Monday, August 26, 2019

ராதா ஸமேதா க்ருஷ்ணா............... (பயணத்தொடர், பகுதி 135)

இன்றைக்கு முழுநாளும் ஊர்சுற்றல்தான். காலை இங்கே ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு, முதலில் போனது  பிர்லா மந்திர்.  பெருமாளுக்குக் கோவில் கட்டுவதே இவுங்க உபதொழில் என்பதால் ஒவ்வொரு ஊரிலும் கோவில் கட்டிக்கட்டி  வரவர மெருகேறிப்போயிருக்கு !
பெரிய கோவில்தான்.   உள்ளே படம்  எடுக்க அனுமதி இல்லைன்னு வாசலில் இருந்த செக்யூரிட்டி சொன்னதோடு, நீங்க ரெண்டுபேரும் இப்படி நில்லுங்க..... கோவில் பின்புலத்தில் வர்றமாதிரி நான் படம் எடுக்கறேன்னு வாலண்டியரா வந்து வண்டியில் ஏறினார்.
'வேணாங்க. நம்ம கெமெராவில்  செல்ஃபி எடுக்க வருது'ன்னு மறுக்க வேண்டியதாப் போச்சு.  ஒரு முப்பது படிகள் ஏறிப்போகணும் கோவிலுக்கு.  வெளி முற்றத்தில் இருந்து பரந்து விரிஞ்சு இருக்கும் கோவிலைப் பார்த்துக் கொஞ்சமா வாய்பிளந்து நிற்கத்தான் வேணும்.  நல்ல பெரிய அளவில்தான் விஸ்தாரமாக் கட்டி இருக்காங்க.
1970 இல் ஆரம்பிச்சு, கட்டி முடிக்கவே  இருபத்தியாறு வருஷங்களாகி இருக்கு.  1996 ஆம் வருஷம்தான் கும்பாபிஷேகம் !  ராதாக்ருஷ்ணா மூலவர். பளபளன்னு வெள்ளைப்பளிங்கு கட்டடம்.
இந்த பிர்லா குடும்பத்தினர் இதுவரை ஏகப்பட்டக் கோவில்கள்  கட்டி இருக்காங்க. அதுலே ஒன்னே ஒன்னுதான் தென்னிந்தியாவில். ஹைதராபாத் நகரில் கட்டி இருக்கும் கோவிலுக்கு நம்ம துளசிதளம் உங்களையும் கூட்டிப்போனது நினைவிருக்கோ?

மத்தபடி  மீதிக் கோவில்கள் எல்லாம்  வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில். இவுங்க கட்டுன முதல் கோவில் தில்லி லக்ஷ்மிநாராயணர் கோவில்தான். 1939 இல்  கட்டின  இந்தக் கோவிலைத் திறந்து வைத்தது யாருன்னு தெரியுமோ?  நம்ம மஹாத்மா காந்தி !   அங்கேயும் நாம் போயிருக்கோம், தில்லிப் பயணத்தில் :-)  முதல் முறை போனது 1994 இல்.  அடுத்தமுறை 2007 இல்தான். 'நம்மவர்' ஆஃபீஸ் வேலையாப் போயிட்டதால் நான் மட்டும் தனியா ஊர்சுத்தி வந்தேன்.

இப்ப யோசிச்சுப் பார்க்கும்போது,  காசிப் பயணத்தில்  நாம் போன பனாரஸ் யுனிவர்ஸிட்டியில் இருக்கும் காசிவிஸ்வநாதர் கோவிலும், இன்னொரு  ஊரில் (Renukoot ) இருக்கும்  கோவில்கள் மட்டும்தான் சிவனுக்கு.  எண்ணிக்கையில் அதிகம் விஷ்ணுவுக்கே.....

மதுராவில் இருக்கும் ஸ்ரீக்ருஷ்ணா ஜென்மபூமி கோவில்கூட இவுங்க ஆரம்பிச்ச  ஸ்ரீக்ருஷ்ணஜென்மபூமி ட்ரஸ்ட் மூலம் கட்டுனதுதான் என்றாலும்...  அது இவுங்க தனிப்பட்ட முறையில் கட்டுனது இல்லை. டால்மியா கட்டி முடிச்சார். அதனால்  இவுங்க வழக்கமான டிஸைனா அது இருக்காது.
இங்கே கொல்கத்தா  பிர்லா மந்திர், புபனேஷ்வர் லிங்கராஜா கோவில் டிஸைனில் கட்டி இருக்காங்க.  நடுவிலே இருக்கும் சந்நிதி  ராதைக்கும் க்ருஷ்ணருக்கும்.  இடதுபக்கம் இருக்கும்  தனிவாசல்  துர்கைக்கு!  சக்தி வேண்டி இருக்குல்லையா !   அதே போல் வலதுபக்கம் இருக்கும் தனிவாசலுக்குள் போனால் ஷிவ்ஜி. 

வெளிவளாகத்தில்  ஒரு சந்நிதியில் நம்ம ஆஞ்சி !  கோவிலின் முகப்பு கோபுரத்திலேயே புள்ளையார் இருக்கார்.
நாலைஞ்சு பட்டர்கள் அங்குமிங்குமாய் கையில் செல்ஃபோன் வச்சுப் பேசிக்கிட்டே போறாங்க. பக்தர்களுக்குத்தான் படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால்  நம்ம செல்ஃபோனையெல்லாம் கைப்பைக்குள் வச்சுக்க வேண்டி இருந்தது.

பளிங்குச்சிலைகளா கடவுளர்களின் மூர்த்தங்கள். நகையும் நட்டுமா பளபளன்னு உடைகளுடன் அலங்காரமா இருக்காங்க. சந்நிதியில் சாமி கும்பிட்டபிறகு  ஒருபக்கம் இருக்கும் பட்டர் ப்ரஸாதங்கள் தர்றார். துளசித் தீர்த்தம்தான். அதையும்  ஒருகையில் செல்ஃபோன் வச்சுப் பேசிக்கிட்டே  இன்னொரு கையில்  தீர்த்தம்... இதுக்கிடையில் வா,வான்னு கூப்பிட்டு தட்டில் தக்ஷிணை போடச்சொல்லி கை காமிச்சுட்டுக்கிட்டே தீர்த்தம் கொடுப்பாங்களாம் 😐😐😐
வேணாம்னுட்டேன்.

இதுவரை நாம் போன எந்த பிர்லா மந்திர்களிலும்  தக்ஷிணை போடுன்னு பட்டர்கள் கேட்டதே இல்லை.... காசு காசுன்னு அலையும் காசி கோவில் உட்பட !  பட்டர்களுக்கு நல்லாவே சம்பளம் கொடுத்துக் கவனிச்சுக்கறாங்க பிர்லா குடும்பத்தினர்னு கேள்விப்பட்டுருக்கேன்.  அப்படி இருந்தும் கூடவா..... இப்படி?   அவ்ளோ முக்கியமான பேச்சுன்னால்... வெளியே போய் பேசிட்டு வரப்டாதா? அதென்ன சாமி சந்நிதியில் நின்னுக்கிட்டு இவ்ளோ அலட்சியம்? ஒருவேளை சாமிகிட்டேயே டைரக்ட்டாப் பேசறாரோ?

என்னமோ போங்க.... எனக்குப் பிடிக்கலை....

அங்கங்கே நிறைய  மகாபாரதக் காட்சிகள்  சித்திரங்கள் வச்சுருக்காங்க.  ஒரு பார்வை பார்த்துட்டு வந்துட்டோம்.
22000 சதுர அடியில் நல்லாவே கட்டி இருக்காங்க. கோவிலுக்குப் படியேறுமுன் இருக்கும் வெளிக்கட்டடத்தின் சுவர்களில் யானைகளோ யானைகள் !  (இது போதாதா எனக்கு !  ஹிஹி )

ஒரு இருபத்தியஞ்சு நிமிட்டில்  முதல் கோவில் தரிசனம் முடிச்சு வெளி வந்துட்டோம். காலை அஞ்சரை முதல் பதினொன்னு, மாலை  நாலரை முதல் ஒன்பது மணிவரை கோவிலைத் திறந்து வைக்கறாங்க.


மழை வேற வர்றதும், போறதுமா இருக்கு. அடுத்து ......
கொல்கத்தா நகரின் ட்ராம்,  சைக்கிள் ரிக்‌ஷா, கை ரிக்‌ஷா, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, யெல்லோ டாக்ஸி,  பஸ், பழைய ப்ரிட்டிஷ் காலக் கட்டடங்கள் (இப்போ கவர்மெண்ட் ஆஃபீஸ்கள் )  ஹௌரா ரயில்வே ஸ்டேஷன் இப்படிக் கண்ணில் பட்டுக்கிட்டே இருந்துச்சு.


ஹூக்ளி நதியைக் கடக்கப்  பிரசித்தி பெற்ற  ஹௌரா ப்ரிட்ஜ் வழியாகப் போறோம்... அழுக்கு நிறைஞ்ச ஊருக்குள்  ஒரு மணி நேரம் பயணப்படவேண்டியதாப்  போச்சு.
போய்ச் சேர்ந்த இடம் எதுன்னு சொல்லுங்க பார்க்கலாம் :-)

க்ளூ....  ஆன்மிகம்.

தொடரும்.......... :-)



11 comments:

said...

செய்யும் தொழிலின் நடுவில் போன் பேசிக்கொண்டிருப்பது எனக்கும் எரிச்சல் தரும் விஷயம். அதிலும் கோவிலின் ஊழியர்கள். என்னவோ போங்க...

எனக்கும் காசு போடு, தீர்த்தம் வாங்கு என்பது போன்ற இடங்களில் ரொம்பவுமே நெருடலாக இருக்கும்.

said...

தக்ஷிணேஸ்வர்

said...

தக்ஷிணேஸ்வர்

said...

வழிபாட்டுத் தலங்களில் இப்படி இருப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். நிறைய வழிபாட்டுத் தலங்களில் வழிபட மனதே இருப்பதில்லை. யாரையும் கவனிக்காது இறைவனிடம் மனதோடு பேசிவிட்டு திரும்பி வருவது எனக்குப் பழகி இருக்கிறது இப்போது. முன்பெல்லாம் அப்படி கேட்பவர்களிடம் சண்டை பிடிப்பது உண்டு! இப்போது பேசுவதே இல்லை.

அனுபவங்கள் தொடரட்டும். நானும் தொடர்கிறேன்.

said...

கொல்கத்தா பிர்லா மந்திர்...நல்லா இருக்கு ...

என்னமோ அலச்சியம் அவர்களுக்கு வேற என்ன சொல்ல...

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

எல்லாம் ஒரு அலட்சிய மனப்பான்மைதான்.... கோவிலுக்கு வருபவர்களைக் கண்டால் இளக்காரம் அதிகமா இருக்கு போல.....

said...

வாங்க ஜெயகுமார்,

கொஞ்சம் கிட்டவே வந்துட்டீங்க. நாம் போகுமிடத்துக்கும், நீங்க சொன்ன இடத்துக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நடப்பவைகளைப் பார்த்தால் நமக்கு அலுப்பாகவே இருக்கு. தங்கள் கடமைகளை உணர்ந்து பணி செய்பவர்கள் அபூர்வமாகிக்கிட்டே போறாங்க.....

தொடர்வதற்கு நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

பிர்லா மந்திர்கள் எல்லாமே ஒவ்வொருவிதத்தில் அருமைதான். மார்பிளால் இழைச்சுடறாங்க. !

said...

எல்லாம் அழகு. பட்டர்கள் தொல்லை மனதுக்கு கஷ்டம்.

said...

வாங்க மாதேவி.

ரொம்ப அலட்சிய மனப்பான்மைப்பா..... ப்ச்....