Tuesday, August 05, 2014

பழியைத் தூக்கிப் பஸிலில்(Puzzle) போட்டேன்:-)

அகத்திலும் புறத்திலும் என்னைச் சுற்றி இருக்கும் குழப்பங்களை எப்படி விலக்கி மீண்டு வரலாம் என்ற எண்ணமே மனசு முழுக்க! ரெண்டு வாரம்  ஒன்னுமே  பதிவிடாமல் இருக்கோமேன்ற  குற்ற  உணர்வு ஒருபுறம் வாட்ட.......   முதலில் அகம் பார்க்கலாம் என்று கவனித்தால் உள்ளே எழுத்துவேலை என்னவோ பிரமாதமாக நடந்துகொண்டே இருந்துருக்கு என்றதையும் கண்டு பிடிச்சேன்:-)  எதைப்பற்றி எழுதலாம் என்றாலும் ஏற்கெனவே எழுதியாச்சு என்றதுபோல் ஒரு ப்ரமை!

புறத்தில்.....   மனசுக்கு உற்சாகமூட்டும் விஷயங்களைக் கண்ணெதிரே கொண்டுவரணும் என்றானதில்.... முதலில் கண்ணுக்குப் பட்டது  எது  அயர்வைத் தருகிறது என்று!  பஸில், தேமேன்னு  கன்ஸர்வேட்டரியில்  இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கு. இது,  இங்கிருந்த செடிகள் எல்லாம் நம்ம பச்சை வீட்டுக்கு இடம் பெயர்ந்ததால் கிடைச்ச வெற்றிடம்.

ஆயிரத்தில் ஒரு  முன்னூறு அடுக்கி  இருப்பேன். மீதி.... ? எப்பப்போய் அங்கே நின்னாலும்.... ஒரே மாதிரி வண்ணத்தில் எது எங்கேன்னு  சட்னு புரிபடாத வகையில் ரொம்பச் சின்னச்சின்ன துண்டுகள்.  ஊஹூம்...  இதுக்கு மேல்  நம்மால்  முடியாது என்ற தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டிய தருணம்!  மனோதிடம் அதிகமாத் தேவைப்படும் சமாச்சாரம், இந்தத் தோல்வியை நேருக்குநேர் சந்திச்சு ,   'முடியலை,  வெரி ஸாரி' ன்னு மன்னிப்பு கேட்பது.  கேட்டேன். மனம் லகுவாச்சு.  புள்ளையார் , டாலர் காசை முடிஞ்சு வச்சும், கவுத்துட்டார்:(

பழைய புராணம் இங்கே:-)))))எல்லாத்தையும் பிரிச்சு மயில்  பொட்டியில் (அது வந்த அட்டைப்பெட்டி)  எடுத்து வச்சேன். நெருங்கிய தோழி ஒருவரின் தோழியின் மகள், எப்பேர்ப்பட்டக் கஷ்டமான பஸிலையும் செஞ்சுருவாங்களாம்.  நீங்க அடுக்கி முடிச்சதும்,  க்ளிக்கிட்டு,  திரும்ப எல்லாத்தையும்  பிரிச்சுப்போட்டு, இங்கே வரும்போது கொண்டு வந்துருங்க. தோழியின் மகளுக்குக் கொடுக்கலாமுன்னு  ஐடியா சொன்ன   நெருங்கிய தோழிக்கு எப்படி நன்றி சொல்வேன்???

அவுட் ஆஃப் சைட், இப்போ அவுட் ஆஃப் மைண்ட் ஆச்சு.  இப்ப  அந்த மேசை காலியா இருக்கே!  புத்துணர்ச்சி தரும் பூக்களை நிரப்பினால்.....  உள்ளும்புறமுமாகப் பார்க்கலாமே!


நிரப்பினேன்:-)

இதற்கிடையில்  நட்டு வைத்த  பூண்டுகள் முளைக்கத் தொடங்கின.  உயிர்வாழும் ஆசை! நல்லா  இருக்கட்டும்!

குளிர்கால ஆரம்பத்தில்  தரிச்சுப்போட்ட ரோஜாச்செடிகளின் தண்டுகளை  நட்டு வைத்தேன்.  பிழைத்து வந்தால் லாபம்.  ஒருசிலவற்றைத் தவிர்த்து மற்றவை மண்ணில்(?!) வேர்விட்டு  நானும்  வளர்கிறேன் மம்மி என்றன.

இத்தனை முஸ்தீபுகளையும்  கண்ட 'காலம்',  நாமும் மிரட்டக்கூடாதுன்னு  லேசா சூரியனை வெளியில் கொண்டு வந்து காமிக்குது.  உண்மையைச் சொன்னால் இதுபோல  குளிர்காலத்தின்  நடு மாசங்களில்   கண்ணில் காணக்கிடைப்பதே அபூர்வம்!  நியூஸி வரலாற்றில் இதுபோல் இளஞ்சூடான ஒரு  குளிர்காலம் வந்தே 144 வருசங்கள் ஆச்சாம். அது  1870 இல்!!!
இந்தக் கலாட்டாவைப் பார்த்த ஏர்லி ச்சீயர்ஸ்  என்னும் வசந்த கால மலர், ஹலோ எப்படி இருக்கேன்னு  முளைச்சு, மலர்ந்துருக்கு!

புலி பதுங்குவது பாய்ச்சலுக்கோன்னு  ஒரு பயம் லேசாக மனசின் மூலையில் இருக்கு எனக்கு.  இதுக்குத்தான் பழமொழிகள் புத்தகம் வாங்கி வச்சுக்கக்கூடாது:-)

அதுக்காக  இரவிலும் இளஞ்சூடுன்னு நினைச்சுக்கப்டாது:-)  அது வழக்கம் போல் பலநாட்களில்  மைனஸ் ஸீரோ, மைனஸ் ரெண்டுன்னு போய் பறவைக்குளத்தையும்  தாமரைக்குளத்தையும் உறைய வைக்குது. ஆனால் பாருங்க, நம்மூட்டு குருவி ஒன்னு  அனுதினமும் காலை நேரத்தில் பனித்தட்டை லேசா, மூக்கில் குத்தி உடைச்சு, தண்ணீரில் முங்கிக்குளிச்சுட்டுத்தான் போகுது! ரொம்பவே ஆச்சாரம்!

'எருமை மாடு..... நின்னு வேடிக்கையா பார்க்கிறே?  போய் சட் புட்ன்னு குளியேன்'னு  சொல்லுதோ? எனக்கு பயங்கர மானக்கேட்டை உண்டாக்கிட்டுத்தான் மறுவேலை பார்க்குமோ, என்னவோ!

மாடுன்னதும்  இன்னொரு சமாச்சாரம்.  ஒருநாள்  மாடுகளையும் கன்றுகளையும் இளஞ்சூடான தண்ணீரில் குளிப்பாட்டினேன்!  போனமாசம் மகளுக்கு  ஒரு வீடு வாங்கினோம். கிரகப்பிரவேசம் என்று பெருசா ஒன்னும் இல்லை.  சூரிய உதயத்துக்கு முன் போய் சாமிப்படம் வச்சு பால் காய்ச்சிக்கணும் என்று ஏற்பாடு.  சோம்பேறிகளுக்கு ஏத்தாமாதிரி சூரிய உதயம் அன்றைக்குக் காலை 7. 59க்குன்னு  மெட் சர்வீஸ் சொன்னாங்க. ஓக்கேன்னு மாடுகளும் கன்றுகளுமாப்போய் , 'அதிகாலை'யில்  பாலைக் காய்ச்சியாச்சு:-)

வாங்கிய வீட்டில் , நம்ம தேவைகளுக்கு ஏற்ப ஒரு சில வசதிகளைச் செஞ்சுக்கணும்.  வேலைகள் முடிய இன்னும்  ஒரு மாசம் ஆகும்போல!  எங்கூரில்  நகரை மீண்டும் நிர்மாணிக்கும் பணி பெருமளவில் நடப்பதால்,  சின்ன வேலைகளுக்குக் கூட ஆட்கள் கிடைப்பதில்லை.

மனத்தளவில் மீண்டு வந்துவிட்டேன்.  பதிவுகளை  இனி தொடர வேணும்.
மனதை உற்சாகப்படுத்திக்கிட்டேன்.  போன பதிவுக்கு அக்கறையுடன்  பின்னூட்டமிட்ட  நட்புகளுக்கு  என் மனமார்ந்த நன்றிகள்.16 comments:

said...

வாங்க டீச்சர்.
காலையிலேயே டீச்சரோட பதிவும், பூக்களும் கண்டு புத்துணர்ச்சியாகவும் சந்தோஷமாவும் இருக்கு.

ஆ பக்ஷி, மைனாவோன்னு ஒரு சம்சயம்.. மைனா அல்லே?

said...

மீண்டு(ம்) வந்ததுக்கு நன்றி;

said...

மனம்போல் மலர்களும் மகிழ்ந்திருக்கின்றன. வாழ்த்துகள்.

மகிழ்ச்சியாக இருக்கிறது.

said...

பூக்களும், குளிக்கும் பறவையும் மனதுக்கு உற்சாகம் தந்து இருக்கும். அருமையான காணொளி.

மகள் வீட்டுக்கு வாழ்த்துக்கள்.
பஸிலில் உட்கார்ந்தால் முடியவில்லை என்றால் ஆயாசம் தான் ஏற்படும். அதை விடுத்து பூக்கள் பற்வைகளிடம் போனீர்களே ! நல்லது.
உற்சாகத்துடன் பதிவுகள் இடுங்கள்.

said...

தோட்டம் அழகு. புத்துணர்ச்சியைத் தர அதுவே போதும். மாடு கன்னுகளோடு கிரகப்பிரவேசம் சிறப்பு:)! மகளுக்கு நல்வாழ்த்துகள்!

said...

சிறந்த கருத்துப் பதிவு
தொடருங்கள்

said...

வாங்க ரிஷான்,

எனக்கும் மைனா போலத்தான் தெரியுது. ஆனால் உருவம் கொஞ்சம் சின்னதா இருக்கே!

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.

இன்றைக்கு உங்க பூசணிக்காய்தான் நம்மூட்டிலே!

said...

வாங்க கோமதி அரசு.

புரிதலுக்கு நன்றி.

மகளிடம் உங்கள் வாழ்த்துகளைச் சேர்த்தேன். நன்றி கூறினாள், தங்களுக்கு.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பூக்கள் தரும் உற்சாகத்துக்கு இணை ஏது?

மகளின் நன்றியை , இதோ உங்களிடம் சேர்த்தாச்சு!

said...

வாங்க யாழ்பாவாணன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

said...

பூ அலங்காரம் நன்றாக இருக்கு.

said...

மீண்டு வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி டீச்சர்.
மாடும் கன்றுகளுமாக கிரகப்பிரவேசம்....:) மகளுக்கு எங்கள் வாழ்த்துகள்.

எங்கள் வீட்டிலும் தோழி ஒருவர் பரிசளித்த 300 பீஸ் LOTUS TEMPLE உள்ளது. நிறங்களை பிரித்து வைத்தாயிற்று. எடுத்து வைத்து வைத்து.... ரோஷ்ணி கலைத்தும் விடுவாள். செய்து முடிக்க வேண்டும் என்று நெடுநாளைய ஆவல்....:)

said...

அன்பு துளசி நான் தான் லேட். மனசுக்குப் பிடித்த வேலைகளைச் செய்வதே உற்சாகம். மயிலை நினைக்கும்போதேல்லாம் எனக்கே மலைப்பாக இருக்கும். நெற்றிக்கு நடுவில் வலிக்கும். நம்ம விஷ்ணு ஐஃபெல் டவர் ஒன்றரை அடிக்குச் செய்திருக்கிறான். மீண்டு வந்ததுக்குப் பத்மநாபனுக்கு நமஸ்காரம். பூக்கள் எல்லாஅம் சூப்பர் மா.

said...

வாங்க டீச்சர் வாங்க :)

உங்களோட பதிவுகள் மறுபடியும் வர்ரதப் பாத்து மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

கருநீல வண்ணன் கார்முகிற் கண்ணன் உங்களுக்கு எப்பவும் துணையாக இருக்கட்டும்.

மலர்கள் ஒவ்வொன்னும் அழகு.

குளிக்கும் குருவி. அந்தக் குருவிக்கு யாரு “கூழானாலும் குளித்துக் குடி”ன்னு சொல்லிக் கொடுத்திருப்பா? அந்த ஆண்டவனைத் தவிர யார்? யார்? யார்?

எவ்வளோ பெரிய பசில். அத நீங்க முடிச்சிட்டு முழுப்படம் போடனும். நாங்க பாக்கனும் :)

பெற்றம் மேய்த்துண்ணும் தொழிலன் அருளால் பெற்றமும் கன்றுமாய் புதுமனை புக்கு மகிழ்ந்தேலோரோய்னு ஆண்டாள் மாதிரி பாடிக்கனும் :)