில். யாரு தெரியுமா? அனிதா ரத்னம். அந்தரின்னு ஒரு நிகழ்ச்சி. ரொம்பப் புதுமையா நல்லா இருந்தது. பொதுவா எல்லா நாட்டிய நாடகங்கள்ளயும் சிவன் நெளிஞ்சிக்கிட்டே வருவாரு. இதுலதான் சிவன் நல்லா வெறப்பா வந்து ஆடுனாரு.

said...

வாங்க நன்மனம்.

நன்றி. இன்னும் நல்லா விவரிச்சிருக்கலாமோன்னு இப்ப மனசு தவிக்குது.
அந்த அனுபவம் மனசுக்குள்ளெ தளும்புதே தவிர
வார்த்தைகளிலே வெளிப்படுத்தத் தெரியலை(-:

said...

வாங்க வடுவூராரே.

//பிடித்தவர் க்கும்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று வாய்குள் பாடினாலும்....? பிடிச்சாகனும்.
வேறு வழியில்லை.:-))//

அதானே, அப்புறம் யார் 'பாட்டுக் கேக்கறது'? :-))))

said...

வாங்க ராகவன்.

//பாமரள்...ம்ம்ம்..சரிதான். நல்லாத்தான் இருக்கு.//

'சொல்லின் செல்வரே' சொல்லிட்டீர். வேற அப்பீல் ஏது? :-))))

அனிதா ரத்னமா? அருமையா இருந்துருக்குமே!
நான் தவறவிட்டதுலே இவுங்களோட நிகழ்ச்சியும் ஒண்ணு(-:

Anonymous said...

"பா" விலேயே தலைப்பு வச்ச சொல்லறதா இல்ல, சிலவிஷயங்கள் பெண்பால் பெயர்கள் இல்லாமல் பொதுவா சொல்லப்படுறத வேடிக்கையா சேர்த்துருக்கறத சொல்லறதா ,இல்லன்னா வார்த்தையாலேயே ஒரு நாட்டிய நாடகமாடியதை ("ராமாயண நாட்டிய நாடகம் நடந்தது எப்படி " எனும் தலைப்பில்) சொல்லறதா
போங்க எனக்கொண்ணும் புரியல.

Anonymous said...

இசைவிழாக்களில் இன்னொரு முக்கிய அம்சம் அங்கே நடக்குற கேண்டீனாமே! இங்கேயும் இருக்குங்களா? "//

பின்னே அது இல்லாமயா? கச்சேரிய விட கமகமன்னு காப்பியோட அரட்டைக் கச்சேரியும் இலவசமா கெடைக்குமே..

Anonymous said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. பாக்கலையேன்னு ஒரு குறை இருந்தாலும், கூட இருந்து பாத்தமாதிரியே தோணுது.

said...

வாங்க லட்சுமி.

இப்பெல்லாம் 'கம்பன்வீட்டுக் கட்டுத்தறி'யா மாறிட்டார் கோபால்.
தலைப்பு உபயம் அவர்தான்:-)
பாமரளின் பார்வையில் இசைவிழான்னுதான் முதலில் எழுதுனேன்.
பா சீரியலுக்கு மாத்துனது அவர்தான்.

பேசாம அவரையே ஒரு ப்ளொக் ஆரம்பிக்கச் சொல்லணும்:-))))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

கேண்டீன்லே பல சுவையான நிகழ்ச்சிகள் நடந்துச்சுன்றதை ஒப்புக்கொள்றேன்.
அதையில்லாம் இனி வரும் பதிவுகளில் எழுதிரவேண்டியதுதான்:-)

said...

வாங்க நாகு. நலமா?

பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்க.இனி உங்க பாடு ஆபத்துதான்:-)))
இது தொடரா வருது. எத்தனை பாகம்ன்றது எனக்கேத் தெரியாது:-))))
எப்படியோ படிக்க இன்னொரு வாசகரா இருக்கீங்க. அதுவே மகிழ்ச்சிதான்.
நல்வரவு.

said...

எப்படியோ சென்னை ரசிக கும்பலில்
உண்மையான இசைவிரும்பி கிடைத்தது எனக்கு லாபம்.
நீங்க சிலோன் ரேடியோவில 'இன்பம் வந்து சேருமா' பாட்டு கேட்டதில்லையா?:-)
நான் நடனமாடினால் எங்க வீட்டில் 'மலைப்பாம்பு நடனம் ' என்று சொல்வார்கள்.
உடம்பு வளையாததால்.
இத்தனை ரசனையுடன் விமரிசனம் படித்து நிறைய நாட்கள் ஆச்சுப்பா.

Anonymous said...

சென்னை செலவை நல்ல வரவாக மாற்றிக் கொண்டீர்கள் போலிர்க்கிறது. அப்படியே இதையும் கேளுங்கள்

Anonymous said...

துளசியம்மா,

/* அது இருக்கட்டும். இந்த ' பாமரன்' சொல்லுக்குப் பெண்பால் என்னவா இருக்கும்? நீங்க சொல்லுங்களேன்.......'பாமரள்'ன்னு வச்சுக்கலாமா?*/

இதென்னடா இது மதுரைக்கு வந்த சோதனை:)) நான் உங்கள் பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு இதே கேள்வியை உங்களிட்ட கேட்க வேணும் என வந்தால், நீங்களும் இதே கேள்வியைக் கேக்கிறீங்கள் :)))
சரி இப் பிரச்சனையைச் 'சொல் ஒரு சொல்'லில் ஆராயுமாறு இராகவன், குமரன் ஆகியோரக் கேக்க வேணும்.:)))

/* என்ன ராகம், என்ன தாளமுன்னு கண்டு பிடிக்கும் அளவுக்கெல்லாம் இசை ஞானம் இல்லைன்னாலும்,நல்ல பாட்டை ரசிக்கத் தெரிஞ்சுக்கிட்டேன். */

இங்கேயும் இதே நிலமைதான் !!!
சங்கீதத்தைப் பொறுத்தளவில் நானும் உங்க கட்சிதான்[பாமரன் தான்]

நல்ல பதிவு துளசியம்மா. நல்லாய் இரசித்து எழுதியுள்ளீர்கள். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து...

பி.கு:- இராமர் சீதையின் இறுதிச் சடங்குகளை ஈழத்தில் என் ஊரில் தான் செய்தார் என்று ஒரு செவிவழிக் கதை உண்டு. இன்றும் அவ்விடத்தை திருவடிநிலை என்று அழைப்பார்கள். இராமரின் திருவடிகள் பட்டதால் அப்படிப் பெயர் வந்ததாம். அங்கே இன்றும் சுடலை உண்டு. இன்றும் பலர் தகனம் செய்து அருகில் உள்ள கடலில் நீராடிச் செல்வது வழக்கம்.

said...

வாங்க வல்லி.
மலைப்பாம்பு நடனம்:-))))))
கற்பனை செஞ்சு பார்த்தேன்.ஹா ஹா ஹா ஹா

said...

வாங்க ஓகை.

பாரதி அவர் பாட்டுக்கு ஜக்கம்மாவைக் கூப்புட்டு சொல்லிட்டார்.
//தொப்பை சுருங்குது // எங்கே (-: ஹூம்.........

said...

வாங்க வெற்றி.
'சொல்லின் செல்வர்' நமக்கு 'பாஸ்' மார்க் போட்டுட்டார்:-)

'திருவடி நிலை' பற்றிய செய்தி எனக்குப் புதுசு. ஆமா, சீதை இந்தியாவில்
'மறைந்த' பிறகா ராமர் இலங்கை வந்து இறுதிக்கடன் செய்தார்? ராவணனின்
அழிவுக்குப்பின் ராமர் இலங்கை ம்றுபடியும் வந்தாரா? ஆச்சரியமா இருக்கே!

செவிவழிக் கதைகள் சிலசமயம் உண்மையாவும் இருக்க வாய்ப்பு உண்டு.

Anonymous said...

துளசி மேடம். டிசம்பர் மாசம் இண்டியா போனா இதெல்லாம் பாக்கலாம். ஹும். நம்மதான் செலவு கம்மின்னு ஆகஸ்ட், செப்டெம்பர்னு போறதாச்சே.

Anonymous said...

பின்னூட்டம் போட ப்ளாக் சொதப்புது.
உங்க பதிவு எல்லாம் படிச்சுடுதான் இருக்கேன்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

நாங்களும் இத்தனை வருஷத்துலே 'டிசம்பர்' மாசம் போனது
இதுதான் ரெண்டாம் முறை. முதல் முறை 1989 லே. மகள் வேற
ஆறே வயசு. கோயில் பிரார்த்தனைகள் பாக்கி இருக்குன்னு அப்ப
அதுக்கு அலைஞ்சுக்கிட்டு இருந்தோம்.

//பின்னூட்டம் போட ப்ளாக் சொதப்புது//

என்ன.......... பின்னூட்டம் இட முடியலையா?

யாரங்கே......? இந்த ப்ளொக்கருக்குக் கொஞ்சம் 'பெண்டு' நிமிர்த்துங்கள்.:-)

Anonymous said...

துளசியக்கா,
நம்ம நடிகர் திலகம் நடிச்ச பாடாவதி படம் 'பாட்டும் பரதமும்' படத்தை பத்தி எழுதியிருகீங்க போல ..அக்காவுக்க வேற படமே கிடைக்கல்லியான்னு நினைச்சுட்டு வந்தேன் .நல்ல வேளை வேற மேட்டர் .நேரில பார்த்த மாதிரி உணர வச்சுட்டீங்க! நன்றி!

Anonymous said...

துளசியக்கா ,
உங்க முந்தைய பதிவுகள்ள பல பின்னூட்டங்கள் இட முயற்சித்து என்னோட பிளாகர் பிரச்சனையால் இட முடியவில்லை.இப்போது சரியாகி விட்டது.

Anonymous said...

திடீர்னு வந்து வாழ்த்தி என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய உங்களுக்கு என்னோட நன்றிகள். உங்க பதிவுகளை எல்லாம் படிச்சுட்டுத் தான் இருக்கேன். உள்ளேன் அம்மா, போடறதில்லை.

Anonymous said...

சென்னைக்கு வந்திருந்தீங்களா? ஒரு மெயிலோ குயிலோ அனுப்பிச்சுட்டு நம்ம வீட்டுப் பக்கம் வந்திருக்கலாம், பராவாயில்லை.

said...

சென்னைக்கு விடுமுறைக்கு போய் நல்ல அனுபவங்களை மழையாப் பொழியிறீங்க.
//சென்னையிலேயே பெரிய அரங்கம். 2000 பேர் உக்காரலாம்'.//

அம்மாடியோ! இத்தனை பெரிய அரங்கமா? ஆச்சரியமா இருக்கு.
நன்றி, அம்மணீ.

said...

வாங்க ஜோ.
நல்லா இருக்கீங்களா?

உங்களையெல்லாம் அனானின்னு வாய்கூசாமச் சொல்லுது இந்த ப்ளொக்கர்.
புதுவீடு மாறுனதும் உங்களுக்கு 'ஜிலேபி'கூட இல்லேன்னுருச்சுப்பா(-:

said...

வாங்க கீதா.

ச்சென்னை பதிவர் சந்திப்புக்கு உள்ளூர் மக்கள்ஸ் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
அதுவுமில்லாம எந்தவித ப்ரோக்ராமும் போட்டுக்கிட்டு வரலை. இல்லேன்னா
முன்னேற்பாடா சென்னை நண்பர்களுக்கு ஒருசேதியாச்சும் போட்டுருக்கலாமோ?

சரி. 'அடுத்தமுறை'ன்னு ஒண்ணு இருக்குல்லே? :-)))

said...

கீதா,

உங்களுக்கும் நோ ஜிலேபி(-:

said...

வாங்க செல்லி.

நல்ல பெரிய அரங்கம்தாங்க. அதுவும் மவுண்ட் ரோடுலே!
அதையொட்டி இருக்கறதுதான் தேனாம்பேட்டைக் காங்கிரஸ் கண்காட்சித் திடல்.
அரங்கின் வெளிப்புற ஹாலில் சரித்திர முக்கியத்துவம் உள்ள பல நிகழ்ச்சிகளைப்
படமா மாட்டி இருக்காங்க. நுழைவு வாசலில் காமராஜரின் சிலை. தோட்டமும்
நல்லாவே இருந்துச்சு.

said...

தமிழனுக்கு பெண்பால் தமிழச்சி.
பாமரனுக்கு என்ன்வென்று ஆராயப் புகுந்ததில் கீழ்க்கண்டவை சரியாகப் படுகிறதா எனப் பார்க்கலாம்.

திருவாளர் என்பதற்கு திருமதி என்றார்

அது தவறு என எடுத்துரைத்தார்
எங்கள் மதிப்புக்குரிய தமிழ் ஆசான்
பத்மநாப ஐயங்கார்

தீவினையாளர் தீவினையாட்டி என்பார்

அது போல் திருவாளர் திருவாட்டிதான் என்றார்

மாண்புமிகு தமிழாசிரியர்

மேலும் பார்ப்போமாயின்:

வேடுவன் வேடுவத்தி அல்லது வேடுவச்சி,

பாப்பான் பாப்பாத்தி

பிரான் பிராட்டி

ஆக பாமரனுக்கு:
பாமரத்தி, பாமராட்டி, பாமுராட்டி எது தேவையோ எடுத்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வாங்க டோண்டு.

உங்க பின்னூட்டம் இப்பத்தான் வருது.

கருத்துக்கு நன்றிங்க.

said...

அருமையான விமர்சனம். நேரடி ஒளி பரப்பு போல இருந்தது. கூர்ந்து கவனிக்கும் திறமை - அதைச் சொல்லில் வடித்தது அருமை. எனக்கு மிகவும் பிடித்தது. கம்பன் வீட்டுக் கட்டுத்தறிக்கும் பாராட்டுகள்.

ஆமாம் - தமிழாசிரியை (ம.பா) கூறுகிறார். பாமரன் என்பது பொதுச் சொல்லாம். அதற்கு பெண்பால் ஆண்பால் என்றெல்லாம் கிடையாதாம்.

புகைப்படங்கள் அருமை. டிக்கெட் பத்திரப் படுத்த வேண்டியது.

எல்லாத் தொடரையும் படிக்கிறேன்.