Wednesday, May 16, 2018

சீனாவில் வாங்குன பல்பு .... சீனதேசம் - 12

டாக்ஸி வேணுமுன்னா கீழே  வரவேற்பில் சொன்னால் போதும். அவுங்க பேசி முடிச்சுருவாங்க.  பார்க்காத  ஒரு கோவிலுக்குப் போய் வரலாமேன்னு கேட்டதும்,  இன்னிக்கு லீவுன்னார் வரவேற்பில் இருந்த அம்பி.      ஙே..... கோவிலுக்குமா?  இருக்குமோ என்னவோ..... கோவிலுக்கு டிக்கெட்  இருக்கும்போது லீவும் கூட இருக்கலாம்....
அடுத்து இன்னொரு கோவில்னு பெயரைச் சொன்னதும், டாக்ஸிக்கு ஃபோன் செஞ்சு விசாரிச்சவர்,  ரொம்பக் கிட்டக்க இருக்குன்னு வரமாட்டேன்னுட்டாங்கன்னார்!  அட ! இந்தியா ! இன்டு சீனா பாய்பாய்!

 கொஞ்ச நேரத்துக்கு முன்னே ட்யானமன் ஸ்கொயரில் இருந்து  திரும்பி வரும்போது பக்கத்து மெயின் ரோடுலே டாக்ஸி வரிசை  பார்த்தோமே... அங்கே போய்ப் பார்க்கலாமுன்னு கிளம்பிட்டோம்.

 நாலைஞ்சு  டாக்ஸி ட்ரைவர்ஸ் கூட்டமா நின்னு  பேசிக்கிட்டு இருந்தாங்க.   நாம் சிக்கனமா பேசறோம்.

"லாமா டெம்பிள்"

"100 "

"டூ மச். 50"

"நோ"

பக்கத்துலே ஒரு ரிக்‌ஷாக்காரர்.  அவரே முன்வந்து நான் கூட்டிப்போறேன்னு  ஸீட்டைத் தட்டிக் காமிச்சார்.

"ஹௌ மச்"

"100 "

"நோ நோ ஒன்லி  50"

ஒரு விநாடி தயங்கிட்டு ஓக்கேன்னு தலையாட்டிட்டு  வண்டியைக் கிட்டக் கொண்டுவந்தார். இந்த வண்டியில் போகவே இல்லையே.... போய்த்தான் பார்க்கலாமா?   ரெண்டு பேர் உட்காரலாம்.  சின்னதா மோட்டார்  இருக்கு, மொப்பட் போல !
ஜாலியாப் போறோம். மெயின் ரோடை விட்டுட்டுச் சின்னத் தெருக்களில் வண்டி போகுது.  கார்களுக்கிடையில் நுழைஞ்சு வளைஞ்சு போறோம். ஒரு காமணி நேரம் ஆகி இருக்கும்.   குறுக்கே போகும் மெயின் ரோடுக்கு இந்தாண்டையே வண்டியை நிறுத்திட்டு,  நேராப்போய்  ரைட்லே  திரும்புன்னு சைகையில்  காமிச்சுட்டு, ' லாமா டெம்பிள்' ன்னார்.

இங்கெல்லாம்  மெயின் சாலைகளில் எல்லாப் போக்குவரத்தும் கலந்துகட்டிப் போகக்கூடாது. சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள் இப்படிச் சின்ன வண்டிகளுக்குன்னு  சாலையில் ரெண்டு பக்கமும் சைக்கிள் லேன் இருக்கு. அதுலேதான் போகணும். அதனால்தான் மெயின் ரோடுலே வராம சைடு ரோடுலே வந்துருக்கார்னு  நினைச்சேன்.

'நம்மவர்' அம்பது ஆரெம்பி எடுத்துக் கொடுத்தார். வாங்கிப் பார்த்துட்டு, அமெரிக்கன் டாலர் அம்பது வேணுங்கறார்.
ஹாஹா..... இதுதான் இருக்குன்னு 'நோ நோ' சொன்னதும் ஒரு மாதிரி சிரிச்சுக்கிட்டே  நேராப்போய் ரைட்னு  சைகை காமிச்சுட்டுத் திரும்பிப்போயிட்டார்.
நாங்க நேராப் போறோம். 'இப்ப  அங்கெ கோவில் இல்லைன்னா எப்படி இருக்குமு'ன்னு  இவரைக் கேட்டால்..... 'அங்கெ இல்லாம வேறெங்கே போயிரும்'னார்! நான் ஒரு கரி நாக்குத் துக்கிரி.......... 

மெயின் சாலை முக்கில் திரும்பறோம்.  கோவில் இல்லை !  நேத்து பார்த்தத் தெருவைப்போல் இல்லாம வித்தியாசமா இருக்கேன்னு தோணல்.

அங்கே எதிரில் வந்துக்கிட்டு இருந்த இளம் ஜோடியிடம்   'லாமா டெம்பிளுக்கு  எந்த வழி'ன்னு விசாரிச்சால், அவுங்க செல்ஃபோனை எடுத்துப் பார்த்துட்டு...  ரெண்டுபேரும்  வெவ்வேறு திசையில் கை காட்டுனாங்க!!!!

'இது என்னடா நமக்கு   இப்படி'ன்னு நன்றி சொல்லிட்டு   வலப்பக்கம் திரும்பிக் கொஞ்சதூரம் நடந்தோம்.  நல்ல உச்சி வெயில்.  நல்லவேளையா ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கலை....   ஒருவேளை சாலைக்கு அந்தாண்டை தெரியும் சின்னத் தெருவுக்குள் போய்ப் பார்க்கலாமான்னு நினைக்கும்போதே....  மரத்தடியில் பைக்கை நிறுத்திட்டு, 'எஸ். எஸ்'ன்னு  செல்ஃபோனில் பேசிக்கிட்டு இருந்தவரிடம்  வழி விசாரிச்சால்....

'நீங்க இடதுபக்கம் நேராப்போயிருக்கணும். கொஞ்சம்,  அதிகதூரம்தான். டாக்ஸியில் போயிருங்களேன்' னார்.  இப்போ டாக்ஸியை எங்கே பிடிக்கறது..... பெருமாளேன்னும்போது....    உபாயம்  சொன்னவரே அந்தப் பக்கம் போன ஒரு டாக்ஸியைக் கைகாட்டி நிறுத்துனதும், வண்டி யூ டர்ன் அடிச்சு இந்தாண்டை வந்துச்சு.  இவரே டாக்ஸிக்காரரிடம்  பேசி எங்களை 'இதுலே போங்க'ன்னார். நாங்களும் நன்றி சொல்லிட்டு டாக்ஸியில் ஏறி உக்கார்ந்துட்டோம்.
ஒரு  பதினைஞ்சு நிமிசத்துலே  கோவில் வாசலாண்டை வண்டியை நிறுத்தியவர், கோவிலைக் கைகாட்டி காமிச்சுட்டு, ஆள்காட்டி விரல் மோதிர விரல் ரெண்டையும்  உயர்த்திக் காமிச்சார். ஓ..... இருவது ஆரெம்பின்னு  நான் நினைச்சதைச் சொன்னதும் நம்மவர் இருபது எடுத்துக் கொடுத்தார்.  அதை வாங்கிக்கிட்டு மறுபடி தலையாட்டலும்  ரெண்டுன்னு  காமிக்கறதுமா  போயிட்டார்.

பெருமாளே.... காப்பாத்திட்டேன்னு  சொல்லிக்கிட்டே கோவில் வாசலுக்குள் போய் டிக்கெட் வாங்கினோம்.
மொழி தெரியலைன்னா எவ்ளோ கஷ்டம் பாருங்க.....
கொஞ்ச நேரம் கழிச்சு நினைச்சுப் பார்த்துச் சிரிச்சேன். அம்பதுக்கு எவ்வளவோ,  அவ்ளோ தூரம்  மட்டும் கொண்டு வந்து விட்ட  சாமர்த்தியத்தை என்னன்னு சொல்வேன்....

தொடரும்.........  :-)


14 comments:

ஸ்ரீராம். said...

அப்போ முதல்ல கொடுத்த 50 ஆரெம்பி எள்ளா? ஏமாத்திட்டாரா ரிக் ஷாகாரர்?

Anuprem said...

அட...சீனா வுக்கு போயாச்சா...


இருங்க இருங்க முதலில் இருந்து வரேன்...

விஸ்வநாத் said...

அருமை நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வித்தியாசமான வண்டி.

sarav said...

Dear Madam,
I came to your blog accidentally ... then i went on reading your previous post of your chinese trip.

Very Simple language with good photographs.. I was wondering how you are able to match the photos. Either you are writing on a daily basis while you are still in china or you must have amazing organizing skills

I will try to read all your old blogs as well

Sarav

G.Ragavan said...

அடக்கடவுளே... பாதிவழில எறக்கிவிட்டுப் போயிட்டானே. அம்பது அமெரிக்க டாலர் வேற வேணுமாக்கும். எதுவோ... ஒங்களுக்கும் ஒரு அனுபவமாச்சு. பொதுவா தங்கியிருக்கும் ஓட்டல்கள்ள விசாரிச்சா ஓரளவு எவ்வளவு ஆகும்னு சொல்வாங்க.

நம்மூர்லயும் கோயில்கள்ள சீட்டு இருக்கே. ஸ்பெஷல் தரிசனம். சூப்பர் ஸ்பெஷல் தரிசனம். அர்ச்சனைச் சீட்டு. அஷ்டோத்தரச் சீட்டு. நெய்விளக்குச் சீட்டு. எள்ளுப்பொட்டலச் சீட்டு. பிரசாதச் சீட்டு. சீட்டோ சீட்டு. அத்தன சீட்டு.

G.M Balasubramaniam said...

இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் உணவு தவிர பல விஷயங்களில் ஒற்றுமை இருப்பதாகத் தோன்றுகிறது

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீராம்.

நூறு கேட்டதுக்கு நாம் அம்பதுன்னு பாதிவிலை பேசுனதால் அவர் பாதி தூரம் கொண்டுவந்து விட்டுட்டுப் போயிட்டார் !!!

துளசி கோபால் said...

வாங்க அனு ப்ரேம்.

இதுவரை 12 தான். சட்னு முடிச்சுட்டு வாங்க :-)

துளசி கோபால் said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி

துளசி கோபால் said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

கை ரிக்‌ஷா மாதிரி மனுசர் இழுக்கலை என்பதால் அதுலே போய்ப் பார்த்தேன் :-) வேறெங்கும் இதைப்போல வண்டி பார்த்ததில்லை !

துளசி கோபால் said...

வாங்க சரவ்,

முதல் வருகைக்கு நன்றி.

பயணக்கட்டுரைகளை எப்பவும் பயணம் முடிஞ்சு வீடு வந்தபிறகுதான் எழுதுவது வழக்கம்.

போன பிறவியில் யானை என்பதால் ஞாபக சக்தி (இதுவரைக்கும்) அதிகம்தான் !

நம்ம துளசிதளத்தில் பயணக்கட்டுரைகள்தான் பெருமளவில் இருக்கும். நேரம் கிடைக்கும்போது எட்டிப் பாருங்கள். அதிகம் இல்லை இதுவரை.... 2142 பதிவுகள்தான்.

துளசி கோபால் said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உண்மைதான். ஒற்றுமைகள் அதிகமே!

துளசி கோபால் said...

வாங்க ஜிரா.

ஹொட்டேல்காரர் மூலம் டாக்ஸி கிடைக்கலைன்னுதான் நாமே துணிஞ்சு போனது..... ஒரு பாடமும் கிடைச்சதுன்னு வச்சுக்கலாம் :-)

நம்மூர் கோவில்களில் எதாவது சேவை செய்யச் சீட்டு. இங்கே கோவிலுக்குள் போகவே சீட்டு . நல்லவேளை அர்ச்சனை, அஷ்ட்டோத்திரம், நெய்விளக்கு.... இப்படி ஏதும் இல்லை :-) கோவில் வாசலில் பூஜை சாமான்கள் விற்பனையும் இல்லை !