ரொம்பவே சுலபமான பிக்னிக் ஐட்டம் ஒன்னு எங்க யோகா குடும்பத்துக்கு ஆகி வந்துருக்கு ! நோகாம நோம்பு என்ற வகை. பகல் சாப்பாட்டுக்குன்னு ஒவ்வொருத்தரும் எதாவது சமைச்சு எடுத்துக்கிட்டுப்போய் அங்கே போய் சாப்பிட்டுட்டு உருளாம .... ஆக்டிவா இருந்தால் நல்லதுதானே !
Bபேல் & Fஃபலூடா லஞ்ச் ! கேக்கவே நல்லா இருக்குல்லே !
மேலே படம்: இடும்பி வீட்டு பேல் :-)
பேல்பூரிக்குண்டான ஐட்டங்களை ஆளுக்கு ஒன்னா எடுத்துப்போனால் போதும். பொரி, ஓமப்பொடி, வேகவச்ச சன்னா, உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், வெங்காயம் பொடியா அரிஞ்சது. கட்டா மீட்டா சாஸ், கொத்தமல்லி புதினா அரைச்செடுத்த க்ரீன் சாஸ். ஃபலூடா ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தர் நம்ம குடும்பத்துலே இருக்காங்க. அவுங்க அதுக்குண்டானதை வாங்கி ரெடி பண்ணிருவாங்க. ரோஸ் ஸிரப், பால் & ஐஸ்க்ரீம் கடையில் வாங்கிடலாம். கொஞ்சம் ஜெல்லியும் செஞ்சுடலாம். முதல்நாளே கொதிநீரில் போட்டுக் கரைச்சு வைச்சால் ஆச்சு. கூடவே கொஞ்சம் சப்ஜா விதைகளைத் தனியா ஊறப்போட்டுடலாம். கைவசம் பதாம் பிஸின் இருந்தால் யதேஷ்டம். இல்லைன்னா மெனெக்கெட வேணாம்.
இந்த பேல்பூரி எனக்கு ரொம்பப்பிடிக்கும். வழக்கமான பொருட்களின் கூடவே எனக்குத் தோணியதெல்லாம் கூடச் சேர்த்துக்குவேன். என்ன இருந்தாலும் இடும்பிக்குத் தனி வழி இல்லையோ :-)
இதோ இருக்கும் கொஞ்சநஞ்ச வெயிலும் முழுசாக் கண்ணைவிட்டுப்போகும் காலம் வந்துக்கிட்டே இருக்கு. நாம் கொஞ்சம் முந்திக்கிட்டால் நல்லதுன்னு ஏற்பாடு . எங்கே போகலாமுன்னு யோசிச்சப்ப, 'என் புள்ளையாரை' இவுங்க யாரும் பார்க்கலையேன்னு அங்கே போக முடிவு.
சம்னர் என்ற பெயரில் ஒரு பீச் இருக்கு. நம்மூரில் இருக்கும் ரெண்டு பீச்களில் ஒன்னு. கொஞ்சநாளுக்கு முன்னே பட்டத்திருவிழான்னு போனோமே அது நியூ ப்ரைட்டன் பீச்.
இந்த இரண்டில் எனக்குப் பிடிச்சது சம்னர் பீச் தான். இயற்கைச் சூழலில் இருக்கும் வகை இது. இங்கே கேவ் ராக் என்னும் ஒரு சின்னக் குன்று இருக்கு. குன்றுக்கடியில் குகை. 'எனிட் ப்ளைட்டனின் ஃபேமஸ் ஃபைவ்' கதைகளில் வரும் குகை வகைன்னு எனக்கு எப்பவும் தோணும். கடலில் Tடைட் நிறைய இருக்கும்போது குகைக்குள் தண்ணீர் நிறைஞ்சுரும். குகைக்குள் நுழைஞ்சு நடந்தால் நேரெதிர்ப்புறம் கடல் வாசல் !
இந்தக்குன்றின் அடிவாரத்தில் சட்னு யாருக்கும் புலப்படாத வகையில் நம்ம புள்ளையார் இருக்கார். அதுவும் ஸ்வயம்பு ! பஞ்சமுக கணபதி.
இவரை முதலில் கண்டுபிடிச்சு,' சம்னர் வாழ் வரசித்தி விநாயகர்' னு பெயர் வச்சது யாருன்னு உங்களுக்குச் சொல்லலாமுன்னா தன்னடக்கம் தடுக்குது. இவரைப்பற்றி 'அப்பவே ' Bay Watch பிள்ளையார் னு எழுதியிருக்கேன்.
http://thulasidhalam.blogspot.com/2006/08/baywatch.html
இங்கிலாந்து, செஸ்டர் என்னுமிடத்தில் ஆர்ச் பிஷப்பாக இருந்த ஜான் பர்ட் சம்னர் (John Bird Sumner )என்பவர், ஆர்ச் பிஷப் ஆஃப் கேன்டர்புரியாக நியமனம் பெற்று, கேன்டர்புரி அசோஸியேஷன் தலைவராகவும் ஆனார்.
வெள்ளையர் நியூஸிக்கு வந்தது 1840 ஆம் ஆண்டு. 1849 இல் கேப்டன் தாமஸ் ( கேன்டர்புரி அசோஸியேஷனின் ஏஜென்ட் ) என்பவருக்காக நியூஸியின் இந்தப் பகுதியை சர்வே செய்ய எட்வர்ட் ஜோல்லி , வந்து வேலையை முடிச்சுக்கொடுத்தார். 527 செக்ஷன்ஸ் & ஏராளமான சின்னக்காடுகள்னு கணக்கு. அப்போ இந்தப் பகுதிக்கு கேண்டர்புரி ஆர்ச் பிஷப்பின் பெயரையே வைக்கலாமுன்னு சம்னர்னு பெயரை வச்சவர் கேப்டன் தாமஸ்.
கேப்டன் குக், முதல்முதலில் புது இடத்தைக் கண்டறிஞ்சு கால்குத்தியது நம்ம நியூஸியின் தெற்குத்தீவில்தான். இதைத்தான் மெயின் லேண்ட்ன்னு குறிப்பிடுவாங்க. இப்பவும் நியூஸியில் எந்த முக்கிய சமாச்சாரம், அரசு ஏற்படுத்தும் வசதிகள்னு ஆரம்பிக்கும்போது நமக்குத்தான் முன்னுரிமை ! அப்பவே கேன்டர்புரின்னு நம்ம ஊருக்கும் இதைச் சுற்றி இருக்கும் தொகுதிகளுக்கும் பெயர் வச்சாச்சு. இங்கிலாந்தில் கேண்டர்புரின்னு ஒரு ஊர் இருக்கு ! நாஞ்சொல்லலை..... போற இடத்தில் எல்லாம் தெரிஞ்சபெயரையே வச்சுருவாங்கன்னு :-) மிஞ்சிப்போனா முன்னொட்டா ஒரு நியூ சேர்த்தால் ஆச்சு ! அம்புட்டுதான் ! ஜோலி முடிஞ் !
சம்னர் சலோ என்றது உறுதியாச்சு. யோகா வகுப்பு நேரங்களைத்தவிர இப்படிப்பட்டக் கொண்டாட்டங்களில் அங்கங்களின் சொந்தக் குடும்ப அங்கங்களும் கலந்துகொள்ளலாம். ஏன்..... வகுப்புகளில் கூட சில சமயம் உறவினர்கள் வந்து கலந்து கொள்வதில் பிரச்சனை ஏதும் இல்லை. நம்ம லக்ஷ்மி அண்ணியின் பேத்திகள், பள்ளிக்கூட விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வருபவர்கள், பாட்டியுடன் வகுப்புக்கும் வருவார்கள். உண்மையில் அந்தச் சின்னக்குட்டிகள், என்னை விட யோகாப் பயிற்சியை நல்லாவே செய்வாங்க.
சம்னர் பீச்சில் இத்தனை பெரிய கூட்டம் உக்கார்ந்து சாப்பிட வசதி இல்லை. மணலில் உக்கார்ந்தால் , காற்றில் மணல் நம் வாயில்தான் !
அதனால் இங்கிருந்து டேலர்'ஸ் மிஸ்டேக் போகும் வழியில் இருக்கும் ஸ்கார்பரோ என்னும் இடத்துலே சந்திக்க ஏற்பாடு. இங்கிலாந்தில் இருக்கும் ஸ்கார்பரோ என்னும் சின்ன டவுனின் பெயர் இது. ப்ரிட்டனில் இருக்கும் பெயர்கள் எல்லாம் நியூஸியிலும் ஆஸியிலும் இருக்கும் ! தெரிஞ்ச பெயரைத்தானே புது இடத்துக்கு வைக்க முடியும், இல்லையா ?
இந்த டேலர்'ஸ் மிஸ்டேக் கூட நம்ம டேலர் இங்கே நம்ம ஊரான க்றைஸ்ட் சர்ச்சுக்குக் கப்பலில் வந்தபோது, ராத்ரி இருட்டுலே வந்து இறங்கிய இடம். பொழுது விடிஞ்சு பார்த்தால் ஊரைக் காணோம். நேரெதிரா மலைதான் இருக்கு. அந்த மலையில் ஏறிப் பார்த்தால் மலைக்கு அடுத்தபக்கம் ஊர் ! தப்புப்பண்ணிட்டேன்னு சொல்லிட்டார். பரவாயில்லை. இந்த இடத்துக்கு இனி நீ செஞ்ச தப்பையே பெயரா வைச்சால் ஆச்சு ! Taylor's Mistake இப்படித்தான் பெயர் வாங்கிருச்சு.
இங்கே வந்த புதுசுலே Industrial Sewing Machines Courseக்குப் போன காலத்தில் மொத்த வகுப்பும் அவுட்டிங் டேன்னு இந்த டேலர்'ஸ் மிஸ்டேக் போயிருந்தோம். ஸர்ஃப் பீச் இது ! வேறொன்னுமே கிடையாது. இப்ப எப்படி இருக்குமோ என்னவோ ?
போகட்டும், நாம் ஸ்கார்பரோ பார்க்கில் ஒன்று கூடறோம். ஒரு மணிக்கூண்டு இருக்குமிடம். இதுவுமே தன் தகப்பனின் நினைவுக்காக, ரிச்சர்ட் எட்வர்ட் க்ரீன் என்பவரின் நன்கொடை. இதேபோல இன்னொரு கடிகாரத்தைய நியூ ப்ரைட்டன் பீச்சுக்கும் நன்கொடை அளிச்சுருக்கார். இவருடைய தகப்பன் எட்மண்ட் க்ரீன் என்பவர்தான், நியூஸியில் டெலக்ராஃப் சேவையை நிறுவினார். அந்தக் கால.... கட்டுக் கடகடா.... கடகட கட் நினைவிருக்கோ ?
இப்படியெல்லாம் சரித்திரம் இருக்கும் ஊரில் இருக்கோம் என்றதுகூட ஒரு சந்தோஷம்தான், இல்லெ ?
அப்போ...............இப்போ.......
சரியான நேரத்துக்குப்போன நாம், ஒரு நல்ல இடம் பார்த்துப் புடிச்சு வச்சோம். ஏறக்கொறைய எல்லோரும் வந்து சேர்ந்ததும்.... கொண்டுவந்த பொருட்களையெல்லாம் அங்கே பிக்னிக் டேபிளில் வச்சுட்டு, கடலையொட்டிய பாதையில் நடந்து புள்ளையாரை நோக்கிப் பயணம். சுமார் 1.2 கிமீ தூரம்தான் ! இந்தப் பாதையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் குறுக்கே மறுக்கே ஓடும் செல்லங்கள் அதிகம்.
கேவ்ராக் அடிவாரத்தில் புள்ளையாரைக் காமிச்சப்ப வியப்போ வியப்பு ! சிலர் நான் சொன்ன அடையாளங்களை வச்சு வந்து தேடியிருந்தாங்க. நம்மாள் யார் கண்ணும் புலப்படலை பாருங்களேன் !
இந்த கேவ்ராக் குன்றைக்கூட..... ஆதிகாலத்து மவொரியர்கள், செத்துப்போன திமிங்கிலம் னு நினைச்சாங்களாம். இதுக்கு ஒரு மவொரி கதை கூட இருக்கு !
Tūrakipō என்ற மவொரித் தலைவர், பக்கத்துப்பேட்டை தலைவருடைய மகளைக் கல்யாணம் கட்ட ஆசைபட்டார். அந்தப் பொண்ணு, மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொன்னதும் தலைக்குக் கோபம் வந்து பொண்ணைச் சபிச்சுட்டார். பொண்ணோட அப்பா ச்சும்மா இருப்பாரா? அவர் கை என்ன மாங்காய் பறிச்சுக்கிட்டா இருந்துருக்கும்?
விடுவிடுன்னு கடலை நோக்கி நிக்கும் மலைமேலே ஏறுனார். ரொம்ப சக்தி வாய்ந்த karakia (மந்திரம்/ப்ரேயர்) ஒன்னை ஜெபிச்சார். கடல் அரசன் திமிங்கிலம் கரைக்கு வந்து சேர்ந்து ஒதுங்குச்சு. தரை தட்டுன கப்பலுக்கும் திமிங்கிலத்துக்கும் ஒரே கதிதானே?
விஷயம் தெரியாத Tūrakipō வும் அவர் குடிகளும் திமிங்கிலத்தை வெட்டி, ஆக்கித் தின்னாங்க. மந்திரத் திமிங்கிலமுல்லே..... எல்லாருக்கும் மயக்கம் வந்துச்சு. மயங்கி விழுந்த யாரும் பிறகு எந்திரிக்கவே இல்லை.
இந்தத் திமிங்கிலத்தின் மிச்சம்மீதிதான் இப்போ இங்கே கிடக்கும் கேவ்ராக்.
விடுவிடுன்னு கடலை நோக்கி நிக்கும் மலைமேலே ஏறுனார். ரொம்ப சக்தி வாய்ந்த karakia (மந்திரம்/ப்ரேயர்) ஒன்னை ஜெபிச்சார். கடல் அரசன் திமிங்கிலம் கரைக்கு வந்து சேர்ந்து ஒதுங்குச்சு. தரை தட்டுன கப்பலுக்கும் திமிங்கிலத்துக்கும் ஒரே கதிதானே?
விஷயம் தெரியாத Tūrakipō வும் அவர் குடிகளும் திமிங்கிலத்தை வெட்டி, ஆக்கித் தின்னாங்க. மந்திரத் திமிங்கிலமுல்லே..... எல்லாருக்கும் மயக்கம் வந்துச்சு. மயங்கி விழுந்த யாரும் பிறகு எந்திரிக்கவே இல்லை.
இந்தத் திமிங்கிலத்தின் மிச்சம்மீதிதான் இப்போ இங்கே கிடக்கும் கேவ்ராக்.
அப்ப உண்மையில் இது என்னவாம் ?
எப்பவோ இருந்து அணைஞ்சு அழிஞ்சுபோன எரிமலையின் மிச்சம்தான்.
அப்புறம் வெள்ளையர் இந்தப் பகுதியை சர்வே பண்ணும்போதுதான்... இந்த குன்றின் உச்சியில் போற வர்ற படகுகளுக்கு எச்சரிக்கையா ஒரு கொடிமரம் நட்டுவச்சுருக்காங்க. போட் ஆட்களுக்கு ரேடியோ சிக்னல் இதுவழியா அனுப்புறாங்கன்னு கேள்விப்பட்டேன். அது இன்னும் இருக்கு !
திரும்பி வந்து லஞ்ச் ஆச்சு. அவரவருக்கு தேவையானபடி பேல் ஐட்டங்களைக் கலந்துக்கலாம். அன்றைக்கு நம்ம யோகா குடும்ப அங்கம் ஒருவரின் பொறந்தநாள் என்பதால் கேக் வெட்டிக் கொண்டாடினோம்.
ஃபலூடா செஷன் ஆரம்பமாச்சு. ஒன்னையும் விட்டுவைக்கலை.
நாம் இருந்த இடத்தையொட்டியே பிள்ளைகளுக்கான விளையாட்டுப் பகுதி. பகல் மூணுவரை கொட்டமடிச்சுட்டு மூட்டையைக் கட்டிக் கிளம்பியாச்சு !
1 comments:
சம்னர் பீச்சும் பிள்ளையாரும் அழகு.
சுற்றுலாக்களும் விருந்துகளும் மனதுக்கு மகிழ்ச்சி.
Post a Comment