Friday, August 02, 2019

ரெட்டை சிலையும் ரெட்டைக் குளமும்.... (பயணத்தொடர், பகுதி 125 )

ஆதிகாலத்துத் தலைநகர்அநுராதபுரத்தில் இப்போ  எஞ்சி இருப்பது கொஞ்சம்  அழிபாடுகளும், பழைய விஹாரைகளும்தான். தொல்லியல்துறையின் நிர்வாகத்தில் எல்லா இடங்களையும் ரொம்பவே சுத்தமாப் பராமரிக்கறாங்க.  டூரிஸ்ட் ஃப்ரெண்ட்லி.  உடைகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்திக்கணும்.  புனித இடங்கள் என்பதால் சில  நியாயமான கட்டுப்பாடுகள் இருக்கு.
தியான நிலையில் இருக்கும் புத்தர் சிலை ஒன்னு அருமை. சமாதி புத்தர்னு சொன்னாங்க. ஸோப் ஸ்டோன்னு சொல்லும்  கல்லில் செதுக்கி இருக்காங்க. நல்ல உயரமான மேடையில் இருக்கார். ஏழேகால் அடி உயரம்.

இன்னும் கொஞ்ச தூரத்துலே இவரைப்போலவே இதே அளவில் இன்னொரு புத்தர் சிலை.  இவரது வலது கை  உடைஞ்சுருக்கு..... இடதுகை  பாதித் தேய்ஞ்சு போன நிலை ....ப்ச்..... இந்த ரெண்டு புத்தர் சிலைகளும் ஒரே காலக்கட்டத்தில் ஒருவரே கூட செதுக்கி இருக்கலாம். அஞ்சாம் நூற்றாண்டு சமாச்சாரம். மைத்ரி போதிசத்துவர்சிலையாக இது இருக்கவேணுமுன்னு தகவல்.


இப்ப நாம் இருப்பதுதான் அபயகிரி ஸ்தூபாவைச் சேர்ந்த  பழைய அநுராதபுரத்து புத்த  மடங்கள் இருந்த இடம். இங்கே இருந்த, அழிந்து போன நகரத்தைத் தொல்லியல் துறை மீண்டும் சரிப்படுத்திச் சீரமைச்சு வச்சுருக்காங்க. அப்படியும் போன கட்டிடங்கள் போனதுதான்.....  பலவற்றின்  அடிப்பாகங்கள், அஸ்திவாரக் கட்டிடங்கள்தான் இப்போ நம்ம பார்வைக்கு.  ச்சும்மாச் சொல்லக்கூடாது,  நல்லாவே  சுத்தமாப் பராமறிக்கிறாங்க.



அதிலும் இந்த அபயகிரி விஹாரை இருக்கும் ஏரியாவில்தான் சுவாரஸியமான வகைகள் பலவும் !






நடுவிலே பெருசா ஒரு அறை (கூடம்/மண்டபம்? ), சுத்தி நாலு பக்கமும் அறைகள், கழிவறைகள்,  குளிக்க சின்னதா ஒரு குளம் இப்படி இருந்துருக்குன்னு தெரியுது.....  எல்லாக் கட்டடங்களையும் தரைக்குமேல் குறைஞ்சது ரெண்டடி உசரத்துலே கட்டி இருக்காங்க.
சுமார் ஒரு பத்து சதுர கிலோமீட்டர் இருக்கும் இந்தப் பகுதியில் எல்லாமே சைத்யாக்களும், புத்தமடங்களுமா இருக்கே...  அப்ப சாதாரண மக்கள் தங்குமிடங்கள் எல்லாம் இதுக்கு வெளியில் இருந்துருக்குமோ?  அப்படி இருப்பின்   அந்தக் குடியிருப்புகளின் அழிபாடுகள் ஒன்னும் கண்ணுலேயே படலையே....


சந்திரவட்டக்கல் னு ஒரு அரைவட்ட அமைப்பில்  சிற்பச்செதுக்கல்கள் அருமை! குதிரை, சிங்கம், காளை, யானை, அன்னம், இலை, கொடி, தாமரைன்னு ரொம்பவே அழகா வட்டவட்டமா  இருக்கு!  அந்தக் காலத்தில் கோவில்  கட்டடங்களின் முன்வாசலில் பதிச்சுருக்காங்க.
நமக்குத்தான் அதை மிதிச்சுக்கிட்டு உள்ளே போக மனசு வராது....

இந்தச் சந்திரவட்டக்கல்லின் செதுக்கல்கள் பற்றிய விவரம் ஒன்னும் (புத்த மதக் கோட்பாடுகளில்)கிடைச்சது. இலை, அன்னப்பறவை, பூங்கொடி, சிறிய கொடின்னு எனக்குத்தான் ஒன்னும் புரியலை. எல்லாம் ஏதோ குறியீடுகள் போல !  புத்தரைப் பற்றி  எனக்குத் தெரிஞ்சதெல்லாம் 'ஆசையை விட்டொழி'ன்றதுதான். அது எங்கே நடக்கப்போகுது?

 கடவுள் என்ற ஒன்று இல்லைன்னு சொல்லி இருக்காராம். ஆனால் அவரையே கடவுள் ஆக்கிட்டோமே !  எல்லாம் துறந்தவருக்கு  நகையும் நட்டுமாப் போட்டு அலங்காரம் செய்யறோமே.... 
(நான்கூட ஒரு ஏழு வருஷங்களுக்கு முன்னே க்வீன்ஸ்லேண்ட் Australia Zoo போனப்ப  அங்கே இருந்து ஒரு புத்தர் வாங்கியாந்து  அலங்கரிச்சு வச்சேனே....  கொள்ளை அழகு ! நம்ம வீட்டுலேயே ஒரு ஏழெட்டு புத்தர்கள் இருக்காங்க. மேலே படத்தில் உள்ளவர்தான் பெரிய சைஸ். )

ரெட்டைக்குளம் ஒன்னு இருக்கு. ஒரே மாதிரி....நடுவில் ஒரு தடுப்புச்சுவர் போல பிரிச்சு வச்சது.   ஆண்கள், பெண்களுக்கான தனித்தனிக்குளமோ என்னவோ?  பிக்ஷுக்கள் குளிக்க ஒன்னு, பிக்ஷுணிகள் குளிக்க ஒன்னு....?
இந்தப் பகுதியில் சில கடைகள், நினைவுப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கு. ரொம்பவே அழகு. ஆனால்.... ஆசையே துக்கத்துக்குக் காரணம் ( ஐ மீன் நம்மவரின் துக்கம்.... எடை, எடைப்பிரச்சனை இருக்கே....) என்பதால் ஒன்னும் வாங்கிக்கலை.  சின்னதா ஒரு சந்திரவட்டக்கல் வாங்கி இருக்கலாம்...ப்ச்....  ஹூம்....




லங்காரமாவைக் கடந்து போறோம்.  சைத்யாதான்..... வண்டியை விட்டு இறங்காமலே சுத்திப் பார்க்கும் வகையில்தான் அருமையான ரோடு போட்டு வச்சுருக்காங்க.  டூரிஸ்டுகள், நிறையப்பேர்  சைக்கிளில் சுத்திக்கிட்டு இருக்காங்க.  வாடகைக்குக் கிடைக்குதாம்.  நம்ம லேக்சைடு ஹொட்டேலில் கூட ஏகப்பட்ட சைக்கிள்களை வாசலில் நிறுத்தி வச்சுருக்காங்க.

ஒரு இடத்துலே  சைத்யாவின் வெளிப்பூச்சுகள் ஒன்னும் இல்லாம மண்மேடா இருக்கு. ஒருவேளை இப்படித்தான் சைத்யாக்கள் உருவாகுதோ?   வெளிப்புறம்  செங்கல் வச்சுக் கட்டிப் பூசினால் அழகு வந்துருமுல்லெ?  நம்ம உடலுக்கும்  சைத்யாவுக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கோ என்னவோ..... வெளிப்பூச்சு இல்லேன்னா...அவ்ளோதான்....

சட்னு காட்சி மாற்றம்போல....  ஒரு பெரிய  பார்க்கிங் ஏரியாவில்  க்ரிக்கெட்  விளையாடிக்கிட்டு இருந்தாங்க சில இளைஞர்கள். இவுங்களுக்கும் இதுதான் தேசிய விளையாட்டு போல.....
நாமும் அடிமைபுத்தி கூடாது, அவன் மொழியும் கூடாதுன்னு சொல்லிக்கிட்டே  அவன் கண்டுபிடிச்ச ஆட்டத்தை மட்டும் விடாமக் கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டோம்.

தொடரும்......... :-)


9 comments:

said...

இரட்டை குளத்தை "குட்டம் பொக்குண"என சிங்களத்தில் அழைக்கிறார்கள்.
சிங்களசிற்பக்கலைக்கும் அழகியலுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அக்கால பொறியியலுக்கும் இது எடுத்துக்காட்டு.

said...

அருமை நன்றி

said...

படங்கள் வழமை போல அழகு.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் - இது மட்டுமே புத்தர் மொழியாக நமக்குச் சொல்லித் தந்து விட்டார்கள். அவர் சொன்னதில் பலவும் நல்ல விஷயங்கள். ஆனால்...

அழிவுகள் - பார்க்கும்போதே மனதில் வலி. ஏதோ இந்த அளவிற்காவது பராமரிக்கிறார்களே என மகிழ்ச்சி.

தொடர்கிறேன் டீச்சர்.

said...

வாங்க மாதேவி,

ஆமாம், அந்த ப்ரோஷரிலும் Kuttam Pokuna என்றுதான் போட்டுருந்தாங்க. ஒரே ஃப்ரேமில் அடக்க முடியாத குளங்கள் !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உண்மையைச் சொல்லப்போனால்... நம் நாட்டைவிட அருமையான பராமறித்தல்தான்.

புத்தரின் பொன்மொழிகள் முழுசும் படிக்கத்தான் வேணும்..... நமக்குத்தான் ஒன்னு போதுமுன்னு சொல்லிக்கொடுத்துட்டாங்க :-) ஒருவேளை அதுலேயே எல்லாம் அடங்கிருதோ !!!

said...

துளசி மா ,
ரொம்ப காலமாக உங்கள் வாசகி. இப்போ ஒரு உதவி. சென்னை யில் இரண்டு நாள் வேலை இருக்கிறது. நானும் , பிள்ளைகளும் மட்டும். தி. நகர் லோட்டஸ் பாதுகாப்பான ஹோட்டல் லா? ஏர்போர்ட் drop செய்வார்களா? திடீரென கேட்பதற்கு மன்னிக்கவும்.

said...

வாங்க அனிதா விஜய்,

லோட்டஸ் நல்ல பாதுகாப்பான இடம்தான். ஏர்போர்ட் ட்ராப் செய்ய ஒரு கட்டணம் உண்டு. நீங்க அங்கே வரவேற்பில் சொன்னால் ஏற்பாடு செய்துவிடுவார்கள். பத்திரமாப் போய் வாங்க

said...

சந்திரவட்டக்கல்....அழகு மா

தாமரை பதிக்கம் போட்ட புத்தர் ..ஆஹா..