Friday, July 17, 2015

ப்ரோச்சே வாரெவருரா... நனுவிநா ரகுவரா.... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 67)

வருசத்துலே ஒரு வாரத்துக்குத் தலையிலே தூக்கி வச்சுக்கிட்டு ஆடுனாப்போதும்.  மீதி நாளெல்லாம்  பாட்டுக் கேக்க ஆடு போதும் போல:(   போனமுறை  (அது ஆச்சு ஒருஅஞ்சு வருசம்....) இந்தப் பகுதிக்கு வந்துட்டுப்போகும்போது,  இந்த கேட் கண்ணுலே பட்டது.  மூளையில் இந்த சமாச்சாரம் போய்ச் சேருமுன்னேயே  ரெண்டுகிமீ போயிருச்சு வண்டி. வேளை வரலை:(

இந்தமுறை  ஹரசாபவிமோசனப் பெருமாளை ஸேவிச்ச கையோடு இங்கே போகணுமுன்னு  ஆக்ஞை!  பத்தே நிசத்தில் வந்துட்டோம். வெறும் மூணு கிமீ தூரம்தான்.  தோரணவாசலில் பெரிய கேட் திறந்தேதான் கிடந்துச்சு.  சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் சமாதி கோவில்.  உள்ளே போகும்போதே....  எங்க அம்மம்மாவை  நினைச்சுக்கிட்டேன்....  ப்ரோச்சேவாரு  எவருரா.................
கர்நாடக இசைக் கச்சேரின்னாலே  ஒரே ஒரு தியாகராஜர் க்ருதியாவது கட்டாயமா இருக்கும்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில்  தியாகப்ரம்மம்  என்று அறியப்பட்ட  தியாகராஜ ஸ்வாமிகளின் காலம் 1767 -1848.  மும்மூர்த்திகளில் மூத்தவர் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் (1762 - 1827)  மூன்றாமவர் முத்துசுவாமி தீட்சிதர் (1776 -  1835)
மூவருமே ஏறக்குறைய சமகாலத்தவர்கள்தான்!  மூவர் பிறந்ததும் திருவாரூரில்தான்!


தியாகராஜருடைய கொள்ளுத்தாத்தாவின்  பெயர் பஞ்சநதப்ரம்மம் என்பதை வச்சு இவுங்க திருவையாறு என்னும் ஊரில்  இருந்த குடும்பம் என்று சொன்னாலும்  இவங்க முன்னோர்கள் தெலுகுபேசும் பகுதியில் (அப்ப ஏது ஆந்த்ரா என்னும் பெயரெல்லாம்?) இருந்து இடம்பெயர்ந்து வந்தவுங்க. தாய்மொழி தெலுகு என்பதால்  இவருடைய பாடல்கள் எல்லாம் தெலுகு மொழியில்தான்  இருக்கு.
இவருடைய  தந்தை ராமப்ரம்மம் , தாய் சீதம்மா. தாய்வழித் தாத்தா  வீணை காளஹஸ்தய்யா திருவாரூரில் செட்டில் ஆனவர்.  (ஓ...  அதான் திருவாரூரில் பிறந்தாரா!!!) அப்புறம்  ராமப்ரம்மம் குடும்பத்துடன் திருவையாறு போயிட்டார்.  அக்கால வழக்கம்போல்  படிப்பு.  எட்டாம் வயசில் ப்ரம்மோபதேசம் (பூநூல் அணிவித்தல்) . அப்போ கிடைச்ச உபதேசம் 'ஸ்ரீராம  நாம' ஜெபம். அப்ப இருந்தே வீட்டில் இருக்கும் (ராமர் அண்ட் கோ) ஸ்ரீராம, லக்ஷ்மண, சீதா, ஹனுமன் விக்கிரகங்களுக்கு  நித்தியபடி பூஜை செய்யும் பொறுப்பையும் தானே ஏத்துக்கிட்டார்.  காலம் போகப்போக ராம ஜெபத்தின் எண்ணிக்கை பலகோடிகளாப் பெருகிக்கிட்டே போகுது!  இதுக்கிடையில் இவருடைய இசை ஆர்வம் பார்த்த தந்தை  ராமப்ரம்மம் 'ஸொண்டி வெங்கடரமணய்யா' என்ற  வித்துவானிடம்   சேர்த்துவிட்டார் .

 தஞ்சாவூர் அரண்மனை சபையில் அப்போ சங்கீதக் கலைஞர்கள் மட்டுமே 360 பேருக்குமேலே இருந்தாங்களாம்.  அவுங்க அத்தனை பேருக்கும் தலைமை வித்துவானா இருந்தவர்தான் ஸொண்டி வெங்கடரமணய்யா அவர்கள். அரசர் இசைப்பிரியர்  என்பதால் சரி ஆசனம் கொடுத்து அருகில்  வச்சுருந்தாராம்.

இசைக்கல்விக்கு அதிகநாள் ஆகலை.  நாரதரே தரிசனம் கொடுத்து  ஆசிகள் வழங்கினாராம்! பாடல்கள் இயற்றி ராகங்கள் அமைச்சுப் பாடுவது எல்லாம் இயல்பாவே வந்துருக்கு.  எல்லாம் கோடிகளில்  ஜெபிச்ச ராமநாம மகிமை! அனைத்தும்  பக்திப் பாடல்கள்தான்.  அதுவும் ஸ்ரீராமனைப் பற்றியே!
நேருக்குநேர் நின்று அவனோடு பேசறதைப்போல்தான்  எல்லாமே!
இந்தப் பாடல்களைக் கேட்டு அதிசயிச்ச தகப்பனார், அவைகளை அப்பப்பஎழுதி வச்சதால்தான்  நமக்கு இத்தனை பாடல்களும் கிடைச்சிருக்கு.  எழுத விட்டுப் போனவை எத்தனை ஆயிரமோ!

பார்வதி என்ற பெண்ணைக் கல்யாணம் செஞ்சு வாழ்க்கை. அவுங்க  அஞ்சே  வருசத்தில் சாமிகிட்டே போயிட்டாங்க:-(   சிலகாலம் கழிச்சு  பார்வதியின் தங்கை கமலாம்பாளைக் கல்யாணம் செஞ்சுவச்சாங்க பெரியவங்க.
இவருடைய பாடல்களின் புகழ் பரவ ஆரம்பிச்சதும் இவரிடம் சிஷ்யர்கள்  வந்து சேர ஆரம்பிச்சாங்க. அப்பவே 11 சிஷ்யர்கள் இருந்தாங்களாம்.  ஆஹா.... அப்ப வருமானத்துக்குப் பஞ்சமில்லை. கொழிச்சுருப்பாருன்னு நினைச்சுடாதீங்க.  அப்பெல்லாம் சங்கீதம் விற்பனைக்கான பொருள் இல்லையாக்கும்! கஷ்ட ஜீவனம்தான்.   இவர் சேர்த்த பெரும் செல்வம் எல்லாம்   கோடிகளில்  செஞ்ச ராமநாம  ஜெபமே! ராமனைத்தவிர  வேற ஒன்னுமே இல்லை என்பதால் வாழ்க்கை லகுவாகப் போயிருந்துருக்கு.


தஞ்சை மன்னர், இவருக்கு ஆள் அனுப்பி  தன்னுடைய சபைக்கு வந்து பாடச்சொல்லிக் கேட்டப்பவும்,  தனக்கு ராமனும் திருவையாறுமே போதுமுன்னு சொல்லி அனுப்புன நெஞ்சுரத்தை போற்றியே ஆகணும்.  (இந்தக் காலக் கணக்கில் பொழைக்கத் தெரியாதவர்!)

நிதி சால சுகமா?  ராமுநி சந்நிதி ஸேவா சுகமா?  நிஜமுகா பலுகு மனஸா......
இப்ப இதே பாடல்,  சங்கீதக் கலைஞர்களுக்கு நிதியைக் கொண்டு தருது பாருங்க!


அந்த ராமனே தன்னுடைய சகோதர்கள் லக்ஷ்மண, பரத, சத்ருகனோடும், மனைவி சீதா பிராட்டியோடும், பக்தனான ஹனுமனோடும் இவருடைய வீட்டுக்கு வந்தே தரிசனம் கொடுத்தாராம்!  இப்படி  ஒரு படம் , நம்ம பதிவர்  கீதா வீட்டில் பார்த்தேன்.  அற்புதம்!


தன்னுடைய எண்பத்தியொன்னாம் வயசில் அந்த ஸ்ரீராமனின் திருவடிகளிலேயே போய்ச் சேர்ந்துட்டார்.  அதுக்கு ஒரு மூணு வருசத்துக்கு முன்னே மனைவியும் சாமிகிட்டே போயிட்டாங்க:-(

இவருடைய  பாடல்களின் புகழ் மட்டும் சிஷ்யர்களால்  பெருகிக்கிட்டே போயிருக்கு.  இவர் மறைஞ்ச 60 வருசம் கழிச்சுத்தான்   இவருக்கு  குருபூஜை  செய்யணுமுன்னே தோணுச்சு போல. இவருடைய சமாதியைத் தேடிக் கண்டுபிடிச்சு  பூஜை செஞ்சுருக்காங்க. பத்துநாட்கள்  ஆராதனை!  அதுக்கு அடுத்த வருசம் இன்னும் கொஞ்சம் விமரிசையா நடந்துருக்கு.


திதி வரும் சமயம் மட்டும் குருபூஜை, ஆராதனைன்னு அமர்க்களப்படுத்திட்டு அப்புறம்  ச்சும்மாக் கிடந்த  சமாதி  இடத்தில்,  பெங்களூர்  நாகரத்தினம் அம்மாள்  1925 லே சின்னதா ஒரு கோவில் கட்ட தொடங்கினாங்க.  அப்புறம் தன்னுடைய  செல்வத்தையெல்லாம்  செலவு செஞ்சு     1938லே  இப்ப இருக்கும்   வால்மீகி மண்டபம்  என்னும்  கோவிலை ரொம்ப அழகாவே கட்டி இருக்காங்க.


இதுக்குள்ளே இந்தத்  தியாகராஜர் ஆராதனைகள் ஃபேமஸாகி ,  சங்கீதக் கலைஞர்கள் எல்லாம்  அங்கே வந்து  சமாதி முன்  கூட்டமா அமர்ந்து பாடுவதுன்னு ஆரம்பிச்சது.  இதுலேயும்  பெண்கள்  பாடக்கூடாதுன்னு  ஒரு குழு சொல்லஆரம்பிக்க, நாகரத்தினம்மாள் 'அப்படியா இருக்கட்டுமு'ன்னு  சமாதிக்குப் பின்பக்கம்  பெண்கள் அமர்ந்து பாட வழி செஞ்சாங்க. இதுலேயும் பெண்களுக்குப் பக்க வாத்தியம் வாசிக்கமாட்டோமுன்னு ஒரு சிலர் ஆரம்பிச்சு......    போதும் போங்க.....


எல்லாம் இப்போ ஒரு வழியா சமரசம், சமாதானமெல்லாம் ஆகி   வருசாவருசம் தியாகராஜ ஆராதனை , நம்ம தூர்தர்ஷன் துணையோடு  அமர்க்களமா நடக்குது.  முந்தியெல்லாம் ஆளாளுக்கு  ஒரு  ஆஃப்கீயில் பாடிக்கிட்டு  இருந்ததையெல்லாம்   சிம்ஃபொனி ஸ்டைலுக்குக் கொண்டு வந்தவர்  நம்ம பாலமுரளின்னு  முந்தி எப்பவோ  கேள்விப்பட்டதுண்டு.

 இவ்வளவு தூரத்துக்கு   முயற்சி எடுத்து, இதைக் கொண்டுவந்த புகழ்வாய்ந்த சங்கீதக் கலைஞர்களுக்கு   நம் வந்தனங்களை இங்கே பதிவு செஞ்சுக்கறேன்.


இவ்ளோ முயற்சி செய்து இங்கே கோவில் கட்டுன நம்ம பெங்களூர் நாகரத்தினம்மாளுக்கு  ஒரு சிலை வைக்கலாமுன்னு  யாரோ  சொல்ல, அது கூடவே கூடாதுன்னு மல்லுக்கட்டுனவங்களையும்  சொல்லத்தான் வேணும்.   இது என்ன பாலிடிக்ஸோ? பெருந்தன்மையா நடந்துக்கத் தெரியலை பாருங்க:-(



இந்தக் கோவிலுக்குள்தான் இப்போ போறோம்.  நம்மைத்தவிர ஈ, கொசு உள்ளே இல்லை.  எங்க அம்மம்மாவின் நினைவுக்காக நானும்  அங்கே,  அவுங்க எப்போதும் பாடும்  'ப்ரோச்சே வாரு எவருரா'வையும் 'ராம நன்னு ப்ரோவரா' வையும்   என்' திவ்ய சாரீரத்தில்' சுமாராப்  பாடிட்டு வந்தேன். தியாகப்ரம்மம் கோச்சுக்கமாட்டார் என்ற நம்பிக்கைதான்! தரிசனம் முழுசும் கம்பிக்கிராதி வழியாத்தான்!  இவர் பூஜித்த ராமலக்ஷ்மண சீதா,ஹனுமன் விக்கிரகங்கள் இருக்கான்னு  தேடினேன். ஊஹூம்....

வெளியில் சில ஆடுகள் கச்சேரி பந்தலுக்குப் போட்டுருக்கும் மண்ணில்.

சமாதி கோவிலைத் தொட்டடுத்து  காவிரி நதி.  ஆத்துக்கு அந்தாண்டை கைகூப்பி நிற்கும் அனுமன் சிலை.  ஆற்றில் பெண்கள் குளிச்சுக்கிட்டு இருந்ததால்  இங்கே இருந்தே க்ளிக்கினேன்.  படம் சுமாராத்தான் வந்தது.

கோவிலுக்குக் கொஞ்சம் தள்ளி  இன்னும் சில சின்னக் கோவில்களும் (சந்நிதி?)  தியாகராஜஸ்வாமிகளின்  சீடருக்கான( ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர்)  நினைவில்லமும் இருக்கு. அங்கேயெல்லாம் போகலை.

வால்மீகி மண்டபமென்னும்  பெரிய ஹாலில்  சுவர் ஓரமா  நிறைய  சிலைகள் வச்சுருக்காங்க.  அங்கே எடுத்த படங்களைத்தான்  இந்த பதிவில் அங்கங்கே போட்டு வச்சுருக்கேன்.


சத்குருவைப் பற்றி இணையத்தில் தேடினபோது, ஒரு அருமையான தளத்தைப் பார்த்தேன்.  ரொம்ப நல்லா விவரமா எழுதி இருக்கார்  வி கோபாலன், தன்னுடைய 'பாரதி பயிலகம் வலைப்பூ' என்னும்  தளத்தில்.  இதிலிருந்துதான்   தியாகப்ரம்மத்தின் வரலாறு எனக்குக் கொஞ்சம் தெரியவந்தது.  அவருக்கு  என் மனம் நிறைந்த நன்றிகளை இங்கே தெரிவிப்பதில் மகிழ்ச்சி.





PIN குறிப்பு:  இந்தப் பதிவை என் அம்மம்மாவுக்கு சமர்ப்பிக்கின்றேன்.  மேலோகத்தில் இருந்து பார்த்து மகிழ்ச்சி அடையட்டும்.

தொடரும்.....:-)



22 comments:

said...

திருவையாற்றுக்கு அழைத்துச் சென்றமைக்கு அருமை. அதைவிட அம்மம்மாவுக்கு சமர்ப்பித்தது மிக அருமை. மன நிறைவாக இருந்தது.

said...

திருவையாற்று பற்றிய விளக்கத்திற்கு நன்றி அம்மா...

said...

mikavum nanri teacher. pinnadi thirumbi parunga, unga koodave nanum unga eluthai padipathan moolama pinnal vanthu kondullan.

said...

என்ன தான் திருவையாறு பக்கத்தில் இருந்தாலும் போய் பார்க்க வேண்டும் என்று தோனவே இல்லை! இசையில் அவ்வளவு ஆர்வம்.

said...

தியாகராஜரின் கீர்த்தனைகளின் பலம் பாவம். சாகித்யத்தில் பெரிய கவித்துவங்களையெல்லாம் செய்யவில்லை. ஆனால் எளிய பாவம் அந்தச் சாதாரண வரிகளை உச்சியில் ஏற்றி வைக்கிறது. "ராமன் எத்தனை ராமனடி" என்று எல்லாரும் பாடலாம். ஆனால் சுசீலாம்மா பாடும் போதுதான் அந்தப் பாடல் தெய்வநிலை அடைகிறது. ஏனென்றால் அதிலிருக்கும் பாவம்.

எனக்கு மிகவும் பிடித்தவை மூன்று தியாகராஜ கிருதிகள்.
1. ஏதீருக நனு தயஜோசெதவோ இனவம் தோத்தம ராமா.. நா தரமா பவசாகர மீதனி நளின தளேக்‌ஷன ராமா
2. மானச சஞ்சரரே ப்ரம்ஹனி மானச சஞ்சரரே...
3. தொலி சேயு நே ஈ பூஜா பலமு இலாகே..

பெண்கள் பாடக்கூடாது. பெண்களுக்கு வாசிக்க மாட்டோம். பெண்களுக்குச் சிலை வைக்கக்கூடாது. ஆண்கள் என்று தன்னை நினைத்துக் கொள்கிறவர்களுக்குத்தான் எவ்வளவு பேடித்தனம்.

said...

பாவ பூர்வமான பதிவு. உங்களுடனேயே வந்து நானும் ப்ரோச்சேவா பாடினது போல ஒரு உணர்வு. உங்கள் அம்மம்மாவின் உள்ளம் நிச்சயம் குளிர்ந்திருக்கும்.

said...

ஆஹா தியாகப்ரம்மம்....ராமா நீ சமானமெவரு.....உமக்கு யார் நிகர் ஐயா! தியாகபிரம்மத்திற்குத்தான்...

அந்த ஆஞ்சு கைகூப்பியா இருக்கார்? இல்லையே தியாகைய்யாவின் கீர்த்தனத்திற்குத் தாளம் போடுவது போல அல்லவா இருக்கு...அருமை....

படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு சகோதரி...

-கீதா

said...

பக்கத்திலே தான் என்றாலும் ஏனோ இதுவரை திருவையாறு சென்றதில்லை. அங்கிருக்கும் கோவிலுக்கும் செல்ல நினைத்திருக்கிறேன். எப்போது செல்வேன் என்பது “அவனு”க்கே வெளிச்சம்!

said...

படங்கள், மிக அற்புதம் டீச்சர்..
அப்படியே அந்தக் காவிரிக் கரை மணலில் ஓடி விளையாண்ட இன்பம் வருகுது!
துறைப் படிகளில் இறங்கி,காவிரியில் காலை வச்சீங்களா?:)

அந்த இரண்டு ஆடுகள், ஒன்னோடு ஒன்னு.. என்னவொரு லயமான வாழ்க்கை!
மனசுக்குள் வேற என்னமோ ஒன்னு தோனுது..
மனுசப் பிறவிகளை விட, அஃறிணைப் பிறவியே மேலோ?

பெண்களைப் பாடாதே, ஓரமாய்ப் போய்ப் பாடு, பக்கவாத்தியம் வாசிக்க மாட்டேன், தீட்டு- இந்த அல்பத்தனங்கள்-ல்லாம் இல்லாத "ஐந்தறிவே" போதும் போல!

(on a side note, நான் மிக மதிக்கும், லால்குடி ஜெயராமன் ஐயா அவர்களும், பெண்களுக்குப் பக்கவாத்தியம் (வயலின்) வாசிக்க மாட்டேன் என்ற "கொள்கை"யில் தான் இருந்தாரு..
கடைசி வரை, எம்.எஸ். அம்மாவுக்கோ, வசந்தகுமாரிக்கோ.. எவருக்குமே வாசிக்கலை:(

நான் மிக மதிக்கும் அன்பர்கள், என் மனத்தை மிதிப்பவராகவும் ஆகி விடுகிறார்கள்.. முருகா!)

said...

//நிதி சால சுகமா? ராமுநி சந்நிதி ஸேவா சுகமா?
இப்ப இதே பாடல், சங்கீதக் கலைஞர்களுக்கு நிதியைக் கொண்டு தருது பாருங்க!//

ha ha ha
ஒங்க கிட்ட புடிச்சதே இதான் டீச்சர்.. உண்மையைத் தொபுக்கடீர்-ன்னு போட்டு ஒடைச்சிருவீங்க.. ஆனா எங்கோ ஒரு ஊடால, பதிவின் நடுவாப்புல:)

தியாகராஜரின் பாடல்கள் சிறக்கப் பெருங் காரணம் = அவரின் இந்த "ஆத்மார்த்தமே"! இசை அலங்காரம் இல்லை!
ரா ரா நா இன்ட்டி ராமய்யா
-ன்னு "லோக்கல்" மொழியில் தான் அன்பு பொழிந்தோங்கும்!

தியாகராஜரை விட... இசை அலங்காரத் திறமை உள்ள முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்!
ஆனா மூவருள் முதல்வர்= தியாகராஜர் தான்..
ஏன்னா.. அந்த உள்ளம் கசியும் தன்மை; ஆழ்வார்களின் "ஆழும்" தன்மை!
(ஆழ்வார்கள், இராமானுசர் மீதும் சிலவே சில கீர்த்தனைகள் எழுதியுள்ளார் - தெலுங்கு மொழியில் தான்)

தியாகராஜர், எளிமையான மொழியில், எழுதி விட்டதாலேயே, அவருக்கு "இசை அலங்கார ஞானம்" இல்லை-ன்னு தப்புக் கணக்கு போட்டுறாதீக..
பல புதிய ராகங்களை, தருவித்துக் கொடுத்தவரே தியாகராஜர் தான்! பல கடினமான தத்துவப் பாடல்களும் எழுதி இருக்காரு..
ஆனா, "ஞானம்" என்பதை விட, "பக்தி" என்பதில் நின்று விட்டதால்.. இந்த எளிமை வந்துவிட்டது!

தியாகராஜருக்கும் முந்தைய..., அன்னமய்யா, ராமதாசு.. போன்றவர்களும்= இந்த எளிமையே!
பின்னாளில் தான் இசை -> சாஸ்த்ரீய இசை -ன்னு இறுகி இறுகி,
இலக்கண வாத்திப் பண்டிதர்களால், ரொம்ப "அலங்காரம்" என்று ஆகிவிட்டது:(

சில தியாகராஜ கீர்த்தனைகள்.. தமிழில் (மெட்டு மாறாமல், மொழிபெயர்ப்பு)
http://kannansongs.blogspot.com/search/label/languages2tamil?m=1

துளசி தளமுலசே... சந்தோஷமுகா, பூஜிந்து..
துளசி தளம் அதினால்.. மகிழ் திகழ்ந்தே, பூசித்து..

said...

சுசீலம்மாவின் இராமன் எத்தனை இராமனடி.. நல்லதொரு எடுத்துக்காட்டு, இந்தப் "பாவனை"க்கு..
**பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூடலாமே**

// ஏ தீருக நனு தயஜோ செதவோ// = இது தியாகராஜர் அன்று! ராமதாசு எ. பத்ராச்சலம் ராமதாசர்
சங்கராபரணத்தில், வாணி ஜெயராம் குரலில், பேரின்பம்:)

//மானச சஞ்சரரே// = இது சதாசிவப் பிரம்மேந்திரர்; அதே சங்கராபரணம்:)

தொலி நேனு சேசின
பூஜா பலம் இலாகே.. இது தியாகராஜர் தான்.. நன்றி, சிறப்பான பாடல்களை நினைவூட்டியமைக்கு!




said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ஐயாறப்பன் கோவில் ரொம்ப அழகா இருக்கும். போனமுறை போய் வந்து எழுதியது இங்கே!

http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-9.html

எங்க அம்மம்மா ஒரு சுவாரசியமான மனுஷி. பாட்டு டீச்சரா ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை செஞ்சவங்க.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

கூடவே (பின்னால்) வர்றதுக்கு ரொம்ப நன்றி. பயமில்லாமல் முன்னால் போகிறேன்.

said...

வாங்க குமார்.

இசை ஆர்வம் இல்லைன்னா பரவாயில்லை. ஆனால் பஞ்சநதீஸ்வரர் (ஐயாறப்பர்) கோவில் அட்டகாசமா இருக்கும். அங்கே பிள்ளையாருக்கு ரெண்டு மனைவிகள் இருக்காங்க!

said...

வாங்க ஜிரா.

மூணுக்கு ஒன்னு பாஸ். மற்றவை சதாசிவ ப்ரம்மேந்திரர், ராமதாசர்.

யூ ட்யூப்லே சுதா ரகுநாதன் பாடும் சதாசிவப்ரம்மேந்திரர் பாட்டுகள் இருக்கு. ஒரு நாள் கேட்டுப் பாருங்க. சூப்பர்!

நீங்க சொன்ன 'பாவம்' உண்மைதான். பக்தி ரஸம் சொட்டச்சொட்ட அனுபவித்துப் பாடிய மனோபாவம்!

said...

வாங்க ரஞ்ஜனி.

அனுபவித்தமைக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க துளசிதரன்.

ஆஹா.... இந்த அனுமனைப் பார்த்தீங்களா.... நான் க்ளிக்கும்போது நமஸ்காரம் பண்ணிட்டு, உங்களோடு சேர்ந்து இப்போ தாளம் போடறாரே:-))))

ராமா ராமான்னு உருகி உருகிப் பாடுவதைக் கேட்டதும் ஆஞ்சி வந்துட்டாரே!

ராமா நீ நாமம் எந்த்த ருசிரா............

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோவில் ரொம்ப அழகா இருக்கும். சான்ஸ் கிடைச்சால் கட்டாயம் போய் வாங்க. குளமும் படிக்கட்டுகளும் சூப்பரா இருக்கும். கோவில் திருவிழா சமயங்களில் இரவில் அந்தக் குளக்கரைப் படிகளில் இருந்து கதை அளந்ததெல்லாம் நினைவுக்கு வருது!

said...

வாங்க கே ஆர் எஸ்.
தன்ணீரில் இறங்கறதெல்லாம் மறந்து ரொம்ப நாளாச்சு. கடலில் கூட கால் நனைப்பதில்லை :-(
அதென்ன ரெண்டாடு? மூணாடாக்கும், கேட்டோ!
நம்ம அநந்தபத்மநாபன் அஃப் திருவனந்தபுரம், எனக்காக துளசி தளமுலச்சே பாடினான் தெரியுமோ? கண்டுக்கிட்டானேன்னு கண்ணாலே நீர் விட்டேன்!
நண்பருக்கு பதில்சொல்லிட்டீங்க. டேங்கீஸ்.
தியாகராஜரும் நம்ம க்ரூப்தான். கடவுளை உச்சாணிக் கொம்புலே வச்சு அண்ணாந்து பார்க்காமல், நெருங்கிய நண்பன் போல் தோளில் கை போட்டுக்கிட்டு சகஜமா பேசறதுதான் அவருக்கும் பழகிப்போயிருக்கு. நம்ம வீட்டுப் பெருமாள் தினம் தினம் என் பேச்சைக்கேட்பார். ஆனால் பதில் சொல்லமாட்டார்:-)))

said...

திருவையாறு போகும் ஆசைத்தூண்டும் பகிர்வு!

said...

வாங்க தனிமரம்.

திருவையாறு கோவிலும் ரொம்ப பெரிய கோவில்தான். பழமையானதும்கூட.

தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் சுவாரசியமான இடங்கள் நிறைய இருக்கு! சான்ஸ் கிடைச்சால் விட்டுடாதீங்க.