Wednesday, February 24, 2021

அக்கரோவாவும் அரிசி உப்புமாவும்....


இந்த ரெண்டு வருஷங்களா எங்கேயும் போக முடியலை......மனசே வெறுத்துப் போயிருந்தது..... நம்ம சம்மர் வேற இன்னும் ஒரு வாரத்துலே முடியப்போகுது என்பதால்  வெயில் இருக்கும்போதே  அக்கம்பக்கம் எங்காவது போய் வரணும்.
மகளும் மருமகனும் ஜனவரியில் அக்கரோவா என்னும் கடற்கரைப்பட்டணத்துக்குப் போய் வந்தவுங்க...... 'புதுசா இன்னொரு படகுப்பயணம் கிடைச்சது. அருமை'ன்னு வேற சொல்லி இருந்தாங்களா......  சரி ஒருநாள் அங்கே போய்வரலாமுன்னு நினைச்சோம்.

ஏற்கெனவே பலமுறைகள் போய் வந்த இடம்தான். நம்மூரில் இருந்து ஒரு 82 கிமீ தூரம். 'பேங்க் பெனின்ஸுலா'ன்னு  ஒரு மலையைக் கடந்து அந்தாண்டை இறங்கிப் போகணும். நம்ம வீட்டுக்கு வரும் முக்கிய விருந்தினரை (அவர்கள் நம்ம வீட்டில் தங்கும் பட்சத்தில் ) கூட்டிப்போய்க் காமிக்கிறதுதான் பொது வழக்கம்.

2017 இல் நம்ம அண்ணனும் அண்ணியும் மகள் கல்யாணத்துக்காக வந்திருந்த சமயமும், சிங்கை எழுத்தாளர் ஜயந்தி சங்கர் 2018 இல்  வருகை தந்த சமயமும்  போய் வந்தோம்தான். அதுக்கப்புறம் 2019 இந்தியப் பயணம் வாய்ச்சது. 2020 ஐ கோவிட்டுக்கு நேர்ந்து விட்டாச்சு :-(

இனி ரெண்டு வருஷங்களுக்கு நாட்டை விட்டுப்போக அனுமதி இல்லைன்னு வேற பயமுறுத்திக்கிட்டு இருக்கு எங்க அரசு.  ஊர் உலகமெல்லாம் கோவிட் தடுப்பு ஊசி போட்டுப் பாதுகாப்பாக இருக்கணுமாம். நடக்குமென்ற நம்பிக்கையே போச்சு... ஹூம்....

சரி. வெயில் காலம் முடியுமுன் அக்கரோவாவுக்காவது போய் வரலாமேன்னு கிளம்பினோம். நாம் அங்கே மகள் சொன்ன படகுக் கம்பெனிக்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்தப்ப, திங்கக்கிழமைதான் டிஸ்கவுண்ட் ப்ரைஸில் கிடைக்குமுன்னு சொல்லி இருந்தாங்க. அன்றைக்கே ஆகட்டும்..... இப்பதான் நம்மவர் ரிட்டயர் ஆயாச்சே. நோ ஆஃபீஸ்தானே!

இவ்ளோ கலாட்டாக்களுக்கிடையில் நம்ம ஊர் நிலநடுக்கம் வந்து பாதி ஊர் அழிஞ்சநாளுக்கான திவஸம் வேற வருது.  அதே திங்கள்தான்.  முதலில் ரெண்டு மனசா இருந்தது..... பத்தாம் வருஷ  நினைவுநாள். பிரதமர் வேற வர்றாங்க. கூடவே கவர்னர் ஜெனரலும்.  நகருக்குள்ளில்தான் இருக்கும் நினைவிடத்துக்குப் போகும் பாதையில் போக்குவரத்தெல்லாம் மாற்றி வைக்கும் சேதிகளை ஒரு வாரத்துக்கு முன்னால் இருந்தே அனுப்பிக்கிட்டு இருக்கு நம்ம சிட்டிக்கவுன்ஸில்.  பார்க்கிங் வேற  இப்பெல்லாம் கஷ்டமா இருக்கு.  கட்டணத்தை உயர்த்திக்கிட்டே போய்க்கிட்டு இருக்கு சிட்டிக்கவுன்ஸில். இந்த அழகிலே சனம் சிட்டி சென்ட்டருக்கு வர்றதில்லைன்னு ஒரு பக்கம் ஒப்பாரி வேற !  முந்தியெல்லாம்  பார்க்கிங் முதல் ஒரு மணி நேரம் இலவசமே. அதுக்குப்பிறகு  இருக்கும் நேரத்துக்குத்தான் ஒன்னு எம்பதுன்னு இருந்தது. அதெல்லாம் போயே போச்.....  

அந்த எர்த் க்வேக் மெமோரியலும்  பார்க்க ஒரு அழகு அந்தஸு இல்லாம இருக்குன்னு எனக்கொரு தோணல்.  நதிக்கரையில் சாம்பல் கலர் மார்பிள் சுவரில் 'போனவங்க' பெயரைச் செதுக்கி வச்சுருக்காங்க. நின்னு வாசிக்கணுமுன்னா சிரமம்தான்.... ப்ச்..... கீழே படம்.
கிளம்பறதுக்கு முன்தினம் என்னென்ன செய்யணுமுன்னு திட்டம் தீட்டினவள், காலையில் ரெண்டு மணி நேரம் கூடுதலாத் தூங்கிட்டேன்.  கண்ணைத் திறந்து பார்க்கும்போது மணி எட்டடிக்கப்போகுது. நாலரைக்கு விழிப்பு வந்ததுதான். இன்னும் நேரம் இருக்கேன்னு மறுபடி தூங்கினால்.... இந்த கதி.....

சட்னு குளிச்சு முடிச்சு, சாமி விளக்கேத்திட்டு,  அரிசி உப்புமாவுக்கு எடுத்துவச்சதைத் தாளிதம் செய்து, பாத்திரத்தைக் குக்கரில் இறக்கினேன். அடுப்பில் வச்சுக்கிளறி எடுக்க நேரமில்லை.  போற இடத்தில் எதாவது வாங்கிக்கலாம் என்றாலும், அந்த ஊருக்கான ஸ்பெஷல் ஃபிஷ் & சிப்ஸ்தான். கடலையொட்டிய நகரம் பாருங்க ! 

மூணு விஸில் ஆனதும்  ஒரு டிஃபன் பாக்ஸில் எடுத்து வச்சுட்டுக் கிளம்பியாச்சு.  தொட்டுக்க கொத்தமல்லித் தொக்கு, குடிக்கத் தண்ணீர், ஜூஸ், இன்னும் சிலபல சிறுதீனிகள்னு  இன்னொரு பொதி ஒருபக்கம். குளிருக்கான ஜாக்கெட், வெயிலுக்கான தொப்பி, தேவைப்படுமோன்னு  வாக்கிங் ஷூஸ் , செல்ஃபோன்கள்,  பவர் பேங்க் , சார்ஜர் ஒயர் இப்படி இன்னொரு சின்னப்பொதி.  இந்த எஸ் 9 ப்ளஸ்  வாங்குனதில் இருந்து, ரெகுலர் கேமெராவைக் கொண்டு போற பழக்கம் போயே போயிந்தி.......... மறக்காமல் ரெண்டு மாஸ்க் வேற !

நம்மூரில் கோவிட் இல்லைன்னாலும்,  பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில்  எல்லோரும் (நாடு முழுக்க ) மாஸ்க் போட்டுக்கணுமுன்னு முந்தாநாள் ஒரு அறிவிப்பு வந்துருக்கு. ப்ச்.....   படகு, ஒரு பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் இல்லையோ ? 

கிட்டத்தட்ட ஒன்பதே முக்காலுக்கு வீட்டை விட்டோம். ஒரு காமணிதான் லேட்.  இன்னொரு பேட்டையைக் கடக்கும்போது  அங்கிருக்கும் ஆஞ்சியை தரிசனம் செஞ்சுக்கிட்டுப் போகணுமுன்னு ஒரு எண்ணம் இருந்தது. போற போக்கிலேயே கும்பிடு போட்டுட்டுத் திரும்ப வரும்போது  கிட்டப்போய் தரிசிக்கலாம்தானே !
சுமார் ஒரு மணி நேரத்தில் லிட்டில் ரிவர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டோம்.  இதுக்கு ஒரு சரித்திரம் உண்டு.   1886 இல் திறந்துருக்காங்க. 1962 வரை செயல்பாட்டில் இருந்துருக்கு !  முதல் ஸ்டேஷன் மாஸ்டர் தாமஸ் க்ரேஞ் ஜூனியர். நியூஸியில் செஞ்ச ரயில் பெட்டிகளை இணைச்சு ஓடிக்கிட்டு இருந்துருக்கு !










இப்போ தண்டவாளத்தில் நிக்கும் ரெண்டு ரயில் பொட்டிகளும், ரெண்டு சரக்கு கேரியர்களும், ஒரு எஞ்சினும்தான்  சாட்சி !   ஒரு ரயில் பொட்டிக்குள்ளே சின்னதா ஒரு ம்யூஸியம் வச்சுருக்காங்க. ஸ்டேஷனில் கைவினைப் பொருட்கள், உள்ளூர் காய்கறிகள், செடிகள் னு விற்பனை. ஒரு அறையில் குட்டி ரயில்பாதையில் பொம்மை ரெயில். ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் இது ! கார்டு கையில் உயர்த்திக் காமிக்கும் விளக்கு இருக்கு. சின்னப்புள்ளையா இருக்கும்போது இதில் சிகப்பும் பச்சையும் மாறி வருவது மேஜிக்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்:-)


முந்தி இங்கே ஒரு PBX இருந்துச்சு.  அதெல்லாம் எங்கே போச்சோ ?  மூணே வருஷத்தில் என்னென்னவோ மாற்றங்கள்...... ஸ்டேஷன் பெயரும்கூட மாறி இருக்கு. லிட்டில் ரிவர் க்ராஃப்ட் ஸ்டேஷனாம் ! 
ஒவ்வொருமுறை போய்வரும்போதும் படங்கள் எடுத்துக்கிட்டு வர்றோமுல்லெ..... இப்ப அதையெல்லாம் பார்த்தால்  வெளியே இருக்கும் ரயில் பொட்டிகள், உள்ளே ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் இருக்கும் பொம்மை ரயில் இதுகளில் எல்லாம் 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம். ஆமாம்..... அப்பப்ப வெளியே தண்டவாளத்தில் நிக்கும் பொட்டிகளும் காணாமப் போயிருக்கு.  யார் இதை நகர்த்தி இருப்பாங்க !  எப்போ? எப்படி ?  ஜீபூம்பா வேலையா இருக்குமோ ! 

அடுத்த ஸ்டாப் நமக்கு Hilltop Tavern  வாசலில். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பத்து கிமீ. இங்கிருந்து பார்க்கும்போது கீழே கடலும் குன்றுகளுமா வ்யூ அட்டகாசம். அதனால் போறவர்ற வண்டிகள் எல்லாம் நின்னுதான் போகும்! 

இனிமே ஒரே இறக்கம்தான் அடுத்த 18 கிமீ தூரம்..... இடையில்  சின்ன ஊர்கள் ரெண்டு மூணு இருக்கு. ஒரு சீஸ் ஃபேக்டரியும் உண்டு. ஏற்கெனவே சிலமுறைகள் பார்த்திருப்பதால் இந்த முறை உள்ளே போகலை. 
பதிவில் இருக்கும் சில படங்கள் போன பயணங்களில் எடுத்தவையே !

அக்கரோவாவுக்குள் நுழைஞ்சப்ப, நாம் வீட்டில் இருந்து புறப்பட்டு ரெண்டு மணி நேரம் ஆகி இருந்தது.  மகளிடமிருந்து  ஒரு  டெக்ஸ்ட்.  படகுப்பயணத்துக்கான ஜாக்கெட்டுகள், கூலர்ஸ், டேஷ் வராமல் இருக்கும் மருந்து எல்லாம் எடுத்துக்கிட்டீங்க தானே ?  ஐயோ..... டேஷை எப்படி மறந்தேன் ?   மருந்துக்கடையைத் தேடி ஓடவேண்டியதாப் போச்சு....  பீச் ரோடில் கடை இருக்குன்னு கூகிளார் சொன்னார்.
மாத்திரை வாங்கினதும், ரெண்டு  எடுத்து வாயில் போட்டேன். நல்லவேளை, இதுக்குத் தண்ணீர் வேணாம். 


பீச் ரோடில் நிறைய நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகள்.  வேடிக்கை பார்த்துக்கிட்டே ஒரு கடைக்குள் நுழைஞ்சு ஒரு யோகா தவளை (மட்டும்) வாங்கினேன்.  இப்பெல்லாம் நாங்க யோகா வகுப்புக்குப் போறோம், தெரியுமோ ? முதியோர் யோகான்னு சொல்லலாம் :-) இதுக்கு ச்சேர் யோகான்னு பெயர் ! 

நமக்குப் படகு ரெண்டு மணிக்குதான். ஒன்னே முக்காலுக்குப் படகுத்துறையில் இருந்தால் போதும். அதுவரை அக்கம் பக்கம்  வேடிக்கை பார்க்கலாம். ச்சும்மா பீச் ரோடில் கடலைப் பார்த்துப் போட்டு வச்சுருக்கும் பெஞ்சுகளில் உக்கார்ந்தாலுமே நேரம் ஓடிறாதா என்ன ? 

 ஆட்கள் போய் உக்கார்ந்தவுடன், கஞ்சி வர/ருதப்பா.....ன்னு  ஸீகல் கூட்டம் வந்து நோட்டம் விடுதுங்க. திங்கத்தா..... திங்கத்தா.......   




கண்பார்வை நம்மைத் துளைச்செடுத்துருது.....  பெடல்போட், கனூஸ் இறக்கும் படிகளாண்டை ஒரு Shag உக்கார்ந்து போஸ் கொடுத்துக்கிட்டு இருக்கு. இந்தப்பக்கம் ஒரு நாரை... கடல்நாரைன்னு நினைக்கிறேன்.

படகுப்பயணம் முடிஞ்சபின் சுத்திப்பார்க்க நேரம் இருக்காதுன்னு  'வழக்கமான ரவுண்டை 'இப்பவே முடிச்சுக்கலாமுன்னு கிளம்பினோம்.
லைட் ஹவுஸ் போனோம். எல்லாம் ரெண்டு மூணு நிமிட் ட்ரைவ்தான்.  வழக்கம்போல அது மூடிக்கிடக்கு.  ரொம்ப வருஷங்களுக்கு முன்னே  அதுக்குள் போயிருக்கோம்.  அப்ப ஏது டிஜிட்டல் கேமெரா ? படங்கள் ஆல்பத்தில் இருக்கு. எந்த ஆல்பம் ? ஙே......  ஒரு இருவது ஆல்பங்கள் இருக்கே நம்மாண்டை....




சில க்ளிக்ஸ் ஆச்சு. அடுத்தது பகல் சாப்பாடு.  சாப்பிட இடம் தேடிக் கொஞ்சம் அலைய வேண்டியதாப் போச்சு.  Garden of Tane  (  Tane மரங்களுக்கான  மவொரிக் கடவுள் ) வாசலில் என்னவோ தடைகள். உள்ளே போகலாமுன்னா வண்டியை எங்கே நிறுத்த ?  ப்ச்.....  திரும்பக் கடலாண்டை வந்து ஒரு மரத்தடியில் உக்கார்ந்து சாப்பிட்டோம். 
நம்ம அரிசி உப்புமாவுக்கு பயங்கர ஃபேனா ஒருத்தர் இருந்தார்.  மற்ற யாரையும் அண்டவிடாம, தான் மட்டுமே தின்னு தீர்க்கணுமுன்னு நினைச்சால் நான் என்ன செய்ய ?  குர்..........குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு  கத்திக்கிட்டேத் தலையைச் சாய்ச்சபடி விரட்டுனதைப் பார்க்கணுமே.....  படம் எடுக்க முடியலை..... எச்சக்கை இல்லையோ.....
சரி வாங்க.....   ஒன்னு இருபதாச்சு.  பார்க்கிங்லே வண்டியைப் போட்டுட்டுப் படகுத்துறைக்குப் போகலாம்.  பீச் ரோடுலே 2 மணி நேரம்தான் லிமிட். நமக்கு சுமார் மூணுமணிநேரம் வேணும். 

பதிவின் நீளம் கருதி பாக்கி அப்புறம்.....ஓக்கே ? 

PIN குறிப்பு : போனமுறை எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு கறி :-)

தொடரும்......:-)



12 comments:

said...

முதல்ல டிரெயின்ல ஏறி போனீங்கன்னு நினைத்தால் டிரைவ் பண்ணிக்கிட்டுப் போனீங்களா. அப்புறம் இரயில்வே ஸ்டேஷன் படம்லாம்?

said...

படங்களும் தகவல்களும் சிறப்பு.

said...

உப்புமா சாப்பிட்டு ஊர் சுற்றிவந்த கதை!  ரயில் படங்கள் சூப்பர்.

said...

அருமை சிறப்பு

said...

ஸ்ரீராம்... ஊர் சுற்றி உப்புமா சாப்பிட்டு வந்த கதை என்ற தலைப்புதானே பொருத்தம்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ரயில்வே ஸ்டேஷன், நாம் போகும் வழியில் இருக்கும் ரெஸ்ட் ஸ்டாப். ஸ்டேஷன் ஒரு சரித்திரச் சின்னம். இப்போ 59 வருஷமா செயல்பாட்டில் இல்லை. கடைசி ரயில் போனது 1962 லே.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கு நன்றி ! சின்ன நாட்டில் அங்கங்கே சின்னச் சின்னச் சரித்திர நிகழ்வுகள் :-)

said...

வாங்க ஸ்ரீராம்,

ஹாஹா.... உப்புமாவும் சரித்திரம் படைச்சுருச்சோ !!!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

//ஸ்ரீராம்... ஊர் சுற்றி உப்புமா சாப்பிட்டு வந்த கதை என்ற தலைப்புதானே பொருத்தம்.//

ஆம் நெல்லை...  அது சரியாய் இருக்கும்!

said...

இனிய பயணம்.

said...

https://www.timesnownews.com/india/article/new-zealand-temporarily-suspends-entry-for-all-travellers-from-india-including-citizens-due-to-covid/742437