Monday, August 14, 2023

புள்ளி வச்சது யாரு ?????

நம்மூர் ஆஸ்பத்ரி,  மகளையும் பேரக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பும் நாள் யுகாதி பண்டிகையாக  அமைஞ்சதால் ரொம்பச் சின்ன அளவில் பண்டிகையைக் கொண்டாடினோம். நம்ம ஜன்னு  மட்டும் புதுப்புடவையோடு ஜொலித்தாள். 


ஸ்ரீராமநவமிக்கான  ஒன்பது நாள் விழா நம்ம சநாதன தர்ம சபாவில்  ஆரம்பிச்சாங்க.  வழக்கம்போல் பூஜை, ஹவன் எல்லாமும் உண்டு ! தினமும் மாலை ஏழரை முதல் இரவு பத்துவரை நிகழ்ச்சி.  எல்லா நாட்களும் போக நமக்கியலாது என்றாலும்  கூடியவரை போனோம். இந்த ஒன்பது நாட்களுக்கும், சநாதன் தர்ம  சபாவே பிரஸாதம், மஹா பிரஸாதம்னு  ஏற்பாடு செஞ்சுருது என்பதால் வேலை நாட்கள் என்றாலும் கூட  நிம்மதியாப் பூஜையில் கலந்துக்கப் பக்தர்களுக்கு முடியும்.

இதுக்கிடையில்  புள்ளையார் கோவில்கள், ஹரே க்ருஷ்ணா கோவில்னு  நேரம் கிடைக்கும்போது கோவில் தரிசனங்கள் கிடைப்பதில் குறைவொன்றுமில்லை.

சுமார் மூணு மாசத்துக்கொருமுறை நம்ம தமிழ்மன்ற நூலக நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டுதான் இருக்கு.  ச்சும்மாப்போய், ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களைத் திருப்பிக்கொடுத்துட்டு , வேற புத்தகங்களை இரவல் பெற்றுவரும் நிகழ்ச்சியாக இல்லாமல்  நம்ம மக்களுக்குத் தெரிய வேண்டிய சிலபல சமாச்சாரங்களையும்  கோடிகாட்டும்விதமாகவே  நிகழ்ச்சிகளை அமைப்பது விசேஷம் !




இந்தமுறை இணையவழித் தமிழ்க்கல்வி  இணை இயக்குநருடன்  ஒரு ஆன்லைன் சந்திப்பு ! இந்தக் கோவிட் காலத்தில் ஸூம் மீட்டிங் வைப்பது ரொம்பவே பிரபலம்  ஆகிப்போச்சுதானே !

முதல் முதலா இங்கே வீடு வாங்கிக்கணுமுன்னா  என்னென்ன  வழிகள், முறைகள் இருக்கு என்பதை ரியல் எஸ்டேட் நண்பர் ஒருவரும்,  உயில் எழுதி வைப்பது போன்ற முக்கியமான சமாச்சாரங்கள் பற்றி வக்கீலம்மா (நம்ம தோழிதான் ) ஒருவரும்,  வீடுகளுக்குக் காப்பீடு எடுப்பது பற்றி இன்ஷூரன்ஸ் கம்பெனி மேலாளர் ஒருவரும்   மேடையில் பேசுனாங்க. 


உள்ளூர் தமிழர்கள், நம் இளைய தலைமுறைக்கு நம் மொழியையும், பண்பாடுகளையும் எப்படிக் கடத்தப்போகிறோம் என்பதைப் பற்றி, நம் நண்பர்  செல்வகணபதி நடத்திய கலந்துரையாடல் என்று ஒரு இனிய மாலைப் பொழுது !  
பண்பாடுகளை, கலை கலாச்சாரத்தைப் பரப்புவது கூட கொஞ்சம் எளிதுன்னாலும், மொழியைக் கடத்துவது கொஞ்சம் அதிகப்படியான சிரமம்தான். பண்டிகைகளையெல்லாம் நாம் செய்யும் பலகாரத்தை வச்சேப் பிள்ளைகள் தெரிஞ்சுக்கறாங்க. என் மகள் கூட  Oh that Kolukattai thingee day ன்னுதான் புள்ளையார் சதுர்த்தியைக் கண்டுபிடிக்கிறாள்.  இதைப்பற்றி ஒரு சமயம்' பண்டிக்கைகாக பலகாரமா, இல்லை பலகாரத்துகாக பண்டிகையா ?' ன்னு ஒரு பதிவு போட்டுருந்தேன்.  ஆச்சு ஒரு 14 வருசம்.

அதுக்கு இளவயதிலேயே நம்மைவிட்டுப் பிரிந்த பதிவுலக நண்பர் 'பித்தனின் வாக்கு'  இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுருந்தார் !

பண்டிக்கைகாக பலகாரமா, இல்லை பலகாரத்துகாக பண்டிகையா என்ற தலைப்பு அருமை, ஆனா பாருங்க நம்ம இந்தியா வித விதமா தட்ப வெப்ப நிலை கொண்டது,ஒவ்வெறு பண்டிகையும் ஒரு பருவகாலத்தின் தொடக்கம் அல்லது முடிவில் தான் வரும். ஆதாலால் நமது முன்னெர்கள் இந்த பருவகாலங்களை எதிர்கொள்ள நமக்கு பண்டிகையும் அதுல இருந்து நம்ம உணவுமுறை மாற்றங்களையும் போதிக்கறாங்க. இப்ப முதல வர்ர சித்திரைக்கனில வெய்யில் காலம் அதனால கனிவகை, அப்புறம் வர்ர கோகுலாஸ்டமில வெண்ணெய் மற்றும் கடலை மாவில் செய்த பலகாரம் உடல் வலு மற்றும் உடல் முறுக்கை தரும் ஏன்ன அது இளவேனிற்க்காலம், அப்புறம் வர்ர பிள்ளையார் சதுர்த்தி கொளுக்கட்டை நம்மை குளிர்காலத்திற்கு இட்டு செல்லும்.

வேனிற்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கும்முன் விலங்குள் கூட தமது உடம்பில் புரொட்டீன் அளவை அதிகரிக்குமாம் ஏன்ன அது குளிர்காலத்தை சமாளிக்க, இதுதான் நவராத்திரி சுண்டல்.இதுக்கு பின்னால குளிர்காலத்துல உடல் சூட்டை சரிசெய்ய கார்த்திகை பண்டிகை வரும் அதுல பொறி,அப்பம்,எள்ளு போன்றவை உடல் சூட்டையும் நமது ஆரொக்கியத்தையும் பாதுகாக்கும், இதில் இருந்து தெரிவது பண்டியகையும் பலகாரமும் நமது உடல் மன ஆரொக்கியத்துக்கு அவசியம். சுய்யம்,சித்துருண்டை,அவல்,முறுக்கு,தெங்குழல் படத்துக்கு பதிலா தமிழினி பலகாரமா, பரவாயில்லை உடல்னிலை சரியில்லை என்பதால் ஏற்றுக்கொள்கிறம். பதிவு இட்டமைக்கு, நன்றி டீச்சர்.
9/22/2009 2:33 PM
குழந்தைகளுக்கான புத்தகங்கள் எல்லாம் அட்டகாசமான தலைப்பில் இருக்கு !  நம்ம காலத்தில் இப்படி இல்லையே......ன்னு கொஞ்சம் ஆதங்கம்தான் :-)




திருக்குறள் நூல் பதிப்பு ஒன்னு 1812 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியில் இருந்து மின்பதிப்பாக மாற்றிய திருக்குறளின் மீள் பதிப்பு 'இப்போது ' என் கைவசம் !!!  இரவல் வாங்கி வந்தேன்.  புள்ளி இல்லாத சொற்கள் !  புள்ளிகள் எல்லாம் எங்கே போச்சு ? 

நூலகத்தில் கடன் வாங்கிய புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்துட்டு, வேற புத்தகங்களை கடன் வாங்கிக்கப் போனால் எங்கூரில்  விருந்து சாப்பாடு போடறதுதான் வழக்கம் !!!!

செவிக்கு மட்டுமல்லாமல் வயிற்றுக்கும் உணவு ஈந்தாள் தமிழன்னை!
நூலக நிர்வாகிகளுடன்  இதைப்பற்றிப் பேசி, இப்படி விருந்து வைக்கிறதுக்குப் பதிலாக அந்தக் காசுலே புதுப்புத்தகங்கள் வாங்கலாமேன்னால்......   இது சம்பந்தமான  ஃபண்டிங் கொடுக்கும்போது,  உணவுக்காகன்னே சொல்லிக் கொடுக்கப்படுதாம் !    

ஸ்ரீராமநவமி பண்டிகைதினம் வழக்கம்போல் வீட்டில்  காலை பூஜையை முடித்தோம். பண்டிகைகளில் எனக்கு ரொம்பவே பிடித்தமானது இந்த ஸ்ரீராமநவமிதான்.  நைவேத்யம் செய்ய மெனெக்கெடவே வேணாம்.நீர் மோர், பானகம், வடபப்பு !  ரொம்பவே சிம்பிள்!  அயோத்தியில் ராமன் பிறந்தப்ப எவ்வளவு கோலாகலமான விழாவும் விருந்துமாகவும் இருந்துருக்கும், இல்லே ? நாம்தான் தெற்கே இப்படிக் கொண்டாடறோமோ ?
இங்கே இருந்து சிங்கைக்குத் திரும்பிப்போன தோழி, எதிர்பாராத விதமாக அன்றைக்கு விஸிட் வந்துருந்தாங்க.  இவுங்கதான் அந்தக் காலத்தில் நமக்குப் பூஜை புனஸ்காரமெல்லாம் செஞ்சு வைக்கிற பண்டிட் ! இப்ப நாம் இருக்கும் இந்த வீட்டுக்கு, இவுங்கதான் பூமிபூஜை செஞ்சுவைச்சாங்க.  அவுங்களுக்குப் ப்ரஸாதம் கொடுத்துட்டுப் பழங்கதைகள் பேசிக்கிட்டு இருந்தப்போ,  இங்கிருக்கும் நம்ம மலேசியத்தோழி, அவுங்க வீட்டுக்கு மலேசியாவிலிருந்து  வந்துருக்கும்  அக்காவையும், அக்காவின் மகள்களையும் கூட்டிவந்தாங்க.  நம்ம குடும்ப நண்பர்கள்தான்.  எதிர்பாராத விஸிட் !  
ஸ்ரீராமனே தனக்கானவர்களை வரவழைச்சுட்டான்.  இதோ பானகம்,  நீர்மோர் & வடபப்பு !


வந்த விருந்தினர்கள்  (மலேசியா )மறுநாளே ஊர் திரும்புவதால் கொஞ்சம் ஷாப்பிங் செய்யணுமுன்னு கிளம்பிட்டாங்க. சிங்கைத் தோழியுடன் கூட நமக்கு  லஞ்ச் . இட்லி, சட்னி & சாம்பார் !
அப்புறம்தான் தெரிஞ்சது.... அன்று உலக இட்லி தினமாம் !!!!!

அன்று மாலை ஸ்ரீராமநவமி உற்சவத்தின் கடைசி நாள்.... நம்ம சநாதன தர்ம சபாவில் ரொம்ப சிறப்பாக நடந்தது ! குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டி மகிழ்ந்தோம் !



நம்ம வீட்டுக்குழந்தையையும் தொட்டிலில் இடும் வைபவம் ஒன்னு இருக்குல்லே ? பார்க்கலாம், என்ன செய்ய முடியுமுன்னு !!!!

நம்ம சநாதன் தர்ம சபாவில்  நிதி வசூலுக்காக  டிக்கெட் விற்பது வழக்கம்.  ஒரு  டிக்கெட் ஒரு டாலர்தான்.  எல்லோரும்  அஞ்சு பத்துன்னு வாங்கிருவோம். இதற்கான பரிசுகளையும்  நம் மக்களில் சிலர் ஸ்பான்ஸார் செஞ்சுருவாங்க. குலுக்கல் முறையில்  மூணு, இல்லே அஞ்சு பரிசுகள் ! இந்த ஒன்பது நாட்களில் விற்ற டிக்கெட்டுகளை மடிச்சு ஒரு பாத்திரத்தில் போட்டுக் குலுக்கி யாராவது சின்னப்பிள்ளைகளை விட்டு எடுக்கச் சொல்வோம்.


இந்த முறை ஒரு மளிகைசாமான்கள்  உள்ள பாக்ஸ் நமக்குக் கிடைச்சது.  அதை சபாவிற்கே கொடுத்து ஏலம் விட்டதில் ஒரு நல்ல தொகை சபாவிற்குக் கிடைச்சது !!!  ஏலம் எடுத்த தோழிக்கு நன்றி சொன்னோம் !

இப்படித்தான்  நம்  சத்சங்கத்துக்குச் சிறுகச் சிறுகப் பணம் சேர்க்கவேண்டி இருக்கு !   நல்லதுதானே !!!

2 comments:

said...

சிறப்பான நிகழ்வுகள். மறைந்த பித்தனின் வாக்கு அவர்களின் பின்னூட்டம் அருமை.

said...

விழாக்கள், விருந்துகள், நூலகம் என நல்ல நிகழ்வுகள்.
பித்தனின் வாக்கு அவர்களின் பின்னூட்டத்தையும் பதிவிட்டது சிறப்பு.