Friday, August 04, 2023

பாம்பு ஊருக்குள்ளே போய் வந்துருக்கு !!!!

கோடையும் முடிஞ்சு ஆட்டமும் வந்துருச்சு. அக்டோபரில் நாம் இந்தியா போயிட்டதால்.... தோட்டத்தில் புதுசா ஏதும் செடிகளோ, இல்லை விதைகளோ நட்டு வைக்கலை.   போனமாசம்தான் ஏதோ தோணுச்சுன்னு  கொஞ்சம் கீரை விதைகளைத் தூவி விட்டேன்.


பச்சையும் சிவப்புமாத் தளதளன்னு முளைச்சு வந்துருக்கு.  கொஞ்சம் எடுத்துச் சுத்தம் செஞ்சு ஃப்ரீஸருக்கு அனுப்பிட்டோமுன்னால்..... விண்ட்டர் சமயத்துலே  சமையலுக்காச்சு.  இதே போலத்தான்  வண்ணவண்ணக்குடை மிளகாய்கள்  கிடைக்கும்போதும்  சின்னத்துண்டுகளாக நறுக்கிச் சின்னச்சின்ன ஃப்ரீஸர் பைகளில் போட்டு ஃப்ரீஸருக்குள்  வச்சுடலாம்.  ஃப்ரைடு ரைஸ், ரவா உப்புமா , கிச்சடி, கறிகள்ன்னு செய்யும்போது கொஞ்சம் சேர்த்தால்  கலர்ஃபுல்லா இருக்கும்.  காய்க்குக் காயுமாச்சு.     


நம்ம திராக்ஷைத்தோட்டத்தில்  பழங்கள் பழுக்கத்தொடங்கி, வீணாப் போய்க்கிட்டு இருக்கேன்னு, கொஞ்சம் பறிச்சு வந்து  ஜூஸ் செஞ்சு வச்சேன்.  இப்படி  தினப்படிசமையல் தவிர மேல் வேலைகளா பலதும் நடந்துக்கிட்டு இருக்கு நம்ம அடுக்களையில்.  TTK  ( Tulsi's Test Kitchen ) புது முயற்சிகளுக்குப் பெயரும் வச்சாச் :-)





Ashraya Festival  அழைப்பு,  நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலில் இருந்து வந்துருக்கு.  போன சனிக்கிழமை போனபோதே  நம்ம கிஷோர் பண்டிட் விவரம் எல்லாம் சொல்லிட்டார்.  மூலவர்களுக்கு அபிஷேகம் உண்டாம் !  கட்டாயம் போகத்தான் வேணும். 

இஸ்கானின் தீவிர பக்தர்களில்,   ஒரு குருவிடம் போய்  எல்லா  முக்கிய பாடங்களையும் விதிகளையும் கத்துக்கிட்டவங்களுக்கு குரு தீக்ஷை கொடுக்கும் நாள்னு சொல்லலாம்.  நம்ம ஊரில் இது கோவில் பொறந்தநாளாகவும் கொண்டாடறோம்.  2011  நிலநடுக்கத்தில் கோவில் இடிஞ்சு விழுந்துருச்சுன்னு சொல்லி இருந்தேனில்லையா?   அப்புறம் அதே இடத்தில் புதுக்கோவில் கட்டி ஆரம்ப விழா நடத்தியது 2017 மார்ச் முதல் வாரத்தில்தான். பூமி பூஜை தொடங்கி  கோவில் முழுசாக் கட்டி முடிக்கும்வரை இருந்தவள், ஆரம்ப விழா சமயம்,  அஸ்ட்ராலியாவுக்குப் போயிருந்தேன். ப்ச்.... விளையாட்டுப்போல ஆறு வருஷம் ஓடிப்போச்சு.

இந்த  வருஷம் சனி & ஞாயிறுன்னு ரெண்டு நாள் விழா!  முதல்நாள்   காலை 11 மணிக்கு  ஹரிநாமம் பஜன், ஊருக்குள்ளே ஊர்வலமா போறாங்க. மூணு மணி நேர நிகழ்ச்சி என்றதால், நம்மவருக்கு  இருக்கும்  தலைசுற்றல் காரணம் நாம் போகலை.  சாயங்காலம் ஆறு மணி உபந்யாசம் கேட்கப் போயிருந்தோம்.  எப்படியும் சனிக்கிழமை நமக்குக் கோவில் விஸிட் உண்டுதானே !  கொஞ்சம் சீக்கிரமாப்போனால் ஆச்சு.  கோவில் தோட்டத்தில் ஆதிசேஷன் ! ஆஹா.....  ஊர்வலத்தில் போயிட்டு வந்துருக்கார் ! (ப்ச்... நாம்தான் கோட்டை விட்டுட்டோம்... )






கோவிலின் பழைய தலைவர், கோவில் வரலாற்றைச் சொன்னார். கூடவே  ஸ்லைடு ஷோ  !  நாம் இங்கே  வந்தப்பதான்   ஒரு  மாடி வீடு வாங்கி அங்கே கோவிலை ஆரம்பிச்சுருந்தாங்க.  மாடியில் கோவில் ப்ரம்மச்சாரிகள் தங்கவும், தரைத்தளத்தின்  ஹால் கோவிலாகவும் இருந்தது. 



ஆரத்தி ஆனதும், கோவிலே ப்ரஸாதமா, டின்னர் கொடுத்துருச்சு.  டைனிங் ஹாலில் சின்னதா ஒரு ஆர்ட் எக்ஸிபிஷன் வச்சுருந்தாங்க.  ஓவியங்கள் விலைக்கு வாங்கிக்கலாம். கோவிலுக்கான நிதிவசூல் !   வெங்கலச்சிலை  வார்ப்புக்கான   மெழுகுச்சிலை செஞ்சுருக்கார் பக்தர் ஒருவர்.  நல்ல கூட்டம்தான். பொதுவா சனிக்கிழமைகளில் நாங்க ரெண்டுபேர் மட்டும்தான் இருப்போம்.
மறுநாள்தான்   மூலவர் அபிஷேகம். கிஷோர்ஜி நினைவூட்டினார். மூணே முக்காலுக்கே கோவிலுக்குப் போயிட்டோம்.

 எப்போதும் அலங்கார ரூபனா பார்த்த ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு & ஸ்ரீ நித்யானந்தா சிலைகளை  (Sri Sri Nitai  Guarachandra,)  அபிஷேகத்துக்குத் தயாரா நின்னுருக்கும் சமயம் பார்ப்பது இதுவே நமக்கு முதல்முறை !  கண்குளிர மஹா அபிஷேகம்  தரிசனம் ஆச்சு!   மனம் நிறைஞ்சது உண்மை !

அபிஷேகம் முடிஞ்சு, அலங்காரத்திற்குத்  திரை போட்டதும் நாம் கிளம்பி வந்துட்டோம்.   

ஃபேஸ்புக்கில் சின்னச்சின்ன வீடியோ க்ளிப்ஸ்  ஆறு போட்டுருந்தேன்.  அதுலே ரெண்டு சுட்டிகள் கீழே !   

https://www.facebook.com/1309695969/videos/5745640995561858/

https://www.facebook.com/1309695969/videos/640481117841144/

நம்ம வீட்டில் அருகம்புல் நல்லாவே வளர்ந்துருச்சு. கொஞ்சம் பறிச்சு நம்ம புள்ளையார் கையில் கொடுத்தேன் ! இன்றைக்கு ஸ்பெஷல் ட்ரீட் அவருக்கே  ! 


Guara Poornimaa கொண்டாட்டம் நம்ம ஹரே க்ருஷ்ணாவில்.  நம்மூர் கோவிலில் கொண்டாட்டம்,  கேக் இல்லாமல் நடக்காது !  முட்டையில்லாத கேக்தான்.  ரொம்ப அருமையாச் செய்வாங்க நம்ம தோழி. இவுங்களும்  இஸ்கான் பக்தைதான். மகளின் கல்யாண ரிஸப்ஷனுக்குக்கூட  இவுங்கதான் கேக் செஞ்சு கொடுத்தாங்க.  விருந்தும் கேக்குமா  அமர்க்களம்தான் போங்க !   





இந்த  வாரம்  மூணுமுறை கோவிலுக்கு வரவச்சுட்டான் கிருஷ்ணன்!  நல்லா இருடா பெருமாளே !


9 comments:

said...

பாம்பு ஊருக்குள்ளே போய் வந்திருக்குன்னதும் ஏதோ உங்க ஊர் ப்ரத்யேகப் பாம்பு போலன்னு நினைச்சேன்! ஆதிசேஷன் போய்ட்டு வந்ததைசொல்லிருக்கீங்கன்னு பதிவுல புரிஞ்சுது.

திராட்சை மனதைக்கொள்ளை கொள்ளுது. அது போல குடை மிளகாய்கள்....கீரை செம. அழகா கொத்தா வளர்ந்திருக்கே...திருஷ்டி சுத்தி போட்டுருங்க!! துளசிக்கா

நிகழ்வுகள் எல்லாமே அருமை..படங்களும். கேக் படத்தைக் காணமே

கீதா

said...

கேக் பார்த்துட்டேன் கலர்ஃபுல்லா அடுக்கடுக்கா செஞ்ச்ருக்கான இல்லையா செமையா இருக்கு.

கீதா

said...

திராட்சை என் மனதைக் கவர்ந்தது.

இப்படித்தான் வீடு கட்டறேன்னுட்டு அழகிய ஆப்பிள் மரங்களையும் தூக்கிட்டீங்க. இப்போ திராட்சையை உபயோகிக்கலைங்கறீங்க

said...

கட்டுரை நிகழ்காலத்துக்கு வந்து விட்டதா?  இந்த போன மாதம் என்பது ஜூலைதானே?  கீரைகளையும், குடைமிளகாயையும் இப்படி பிரீஸ் செய்து வைத்தால் எத்தனை நாட்களுக்கு வரும்?  இங்கு இந்தியாவில் அப்படி செய்ய முடியுமா?

said...

வாங்க கீதா,

பாம்புகளே இல்லாத நாட்டுக்கு வந்துட்டதால்..... ஆயிரம் தலைகளைக் காமிக்காமல்
ஒரே ஒரு தலையோடு அடக்கி வாசிச்சுட்டான் 'ஆதி சேஷன் '!

கேக்கைக் கண்டடைந்தது மகிழ்ச்சி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

லேசாக் கொஞ்சமா ஒரு புளிப்பு இருக்கு. நல்லாப் பழுத்துட்டால் புளிப்பு இல்லை. ஆனால் பறவைகள் விட்டு வைக்கறதில்லையே..... நாமும் ரெண்டே பேர். அதான் போகட்டுமுன்னு பறவைகளுக்கு விட்டுக்கொடுத்தேன்.

said...

வாங்க ஸ்ரீராம்,

அப்படியெல்லாம் சட்னு நிகழ்காலத்துக்கு வந்துறமுடியுமா ? ஹாஹா....
அந்தப் போனமாசம் என்பது ஜனவரி.... தை பொறந்ததும் தூவி விட்டேன் !

இப்படி ஃப்ரீஸ் செஞ்சு வச்சால் சுமார் 6 மாசத்துக்கு வரும். விண்ட்டர் முடிஞ்சாலும், ஃப்ரெஷ் காய்கறி விற்பனைக்கு வருவது ஸ்ப்ரிங் கடைசியில்தான் ( (நவம்பர்) அதுவரை நமக்கு நம்ம ஃப்ரீஸர்தான் துணை.
இந்தியாவிலும் செய்யலாம். ஆனால் தடை இல்லாத மின்சாரம் வேணும். இல்லைன்னா ஃப்ரீஸர் சாமான்கள்..... டீஃப்ராஸ்ட் ஆகிக் கெட்டுத்தான் போகும். சண்டிகர் வீட்டில் இப்படி அடிக்கடிக் கெட்டுப்போய் தூக்கிப்போட்டேன்.

said...

வீட்டு அறுவடை செமையாக இருக்கிறது மனதுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
எங்கள் பால்கனி தொட்டிகளில் கீரை, தக்காளி, மிளகாய் உள்ளது.

said...

வாங்க மாதேவி,

கைக்கெட்டும் தூரத்தில் காய்கறிகள் கிடைப்பது வரம் இல்லையோ !