Monday, July 06, 2015

தேன்கூட்டுக்குள்ளே...... (தலைநகரத்தில் ! பகுதி 10)

இன்றைக்கு முக்கியமாப் பார்க்க வேண்டியது தேன்கூடு.  உள்ளே எப்படித்தான் இருக்கும்?  அனுமதி கூட இலவசம்தான்.  ஆனால்  கொட்டு தாங்க முடியுமா?  பயம் வேணாம். வாங்கன்னு சொல்லியிருந்தாங்க.  நாம்  அங்கிருக்க வேண்டியது  காலை 9.15க்குத்தான்.  அக்கம்பக்கமெல்லாம் சுத்திப் பார்க்கலாமேன்னு  ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு எட்டேகாலுக்கே கிளம்பினோம்

.
இன்றைக்கு ஈஸ்ட்டர் மண்டே.  அரசு விடுமுறை என்பதால் தெருவில் போக்குவரத்தே இல்லை. வெறிச்சோடிக் கிடக்கு.  போய்ச் சேரவேண்டிய இடம் சரியா ஒரு கிமீ தூரத்தில்.  நின்னு நிதானமா நடந்தே போயிறலாம்.  ஆனால்  கைவசம் கார் ஒன்னு இருக்கே:-)  கூகுள் சொன்ன அதே மூணு நிமிட்தான் ஆச்சு நமக்கும்!வளாகம் ரொம்பவே பெருசு.  தேன்கூட்டுக்கு அக்கம்பக்கம் ஈக்களொன்னும் காணோம்! இன்றைக்கு அரசு விடுமுறைன்னா ஈக்களுக்குமா?  ச்சும்மா.....  எங்க நாட்டின் நாடாளுமன்றத்துக்குத்தான் இந்தப்  பெயர் வச்சுருக்காங்க.
 தெருவோரப் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திட்டு  போனோம்.  பார்க்கிங் மீட்டர் இருந்தாலும்,  பப்ளிக் ஹாலிடேஸ் என்பதால்  இன்றைக்கு  இலவசம்.  நடைபாதையை ஒட்டி இருக்கும் தோட்டத்தில்  ரெண்டு  நெடும் தூண்கள்  (White Pou).  ஆதிகாலத்துலே இந்த ஏரியாவிலிருந்த ரெண்டு மவொரி குழுக்களின் எல்லைகளாம். அப்போ நடுவிலிருப்பது  நோ மேன்'ஸ்
லேண்டா:-)

 உண்மையைச் சொன்னால்  இப்ப நாம் நிக்கும் இடம் ஒரு காலத்தில் கடற்கரைதான்.  மவொரிகுழுக்கள் படகுகளை கொண்டு வந்து  விட்டு வைக்கும் இடம்!  1855 இல் வந்த  8.2 அளவிலான நிலநடுக்கம் கடலுக்குள் கிடந்த நிலத்தை ஒரு பக்கம் தூக்கி விட்டுருந்துச்சு.   ஊருக்கு இடம் வேணுமுன்னு  1874 இல்  அதே இடத்தில் கடலில் இருந்து  சுமார்  86  ஏக்கர் இடத்தை மீட்டெடுத்து அங்கேதான்  அரசு அலுவலங்களைக் கட்டி விட்டுருக்காங்க.நகரின்  போர் நினைவுச் சின்னமும்  இங்கேதான் இருக்கு.  ரெண்டு பக்கமும் சிங்கங்கள். கடந்து நேரப்போனால்  சின்னதா  வாசல் உள்ள அறை. பூட்டி இருக்கு.  ஆனால் கண்ணாடி வழியே உள்ளே பார்க்கலாம். வாசலுக்கு ரெண்டு பக்கமும் முதல் & இரண்டாம் போர் நடந்த காலங்களின்  விவரம்  உள்ள  கேடயங்கள். அறைக்குமேல் நெடுநெடுன்னு  உசந்து போகும் கோபுரத்தின்(!) மேல்  குதிரை ஒன்னு  ஒருமுன்னங்காலைத் தூக்கி நிற்க, அதன் மேல் உள்ள வீரன் , கடவுளே  காப்பாத்துன்னு  வானை நோக்கி ஒரு கை நீட்டிக் கூவுகிறார்! போருக்குப் போகும் குதிரை  வாலைக்கூட வெட்டிருவாங்களா என்ன?  சின்னதா இருக்கே! (எனக்கென்னமோ இப்படித்தான் தோணுச்சு)

சாலையின் எதுத்த  பக்கமும் அரசு அலுவலகங்கள் உள்ள கட்டிடங்கள். கட்டிட முகப்பில் Coat of Arms for Wellington County.  ஒத்தைக்கொம்பு குதிரையும்  சிங்கமும்! எல்லாமே நாட்டின் சரித்திரம் சொல்லுபவை.

முழுக்க முழுக்க மரத்தால் கட்டுன கட்டிடங்களாம்.  ஆனால் இதுக்கு ஸ்டோன் பேலஸ்ன்னு பேர்!   உள்ளே வந்து பாரேன் ன்னு ஒரே வேண்டுதல் வேற!

கூப்புடறாங்களேன்னு போனால்  தோட்டத்தில் நிக்கறார்  ரைட் ஹானரபிள் பீட்டர்  ஃப்ரேஸர்.  1940   முதல் 1949 வரை பிரதமரா இருந்துருக்கார்.  ரெண்டாம் உலகப்போர்  நடந்த காலக்கட்டத்தில் ரொம்பவே அப்பழுக்கில்லாமல் நிர்வாகம் செஞ்சதா பெயர் வாங்குனவர்.   திங்கள் முதல் வெள்ளி வரை   காலை 9 முதல் மாலை 5 வரை  தரைத்தளத்தையும், முதல் தளத்தையும்  பொதுமக்கள் பார்வைக்கு  விட்டுருந்தாலும், இன்றைக்கு  அரசு விடுமுறை என்பதால்  மூடி வச்சுருக்கும் கட்டிடத்துக்குள்   போகமுடியலை.  வேலைக்கு ஆட்கள் வந்தால்தானே?  நேத்தே   டேலைட் ஸேவிங் முடிஞ்சாலும் பணியாளர்கள்  நாளைக்கு வந்துதான்  முகப்பில் இருக்கும் கடிகாரத்தின் நேரத்தை மாத்தணும்.  கெமெராக் கண்ணைக் கண்ணாடி வழியா அனுப்பினேன்:-)


நாடாளுமன்ற வளாகத்துலே  இன்னொரு சிலையும் இருக்கு.  தொடர்ந்து அஞ்சு முறை பிரதமராக  13 ஆண்டுகள் சேவை செய்த  ரிச்சர்ட்  ஜான் ஸெட்டன் (Richard John Seddon) அவர்களுக்கு.  மிகவும் முக்கியமானவர்களுக்கு  ப்ரிட்டிஷ் அரசு   வழங்கும் ஸர் என்னும்  விருதை , வேணாமுன்னு மறுத்தவர் இவர்.  அண்டைநாடான அஸ்ட்ராலியாவில்  1950 ஆண்டு நடந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு, சிட்னி நகரில்  இருந்து  நியூஸிக்குக் கப்பலில்  வரும் சமயம்  திடீர்னு சாமிகிட்டே போயிட்டவருக்கு அப்போ வயசு வெறும் 66 தான். அங்கிருந்து கிளம்பும் சமயம் விக்டோரியா ஸ்டேட் (மெல்பெர்ன்) முக்கிய மந்திரிக்கு  'Just leaving for God's own country  என்று தந்தி கொடுத்துட்டுக்  கிளம்பியவர், நியூஸி வந்து சேரும்போது  சடலமா வந்தார்.  இதயக்கோளாறும்,  தினமும் நீண்ட நேரம் பணியாற்றும்  பழக்கமும், இடைவிடாத  உழைப்பும் இவரை  காவு வாங்கிருச்சு:(


நியூஸி நாட்டைக் கண்டறிந்த  நம்ம கேப்டன் குக் அவர்கள்  மறைந்து இருநூறாண்டுகள் ஆன நினைவுச்சின்னமுன்னு  ஒன்னு வச்சுருக்காங்க.  அதுலே 1769-1969ன்னு  பொறிச்சுருக்கு.  ஆனால் அவர் இறந்தது 1779லேதான்.  பத்து வருசத்தைக்  குறைச்ச காரணம் தெரியலையே?  எதுக்கு சீக்கிரம் சாகடிச்சாங்களோ!!!!    இந்த நினைவுச் சின்னத்தைத் திறந்து வைச்சது  எங்கள் மாட்சிமை தாங்கிய மஹாராணியாரால் என்பது விசேஷம்.


நம்மைப்போல சுற்றுலா வந்த பயணிகள்  மட்டுமே வளாகத்தைச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம்.   சர்ச், நூலகம்,  வெவ்வேற  கமிட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட  கூடங்கள்  இப்படி ஏராளம்.   வரிசையா விதவிதமான கட்டிடங்கள்.  விக்டோரியன் பில்டிங்ஸ்!

 ஆமா...  அது இருக்கட்டும், பெயருக்கு ஒரு செக்யூரிட்டியைப் போடக்கூடாதா?  ஒரு கெடுபிடியும் காணோமே.....  ராஜ்பாத் போன நினைவுகள் வந்துச்சு.  ஒரு நிமிசம் நிக்க விட்டாலும்.....


தேன்கூட்டுக்குள்  நம்மைக் கூட்டிப்போய் காமிக்க    அரசு  ஏற்பாடு செஞ்சுருக்கு.  ஒரு மணி நேர டூர். காலை  9.30 முதல் மாலை 4 வரை.  ஒவ்வொரு அரைமணிக்கும்  ஒரு புது பேட்ச்.  டூர் ஆரம்பிக்க  கால் மணி  இருக்கும்போது அங்கே  ஆஜராகிடணும்.


எல்லோரும் ஒன்பதே கால் மணி ஆகட்டுமுன்னு  காத்திருந்து ,   சரியான நேரம் வந்ததும்  விஸிட்டர்ஸ் சென்ட்டருக்குள் நுழைஞ்சோம்.  முதல் அறிவிப்பு பார்த்ததும் எனக்குத்தான்  கைகள் வெலவெலத்துப்போச்சு:-(


வெறுங்கையா  உள்ளே போகணுமாம்.  எலெக்ட்ரானிக் கேட் வழியா நாமும், நம்ம  கைப்பைகள் மற்றும் கையோடு  கொண்டுபோன சாமான்கள் எல்லாம்  ஸ்கேனர் வழியாகவும் அந்தப்பக்கம் கடந்தாச்சு.  இன்னொரு இடத்தில்  நம்ம பைகளை எல்லாம்  வாங்கிவச்சுப் பத்திரமாக் காப்பாத்தி நாம் திரும்பி வரும்போது கொடுக்கறாங்க. சின்னதா ஒரு குட்டிப்பர்ஸ் மட்டும் ஓக்கே! நான் எல்லாத்தையும்  (கோபாலின் பர்ஸ், செல்) என் கைப்பையில் போட்டுக் கொடுத்தேன்.  காசையெல்லாம் எடுக்கலையான்னார்  கோபால்.  இல்லை. பார்லிமெண்டில் திருடு போச்சுன்னா  அதை விட வேற கேவலம் நாட்டுக்கு  இருக்கா?  நாட்டைக் காக்கும் இடம் இதையும் காக்கட்டும்.


நமக்கு  டூர் கைடா ஒருத்தர் வந்து நம்மையெல்லாம் ஊர் ,நாடு எல்லாம் கேட்டுப் பரிச்சயபடுத்திக்கிட்டார்.  ஒரு  முப்பத்திரெண்டு நபர்கள் இருக்கும்குழு நம்மது. நாடாளுமன்றத்தைப் பத்தி ஒரு அறிமுகம் கொடுத்துட்டு நம்மை மாடிக்குக் கூட்டிப்போனார்.  வட்டக்கட்டிடம், ஒரு  மூணுமாடி உசர ஸீலிங். அங்கே வச்சுருந்த படங்களெல்லாம் பார்க்கவே ப்ரமிப்பு.  இதுலே அங்கே ஒரு க்ராண்ட்  ப்யானோ வேற!  பார்லிமெண்ட் அங்கங்கள்  எல்லோரும் ப்யானோ வாசிக்கத் தெரிஞ்சவங்களா இருக்கணுமோ என்னவோ:-)


நியூஸியின் முதல் நாடாளுமன்றம்  1854 இல் ஆக்லாந்து நகரில் ஆரம்பிச்சது.  அப்புறம் 11 வருசம்  கழிச்சு 1865 இல் இந்த வெலிங்டன் நகருக்கு மாத்திக்கிட்டாங்க. 1907 இல் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த மரக்கட்டிடம் எரிஞ்சு போச்சு. அதுக்கு பதிலா புதுசா ஒரு கல்லுக் கட்டிடம்  கட்டுனாங்க.   அதுதான் இது(கீழே படம்)


நியூஸிக்கான தனிப்பட்ட  டிஸைனில் இன்னும் ஒரு கட்டிடம் கட்டணுமுன்னு தீர்மானிச்சப்ப , ஸ்காட்லாந்து  கட்டிடக்கலை நிபுணர்  Sir Basil Spence ஒரு டிஸைன் வரைஞ்சு (1964) கொடுத்து அதையொட்டி மற்ற விரிவாக்கங்களை  நியூஸி Ministry of Works  செஞ்சு முடிச்சாங்க.  அஞ்சு வருசமா திட்டம்  தீட்டி  1969 இல் கட்ட ஆரம்பிச்சு  முழுசாக் கட்டி முடிக்கப் பத்து வருசமாச்சு.  பத்து மாடிக்கட்டிடம். பூமிக்குக் கீழே நாலு மாடி.  மேலே ஆறு மாடின்னு கணக்கு.


இந்த (Beehive ) தேன்கூட்டுக்குப் பக்கத்தில்  இன்னொரு 22 மாடிக் கட்டிடம் நவீனகால டிஸைனில்  1988 இல் ஆரம்பிச்சு  1990 இல் கட்டி அதுவும் பயன்பாட்டுக்கு வந்துருக்கு.  மற்ற  பார்லிமெண்ட் கட்டிடப்பகுதிகளில்  பழுதுபார்த்தல், பராமரிப்பு வேலைகள் நடக்கும்போது  இந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திக்கறாங்க. இதுக்கு அடியில்  கார்பார்க்கிங்  வச்சு அது  தேன்கூட்டுக்கு அடிப்பாகம் வரை வருதாம்!


மாடிக்களுக்கும் பலவித  கமிட்டிகளுக்கான  சேம்பர்களுக்கும் நம்மைக் கூட்டிட்டுப் போனார்  கைடு.ஒவ்வொன்னும் ஒரு வித  அலங்காரத்தில் ரொம்பவே விசாலமா இருக்கு. மேலே கீழே மேலே கீழேன்னு  நடந்து நடந்து கால்வலி வந்தது உண்மை.


நாங்க எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிரதிநிதிகள் கூடும் சபைக்கு வந்து சேர்ந்தோம்.  இங்கேதான்  வாக்குவாதங்கள் நடந்து   சட்டங்கள்  இயற்றப்படும்.  கீழே நாடாளுமன்றம்  சபை கூடி வாதங்கள்  நடக்கும்போது , பார்வையாளர்கள்  மாடியில் இருக்கும் பால்கனியில் இருந்து கவனிக்க முடியும்.  எப்போ சபை கூடுதுன்னு  ஃபோன் செஞ்சு கேட்டுக்கிட்டுப் போய் வரலாம். முன்னேற்பாடுகள் ஒன்னும்தேவை இல்லை.


எனக்குப் பிடித்தமான  அரசியல்வாதி ( நியூஸி ஃபர்ஸ்ட்) வின்ஸ்ட்டன் பீட்டர்   உக்காரும் இடம் எதுன்னு கேட்டு வச்சுக்கிட்டேன்.  (யார் கண்டா? அந்த இடத்துக்கு  நான் போவேனோ என்னவோ!) இங்கேயே டெலிவிஷன் கேமெராக்கள் பொருத்தி இருக்காங்க. சபை நடக்கும்போது  நியூஸியில்  யார் வேணுமுன்னாலும்  வீட்டில் இருந்தே டிவியில் பார்த்துக்கலாம்.  வாரம் மூன்று முறை சபை கூடுது.   செவ்வாய் புதனில்  பகல் 2 முதல் இரவு 10 வரையும், வியாழனில் பகல் 2 முதல்  மாலை 6 மணி வரையிலும் சபை கூடுது.  ஒரு வருசத்துக்கு 33 வாரம்  இந்த வேலை.  பாக்கி  19 வாரங்கள்,  பிரதிநிதிகள் அவுங்கவங்க தொகுதிகளில்  இருப்பாங்க.

பார்லிமென்ட் ஸ்பீக்கர்  இருக்குமிடத்துக்கு முன்னால் ஒரு பெரிய மேசையில்  குண்டுத் தலையுள்ள கத்தி போல ஒன்னு வச்சுருக்காங்க.   முந்தி இது  இங்கிலாந்து மஹாராஜாக்கள் சார்பில் இருந்துச்சாம். இப்போ ...   சபாநாயகரின் அத்தாரிட்டியாக இருக்காம். எட்டுகிலோ எடையில்  சுத்தமான வெள்ளியில் செஞ்சு, 18 காரட் தங்கமுலாம் பூசி  ஜொலிக்கும்  இந்த   'The New Zealand  Mace'  1906 இல்  தயாரானது!  ஆச்சு 99 வருசம்!


புதுசா ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து  அமுல்படுத்த  என்னெல்லாம் செய்ய வேணும் என்பதையும் சொல்லிப்போனார் நம்ம கைடு.

செய்தி சேனலில்   அரசு, அரசியல் சம்பந்தமுள்ளவர்களை  மீடியா  மினி பேட்டி எடுப்பதும், சபை  உள்ளே நடந்த சமாச்சாரத்தைப் பற்றி  மக்களுக்கு   சுருக்கமா  நாலு வரி சொல்வதுமா இருக்கும்   மீடியாவுக்கான  முன்னறை மாடிப்படிக்குப் பக்கம் ஒரு பெரிய மரயானை நிற்பது நான் அநேகமுறை  டிவியில் பார்த்திருக்கேன்.  அது எங்கேன்னு கேட்டேன். அம்மாந்தூரம் போனவ, யானையைப் பார்க்காம வரமுடியுமோ?  அந்த இடத்துக்குக் கூட்டிப்போய்க்  காமிச்சார் கைடு:-)

கையில் கேமெரா இல்லையேன்னு மனசு பூராவும் துக்கம் எனக்கு!  டிவியில் வந்ததைக் க்ளிக்கிப் போட்டுருக்கேன் உங்களுக்காக:-)


கட்டக் கடைசியா  இந்த தேன்கூடு, நிலநடுக்கத்தில் இருந்து  தப்பிக்க என்ன ஏற்பாடுகள் இருக்குன்னு   அடித்தளத்துக்குக் கூட்டிப்போய்  காமிச்சார்.

 கட்டிடம் கட்டி முடிச்சு, 13 ஆண்டுகள் ஆனபிறகு பேஸ் ஐஸொலெஷன் டெக்னிக் முறையில்  417 ரப்பர் பேரிங்ஸ் வச்சுருக்காங்க.  பகுதிபகுதியா இதை வச்சு முடிக்கவே  மூணு வருசங்கள் ஆகி இருக்கு.  விவரம் இந்தப்படத்தில்.

சொல்ல மறந்துட்டேனே....   பார்லிமெண்ட் கட்டிடத்துக்குள்ளே எங்கே போனாலும் அது சம்பந்தப்பட்ட விவரங்கள் அடங்கிய  தாள்கள்  அடுக்கடுக்கா வச்சுருக்காங்க.   அதையெல்லாம் வாரிக்கிட்டு வந்துதான் கொஞ்சம் 'சுருக்' ன்னு  எழுதினேன். இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்!


எந்த வழி போனோம், எப்படி வந்தோமென்பதே ஒரு புதிர் மாதிரி.  தனியா அகப்பட்டுக்கிட்டால்  செத்தேன்.  தேன்கூட்டுக்கு ரெண்டு பக்கமும் இருக்கும் ( Bowen House,  Beehive, Parliament House) கட்டிடங்களுக்குள்ளேயெல்லாம் புகுந்து புறப்பட்டுருக்கோம் என்று நினைச்சால்....  ப்ரமிப்புதான்!


சரியா ஒரு மணி நேரத்தில்  மீண்டும் விஸிட்டர் சென்டரில்   இருந்தோம். இப்போ மணி பத்தரை.  நாம் இன்னைக்கு   மாலை  தலைநகரில் இருந்து கிளம்பறோம். ஹொட்டேலில்   ஒருமணி நேரம்  லேட் செக்கவுட்  11 வரை கிடைச்சது.  போய் சாமான்களைத் தூக்கிக் காரில் போட்டுக்கிட்டு   மாலை வரை ஊர் சுத்தலாம்.


பகல் சாப்பாட்டுக்கு நண்பர் வீட்டுக்குப் போறோம்! வேற பேட்டையாக்கும்:-)
 தொடரும்.......:-)

PIN குறிப்பு:  உள்ளே தானே படம் எடுக்கக்கூடாது.  ஹாஹா....வெளியே எடுத்த 175 படங்கள் கைவசம் இருக்கே.  ஒரு நாள் கூகுள் ஆல்பத்துலே போட்டு வச்சுட்டு, இங்கே வந்து சொல்றேன், ஓக்கே!


16 comments:

said...

ஒவ்வொன்றாக அழகாக சுற்றிக் காண்பித்து விட்டீர்கள் அம்மா... நன்றி...

said...

ரொம்ப நல்லா இருந்துச்சு. கட்டடத்தின் அழகைவிட, அங்கிருந்து பணியாற்றும் அங்கத்தினர்கள், நாட்டை லஞ்சமில்லாத தேசமாக வைத்திருப்பதற்காக அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டு. நம்ம ஊர்ல, சுதந்திர தினத்துக்கு மிட்டாய் சாப்பிடுவதோடு நம்முடைய தேசப் பற்று விடைபெற்றுக்கொள்கிறது.

இந்த மேஸ் ஐ, நான் லண்டன் பார்லிமென்ட் ஹாலிலும் பார்த்திருக்கிறேன். இது, மாட்சிமை பொருந்திய மஹாராணியின் முன்னிலைக்குச் சமம் என்று நினைக்கிறேன்.

கோபால் சாருக்கு உங்கள் கைப்பையையோ அல்லது கேமரா கவரையோ கையில் கொடுத்து, இடது கையை கொஞ்சம் மேலே உயர்த்திப் பிடித்திருந்தால், போஸ் இன்னும் சரியாக வந்திருக்கும்.

said...

ராஜ்பத் - அனுபவம் :(((

இத்தனை கெடுபிடிகள் இருந்தும் நம் மக்கள் படுத்தும் பாடு - பலமுறை பார்த்திருக்கிறேன்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தொடரும் ஆதரவுக்கு நன்றிகள்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஆஹா.... இந்த 'போஸ்' சமாச்சாரம் கவனிக்கத் தவறிட்டேன் பாருங்களேன்!

//இந்த மேஸ் ஐ, நான் லண்டன் பார்லிமென்ட் ஹாலிலும் பார்த்திருக்கிறேன். இது, மாட்சிமை பொருந்திய மஹாராணியின் முன்னிலைக்குச் சமம் என்று நினைக்கிறேன்.// நானும் அப்படித்தான் நினைத்தேன். அப்புறம் தகவல் தாள் அப்படி இல்லைன்னு சொல்லுதே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்ம மக்கள் சொன்னால் கேக்கமாட்டாங்க. சுதந்திரம் என்பதைத் தப்பாப் புரிஞ்சு வச்சிருக்கும் மக்கள்:(

said...

அருமை !! கோபால் அவர்கள் போஸ் ம் சூப்பர் !!
//அம்மாந்தூரம் போனவ, யானையைப் பார்க்காம வரமுடியுமோ? அந்த இடத்துக்குக் கூட்டிப்போய்க் காமிச்சார் கைடு:-)//
:)))

said...

சீக்கிரமே நாடாளுமன்றத்துக்குள் போக இப்பவே வாழ்த்துக்களை தெரிவிச்சிடுகிறேன்.

said...

செம அருமையான வர்ணனை விவரங்கள்....இந்த மேஸ் ஐ ரொம்ப அழகா குழப்பம் எதுவும் வராம அருமையா சுத்திக் காட்டிட்டீங்க சகோதரி...உங்க கூட வந்ததால தனியா மாட்டிக்கலை நாங்க...ஸோ ஈசியா வெளில வந்திட்டோம்...படங்கள் மிக அருமை...ரொம்ப நல்லா விளக்கிச் சொல்லிருக்கீங்க....என்ன நல்ல ஊருப்பா...ஊழலில்லாத ஒரு ஊரா அதை ஆளரவங்க வைச்சுருக்கறது....நம்ம ஊரையும், நம்ம மக்களையும் நினைப்புக்குக் கொண்டு வந்துட்டீங்களே சகோதரி..!

said...

ஒவ்வொரு முறையும் ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும் தங்களுக்கு நன்றி. நீங்கள் பதிவில் இணைக்கும் புகைப்படங்கள் எங்களை நிகழ்விடத்திற்கே அழைத்துச்சென்றுவிடுகின்றன. நன்றி.

said...

//வின்ஸ்ட்டன் பீட்டர் உக்காரும் இடம் எதுன்னு கேட்டு வச்சுக்கிட்டேன். (யார் கண்டா? அந்த இடத்துக்கு நான் போவேனோ என்னவோ!) //

Her Excellency, மாண்புமிகு துளசி டீச்சர்:)
சீக்கிரம் "மாண்புமிகு" ஆகுங்க டீச்சர்; அரசுமுறைப் பயணமா அரங்கனைப் பார்க்க வரலாம்; வேங்கடவனைப் பார்க்க வரலாம்;
அப்போ பாத்துறலாம் எவன் ஒங்களுக்கு ஜருகண்டி சொல்றான்னு?:)

//வரிசையா விதவிதமான கட்டிடங்கள். விக்டோரியன் பில்டிங்ஸ்//

கட்டடம்= Building
கட்டிடம்= Plot
கட்டிடத்தில், கட்டடம் நிற்கும்!

*கட்டும் இடம்= "கட்டி"டம்
(இடப் பெயர் புறத்துப் பிறந்த காரணப் பெயர்)
*கட்டு அடம்= அடுக்காய்க் கட்டுவது= "கட்ட"டம்
(தொழிற் பெயர் புறத்துப் பிறந்த காரணப்பெயர்)
Fyi, note the minute difference please:)

said...

வாங்க சசி கலா.

நம்ம யானையை எப்படிப்பா விடமுடியும்? :-))))

said...

வாங்க குமார்.

வாழ்த்துகளுக்கு நன்றி. 'அங்கே' பேசும்போது உங்களைக் குறிப்பிடுவேன்:-)

பேஸ் ஐஸொலேட்டர் விவரம் எல்லாம் உங்களுக்காகத்தான்.

said...

வாங்க துளசிதரன்.

இதுவரை ஊர் நல்லாத்தான் இருக்கு. (டச் உட்!) ஆனால் எவ்ளோ நாளுக்குன்னு தெரியலை! எக்கச்சக்கமான இந்தியர்களும், சீனர்களும் வந்து குமிஞ்சுக்கிட்டு இருக்காங்க!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உங்கள் ஆதரவுக்கு நன்றி. இன்னும் நல்லா எழுதணும் என்ற பொறுப்புணர்ச்சி கூடி வருது!

said...

வாங்க கே ஆர் எஸ்.


யாராக்கும்... யாராக்கும் இது..... சரித்திர வகுப்பில் வந்து தமிழ் இலக்கணம் எல்லாம் சொல்லுவது?

இப்படி ஆளாளுக்கு நாட்டாமைன்னா.... ஹிஸ்டோரி ... ஹெர்ஸ்டோரி ஆகிரும், ஆமா!

ஆமாம் ... ப்ளாட்டை நிலமுன்னு சொல்லப்டாதா?

கட்டடம்.... கட்டுவதற்கு 'அடம்' பிடிக்குதோ!!! ஙே.......:-)))))))