Wednesday, May 02, 2018

ப்ரிட்ஜ்வாட்டர் பாலாஜி (@அமெரிக்கா.... கனடா 32)

ஒரு  முப்பத்தியஞ்சு நிமிசப் பயணத்தில்  பாலாஜி ட்ரைவில் திரும்பி கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சது  வண்டி.  என்ன ஒரு இருபத்தியொரு மைல் தூரம் இருக்கலாம். வெள்ளை கோபுரம் கண்ணைப் பறிக்குது! ஸ்ரீவெங்கடேஸ்வரா என்னும் பாலாஜி !

1989 இல்  நம்ம   ஆந்த்ரா  நண்பர்கள் (மனவாள்ளே)சிலர்  சேர்ந்து  ஒரு கோவில் நமக்கு வேணுமுன்னு  தீர்மானிக்கறாங்க. பெருமாள் இருக்காரே.... அவர் பெரிய ஆள்.  'ஸ்வாமி, நீர் இங்கே வரப்போறீர்'னு சொன்னாப் போதும்.... மத்த ஏற்பாடுகளைத் தானே கவனிச்சுப்பார்!    வசூல்ராஜாவாச்சே..... வர்ற வசூலை விட முடியுமோ? :-)

 ரெண்டு வருஷமா இதுக்கான மீட்டிங், பணம் சேகரிப்புன்னு  வேலை மெள்ள நடந்துக்கிட்டு இருக்கு.   கோவில் ஒன்னு சின்னதாக் கட்டிக்கலாம். அதுக்கு ஒரு இடம் வேணுமேன்னு தேடும்போது....  பழைய சர்ச் ஒன்னு டிசம்பர் 1991 இல்  ஏலத்துலே   விற்பனைக்கு வருது!  அதை வாங்கறாங்க.  பாதிப்பணம்தான் கையில் இருக்கு.  மீதிப் பணத்தை நாப்பத்தியஞ்சு நாட்களுக்குள் அடைக்கணுமாம்.

எல்லோருமாச் சேர்த்து மீதிக்கு கடன் வாங்கியாச்சு.  ஜனவரி  கடைசியில்  இடத்துக்கான பத்திரம் கிடைச்சது!   ரொம்ப சிம்பிளா பூஜைகளை ஆரம்பிச்சுக்கலாமுன்னு ஃபிப்ரவரி மாசம் படங்கள் வச்சு  கோவில் ஆரம்பிச்சுருச்சு! மார்ச் மாசம் பொதுமக்களுக்காகக் கோவிலைத் திறந்து வுட்டாங்க! 

அடுத்த எட்டாம் மாசம்  திருப்பதியில்  இருந்து  பஞ்சலோக உற்சவர் வந்துட்டார். பூஜைகள் நடத்த பண்டிட் கூட வந்துட்டார்.  அவ்ளோதான்..... இருபத்தியஞ்சு பேர் கொண்ட   கமிட்டி ஒன்னு  ஆரம்பம் ஆச்சு.  கோவிலுக்கான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் எல்லாம் உருவாக்கி பக்காவா ரெஜிஸ்டர் பண்ணிட்டாங்க.

அடுத்த ரெண்டாம் வருஷம், ஸ்ரீ கணபதி ஸ்தபதிகளோடு பேச்சு வார்த்தை நடந்து  கோவிலுக்கான ப்ளான் தயாரிச்சு, ப்ரிட்ஜ்வாட்டர் ப்ளானிங் போர்டுக்கு அனுப்பி, அவுங்க அனுமதி கொடுத்ததும்,  பூமி பூஜை நடந்தது  1995 ஜூன் மாசம்.  மத்த ஏற்பாடுகள்  நடந்து கட்டடம் கட்ட ஆரம்பிக்கவே பத்துப்பதினொரு மாச கர்பகாலம்!  மளமளன்னு அதுக்குப்பிறகு நடந்ததெல்லாம்   கனவு போலத்தான்!
சென்னை, ஆந்த்ரா, ஜெய்ப்பூர்னு சாமி சிலைகள்  வரவு. ரெண்டு வருஷக் கடின உழைப்பு.  ஜூன் 1998 லே கோவில் கும்பாபிஷேகம் நடந்துச்சு.  அதுக்கு அடுத்த வருஷம்  ராஜகோபுர வேலைகள் முடிஞ்சு ஜூலையில் மஹாகும்பாபிஷேகம்!

கோவில் கார்பார்க்கில் வண்டியை நிறுத்துனதும்,  பார்த்தால்  முன்னால் இருக்கும்  அலங்கார வளைவையொட்டி கட்டட சாமான்களும் சலவைக்கல்லுமா  குவிஞ்சுருக்கு. கோவிலுக்கான விரிவாக்க  வேலைகள் நடக்குதாம்.  இந்த அனுமதிக்காக அஞ்சு வருசமாக் காத்திருந்தாங்க.  அக்கம்பக்கத்து மக்களும்,   'அவுங்களுக்கு ஓக்கே'ன்னு சம்மதிக்கணுமே!  எல்லோருமா எடுத்தவுடனே  ஹிந்துக்கோவில் வரட்டுமுன்னு  சொல்வாங்க?
முன்வாசலுக்கு முன்னால் தாமரைப்பூ வடிவத்தில் ஒரு  குளம்.  செயற்கை நீரூற்று  வேலை செய்யலை. நிறுத்தி வச்சுருக்காங்க.

கார் ஓட்டுநர் அஹமத்,  'நான் காத்திருக்கேன். நீங்க போயிட்டு வாங்க'ன்னார். பக்கவாட்டு வாசல் வழியா உள்ளே போறோம்.  முன்ஹாலில்  பெரிய ரங்கோலி !கொஞ்சம் பூச்செடிகள், வாழைக்கன்னுகள் எல்லாம் தொட்டிகளில்.


மாடிக்குப் படிகள் ஏறிப்போனோம்.  கொடிமரம் சந்நிதிக் கதவுக்கு முன்னால் இந்தப்பக்கம்.  பெரிய  உயரமான கதவைத்தாண்டி உள்ளே,  தகதகன்னு அலங்காரத்தோடு நம்ம வெங்கி!   நின்ற திருக்கோலம்!  அவருக்கு முன்னால் சின்னதா ஒரு சந்நிதி நம்ம பெரிய திருவடிக்கு!

பெருமாள் சந்நிதிக்குப் பின்னால்  கொஞ்சம் இடம் விட்டு  வலமும் இடமுமா ரெண்டு தனிச்சந்நிதிகள். வலதுபக்கம் ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மித் தாயார். இடப்பக்கம்  நம்ம ஆண்டாளம்மா!  அவுங்க சந்நிதிகளுக்கு ரெண்டுபக்கமும்  இன்னும் ரெண்டு சந்நிதிகள். தாயார் சந்நிதிப்பக்கம் ஸ்ரீ சத்யநாராயணரும்,  ஆண்டாள் சந்நிதிக்குப் பக்கம் ஸ்ரீ விஷ்ணுதுர்கை.


நமக்கிடதுபக்கமும்  நிறைய  சந்நிதிகளா இருக்குன்னாலும், நான் பெருமாளை ஸேவிச்ச  கையோடு வலப்புறமாத் தாயாரைத் தேடிப்போயிட்டேன்.  சரி அப்படியே வலம் வந்துடலாமேன்னு தொடர்ந்து போனால் ஸ்ரீ லக்ஷ்மி, துர்கை, சரஸ்வதி மூவருக்குமா ஒரு சந்நிதி, ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் சந்நிதி, ஸ்ரீராதாக்ருஷ்ணான்னு மூணு சந்நிதிகள் அடுத்தடுத்து!
அப்புறம் நம்ம ஸ்ரீராமர் அண்ட் கோ. அவருக்கு முன்னால் நம்ம ஆஞ்சி ஒரு சந்நிதியில்!
மறுபடிப் பெருமாளைக் கும்பிட்டுட்டு  எனக்கிடப்பக்கம் விட்டுப்போன சந்நிதிகளுக்குப் போறோம். புள்ளையார்,  அம்பிகான்னு அடுத்தடுத்து ரெண்டு சந்நிதிகள்.  ஸ்ரீ சம்பத்து கணபதியாம்!  (அமெரிக்கக் கோவில்களில் சம்பத்து கம்மியா என்ன? )  அந்த அம்பிகான்றது நம்ம பார்வதிதான்!
நாலடி தள்ளி ஸ்ரீநந்திகேஸ்வரர், அவருக்கு முன்னால் கொஞ்சம் பெரிய சந்நிதியில் நம்ம சிவன், லிங்க ரூபத்தில்!
அவருக்குப்பின்னே கொஞ்சம் இடைவெளிவிட்டு  ஸ்ரீ ஐயப்பன், அடுத்த சந்நிதி  ஸ்ரீசுப்ரமண்யஸ்வாமி வள்ளி தேவசேனாவுடன்!  இவுங்களுக்கு அடுத்து  சத்யநாராயணர் வந்துடறார்!
ஆஞ்சிக்குப் பக்கத்துக் குடித்தனம் நவகிரஹங்களுக்கு!   பெரிய கதவுக்குள்ளே நுழைஞ்சதும்  வலப்பக்க ஓரத்தில் !

எனெக்கென்னமோ  நம்ம சண்டிகர் கார்த்திகேயஸ்வாமி கோவில்தான் சட்னு நினைவுக்கு வந்துச்சு.  வெங்கடேஸ்வரா கோவில்னு பெருமாளையும் தாயார்களையும்  மட்டுமே வைக்காமல் எல்லா தெய்வங்களையும்   சுத்திவர வச்சு,  சைவம், வைணவம்னு எல்லோருக்குமான கோவிலாவே  வச்சுடறது  தென்னிந்தியாவுக்கு அப்பாலே இருக்கும் வழக்கம் ஆச்சே!

உள்ளூர் மக்கள் சிலர் பெருமாளுக்கு  முன் கண்மூடி அமர்ந்து  கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.

இன்னொருக்கா நம்ம வெங்கியைக் கண்குளிரப் பார்த்துடலாமேன்னு  கொஞ்சம் கிட்டப்போய் நின்னப்ப, பட்டர்ஸ்வாமிகள் கூப்பிட்டு  சடாரியும் தீர்த்தமும் கொடுத்தார்!  கூடவே  ஒரு பூவும், துளசியும்!  மனம் நிறைஞ்சது உண்மை.
கதவுக்கு வெளியே மாடி லேண்டிங்லே ஒரு பக்கம்  ஒரு டேபிளில்  ஸ்வாமிப்ரஸாதம், ஒரு பெரிய பாத்திரத்தில்!  பட்டர்பேப்பர் வச்சுருக்காங்க. நாமே எடுத்த வேண்டியதுதான்!  சுடச்சுட வெண்பொங்கல்!   ரெண்டு கரண்டி அளவு எடுத்துக்கிட்டோம். அப்புறம் சாப்பிடலாம்.

எதிர்ப்பக்கம் இருந்த ஆஃபீஸ் கவுன்டரில்  பெருமாளுக்குக் கொஞ்சம்  காசு கொடுத்ததும் ரசீது கொடுத்தாங்க.  கோவில் ரொம்ப அழகா இருக்குன்னு பாராட்டிட்டு,  படங்கள் விற்பனை உண்டான்னு கேட்டதுக்கு காலண்டர் ஒன்னு எடுத்துக் கொடுத்தார். அதுலேயே படங்கள் இருக்காம்.  கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லைன்னு கீழேயே அறிவிப்பு இருந்தது.

காலண்டர் படங்களைத் தான் க்ளிக்கி இங்கே போட்டுருக்கேன். ஸ்கேன் செஞ்சுருந்தால் இன்னும் க்ளியரா இருந்துருக்கும், இல்லே?

அடுத்து இருந்த இன்னொரு கவுன்ட்டரில் பிரஸாத விற்பனை!  லட்டு, மிளகுவடை வாங்கிக்கிட்டோம்.
கீழே படி இறங்கி வந்தால்  கிஃப்ட் ஷாப்பும், ஒரு பெரிய ஹாலில் கேன்டீனுமா இருக்கு! 'நம்மவருக்கு இட்லி வடை சாம்பார், எனக்கு வடை ன்னு  வாங்கி உள்ளே தள்ளிட்டு கூடவே ஒரு காபியும் குடிச்சுட்டு வந்தோம்.
கொஞ்சம் அதிக நேரம்தான் ஆகிருச்சுன்னு.... காத்துக்கிட்டு இருந்த அஹமத் கிட்டே  ஒரு  ஸாரி சொன்னோம். பரவாயில்லைன்னார்!

அடுத்த நாப்பதாவது நிமிட்  நம்ம க்ரௌன்ப்ளாஸாவுக்கு வந்தாச்சு.  வெயிட்டிங் சார்ஜ் சேர்த்துதான் வாங்கிக்கிட்டார்.  மறுநாள் ரெண்டு மணிக்கு வண்டி வேணுமுன்னு  சொன்னதுக்கு அவரே வரேன்னுட்டார்!  நல்லதாப் போச்சு. தெரிஞ்சவராவே இருக்கட்டுமே!
ஹொட்டேல் புழக்கடைத் தோட்டத்துலே போய் கொஞ்சநேரம் உக்கார்ந்துட்டு வந்தோம்.
நாளைக்குக் கிளம்பறதால் பாக்கிங் கொஞ்சம் செஞ்சுக்கணும்.

அப்ப ராச்சாப்பாடு?  பெருமாள் ப்ரஸாதம்தான்.... வெண்பொங்கல் மிளகு வடை!  டிஸ்ஸர்ட்.... லட்டு :-)

தொடரும்...........:-)


16 comments:

said...

// பழைய சர்ச் ஒன்னு டிசம்பர் 1991 இல் ஏலத்துலே விற்பனைக்கு வருது!//

ஒரு சர்ச் கோவிலாகிறது. இயேசு பெருமாள்!

said...

மிக அருமை, நன்றி.

said...

அங்கும் கோயிலில் புளி சாதம் போன்றவை விற்கப்படுபவை அறிந்து மகிழ்ச்சி. அழகான கோயிலாக உள்ளது.

said...

கோவில் மற்றும் படங்கள் நல்லா இருந்தது.

வடை லட்டு படங்கள் போடலை. நம்ம கோவில்ல பிரசாதக் கடை இருந்தால் அதில் உள்ள லாபம், வீட்டுக்குத் திரும்பினதும் அடுத்த வேளைக்கு பிரசாதங்களைச் சாப்பிடலாம். அடுப்படிக்குப் போகும் தேவை இல்லை.

said...

கோயில்னு போயிட்டால டீச்சரோட எழுத்துல ஒரு உணர்வுமயம் வந்துருது. அதுலயும் டீச்சருக்குப் பிடிச்ச வெங்கடேசப் பெருமாள் கோயில். கேக்கனுமா.

வெளிநாட்டில் கோயிலைக் கட்டிப் பராமரிக்கிறதெல்லாம் லேசில்ல. வெவ்வேறு மாநிலத்துக்காரங்க இருப்பாங்க. ஓவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாமி பிடிக்கும். எல்லாருக்கும் வசதி பண்ணனும். எல்லா ஊர்க்காரங்களையும் ஒன்னா உக்கார வெச்சு சாப்பாடு போடுற மாதிரி கஷ்டமான வேலை இது.

அமெரிக்காவில் கோயில்களில் இந்த பிரசாதங்கள் மிக அருமை. ஒரு வாட்டி அமெரிக்கா போயிருந்தப்போ... இதுவரைக்கும் அமெரிக்கா போனதே ஒருவாட்டிதான். பிட்ஸ்பர்க்ல ஒரு கோயில்ல புளியோதரை அது இதுன்னு நெறைய வாங்கிட்டு வந்து நாலஞ்சு நாள் சாப்பிட்டது நினைவுக்கு வருது.

said...

எங்கோ படித்தது கிறுஸ்துவர்கள் அயல் நாடுகளில் பள்ளிக் கூடங்கள் கட்டுவார்கள் இந்துக்கள் அயல் நாடுகளில் கோவில் கட்டுவார்கள்

said...

துளசி மேடம் நான் தற்செயலாக தமிழ்மணம் இன்று சென்று அங்குள்ள பதிவுகளை பார்வையிட்ட போது ப்ரிட்ஜ்வாட்டர் கோயில் பற்றிய தலைப்பை பார்த்ததும் நம்ம ஏரியாவாச்சே என்று நுழைந்ததும்தான் தெரிந்தது நீங்கள் இங்கு வந்து சென்றது...இங்கு வந்த போது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே... நானே எல்லா கோயிலுக்கும் கூட்டி சென்று இருப்பேனே. அருமையான வெஜிடேரியன் சமையலை என் கைப்படவே சமைத்து கொடுத்து இருப்பேன்

ஒரு வேளை நான் மோடியை பற்றியும் அரசியலைப்பற்றியும் அதிகம் எழுதுவதால் இவன் ரொம்ப மோசமான ஆள் என்று நினைத்துவிட்டீர்களோ என்னவோ.... ஒருவேளை நேரில் என்ன்னை சந்தித்து இருந்தால் உங்கள் எண்ணம் நிச்சய்ம் மாறி இருக்கும் அதுமட்டுமல்லாமல் இனிமேல் நீயூஜெர்ஸி வந்தால் நிச்சயம் இந்த மதுரைத்தமிழன் வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்கும் செல்லக்கூடாது என்று கண்டிப்பாக நினைத்து இருப்பீர்கள்.. என்னைபற்றி கீதா ரெங்கன் அல்லது ஜோதிஜியிடம் கேட்டு தெரிந்து இருக்கலாம்

இனிமேல் மீண்டும் எப்போதாவது வர வாய்ப்பு கிடைத்தால் தகவல் அனுப்புங்கள்...

உங்களுக்கு மட்டுமல்லா இங்கு பதிவு எழுதும் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது நீயூஜெர்ஸி வந்தால் தகவல் தெரிவிக்கவும் முடிந்தால் கண்டிப்பாக அனைவரையும் கண்டு உபசரிக்கிறேன்..

வாழ்க வளமுடன்

said...

இப்போது ப்ரிட்ஜ்வாட்டர் கோயிலுக்கு போட்டியாக இப்போது சவுத் ப்ரென்ஸ்விக் என்ற பகுதியில் இன்னொரு பாலாஜி கோவில் கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள் எப்படி மதுரை கொவில்களின் நகரம் என்று சொல்லுவார்களோ அதுபோல நீயூஜெர்ஸியும் அப்படி ஆகிவிடும் தூரம் அதிகமில்லை

said...

வாங்க ஸ்ரீராம்.

பொதுவா ஹிந்துக்களுக்கு எல்லா சாமியும் ஒன்னுதான், இல்லையோ?

இங்கேயும் ஒரு பழைய சர்ச் விற்பனைக்கு வந்தப்ப அதை வாங்கி மாத்திக்கலாமுன்னு ஐடியா நமக்கிருந்துச்சு. நமக்குமுன்னே சமோவன் ஆட்கள் முந்திக்கிட்டாங்க.

சமோவன் சர்ச் ஆகிருச்சு. 2011 எர்த்க்வேக் லே எல்லாம் இடிஞ்சு தரை மட்டம். இன்னும் அப்படியேதான் கிடக்கு... :-(

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

புளிசாதம் மட்டுமா? பிரியாணி கூட மெனு லிஸ்ட்லே இருக்கு :-)

said...

வாங்க நெ.த.

சாப்பிடுமுன் க்ளிக்கிய படம், நல்லா வரலை. அதான் நோ படம்:-)

வெளிநாடுகளில் பல கோவில்களிலும் கேன்டீன் நடத்தறாங்க. முழுக்க முழுக்க வாலன்டியர்ஸ்தான். கோவிலுக்கு வருமானம் ஆச்சு.

இங்கே சாப்பிடறதுக்காகவே கூட்டம் வருது! அஸ்ட்ராலியா ஹெலன்ஸ்பர்க் பெருமாள் கோவிலில் கேன்டீன் சனி ஞாயிறுகளில் மட்டும். தோசை தோசை.....ன்னு பறக்குது சனம் :-)

said...

வாங்க ஜிரா.

சரியாச் சொன்னீங்க. சாதாரணமா ஒரு சொஸைட்டியோ, சங்கமோ நடத்தறதைவிடக் கஷ்டம் இந்தக் கோவில் சமாச்சாரங்கள்.

கோவில்னு ஆரம்பிச்சால்... நித்ய பூஜைகள் முடங்காமல் நடத்தணுமே! அர்ச்சகர்களைக் கொண்டு வரணுமுன்னால்..... ஒர்க் பர்மிட் வாங்கறதுக்குள்ளே.... தாவு தீர்ந்துடும்.

ஆனாலும் கோவில்ன்னு இருந்தா நல்லாத்தான் இருக்கு! மேலும் இந்தியக் கோவில்கள் போல் ஆளாளுக்கு ஒரு 'மரியாதை' எல்லாம் பொதுவா இல்லை.

இதுலே மட்டும் எங்கூர் ஹரே க்ருஷ்ணாவை அடிச்சுக்க முடியாது. அதனாலேயே எனக்கு இந்தக் கோவில் ரொம்பவே பிடிக்குது :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கிறிஸ்தவர்கள் பள்ளிக்கூடம் கட்டுவதோடு மதமாற்றமும் செய்வாங்க.

இந்துக்கள் கோவில் கட்டி சாமி கும்பிடுவதோடு, அங்கிருக்கும் மக்கள் தேவைகளை அனுசரிச்சு நம்ம கலை கலாச்சாரங்களை வளர்க்கவும், கல்யாணம், நிச்சயதார்த்தம்னு குடும்ப விசேஷங்கள் செஞ்சுக்கவும் கோவிலில் ஏற்பாடு செய்யறாங்க.


said...

செல்லும் இடங்களில் நமக்கான வழிபாட்டுத்தலம் அமைத்து அதை பராமரிப்பது சிறப்பு.

தொடரீறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


கோவிலில்லா ஊரில் குடி இருக்க வேண்டாமுன்னு சொல்லி வச்ச முன்னோர்கள்தான் காரணம் :-)