Friday, May 04, 2018

இருவர் அறுவரானது எப்படி? (@அமெரிக்கா.... கனடா 33)

நிதானமா எழுந்துக்கலாமுன்னு இருக்கும் நாள்தான் ஊருக்குமுந்தித் தூக்கம் கலைஞ்சுருது இல்லே?  இன்றைக்கு இங்கிருந்து கிளம்பறோம் என்பதால்... மனசு ஓய்வெடுக்காமல்  அடுத்து நிக்கும் வேலைகளை நினைக்க வைக்குது....

குளிச்சு முடிச்சு, பேக்கிங் எல்லாம் சரிப்படுத்திட்டு,  கைவசம் இருக்கும் தீனிகள் என்னன்னு பார்த்தால்  கொஞ்சம் பிஸ்கெட்ஸ் பாக்கி. அதையே  ப்ரேக்ஃபாஸ்ட்டா வச்சுக்கிட்டால் தப்பா?
ஒன்பதரைக்குக் கீழே வந்து  ரிஸப்ஷனில் 'செக்கவுட் செஞ்சதும் பெட்டிகளை வச்சுட்டுப் போக வசதி இருக்கா'ன்னு கேட்டுக்கிட்டுப் பின்பக்கத்தோட்டத்தைக் கொஞ்சம் சுத்தி வந்தோம்.


இதுக்கிடையில்  அண்ணன் மகள் வீட்டுக்குப் ஃபோன்போட்டு அவுங்க எல்லோரும் பத்திரமா வந்து சேர்ந்ததைத்  தெரிஞ்சுக்கிட்டு, நாமும் இன்றைக்குக் கிளம்பும் தகவலையும் சொல்லி  ஹை அண்ட் பை ஆச்சு.
பதினொன்னரைக்கு வரேன்னு சேதி அனுப்பின பத்மா  அஞ்சு நிமிட் முன்னாலேயே வந்தாங்க. கையில்  பெரூசா ஒரு பை!  நமக்குப் பரிசுப் பொருட்கள்.  தனித்தனியா பொதிஞ்சு வச்சுருக்கும் விக்கிரஹங்கள் நாலு!  ஐயோ.... எதாவது ஒன்னு  கொடுத்தால் போதுமேன்னதுக்கு  அது ஒன்னுதானாம். ஒரு செட்!  இவுங்களைப் பிரிக்கவே கூடாதாம்!  ராமர் அண்ட் கம்பெனி :-)  ரெண்டடி உயரம்!

அட ராமான்னு  பெட்டிகளைத் திறந்து, இடம் பண்ணி  ரெவ்வெண்டா வச்சு மூடும்போது இன்னொரு சின்னப்பொதியை எடுத்துக் கொடுக்கறாங்க.  செப்பு டம்ப்ளர்.  நாம் வாங்குன செப்பு ப்ளாஸ்க்குக்கு ஜோடி.

 "இன்னும் ஏதாவது இருக்கான்னு இப்பவே பொட்டியை மூடறதுக்கு முன்னாலே சொல்லிடுங்க....பத்மா ! "

பனிரெண்டு மணிக்கு எல்லாப் பொட்டிகளையும் இழுத்துக்கிட்டுப்போய் செக்கவுட் பண்ணிட்டு, க்ளோக்ரூமில் பொட்டிகளை வச்சுட்டு, நாங்க பத்மா கூடவே கிளம்பறோம்.
இந்த எடிஸன் பயணத்துலே ஒருநாளைத் தவிர மற்ற நாட்களெல்லாம் நமக்கு சாப்பாடு போட்ட அன்னதாதா இவுங்கதான்! இந்த லஞ்ச்தான் இப்போதைக்குக் கடைசி!


ஷுகர் ட்ரீ ப்ளாஸாவில் இருக்கும் ஸ்வாகத்  ரெஸ்ட்டாரண்டுக்குக் கூட்டிப் போனாங்க.
ஓனர், ரொம்பத் தெரிஞ்சவர் அவுங்களுக்கு!  வந்து  நலம் விசாரிச்சார். நம்மையும் அறிமுகப்படுத்தி வச்சாங்க !  மூணுபேரும் அவரவர் தேவைக்கு ஆர்டர் கொடுத்தாச்சு.  தோசை, பூரி,  மினி தாலி மீல்ஸ்.

நிதானமா சாப்பிட்டு முடிச்சோம். அருமையான ஃபில்டர் காஃபி !  இடைக்கிடை கதை பேசவும் மறக்கலை.  பத்மாவுக்குத்தான்  செல்ஃபோனில் சேதி வந்தவண்ணமே இருக்கு! இவுங்களும் 'அதைச் செய், இதைச்செய்'ன்னு  இங்கிருந்தே வேலைகள் நடக்க  கைடு பண்ணிக்கிட்டே இருக்காங்க.
'இன்னும் கொஞ்ச நேரத்தோடு   என் சல்யம் முடிஞ்சுடும் பத்மா'ன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன். நட்புக்காக இவ்ளோ நேரம் ஒதுக்கி, உபசரிப்பாங்கன்னு நான் கனவிலும் நினைக்கலை.....!  அவுங்க நேரத்தை எடுத்துக்கறோமேன்னு  இப்பவும் கொஞ்சம் குற்ற உணர்ச்சிதான் நமக்கு.
திரும்ப எங்களை க்ரௌன் ப்ளாஸாவில் கொண்டு வந்து விட்டாங்க. சில க்ளிக்ஸ், பிரியாவிடை, பை பை எல்லாம் ஆச்சு!
கொஞ்ச நேரத்துலேயே  அஹமத் வந்துட்டார். நாங்களும் பொட்டிகளைத் திரும்ப எடுத்துக்கிட்டுத் தயாராத்தான் இருந்தோம். கிளம்பி நேரா ஜே எஃப் கே போறோம்.  ஒரு நாப்பத்தினாலு மைல் தூரம்.  ஒருமணி நேரம் ஆச்சு!


பெரியதிருவடி வந்து வழி அனுப்பறார் !

செக்கின் பண்ணிக்கிட்டு உள்ளே போயிட்டோம். இன்னும் நிறைய நேரம் இருக்கு :-)  ஒன்னும் வாங்கறதா இல்லை....  ச்சும்மா விண்டோ ஷாப்பிங் மட்டுமே !

நியூயார்க் போகவே இல்லை.  நேத்து  செப்டம்பர் 11க்கு இங்கேதானே இருந்தோம். ' ஃப்ரீடம் டவர் பார்க்கணுமா'ன்னு  பயண ஏற்பாடு நடக்கும்போதே பத்மா கேட்டுருந்தாங்க. முன்கூட்டியே டிக்கெட் புக் பண்ணலைன்னா பார்க்க முடியாதாம். எனக்குத்தான் ஏனோ போகணுமுன்னு  கடைசிவரைத் தோணவே இல்லை.  ட்வின் டவர் பார்த்த நினைவு அப்படியே மனசில் இருக்கட்டும். அது அழிஞ்சு போன நினைவு வேணாம்.....

ஆறுமணிக்கு நம்ம ஃப்ளைட். க்வான்ட்டாஸ்தான்.  ஆனால் எல் ஏ. வரை போயிட்டு அங்கே இறங்கி ஒன்னரை மணி நேரத்தில்  இதே ஃப்ளைட்டில் ஸிட்னி போகணும் என்பதால் நாட்டை விட்டு வெளியேறும்  ஃபார்மாலிட்டியை எல்லாம்  இங்கேயே முடிச்சுக்கணும்.

வழக்கமான  செக்யூரிட்டி செக்  ( செருப்பைக் கழட்டு, ஃபுல் ஸ்கேன் பண்ணனும்  இத்யாதிகள் )  எல்லாம்  முடிஞ்சு  கடைசியில் வண்டி கிளம்பிருச்சு :-)


க்வான்டாஸின் கொடுமைகள் ஆரம்பம் ஆச்சு.   வரும்போது A380 இல் கூட்டிவந்துட்டு, இப்போ 747 .....
சாப்பாடு............  கீரையை மறந்துட்டாங்க போல....  பீன்ஸ் இருக்கு.

 நியூயார்க்லே இருந்து கிளம்பின அஞ்சு மணி அம்பத்து நிமிட்லே லாஸ் ஏஞ்சலீஸில் இறங்கியாச்சு.  இங்கேயும் விண்டோ ஷாப்பிங் மட்டுமே! மேற்கு நோக்கிய பயணம் என்பதால்.....   இங்கே  மணி ராத்திரி ஒன்பதுதான். ஒரு மணி நேரம் போரடிச்சுக்கிடந்த பின்  போர்டிங் ஆச்சு.
நமக்கு வேணுங்கற ஸீட் செலக்‌ஷனுக்கு ஆளுக்கு முப்பது யூஎஸ் டாலர் அழுதுருந்தோம்.  பதினைஞ்சு மணி நேரம், கொஞ்சமாவது காலை நீட்டி உக்கார்ந்தால் நல்லதுன்னுதான்.

எனெக்கென்னமோ இந்த ஸீட் பிடிக்கறதில்லை.  ஒரு செக்‌ஷனில் மொதல்லே இருக்கும் இதுலே கால் நீட்டிக்கும் வசதி உண்டு.  யாரும் அவுங்க ஸீட்டைப் பின்னால் தள்ளி நம்மை அசைய விடாமச் செய்யற சங்கடம் கிடையாதுதான். ஆனால்  ட்ரே, படம் பார்த்துக்க மானிட்டர் இதையெல்லாம்  கைப்பிடிக்குள் இருந்து  எடுத்து மடக்கி, எடுத்து மடக்கின்னு சல்யம்.  கண்ணாடிக்கூடு, கேமெரா, புத்தகம் எல்லாம்  வச்சுக்கும் வலைப் பை கைக்கு எட்டாத தூரத்தில்.....  ப்ச்.... என்னவோ போங்க...... நம்மாண்டை ஒரு வார்த்தை கேட்டுட்டு புக் பண்ணி இருக்கலாம்....  கடைசியில்  இவரும் அங்கே வசதியா இல்லைன்னு ஒத்துண்டார் :-)

மறுநாள்  காலை ஸிட்னி டைம் ,  ஆறு இருவதுக்கு  ஸிட்னியில்  இறங்கியாச். இங்கே இப்போ பதினாலாம் தேதி காலை.  பதிமூணாம்தேதி ....  காக்கா ஊஷ்னு காணாமப் போயிருந்துச்சு....   மேற்கே போனால் இப்படின்றதை  நினைவு வச்சுக்கணும்.

நமக்கு நியூஸிக்குப்போக  க்வான்டாஸின் கனெக்டிங் ஃப்ளைட்   சாயங்காலம் அஞ்சே முக்காலுக்குத்தான்.  பதினொரு மணி நேரம் தேவுடு காக்க வேணும்.  இது இன்னுமொரு கஷ்டம்.  இதுக்கு முன்னால் காலையில் எமிரேட்ஸ் ஏழு அம்பதுக்கு இருக்கு.  ஒருவேளை  க்வான்டாஸ் சரியான நேரத்துக்கு வராம போயிட்டால்?  அடிக்கடி இப்படி லேட்டா வர்றது அவுங்களுக்கு வழக்கம்தான்.

ஒன்பது இருவதுக்கு  ஏர் நியூஸிலாண்ட் உண்டு.  தனி டிக்கெட் வாங்கணும். ( வாங்கி இருக்கலாமோன்னு  இப்போ தோணுது...)

அவ்ளோ நேரம்  ஏர்ப்போர்ட்லேயே  உக்கார்ந்துருக்க முடியாது. ராத்திரியெல்லாம் தூக்கமில்லாம உடம்பு  இன்னும் டயர்ட் ஆகிருமுன்னு 'நம்மவர்'  ஏர்ப்போர்ட் ஹொட்டேலில் அறை புக் பண்ணி இருந்தார். ஏர்ப்போர்ட்டுக்குள்ளேயே இருக்குன்னாலும்  1.6 கிமீ தூரம் கேபின் பேகை உருட்டிக்கிட்டு நடக்க முடியுமா? ஷட்டில்தான் எடுக்கணும். அதுக்குக் காசை கட்டிட்டு வெளியில் வந்து காத்திருந்து ஒருவழியா மெர்குரி ஹொட்டேல் போய்ச் சேர்ந்தோம். இப்பவே மணி ஏழரை. ஒரே ஒரு ஆறுதல் நம்ம பெரிய பெட்டிகள் டைரக்ட்டா நம்மூருக்குப் போகுது.
அறை  தயாரா இல்லையாம்.  கொஞ்சம் உக்கார்ந்துருங்கன்னதும்,  ஆளுக்கொரு காஃபி வாங்கிக்கிட்டு லாபியில் உக்கார்ந்துருக்கோம். நாமும் அப்பப்பப் போய் அறை ரெடியான்னு கேக்கறதும், இன்னும் ஏதும் காலி ஆகலைன்னு பதில் வர்றதுமா ஒன்பது, பத்து, பதினொன்னுன்னு நேரம் போய்க்கிட்டு இருக்கு.
கடைசியில் தாங்கமுடியாம, 'அறை வேண்டாம்.   புக்கிங் கேன்ஸல் பண்ணிருங்க'ன்னு  குரல் எழுப்புனதும் (!) அடுத்தது  உங்களுக்குத்தான்னு சொல்லி அஞ்சே நிமிட்லே அறைச்சாவி கைக்கு வந்துருச்சு.

மூணு மணிக்கு அலார்ம் வச்சுட்டுப் படுக்கையில் விழுந்தோம். நல்ல தூக்கம்.  அலார்ம் அடிச்சதும் எழுந்து சட்னு ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு, நாலுமணிக்குக் கிளம்பி  டாக்ஸியில் ஏர்ப்போர்ட்க்கு(!) வந்துட்டோம். செக்கின் ஆச்சு. வளையலைக் கழட்டு. முடியலைன்னா ஷூவைக் கழட்டுன்னு  எதாவதொன்னைக் கழட்டவச்சால்தான் செக்யூரிட்டிக்கும் சந்தோஷம்.

நம்மவருக்கு ஒரே பசியாம்.  தாய் ரெஸ்ட்டாரண்டில் ரைஸ் வித் க்ரீன்கறின்னு  வாங்கிக்கிட்டு, நல்லாவே இல்லைன்னு பேய்முழி முழிச்சார்!. நல்லவேளை நான் தப்பிச்சேன். எனக்கு நல்லதா ஒரு கப்புச்சீனோ :-)சோறு..............

அஞ்சே முக்காலுக்குக் கிளம்பி ஊர் வந்து சேரும்போது  பத்தே முக்கால். பொட்டிகள் வந்து அதை எடுத்துக்கிட்டு நேரா க்ரீன் சேனல்தான். நம்மகிட்டேதான் டிக்ளேர் பண்ணும் வகையில் ஒரு ஐட்டமும் இல்லையே....  இந்தியாவில் இருந்தா வர்றோம்?
எங்க ஊர் பயோ செக்யூரிட்டி கொஞ்சம் பயங்கரமானதுதான். பழமோ, விதையோ, பூவோ இப்படி எதுவும் நாட்டுக்குள் நுழையப்டாது. உணவுப்பொருட்கள் கொண்டு வந்தால் அதை டிக்ளேர் செஞ்சுட்டு பொட்டியைத் தொறந்து  காமிச்சால் எல்லாத்தையும்  எடுத்துப் பார்த்துட்டு, 'அபாயம்' என்று தோணுவதைக் கடாசிடுவாங்க. நார்த்தங்காய் உப்பிலிட்டது,  சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல் எல்லாம்  அதிர்ஷ்டம் இருந்தால்தான் நம்ம அடுப்புக்கு வரும். பலமுறை குப்பைத் தொட்டிக்குத்தான் போயிருக்கு.  அதன் விதி அப்படி. உணவுப்பொருட்களை டிக்ளேர் பண்ணாம விட்டுருந்தோமுன்னு  தெரிஞ்சால் பத்தாயிரம் டாலர் வரை தண்டம் கட்டணும்.


ப்ளேன் லேண்டிங் ஆகுமுன்னேயே  ஸ்க்ரீனில்  அறிவிப்பு வந்துரும்.  ப்ளேனை விட்டிறங்கி  இமிக்ரேஷன் வரும் வழியில் எல்லாம் பத்தடிக்கு ஒரு குப்பைத் தொட்டியும் அறிவிப்புமாக இருக்கும்.  நீயே கடாசிட்டால் உனக்கு நன்மை :-)

போன வாரம் ஆஸியில் இருந்து  இங்கே திரும்பி வந்த தோழியின் பையில் மறந்துபோய் தங்கிட்ட ஒரு ஆப்பிள், நானூறு டாலர் கட்டவச்சுருச்சுன்னு புலம்பிக்கிட்டு இருக்காங்க.
டாக்ஸி பிடிச்சு வீடு வந்தபோது  பதினொன்னரை.  வீடு பாவமா நின்னுருந்தது.
உள்ளே போய்  ஸ்வாமி லைட் போட்டு  நல்லபடி வந்துசேர வச்சதுக்கு நன்றி சொல்லிக் கும்பிடு போட்டுட்டுத் தூங்க ஆரம்பிக்கும்போது  மறுநாள் ஆகி இருந்தது :-)

காலையில் கடமைகளை முடிச்சுக்கிட்டு  கேட்டரி ஒன்பதுக்குத் திறக்கும்போது, ரஜ்ஜுவை கூட்டிக்கிட்டு வரணும். அன்பேக் எல்லாம் அப்புறம்தான். அதுவரை  அறுவரில் நால்வர் ஓய்வெடுக்கட்டும் !

இப்படியாக நம்ம அமெரிக்க, கனடாப் பயணம்  முடிஞ்சது:-)

இதுவரை கூடவே வந்த வாசக நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும்!

பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!

8 comments:

said...

செம அருமை.

said...

பயண அனுபவம் அட்டஹாசம். கூடவே பயணித்தேன். என்ன ஒண்ணு, ஒரு வாரமா, சீனா, அமெரிக்கா என்று குழப்பியது.

ஆமாம் கடைசி படம் (சாதம்...) அழகா இருக்கே. சுவை நன்றாக இருந்ததா?

வீட்டுக்கு எத்தனை மணிக்கு வந்தால் என்ன. உடனே சாதம் சாத்துமது செய்து சாப்பிட்டு அக்கடான்னு தூங்கியிருக்கலாமே. நான் ஒரு வாரம் பழங்களிலேயே வாழ்ந்து இடத்துக்குத் திரும்பி வரும்போது எத்தனை மணியானாலும் சாதம், வெந்தயக் குழம்பு செய்து சாப்பிட்டுவிடுவேன். அப்போதான் நிம்மதியா இருக்கும்

said...

பயணங்கள் சுகமானவை. அனுபவம் கொடுப்பவை. அறிவை வளர்ப்பவை. மனவளத்தைப் பெருக்குகின்றவை. இன்னும் பல பயணங்கள் நீங்கள் சென்று எங்களுக்கும் படிக்கச் சுவையான பதிவுகள் கிடைக்கட்டும்.

said...

ஆகாய விமானத்திலிருந்து புகைப்படங்கள் மிகவும் அருமை. உங்களது பயண அனுபவங்கள் மூலமாக அறியாத பல செய்திகளை அறியமுடிகிறது. பண்பாட்டு வேறுபாடுகளையும் அறியமுடிகிறது. நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர் முழுதும் கூட வந்தமைக்கு நன்றி !

said...

வாங்க நெ.த.

கூடவே வந்ததற்கு நன்றி!

இனி குழப்பம் இருக்காது. சீனா மட்டும்தான் :-)

பருப்பு, தக்காளிச்சட்டினி சாதம். சுவை அப்படி ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லை. உப்பு சப்பில்லாமல் தான் கொடுப்பாங்க.

சொரணை வந்துட்டால்... க்வான்டாஸில் வரமாட்டோமே.... :-)

said...

வாங்க ஜிரா.

பயணங்களின் அருமை தெரிஞ்சு, நீங்க சொல்றது அத்தனையும் சரி!
ஒவ்வொன்னும் தரும் அனுபவங்களும் பாடங்களும் கணக்கில் அடங்காதவை !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி!