Friday, July 10, 2015

ரெங்கடு..... போய் வஸ்த்தானுரா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 65)

சரியா 3.40க்கு  அந்த ஸ்ரீ ரங்கா  கோபுரத்தாண்டை போய் இறங்கினோம்.  போன பயணத்தில் இருட்டும் நேரத்தில் கோவிலுக்குப்போனதால்,  இந்தக் கோபுரத்தைப் பார்க்கலையேன்னு  கவலைப்பட்டேன். இப்பவும் அதே கவலையைத் தொடரவேண்டியதாப் போச்சு:(  கோவிலைப் பழுதுபார்க்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்குன்னு சொன்னேன் பாருங்க...  அது கோபுரங்களுக்கும் சேர்த்துத்தான்.  எல்லோரும் முக்காட்டுக்குள் முகம் மறைத்து  நிக்கறாங்க.


முதல்வேலை முதலில் என்று விடுவிடுன்னு  ரெங்கவிலாஸ் மண்டபத்து இடது புறம் கேமெரா சீட்டு விற்கும் இடத்துக்குப்போனால்  விற்பனையாளருடன் பேசிக்கிட்டு இருந்தார்  நம்ம காளிமுத்து.  அவருக்கு நம்மைப் பார்த்ததும் வியப்பு.  எப்ப வந்தீங்க? ன்னு ஆவலா விசாரிச்சார். இவர்தான் போனமுறை (2012) வந்தப்ப நமக்கு கைடு.  தினமும் எத்தனையோ ஆயிரம்பேரைப் பார்க்கிறவர், நம்மை நினைவு வச்சுருக்காருன்னா    அதுவும் ரெண்டு வருசத்துக்குப் பிறகும்.... எவ்ளோ படுத்தி இருப்பேன் நான்!  நலம் விசாரிப்புக்குப்பின் கேமெரா சீட்டை வாங்கிக்கிட்டு நடையைக் கட்டுனோம்.


முதலில் கருடமண்டபத்துக்குப்போய்  பெரியதிருவடிக்கு  கும்பிடு போட்டதும் விடுவிடுன்னு (வழக்கம்போல்) முன்னால் போன கோபாலைப் பின் தொடர்ந்து ஓடினேன். அவர் நேராப் போய் சிறப்பு தரிசனம்  சீட்டு  வரிசைக்குள் போறார். எதுக்கு,  வேணாமுன்னு சொல்லச் சொல்ல,   கம்பித்தடுப்புகளுக்குள் முன்னேறிக்கிட்டே  இருக்கார். நமக்கு முன்னால் ஒரு நாலைஞ்சு பேர்தான்!   அவுங்களும் தடுப்புக் கதவு திறந்ததும்  ரெண்டு படி இறங்கிப் போறாங்க. சீட்டு ஒன்னும் வாங்குனமாதிரி தெரியலை.  கவுண்ட்டர்கிட்டே போனதும்  ரெண்டு அம்பது ரூபாய்ன்னு சொல்லிச் சீட்டு வாங்கிக்கிட்டோம். நமக்குப்பின்னால் வளர்ந்துக்கிட்டு இருந்த வரிசையிலும் யாரும் சீட்டு வாங்குன மாதிரி தெரியலை.


நமக்கெதுக்கு நாட்டாமைன்னு   முன்னால் போனவர்களைப் பின்பற்றி தரிசனத்துக்குப் போறோம். எதுக்கு இப்போ  இன்னொருக்கான்னு இவரைக் கேட்டால்....  நீதான் பாத தரிசனம் பார்க்கலைன்னு அன்னிக்குப் புலம்பிக்கிட்டே இருந்தேல்லியா? அதான்   உனக்கு மனக்குறை வேணாமேன்னு  பதில் சொல்றார். என் பட்டு, என் செல்லம்னு மனசுக்குள் கொஞ்சிக்கிட்டேன்:-) ரெங்கன் முன்னால் நிற்கும்போது , பின்னாலிருந்து  குரல்  வருது, "காலைப் பார்,  காலைப்பார்!"

கூட்டம் குறைவுன்னாலும்   மக்களை விரட்டிப் பழகிப்போன  கோவில் பணியாளரின் வாய்,  'சீக்கிரம், சீக்கிரம்  இந்தப் பக்கம் வாங்க ' கத்திக்கிட்டே இருக்கு.  பாதமும், முகமும் மாறிமாறிப் பார்த்துட்டு  மனம் நிறைஞ்சு போச்சுன்னு   சந்நிதியை விட்டு வெளியே  வந்ததும்தான், இன்னும் நல்லாப் பார்க்கலையோன்னு சம்ஸயம் வந்துச்சு.  நிறைஞ்ச மனம் போச்சு. குறைஞ்ச மனம் வந்துருச்சு. என்ன இப்படிப்  பாடாய் படுத்தறானேன்னு கொஞ்சம் கோபமும்.   சரியாப் பார்க்கலைன்றது  உண்மைதான்னு நம்ம கீதாவின் பதிவில் யாகபேரர்னு வாசிச்சதும்  புலனாச்சு.  அடுத்தமுறை யாகபேரர் & பாத தரிசனம் நினைவில் வச்சுக்கணும்.


(அப்புறம் விசாரிச்சப்ப  மாலை 4 மணி முதல் 5 வரை  சீனியர் சிட்டிஸன்களுக்கான  இலவச சேவையாம்.  60+ )


இந்த சமயங்களில்தான் நம்ம அடையாறு  அநந்தபதுமனை  பாராட்டத் தோணுது. நின்னு நிதானமா  பெருமாளை  இஞ்சு  இஞ்சா  பார்த்து  ரசித்து வணங்கலாம்.  முகத்தையும், விட்டேத்தியா மேலே பார்க்கும் கண்களையும் பார்த்துக்கிட்டே அவனோடு பேசலாம். எவ்வளவு நேரம் ஆனாலுமே பட்டர்கள் யாரும்   வாயையே திறக்க மாட்டாங்க.  கண்ணாரக் காணுதல் நமக்கு அங்கேதான் லபிக்குது!போகட்டும். இன்றைக்கு இப்படின்னு மனசை (ஓரளவு) சமாதானப்படுத்திக் கிட்டே   அன்னமூர்த்தியைப் போய் கும்பிட்டுக்கிட்டேன்.  ஏற்கெனவே பருப்பு & ரசஞ்சாதத்துக்கு  கேரண்டீ கொடுத்துட்டார் போனமுறையே என்றாலும்....   அந்த வாரண்டியையும்  அப்பப்பப் புதுப்பிச்சுக்கிட்டால் நல்லதுதானே!  இவரோட மகிமை இன்னும் பரவலை போல!  எப்பவும்  ஏகாந்த தரிசனம்தான்!  இந்த சந்நிதி பற்றிச் சொன்னவர் நம்ம வெங்கட் நாகராஜ் அவர்களின் அப்பா.

(மேலே படம் போனமுறை  எடுத்தது)

தங்கவிமானம் , மேலே போய் பார்க்கமுடியுமான்னு   கருடாழ்வார் சந்நிதிப் பக்கம் இருக்கும் நேயடுவை நோக்கிப் போனால்....  கம்பிக்கதவு மூடி இருக்கு.  அந்தப்பக்கம்  இருட்டில் இருக்கும் மண்டபத்துக்குள் போனால்   தூண்களில் அழகான  செதுக்குச் சிற்பங்கள்.  நாலு க்ளிக் க்ளிக்கும்போதே  அங்கே வந்த பணியாளர் , இங்கே படம் எடுக்கக்கூடாதுன்னார். கேமெரா சீட்டு இருக்குன்னேன்.  அப்பவும் இந்த ஏரியாவில்  அது செல்லாதுன்னுட்டுப் போனார்.மூலவர் தரிசனம் முடிச்சு  வெளியே வந்து  ஒரு திண்ணையில் ஏறி  தங்கவிமானம் பார்க்கும் இடத்தில் நின்னுருந்த கூட்டத்தில் போய் கலந்தோம்.    அரைவாசி தெரிஞ்சது.  போதும் போ!


ரெங்கவிலாஸ மண்டபத்தூண்களில் இருக்கும் சிற்பங்களைப் படமெடுத்துக்கிட்டே நடந்து,  பூட்டுகளாகத் தொங்கும் கொடிமரத்தாண்டை போனேன்.  ஒருமுறை எல்லாப் பூட்டுகளையும் அப்புறப்படுத்திட்டாங்கன்னு ரோஷ்ணியம்மா சொல்லக் கேள்வி. இப்ப மறுபடி பூட்டுகள் காய்க்கத் தொடங்கி இருக்கு.


கோவிலுக்குள்  ஒரு ம்யூஸியம் இருக்கு தெரியுமோ?
நுழைவுக்கட்டணம்கூட  ரெண்டு ரூபாதான்னு நினைவு. இதுவரை உள்ளே போகலையேன்னு  நுழைஞ்சோம்.  ரொம்ப விசேஷமுன்னு சொல்ல முடியாது.  ஆனால் உள்ளே இருக்கும் கலைப்பொருட்களை இன்னும் கொஞ்சம் நல்லா  டிஸ்ப்ளே செஞ்சுருக்கலாம்.  (இங்கே க்ளிக்க அனுமதி இல்லை)  தந்தத்தினால் ஆன  சின்ன சிலைகள் அழகோ அழகு.  ஆனால்  எல்லாம் தூசி படிஞ்சுக்கிடக்கு. சுத்தப்படுத்த ஆட்கள் வேணுமுன்னு சொன்னால்  பக்தர்கள் ஓரிரு மணிகள்  சிரமதானம் செய்ய முன்வரமாட்டோமா?   நான்கூட எல்லாத்தையும் கவனமா எடுத்துத் துடைச்சு வைக்கமாட்டேனா என்ன?  இல்லை ஆகாதுன்னால்  ம்யூஸியத்துக்கான நுழைவுக் கட்டணத்தை அஞ்சு ரூபா ஆக்கினாலும் போதுமே.  ஆள் வச்சுச் சுத்தம் செய்யலாமே!  பொருட்கள் பளிச்னுன்னு  இருந்தால்  பார்வையாளர்கள்  10 ரூ  என்றாலும் பொருட்படுத்த மாட்டாங்கதானே? இந்த அழகில் கோவிலுக்குள்ளே  பராமரிப்பு வேலைகள் நடப்பதால் தூசிக்கும் தும்புக்கும் கொண்டாட்டம்தான்:(  எல்லா பிரகாரங்களிலும்  பக்தர்களைக் கவனமாகப் போகச் சொல்லி   தகவல் வச்சுருந்தாங்க.


ஸ்ரீ ராமானுஜர் சந்நிதிக்குப்போய் ஒரு கும்பிடு.  அப்படியே  நம்ம பார்த்தஸாரதிக்கும் ஒரு கும்பிடு. இப்படியே அன்னதானக் கூடத்துக்கு  வந்திருந்தோம். ஒவ்வொரு அரைமணிக்கும் ஒரு பந்தின்னு சொன்ன மேலாளர்,  அடுத்த பந்தி இப்ப அஞ்சு நிமிசத்தில் ஆரம்பிக்கும்.  சாப்பிடறீங்களான்னார்.  இல்லை.  உள்ளே படமெடுத்துக்கலாமான்னு  கேட்டேன்.  உள்ளே நோவாம்.  வெளியே அன்னதான திட்டம்பற்றி வச்சுருந்த போர்டை க்ளிக்கினேன்.  அதன் பக்கம் தெரிஞ்ச டைனிங் ஹால் நீட்டாத்தான்  தெரிஞ்சது.
 ஆமாம்....  தரிசனம் செஞ்சுட்டு  வர்றாங்கன்னு எப்படித் தெரியும்?  கையிலே மை வைப்பாங்களோ? அது என்ன டோக்கன்? எங்கே  கொடுக்கறாங்க?  ஙே....சேஷராயர் மண்டபத்துக்குப் போனோம்.  அங்கேயும் திருப்பணிகள்.  வெள்ளைக்கோபுரத்திலும் வேலை நடக்குது.  இதுவரை ஆண்டாளைப் பார்க்கலையேன்னு  வெள்ளைக் கோபுரத்தைக் கடந்து  வெளியே போய் யானைக் கொட்டடி எங்கேன்னு  கேட்டால், இடதுபக்கம் போங்கன்னார்.  ஓய்வெடுக்குமிடம். உபத்திரவம் பண்ணாதேன்னு  கதவில் போர்டு.  பாவம் குழந்தை, தூங்கட்டுமுன்னு  திரும்பினோம்.  ஆனால் உள்பக்கம் ஏதோ (கொண்டாட்டமா) பாட்டு கேட்டது.  தாலாட்டோ?திரும்பக் கோவிலுக்குள் வந்து ஆயிரங்கால் மண்டபம் தாண்டி புஷ்கரணிப் பக்கம் போனோம். கோதண்டராமர் சந்நிதி திறந்துருக்கு.  கொஞ்சம் பெண்கள் கூட்டம்.  போய்  ஸேவித்தோம். வைகுண்டவாசல் , கம்பர் மண்டபம்  கடந்து உக்கிர நரஸிம்மர்  சந்நிதிக்கு  வந்திருந்தோம். இங்கேயும் கதவு மூடல்தான். 'கவலைப்படாதே நான் உக்கிரமா இருக்கேன்'னார் நம்மவர்:-)  நல்ல சிரிச்ச முகம்.ஸ்ரீ கிருஷ்ணர், ராதா, ருக்மணி சந்நிதி!   பாமா எங்கே?  ஏன் ராதா?


தாயார் சந்நிதிக்குப்போய்ப் பார்த்தால் உள்ளே பூஜை  நடப்பதால் தரிசனம் இல்லை. இன்னும் ஒரு  35 மினிட் காத்திருக்க வேணும்.  மண்டபத்தில் பூ விற்பனை.  மனோரஞ்சிதம், செண்பகம் எல்லாம் ஒரு பப்பத்து கோர்த்து  சின்ன வட்டமா  செஞ்சு விக்கறாங்க. எவ்ளோ நாளாச்சு இந்த மனோரஞ்சிதம் எல்லாம் பார்த்தே!   உடனே மனோ & செண்பகா ரெண்டையும் வாங்கினேன்.  கம்பி வழியா தாயார் சந்நிதியில் வைக்கப்போறேன்னு  இவர் நினைச்சார்.  ஊஹூம்....    தாயாருக்குத் தான் தினம்தினம் கிடைக்குதே. அதனால் இது  துளசிக்கு!  அஹம் ப்ரம்மாஸ்மி.(வசதியாப் போச்சு)

இருட்டிப்போச்சே. நாளைக்குச் சூடலாமுன்னு  பையில் வச்சேன். நந்தவனத்தின் வழியா நடை. பன்னீர்ப்பூக்கள் தரையெல்லாம்!  சக்கரத்தாழ்வாருக்கு  ஒரு கும்பிடு ஆச்சு.  எல்லோரிடமும் போயிட்டு வரேன்னு  சொல்லிக்கிட்டேன்னு  உங்களுக்குத்  தனியாச் சொல்லணுமா?
ரெங்கவிலாஸ் மண்டபத்துக் கடைகளில் ஒரு பார்வை.  ஆண்டாளைப் பார்க்கவே இல்லையேன்னு  ஒரு ஆண்டாள் படத்தை வாங்கினேன்.


 அப்படியே நடந்து திருவந்திக்காப்பு மண்டபத்துக்குப் பக்கத்தில் இருக்கும் கடைவரிசைகளில் ஒரு பார்வை.  கடைசியா இருந்த ஒரு கடை வாவான்னு கூப்பிட்டது. சட்னு உள்ளேபோனேன்.  திகிலோடு கோபால் பின் தொடர்ந்தார்!


நல்ல அழகான விக்கிரகங்கள்.    ஒரு க்ருஷ்ணன்  எனக்குப்பிடிச்சுப்போச்சு.  ஆனால் விலை அதிகமோன்னு .....  அதுக்குள்ளே  கடை முதலாளியோடு சின்னப்பேச்சு.  பெரிய ஆட்கள் எல்லோரும்  அவர் கடைக்கு விஜயம் செஞ்சுருப்பதைச் சொல்லிக்கிட்டேவந்தவர், நம்மைப் பற்றி விசாரிச்சார்.  இவுங்க எழுத்தாளர்னு சொல்லி என் தலையில் ஒரு க்ரீடம் வச்சார் நம்மவர்!
தமிழக அரசு அங்கீகாரம் செஞ்ச பள்ளிகொண்டவன் விக்கிரகத்தை எனக்குக் காமிச்சு  'இதை பாலகுமாரன்  ஸார்  வந்து விசாரிச்சுக் கையில் எடுத்துப் பார்த்தார் மேடம் 'னு சொல்லி அவர் செல்லில் எடுத்த வீடியோவைக் காமிச்சார்.  அட!  ஆமாம்..... அப்படியே இன்னும் சில பிரபலங்கள் வீடியோக்களெல்லாம்  காமிச்சார்.

கடைக்காரர் பெயர் ஸ்ரீதர்.  'உங்களுக்கு என்ன உதவி வேணுமுன்னாலும் என்னிடம் கேளுங்க' என்றவர்   'பெருமாள் தரிசனம் ஆச்சா 'என்றார். ஆச்சுன்னேன். 'இன்னொருமுறை தரிசனம் செய்யப் போலாமா'ன்னார்.  வேணாம். ஆச்சுன்னேன்.

வேறென்ன விக்கிரகம் பார்க்கறீங்கன்னதும்,   வேறொன்னுமில்லை.  அந்த க்ருஷ்ணந்தான் வாங்கலாமான்னு  தோணுச்சு. விலை அதிகம். என்னைக் கேட்டால்.....  ன்னேன்.  'எவ்ளோன்னு  சொல்லுங்க நீங்க நினைப்பதை'ன்னார்.  தயக்கதோடு சொன்னதும், சட்னு எடுத்து என் கையில் கொடுத்துட்டார்.  அழகுதான்.  பொதுவாக் குழல் ஊதும்   கிருஷ்ணனைப் பசு மாட்டோடு பார்த்திருப்போம்தானே!  இங்கே மயிலோடு இருக்கான்!  'முகம் அவ்வளவா'ன்னு.... லேசா இவர்  ஆரம்பிச்சார். இத்துனூண்டுலே இப்படித்தான் இருக்குமுன்னு....  மேலே  பேசவிடலை..


ரொம்பப் பணிவோடு பேசி எனக்கொரு பிள்ளை ஆகிட்டார் ஸ்ரீதர்.  ரெங்கன் கொடுத்த பிள்ளை!

அடுத்த விஸிட் நேரா ப்ரஸாத ஸ்டால்தான்.  முதல்லே அந்த கடன் பாக்கியைத் திருப்பிக் கொடுக்கணும்.  நல்லவேளையா நேற்றையமனிதரே  பில்கவுண்ட்டரில்  இருந்தார். அவருக்கும்  என்னை அடையாளம் தெரிஞ்சது!!  ஒரு ரூபாயை எடுத்து நீட்டுனதும், இருக்கட்டும்மா. பரவாயில்லைன்னார்.   அதுக்காக, நமக்கு நிம்மதி  போனால் பரவாயில்லையாமா?  வற்புறுத்தி வாங்கிக்கச் சொன்னேன்.இன்றைக்கும்  ராச்சாப்பாடு இங்கிருந்துதான். மூணுபேருக்கும் அவரவர் இஷ்டம்போல் ஆச்சு.

 அது என்னவோ ஒவ்வொருமுறை கோவிலில் இருந்து கடைசியாக் கிளம்பும்போது பிரிவுத்துயர்  வந்துருது.  அடுத்தவருசம் வரும்போது(!)   கோவில் திருப்பணிகள் முடிஞ்சு பளிச்சுன்னு  இருக்கும் என்ற மனஆறுதலும் கூடவே....   "போய் வஸ்த்தானுரா  நா ரெங்கடு! "

சங்கம் வந்து சேர்ந்தோம்.  நாளைக்குக் காலையில்  திருச்சியை விட்டுக் கிளம்பணும். இன்னும் ஒரே ஒருகோவில்தான் 108 வரிசையில் இங்கே பாக்கி.  அங்கே நாளை காலை போறோம்.

எல்லாரும் நல்லா ரெஸ்ட் எடுத்து ஃப்ரெஷா வாங்க!

தொடரும்.........:-)

29 comments:

said...

உக்கிரம் படம் உட்பட அனைத்தும் அருமையான படங்கள்... அழகான விக்கிரகம்...

said...

// கவுண்ட்டர்கிட்டே போனதும் ரெண்டு அம்பது ரூபாய்ன்னு சொல்லிச் சீட்டு வாங்கிக்கிட்டோம். நமக்குப்பின்னால் வளர்ந்துக்கிட்டு இருந்த வரிசையிலும் யாரும் சீட்டு வாங்குன மாதிரி தெரியலை.//

முதல்லே இதுக்கு பதில் சொல்லிட்டு மத்ததைப் படிக்கிறேன். சாயந்திரம் தானே போயிருக்கீங்க? நாலு மணியிலிருந்து ஐந்து மணி வரை ஐம்பது ரூபாய்ச் சீட்டுக் கொடுக்கும் வழியில் முதியோர்கள் இலவச தரிசனம் செய்யலாம். அதான் யாரும் டிக்கெட் வாங்காமல் போயிருக்காங்க. எல்லோரும் சீனியர் சிடிசனாக இருந்திருப்பாங்க. கவனிச்சுப் பார்த்தால் தெரிஞ்சிருக்கும். :))))

said...

//(அப்புறம் விசாரிச்சப்ப மாலை 4 மணி முதல் 5 வரை சீனியர் சிட்டிஸன்களுக்கான இலவச சேவையாம். 60+ )//

ஹிஹிஹி, நானும் அப்புறமாத் தான் வாசிச்சேன். :)

யாகபேரர் பெரிய ரங்குவின் காலடியில் நம்பெருமாளுக்கு இடப்பக்கமாகக் காட்சி அளிப்பார். இருவர் முகத்திலும் வித்தியாசம் நன்கு தெரியும். அப்போதிருந்த காலச் சூழ்நிலையில் வடித்த யாகபேரர் என்னும் அழகிய மணவாளர் அழகாக இருப்பார்; ஆனால் பொறுப்பைச் சுமத்தி இருக்காங்களேனு கவலையோடு இருக்கிறாப்போல் தெரியும். அதே சமயம் விளையாட்டுப்புத்தி உள்ள நம்ம நம்பெருமாளின் குறும்புத்தனமும் கண்களில் தெரியும் அந்த வெளிச்சமும், முகத்தில் தெரியும் கருணையும், கொஞ்சம் குறைவு தான். சிற்பிகளின் மனோநிலை காரணமாய் இருந்திருக்கலாம்.

//ஆமாம்.... தரிசனம் செஞ்சுட்டு வர்றாங்கன்னு எப்படித் தெரியும்? கையிலே மை வைப்பாங்களோ? அது என்ன டோக்கன்? எங்கே கொடுக்கறாங்க? ஙே....//


அன்னதான டோக்கன் தரிசனம் முடிஞ்சு வரச்சே கீழே இறங்கும் இடத்தில் டேபிள், சேர் போட்டு உட்கார்ந்திருப்பர்களிடம் கேட்டால் கொடுப்பார்கள். அங்கே தான் கொடுப்பதால் தரிசனம் முடிஞ்சு தான் வராங்கனு தெரிஞ்சுடும். :) மிச்சத்துக்கு அப்புறமா வரேன். இப்போ வீட்டு வேலை! :) அப்படி ஒண்ணு இருக்கே! :)

said...

வருகையைப் பதிவு செய்து கொள்கிறேன்.

said...

வழக்கம் போல விறு விறுப்பான உங்கள் நடையுடன் நாங்களும் தொத்திக் கொண்டோம்...தரிசித்தோம்....ம்ம்ம் நம்ம கோபாலேட்டன் உக்கிர நரசிம்மர் சன்னதி முன்னாடி யோக நரசிம்மர் மாதிரி இருக்காரோ...யோகம் செஞ்சு செஞ்சு சிரிக்கும் நரசிம்மர் ஆகிட்டார் சேட்டன்...சரிதானே சேச்சி?!!

படங்கள் எல்லாம் வழக்கம் போல சூப்பர்...வேறு என்ன அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க் அம்புட்டுதேன்...

said...

திருவரங்கம் தரிசனம் அருமை. பல முறை சென்றுள்ளேன். இருந்தாலும் அதிகமான படங்களுடன் உங்கள் பதிவு மறுபடியும்அழைத்துச்சென்றுவிட்டது. நன்றி.

said...

அரங்க நாச்சியார் சன்னிதியும்,
அங்கே வாழையிலையில் பரப்பிய செண்பகப்பூ + மனோரஞ்சித வட்டுகளைக் காட்டியமைக்கு, நனி மிகு நன்றி டீச்சர்!

அதைத் தாயாருக்குத் தராமல், தாங்களே எடுத்துக் கொண்டது தான், அழகு!
தாயாருக்கும் மகிழ்ச்சி..
பெத்த பொண்ணு தலையில் பூ வைக்காம, ஓர் அம்மா தனக்குத் தானே ஒரு நாளும் சூடிக்க மாட்டா!
இதுக்கு எதுக்கு அஹம் பிரம்மாஸ்மி-ல்லாம்?:)

அரங்க நாச்சியார் = அம்மா போல!
போல என்ன? அம்மாவே தான்!

என் உடல் நலத்தால் மயங்கி விழுந்த போது, தன் உள்-புறப்பாட்டை நிறுத்தி, தீர்த்தம் தந்து, அவளுக்கு வீசும் ஆலவட்டம், அதை எனக்குக் கவரி வீசிய தாய் அவள்!

அரங்கன்-ல்லாம் சும்மா;
இவளே அம்மா!
அம்மா.. உன் தன்னோடு உறவேல், நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

said...

"ஸ்ரீ ரெங்கா ரெங்கா ரெங்கா" -ன்னு முன்ன இருக்கும்!
இப்ப "ஸ்ரீ ரங்கா ரங்கா ரங்கா" -ன்னு லேசா மாறி இருக்கு போல..

இன்னும் சில ஆண்டுகள் கழித்து,
"அரங்கா அரங்கா அரங்கா" -ன்னு
நல்ல தமிழில், ஆழ்வாரின் ஈரத் தமிழில் இருக்கும்-ன்னு நம்புறேன்!

"ஐயனே **அரங்கா** என்றழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந்தேன் என்தன் மாலுக்கே" - குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி

--

அது வரை, "ரெங்கா"-வுக்கு ஈடா, "லெட்சுமி" -ன்னு நாமகரணம், ஒங்க சென்ற பதிவில் ரசித்தேன்!
அதென்ன புருசன் பேருக்கு மட்டும் முன்னால ஒரு "கொம்பு" போடறது? போடு பெண்டாட்டி பேருக்கும் கொம்பு!:)
உங்க பெண்ணுரிமை கண்டு வியக்கேன் டீச்சர்:) ச்சும்மா!

நம்மாழ்வார் சன்னிதியில், மகிழம்பூ இருக்குமே! அதைப் படம் எடுக்கலையா?
மகிழம் பூ + செண்பகப் பூ + மனோ ரஞ்சிதம் = என் மும்மூர்த்திகள்; மிகப் பிடிக்கும்!

அந்தப் பூ வட்டுகளைத் "தொடையல்" -ன்னு சொல்வது வழக்கம்!
எல்லாமே தொடுப்பது தான், எனினும் வெரசாத் தொடுக்கும் இந்தப் பூ வட்டு = தொடையல்

*கண்ணி = தலையில் சூடும் பூ வரிசை
*தொடையல் = வட்ட வரிசை
*தெரியல் = கதம்பப் பூக்களால் (தெரிவு செய்து) கட்டப்படும் வரிசை
*தாமம் = வட்ட வரிசையாய் இல்லாது, நாரால் கட்டப்படும் நீள் வரிசை

*மாலை = பெண்கள் சூடுவது
*தார் = ஆண்கள் சூடுவது (ஆண்டாள் மாற்றிக் காட்டினாள்)
*கோதை = இரு பாலரும் சூடுவது

இன்னும் தொங்கல், பிணையல், ஒலியல் போன்ற பூ வரிசைகள்-ல்லாம் தமிழில் இருக்கு!

said...

ரசஞ்சோறு அன்ன மூர்த்தியைக் கண்டது போல், மருத்துவரான Dr. தன்வந்திரியும் கண்டீர்களோ?:)
இவர்கள் இருவரும், உடையவர் இராமானுசரின் ஏற்பாடு!
--

ஒரு முறை, இராமானுசர், மூலத்தான முதல்வனான அரங்கன் (பெரிய பெருமாள்) முகம் வாடியிருக்கக் கண்டு..
என்னவோ? ஏதோ? என்று பலப்பலவாய் விசாரிக்க..
கடைசியில் தளிகை எ. சோற்றில் வந்து நின்றது பஞ்சாயத்து!

உடையவர்: நைவேத்தியத்துக்கு என்ன அனுப்பினாய்?
மடைப்பள்ளி நம்பி: வழக்கம் போல், தங்க வெள்ளி உலோகம் இல்லாத, மண்சட்டியில் பொதிந்து வைச்ச தயிர்ச்சோறு தான் அனுப்பினேன்..

உடையவர்: மண்சட்டி தான் சரி; ஆனால் வேற ஏதாச்சும் அதற்குள் போட்டு அனுப்பினாயா?
ம. நம்பி: ஆமாம், நாவல் பழம் பிடிக்குமே-ன்னு போட்டு அனுப்பினேன்!

உடையவர்: ஆகா, என்ன காரியம் செய்தீர்கள்? தயிரும் + நாவல் பழமும் ஒரு சேரச் சாப்பிடக் கூடாதே? உடலுக்கு ஆகாதே?
தனித்தனியாக மதியம் சோறும், மாலை நாவலும் அனுப்பி இருக்கக் கூடாதா?
ம. நம்பி: விவரம் தெரியவில்லை; அதனால் இப்படிச் செஞ்சிட்டேன், மன்னித்து விடுங்கள் உடையவரே!

உடையவர்: மன்னிப்பு-ல்லாம் எதுக்கு?
நமக்குத் திங்கப் பிடிச்சிருக்குறதையெல்லாம், பிரசாதம் எ. பேரில், அவனுக்கு அனுப்பி விடாதீர்கள்!

இனி அன்னக் குற்றம் ஏற்படாமல் இருக்க, "அன்னமூர்த்தி"யிடம் நிவேதனம் காட்டி உறுதி செய்து கொண்ட பின்னரே, பெரிய பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணவும்!
அதே போல், அவன் உடல் நலத்துக்குத் தீங்கு ஏற்படா வண்ணம், மருத்துவரான தந்வந்திரி-யும் இங்கே ஸ்தாபிக்கவும்!

இனிமேல், தினமும், உணவோடு..
மிளகும்+சீரகமும் கலந்த சுடுநீரும், அம்சி செய்யுங்கள் (அமுது செய்வித்து அருளல்= அ.ம்.சி)
--

இப்படி, ஏதோ தன் சொந்தக் குழந்தைக்குச் சோறு தக்கதா? எனக் காக்கும் தாய் போல் பராமரித்ததால், மெய்யாலுமே அவனை "உடையவர்" ஆனார்!
அவர் சன்னிதிக்கும் தாங்கள் சென்று வந்தது நன்று!

ஒரு காலத்தில் சம்ஸ்கிருதம் கொடி கட்டிப் பறந்த "ஸ்ரீரங்கம்" ஆலயத்தில்,
Strict ஆன வைகானச ஆகமத்தை -> பாஞ்ச ராத்ர ஆகமமாக மாற்றி
ஈரத் தமிழும் + மனித நேயமும் உள் புகுத்திக் காட்டிய, இராமானுசர் நெஞ்சமே தஞ்சம்!

என்ன.. தயிர்ச்சோறு + நாவல்பழத்துக்கே பதறிய இராமானுசருக்கு..
பிட்சை உணவில் விஷம் கலந்து வைத்தார்கள், "அன்றைய ஸ்ரீரங்க" வைஷ்ணவர்கள்:)
ஆலயச் சீர்திருத்தம் என்றுமே கசப்பு தான்:)

said...

கோபால் சார், கவிச் சக்கரவர்த்தி கம்பன் போல் உட்கார்ந்துக்கிட்டு Pose குடுக்குறாரே?:)
இது எங்கே?
கம்பன் மண்டபத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் மேட்டழகிய சிங்கர் சன்னிதி தானே?
--

தங்க விமானம் ஏறிப் பாக்க முடியலையா டீச்சர்? அங்கிருந்து ஏழு கோபுர தரிசனமும் ஒரு சேரக் கிடைக்கும்!
அதுக்குப் பேரு பிரணவாகார விமானம்; "ஓம்" என்ற உருவத்தில் அமைஞ்சிருக்கும்!

ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே
- திருப்புகழில், அருணகிரிப் பெருமானின் வாக்கு!

அடுத்து முறை போனா, உங்கள் பிள்ளையாகி விட்ட கடைக்கார நண்பர் ஸ்ரீதர் உதவியோடு, பெரியபெருமாள் கருவறை உள்சுற்றும் காணவும்!
மிகவும் குறுகலான பாதை தான்; ஆனா ஒங்க நேயுடு (சிறிய திருவடி மட்டுமல்ல), இலங்கை படைப் பரிவாரங்கள், வீடணன் முதலானோரும் இருக்க,

சேனை முதலியார், பரமபதச் சுற்றுக்குக் காவல் இருக்க, பெருமாளின் மேலப்படிகளின் வாசல் நெருக்க,
திராவிட வேதமான திருவாய்மொழிப் பேருரையைக் கேட்க, பெருமாளே திருவிளக்குப் பிச்சனை நெருக்கிய வழிநடையை-ல்லாம் காணலாம்!
"திருவாய் மொழிக்கு உருகாதார், ஒருவாய் மொழிக்கும் உருகார்" என்று மணவாள மாமுனிகளின் தமிழ்ப் பேருரையைக் கேட்கும் பொருட்டே!

ஆழ்வார்கள் கசிந்து அழுத ஈரத் தமிழ் வழிநடை இது!
அங்கே, நீங்களும் இருப்பீங்க! - துளசியாய்..
பெரியபெருமாள் சூடிக் களைந்த திருத்துழாய் அலங்கல் என்னும் துளசி கொட்டி வைக்கப்படும் கொட்டார இடமும் கூட!

said...

நீங்க போனது வெள்ளிக் கிழமையா? -ன்னு தெரியலை!

அம்மாவின் ஊசல் அழகு!
அரங்க நாச்சியாரின் ஊஞ்சல் அழகு, ஒத்தைப் பொம்மனாட்டியா! தாழம்பூ சொருகி!
அதிகம் அலங்காரம் இல்லாம, மேனி எழில் கொஞ்ச.. பின் சடை முன் தொங்க..

அழகுத் தாயாரை.. ஊஞ்சலாட்டுவது யாரு?
= என் ஆசை முருகனும்-வள்ளியுமாய்..

"கந்தனும் வள்ளியும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
சீரங்க நாயகியார் ஆடீர் ஊசல்"
--

பிரசாதக் கடை + List புகைப்படத்துக்கு நன்றி
ஆனா, திருவரங்கம் பிரசாதம் ஏனோ அதிகம் பிடிப்பதில்லை.. திருவானைக்கா பிரசாதம் செம Tasteஆ இருக்கும்!
திருவரங்கப் பிரசாதங்கள் மண் சட்டியில் செய்யப்பட வேணும் என்பது இராமானுச விதி; ஆனா மண்சட்டி கிராமத்துப் பாண்டம்; "இவா" அதுல செய்யத் தெரியாம செய்யறாங்களோ?-ன்னு ஓர் ஐயம்; பல சமயம் பிரசாதங்கள் "அடிப்பிடிச்சி" இருக்கும்;

சில ஐயங்கார் நண்பர்கள் வீடுகளில், பேச்சு கேட்டுள்ளேன்; சமையல் கொஞ்சம் "ஓவராகி" லேசா அடிப்பிடிச்சிருச்சின்னா..
"என்னம்மா, இன்னிக்கு அடுப்படியில், ஸ்ரீரங்கம் உபயமோ?" -ன்னு கேலி:)

நான் சொன்னது மடைப்பள்ளிப் பிரசாதங்களை மட்டுமே; பை போட்டு எக்கச் சக்கமா விக்கும் Stall பிரசாத வகைகள் எப்படி? -ன்னு தெரியலை!said...

//நம்ம அடையாறு அநந்தபதுமனை பாராட்டத் தோணுது. நின்னு நிதானமா பெருமாளை இஞ்சு இஞ்சா பார்த்து ரசித்து வணங்கலாம்//

ha ha ha; very true!
தோழன் ஒருவன், "அரங்கத்தில் காணாததை, அடையாற்றில் கண்டேன்" -ன்னு பதிவே போட்டான்!
ஆனாலும், அடையாற்றில் நன்கு கண்டாலும், ஏன் ஒங்க மனசு... ஏன் அரங்கத்தில் லபக் லபக்-ன்னு அடிச்சிக்குது?:)

காரணம் இருக்கு!

அரங்கத்தில் இருக்கும் பெரிய பெருமாளை, கிட்டக்க நல்லாப் பாத்து இருந்தீங்க-ன்னா தெரியும்..
*நாலு கை சமாச்சாரம்-ல்லாம் இருக்காது!
*சங்கு-சக்கரம் கூட இருக்காது!
இதனால், இவரு பெருமாளே இல்லை-ன்னு கூடக் கெளப்பி வுடலாம்:))

ஆனால், இளங்கோவடிகள் அப்படிச் சொல்லலை!
சிலப்பதிகாரத்திலேயே திரு-அரங்கம் உண்டு! திரு-வேங்கடம் உண்டு! திரு-செந்தூர் உண்டு!

தமிழ் நிலத்தின் தொல்குடித் தெய்வங்கள்= மாயோன்/ சேயோன் (திருமால்/முருகன்)
இவுங்கல்லாம் நம்மளப் போலத் தான்!
நம்மள போலவே அழகிய முகம், ரெண்டே கை etc etc
நடுகல்லாய் இருந்து தெய்வம் ஆனவுங்க; Puranic Unbelievables இல்லை!

நல்லாப் பாருங்க.. பின்னாளில் வந்த இராமானுசர் உட்பட, யாரும் "ரங்கநாதஸ்வாமி"-ன்னு சொல்ல மாட்டாய்ங்க!:)
நல்ல தமிழில், பெரிய பெருமாள் | நம் பெருமாள்.. அவ்ளோ தான்:)

*பெரிய பெருமாள் = மூலவர்
*நம் பெருமாள் = செல்வர் (உற்சவர்)

ஊரின் பேரை வச்சித் தான் பெருமாளுக்கே பேரு!
*திருவரங்கன்
*திருவேங்கடமுடையான்
இப்படித் தான் இராமானுசர் முதற்கொண்டு, பலரும் புழங்கினார்கள்..
---

பெரிய பெருமாள் எ. அரங்கனின் திருவுருவம் = மயக்கும் மோனநிலை!
*இரண்டே கைகள்
*சங்கு-சக்கரமும் இல்லை
*கொப்பூழில் பிரம்மா போன்ற கதைகள் இல்லை

*பெரிய முகத்தில் கூரிய நாசி
*திருப்பவளச் செவ்வாய்
*மார்பில், "அவள்" ஒருத்திக்கு மட்டுமேயான திருமறு
*குழிந்த வயிறு
*கிடத்தி விரிந்திட்ட கால்கள்

*பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
*கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?
*கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?
என்று சமணரான இளங்கோவடிகளே பாடும் போது, துளசி டீச்சர் எம்மாத்திரம்?:)

அதிக அலங்காரம் இல்லாத அந்த "வெறும் உடல்" தான் காரணம்!
அந்த உடல் பொழி அருவியில் - திருமேனித் திரளில் அடிச்சிக்கிட்டுப் போயிருவீங்க!


அப்படி அடிச்சிக்கிட்டுப் போகாம இருக்கத்தான்..
அரங்கன் கருவறையில்,
எட்டிப் பார்க்கும் மேடைக்குப் பக்கத்திலேயே, 2 சிறு தூண்கள் இருக்கும்! (மணத் தூண்கள்) குட்டீண்டு, குறு குறு தூண்!

பாத்தீங்களா?-ன்னு தெரியலை; ஆனா, அந்தத் தூணைப் பிடிச்சிக்கிட்டுப் பார்த்தா, குறுக்கு-நெடுக்கா, கண்-கொப்பூழ்-பாதம்...
முழு மேனியும், ஒரே கண் வீச்சில் காணலாம்! //"காலைப் பார், காலைப் பார்!// - கால் விரல் நகம் கூடத் தெளீவாத் தெரியும்!

என்ன, அந்தத் தூண்கள் (மணத் தூண்கள் என்று பெயர்), கொஞ்சம் கருவறைக்கு உள்ளடங்கினா மாதிரி இருக்கும்!
விவரம் தெரிஞ்சி, பற்றிக் கொண்டு பார்த்தால், அப்பறம் மறக்கவே மாட்டீங்க! ஒங்களால முடியாது!

மாயோனை "மணத் தூணே" பற்றி நின்று
கண்ணாரக் காணும் கொலோ, எந்த நாளே? (பாசுரம்)

said...

//நீதான் பாத தரிசனம் பார்க்கலைன்னு அன்னிக்குப் புலம்பிக்கிட்டே இருந்தேல்லியா?
அதான் உனக்கு மனக்குறை வேணாமேன்னு பதில் சொல்றார்.
என் பட்டு, என் செல்லம்னு மனசுக்குள் கொஞ்சிக்கிட்டேன்:-)
ரெங்கன் முன்னால் நிற்கும்போது , பின்னாலிருந்து குரல் வருது, "காலைப் பார், காலைப்பார்!"//

Cho Chweeet Gopal Sir & Thulasi poNNu:)

//பாதமும், முகமும் மாறிமாறிப் பார்த்துட்டு மனம் நிறைஞ்சு போச்சு; ஆனா சந்நிதியை விட்டு வெளியே வந்ததும், இன்னும் நல்லாப் பார்க்கலையோன்னு சம்ஸயம் வந்துச்சு//

ha ha ha
same same!
திருச்செந்தூர் முருகனைப் பார்க்கும் போதும் வரும் "ஓர் இனம் புரியாத" சந்தோசமெல்லாம்..
அந்தாண்ட நகர்ந்து, கண்ணுல அவன் மறைஞ்சுதுமே, கண்ணு தளும்பி, சோகம் வந்து அப்பும்:(

நின்னினும் இனியது உன் நினைவே!
நின்னினும் கொடியது உன் காட்சி!
--

என் காதல் முருகவனைப் பற்றிக் கொண்டு போன பின்..
இனி ஒங்க வீட்டுக்கு வரமுடியுமா? -ன்னு தெரியலை!
இருப்பினும், ஒரு பொண்ணுக்கு..
காதலன் சுகத்தையும் அப்பப்போ விஞ்சி எட்டிப் பார்க்கும், அப்பாவின் அன்பு!

அன்புள்ள அப்பா, அரங்கா..
உன் காட்சியையேனும் காட்டித் தணிவித்த துளசி டீச்சருக்கும், அவர் காதல் கோபாலுக்கும்..
இந்த இரு பறவைகளுக்கும், உன் நித்ய தரிசனத்தைக் காட்டி அருள்! நலம் பொலிக நாளுமே!

said...

//ஆண்டாளைப் பார்க்கவே இல்லையேன்னு, ஒரு ஆண்டாள் படத்தை வாங்கினேன்//

ஆண்டாள் = உள் ஆண்டாள், வெளி ஆண்டாள்..
பத்திச் சொல்லவே இல்லையே? -ன்னு நானும் தேடினேன்; ஆனால் "ஆனை ஆண்டாள்" உருவிலாச்சும் சொன்னீர்களே.. நனி மிகு நன்றி!

"ஆண்டாள்" = என் அத்தை பேரு!
தீவிர சைவக் குடும்பமான, தாத்தா முருகேசனையும் மீறி,
எங்க ஆசை ஆயா, அத்தைக்கு வைச்ச பேரு = ஆண்டாள்!

இடுப்புல சொமந்துக்கிட்டு, திருவண்ணாமலைக் கோயில் சிற்பம் சிற்பமாக் காட்டிச் சோறு ஊட்டும் அத்தை! அம்மா கூட அப்படி ஊட்டி இருக்க மாட்டாங்க..
கல்லுளி மங்கன் நான், வாயைத் தொறக்கவே மாட்டேன்; அடம்! அப்பவே நெஞ்சழுத்தம்;

ஆனா திருவண்ணாமலை இளையனார் சன்னிதியில் மட்டும்.. அதோ முருகன் பாரு-ன்னு காட்டினா மட்டும் வாயைத் தொறப்பான்-ன்னு இப்பவும் அத்தை சொல்லும்!
அப்படிச் சன்னிதி காட்டிச் சோறூட்டிய அத்தைக்கு, இதே திருவரங்கம்.. மணத் தூணைப் பற்றி நின்று சன்னிதி காட்டினேன், ஒரே ஒரு முறை!

பாசுரங்களால், ஜீயருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, திருவரங்கம் கோயில் ஜீயர் சேவைக்கு,
அவர்கள் என்னைக் கூட்டிப் போன போது, நான் அத்தையும் கூட்டிப் போன நினைவுகள்..

சென்ற வாரங்களில், அத்தை உலகத்தை விட்டே போயிருச்சி;
சின்ன வயசு தான்..
செய்தி சொல்லக் கூட முடியாம, நான் ஐரோப்பிய விமானத்தில் மாட்டிக்கிட்டு இருந்தேன்

பதிவில், "ஆண்டாள்" என்கிற யானை படத்தைப் பாக்கும் போது.. Sorry!
Dank u teacher..

said...

கோவில் தரிசனம் மிகச் சிறப்பு. எல்லா சன்னிதிக்கும் போய்வருவதற்குள் கால் வலி வந்துவிடும். பின்னூட்டத்தில், கண்ணபிரான் எழுதிய, ஆனைக்கா கோவில் பிரசாதம் இன்னும் நன்றாக இருக்கும் என்பதைக் கவனித்தேன். சென்றமுறை, ஆனைக்கா பிரசாதம் (அங்க உள்ள ஸ்டாலில்) வாங்காமல், அரங்கன் ஸ்டாலில் வாங்கிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். இனி இதை மறக்கக்கூடாது.

said...

நெல்லைத் தமிழன்,

எங்கே போனாலும் ஸ்டாலில் பிரசாதமே வாங்கக் கூடாது! :( ஶ்ரீரங்கம் கோயில் பிரசாதம் நன்றாகவே இருக்கும். நிறையவே சாப்பிட்டிருக்கோம். :) அதிலும் தோசை, வடை மற்றும் அப்பம் சூப்பர்!

said...

கோயில்ல வேலை நடந்துச்சு போல நீங்க போனப்போ. இப்போ முடிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

அன்னமூர்த்தி பத்தி மேல சொல்லுங்க. கோயில்ல எங்க இருக்காரு? இப்படியொருத்தரப் பாத்த நினைவில்லையே.

அன்னைக்குத்தான் பாத்திருக்கீங்க. பிள்ளை ஶ்ரீதர்னு சொல்ல அன்பு மனசு வேணும். அது ஒங்களுக்கு இருக்கு. வாழ்க. வாழ்க.

said...

இந்தப் பதிவுக்குத் தான் நேத்திக்குப் பதில் எழுதிப் பதிவு செய்ய முடியாமல் போச்ஷு. ரவி,ஜிரா உத்தம பின்னூட்டங்கள். சிரிக்கும் சிங்க யோக கோபால் நல்லா வந்திருக்கார்..அனுபவித்தேன் துளசிமா. நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உண்மையிலேயே அழகா இருக்குதானே! எனக்கும் ரொம்பவே பிடிச்சிருக்கு.

said...

வாங்க கீதா.

டோக்கன் அங்கேயா கொடுக்கறாங்க. நாந்தான் கவனிக்கலை போல:( எங்கே .... ரெங்கனைச் சரியாப்பார்க்கலையேன்னு நினைச்சுக்கிட்டே துக்கத்தோடு இறங்கி இருப்பேனோ:-)
பிரஸாத சமாச்சாரம் நோட்டட். அடுத்தமுறை கோவிலிலேயே பழி கிடக்கப் போறேன்:-) அந்த சீனியர் சிட்டிஸன் லைனில் தினம் போய் நின்னு ஒவ்வொரு முறை ஒருவர்ன்னு யாகபேரர், நம்பெருமாள், பெரிய பெருமாள் திருமுகம், திருவடி ன்னு தனித்தனியா தரிசிக்கணும். ஒரு அரை நிமிசம் நிக்கவிட்டால் கூடப் போதுமேப்பா.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தங்கள் வருகையைப் பதிவு செஞ்சாச்சு! நன்றி.

said...

வாங்க துளசிதரன்.
நம்ம கோபாலேட்டனிடம், கோபமாப் பாருங்கன்னு சொன்னால் போதும். பார்த்துருவார்:-)))))
ஸ்ரீ ரங்கம்தான் இந்தப்பதிவோடு முடிஞ்சது. ஆனால் யாத்திரை தொடர்கிறது. வந்துட்டுப்போங்க. அவ்ளோ சீக்கிரம் தொடரை முடிச்சுருவாளா இந்தத் துளசி!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
எத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஒரு கோவில் அல்லவா இந்தத் திருவரங்கம்!

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஹைய்யோ!!! உங்க பின்னூடங்களால் இந்தப்பதிவே துளசிமணம் மணக்குது! எத்தனையெத்தனை தகவல்கள்,விளக்கங்கள். தமிழ் கொஞ்சும் எழுத்துகள்! தன்யளானேன்.
திருவரங்கம் கோவிலுக்குப்போனது சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில்தான்.
மணத்தூண்களை மனசில் பதிச்சு வச்சுக்கிட்டேன். விடப்போறதில்லை அடுத்தமுறை.
அனைவர் சார்பிலும் நன்றீஸ்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.
பெரிய கோவில்தான். ஒரே நாளில் ஓடியோடிப் பார்க்காமல் தினமும் ஒரு பகுதின்னு பார்த்து அனுபவிக்கணும். அவ்ளோ நாள் இருக்க முடியுமான்னுதான் தெரியலை. இதேதான் மதுரை மீனாக்ஷிக்கும். பலமுறை போயிருந்தாலும் சரியாப் பார்க்காத மாதிரியே இருக்கு.
ஆனைக்கா பிரஸாதம் அடுத்தமுறை வாங்கித்தான் ஆகணும்போல!

said...

வாங்க ஜிரா.
பெரியதிருவடியைக் கும்பிட்டுக்கிட்டு பெருமாளை தரிசிக்கப்போறோம் இல்லையா. அங்கே இருக்கும் கொடிமரத்து இந்தப்பக்கம் (நம்ம வலதுகைப்பக்கம்) தெரியும் வெளி முற்றத்தை நோக்கிப்போனால் ஒரு மூலையில் சந்நிதி ஒன்னில் தனியா ஆடாம அசையாம உக்கார்ந்துருக்கார் அன்னமூர்த்திப்பெருமாள். வலக் கையில் சின்னதா ஒரு குடுவை ( அமிர்தமோ!)மறு கையில் சோற்றுருண்டை! கொஞ்சம்கூட வருமானமே இல்லாத சந்நிதி போலிருக்கு. ஈ காக்காவைக் காணோம். விஷயம் தெரிஞ்சவங்க மட்டுமே போய் தரிசனம் செஞ்சுக்கறாங்க. ஒரு போர்டு வைக்கப்டாதோ? விளம்பர மகிமை தெரியாத மூர்த்தி!
ஒருத்தரோடு முதல்முறையா பேசும்போதே.... மனசு சொல்லிருது இல்லை இவர் நல்லவர், நம்பலாம், உன் பிள்ளை இப்படி..
சொன்னா நம்பமாட்டீங்க... இந்த வீக்கெண்ட் இன்னொரு பிள்ளை கிடைச்சார், இங்கே. அவர் பெயரும் ஸ்ரீதர்தான். நம்ம யுனிவர்ஸிடிக்குப் படிக்க வந்துருக்கார். நம்ம சாலிக்ராமம் மாமாவோட குடும்பநண்பரின் மகன். இப்படித்தான் என் பிள்ளைகள் எண்ணிக்கை பெருகிக்கிட்டே போகுது:-)

said...

வாங்க வல்லி.
ரவி வந்தவுடன் பதிவுக்கே புதிய 'களை ' வந்துருதேப்பா! 'வண்ட்டாரய்யா ஆழ்வாரு'ன்னு ரசிக்கத்தோணும் வகைகள்:-)

said...

//அன்னமூர்த்திப்பெருமாள். வலக் கையில் சின்னதா ஒரு குடுவை ( அமிர்தமோ!)//

மிளகு-சீரக ரசக் குடுவை, செரிமானத்துக்கு!
அதான் அன்னமூர்த்தி-இராமானுசர் கதையைச் சொன்னேன்:)

சிலர் பாயசக் குடுவை என்றும் சொல்லுவார்கள் (புராண விவரணையின் படி)

அன்னமூர்த்தி இருந்த இடத்தில் தான், அரங்கனின் பழைய சமையலறைக் கூடம் இருந்தது; இப்போ சமையலறை இடம் மாத்தியாச்!

திருமலை-திருப்பதியிலும் இதே போல் இருக்கும்! ஆனா அங்கே "அன்னமூர்த்தி"= பொண்ணு; பையன் அல்ல:)
சீரங்கம்= ஆண் சமையல்; திருப்பதி= பெண் சமையல்

திருப்பதி, தரிசனம் முடித்து வெளியே வந்து, எதிர் புறம் படியேறும் போது..
இடப்பக்கம் உள்ளடங்கினாற் போல், ஒரு சமையலறைக் கதவு இருக்கும்;
அங்கு "வகுள மாலிகை" -ன்னு மடைப்பள்ளித் தாயார் இருப்பாங்க! (பெருமாளின் அம்மா)
அவுங்க தான் சமையலறைத் தலைவி!

திருவரங்கத்தில், அன்னமூர்த்தி = சமையலறைத் தலைவன்:)

said...

@கே ஆரெஸ்,

சின்ன திருத்தம். //திருப்பதி, தரிசனம் முடித்து வெளியே வந்து, // எங்கே? இழுத்துக் கடாசுனதில் வெளியே விழுந்து தட்டுத் தடுமாறி எழுந்து கண்களில் நயாக்ரா பெருகி வீழ எந்த சமையல்கட்டைப் பார்க்கறது?

எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆச்ரமத்தில் அடுக்களையில் அன்னபூர்ணா விக்கிரகமுண்டு. பெருமாள் தளிகையின் போது சின்னப் பல்லக்கில் அன்னபூரணி முன்னால் வர பின்னால் வரிசையில் பிரசாதங்களைப் பெண்கள் சுமந்து வருவார்கள். அதைப்பற்றியும் எழுதுவேன்.