Wednesday, August 16, 2023

சம்ப்ரதாயம்.............னு ஒன்னு இருக்குல்லெ....

வெளிநாட்டில் வாழ்ந்தால் என்ன ? வெள்ளைக்கார சம்பந்திகள் அமைஞ்சால் என்ன ? நாம் நாமாக இருக்கவேணும்தானே !  
நம்முடைய சாஸ்த்திர சம்ப்ரதாயங்களை சின்ன அளவிலாவது கடைப்பிடிக்கும்போது மனசுக்கு மகிழ்ச்சியாகவும், குற்ற உணர்வு இல்லாமலும் இருப்பதே பெரிய  விஷயமா எனக்குப் படுது.
வீட்டில் முதல்முதலாகப் பேரக்குழந்தை வரவு.

குறைஞ்சபக்ஷம் தொட்டில் போட்டு நாமகரணம் செஞ்சுக்கணும். நம்ம ஊரைப்போல் மகளின் பிரஸவம் தாய் வீட்டினர் பொறுப்பு  இல்லை .  ஆரம்பம் முதலே தனிக்குடித்தனம் என்பதால் அவரவர் வசதிதான்.

வளைக்காப்பு, சீமந்தம் எல்லாமும் கூட  வீட்டுவழக்கத்தின் படி  சின்ன அளவில் வீடுவரையில் செய்தோம்.  சம்பந்தி வீட்டினர் வருகை மட்டும்தான்,
இப்போ நல்லபடி குழந்தை பிறந்துட்டான்.  பிறந்த நக்ஷத்திரம் திருவோணம் . அன்றைக்கு ஏகாதசி வேற !  போதாக்குறைக்கு என் சனிக்கிழமை !  போதாதா என்ன.... பரம திருப்தி.

தொட்டில்  அமைக்க என்னென்ன வேணுமுன்னு பார்த்தப்ப, நம்மூர்த் தொட்டில் வகை இங்கே  இல்லையேன்னு ஒரு ஏமாத்தம் இருந்தது உண்மை. தூளிதான் குடும்ப வழக்கம்.   கல்யாண சமயத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சிக்குப் பருத்திப்புடவைதான்  கட்டுவோம். 

 முஹூர்த்தநாளுக்கு முன் தினம், பழுத்த சுமங்கலிகள் ஆரம்பிச்சு வைக்கும்  புதுமஞ்சள் இடிக்கும்  நிகழ்வு முடிஞ்சதும், அந்த மஞ்சள் பொடி கலக்கிய தண்ணீரில் வெள்ளைப்புடவையை,  நனைத்து நிழலில் உலர்த்தி எடுத்த புடவைதான் தாலிகெட்டுக்கு !(இப்பெல்லாம்  மஞ்சள் நிறக் காட்டன் புடவைகளையே வாங்கிக்கறாங்க.)

தாலிகெட்டு முடிஞ்சதும், பட்டுப்புடவைக்கு மாறிடுவாள் மணப்பெண்.  அந்தப் புடவையைத்தான் எடுத்துவச்சு, முதல் குழந்தைக்குத் தூளி கட்டி, தொட்டில் போடுவாங்க. மகளுடைய திருமணம், நம்ம வழக்கப்படி நடக்காததால்  நோ மஞ்சப்புடவை.

அதுக்காக விட்டுடமுடியுதா ?  இந்த விழா முழுக்க முழுக்கத் தாய் வீட்டுக்கானது என்பதால் தாயின் ஒரு புடவையை எடுத்து வச்சேன்.
உக்கார்ந்து யோசிச்சதில்   தொட்டிலுக்கு ஊஞ்சல் கொக்கியை பயன்படுத்தலாமேன்னு தோணுச்சு. உடனே புடவையை மாட்டி ட்ரயல் பார்த்தோம். ஐடியா ஒர்க்கவுட் ஆகுது !
இதை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தணும்.  இருக்கட்டும் யோசிக்கலாமுன்னு....  தேடினதில் ஒரு பிரம்புக்கூடை கிடைச்சது.  கைப்பிடி நமக்கு வேணாம்.  எடுத்தால்  ஆச்சு, இல்லே ?
பிரம்பு உறுத்தாமல் இருக்க சின்னச் சின்ன குஷனை மெத்தை போல் நிரப்பிட்டு,  என்னோட பட்டு துப்பட்டாவால் பொதிஞ்சு வச்சேன். சூப்பர் ! இதையே தொட்டிலுக்குள் வச்சால் என்ன ?  

தாங்குமா ? யானையை வச்சுப் பார்க்கலாம். ஆஹா....
கொண்டு வா நம்மூட்டு கிச்சுப் பாப்பாவை !
பேஷ் பேஷ் திவ்யமா இருக்கு. எல்லாத்தையும் கழட்டிப் பத்திரமா எடுத்துவச்சோம்.

விழாவுக்கு முதல்நாள் கொஞ்சம் அலங்காரம் செஞ்சால் ஆச்சு
இனி விருந்தினர் யார் யார்னு முடிவு செய்யணும்.  குழந்தைக்கு தடுப்பூசிகள் எதுவுமே இன்னும் போடாததால் எங்களுக்கு யோசனையாக இருந்தது.  இங்கே ஆறு வாரம் ஆனதும்தான் முதல் தடுப்பூசியே. 

குழந்தையைத் தொட்டுத் தூக்குபவர்கள் கட்டாயம்  Whooping Cough Vaccination போட்டுக்கணும் என்றதால்  குழந்தை பிறக்க ஒன்னரை மாசம் இருக்கும்போதே நாங்கள் ஊசி  போட்டுக்கிட்டோம்.  இதை நம் நண்பர்களும்  மற்றவர்களும்  கடைப்பிடிக்கணும்னு சொல்ல முடியாதில்லையா ?  

அதனால் வீட்டுவரை விழா என்ற முடிவு.  சம்பந்திகளும், மாப்பிள்ளையின் தம்பி குடும்பமும், வீட்டுப்பெரியவரான  தாத்தாவும்   மட்டும் வரவேணும்.  மாப்பிள்ளையின் தம்பிக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. நம்ம  மாப்பிள்ளைதான்,  நம்ம மகளுக்காகக் காத்திருந்தார் போல ! 

பேசாம ஒரு பாக்கெட் மாஸ்க் வாங்கி வச்சுருந்து ,  விருந்தினருக்குக் கொடுத்துப் போட்டுக்கச் சொன்னால் ஆச்சு.  குழந்தையைத் தூக்கி வச்சுக்கறவங்களுக்கு மட்டும்தானே! மகளிடம் இந்த யோசனையைச் சொன்னால்..... கொஞ்சநேரம் அதைப்பற்றி யோசிச்சவள், சரின்னாள்.  மாமியார் வீட்டைப் பகைச்சுக்க முடியாதில்லையா :-)


நம்ம வீட்டு வழக்கம்னு சொன்னால்,   குழந்தை பிறந்த பதினோராம் நாள் சிலபல விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவாங்க. சாஸ்த்ரிகள் வந்து  நடத்திக்கொடுப்பார்.அதில்  தொட்டிலிடும் வைபவமும் பெயர் சூட்டுதலும்  உண்டு.   இங்கே அதெல்லாம்  வசதிப்படாது, வேண்டாம் னு விட்டுட்டோம்.  கிருஷ்ணார்ப்பணமுன்னு எது முடியுமோ அதை நமக்குத் தெரிஞ்சவரை செஞ்சால் போதும்தானே ? 

குட் ஃப்ரைடே அன்று  இங்கே   அரசு விடுமுறை. விடுமுறை என்பதால்  மகளின் மச்சினர் வந்து கலந்துகொள்ள முடியும். அன்றைக்குக் குழந்தைக்கு மூணு வாரம் வயசு. பதினோராம் நாளுக்குப் பதிலா இருபத்தியோராம் நாள் . எல்லாம் பொருந்திவருதுன்னு விழாவை அன்றைக்கு வச்சுக்கலாமுன்னு முடிவு செஞ்சாச்.

அடுத்து யோசிக்க வேண்டியது.... என்ன மாதிரி சாப்பாட்டு ஐட்டங்களுக்கான மெனு. நம்ம நண்பர்  செந்தில்,  ஒரு கேட்டரிங் பிஸினஸ் நடத்தறார். நம்ம கோவில்களுக்கும், தமிழ்மன்ற லைப்ரரி கூட்டத்துக்கும், இன்னும் சிலபல விழாக்களுக்கும் இவர் சமையல்தான். போன வருஷ நவராத்ரி நாள் ஒன்றில் நம்ம யோகா குழுவினரை அழைச்சப்ப இவர்தான் கேட்டரிங் செஞ்சார். இந்தியாவில் இருந்த காலத்தில்  ஹைதராபாத் தாஜ் ஹொட்டேலில் செஃப்.  இப்போ இங்கே ஒரு ரிட்டயர்மென்ட்  வில்லேஜில் செஃப்பாக  இருக்கார்.  முதியோர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் என்ன மாதிரி சமையல் செய்யறார், எதை விரும்பி சாப்பிடறாங்கன்னு  கேட்டு  அவர் சொன்னபடி மெனு ஒன்னு தயார் செஞ்சோம்.

என் கவலை எல்லாம், சம்பந்தியம்மாவின் தகப்பனார்க்கு எப்படி ஆபத்தில்லாத  உணவு வகைகள் கொடுப்பது பற்றியே !  96 வயதானவர்.   இங்கே ஒரு அப்பார்ட்மென்ட் ஸ்டைல் ஏஜ்டு ஹோமில் இருக்கார். அதென்ன சொல்றாங்க..... எலைட்ன்னு..... அப்படி  ஒரு இடம் !

போன வருஷம் வரை அவரே ட்ரைவ் செஞ்சு  முக்கால்மணி தூரத்தில் இருக்கும் அவர் மகள் (நம்ம சம்பந்தியம்மா )வீட்டுக்கெல்லாம் போனவர்தான். இப்போ காலில் ஒரு பிரச்சனைன்னு ட்ரைவ் பண்ண வேணாமுன்னு மருத்துவர் சொல்லியிருக்காராம்.  விழா நாளில் நம்மவர் போய் அவரைக்கூட்டிவந்தால் ஆச்சு. 

அவருக்கு விழா பற்றிய தகவல்களை ஃபோன் செஞ்சு சொல்லி, நம்மவர் வந்து கூப்பிட்டுப் போகும் ஏற்பாட்டையும்  தெரிவிச்சதும்,   கொஞ்சநாளாக  ஒரு  ப்ரைவேட் டாக்ஸி சர்வீஸ் பயன்படுத்தறதாகவும், அதுலே வந்தால் ஆச்சுன்னும் சொல்லிட்டார். மற்ற  உறவினருக்குத் தகவல் அனுப்பி, வருகையை உறுதிப்படுத்துயாச்சு. 

குழந்தைக்கான புது உடையை ஒரு மாதிரி தைச்சு முடிச்சேன். கொஞ்சம் லூஸாத்தான் இருக்கும். அதை ஒருநாள் போட்டுக்கட்டும்.    அப்புறம் நம்ம வீட்டுக்குழந்தைகளில் யாராவது போட்டுப்பாங்க. ஜன்னு, க்ருஷ், ஐஸூ, வைஷூ, இன்னும் பெயர் வைக்காத  மூவர்னு ஒரு பட்டாளம் இருக்கே !


விழா நாளின்  காலை நம்ம வீட்டுலே வழக்கமான பூஜையை முடிச்சோம். நைவேத்யமா பாதாம் கேஸரி.  குழந்தைக்கு 'நாம்'  வைக்கும் பெயரை அதில் 'எழுதினேன்' :-)  முதல்நாளே கொஞ்சம் தொட்டில் அலங்காரங்களை செஞ்சு முடிச்சதால்  டென்ஷன் இல்லாம இருந்தேன். 

சரியான நேரத்துக்குப் பெரியவர் டாக்ஸியில் வந்திறங்கினார். ஓட்டுநர் இந்த முதியவர்கள் சமாச்சாரங்களுக்கு நல்ல பயிற்சி எடுத்தவர்கள் என்பதால்   வாக்கரைப் பிரிச்சுச்சரியா வச்சுக்கொடுத்துட்டுப் போனார். இந்த வகை சர்வீஸ் செய்யறவங்க  எல்லாம் பெண்களே  என்பது ஒரு கூடுதல் தகவல்.
கொஞ்ச நேரத்தில்  அழைத்த சொந்தங்கள் எல்லாரும் வந்து சேர்ந்தாங்க.  மகளும் மருமகனும் குழந்தையும் வந்தவுடன், முதல்முறை நம்ம வீட்டுக்கு வரும் குழந்தைக்கு ஆரத்தி எடுத்தேன். 

அப்போ கேட்டைத் திறந்துக்கிட்டு நண்பர்கள் ரெண்டுபேர் வந்தாங்க.  ஒருவர் உள்ளூர்க்காரர்.  மற்றவர் இங்கே  சில வருஷங்கள் இருந்துட்டு, அஸ்ட்ராலியா போன சுபாஷ்.  கோவைக்காரர்.  வேற ஏதோ வேலையா நியூஸிக்கு வந்தவர், திரும்பிப்போகுமுன் நம்மை சந்திக்கணுமுன்னு  பொது நண்பரிடம்  சொன்னதால் அவர் கூட்டி வந்துருக்கார். நாம்தான் வீட்டுலே விசேஷமுன்னு நண்பர்கள் யாருக்கும் சொல்லலையே.... அவுங்களும் வீட்டில் நிறையப்பேர் இருப்பதைப் பார்த்துத் திகைச்சுப்போனாங்கதான். அஞ்சு நிமிட் பேசிட்டுக் கிளம்பறாங்க.  மகளுக்குத் தெரிஞ்சவங்கதான். குழந்தை பொறந்துருக்குன்னதும்  'அட ! நம்ம அம்முவுக்கா'ன்னு சந்தோஷப்பட்டாங்க.
இதுலே என்னன்னா....  கேட்டரிங் நண்பரின்  பிள்ளைகள், நாம் கேட்ட மெனுப்படி எல்லாத்தையும் கொண்டுவந்து கிச்சன் மேஜையில் அடுக்கிக்கிட்டு இருக்காங்க.  அவ்ளோ  உணவு இருந்தும்,  சுபாஷுக்கு ஒன்னும்  தரமுடியலையேன்னு  எனக்கு மனசுக்குக் கஷ்டமாப் போச்சு. இன்னொரு பக்கம் சம்பந்திகள் விழா ஆரம்பிக்கும்  நேரமாச்சுன்னு காத்துக்கிட்டு இருக்காங்க.  ப்ச்.... ரொம்ப பேஜாராப் போயிருச்சு..... அந்த இக்கட்டுலேயும் ஒரு படம் க்ளிக் பண்ணிக்கிட்டேன்.
குழந்தையை பூஜையறைக்குக் கொண்டுபோய் தீபம் காமிச்சு பெருமாள்கிட்டே  காட்டி, நமஸ்காரம் பண்ணினோம். அடுத்து குழந்தைக்காக தைச்சு வச்ச புது சுடிதார் போடவச்சுத் தொட்டிலில்  கிடத்தினேன்.

இந்தியப்பயணத்தில் வாங்கிவந்த  ஒரு செட் குழந்தைக்கான ஆபரணங்களைத் தாயைக் கொண்டு அணிவிச்சதும் , எல்லோரும்  ரெண்டு மினிட் தொட்டிலை ஆட்டிவிட்டோம்.


கொள்ளுத்தாத்தா, தான் எழுதிக்கிட்டு வந்த ப்ரேயர்களை வாசிச்சு ஆசி வழங்கினார். கடைசியில் நானும் பெருமாளுக்கு நன்றி சொல்லி, குழந்தையை நல்லபடிக் காப்பாத்திக்கொடுன்னு வேண்டிக்கிட்டேன். (தமிழில்தான் ! )  மகள் நான் என்ன சொன்னேன்னு  முழி பெயர்த்துச் சொன்னாள். சரியான ஃபொட்டோக்ராஃபர் இல்லாததால்  படங்கள், வீடியோ க்ளிப்ஸ் எல்லாம் சொதப்பல்தான்.









பஃபே முறையில்  வேணுங்கறதை எடுத்துக்கிட்டு எல்லோரும் சாப்பிட உக்காந்தாங்க. நம்ம ஸ்பெஷல் ஸ்டைலில் மேங்கோ லஸ்ஸி செஞ்சு கொடுத்தேன். குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. பெரியவங்களுக்கு அதைவிட இன்னும் கூடுதலாகப் பிடிச்சுப்போச்சு !  இவ்வளவு ஈஸியான்னு  கேட்டு மலைச்சுப்போயிட்டாங்க.  இண்டியன் டச்ன்னு இதுவும் மசால்வடையும் முக்கிய ஐட்டங்கள் :-)
டிஸ்ஸர்ட் விளம்புமுன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் நிகழ்ச்சி. நாங்க ஹரி என்றும், குழந்தையின் பெற்றோர் ரோஹான் என்றும் பெயர் வச்சோம்.  பெயர்ன்னதும்  இன்னொரு சமாச்சாரம் நினைவுக்கு வருது. 






மகளின் கல்யாணம் முடிஞ்சதும், ரெஜிஸ்டர் செய்யும்போது,  மகள், தன் கணவனின் ஸர்நேமுக்கு அப்படியே மாறிடாமல், தன்னுடைய மெய்டன் நேமும் இருக்கணுமுன்னு முடிவு செஞ்சுட்டாள். ரெண்டு பேருமாக் கலந்து பேசி  ரெண்டு ஸர்நேமையும் சேர்த்து    இருவருக்கும் ஒரே  குடும்பப்பெயரா இருக்கும்படி  மாத்திக்கிட்டாங்க.  'கோபால் பாய்ட்' அதனால் குழந்தைக்கும் குடும்பப்பெயர் இதே.   இப்போ குழந்தையின் மிடில் நேமுக்கு, நம்மவரின் ஃபர்ஸ்ட் நேம்  அவுங்க வச்சுட்டதால் நம்மவரின் முழுப்பெயர் குழந்தைக்கு !  யார் சொன்னது.... இப்பெல்லாம் தாத்தா/பாட்டி பெயரைக் குழந்தைக்கு வைக்காமல் மாடர்ன் பெயர் வைக்கிறாங்கன்னு !!!!!

நம்மவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமப்போயிருச்சு !!!  தலைமேலே பெரிய ஐஸ்கட்டி ....  ஹாஹா ஹாஹா....   


உறவினர் எல்லோரும் கிளம்பிப்போனபிறகு ,  குழந்தைக்கு திருஷ்டி சுத்தினதும் விழா நிறைவாச்சு. 

PIN குறிப்பு :இந்தப்பதிவில் விளக்கமாச் சொல்லிப்போனது எதுக்குன்னால் தெரிஞ்ச சம்ப்ரதாயத்தை  'எல்லாம் உள்ளது கொண்டு ஓணம்' என்னும் வகையில்,  இவ்வளவாவது கடைப்பிடிக்க முடிஞ்சதே என்பதற்காக.  அது இல்லை, இது இல்லைன்னு மனத்தைத் தளரவிடாமல் நம்மால் முடிஞ்சதைச் செஞ்சுக்கலாம் !  க்ருஷ்ணார்ப்பணம் !







2 comments:

said...

ஸூப்பர்! ஹரி என்னும் ரோஹனுக்கு ஆசிகள்!

said...

இனிய விழா .

குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும் பெருமாள் ஆசீர்வாதத்துடன் எமது ஆசீர்வாதங்களும் .