Wednesday, August 13, 2014

நூறைக் கொண்டாடும் சிறை!

ஆச்சு,  இன்னும்  நாலைஞ்சு மாசம்தான். செஞ்சுரி அடிக்கப் போறேன். உள்ளே வந்து எட்டிப் பாருங்களேன்.  வருந்திக் கூப்பிட்டாப் போகாமல் இருக்க முடியுதா?

எங்க ஊரில்(கிறைஸ்ட்சர்ச்) இருந்து  ஒரு நாப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு  டார்ஃபீல்ட் (Darfield) என்னும் ஊர்.  எங்கூரில் பாதியை அழித்த நிலநடுக்கம், மையம் கொண்ட ஊர் இதுதான்.  சின்ன  ஊர் என்பதால் பாதிப்பு அவ்வளவா இல்லை.  வெற்றிடம் எக்கசக்கமா இருந்ததுலே, ஆள் இல்லாத அத்துவானத்துலே  பெரிய குழி வெட்டிக்கிச்சுன்னு சொன்னாங்க.  என்னவோ பழமொழி சொல்வாங்களே....  தென்னை மரத்துலே தேள் கொட்டினால்,  பனைமரத்துலே நெறி கட்டுச்சாம்ன்னு. அதுபோல பாதிப்பு  எங்களுக்குத்தான்  அதிகம்! 185 உயிர்கள் நஷ்டப்பட்டதும் அப்போதான்:(

ஒரு ஞாயித்துக்கிழமை, புள்ளையாரைப் பார்த்துட்டு வரலாமேன்னு கிளம்பி கிர்வி (Kirwee) என்னும்  சிற்றூருக்குப் போனோம்.  இதுவும் ஸ்டேட்  ஹைவேயில் அங்கங்கே இருக்கும் சிற்றூர்களில் ஒன்னுதான். நம்மூட்டில் இருந்து  ஒரு முப்பது கி.மீ தூரத்தில் இருக்கு.

வெள்ளையர்கள்  இங்கே காலூன்றி  காடுகளாகப்பரவி இருந்த  நாட்டுக்கு சாலைகள், ரயில்பாதைகள் போட்டுக்கிட்டு இருந்த காலக்கட்டம். கேண்டர்பரி எனச் சொல்லப்படும் மெயின்லேண்ட்க்கு  தண்ணீர் சப்ளைக்காக,   Kowai நதியில் இருந்து  (இது சதர்ன் ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் இருந்து கிளம்பும் ஒரு நதி) ஒரு கால்வாய் வெட்டியது 1877- 1880 ஆண்டுகளில்.  கால்வாய் ஒன்னும் ரொம்பப்பெருசு இல்லை.  ஏழெட்டடி அகலம்தான்.  ஆனால் தண்ணீர் இடைவிடாம இன்னும்  இதில் வந்துக்கிட்டேதான் இருக்கு. கால்வாய், ஊருக்குள் வரும் இடத்தில் (இது மெயின்ரோடை ஒட்டியே ஓடிவரும் கால்வாய்) கால்வாயின் சரித்திரத்தைச் சொல்லும் நினைவுச்சின்னமா சின்னதா ஒரு குட்டியூண்டு மண்டபம்  கட்டி இருக்காங்க.

 அங்கே, அதுக்குள்ளேதான் தண்ணீருக்கு மேலாக ஒரு  சிமெண்ட், இல்லை கருங்கல் பாளம் ஒன்னு போட்டு அதன்மேல் புள்ளையாரை வச்சுப்புட்டால் எவ்ளோ நல்லா அம்சமா  இருக்கும் என்ற  தோணல் காரணம் , நான் அங்கே புள்ளையாரை பிரதிஷ்டை செஞ்சுருக்கேன் மானசீகமாக.  அதுதான்  என்னுடைய சொந்தம் கிர்வீ புள்ளையார் கோவில்!  (என்  கண்ணுக்கு மட்டுமே அவர் காட்சி கொடுப்பார், கேட்டோ!!!)

சலசல என்னும்  சின்ன ஓசையோடு சீராக ஓடிவரும் தண்ணீர் பார்க்கவே ஒரு அழகு.  பக்கத்துப்புல் தரையில் கொஞ்சநேரம்  உக்கார்ந்து  ரசிக்கலாம்.  மனநிம்மதி கிடைக்கும் என்பதுக்கு நான் கியாரண்டீ!  ரொம்ப சிம்பிளா  ஒரு  ஒன்னேகால் நிமிச  க்ளிப் ஒன்னு  இது.  சின்ன ஓசைன்னு சொல்றேன்.... ஆனா.... இது படத்துலே பேரோசையா இருக்கே!!!



சரி இவ்ளோ தூரம் வந்தமே...இன்னும்  ஒரு எட்டு கிலோமீட்டர் தூரத்தில் டார்ஃபீல்ட் இருக்கே அதுவரை போயிட்டு வரலாமுன்னு  கிர்வீயில் இருந்து  கிளம்பினோம். கூடிவந்தால் பத்து நிமிச ட்ரைவ்.

இங்கேயும் ஊருக்குள்ளே   நுழைஞ்சதும் அந்த மெயின் ரோடுலேதான் கடை,கண்ணி, வியாபாரம் இப்படி எல்லாமே!  மற்றபடி வீடுகள் எல்லாம்  இடமும் வலமும்கொஞ்சம் உள்ளே தள்ளித்தான் பரவி இருக்கு.
பார்வைக்குத் தப்பாமல் சட்னு கண்ணுலே பட்டது இந்த  ஜெயில்.  புதுசா இருக்கேன்னு  நினைக்கறதுக்குள்ளே வண்டி போய் நின்னது  டவுன் இன்ஃபோ சென்டரில்.  இங்கே சின்ன ஊர்களிலும் கூட, ஊர் நிலவரம், விளக்கம், பார்க்க வேண்டிய இடங்கள் , ஊருக்கான சரித்திரம் எல்லாம்  மக்களுக்குச் சொல்லியே ஆகணும்  என்று  நினைப்போடுதான்  இருப்போம். வரலாறு முக்கியம் அமைச்சரே!


ஒரு காலத்தில்  மான் கூட்டங்கள்  ஏராளமா வளர்ந்த  இடம் இது! Deer field   என்பதே  காலப்போக்கில்  பேச்சு வழக்கில்   Darfield  என்றாகி இருக்கு.  ஊரின் மக்கள் தொகை வெறும் 1400 தான்.  ஸோ , எல்லாருக்கும் எல்லோரையும் தெரியுமுன்னு நினைக்கிறேன்.  (ஃபிஜியில்  நாங்க இருந்த டவுனில் அஞ்சாயிரம் மக்கள் தொகை. அங்கேயே எல்லோருக்கும் எல்லோரையும் தெரிஞ்சுருந்துச்சு.  ஆனால் ....  அங்கே  இந்தியர்கள்தான்  அதிகம் என்பதால்....  அது வேற மாதிரியோ என்னவோ!)



 ஊர் சரித்திரம் ஒட்டுமொத்தமா அங்கேயே இருப்பதால் எழுதும் வேலை மிச்சமுன்னு க்ளிக்கிக்கிட்டேன்:-)

சதர்ன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இருக்கும்  ஸ்கீஃபீல்ட்களுக்கு இந்த ஊர்வழியாத்தான் போகணும் என்பதால்  குளிர்காலத்துலே  பயங்கர பிஸியாகிப்போகும் ஊர் இது.  பனிச்சறுக்கு விளையாட உலகெங்கிலும் இருந்து மக்கள்ஸ் வர்றாங்க.

இப்போ  பால்பவுடர் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையால் ஊரின் மவுசு கூடிப்போயிருக்கு.  டார்ஃபீல்டில் இருந்து  மூணரை கிலோமீட்டர் தொலைவில், 650 ஹெக்டர் (1606 ஏக்கர்) நிலத்தை வளைச்சுப்போட்டு   கட்டிக்கிட்டு இருக்காங்க. 500 மில்லியன் செலவாச்சாம்.  மணிக்கு 30 டன் பாலை, காயவச்சுப் பவுடர் ஆக்கப்போகுதாம்!  நாட்டுக்கு  வருசாவருசம் 780 மில்லியன் டாலர் வருமானம் வரப்போகுதுன்னு பெருங்கணக்கு போட்டுக்கிட்டு இருக்காங்க.  ஒரு 170 பேருக்கு  வேலை இருக்கு.  இப்போதைய உலகின், மிகப் பெரிய பால்பவுடர் தொழிற்சாலை இதுதான்னு  சொல்லிக்கறாங்க.

ஊர்வழியாப் பயணம் போறவங்களுக்கும், ஊர்மக்களுக்கும் பயன்பட ஏதுவா, ஒன்னு ரெண்டு கேஃபே, பூச்செடிகள், மரங்கள் விற்க சின்னதா ஒரு கார்டன் செண்ட்டர், ஒரு சூப்பர் மார்கெட்,  டெய்ரி ஷாப் (முக்கியமா இங்கே ஐஸ்க்ரீம்தான்  பயங்கர  விற்பனை!) சின்னதா ஒரு கிஃப்ட் ஷாப்,  பழைய பொருட்களை விற்கும் ஒரு ஆண்ட்டீக் கடை இப்படி குறைவில்லாம  சாலைக்கு ரெண்டு பக்கங்களிலும்  இருப்பது நல்ல வசதி.   கார்ப்பயணங்களில் ,  ஒரு பத்து நிமிஷ ப்ரேக் எடுத்து, கைகால்களை நீட்டி சோம்பல் முறிச்சுக்கும்  சமயம்,  மெதுநடையில்   போய்  வேடிக்கையும் பார்த்துக்கலாம்.

ஆன்ட்டீக் கடைக்காரர் என்னென்ன  கண்டிஷன் போட்டுருக்கார், பாருங்க:-)


நாமும்,  ஐஸ்க்ரீமா, இல்லே காஃபியான்னு  ஒரு மினிட் யோசனை செஞ்சுட்டு, எதுவுமே வேணாமுன்னு  முடிவு செஞ்சோம். இதோ அரைமணியில் வீடு. எதுக்காக  அனாவசியச் செலவு? (சரியான கருமி நான்!)


ஜெயிலுப் போய்ச் சேர்ந்தோம்.  1915 வருசக் கட்டிடம். சரியா இப்போ  99 வயசு.  ஊரைவிட்டு ஒதுக்குப்புறத்தில் இருந்த இதை  ஒரு நாலு வருசத்துக்கு முந்திதான்   இடம் மாத்தி அப்படியே தூக்கியாந்து  இங்கே வச்சுருக்காங்க. சரியாச் சொன்னா... நவம்பர் மாசம் 2010.

இதுக்கு  ரெண்டு மாசம் முந்திதான் ஒரு நிலநடுக்கம் (செப்டம்பர்  4, 2010) வந்துருந்துச்சு. ரிக்டெர் அளவு 7.1 .  அப்போ ஒருவேளை  ஜெயில் இருந்த இடத்துக்கு பழுது வந்து  இருந்துருக்கலாம். சரியான விவரம் கிடைக்கலை எனக்கு:(



மரக்கட்டிடம்தான்.   சுற்றிவர அருமையான  சின்னத் தோட்டம்  அமைச்சுருக்காங்க.  உள்ளே போனால் , இடப்பக்கத்தில்  ப்ரிஸன் ஆஃபீஸர்ஸ் ரெண்டு பேர்!     குளிருக்கான  கரியடுப்பு, பழங்கால தொலைபேசி, கைவிலங்கை தயாரா வச்சுருக்கும் அதிகாரி, எந்தப்பிரிவில் குற்றச்சாட்டுன்னு பார்த்து  அவைகளை தட்டச்சி கோர்ட்டுக்கும், ஜெயில் ரெக்கார்ட்ஸுக்கும்  தயாரிக்கும்  போலீஸ் லேடி டைப்பிஸ்ட்  இப்படி பார்க்க நல்லாத்தான் இருக்கு.



வலப்பகுதியில்  குற்றவாளி செல்லில் இருக்கார். ஸ்ப்ரிங் வச்ச ஒற்றைக்கட்டில், போர்வைகள், தலையணை,  ஒரு நாற்காலி,  குடிக்கத் தண்ணி வச்சுருக்கும்  கெட்டில்,  'அவசரத் தேவைக்கான  பீங்கான் பாத்திரம்' இப்படி சௌகரியமாத்தான் இருக்கு.

ஜெயில் கதவுக்குக்கூட சிம்பிளான ஒரு பூட்டு!!!!

அலுவலகத்துக்குப் பயன்பட்ட ரப்பர் ஸ்டாம்புகள், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பயன்படுத்திய  (நான் சொல்வதெல்லாம் உண்மை என்று  சத்தியம் செஞ்சுக்க) ஒரிஜினல் பைபிள் எல்லாம் கண்ணாடிப்பெட்டிக்குள் டிஸ்ப்ளே செஞ்சுருக்காங்க. வருசம் 1870 யில் இருந்து 2007 வரை பணியில் இருந்த முக்கிய ஆஃபீஸர்கள் பட்டியல் கூட வச்சுருக்காங்க!

இப்ப ஊர் மக்கள் தொகையே 1400 ன்னா  ஒரு நூறு வருசத்துக்கு முந்தி  எத்தனைபேர் இருந்துருப்பாங்க?  அதுலே என்னமாதிரி குற்றம் செஞ்சுருப்பாங்கன்னு  தோணுச்சு.  அதிகபட்சமா, ஆட்டுக்கு , ஆட்டைப் போட்டுருப்பாரோ?

சிறைச்சாலை பார்த்த திருப்தியில் வீட்டுக்குக் கிளம்பினோம். கொஞ்ச தூரத்தில் வால்நட்ஸ் விற்பனைக்கு வச்சுருந்தாங்க.  நாமே காசை உண்டியலில் போட்டுட்டு நட்ஸை எடுத்துக்கணும்.  அதெல்லாம் கடையில் உக்கார்ந்து விற்க முடியாது. மனுசனுக்கு வேற வேலை இல்லையா?

 கோபாலுக்கும் வீகெண்ட் வேலை ஒன்னு வேணுமேன்னு ஒரு  பை வால்நட்ஸ் வாங்கியாந்தோம்.  உக்காந்து  உடைச்சு, பருப்புகளைப் பிரிச்செடுத்தால் (அப்பப்ப தின்னது போக) அரைக்கிலோ தேறுச்சு.  அஞ்சு டாலருக்கு அரைக்கிலோ என்பது ரொம்பவே மலிவுதான் இல்லை!!!!  அங்கே பைன் நட்ஸ் கூட வச்சுருந்தாங்க. அதை இதுவரை வாங்குன அனுபவம் இல்லாததால் வாங்கிக்கலை :(  அடுத்த வாட்டி முயற்சிக்கணும்.


PINகுறிப்பு: இப்போ க்ரைம் ரேட் கூடித்தான் போச்சு.  ஜஸ்ட் எங்க ஊரின் எல்லைக்கு அப்பால் ஒரு பெரிய  சிறைச்சாலை கட்டி இருக்காங்க.  நியூஸியில் இருக்கும் பெரிய சிறைச்சாலைகளில் ஒன்னு இது. சுமார்  420 காவல்துறை மக்கள்  பணியிலிருக்காங்க.  954 கைதிகள் வசதியாக(!!) தங்கும் வசதி இருக்கு.  உள்ளே இருப்பது (ம்) சுகம்தானோ!!!




15 comments:

said...

சில ஐயங்கள்

தண்ணீர் கொஞ்சமா தான் உழுது. ஆனா எப்படி இம்புட்டு சவுண்டு?

அம்புட்டு பெரிய பால் பவுடர் கம்பெனி. பாலுக்கு எங்க போவாங்க?

said...

ஜெயிலைக் கூட விட்டுவைக்காமல் செமையா சுத்திக்காட்டியிருக்கீங்க டீச்சர். மானசீகப் பிள்ளையார் மனசை ஈர்த்துவிட்டார். தருமி ஐயாவுக்கு வந்த சந்தேகம்தான் எனக்கும். அவ்வளவு பாலுக்கு எங்கே போவாங்க?

said...

மானசீக பிள்ளையார்.... அதானே அவர் எங்கேயும் இருக்கிறாரே....

அழகான் படங்கள். ஜெயில் இவ்வளவு அழகா இருந்தா ஒரு நாள் இருந்துட்டு வரலாம்! :)

said...

எல்லாம் சுகமே.:))

said...


நீங்கள் கட்டிய மானசீகமான கிர்வீ புள்ளையார் கோவிலை நானும் மானசீகமாய் வணங்கி மகிழ்ந்தேன்.
சிறைச்சாலையை நன்றாக சுற்றிக் காட்டிவிட்டீர்கள்.

said...

கிர்வீ பிள்ளையார் சூப்பர் . நானும் மானசீகமா பாத்துகிட்டேன் உங்க வீடு பிள்ளையார் போலவே நாமம் இட்டுஇருந்தார் .!!
ஜெயில் நல்ல வசதியாத்தான் இருக்கு .

said...

வாங்க தருமி.

சரியான சவுண்டு பார்ட்டியால்லே இருக்கு!!!

இதுதான் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது:-)

எங்க நாட்டின் முகமே மாறிக்கிட்டு இருக்கு இப்போ. ஆட்டுதேசமா இருந்தோம். ஆளுக்கு 20 ஆடுன்னு மூணு மில்லியன் மக்கள்ஸ் இருந்த காலம் சொல்லிக்கிட்டு இருந்தாங்களாம்.

நாங்க நியூஸி வந்தப்ப, ஆளுக்கு 14 ஆடுகள்.

இப்ப என்னன்னா.... ஆளுக்கு எட்டாடுதானாம். பண்ணைகள் எல்லாம் மாட்டுக்கு மாறிக்கிட்டு இருக்கு. ஆட்டுலே இல்லாத காசு மாட்டுலே இருக்குன்னுட்டாங்க.

ஆளுக்கு ஒன்னே முக்கால் கறவைப்ப சுன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க, நேத்து முதல் ஒன்னரை(!) பசுன்னுட்டாங்க. நேத்துதான் நியூஸி மக்கள் தொகை 4.4 மில்லியனா ஆகிருச்சாம்.

தினத்துக்கு 6.6 மில்லியன் கறவை மாடுகள் தினம் ரெண்டு நேரம் பால் கறந்தால் எக்கசக்கமான அளவா இருக்காது?

இந்த அமோக விளைச்சல் இருந்தாலும் பால் விலை என்னமோ ஏறிக்கிட்டேதான் போகுது:(

இன்னிக்குக் கணக்குக்கு ரெண்டு லிட்டர், இந்தியரூபாயில் 185.

போறபோக்கைப் பார்த்தால், ப்ரெஷ் பாலை ப்ராஸஸ் செஞ்சு கடைகளுக்கு அனுப்பும் செலவு அதிகமாகுதேன்னு..... இனிமேப்பட்டு உள்நாட்டு மக்களுக்கும் பால்பவுடர்தான்னு சொல்லப்போறாங்கன்னு நினைக்கிறேன்.

கறந்தபால் கறந்தபடி எல்லாம் கனவாகப்போகுதோ?

said...

வாங்க கீத மஞ்சரி.

இது என்னங்க குட்டியூண்டு சிறைச்சாலை!

இப்பத்து போலீஸ் செல் பார்க்கணுமுன்னா இங்கே:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2008/11/blog-post_03.html

பாலளவுக்கு மேலே நம்ம தருமிக்குச் சொன்னதைப் பாருங்க.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

புள்ளையார் லேசுப்பட்டவரா?

Baywatch புள்ளையாராச்சே:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2006/08/baywatch.html

said...

வாங்க மாதேவி.


ஆமாம்ப்பா!

said...

வாங்க கோமதி அரசு.

புள்ளையார் அருள் அனைவருக்கும் உண்டு!!!

செல்லுக்குள்ளே போய் வந்தாச்சு:-)

said...

வாங்க சசி கலா.

அது நூறாண்டுப் புதுசுப்பா. ஹீட்டிங் வசதி சரி இல்லை. இப்பத்து மாடர்ன் ஜெயிலில் செண்ட்ரல் ஹீட்டிங் போட்டு வச்சுருக்காங்க.

அங்கே பரமசுகம்!

said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

said...

வாங்க யாழ்பாவாணன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

பிள்ளையார் ஷேப்பிலயே மண்டபம் இருக்கும்போது பிள்ளையார் அங்கதான் இருப்பார்.நல்ல இடம். ஜெயிலும் களங்கமில்லாம நல்லா இருக்கு. ஹாலிடே ரிஸார்ட்டா மாத்திட்டா என்ன . உங்க ஊர்ப்பால் எப்படி இருக்குன்னு ருசி பார்க்கணும். இத்தனை நல்ல புல்லைப் பார்க்கும்போது சூப்பரா இருக்கும்னுதான் தோன்றுகிறது.