Friday, August 29, 2014

கொடுமையில் இருந்து தப்பிப்பிழைச்ச பிள்ளையார்.

காலையில் கண் முழிச்சதும் வழக்கம்போல் சாமி அறைக்குப்போய் விளக்கு  போட்டுட்டு, கடவுளர்களுக்கு  குட்மார்னிங் சொன்னேன்.  அப்படியே புள்ளையாருக்கு' ஹேப்பி பர்த்டே கணேசா'ன்னதும்,  ஒரு மாதிரி பம்முனார். 'கொடுமுலு ச்சேயால'ன்னு  சொன்னதும்  புள்ளையார் முகம் போன போக்கைப் பார்க்கணுமே....  கண்ணுலே பயம் வேற!   அச்சச்சோ.....  கொடுமைகளை (வழக்கம்போல்) செய்யப்போறேன்னு  நினைச்சுக்கிட்டாரோ?  அச்சச்சோ....ஸாரிடா. வாயிலே தெலுகு வந்துருச்சு:(


கடந்த நாப்பது வருசங்களில் முப்பத்தியொன்பது புள்ளையார் சதுர்த்திகளில்  அவர்பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா? (நடுவில் ஒரு வருசம் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அந்தக் கொடுமையைச் செஞ்சுருச்சு, நம் சென்னை வாழ்க்கையில்!)

எப்படியும் அவர் பொறந்த நாளுக்கான மொதக் கொழுக்கட்டை நம்ம வீட்டிலிருந்துதான்  ஆரம்பிக்கும். நாங்க டேட் லைனில்  உக்கார்ந்துருக்கோம் பாருங்க.  நாளின் ஆரம்பமே நாங்க ஆரம்பிச்சு வைப்பதுதானாக்கும்,கேட்டோ!

சாஸ்த்திரத்துக்குக் கொஞ்சம் இனிப்புப் பூரணம் வச்ச கொழக்கட்டைகளும்,  காய்கறிகள் சேர்த்த ஹெல்த் கொழக்கட்டைகளும் செஞ்சுடலாமுன்னு  ஆரம்பிச்சேன்.

முதல் வேலை, இந்த லேப்டாப்பை  மூடி,  கண்ணுக்குப் புலப்படாமல் ஒரு அறையில் வச்சுடணும். வச்சேன்.

துருவிய  தேங்காய் கொஞ்சம், மூணு கட்டி பனை வெல்லம், ஏலக்காய்த்தூள், அரை டீஸ்பூன் நெய் சேர்த்துப் பதமா கிளறி இனிப்புப் பூரணம் செஞ்சேன்.  அடுப்புக்குப் பக்கத்தில் நின்னு கவனிச்சுக் கிளறியதால்  கமர்கட் ஆகாமல் தப்பிச்சது.

அடுத்து  ஒரு கப் அரிசி மாவில் ஒன்னேகால் கப் தண்ணீரை ஊற்றிக் கரைச்சு வச்சேன். ஒரு நான் ஸ்டிக் வாணலியில்  ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொதிக்க  ஆரம்பிச்சதும், கரைத்து வச்ச மாவை ஊத்திக் கிளறி, அது சுருண்டு வரும் சமயம் ஒரு டீஸ்பூன் இதயம் நல்லெண்ணெய் சேர்த்து எடுத்து வச்சேன்.  இனிப்புக் கொழுக்கட்டைக்கு மேல்மாவும் பூரணமும் ரெடியாச்சு. கொஞ்சம் ஆறட்டும்.

அடுத்து புட்டுக் கொழுக்கட்டை.

நம்மூரில் மயில் ப்ராண்ட் புட்டுப்பொடி கிடைக்குது. அதில் ச்சுவந்ந சம்பா அரி (சிகப்பரிசி) புட்டுப்பொடி வாங்கியாந்து வச்சுருந்தேன். பாவம் புள்ளையார், ஒருநாள் கலர் பார்க்கட்டும். அதுலே ஒரு கப்  எடுத்து, அரைக் கப் துருவியதேங்காய்,  அரை டீஸ்பூன் உப்பு  சேர்த்து  இளம்சூடான வெந்நீர்  சேர்த்துப் பிசைஞ்சு வச்சேன்.  அஞ்சு நிமிட் ஆனதும்,   மைக்ரோவேவில்  ஒன்னரை நிமிட் வேகவைத்த அரைக் கப் பச்சைப் பட்டாணி, அரைக் கப் மக்காசோளம்  சேர்த்து மாவில் கலந்து  மோதகம்  அச்சில் மாவை அமுக்கி அழகா எமரால்ட் & டோபாஸ் கற்கள் பதிச்ச , ஹெல்த்தியான புட்டுக்கொழுக்கட்டை  செஞ்சு நீராவியில் வேகவச்சு எடுத்தேன்.

இன்னொரு  வகை அச்சு எடுத்து, (இதுவும் மோதக டிஸைன்தான். ஆனால் கொஞ்சம் அளவில் பெரியது) ஆறிய மேல்மாவை சின்ன எலுமிச்சங்காய் அளவு  எடுத்து, இதயம் நல்லெண்ணெய் தொட்டு, உள்ளங்கையில்  சின்ன பூரி அளவுக்குத்தட்டி அதில் ஒரு கமர்கட் அளவு  தேங்காய் பூரணம் வச்சு , மாவின் ஓரங்களைக் கும்மாச்சியாச் சேர்த்து  அந்த மோதக அச்சுக்குள்ளே  வச்சு  ஒரு அமுக். டடா....   பிரிச்சவுடன் அழகான வெள்ளைப்பளிங்கு மோதகம்.  ஆவியில் வச்ச அஞ்சாம் நிமிஷம் ரெடி!

இதுக்கிடையில் சுண்டலுக்குக் கொண்டைக்கடலை  ஒரு பக்கம் வெந்து பதமானதும் போனாப்போகுதுன்னு அதையும் ரெண்டு காய்ஞ்சமிளகாய், கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை போட்டுத் தாளிச்சு  ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவலைச் சேர்த்தேன்.

இந்த முறை, நம் தங்கப் பிள்ளையாருக்குத் துணையாக புதுசா ஒரு வெள்ளிப் பிள்ளையாரும் வந்துருந்தார்.  ரெண்டு பேருக்குப் பதிலா மூவராக இருக்கட்டுமேன்னு  ஜேடு பிள்ளையார் ஒருவரையும் சேர்த்து வச்சுப் பிரசாதங்களுடன் ஷோடஸநாமாச் சொல்லி  பொறந்தநாளைக் கொண்டாடியாச்சு.

இத்தனை வருசங்களில் முதல்முறையா  நல்லா அமைஞ்சு போன கொழுக்கட்டைகளைப் பார்த்த அதிர்ச்சியில்  வாயடைச்சுப்போன நம்ம புள்ளையார் 'கொடுமுலு கொடுமை'களில் இருந்து  தப்பிச்சேன், பிழைச்சேன்னு  கிளம்பி உங்க சைடு  வந்துக்கிட்டு இருக்கார்.  பார்த்துக்குங்க!

நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் புள்ளையார் பொறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.



22 comments:

said...

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
நான் உங்கள் வீட்டு பிரசாதங்களை எடுத்துக் கொண்டேன் துளசி.

அடுத்தவருடம் தான் பிள்ளையாருக்கு எங்கள் வீட்டில் கொழுகட்டை, சுண்டல், எள்ளுருண்டை எல்லாம்.

said...

இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள் டீச்சர் & கோபால் சார்.

கொழுக்கட்டையெல்லாம் அருமையா அழகா வந்திருக்கு. பிள்ளையார் மனசும் வயிறும் குளுந்திருப்பாரு.

said...

அழகான அச்சுக் கொழுக்கட்டைகள் :)!

விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்!

said...

வெகு அருமையான கொண்டாட்டம் துளசி கைகளுக்கு வாழ்த்துகள். மனசுக்கு இன்னும் கொஞ்சம் வாழ்த்துகள்.பிள்ளையாருக்குப் பிடித்தவகையில் பட்டாணி சோளம் கொழுக்கட்டை வேற.சூப்பர் மா. மிக மிக சந்தோஷம்.கண்ணில ஒத்திக்கிட்டேன் இந்த அழகை.சதுர்த்திவாழ்த்துகள்.

said...

அச்சு [அசலாய்!] கொழுக்கட்டைகள் - மிக அழகாய்!

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

said...

சிவப்பு கொழுக்கட்டை அருமையா இருக்கு .ருசியும் அருமையா இருந்திருக்கும்னு புரியுது . பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் .

said...

சிறந்த பகிர்வு

தொடருங்கள்

said...

பதிவர்கள் கவனிக்கவும் ! : புரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க?
பதிவர்கள் கவனிக்கவும் ! : சிகரம் - வலை மின்-இதழ் - 003

said...

அச்சாய் அசலாய்க் கொழுக்கட்டைகளைப் பார்த்த அதிர்ச்சியில் நானும்! :)))))

said...


எப்படியோ பிள்ளையாரை தப்பிக்க விட்டுவிட்டீர். அவரது ஆசிகளை உங்கள் வீட்டிலேயே வைத்துவிட்டு, அவர் மட்டும் தனியாகத்தான் எங்கள் பக்கம் வந்தார் என்று நினைக்கிறேன். நல்ல மொழி நடை. வாழ்த்துகள்!.

எங்கள் வீட்டில் மண் பிள்ளையாரை வாங்குவதில்லை. வீட்டில் இருக்கும் பிள்ளையாரையே வருடா வருடம் துவைத்து எடுத்து , மேக்கப் போட்டு புதிதாய் மாற்றிவிடுவோம். மண் பிள்ளையாரை வாங்கி வணங்கி விட்டு அவரை தூக்கி போட மனம் இல்லை என்பதனால்தான் இப்படி.

இந்த வருடமும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி சார், அழகான மண் பிள்ளையாரை தனது வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்கினார்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

அடுத்த ஆண்டு எல்லாம் இனிதாக நடக்க அவரே அருள்புரியணும்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

இந்தவருசம்தான் அவர் நிம்மதியா இருந்தார்:-)

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அச்சுலே வார்த்தால் புள்ளையாரானாலும், கொழுக்கட்டை ஆனாலும் பட்டுப்போல வரத்தானே வேணும்!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

பார்க்க அருமையா அமைஞ்சதும் மனம் கூத்தாடுனது உண்மை:-)

அனைவருக்காகவும் வேண்டினேன். அவரும் ஆசிகளைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னார்ப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அசலாக வரலைன்னா அச்சால் என்ன பயன்:-))))

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க சசி கலா.

என்ன சாமர்த்தியம்மா இவருக்கு!!! எப்படி என் கொடுமைகளில் இருந்து தப்பிச்சாருன்னு பாருங்க:-))))

மீந்து போன சிகப்புக் கொழுக்கட்டையை, மறுநாள் உப்புமா செஞ்சேன். சூப்பர் டேஸ்ட்ப்பா!!!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க யாழ்பாவாணன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

said...

வாங்க சிகரம் பாரதி.

கவனித்துவிட்டேன்!!!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கீதா.

அச்சில் இருந்து வெளியே எடுத்தபோது இருந்த அழகைப் பார்த்து எனக்கும் அதிர்ச்சிதான்.

அச்சுப்பிள்ளையார் வந்து காலம் பல ஆச்சு. அச்சுக்கொழுக்கட்டைதான் ரொம்ப லேட் வரவு இல்லை?

said...

வாங்க தோழன் மபா தமிழன்வீதி.

முதல்வருகைக்கு நன்றி.

அப்படியெல்லாம் பிள்ளையார் ஆசிகளை விட்டுவிட்டுத் தனியாக வரமாட்டார். அது அள்ள அள்ளக் குறையாத அருட்செல்வமாச்சே!

எங்கள் நாற்பதாண்டு கால மணவாழ்வில் ஒரே ஒருமுறைதான் மண்பிள்ளையாரை வச்சு விழா கொண்டாடினோம். அதுவும் 2009 ஆண்டில்தான்.


அப்போது,அவரை சுத்தமான இடத்தில் கரைக்கணும் என்று சென்னையில் எல்லா இடங்களிலும் தேடியே நாலு மாசம் கடந்து போச்சு.


நேரம் இருந்தால் இங்கே பாருங்க:-)

http://thulasidhalam.blogspot.com/2013/09/a-day-out-with.html

பிள்ளையாரை வாங்குனபிறகுதான் க்ருஷ்ணா ஸ்வீட்ஸ்க்குப்போனால் அங்கேயும் ஒருபிள்ளையாரைக் கொடுத்துட்டாங்க.

அவரை நம்ம வீட்டுக் காவல்காரரின் குடும்பத்துக்குக்(நேபாளநாட்டினர்) கொடுத்துட்டேன்.

said...

கொழுக்கட்டை அருமை.

அசத்தலான கொண்டாட்டம் வாழ்த்துகள்.