Wednesday, May 09, 2018

ஹனுமனுக்குத் தெரிஞ்சுருக்கு !!! சீனதேசம் - 9

கண்ணாடித்தொட்டியில் இருக்கும் சிப்பிகள், பக்கத்துலே ஒரு ஜல்லிக் கரண்டி சகிதம் நம்ம குழுவை வரவேற்றாங்க ஒரு இளம்பெண்.  இதுலே இருந்து ஒரு சிப்பியை யார் எடுக்கறாங்கன்னு கேட்டதும் நான் முந்திக்கிட்டேன்.  ஜல்லிக் கரண்டி அனுபவமும் எனக்குத்தான் அதிகம்னு இங்கே  உங்களிடம் சொல்லிக்கொண்டு......  :-)
பெருசா எடுன்னு இவர் சொன்னாலும்,  சின்னதே போதுமுன்னு ஒன்னு  கோரி எடுத்தேன்.  ஒரு உதவியாளர் ஓடிவந்து அதைக் கத்தியால் ஒரு ஓரத்தில் கீறிப் பிளந்தார்.  உள்ளே முத்துக்களும்,  சதைப்பற்றான பகுதியுமா இருந்தது.

கடலுக்குள் இருக்கும் முத்துச்சிப்பிகளில் வளரும்  முத்துக்கள்,  கிடைப்பது ரொம்பக் கஷ்டம். ஆயிரக்கணக்கான சிப்பிகளை எடுத்துவந்து  திறந்து பார்த்தால் முப்பது நாப்பதுதான் கிடைக்குமாம்.  அப்ப ஒரு முத்துமாலை செய்ய எத்தனை முத்துக்கள் வேணும், அதுக்கான செலவு எல்லாம் பார்த்தால் நம்மைப்போல் சாதாரண மக்கள் முத்தே போட்டுக்க முடியாது, இல்லே?

உண்மையான  முத்துக்களை, இப்பெல்லாம் செயற்கை முறையில் வளர்த்து எடுக்கறாங்க. அதுதான் கல்ச்சர்ட் பேர்ல் சமாச்சாரம்.  Mikimoto Kōkichi   ஜப்பான்காரர் முதல்முதலா (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்)  முத்து விளையும் டெக்னிக்கைக் கண்டுபிடிச்சு  முத்துக்களை வளர்த்து எடுத்தார்.   இப்ப இது உலகம் முழுசும் பெரிய பிஸினஸ்.

முத்துச்சிப்பிகளை அப்படியே  வலைப்பையில் வச்சுக் கடலில் தொங்கவிட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்தில் (ஒன்னரை வருசம் முதல் மூணு வருச காலம்) வளர்ந்ததும்  எடுத்துப்பிரிச்சு முத்து எடுக்கறாங்க. உப்புத்தண்ணி இல்லாம நல்ல தண்ணியிலும் கூட முத்துக்கள் விளைவிக்கிறாங்களாம்.

உண்மையான முத்துச்சிப்பியை ஒருமுறை திறந்துட்டா அவ்ளோதான்.  முத்து அதுலே இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம். இல்லைன்னா.... அந்தச் சிப்பி இனிமேல் சமைச்சுச் சாப்பிடத்தான் லாயக்.

 எங்க நியூஸியில் அபலோன் என்னும் சிப்பிவகைகள் பிரசித்தம். வெளியே கால்ஸியம் பிடிச்சு வெள்ளையாக் கிடக்கும் சிப்பியைச் சுரண்டி  எடுத்தால்.....  டிஸைன் போட்ட   வானவில்!  இதுலேயும் அபூர்வமாத்தான் முத்து விளையும். வீட்டை வித்துட்டு, ஒரு முத்து வங்கிக்கலாம்....  New Zealand Paua Pearl , Paua Shell.  வருசத்துக்கு இத்தனை சிப்பிகளைத்தான்  எடுக்கலாம் என்ற கணக்கெல்லாம் உண்டு.
வெளியே நல்லபடி சுரண்டி எடுத்துச் சுத்தம் செஞ்ச  இந்தச் சிப்பிகள், நியூஸி நினைவுப்பொருள் ஐட்டங்களில் முக்கியமானது.  சுத்தம் செய்யும்போது உடைஞ்சு போச்சுன்னாக்கூடக் கவலை இல்லை.... அதை வச்சு நகை நட்டு பண்ணிருவாங்க. நியூஸி ஸ்பெஷல்!   வெளிப்பக்கம்  சுரண்டி எடுக்காத சிப்பிகள் விலை மலிவு. நானே  ஒரு சின்னது முதல் மீடியம் சைஸ் வரை ஏழெட்டுன்னு ஒரு செட்   வச்சுருக்கேன். தோட்டத்தில் செடித்தொட்டிகளுக்கிடையில் ஒரு அலங்காரமா நாலண்ணம் :-)
இந்தச் சிப்பிகளை வச்சே வீட்டு உள் அலங்காரம் செஞ்ச வீடு ஒன்னு  எங்க தெற்குத்தீவில் இருந்துச்சு. இருந்துச்சுன்னா... இப்போ?  வீட்டு ஓனர்கள் 'சாமிகிட்டே போயிட்டதால், எங்கூர் ம்யூஸியம் இதை  வாங்கி,  அப்படியே  ம்யூஸியத்துக்குள்ளே இதே டிஸைனில் வீட்டையே  கட்டி, அதுக்குள் கொண்டு வந்து வச்சுருச்சு!

 கூடுதல் தகவலுக்கு   இதோ உங்கள் துளசிதளம்  :-)

இந்த செயற்கை முறையில்  முத்து விளைவிக்கும் முத்துச்சிப்பிகளைத் திறந்து பார்த்துட்டு,  வளர்ந்த முத்துக்களை மட்டும் எடுத்துக்கிட்டு, சிப்பியை மூடி மறுபடியும் தண்ணிக்குள்ளே போட்டுடலாமாம். உண்மைக்கு மட்டும்தான்  ஒரே வாழ்வு!

விளக்கம் சொல்லிட்டு கொஞ்சம் முத்துக்களைப் பறிச்செடுத்து ஆளுக்கொன்னு கொடுத்தாங்க. எனக்கு மட்டும் ரெண்டு :-) இப்ப நம்மிடம் மூணு இருக்கு....  இன்னும்  ஒரு தொன்னுத்தியேழு கிடைச்சதும்  மாலையாக் கோர்த்துக்கணும்:-)
அடுத்த ஹாலுக்குள் நம்மைக் கூட்டிப்போய் வியாபாரத்தை ஆரம்பிச்சாங்க.  நாப்பதாயிரம் டாலர் முதல்..... ஆயிரம் டாலர் வரை  முத்து மாலைகள்.  நான் ஒரு ரெண்டாயிரம் டாலரில் ஒரு முத்துமாலையைத் தேர்ந்தெடுத்தேனா.....   'நம்மவர்' ஆடிப்போயிட்டார் :-) 'ஏம்மா....  உன்கிட்டேதான் ஒரு மிக்கிமோட்டோ முத்துமாலை  வச்சுருக்கியே.... இப்ப எதுக்கு இது? ' ஹாஹாஹா.....  முகம் போன போக்கைப் பார்த்து ஒரு மனநிறைவு  எனக்கு :-)  அவ்வளவு கொடியவள் இல்லைன்னு  இப்பக் காட்டிக்கணும்!  'ச்சும்மாப் பார்த்தேன்... அதுக்குள்ளே ஏன்....இப்படி பதற்றம்?'

நான் வாங்கப்போறதில்லைன்னதும்,  விற்பனையாளர் வாங்ஷுவுக்கு முகம் வாடிப்போச்சு.  அப்புறம் சின்னதா ஒன்னு மகளுக்கு வாங்கலாமுன்னு  மூணு முத்து இருக்கும் நெக்லெஸ் (வெள்ளிச்செயின்) வாங்கினேன்.  மகளுக்குன்னதும் கப்சுப்!
வைரத்துக்குள்ள அதே மாதிரி முத்துக்களுக்கும் தரம் பிரிக்கிறாங்க. நிறம், எடை, பளபளப்பு இப்படி...
ஒரு உண்மை முத்து மாலையும், அதே போல் இருக்கும்  போலி முத்துமாலையும் காமிச்சு எப்படி அசல் முத்துன்னு கண்டு பிடிக்கணும்னு சொன்னது சுவாரசியம்!

ராமாயணகாலம்.  ராவணவதம் முடிச்சு  வனவாசகாலமும் முடிஞ்சு  ராம் அண்ட் கோ அயோத்யா திரும்பியாச்சு. தசரதன் மட்டும் இல்லை. சாமிக்கிட்டே போயிட்டாரே....  மற்ற மூணு அம்மாக்களைப் பார்த்து வணங்கி, தகப்பன் இறந்ததை நினைச்சுத் துக்கம் அனுசரிச்சுட்டு, நல்ல நாள் பார்த்து ராமருக்கு  ராஜ்யத்தின் பொறுப்பை ஏத்துக்கும் விதமா பட்டாபிஷேகம் செய்யறாங்க.

விழா அமோகமா நடந்தது.  எல்லா விருந்தினருக்கும் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கறார் ராமர்.  அப்போதான் குலதனமாகிய ரங்கவிமானம் விபீஷணனுக்குக் கிடைச்சது. இப்படியான சமயத்தில்  நம்ம ஆஞ்சியும் மற்ற வாநரர்களும் அங்கேதான் இருக்காங்க. ரொம்பப் பணிவோடு சீதையின் பக்கத்தில்  தரையில்  உக்கார்ந்துருந்த ஆஞ்சியைப் பார்த்ததும் சீதைக்கு மனம் இளகிப்போச்சு. 'இவனால்தானே நமக்கு  மறுவாழ்வு கிடைச்சது. தக்க சமயத்தில் வந்து என்னைக் கண்டுபிடிச்சு, ராமனுக்குச் சொன்னதால்தானே எனக்கு  அசோகவனத்தில் இருந்து விடுதலை!  இல்லைன்னா நான் அங்கேயே ராவணனுக்கு பயந்து, நான் கொடுத்தக் காலக்கெடு முடிஞ்சதும் உயிரை விட்டுருப்பேனே...'  இப்படி பல எண்ணங்கள்.

சட்னு தன் கழுத்தில் கிடந்த  முத்துமாலையை (ஒரிஜினல் முத்து. அப்ப ஏது கல்ச்சர்ட் பேர்ல்ஸ் எல்லாம் !)கழட்டி, ஆஞ்சிக்குப் பரிசாகக் கொடுக்க, அதை வாங்கிய ஆஞ்சி முத்துக்களை ஒவ்வொன்னாக் கடிச்சுப் பார்த்தாம்! அதுலே ராமர் இருக்காரான்னு தேடுனதாகக் கதை போகுது! ஆனால் நம்ம வெர்ஷன் படி....  ஒரிஜினல் முத்துன்னா, லேசாப் பல்லில் வச்சுக் கடிச்சுப் பார்த்தால்  சொரசொரன்னு இருக்கும். அதுக்குத்தான்  ஆஞ்சி பல்லில் வச்சுக் கடிச்சுப் பார்த்ததுன்னு சொல்லிக்கலாம்:-)

கடிச்சாலும் பளபளப்பு குறையாது.   முத்துக்களுக்குக் கனம் கூடுதல்,  கையிலே வச்சுத் தேய்ச்சுப் பார்த்தால் மினுமினுப்புக் கையில் ஒட்டும். முத்துக்களில் துளைபோட்ட இடத்தில் தொட்டால்  கோலமாவு போல கரகரப்பா  இருக்கும்.
இதே போலி முத்துன்னா  (ப்ளாஸ்டிக்தான்  வேறென்ன?) தோலுரியும், வாய்க்கு வழுவழுப்பா இருக்கும், கனம் குறைவு, கோலமாவு கிடையாது இப்படி....


அதான்    நம்ம  ஆஞ்சி,  சீதா கொடுத்த முத்துமாலையைக் கடிச்சுப் பார்த்துருக்கு!

'உங்களைப் பார்த்தா என் அம்மா மாதிரி இருக்கீங்க'ன்னு வாங்ஷு சொன்னதும், நானும் 'உன்னைப் பார்த்தால் என் மகளைப்போலவே இருக்கிறாய்'னு சொல்லி ஒரு செல்ஃபி எடுத்துக்கிட்டேன்:-)
நம்ம குழுவில் மற்ற மூவர் ஒன்னும் வாங்கிக்கலை. மேனேஜருடன் உக்கார்ந்து கதை பேசியபடி க்ரீன் டீ குடிச்சுக்கிட்டு இருந்தாங்க. நாம்தான் வியாபரத்தில் பிஸியா இருந்தோமே.....    மேனேஜர், நம்மை டீ உபசரிச்சார் என்றாலும்....  க்ரீன் டீ குடிக்க எனக்குப் பிடிக்காது. 'குடிங்கோ. நான் உங்க அண்ணன் மாதிரி'ன்னார்!  அண்ணனுடன் ஒரு க்ளிக்!  இங்கே  எல்லோரும் ஓரளவு நல்லாவே இங்லிஷ் பேசறதால் நமக்கு மொழிப்பிரச்சனை இல்லை! (எனக்கே இப்ப சீனக்குடும்பம் வந்துருச்சு பாருங்க.... இனி வெறுஞ்சோறுதான்!)
அடுத்துப்போகுமிடமும் சுவாரஸ்யமானதுதான்.  ' முத்துமணி மாலை' ன்னு பாடிக்கிட்டே கிளம்புங்க.....

தொடரும்.............:-)


14 comments:

said...

தானம் கொடுத்த மாட்டைப் பல்லை பிடிச்சுப் பார்ப்பங்களோன்னு கேக்கற மாதிரி தானம் கொடுத்த முத்தை பல்லால கடிச்சுப் பார்ப்பாரோ....

முத்துக்கள் பற்றி விவரங்கள் சுவாரஸ்யம்.

said...

//முகம் போன போக்கைப் பார்த்து ஒரு மனநிறைவு எனக்கு :-) // கோபால் சார் ட்ட கேட்டேன், இந்தமாதிரி பொய்யா பதறுனாத்தான் உங்ககிட்டேர்ந்து தப்பிக்கமுடியும் ங்கிற ரகசியத்தை சொன்னாரு, but அது எதுக்கு இப்போ ?

said...

முத்துமணிகளின் வரலாறு தெரிந்தது.

இங்கு துபாயில், டிராகன் மார்ட்டில் செயற்கை முத்துக்கள் கோர்த்த மாலை 10-50 டாலர்தானே. நீங்க ஆயிரம் டாலர்னு சொல்றீங்களே... டூரிஸ்ட் என்பதால் இத்தனை விலையோ?

said...

ஒரு காலத்துல கொற்கைல முத்துகள் கொட்டிக் கிடக்குமாம். போற வர்ர குதிரைகளோட குளம்புல முத்து எதாச்சும் சிக்கி குதிரைகள் நடக்கச் சிரமப்படுமாம். அப்படியிரும் இருந்திருக்கு ஒரு காலம். கொஞ்சம் உயர்வு நவிற்சியா புலவர்கள் சொன்ன பொய் மாதிரித்தான் தெரியுது.

முத்தை எடுத்த பிறகும் மறுபடியும் சிப்பியை மூடி தண்ணில போட்டுறலாம்னு கேள்விப்பட்டு மகிழ்ச்சி.

சீன மகளும் அண்ணனும் கிடைச்சதில் மகிழ்ச்சி. இதத்தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு பெரியவங்க சொல்லீருக்காங்க.

said...

நீங்கள் எடுத்த சிப்பியில் இருந்த முத்துகள் உங்களுக்கு என்று இருந்திருக்க வேண்டுமோ

said...

முத்துகளில் துளாஐ இருக்குமா

said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...

said...

வாங்க ஸ்ரீராம்.

கிடைச்சது ஒரிஜினல்தானான்னு பின்னே எப்படிக் கண்டுபிடிப்பதாம்? :-)

said...

வாங்க விஸ்வநாத்.

ஆஹா... ப்ரைவேட் ட்யூஷன் உண்டா? ஹா........

said...

வாங்க நெ.த,

தரம்.... தரம்... தரம் பார்த்து விலை!

ப்ரிட்டிஷ் ப்ரதமர் மார்கரெட் தாட்ச்சர் இந்தக் கடையில்தான் முத்துமாலை வாங்கினாங்களாம்.

அது இன்னும் அதிக விலையா இருந்துருக்குமோ?

யூ பே ஃபார் த க்வாலிடி !

said...

வாங்க ஜிரா.

கவிதைக்குப் பொய் அழகாமே! :-)

லேயர் லேயரா அந்த வழுவழுப்பான திரவம் படிஞ்சு படிஞ்சுதானே முத்து வளருது. திரும்பத் தண்ணீரில் போட்டு வச்சா அந்த செயல் தடைப்படுவதில்லை என்பது மகிழ்ச்சிதான்!

குடும்பம் கிடைச்சது எனக்கும் சந்தோஷம்தான் !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சில கடைகளில் முழுச்சிப்பியே விக்கறாங்க. அதை வாங்கினால் அதில் உள்ள முத்துக்கள் நமக்குதான். இங்கே டெமோ காண்பிக்கறதைப்போய் சொந்தம் கொண்டாடலாமா?

விளையும் முத்துக்களில் துளை கிடையாது !

said...

வாங்க ரமேஷ்.

முதல் வருகையோ?

நன்றிகள் பல !

said...

முத்துமணி மாலை...

ஒவ்வொரு முத்தும் அழகு...