Monday, May 14, 2018

இங்கே நான் ஒரு 'இன்Dடு' !! சீனதேசம் - 11

கெமெரா, கைப்பை,  Bபேக் Pபேக் இவைகளுக்கு அனுமதி இல்லை. முக்கியமாப் படம் எடுக்கக்கூடாது. அப்படிக் கைவசம் இவைகள் இருந்தால்  ஸ்டோரேஜுக்கான இடத்தில் ஒப்படைச்சுடணும். அதுக்குத் தனிக் கட்டணம் உண்டு.
ஹவாய் செருப்பு, வெஸ்ட், ( Vests and flip flop sandals) எல்லாம் போட்டு வந்தால் உள்ளே விடமாட்டோம். தொப்பி போட்டுருந்தால் கட்டடத்துக்கு உள்ளே நுழையுமுன் கழட்டிடணும்.

கௌரவமான உடை அணிஞ்சு வரணும்.

பேச அனுமதி இல்லை.

சிலசமயம் கூட்டம் அதிகமாக இருக்கும். அமைதி காத்து வரிசையில் வரணும்.

ஓடுவது, உரக்கப்பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

தினமும் காலை எட்டு முதல் பனிரெண்டுமணி வரை மட்டுமே  திறந்துருக்கும். திங்கள் கிழமை விடுமுறை.

வெளியே நிற்கும் ராணுவத்தினரை  (PLA Ceremonial Soldiers)அனுமதி இல்லாமல் படம் எடுக்கக்கூடாது.

சட்ட திட்டங்களைப் படிக்கும்போதே ஐயோன்னு இருந்தது.
சின்ன ஆஸ்வாசம்.....  மொபைல் ஃபோன்.

 பாஸ்போர்ட், சாவி, மணிபர்ஸ்  வச்சுக்கலாம். ஆனால் எல்லாம் சட்டை/ட்ரௌஸர் பையில் இருக்கணும்.
 வெளியே வெறுங்கை மட்டும் !!!

ஓ....

'கிளம்பும்மா.... சீக்கிரம் போனால் சீக்கிரமா வந்துடலாம். இன்றைக்கு ஞாயித்துக்கிழமை வேற.... கூட்டம் அம்மப்போகுது'ன்னார் 'நம்மவர்'

 பழக்கப்பட்ட (!) வழி என்பதால்  நிதானமாவே நடக்கறோம். எங்கே?  ட்யானமன் சதுக்கத்துக்குத்தான். சேர்மன் மாவோ அவர்களைச் சந்திக்கப்போறோம்.  இன்னுமா இருக்காருன்னா..... இருக்கார்!  மாவோவின் நினைவிடம்.

நல்ல அகலமான பத்து லேன்  சாலையின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப்போகும் சுரங்கப்பாதைகள். படு சுத்தம்! நல்ல வெளிச்சமாவும் இருக்கு! ஏதோ பெரிய  ஹாலுக்குள் நுழைஞ்சுட்டோமா என்ன?
அந்தாண்டை போனதும்  வலது பக்கம் இன்னும் கொஞ்சம்  நடக்கணும்.  செக்யூரிட்டி செக்கில் நம்ம பாஸ்போர்ட் காமிச்சதும் உள்ளே போகச் சொன்னாங்க.
இங்கே  இன்னொரு சுரங்கப்பாதை இருக்கு. இதுலே இறங்கி  இடது பக்கம் திரும்பினால் சதுக்கத்தின் ஆரம்பத்துக்கு வந்துடலாம். இடது திரும்பாம நேராப்போய் அந்தாண்டை படிகளில் ஏறினால் நாம் முந்தாநாள் வந்து பார்த்த மெரிடியன் கேட் இருக்கு, இந்த சாலையின் எதிர்ப்புறம்.
இந்த ட்யனமன் சதுக்கம் ரொம்பவே பெரூசு!  நாலுலட்சத்து நாப்பதாயிரம்  சதுர மீட்டர்னு சொல்றாங்க. நூத்தியொன்பது ஏக்கராம்!  யம்மாடியோவ்.....
இதுலே  ஆரம்பத்துலேயே செங்கொடி பறக்கும் ஒரு கொடிக்கம்பம்.
இன்னும் கொஞ்சம் தள்ளி ஒரு  வெற்றித்தூண் போல ஒன்னு.  வார் மெமோரியலாகவும் இருக்கலாம்!  புரட்சியில் மடிந்த வீரர்களின்  நினைவாக !  Monument to the people's Heroes. இதுவே தனிக்கட்டடம் போல  இருக்கு!  ரெண்டுமாடிக் கட்டடத்துமேலே நிக்கும் தூண்! மொத்தம் கிட்டத்தட்ட முப்பத்தியெட்டு மீட்டர் உயரம். முழுக்க முழுக்க க்ரானைட் ! பத்தாயிரம் டன் என்ற கணக்கு !!
சீனப்புரட்சி நடந்து முடிஞ்சு புதுச்சீனதேசம் (People's Republic of China )பொறந்தாச்சுன்னு  1949 அக்டோபர்  ஒன்னாம் தேதி, இதே சதுக்கத்தில் இருந்துதான் தலைவர் மாவோ  அறிவிச்சாராம்.
ட்யனமன் சதுக்கம் முழுசும் மக்கள் வெள்ளம். வெவ்வேற குழுக்களா அங்கங்கே நிக்கறாங்க.  வரிசை ஒன்னு உள்ளே போக நிக்குது. நாமும் போய் வாலில் ஒட்டிக்கிட்டோம்.
 நினைவுக் கட்டடத்துக்கு முன்னே  ரெண்டு பக்கமும் பிரமாண்டமான சிலைகள் வச்சுருக்காங்க. எல்லாம் சீனப்புரட்சி நடந்த  சமயத்துக் காட்சிகள்.

வீல்சேரில் வரும் மக்களைத் தனியா வேற வழியில் கூட்டிப்போறாங்க. வரிசை நகர்ந்து கட்டடத்துக்குள் போகுமிடத்துக்கு முன்னேயே,  பூக்கள் விற்பனை.  ஒத்தைப்பூவோ, இல்லை பூங்கொத்தோ வாங்கிப்போய்  மாவோ சிலைக்குப் படைக்கலாமாம்.  இந்தப் பூவும் (கூட) ப்ளாஸ்டிக்குன்னுதான் தோணுது. நல்ல செலஃபேன் பேப்பரில் பொதிஞ்சு வச்சுருக்காங்க.  நிறையபேர் பூ வாங்கிக்கறாங்க.

கட்டடத்துக்குள் போகும் படிகளாண்டை வந்ததும்  செல்ஃபோனை, ஜாக்கெட் பைக்குள் வச்சுட்டோம். வாசலில் நுழையும்போதே   முன்னே இருக்கும் பெரிய ஹாலில் பிரமாண்டமான  மார்பிள் சிலை.  நல்ல உயரத்தில்  சேர்மன் மாவோ சோஃபாவில் உக்கார்ந்துருக்கார். அவருக்குப் பின்பக்கம் சீனதேசத்து மலைகள் இருக்கும் இயற்கைக் காட்சி.
உள்ளே நுழையும்போதே  அயல்நாட்டினருக்கான   இடதுபக்கப் பாதையைக் காமிச்சார் ராணுவவீரர்.   வலதுபக்கத்தில்தான்   மாவோ, சிலையாக!  மக்கள் கொண்டுபோகும் பூக்களை அங்கே வச்சுடறாங்க.  என்ன நடக்குதுன்னு நாம் நின்னு பார்க்க அனுமதி இல்லை. நமக்கு முன்னாலேயே பாதையைக் கைநீட்டிக் காட்டியபடியே ராணுவவீரர்கள் நடக்கறாங்க.நாம் இடதுபக்கம் பிரியும் பாதையில்  உள்ளே நுழைஞ்சதும் நமக்கு வலதுபக்கம் க்றிஸ்டல் பெட்டியில் சேர்மன் மாவோ படுத்துருக்கார்.  காம்யூனிஸ்ட் கொடி உடம்பில் போர்த்தி இருக்காங்க. முகம் கூட லேசா சிவந்த மாதிரி. நாம் நிக்க முடியாது. நடந்துக்கிட்டே பார்த்தபடி அடுத்த பகுதிக்குப் போயிடணும். இங்கே வெள்ளை சுவரில்  தங்க எழுத்தில் என்னமோ எழுதி இருக்கு!
அதைக் கண்ணால் பார்த்தபடி நடந்தால் வெளியே போகும் கதவு. அவ்ளோதான். அந்த  வாசலில் படி ஏறுனதில் இருந்து  இந்த வாசலில் படி  இறங்கும் வரையில் ஆன நேரம் அஞ்சே நிமிசம்தான் !

உள்ளே அப்படி ஒரு அமைதி. நம்ம  மூச்சுக் காத்தோட சப்தம்  நமக்கே  கேக்குதுன்னா பாருங்க!

மேலே இருக்கும் அஞ்சு படங்கள், சீனர்களின் காம்யூனிஸ்ட் பார்ட்டியின் வலைத்தளத்தில் இருந்து எடுத்தவை. அவர்களுக்கு  என் நன்றிகள் ! 
வெளியே கதவைத் தாண்டுன அடுத்த விநாடி  எல்லா மக்களும் ஒரே காரியத்தைச் சொல்லிவச்சாப்போல செய்யறாங்க. பாக்கெட்டில் இருந்து  செல்ஃபோனை எடுக்கறதுதான். வெளியே க்ளிக்கத் தடை ஏதும் இல்லையே..... நாமும் சீனர்களானோம் :-)

வெளிவாசலில் பெரிய  இடமும் ரெண்டு பக்கமும் நினைவுப்பொருட்கள் கடையுமா இருக்கு. மாவோவின் முகம்தான் எல்லாப் பொருட்களிலும்....   நாம் ஒன்னும் வாங்கிக்கலை.

இந்த தேசத்தில் முக்கியமான இடங்களுக்குள் போக ஒரு கட்டணம் வசூலிக்கறாங்க. அது அந்தந்த இடங்களைப் பராமரிக்கும் செலவுக்கு உதவியா இருக்கு.  கோவிலுக்குள் போகக்கூடக் காசு . ஆனால் சேர்மன் மாவோ  நினைவிடத்தில்  மட்டும் அனுமதி இலவசம்தான்!

சேர்மன் மாவோ 1976 செப்டம்பர்   ஒன்பதாம்தேதிதான் சாமிகிட்டே போனார். அவருடைய விருப்பம், தன் உடலை எரிக்கணும் என்பதுதான்.  'செத்துப்போன பிறகும் எதுக்காக பூமியில் இடம் பிடிக்கணும்' என்று சொல்வாராம்.  ஆனால் மக்கள்(!)  அவர் பேச்சை இதுலே மட்டும் கேக்கலை.

அவர் இறந்த பிறகு  உடலைப் பாடம் செஞ்சு, நினைவிடம் கட்டி அதுலே வச்சுட்டாங்க. இந்தக் கட்டடம் கட்டும் வேலை, அவர் உடலைப் பார்வைக்கு  வைக்கத் தயாரிக்கப்பட்ட க்றிஸ்டல் சவப்பெட்டிகான வேலை,  உடலைப் பாதுகாக்கச் செஞ்ச வேலைன்னு ஏழு லட்சம் பேரின் உழைப்பு அடங்கி இருக்கு!  1977  நவம்பர் மாதம் நினைவிடம் கட்டி முடிச்சுத் திறந்தும் ஆச்சு!

'சரியா எம்பாமிங் செய்யும் டெக்னிக் தெரியலை... நாம் பார்க்கும் உடல் மெழுகுச்சிலைதான்,  க்ரிஸ்டல் பெட்டியின் அடியில் இருக்கும் மார்பிள் பெட்டியில் உண்மையான உடல் இருக்கு....'  இப்படியெல்லாம் பரவலான சேதிகள்  இருக்குதான். ஆனால் யாரும் வாயத் திறந்து நாக்கு மேலே பல்லைப்போட்டுப் பேசிட முடியாது.... கப்சுப்!

பொதுவா சீனர்கள் கொஞ்சம்  உயரக்குறைவுன்னு நினைச்சுக்கிட்டு இருந்ததை மாத்திக்கவேண்டியதாப் போயிருச்சு எனக்கு!  சேர்மன் மாவோ அஞ்சடி பதினொரு அங்குல உயரமாம்.  அதனால்    ரஷ்யாவிலிருந்து பரிசாகக் கிடைச்ச க்றிஸ்டல் பெட்டியைப் பயன்படுத்த முடியாமல் புதுப்பெட்டி செய்யச் சொல்லி, ரெண்டு டஜன் பெட்டிகள் வெவ்வேற கம்பெனிகள் செஞ்சதில், இப்போ அவர் 'கிடக்கும் ' பெட்டியைத் தேர்ந்தெடுத்தாங்களாம். 

அங்கே சமர்ப்பிக்கறதுக்காக விற்கும் பூக்கள் கூட ப்ளாஸ்டிக்தானோன்னு எனக்கொரு சம்ஸயம். பிரிக்காமக் கொள்ளாம அப்படியே  சிலைக்கு முன்னால் வச்சுட்டு, மறுபடி விற்பனைக்கு வந்துருதோன்னு....      ப்ளாஸ்டிக் அரிசி சமாச்சாரம் கேட்டது முதல்  எதைப் பார்த்தாலும் ப்ளாஸ்டிக்கோன்னு  நினைப்பு வர்றதைத் தடுக்க முடியலை..... அரண்டவன் கண்ணுக்கு..................  இருண்டதெல்லாம்.......    கதைதான்!

நாம் சீனா போன சமயம், அங்கத்து Tomb Sweeping பண்டிகைக் காலம்.  அரசு விடுமுறை நாள். முன்னோர்களின் கல்லறைகளைச் சுத்தம் செஞ்சு மலர்கள் கொண்டுபோய் வச்சு வழிபடுவாங்களாம்.  முக்கியமா இளம் தலைமுறை காகிதப்பூக்கள் செஞ்சு, கல்லறையில் கொண்டுபோய் வைப்பாங்களாம். குடும்ப முன்னோர்கள் மட்டுமில்லாமல், நாட்டுக்காக தங்கள் உயிரைத் தந்த வீரர்களையும் நினைத்து மரியாதை செய்யும் நாள்.  இப்ப இந்த தினத்தையொட்டிய வீக் எண்ட் என்பதால்  உள்ளூர்ப் பயணிகள்  வருகை அதிகம்னு நம்ம ஹொட்டேலில் சொன்னாங்க.

இவுங்கெல்லாம் சொன்னதை வச்சுப் பார்த்தால் நிறைய நேரம் வரிசையில் நிக்க வேண்டி இருக்குமேன்னு  அதுக்கும் தயாராத்தான் போனோம். வரிசை எந்த வித அசம்பாவிதமும் இல்லாம சட்னு நகர்ந்து போய் நாம் நினைச்சதுக்கு மாறா 'தரிசனம்' சீக்கிரம் கிடைச்சுருச்சு.

'நம்மவர்'தான்  'ஏகப்பட்ட நேரம் இருக்கு. எதிரில் இருக்கும் ஃபர்பிடன் ஸிட்டிக்குள் போயிட்டுப் போகலாமா'ன்னார். ஐயோ..... என்னுடைய கெமெரா  கைவசம் இல்லையே.... அது இல்லாம என்னால் முடியாதுன்னுட்டேன். இந்த செல்ஃபோன் கெமெரா எனக்குச் சரி வர்றதில்லைப்பா....   சும்மாத்தான் சதுக்கத்தில் நின்னு கொஞ்சம் வேடிக்கை.....

அப்பதான் ஒரு சீனப் பெண்மணி, மெல்ல என் தோள் தொட்டு,  'இன்டு, உன்னோட ஒரு படம் எடுத்துக்கவா?'ன்னு  கேட்டாங்க.  முதல்லே கொஞ்சம் முழிச்சேன். அப்புறம் 'நம்மவர்'தான் சொன்னார், இந்தியர்களை சீனர்கள் குறிப்பிடுவது  இப்படின்னு. இன்டியன்ஸ் = இன்டு.  அட!
உடனே போஸ் கொடுத்தாச்.  அப்புறம் நாங்க சதுக்கத்துலே நடந்து போகும்போது  நாலைஞ்சு முறை போஸ் கொடுக்க வேண்டியதாகிப் போச்சு!  இன்டுவுக்கு இத்தனை டிமாண்டா?   இன்டு சீனா பாய் பெஹன்!  Indu....  Indu.......இதுலே அவுங்களைச் சேர்ந்தவங்க படங்கள் எடுக்கும்போது 'நம்மவர்' வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்கறார். இவரும் நமக்கொரு காப்பி  க்ளிக் பண்ணப்டாதோ?   இப்படி மெய் மறக்கறாரேன்னு, நீங்களும் ஒன்னு க்ளிக்குங்கோன்னு  அப்பப்ப ஞாபகப்படுத்த வேண்டியதாப் போச்சு :-)

சதுக்கத்தில் இருந்து மெரிடியன் கேட், சில க்ளிக்ஸ் :-)
தினமும் காலையில் கொடி ஏத்துறதை க்ளிக் பண்ணிக்கிட்டு இருந்தேனில்லையா... அப்போ  எதிரில் இருக்கும் இன்னொரு கட்டடத்துக்கூரைகளின் நாய்களையும் க்ளிக் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்ப ஒரு கோணத்துலே நாய்க்கூரைக்கு  இடதுபக்கம் தங்க நிறத்தில் இன்னொரு கூரை கண்ணில் படும். இதே காட்சி, ராத்திரி  இருட்டுனபிறகு  பார்த்தால்.... தங்கக்கூரை தெரியுமிடத்தில் விளக்கு வரிசை. அப்புறம்தான் தெரிஞ்சது அது  இந்த ஃபர்பிடன் சிடி மெரிடியன் கேட் கடந்து ரெண்டாம் முற்றம் போகும் வழியில் இருக்கும் கட்டடத்தோட  பக்கவாட்டு வியூன்னு!
இந்த மெரிடியன் கேட் கூரைகளுக்கு ராத்திரியில் விளக்கு அலங்காரம் உண்டாம். விஷயம் தெரிஞ்சது முதல் ,  அடுத்து வந்த நாட்களில் ராத்திரி  அங்கே விளக்கு எரியுதா இல்லையா, எப்போ அணைக்கிறாங்கன்னு  அப்பப்ப  நம்ம படுக்கை அறை ஜன்னல் வழியாக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன்.  (ஆமாமாம்.... உலகமகா முக்கியம் பாருங்க.....  என்ன மனசோ....  )
திரும்பிப்போகச் சுரங்கப்பாதையில் இறங்கினதும்,  வலதுபக்கம் படியில்  போகாம.... நேரா எதிர்வாடைக்குப் போகும் வழியில் போய் மெரிடியன் கேட்டாண்டை போயிட்டோம்.  அப்போ அங்கே ம்யூஸிகல் ஃபௌன்டெய்ன் காட்சி. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்  நடக்குமாம். நமக்குக் காணக்கிடைச்சது !
திரும்ப ஹொட்டேலுக்கு  வந்து சேர்ந்தாச்சு. வெறும் ரெண்டு மணி நேரத்தில் எல்லாம் ஆச்சுன்னது வியப்புதான்.  பத்தரை கூட ஆகலை!  பக்கத்துலே இருக்கும் ஃபுட் ஸ்ட்ரீட் மார்கெட்லே எட்டிப் பார்த்துக்கலாம்.  ஒரு குறிப்பிட்ட புத்தாவுக்கான என் தேடல் பாக்கி இருக்கு.

அங்கே போனால்....சின்னதா ஒரு மஸாஜர் கிடைச்சது, யூஎஸ்பி சார்ஜரோடு. முப்பத்தியஞ்சுன்னதை 'நம்மவர்' இருபத்தைஞ்சுன்னதும் கிடைச்சுருச்சு. லிட்டில் புத்தா இருந்தாலும்  விலை படியலை. நான் நினைச்ச வகை இல்லை என்பதால்.... அப்புறம் வேற கடையில் பார்க்கலாமேன்னு விட்டுட்டேன்.  யானை இருக்கும் ஒரு வின்ட்ச்சைம் கிடைச்சது, அறுவதுக்கு!

பணம் கட்டப்போனப்ப,  நமக்கு லக்கி டிப் கார்டு கொடுத்தாங்க. ஓஹோ.... இது இங்கெல்லாம் வாடிக்கைன்னு  அப்போதான் உறைச்சது. சுரண்டிப் பார்த்தேன். தொளாயிரம்!  இதுதான் விலை உயர்ந்ததுன்னு  சொன்னாங்க. ஸோ ஸேம் ஸ்டோரி.  விழுந்துறக்கூடாதுன்னு  கவனமா.... எதுவும்  வேணாமுன்னு  மனஉறுதியுடன் தலையை ஆட்டிட்டு வந்துட்டேன். இந்த லக்கி டிப் கார்டுகளில் எல்லாம்  இதே தொள்ளாயிரம்தான் இருக்கணும். வேற ஒரு கடையில்  சுரண்டிப்பார்த்துட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கணும் :-)

சின்னச் சின்ன ஏமாத்துகள்....  சின்னச் சின்ன வியாபாரத் தந்திரங்கள் ! 


இனி  வேறு எங்கே போகணுமுன்னு யோசிக்கணும். ஏகப்பட்ட  இடங்கள்  இருக்கே....

'நம்மவர்'தான் மெள்ள ஃபர்பிடன் ஸிட்டின்னு ஆரம்பிச்சார்.  இப்பதானே அங்கிருந்து வந்தோம்.  திரும்ப அதே ஏரியாவா?

நல்லதா ஒரு காஃபி குடிச்சுட்டு, வேறெங்காவது போகலாம்....

தொடரும்..........  :-)

13 comments:

said...

அருமை நன்றி

said...

டீச்சர் இந்த tianamen சதுக்கத்தில் ஒரு புரட்சி வெடித்ததும் அது இரும்புக் கரங்களால் அடக்கப் பட்டதும் படித்த சினைவு உங்களிடம் கூடுதல் தகவல் எதிர்பார்த்தேன்

said...

தொடருகிறேன்.

said...

இவ்வளவு பெரிய சதுக்கம். பராமரிக்கிறது லேசில்ல. ஆனாலும் இந்த அளவுக்கு பாத்துக்கிறாங்களே.

1989ல இதே சதுக்கத்துல மக்கள் போராட்டம் பண்ணப்போ ஆயிரக்கணக்கான மக்களை அரசாங்கம் கொன்னுருக்கு. நீங்க நடந்து போன வழில எத்தனையோ அப்பாவி மக்களின் உயிர் பிரிஞ்சிருக்கு. கொல்லப்பட்டிருக்குன்னு சொல்லலாம். கிட்டத்தட்ட ஜாலியன்வாலாபாக் மாதிரி. அதாவது வெளிநாட்டுக்காரன் செஞ்சது. இது சொந்த நாட்டுக்காரங்களே மக்களை அழிச்சது.

அந்தப் போராட்டங்கள்ள ஒரு அருமையான போட்டோ கிடைச்சது உலகத்துக்கு. வரிசையா பீரங்கிகள் அணிவகுத்து வரும் போது... எந்த ஆயுதமும் இல்லாமல், அறிவு துணிவு நேர்மை ஆகியவைகளை ஆயுதங்களாக் கொண்டு ஒரு மாணவன் எதிர்த்து நின்னான். ஒற்றை ஆளா நின்னான். அவன் என்ன ஆனான்? அரசின் அடக்குமுறைக்கு உயிரைக் கொடுத்தான். அவனோட பேர் கூட யாருக்கும் தெரியாது. அவனோட முகம் கூட யாருக்கும் தெரியாது. ஆனா வரலாற்றில் நேர்மையாளர்களுக்கு துணிச்சலான அடையாளமா மாறிட்டான்.

இன்றைக்கும் சீனாவில் என்ன நடக்குதுன்னு சீன மக்களுக்கே தெரியாதுன்னு சொல்வாங்க. எல்லாமே தணிக்கை செய்யப்பட்டதுதான்.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை இந்தோ-ன்னு சொல்வாங்க. கொரிய மொழியில் கூட இந்தோ தான்.

டீச்சரோட போட்டோ எடுத்துக்கனும்னு எல்லாருக்கும் ஆசைதான் போல.

பிளாஸ்டிக் அரிசி ஒரு பொய்னு நிரூபிச்சிருக்காங்க. அதுனால இப்போதைக்கு பயம் வேண்டாம்.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அந்த புரட்சி நடந்த சமயம் நாங்க இங்கே நியூஸியில்தான் இருந்தோம். தொலைக்காட்சியில் காண்பித்ததைத்தான் பார்த்தோம்.

மத்தபடி, இதைப் பற்றிய முழு விவரங்கள் சீன அரசு , உலகத்துக்குச் சொன்னவைதான் நமக்கும்.

இரும்புத்திரைக்குப்பின்னால் உண்மையில் நடந்தது என்ன? வெளியுலகத்துக்கு மட்டுமில்லை, உள்நாட்டவர்க்கும் தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லை.

said...

வாங்க ஸ்ரீராம்.

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க ஜிரா.

அவுங்க அரசு வெளியிடும் அறிக்கைகள் தவிர வேறொன்னும் தெரிஞ்சுக்க முடியாது அங்கே!

யாருமே அந்த போராட்டத்தில் இறந்துபோகலைன்னு கூட ஒரு சமயம் சொல்லி இருந்தாங்க.

அப்புறமும் ஒரு சின்ன எண்ணிக்கை வெளிவந்தது. உண்மையில் அது பெரிய எண்ணிக்கையாத்தான் இருக்கணும். இழப்பு ரெண்டு பக்கமும்தான்.

இவ்ளோ நடந்தும் சட்டம் ஒழுங்கு எல்லோருக்கும் ஒன்னு போலத்தான் நடக்குதுன்னு என் நினைப்பு. மக்களும் இதை உணர்ந்து நடந்துக்கறாங்க.

கண்டகண்ட அரசியல் வியாதிகளின் தில்லுமுல்லு, கூக்குரல், ஒன்னுத்துக்கும் உதவாத அரசியல் கட்சிகளைத் தொடங்கறது எல்லாம் இல்லை பாருங்க.

கட்டுப்பாடுகளோடு கூடிய சுதந்திரம்தான்.

said...

மிகவும் இண்டெரெஸ்டிங் பதிவு. இரு முறை படித்து ரசித்தேன். உலகம் சுற்றும் வாலிபிக்கும், அந்த வாலிபிக்கு வாய்ப்புக் கொடுத்த வாலிபருக்கும் பாராட்டுகள்.

said...

மிகவும் அருமை. உங்கள் பதிவை விரும்பி வாசிப்பேன். தெளிந்த எளிமையான இனிமையான வார்த்தைகள்.நாங்களே அந்த இடத்திற்கு சென்றமாதிரி இருந்தது. மிக்க நன்றி அம்மா. உங்கள் பயணமும் பதிவும் தொடரட்டும்.

said...

வாங்க நெ. த.

ரசித்து வாசித்தமைக்கு நன்றி!

said...

வாங்க சந்த்ரமொழி.

பெயர் சரியா எழுதி இருக்கேனா?

முதல் வருகைக்கு நன்றி.

மீண்டும் வருக !

said...

மாவோவின் நினைவிடம்...

எல்லாமே புதிய செய்திகள் எனக்கு..படங்களுடன் கொஞ்சம் செய்திகளையும் தெரிஞ்சுகிட்டாச்சு...