Wednesday, July 15, 2015

பெருமாளின் ஃபேவரிட்டான பஞ்ச கமல க்ஷேத்ரம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 66)

திருச்சி சங்கத்தில் இருந்து கிளம்பும்போது மணி எட்டே முக்கால். காலை உணவு எல்லாம் வழக்கம்போல்தான்.  இங்கே ரெஸ்ட்டாரண்ட் நல்லாவே இருந்தாலும், அடைச்சுத் தின்னவயிறு வேணுமே!  இன்றைக்கு  திவ்யதேசக்கோவிலான  ஸ்ரீ ஹரசாபவிமோசனப்பெருமாளைத் தரிசிக்கறோம்.  திருச்சி தஞ்சாவூர் சாலையில் போறோம்.  ஆனா தஞ்சாவூருக்குள் போகாமல் பைபாஸ் பண்ணி திருக்கண்டியூர் போகணும்.  76 கிமீ தூரம்.  நமக்கு ஒன்னரைமணிக்கூறாச்சு.



மூணே நிலையுள்ள ராஜகோபுரம்.  கொஞ்சம் பளிச்சுன்னுதான் இருக்கு.  108லே இது 15ன்னு போர்டு சொல்லுது. பலிபீடம், கொடிமரம் கடந்து உள்ளே போறோம்.  ரொம்பப் பழைய கோவில்னு பார்த்த மாத்திரத்திலேயே தெரியுது.  பிரகாரத்தில் தரையெல்லாம் குண்டும் குழியுமா இருக்கே:(  கோவில் உற்சவங்களுக்குப் பந்தல் போடத் தரையில் குழி தோண்டி இருப்பாங்க போல. விழா முடிஞ்சு  மூங்கில்களை எடுத்ததும் அந்தப்பகுதிக்குப் பொருத்தமான  கல்மூடி ஒன்னு போட்டு வைக்கலாம்.  வேணும்போது எடுக்கவும் வேண்டாதபோது மூடவும் லகுவாக இருக்கும். ஆனால்.....


மூலவர் கமலநாதர்  நின்றகோலத்தில் கிழக்குப் பார்த்து ஸேவை சாதிக்கிறார். கூடவே  ரெண்டு பக்கமும் ஸ்ரீதேவி,பூதேவியரும்  இருக்காங்க.  இவருக்கு  ஹரசாப விமோசனப்பெருமாள் என்ற பெயரும்  உண்டு. அவரை தரிசனம்  செஞ்ச கையோடு பிரகாரத்தை வலம் வர்றோம். வலம் போகும்போதே   பெயர்க் காரணக்கதையையும்  சொல்லிக்கிட்டே போறேன்.   உத்தமர் கோவில்(பிக்ஷாண்டவர் கோவில்) திரு அன்பில்  சுந்தரராஜன் கோவில்களுக்கு இருக்கும் அதே கதைகள்தான்.

ஷார்ட் ஹேண்ட் எழுதறாப்போலச் சொல்லிட்டுப்போகலாம்.  பிரம்மனுக்கும் சிவன் போலவே ஆதியில்   அஞ்சு தலை. அதனால் கர்வம் அதிகமா போச்சு. சிவன் கோபத்தால் பிரம்மாவில் தலையைக் கிள்ளினதும்   கைநகத்தோடு தலை ஒட்டிக்கிச்சு. அந்தக் கபாலத்தையே பிச்சையெடுக்கும் திருவோடா வச்சு சமாளிக்கிறார். கூடவே ப்ரம்மஹத்தி தோஷமும் பீடிக்க,  சாபத்தைப் போக்கப்  பெருமாளை வேண்டிக்கறார்.  உத்தமர் கோவிலில் தரிசனம் செஞ்சப்போ மஹாலக்ஷ்மி கபாலபாத்திரத்தில் பிச்சை போட்டதும்  கையில் ஒட்டிக்கிடந்த மண்டை ஓடு விடுபட்டது.  பாபம் விமோசனம் கிடைச்சது. அந்த நன்றிப் பெருக்கில்  திரு அன்பிலுக்கும்போய்  வடிவுடைநம்பியை வணங்கினார்.

இங்கே  இதே கதையில் சின்ன வேரியேஷன்.  கை நகத்தோடு  கபாலம் ஒட்டுனது வரையில் ஸேம் ஸேம்.  பாபநாசம் ஆக  மார்க்கம்தான் வேற!   பெருமாளிடம் பிழியப்பிழிய  அழுது  வேண்டும்போது,   'நீர் இந்த பூலோகத்தை வலம் வந்து எங்கெங்கே  எனக்குக் கோவில்கள் இருக்கோ அங்கெல்லாம் போய் தீர்த்தத்தில் நீராடி, எட்டெழுத்து மந்திரம் (அஷ்டாக்ஷரம்) ஜெபித்து  கருவறை விமானத்தைப் பார்த்தபடி  வலம் வந்து , மூலவரை  தரிசனம் பண்ணிக்கிட்டே வாரும்' என்றார்.

"அடராமா.....  உமக்குத்தான்  கணக்கு வழக்கே இல்லாமல் எக்கச்சக்கமா  கோவில்கள் இருக்கே!  எல்லாத்தையும்  முடிச்சுட்டு வர்றதுக்குள்ளே  கபாலத்தின் கனத்தால் கையே ஒடிஞ்சு விழுந்துரும்"

"ஓ... அப்ப ஒன்னு செய்யும்.  என் கோவில்களில் சிறப்பாக இருப்பவைகளுக்கு    திவ்யம், ஸைத்தம்,ஆர்ஷம்,  ஸ்வயம் விக்தம்  நாலுவித அம்சங்கள் இருக்கும்.   திவ்யதேசங்களா இதெல்லாம் அமைஞ்ச திவ்யதேசங்கள் 106 இந்த பூலோகத்தில் இருக்குன்னாலும் இதுலே முக்கியமானது எட்டே எட்டுதான். அதுக்கு மட்டுமாவது போய்வரமுடியும்தானே? "

"ஓக்கே.  எட்டே எட்டுன்னா  பிரச்சனை இல்லை.  எந்தெந்த ஊர்னு  சீக்கிரம் சொல்லும். அப்படிப்போய் வந்தால்  கண்டிப்பா  பாபநாசம் ஆகிரும்தானே? "

" யோசிச்சுச் சொல்றேன். அவசரப்படுத்தாதீர். ம்ம்ம்ம்...  எழுதி வச்சுக்கும்....   பத்ரி, நைமிசாரண்யம், புஷ்கரம், அஹோபிலம்,  ஸ்ரீரங்கம், ஸித்தி க்ஷேத்ரம், திருக்குடந்தை, கண்டன க்ஷேத்ரம்.  எட்டு வருதா?  அங்கெல்லாம் போய்  நான் சொன்னமாதிரியே  அங்கிருக்கும் தீர்த்தத்தில் முழுகி எழும்போது, கபாலத்திலும் தீர்த்தத்தை நிரப்பிக்கணும். அப்ப அது அசைஞ்சு கொடுத்தால்  அதுதான்   பாபநாசம் ஆகுமிடம். அதுதான் இந்த எட்டுகளில்  மேலாது"

"சரி. எல்லாம் நோட்டட்.  இந்த கண்டன க்ஷேத்ரம் இதுவரை கேள்விப்படாத பெயரா இருக்கே"

" ஒரு  கோவில்  விசேஷமா இருக்கணுமுன்னால்...     பெருமாள், தாயார், விமானம்,புஷ்கரணி,  க்ஷேத்ரம் இந்த அஞ்சும் ஒன்னாச் சேர்ந்து  இருக்கணும். அப்படி இருக்குமிடம் இந்த 106 திவ்ய தேசங்களில் ரெண்டேரெண்டுதான். ஒன்னு திருச்சேறை, இன்னொன்னு திருக்கண்டியூர்.  அதுலேயும் இந்தத் திருக்கண்டியூரில்  மும்மூர்த்திகளுக்கும்  (உமக்கும்கூடத்தான் ஓய்! நன்னாக் கேட்டுக்கும்!) கோவில்கள் உண்டு.  மும்மூர்த்தி க்ஷேத்ரம் என்றுகூட சொல்லலாம். அந்தத் தலத்தை நினைச்சாலே  பாவங்கள்  நாசமாகி விமோசனம் கிட்டும் என்பதால்  கண்டியூருக்கு கண்டன க்ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு. ச்சும்மாச் சும்மா என்னிடம் கேள்விகேட்காமல் கிளம்பும். நலம் உண்டாகட்டும்"

சிவன்  கிளம்பினார். வரிசைக்கிரமப்படி வடக்கே இருந்து ஆரம்பிச்சுத் தெற்கே கடைசியா வந்து சேர்ந்தது இந்த திருக்கண்டியூருக்குத்தான். இதுவரை ஏழு இடத்திலும் அசைஞ்சு கொடுக்காத  கபாலம்  இங்குள்ள கமலதீர்த்தத்தில் முழுகி எழுந்ததும் லேசா  அசைஞ்சது.  தீர்த்தம் ரொப்பினதும்  தொப்ன்னு கையைவிட்டுக் கழண்டு அதே தீர்த்ததில் விழுந்தது அந்தக் கபாலம்!  தீர்ந்தது ஹரனின் சாபம்!


கோவிலுக்குள் ஓடிப்போய் நம்ம பெருமாளிடம்  நன்றி சொல்லி வணங்கினார். பெருமாளும் ஹரனின்  சாபம் விமோசனம் செய்த பெருமாளானார்! வலத்தில் இப்போ தாயார் சந்நிதிக்கு வந்திருந்தோம்.  கம்பிக் கதவு வழியா கமலவல்லி சந்நிதிக்குள்ளே கண்ணைச் செலுத்தி நமஸ்கரிச்சோம். சுத்தம் போதாது....


நம்ம ராமானுஜர், பொய்கையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்,  மணவாள மாமுனிகள் ஆகியோருக்கான சந்நிதியும் பராமரிப்பு இல்லாமல் இருக்கு.  ஆனால் இந்த சந்நிதிக்கு மேல்  கூரையில் வச்சுருக்கும் சிலைகள் மட்டும் எனக்குப் பிடிச்சிருக்கு!
பிரகாரத்திலேயே  நாகர்களுக்கு  மரத்தடியில் சர்ப்பக்காவு. அங்கே குட்டியா ஒரு பதுமன்,  அநந்தன்மேல் தாய்ச்சுண்டு இருக்கார்.சூப்பர்!

பிரகாரத்தில் தரையெல்லாம்  பாவி இருக்கும்  கற்களினிடையில் புல் முளைச்சுக்கற்களைத் தூக்கி விட்டுக்கிட்டு இருக்கு!  கவனமா நாம் காலெடுத்து வைக்கலைன்னா நகத்தைப் பேர்த்துக்குவோம்:(



கமலக்ருதி விமானம்.


ஆண்டாள் சந்நிதி மட்டும் திறந்து இருந்தது. எனக்காகவோ?  கள்ளக்குரலில் தூமணி மாடத்து பாடினேன் வழக்கம்போல்:-)  சாதாரண நூல்புடவையில் இருந்தாள்.


மதில் சுவரினடியில் இருக்கும் பொந்தில் ஒரு சிலை.  யாராக இருக்கும்?


கோவில் நந்தவனத்தில்  இருக்கும் பவளமல்லி  மரத்தில் இருந்து கொட்டிக்கிடக்கும் பூக்கள்!



கோவில் காலை எட்டரை முதல்  பனிரெண்டு வரையும் மாலை நாலரை முதல் எட்டுவரையும் மட்டுமே திறந்து   இருக்கும். நாலு காலப் பூஜை உண்டு.


பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிந்தந்துண்ணும்
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனோர் உலகமேத்தும்
 கண்டியூரரங்கம் மெய்யம்  கச்சிபேர் மல்லை யென்று
மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே.
என்று திருமங்கையாழ்வார்  மங்களசாஸனம் செஞ்சுருக்கார்.


அதென்ன பஞ்சகமல க்ஷேத்ரம் னு கேட்டால்,

பெருமாள் - கமலநாதன்
தாயார் - கமலவல்லி
விமானம் - கமலாக்ருதி
புஷ்கரணி- கமலபுஷ்கரணி
க்ஷேத்ரம்  - கமலாரண்யம்

இப்படி அஞ்சு கமலம்!


கோவிலுக்கு இன்னும்கூட சில கதைகள் இருக்குன்னு சொல்லுது இங்கே பத்தே ரூபாய் கொடுத்து வாங்கின தலபுராணம்!

முக்கிய கதைக்கு மட்டும் கொஞ்சூண்டு துள்சீஸ் மஸாலா தூவி இருக்கேன்!

இங்கெ பெருமாளுக்கு ப்ருகுநாதன், பலிநாதன் என்ற பெயர்களும் உண்டு.
பள்ளிகொண்டவனை மார்பில் எட்டி உதைத்த ப்ருகு முனிவர், அதன்பின் இப்படிச் செஞ்சுட்டோமேன்னு மனம் வருந்தியதும்,  அதெல்லாம் பரவாயில்லை.  குழந்தை பெற்றோரை மார்பில் உதைப்பதைப்போல்தான் என்றுசொல்லி அவருடைய அபசாரத்தை நிவர்த்தி செஞ்சதால் ப்ருகுநாதன் ஆனார்.

மகாபலி சக்ரவர்த்தி ஒருசமயம், பெருமாளுடைய   ரத்ன க்ரீடத்தை அபகரிச்சதும் அவருக்கு  ஸ்வர்ணதேயம் என்னும் பாபம் வந்து சேர்ந்து சித்தப்ரமை பிடிச்சது. தேசம்தேசமாப்போய்க்கிட்டு இருக்கும்போது இங்கேவந்து பெருமாளை ஸேவித்து,

'கோவிந்த தேவேசஹரே முராரே
முகுந்த க்ருஷ்ணாச்யுத  பத்மநாப
தாபத்ரயச்சேதக விச்வமூர்த்தே
மாம்பாலயஸ்வாசு கஜேந்த்ரபந்தோ'

 ன்னு ஸ்தோத்திரம் செஞ்சதும், பெருமாளே தரிசனம் கொடுத்துத் தன் கையில் இருக்கும் தாமரை மொட்டால் நிலத்தில் குத்தி ஒரு தீர்த்தம்  (கமலபுஷ்கரிணி) உண்டாக்கி அதில் மூழ்கி எழச் செஞ்சதும்  அவனுடைய பாபங்கள் எல்லாம் நிவர்த்தி ஆச்சு. அதனால் பெருமாளுக்கு பலிநாதன் என்ற பெயரும் உண்டானது. மகாபலி அப்புறம் பெருசா இந்தக் கோவிலைக் கட்டினானாம். இப்பவும் வருடம் ஒருமுறை மகாபலி  வந்து  ஸேவிக்கிறார்னு ஒரு ஐதீகம்.  எப்படியும் ஓணப்பண்டிகைக்கு   கேரளம் வரும்  சமயம் இங்கேயும் வந்துபோனால் ஆச்சு:-)


நம்ம சந்திரன் இருக்கானே அவனுக்குக் குஷ்டம் பிடிச்சுடுத்து.  காரணம்  தேவர்களின் குரு ப்ரகஸ்பதியின்  பத்னி தாரை மேல்  ஆசைப்பட்டுட்டான். (ஏற்கெனவே 27 மனைவிகள். அப்படி இருந்துமா?)  பின்னே இதே புஷ்கரணியில் மூழ்கி எழுந்ததும்   பாவத்தால் வந்த நோய் போச்சு.  பஞ்சபாதக தோஷ நிவர்த்தி  இந்த கமலதீர்த்தம்!


பத்து  ரூபாய்க்கு  இத்தனை கதைகள்.  எல்லாம் சரி.  கோவிலை பரிசுத்தமா வைக்காத பாவத்துக்கு  நிர்வாகமும் பயப்படாமல், அதான் புஷ்கரணி இருக்கேன்னு மெத்தனமா இருக்காங்க போல:-(



கிளம்பி ஒரு ரெண்டு நிமிட்லே   சிவன் கோவில் ஒன்னு கண்ணுலே பட்டது.  வீரட்டேஸ்வரர் கோவில்.  போகலாமான்னு யோசிக்கறதுக்குள்ளே  கார் கடந்து போயிருச்சு.


தொடரும்............:-)



23 comments:

said...

இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். தங்களது பதிவும், புகைப்படங்களும் மறுபடியும் அழைத்துச்சென்றுவிட்டன. நன்றி.

said...

கதை ரொம்பவே சுவாரஸ்யம் அம்மா...

பல இடங்களுக்கு அழைத்து செல்கிறீர்கள்... நன்றி...

said...

வேணும்போது எடுக்கவும் வேண்டாதபோது மூடவும் லகுவாக இருக்கும் ஐடியா? நாங்களெல்லாம் ஒரு வேலை ஆரமிச்சா அது அக்‌ஷய பாத்திரம் போல் கொடுத்துக்கொண்டே இருக்கிற மாதிரி தான் வேலை செய்வோம். வேலை முடிந்த மாதிரியே இருக்கக்கூடாது.இது பொது வி(யா)தி இங்கு.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றி.

said...

காளிங்கமர்த்தனன் - அந்தச் சுற்றுச் சுவரில் இருக்கும் சிறிய சிலை. சரியா?

இந்தக் கபாலக் கதைக்கு நூறு வகை இருக்கும் போல இருக்கே. எப்படியோ கபாலம் கழண்டு விழுந்துருச்சே.

இந்த மாதிரி பழைய கோயில்கள் அழகா இருக்கு. பராமரிப்பு இன்னும் நல்லா இருந்தா சிறப்பா இருக்கும்.

இதுவரைக்கும் எத்தனை திவ்ய தேசங்கள் கணக்காயிருக்கு டீச்சர்?

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தீர்த்த யாத்திரையில் கூடவே வருவதற்கு நன்றி.

said...

வாங்க குமார்.

ஆஹா.... இப்படி ஒரு விதி இருக்கோ!!!!! (சாலைகளிலும்) தோண்டினால் மூடமாட்டோம் என்றுகூட ஒரு விதி ஏற்கெனவே இருக்கே!

said...

பயணங்கள் நாம் போனாலோ, அல்லது மற்றவர்களது பயணக் கதைகளைப் படித்தாலோ தனி மகிழ்ச்சிதான். ஸ்தல புராணங்களில் சொல்லப்படும் கதைகள் சுவாரஸ்யம்.
எப்போதோ பல வருடங்களுக்கு முன் இந்தக் கோவிலை தரிசித்தது. ஒவ்வொரு தடவை உங்கள் தீர்த்த யாத்திரை அனுபவங்களைப் படிக்கும்போதும், மறுபடி அங்கெல்லாம் போகவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. உங்கள் எழுத்துக்களின் வலிமையா, அந்த இடங்களின் மகிமையா என்று தெரியவில்லை.
ஒரே தடவையில் பல திருத்தலங்களை சேவித்து விட்டு வரும்போது எந்தக் கோவில், எந்த இடம் என்று குழப்பம் வரும். நீங்கள் செய்வது போல எல்லாவற்றையும் மின்னாக்கம் செய்துவிட்டால் தேவைப்பட்ட போது படித்துக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் இந்த புத்தி இருக்கவில்லை.
உங்கள் பதிவுகள் மூலம் ஒரு நீண்ட யாத்திரை போவது நல்ல அனுபவம்.

said...

அருமையான படங்களுடன் கூடிய பதிவு.
நன்றி அம்மா.

said...

அற்புதம் ..கண்டியூருக்கு 4 கிமீ தொலைவில் என் பாட்டி ஊர் , சின்ன வயதில் போயிருக்கேன் ..இன்னிக்கு படிக்கும் போது மீண்டும் போன உணர்வு ....

said...

வாங்க ஜிரா.

களிங்கமர்த்தனம் போல ஆடும்போஸ் இருந்தாலும்....... அது இல்லையோன்னும் தோணுதே!

அதை ஏன் மதிலடியில் வச்சாங்க? ஒருவேளை பாதாளத்தில் இருந்து காளிங்கன் வர்றானோ? இல்லை எதாவது காவல் தெய்வமா? ஒன்னும் புரியலையேப்பா:-(

அநேகமா ஒரு 65 -70 இருக்கலாமோ என்னவோ ? ஒரு நாள் எண்ணிப் பார்க்கணும். கணக்குத் தப்பிப்போகுது நம்ம பதிவர் லதானந்த் பூலோக திவ்யதேசம் 106 ம் போய்ப் பார்த்துட்டார்.

said...

வாங்க ரஞ்ஜனி.


கோபாலும் 108 என்ற தலைப்பில் கோவில்விவரங்களை மட்டும் தனியாகத் தொகுத்து வைன்னு சொல்லிக்கிட்டே இருக்கார். பயணத்துலே சகல அனுபவமும் கலந்து கட்டியா வர்றதால் இதுக்குன்னே கொஞ்ச நேரம் செலவழிக்கணும். பார்க்கலாம். வேளை எப்போ வருமுன்னு!

எழுத்து வலிமையெல்லாம் ஒன்னுமில்லையாக்கும். எல்லாம் அந்தத் திருத்தலங்களின் மகிமை மட்டுமே!

said...

வாங்க ரத்னவேல்.

ரசித்து வாசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க சுமிதா.

மீண்டும் போன உணர்வா? அப்ப கொசுவத்தி ஏத்தியாச்சு:-)))))

said...

கதைகள் உங்கள் நடையில் அறிந்து கொள்வது வெகு சுவாரசியம் .கோவிலுக்கு நேரில் சென்றால் கூட சில சின்ன விஷயங்கள் கவனிக்காமல் விடுபட்டு விடும் . .நேரில் சென்றால் சின்ன சின்ன சுவாரசியங்கள் நம்மை ஈர்க்கும் . அனைத்தையும் எங்களுக்காக பதிவிடும் உங்களுக்கு நன்றிகள் பல பல .
அந்த சிலை நானும் களிங்கமர்த்தனம் என்று தான் நினைத்தேன் .

said...

கொட்டி கிடக்கும் பவளமல்லி அழகு !!

said...

நல்லாருக்கு கோவில் தரிசனம். ஆனால் இன்னும் நவம்பர் 2014லயே இருக்கீங்களே டீச்சர். கொஞ்சம் வேகமாக ஜூலைக்கு வரக்கூடாதா. (அப்பப்போ இப்போ உள்ள நிகழ்ச்சிகளை எழுதியபோதும்).

கோவில் வாரியா தல தரிசனத்தைத் தொகுத்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும். பேசாம கோபால் சாருக்கு அந்த வேலையைக் கொடுத்தால் என்ன?

said...

//பிரகாரத்திலேயே நாகர்களுக்கு மரத்தடியில் சர்ப்பக்காவு.
அங்கே குட்டியா ஒரு பதுமன், அநந்தன்மேல் தாய்ச்சுண்டு இருக்கார்.சூப்பர்!//

"தாய்ச்சுண்டு" இருப்பது-ன்னா என்ன டீச்சர்?

"தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய" தான் ஒங்க favorite திருப்பாவையா டீச்சர்? நனி நன்று!

//ஆண்டாள் சந்நிதி மட்டும் திறந்து இருந்தது. எனக்காகவோ?//

"ஆண்டாள்" - இந்தப் பதிவிலும் இப்போது இறந்து போன அத்தையை ஞாபகப்படுத்துறீங்களே?:(
சேதி சொல்லக்கூட முடியாதபடி, அலுவல் விமானத்தில் மாட்டிக்கிட்டு பாவியாகிப் போனேனே..

said...

//ஒருவேளை பாதாளத்தில் இருந்து காளிங்கன் வர்றானோ? இல்லை எதாவது காவல் தெய்வமா?//

உங்கள் யூகம் தான் சரி; அது காளிங்க மர்த்தனம் அன்று! அது "பாதாள "அரசன் = மகாபலி..
அப்படி ஒரு தோரணையா உக்காந்துகிட்டு இருக்கான்; அது நர்த்தனம் அல்ல!
மகாபலி-க்கு, ஹரசாப விமோசனப் பெருமாள், திருக்கண்டியூரில் பிரத்யட்சம் ஆனதால் (புராணப்படி).. பாதாளச் சுவரில் வச்சிப்புட்டாங்க, திக்பாலகர்களோடு:)
---

அந்தப் பவழமல்லிப் பூக்களை, அப்படியே அள்ளி எடுத்துக்கணும் போல இருக்கு!
கோயிலுக்கு ஒன்னா போகும் போது.. காதலி, காதலன் மேல், திரட்டிய பூக்களைச் சொரியும் காட்சி.. மனசுக்குள் வந்து போகுது:)

said...

//"ஓக்கே. எட்டே எட்டுன்னா பிரச்சனை இல்லை. எந்தெந்த ஊர்னு சீக்கிரம் சொல்லும். அப்படிப் போய் வந்தால் கண்டிப்பா பாபநாசம் ஆகிரும்தானே? "//

ha ha ha..
சிவபெருமான் மேல், பதிலுக்கு இவுங்க ஏத்துன பொய்க் கதைகளா?:)

பொதுவா, தீவிர சைவர்கள்.. பெருமாள், சிவன் காலடியில் வுழுந்தாரு,
தாமரைப் பூக்குப் பதிலாய்க் கண்ணைத் தோண்டிக் குடுத்துச் சக்கரம் வாங்குனாரு,
ஈசனின் அடிமுடி தெரியாமல் தவிச்சாரு
நரசிம்ம அவதாரமா? ஈசன், சரபேஸ்வரா மாறி, அதைக் கொன்னாரு
வாமன அவதாரமா? ஈசன், சட்டைநாதரா மாறி, வாமனன் தோலை உரிச்சிச் சட்டையாப் போட்டுக்கிட்டாரு
மயில், வைகுண்டத்தில் dropping போட்டே அழிச்சிருச்சி etc etc:))

"இவுங்க" புராணத்துக்கு ஈடு கட்ட, "அவுங்க" பதில் புராணம் எழுதி வச்சி..
பாவம், ஈசன் கையில் கபாலத்தை ஒட்டிப்புட்டாய்ங்களே.. பாவிகளா:)

ஆனா, பொய் சொன்னாலும், பொருந்தச் சொல்லத் தெரியலை போல..
108 திவ்ய தேசம்-ல்லாம் புராணச் சிவ-விஷ்ணு காலத்துல கிடையாது;
அப்பறம் எங்கிருந்து 108 இல் சிறப்பான 8? அந்த 8-இல் சிறப்பான 1 = திருக்கண்டியூர்? :)

108 திவ்ய தேசம் என்பதே = அழ்வார்கள் காலத்துக்கு அப்பறம் தான் (5th - 7th CE)

ஆழ்வார்களின், ஈரத் தமிழால் நனைக்கப்பட்டால் மட்டுமே.. வெறும் தேசம்->திவ்ய தேசம் ஆகும்!
108 திருப் பதிகள் (திவ்ய தேசங்கள்)
ஆனா, ஹிந்துக்களின் so called மகா புனிதமான காசி= 108 இல் இல்லை! ஏன்?

ஏன்னா.. காசியை= ஆழ்வார்கள் பாடவில்லை! மங்களாசாசனம் செய்யவில்லை..
புராணப் பொய்களை எல்லாம் தாண்டி.. அன்பால் கசிந்து, உள்ளத்தால் "ஆழ்ந்து" போன, "ஆழ்வார்" பதிகளே= திவ்ய தேசங்கள் ஆகின!
இதுல சமயப் போட்டிப் பொய்க் கதைகளோ, ஸ்வயம் உதறாத மதப் பிடித்தங்களோ இல்லை! அதான் காசி கூட இல்லை:)

இதை உணர்ந்தால், இந்தப் போட்டிப் பொய்க் கதைகளை நம்பாமல்..
108 திருப் பதிகள் (திவ்ய தேசங்கள்) = ஆழ்வாரின் "ஈரத் தமிழ்" பெற்றவையே -ன்னு மனப்பூர்வமா உணரலாம்!

ஆனா நம்ம மக்களுக்கு, "மனம்" பிடிப்பதில்லை; "மதம்" தான் பிடிக்கிறது.. என்ன செய்ய?:)

said...

வாங்க சசி கலா.

பேசாம அந்தப் பவளமல்லிகைகளை மாலையாக் கோர்த்து ஆண்டாளுக்குப் போட்டுருக்கலாம்னு இப்பத்தோணுது. ஆனால்கீழே சிதறிக் கிடந்ததைப் போடலாமான்னு தெரியலையே:(

காளிங்கமர்தனம் இல்லையாமே!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அப்படியெல்லாம் பயணத்தை சுருக்கமுடியாது. பின்னாளில் புத்தகமா வரப்போகுது. ஆமாம்....
அரக்கப்பரக்க ஜூலைக்கு ஓடிவந்து என்ன பண்ணப் போறோமாம்?

அடுத்த பயணம்வரை இழுத்துக்கிட்டுப் போகுமோன்னு இப்ப எனக்கே சம்ஸயம் வந்துருச்சே:-)))

அடுத்த வருசம் கோபால் வேலையிலிருந்து ஓய்வெடுக்க உத்தேசம். அப்போ இந்த வேலையைக் கொடுக்கலாம்:-) கெடுக்காமலிருக்கணுமேன்னு இப்பவே பெருமாளை வேண்டிக்குங்கோ!

said...

வாங்க கே ஆர் எஸ்,

அது.... தாச்சுண்டு என்பதுதான். சேஷன் தாய் போலத் தாங்கிக்கறானேன்னு தாய்ச்சுண்டு பண்ணினேன்:-)
அத்தை பெருமாளிடம் போயாச்சு. சேதி கிடைக்கவோ, உடனே சேதி அனுப்பவோ நமக்கு ப்ராப்தம் இல்லை என்பதுதான் ...வேறென்ன...:-(
ஓ.... அது அந்த பாதாள (பாஹு)பலியா? கதை பொருந்தி வருது:-)

பவளமல்லி/காதலன்/காதலி..... ஹா இது என்ன ஆன்மிகத்துலே லௌகீகம் கலந்து போச்சே!
இந்த 108 சமாச்சாரத்தை அப்பவே நினைச்சேன். ஏற்கெனவே ஆழ்வார்கள் விஜயத்தின்போது டூர் கைடு சரி இல்லைன்னு புலம்பியும் இருக்கேன். நல்ல கோவில்கள் பலதையும் ஐட்டி'நரி'யில் போடலை பாருங்க:-( ஆனாலும் கோவில் புராணத்துலே இருக்கேன்னுதான் அந்த கதையை எடுத்துப் போட்டேன். இடையில் வந்த கதை:-) ரெண்டு க்ரூப்பும் முட்டி மோதிக்கிட்ட காலம்.

யானைக்கு மதம் பிடிக்கும்போது, அதை ஆட்டிவைக்கும் மனுசனுக்கும் மதம் பிடிச்சுத்தான் கிடக்கு. நம்ம தருமி மட்டுமேமதம் பிடிக்கலைன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்:-)