Friday, February 23, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 6)

டிசம்பர் 31. வருஷக்கடைசி நாள். வீட்டுவாசலில் பளிச் கோலம், அருமை. கோயில்கள் சுற்றல்ன்னு ஆரம்பிச்சு ஒரு ஆச்சரியம் நடந்துச்சு இன்னிக்கு. அதெல்லாம் கோயில்கள் பதிவுலே பார்த்துக்கலாம்:-))))



அண்ணன் மகள் இன்னிக்கு ராத்திரி ஊரில் இருந்து கிளம்பறதாலே எல்லாருமாச் சேர்ந்து ஒரு லஞ்ச். ச்சலோ' மெயின்லேண்ட்
ச்சைனா'. நுங்கம்பாக்கத்தில் இருக்கு. பஃபேதான். பேரு பெத்தப் பேரா இருந்துச்சு. எனெக்கென்னமோ சுமார்ன்னுதான் தோணல்.



இன்னிக்கு சாயந்திரம் எஸ்.வி. சேகர் நாடகம் போகணும். கிடைச்ச அஞ்சு டிக்கெட்டுலே மூணை, நம்ம குடும்ப நண்பர் வீட்டுலே கொடுத்திருந்தேன். நல்ல வேளையா ( எதுக்கு?) நாங்கள் போய்ச் சேர்ந்தப்பதான் அவுங்களும் வந்து இறங்குனாங்க. அரங்க வாசலில் கூட்டமுன்னா கூட்டம். நாடகம் இலவசம்தானே? அதான் கூட்டம். டிக்கெட்டை, வாசலில்
காமிச்சப்போ, பக்கத்து டேபிளில் டிக்கெட்டைக் கலர் மாத்தி எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க. பக்கத்து மேஜைக்குப் போனோம். எத்தனை ரூபாய்து வேணுமுன்னு கேட்டாங்க! இலவசமுன்னு சொல்லிக் குடுத்தாங்களே, அது வெறும்
புக்கிங் டிக்கெட்டாம்(!!! ???) இங்கே அதை மாத்தி வேறு கலர் டிக்கெட் எடுக்கணுமாம். எல்லாரும் வாங்கன்னு சொன்னாங்களே............
அது நாடகத்தின் பெயராம். இது எப்படி இருக்கு? பேசாம 'எல்லாருக்கும் அல்வா' இல்லேன்னா 'இந்தாங்க அல்வா'ன்னு பேர் வச்சிருந்தாப் பொருத்தமா இருந்திருக்குமே:-)







நண்பர்களுக்குத் தெரியாம அவுங்க டிக்கெட்டையும் வாங்கி கலர் மாத்தி வாங்கிக்கிட்டோம். நல்லவேளைன்னு
சொன்னது இதுக்குத்தான். 'ஓசி நாடகம்தான் வாங்க வாங்க'ன்னு வற்புறுத்திக் கூப்புட்டது நாங்க. எங்களுக்கு
முன்னே அவுங்க வந்து, கலர் மாத்தணும், காசைக் கட்டுன்னு சொல்லி இருந்தா அவுங்களுக்கு எப்படி இருந்துருக்கும்?
'என்ன என்ன'ன்னு கேட்டாங்க நண்பர்கள். 'ஒண்ணுமில்லை நீங்க வாங்க'ன்னு சொல்லிச் சமாளிச்சுட்டோம்.



அங்கே வந்திருந்த எல்லாருக்குமே இப்படி அல்வாவை ஊட்டி விட்டுக்கிட்டு இருந்தாங்க. டிக்கெட் எடுக்கணுமுங்கறது ஒண்ணும்
பெரிய விஷயமில்லை. அதை நேரடியாச் சொல்லி இருக்கலாமில்லையா? ஓசின்னு ஒண்ணு கொடுக்கறது. அப்புறம்
அது ரிஸர்வேஷன் மட்டுமுன்னு சொல்லி இன்னொரு டிக்கெட் வேற கலர்லே கொடுத்துக் காசு கேக்கறது...................



இது என்ன டெக்னிக்? கொஞ்சம் அசிங்கமா இல்லை?



அரங்கம் நிறைஞ்ச ஷோதான். இவ்வளவு தூரம் வந்துட்டுத் திரும்பணுமான்னு இருந்துருக்குமோ? 2000 மக்களுக்கும்
கஷ்டநஷ்டம் பார்க்காம அல்வாக் கிண்டி ஊட்டுனதுக்கு எஸ்.வி.சேகருக்கு நன்றின்னு சொல்லலாம்.



நாடகம் முடிஞ்சு திநகர் வந்து திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்குப்போய் சாமியைக் கும்பிட்டு வெங்கடநாராயணா
சாலை வழியா பனகல்பார்க் நோக்கி பொடி நடையில் வந்தப்ப, வுட்லேண்ட்ஸ் பக்கத்துலே கூட்டமா இருக்கு. என்னவோ
விழா.......... வாங்க வாங்கன்னு வருந்தி அழைக்கிறாங்க. தலையை நீட்டுனோம். திநகர் சோஷியல் க்ளப், புத்தாண்டுக்
கொண்டாட்டமாம். இதுவுமே வாழ்க்கையின் முதல்முறை எங்களுக்கு. ஜனங்க நல்லா உடுத்திக்கிட்டு, ஒரு மேடைக்கு
முன்னால் கூடி இருந்தாங்க. லைவ் ம்யூஸிக். சுருதி சேர்த்துக்கிட்டு இருந்தாங்க மேடையில். ஆகட்டும் அது மெதுவா,
அதுக்குள்ளே ராச்சாப்பாட்டைக் கவனிச்சுக்கலாம். அங்கேயே ஒரு ஹாலில் சாப்பாடு இருந்தது. அப்படி ஒரு கூட்டம்.
இதோ இருக்கு வுட்லேண்ட்ஸ்ன்னு அங்கெ போயிட்டு வந்தோம்.



இன்னும் ஸ்ருதி சேரலை. நேரம் ஆக ஆக நான் இதுவரை பார்க்காதச் சென்னையின் இன்னொரு முகம். அதீத அலங்காரத்தில்
பலர் வளைய வந்தாங்க. மேடை நிகழ்ச்சிகள் ஒருவழியா ஆரம்பம். முதல்லெ அவுங்க ஸ்போர்ட்ஸ் க்ளப்லே
வெவ்வேற ஆட்டங்களில் ஜெயிச்சவங்களுக்கு பரிசுகளும் கப்புகளும். அடுத்து மெல்லிசை நிகழ்ச்சி. மூணு பாட்டுக்குமேலே
உக்கார முடியலை. வாத்தியங்களுக்கும், பாட்டுக்காரங்களுக்கும் இன்னமும் சுருதி சேரவே இல்லை:-) இந்த அழகுலே
ஹிந்தி சினிமாப் பாட்டுங்க வேற.



பொழுது விடிஞ்சாப் புதுவருஷம்.இன்னிக்கும் வாசலில் பெரிய அழகான கோலம். கூடவே வருஷத்தை வரவேற்க
வாழ்த்துச் செய்திகள். இங்கே வந்தபிறகு மகள் படத்தைப் பார்த்து சொன்னபிறகுதான் கவனிச்சேன். ஒரு 'ஸீரோ'
கூடுனால் தப்பாங்க? :-))))) இல்லே ஒரு 'ஈ' பறந்தாத்தான் தப்பா? :-)))








இன்னிக்கு ஒரு சினிமாவுக்குப் போறோம். தியேட்டரில் தமிழ் சினிமாப் பார்த்துப் பன்னிரெண்டே முக்கால் வருசம்
ஆச்சு. கடைசியாப் போனது 'மகளிர் மட்டும்' 1994-ல். அபிராமியில் வெயில். இந்த காம்ப்ளெக்ஸ்க்கு முதல்முறை
விஜயம். அங்கே டிக்கெட் கவுண்டருக்கு மேலே ஒரு மானிட்டரில், டிக்கெட் இருக்கா, எதுலே எத்தனை இருக்கு,
எது ஃபுல்ன்னு விவரம் ஓடுது. பரவாயில்லையே! இன்று முதல் திரை அரங்கில் டிக்கெட் விலைக்குக் கட்டுப்பாடு
கொண்டு வந்துருக்காம் அரசாங்கம். அதன்படி 50 ரூபாய்தான் அதிகபட்ச விலையாம். அதையே வாங்கிக்கிட்டு
மாடிக்குப் போனோம். (மறுநாளே கட்டுப்பாட்டைத் தூக்கிட்டாங்களாம்) சுமாரான கூட்டம். கீழே எல்லாமே ஃபுல்லாம்.
முன்னாடி இருக்கைக்கு வந்தவங்க பேசிக்கிட்டு இருந்தாங்க.



படம் ஆரம்பிச்சது. மக்கள்ஸ் படத்தோடு ஒன்றிப்போய் உருக்கமான இடத்துலே உச்சுக்கொட்டியும், அண்ணந்தம்பி
சந்திக்கும் இடத்தில் விஸில் அடிச்சும், கைதட்டியும் ரசிக்கிறாங்க. தியேட்டரில் படம் பார்க்கறது ஒரு வித்தியாசமான
அனுபவமா இருக்கே! 'இனிமே வீட்டுலே படம் பார்க்கும் போதும் ரசிச்சுப் பார்க்கலைன்னா இருங்க உங்களை'ன்னு கருவுனேன் கோபாலை:-)))



பொதுவாவே ஆடியோ ஒரே சத்தம். இதுலே பாட்டுக்காட்சிகளில் இன்னும் ஒரு ஆயிரம் டெஸிபில்(!!)
கூடுது. காதுகளை அடைச்சுக்கிட்டே முழுப்படத்தின் வசனங்களையெல்லாம் துல்லியமாக் கேக்க
முடிஞ்சது. பகல் உணவுக்கு புரசை சரவண பவன். நிக்க இடமில்லை. பாண்டி பஜாருக்கே வந்துட்டோம்.




இன்னிக்கு மாலை ராணி சீதை ஹாலில் மேண்டலின் கச்சேரி. யூ. ஸ்ரீனிவாஸ். டிக்கெட் வாங்கி மேலே
போனா... திருச்சூர் பிரதர்ஸ் பாடிக்கிட்டு இருக்காங்க. ரெண்டு பாட்டு கேக்கக் கிடைச்சது. மேண்டலின் ஸ்ரீனிவாஸ்
வாசிப்பு அட்டகாசம். விரல்கள் அப்படியே ஓடுது. கேட்கவே ஒரு சுகானுபவம். கண்ணை அப்படியே அசத்தித்
தூங்க வச்சுருச்சு ஒரு பத்து நிமிஷமுன்னா பாருங்க.




புதுவருஷம் பிறந்து ஒரு நாள் ஓடிப்போச்சு. இன்னைக்கும் மைலாப்பூர் பக்கம் போக வேண்டிய வேலை. நம்ம
பாலாவையும் அப்படியே பார்த்துட்டுப் போகலாமுன்னு வித்லோகா போனோம். கோபாலை அறிமுகப்படுத்த வேண்டிய
அவசியம் ஏற்படலை. பார்த்தவுடனே பாலா 'டக்'னு புரிஞ்சுக்கிட்டார். ஒரு பத்து நிமிஷம் உரையாடல். அப்படியே
வித்யாபாரதி. இன்னிக்குக் கடம் கார்த்திக்கின் ஹார்ட்பீட் ம்யூஸிக் என்செம்பிள். எம்பார் கண்ணன், யு.பி.ராஜு,
பூங்குளம் சுப்ரமணியன், ஸ்ரீசுந்தர் குமார், ஏ.எஸ். கிருஷ்ணன்ன்னு எல்லாம் வாத்தியக் கலைஞர்கள்.
அடிச்சு தூள் கிளப்பிக்கிட்டு இருக்காங்க. 'சற்று நேரத்திற்கு வாத்திய இசை'ன்னு கேட்டுட்டுக் கிளம்பினோம். வந்த வேலையை முடிக்கணுமே!





இன்று முதல் நாட்டிய விழா ஆரம்பம். இசைவிழா முடிஞ்சு போச்சு. தோழியின் தோழி மகளொட அரங்கேற்றம்.
நமக்கும் அழைப்பு(!!) ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் 18-வது பரதம் ஃபெஸ்டிவல். சங்கீத நாடக அகெடமியின்
எக்ஸிக்யூடிவ் மெம்பரும், பத்திரிக்கைகளில் நடன விமரிசனம் எழுதுபவருமான நந்தினி ரமணி ஆரம்பித்து
வச்சாங்க. நடனமாடியது பவ்யா பாலசுப்ரமணியன். புகழ்பெற்ற ஸ்ரீகலா பரத்தோட மாணவி.

அருமையான நடனம். அந்தக் காலக் கமலா( நம்ம குமாரி கமலாங்க)வின் நாட்டியத்தை நினைவுபடுத்தியதாக
நந்தினி சொன்னாங்க. 'கிரிடிக்' சொன்னா அது சரியாத்தானிருக்கும்.

வாணிமஹாலில் ஜனவரி 31 வரை நாட்டிய விழா( ஆல் ஆர் வெல்கம்) நடக்கப்போகுது. நிகழ்ச்சி நிரலை அச்சடிச்சேக்
கொடுத்துட்டாங்க.

இனி ரெண்டு மூணு நாளைக்கு நண்பர்களைச் சந்திக்கறதும், கோவில்களைச் சுத்தறதுமா இருந்தது. அதுக்குன்னு
ஒரு பதிவு தனியா வரும்,பாருங்க:-)



"ஆமாம், மோஹினி ஆட்டம் ஒண்ணு பார்க்கலாமா? அதுக்கென்ன பேஷா............"

மியூஸிக் அகெடமி. டிக்கெட்டுக்காக ஒரு முக்காமணி நேரம் முன்னதாவே போனோம். உள்ளெ பிரியதர்சினி கோவிந்தின்
பரதநாட்டியம் நடக்குது. நாங்க நுழைஞ்சப்ப........ நாயகன் பிரிவால் நாயகி பசலை கண்டு வாடும் காட்சி. வளையல்கள்,
மேல் கையில் இருக்கும் வங்கி எல்லாம் உண்மையிலெயே கழன்று மேடையில் விழுது. ஒடிசலான உடம்பு. தலையைப்
பின்னி ஜடையாக இல்லாமல் கொண்டை போட்ட அலங்காரம். அற்புதமான நடனம். அடுத்து புறநானூறு. போர்க்களத்தில்
தன்னுடைய மகன் புறமுதுகு காட்டி மரணமடைந்தான் என்று யாரோ சொல்லக்கேட்ட வீரத்தாய், போரில் வீழ்ந்துபட்ட
உடல்களில் தன் மகனைத்தேடி அலைகின்றாள். மார்பில் அடிபட்டு மரணமடைந்த மகனை மடியில் போட்டுக்கொண்டுத்,
தன் மகன் வீரன் தான் என்று அறிந்து பரவசமும், அதே சமயம் மகனை இழந்த துக்கமும் கொண்டு இருப்பதாக வரும்
பாட்டு. 'அருமை' ன்னு சொல்றதுக்கு வேற எதாவது சொல் இருக்கா?(குமரன் இல்லே ராகவனைத்தான் கேக்கணும்)



இப்பெல்லாம் நாட்டியமணிகள் நல்லாப் படிச்சவங்களாவும் இருக்காங்க. அருமையான ஆங்கிலத்தில் ஒவ்வொரு
நடனத்துக்கும் விளக்கம் சொல்லிட்டு ஆடறது ரொம்ப நல்லாவே இருக்கு. வெளிநாடுகளில் நம்ம நிகழ்ச்சிகள்
நடக்கறது அதிகமானதாலே இப்படியெல்லாம் இருக்கறதுதான் பொருத்தமும்கூட. இல்லீங்களா?



நீனா பிரசாத், மோஹினி ஆட்டம் ஆடவந்தாங்க. அவுங்க இசைக்குழுவின் எண்ணிக்கை அதிகமா இருந்துச்சு.
வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், வயலின்னு மொத்தம் 9 பேர். . நம்ம பரதம் போலவே ஸ்டெப்ஸ். ஆனா நின்னு
நிதானமா ஆடறாங்க. துரிதகால ஆட்டமெல்லாம் இல்லை. எல்லாம் ஆற அமரன்னு போச்சு. அரைமண்டி போட்டாப்பலெதான்
முழுநடனமும் ஆச்சு. நாங்க உட்கார்ந்திருந்த பால்கனியில் இருந்து பார்க்கறப்ப இன்னும் உயரக்குறைவாத் தெரிஞ்சாங்க.

படம் எடுக்க அனுமதி இல்லைன்றதாலே கெமெராக் கொண்டுபோயும் பலன் இல்லை. பரவாயில்லை. முழுநடனமும் பார்க்கவாச்சும் இப்படி ஒருச் சான்ஸ் கிடைச்சதே போதும்.

23 comments:

said...

\\'இனிமே வீட்டுலே படம் பார்க்கும் போதும் ரசிச்சுப் பார்க்கலைன்னா இருங்க உங்களை'ன்னு கருவுனேன் கோபாலை:-)))//

கூட சேர்ந்து விசிலடிச்சு ரசிக்கனுமா? எங்க வீட்டுல என்ன கதைன்னா , தூங்கி குறட்டை விடாம இருந்தா பத்தாதா? எழுப்பிவிடற வேலை வேற அப்ப அப்ப நம்மோடது.நீங்க என்னன்னா ரொம்ப ஆசைப்படறீங்க.

said...

வாங்க முத்துலெட்சுமி.

//குறட்டை........//

அதுலே இருந்து தப்பிக்கத்தானே இப்ப 'விசிலடிக்க'ச்சொல்றேன்.:-))))

தலைக்கு ஒரு தலையணை கூடுதலா வச்சுக்கிட்டா, அதுக்குப்பேரு..... உக்கார்ந்து பார்க்கறதாம்.
படுத்துக்கிட்டுப் படம் பார்க்கலையாம். இப்படியெல்லாம் விளக்கமும் நான் அப்பப்பக்
கேட்டுக்கணும்.:-)

said...

//இலவசமுன்னு சொல்லிக் குடுத்தாங்களே, அது வெறும்
புக்கிங் டிக்கெட்டாம்(!!! ???) //

ஏங்க அந்த டிக்கெட்டில் ஒண்ணும் போடலையா? பொடி எழுத்துக்கள் எதனா இருந்து இருக்குமே..?

நாடகம் எப்படி இருந்திச்சு? காசு போன கடுப்பில் ஒரு வார்த்தை கூட சொல்லலையே?

மத்த விஷ்யங்கள் எல்லாம் மத்தவங்க வந்து பேசுவாங்க.

Happy New Year 2007! (Eயும் விடலை 0வும் ஜாஸ்தி போடலை!)

said...

ரெண்டாயிரம் பேருக்கு அல்வாவா?
மயிலாப்பூருக்கே அல்வா கொடுத்தவரில்லெ........

சிஜி

said...

அல்வான்னே எஸ்.வி.சேகர் ஒரு நாடகம் போட்டிருக்காரு. அது தெரியாதா டீச்சர். எஸ்.வி.சேகர் நாடகம் பாக்குறத நிறுத்தி ரொம்ப காலமாச்சு. நீங்க மாட்டிக்கிட்டீங்க. சரி. நாடகம் எப்படீன்னு சொல்லலையே?

அருமைக்கு வேற சொற்களா? சிறப்புன்னு சொல்லலாம். மிகச் சிறப்புன்னும் சொல்லலாம். செழுமையான நடிப்புன்னும் சொல்லலாம். ப்ரமாதம் இருக்குறப்போ இதெல்லாம் தேவையான்னு மட்டும் கேக்காதீங்க :-)

20007லும் தமிழ் நாட்டுக்காரங்க கோலம் போடுவாங்கன்னு நெனைக்கிறீங்க? தமிழ்நாடே இருக்கோ இல்லையோ!

said...

//இங்கே வந்தபிறகு மகள் படத்தைப் பார்த்து சொன்னபிறகுதான் கவனிச்சேன். ஒரு 'ஸீரோ'
கூடுனால் தப்பாங்க? :-))))) இல்லே ஒரு 'ஈ' பறந்தாத்தான் தப்பா? :-)))//

கோலமிட்டவர், கோலம் போடும் போது ரெஃபரன்ஸ் புக் பார்க்கவில்லை போலும் :).

//ரெண்டு பாட்டு கேக்கக் கிடைச்சது. மேண்டலின் ஸ்ரீனிவாஸ்
வாசிப்பு அட்டகாசம். விரல்கள் அப்படியே ஓடுது.//

சமீபத்தில் ஆஸ்தா சானலில் அவர்களுடைய கச்சேரியை கேட்டேன். அருமையாக வாசித்தனர். கூடவே அவருடைய தம்பியும் (யூ.பாலாஜீ). புலியின் தம்பி பூனையாகுமா என்று நிருபித்து விட்டார்.

//
பொதுவாவே ஆடியோ ஒரே சத்தம். இதுலே பாட்டுக்காட்சிகளில் இன்னும் ஒரு ஆயிரம் டெஸிபில்(!!)
கூடுது. காதுகளை அடைச்சுக்கிட்டே முழுப்படத்தின் வசனங்களையெல்லாம் துல்லியமாக் கேக்க
முடிஞ்சது. பகல் உணவுக்கு புரசை சரவண பவன். நிக்க இடமில்லை. பாண்டி பஜாருக்கே வந்துட்டோம்.
//
அதை தானே நம்ம மக்கள்ஸ் விரும்பிறா! அப்பறம் தியேட்டர் காராளை குறை சொல்ல முடியுமோ!

பயண கட்டுரை பூரா படிச்சிட்டேன். அருமையா இருக்கு. :).

said...

வெயில் படம் கொஞ்சம் சுமார்தான் டீச்சர். நடிச்சவங்கள்ள்ளாம் நல்லா நடிச்சிருப்பாங்க. ஆனா படத்துல ஏதோ குறையுது. படத்தோட ஒரிஜினல் டிவிடி மலேசியாவுல கெடைச்சது. வீட்டுலயே உக்காந்து முழுசாப் பாக்க முடியலை. தேட்டர்ல எப்படிப் பாத்தீங்களோ!

said...

அது மட்டுமா கண்ணு மூடி இருந்தா தூக்கம்ன்னு அர்த்தம் கிடையாது பாட்டு வரும்போது கொஞ்சம் கண்ணுக்கு ரெஸ்ட் ன்னு அர்த்தம்.

said...

சிரிச்சு சிரிச்சு முகம் அலிச்சா மருந்து கொடுப்பீங்களா?
அதெப்படித்தான் கோலத்திலேருந்து ஆரம்பிச்சு மோஹினி ஆட்டம் வரைக் கண்ணு மூடிக்காம பார்த்தீங்களோ.:)
நாங்க இந்த மாதிரி நாடகம் பாக்கிறதையும் விட்டாச்சு. தியேட்டர் பக்கம் போயே நாளாச்சு. எல்லாம் இந்த டெசிபல் அமோகத்துக்குத்தான்.
முன்னாலே எல்லாம் சினிமா பார்த்தா அதோட சந்தோஷமோ துக்கமோ கொஞ்ச நாளுக்கு இருக்கும். இப்போ போய் தியேட்டரை விட்டு வெளில வந்தாப் போதும்னு ஆகிடும்.
கண்ணு காது எல்லாம் ஒரு மார்கமா ஞொய்னு சத்தம் சுத்திவரும்.நமக்கு டிவிடியே துணை.
ஏம்ப்பா கோபாலை இப்படி வாருகிறீங்க.
ஏதொ பொண்டாட்டிக்குத் துணையா சினிமானு பாக்கிறாரே.
எங்க ஆசாமி நீ பாரு தாயேனு வாசலுக்குப் போயிடுவாரு.:)

said...

இது (இலவச டிக்கெட்)அநியாயம். யாராவது புகார் சொன்னாங்களா?
ஈ பறந்தா தப்பில்லையே. இப்ப குறுஞ்செய்திதானாமே

said...

வாங்க கொத்ஸ்.

நீங்க சொன்னபிறகு, மறுபடி 'பச்சை'யை எடுத்து( கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு)
பார்த்தேன். நோ பொடி எழுத்து.

நாடகம் வழக்கம்போல 'தலையைக் கழட்டி வச்சுட்டு, அந்த நிமிஷம் மட்டும் சிரிச்சுட்டு' வர்ற வகைதான்.

said...

ஆமாங்க சிஜி.

மைலாப்பூரில் 'அல்வா'ன்னுகூட ஒரு போஸ்டர் பார்த்த ஞாபகம்:-)

said...

வாங்க ராகவன்.

ஊர்லே இருந்து கிளம்புற நாளுக்கு முந்திதான் இந்த 'அல்வா' போஸ்டரைப் பார்த்தேன்.

உள்ளூர்லே இருந்தா 'கனி இருக்கக் காய் எதுக்கு'ன்னு இருந்துரலாம். வெளியூர் மக்கள்ஸ்க்கு
'கனி'க்குக் காத்திருக்க வாய்ப்பு குறைவுதானே? (-:

'அருமை'க்குச் சொல்லிட்டீங்க. இப்போ 'அறுவை'க்குச் சொல்லுங்கோ:-)

//20007லும் தமிழ் நாட்டுக்காரங்க கோலம் போடுவாங்கன்னு
நெனைக்கிறீங்க? தமிழ்நாடே இருக்கோ இல்லையோ//

எல்லாம் இருக்காமப் போகாது. ஆனா வருஷப்பிறப்பை எப்படி இங்கிலீஷ்லே எழுதப்போச்சுன்னு
நல்லவேளை யாரும் மறியல் செய்யலை:-)

said...

வாங்க சிவமுருகன்.

இப்படிப் பூனையைச் சொன்னதுக்கு நம்ம ஜிகே கோச்சுக்கிட்டார்.
அவரும் நல்லா வயலின் வாசிப்பார்:-)

இப்ப எல்லாம் வீட்டுக்காரர்கள் கோலம் போடறது அருகி வருது. எல்லாம் வேலைக்கு இருக்கும்
உதவியாளர்கள் வசம்தான்.


பயணக்கட்டுரை இன்னும் முடியலை. தொடர்ந்து வந்து படிப்பீங்கதானே?

said...

ராகவன்,

வெயிலைத் தேர்ந்தெடுத்தது நான் இல்லைப்பா. எதோ சானல்லே டாப் டென் லே பார்த்துட்டு
கோபால்தான் புண்ணியம் கட்டிக்கிட்டார்.

//நடிச்சவங்கள்ள்ளாம் நல்லா நடிச்சிருப்பாங்க. //

ஆமாங்க.பசுபதி நல்லாத்தான் நடிச்சிருக்கார்.அந்த ஷ்ரேயா ரெட்டியும்
நல்லாப் பண்ணி இருக்காங்க.

said...

முத்துலெட்சுமி,

//கொஞ்சம் கண்ணுக்கு ரெஸ்ட் ன்னு அர்த்தம். //

அப்டீங்களா? நம்ம (வீட்டு) அகராதியிலே
இதுக்கு 'சிந்தனை'ன்னு அர்த்தம்:-)

said...

என்னங்க வல்லி,

நம்மளை ஒரேதா 'டாக்குட்டர்' ஆக்கிப்புட்டீங்க? மருந்தெல்லாம்................
சரி. கம்பவுண்டர் கொடுத்தாப் பரவாயில்லைதானே? :-))))

நீங்க சொன்னதேதான் இங்கேயும் . சினிமா டிக்கெட் வேற ஒரு ஆளுக்கு 20$
ஆகிருது. இங்கெல்லாம் க்ளாஸ் கிடையாது. ஒரே வகுப்புதான். சமரசம்:-)

இவ்வளோ கொடுத்து இங்கிலிபீஸுப் படம் பார்க்கணுமான்னு போறதெ இல்லை.
கடைசியாப் பார்த்தது'டாவின்ஸி கோட்'தான். அதுவும் டிவிடியில்.

said...

வாங்க பத்மா.

எங்கேன்னு புகார் கொடுக்கறதுங்க?

ச்சும்மா நம்ம புலம்புனதுக்கே அங்கெ என்ன பதில்ன்னு பார்த்தீங்கன்னா...........

" இங்கெல்லாம் இப்படித்தாங்க"

விமானநிலையத்துலே ஒரு தகவல் பலகைப் பார்த்தேங்க. அங்கே நடக்கும் எதைப்
பற்றியாவது புகார் கொடுக்கணுமுன்னா 'ஹேடோஸ் ரோடு'லெ இருக்கும் அலுவலகத்தில்
புகார் செய்யலாமாம்.

'மனுஷன், இதுக்காக மீனம்பாக்கத்துலெ இருந்து நுங்கம்பாக்கம்போய் புகார் செய்யமாட்டான்'ன்ற
அசாத்திய நம்பிக்கையில் அரசாங்கம் வச்ச போர்டு(-:

said...

வணக்கம்,

எனக்கு தெரிந்த ஒரு ஜோசியர், தான் அவ்வாறு, சுந்தர காண்டம் படித்து விட்டு, தான் மட்டும் அருந்த வேண்டும் என்றும், பிறகு முழுவதும் படித்து விட்டு, சர்க்கரைப் பொங்கல் செய்து, நைவேத்தியம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும் என்றார். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

அன்புத்தோழி

said...

அன்புத்தோழி,

அடடா......... தப்பா நினைச்சுக்கிட்டீங்களா? சாமிப் பிரசாதமுன்னு இருக்கறதைக் கட்டாயம்
பகிர்ந்துதான் உண்ணணும். அதுதான் நல்லதுன்னு சொல்ல வந்தேன்.

பொதுவாவே........... பகிர்ந்துண்டு வாழணுங்கறதுதான் பண்பாடு இல்லீங்களா?

said...

என்ன இந்தப் பதிவு பூரா ஒரே கோபம் / புகார் - என்ன செய்யுறது - சென்னை தானெ - அப்ப்டி இப்படித் தான் இருக்கும்.

நுங்கம்பாக்கம் பஃபே சுமார்.
கலர் மாத்தி, காசு கொடுத்து, அல்வா வாங்குனது.

புது வருடக் கொண்டாட்ட சொதப்பல் - சுருதி சேராம கச்சேரி

அதீத அலங்காரம்

ஒரு ஸீரோ கூடுதல்
ஒரு ஈ பறந்து போனது

ஒரு நா கட்டுப்பாடு - மறு நா இல்ல

சென்னை மக்களோட ரசனை - கோபாலைக் கருவுனது

ஒரே சத்தம்

காமெரா அனுமதி இல்ல

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - கடைசீலே போனாப் பொகுதுன்னு மூடுக்கு வந்துட்டீங்க

said...

அடடே... எஸ்.வி.சேகர் போட்ட ‘அல்வா’ நாடகம் பத்தி எழுதியிருப்பீங்கன்னு நினைச்சுட்டு வந்தேன். இங்க பாத்தா... சேகரை வெச்சு (ஒருவேளை சேகரும் சேர்ந்தோ) அல்வா கிண்டில்ல கொடுத்திருககாங்க...! நானாயிருந்தா கோபத்துல கத்தி ரகளை பண்ணிருப்பேன். நீங்க நண்பர் குடும்பம்லாம் வந்ததால அடக்கி வாசிச்சுட்டீங்க போல...

said...

வாங்க பாலகணேஷ்.

எங்கே வாயத் தொறக்க விட்டாங்க? அதான் அல்வா அடைச்சுக் கிடந்துச்சே!!!