Saturday, March 31, 2007

சிங்கைச் சீனு & கோ


இதோ உங்களுக்காகவே நம்ம 'ச்சீனு அண்ட் கோ' அருள் பாலிக்கும் காட்சியைச்சுடச்சுட வலையேத்தி இருக்கேன். இன்னிக்கு சனிக்கிழமை ஸ்பெஷல்......... ஷோ!





படம் உதவி: கோபால்( சிங்கையில் இருந்து)

தில்லிஹாட்


















நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 10 )



பதினைஞ்சு ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கிக்கிட்டு 'தில்லிஹாட்'குள்ளே நுழைஞ்சேன். 200 கைவினைப் பொருட்கள் கடைகளும்,25 சாப்பாட்டுக்கடைகளும் இருக்கு. தில்லி சுற்றுலாக்கழகம் இதுக்குத் துணை நிக்குதுன்னு சொன்னாங்க.




இங்கேயும் பாதுகாப்புப் பரிசோதனைகள். பூரா டெல்லியும் ஒரு நடுக்கத்துலே இருக்கு போல. முதலில் கண்ணுலே பட்டதைச் சொல்லணுமுன்னா தமிழ்நாட்டுக்கே வந்துட்டோமோன்னு இருந்துச்சு. 'பூம்புகார்'லே பார்த்த மரச்சாமான்களும், தஞ்சாவூர் படங்களுமா ஒரு அலங்காரம். நம்ம யானைகள் வேற இருக்கு.இன்னும் உள்ளெ நடந்தால் தலையணை உறைகள், குஷன் கவர்கள், படுக்கை விரிப்புகள்ன்னு பல. ஜில்லாலி பில்லாலின்னு நகைக்கடைகள். வெள்ளி( வெள்ளை)க் கம்பியிலே கட்டுனது, பாசிமணிகள், செயற்கைக் கற்கள் பதிச்சதுன்னு நிரம்பி இருக்கு. இளவயசுகளைக் கவரும் கடைகள் இதுதான் போல. மொத்தக்கூட்டத்துலே முக்காலே மூணுவீசம் இங்கேதான்.



பெயிண்டிங் விற்பனை, தரைக்கம்பளம்னு இன்னும் கொஞ்சம் அங்கங்கே. பிலிகிரி வேலைப்பாடுகள் ஒண்ணு ரெண்டு.ஒயிட்மெட்டல் சாமான்கள், பித்தளைக் கிண்ணங்கள்ன்னு இன்னும் நாலைஞ்சு. விலை என்னவோ கூடுதல்ன்னுஒரு எண்ணம் எனக்கு. படுக்கைவிரிப்பு ஒரு செட் மட்டும் பேரம் பேசி வாங்குனேன். விற்பனையில் எல்லாம் ச்சின்னவயசுப் பசங்க. 'ஆண்ட்டி ஆண்ட்டி'ன்னு சட்னு உறவுமுறை வச்சுக் கொண்டாடுதுங்க.




சாப்பாட்டுப் பிரிவு பார்த்தாலே அவ்வளவு சுகமில்லை. வெளியே உக்காந்து சாப்புட மேசையெல்லாம் போட்டு இருக்கும் ஃபுட் கோர்ட்டுங்கதான். 'சாட்' சாப்புட்டுக்கிட்டு இருக்காங்க மக்கள்ஸ். தமிழ்நாடு மாநில சாப்பாட்டுக்கடை ஒன்னு இருக்கு. ஊஹூம்................பேசாம சரவணபவன் கிளையா இருக்கக்கூடாதா?



இருக்கறதுலேயே எனக்கு ஆர்வமா இருந்த கடைகள், பூச்செடிகள், அலங்காரச்செடிகள் விற்பனைதான். நல்லநல்ல கத்தாழை & கள்ளிச்செடிகள் இருக்கு. பராமரிப்பு சுலபம். உத்தரப்பிரதேசக் கைவினைக் கலைஞர்களுக்கான இந்த அமைப்பு ஓரளவு அவுங்களுக்கு உதவியா இருக்குமுன்னுதான் நினைக்கிறேன். மொத்தம் 6 ஏக்கர் நிலத்துலே அமைச்சிருக்காங்க. படுக்கைவிரிப்புக் கடைப்பசங்க எல்லாரும் காசியிலே இருந்து வந்தவங்களாம். வருசம் ஒருமுறை ஊர்ப்பக்கம் போய் வராங்களாம். சித்திரம் வரையும் ஆட்கள் வெவ்வேற மாநிலங்களுக்கு அங்கங்கே பொருட்காட்சிகள் நடக்கும்போது போய்வர்றது உண்டாம். வள்ளுவர் கோட்டத்தைப் பத்தி ஒருத்தர் நினைவு கூர்ந்தார். நம்மளைப் பார்த்ததும்தான் 'மத்ராஸி'ன்னு தெரிஞ்சுருதே.




நம்மூர் உழவர் சந்தை மாதிரியா இது? கைவினைப் பொருட்கள் செய்யறவங்க இங்கே வந்து நேரடியாக் கடை போட்டுக்கலாமுன்னு சொன்னாலும், இன்னும் இடைத்தரகர்கள் மூலமாத்தான் வியாபாரம் நடக்குது. இங்கே வந்து உக்காந்துக்கிட்டா அங்கேபொருட்களைச் செய்யறது யாரு? இதே சாமான்களை முந்தி ஒரு காலத்துலே ஜன்பத் ப்ளாட்ஃபாரத்துலே பார்த்துருக்கேன்.அப்ப 100 ரூபாய்க்கு வாங்குன பெயிண்டிங் இப்ப இங்கே 3000 ரூபாய்ன்னு கூசாமச் சொல்றாங்க. விலைவாசி ஏத்தமுன்னாலும் இப்படியா? இந்தமுறை இன்னும் ஜன்பத் ஷாப்பிங் போகலை. முடிஞ்சா இன்னிக்குப் போகணும்.



கரோல் பாக்லே ஒரு வேலை இருந்துச்சு. அதை முடிச்சுக்கிட்டு வரலாமுன்னு போனப்பயும் அந்த ஹனுமார் காட்சிகொடுத்தார். இருக்குமிடம் ஷிருடிசாயி கோயில். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருக்கும் விஸ்வரூபம்! கண்ணு 'குறுகுறு'ன்னு நம்மையே பார்க்குதோன்னு இருக்கு. எப்பக் கட்டி முடிக்கப்போறாங்களோ? இப்ப எல்லா கோயிலும் மூடி இருக்கும் நேரம். அப்புறம் பார்க்கலாம்.


குளிர்காலைச் சோம்பல் முடிஞ்சு தில்லியேபரபரப்பா இயங்குது. அந்த ஓட்டத்தில் நாமும் கலந்துக்கலைன்னா எப்படி? போகும் வழியில் நம்ம அடையாறு ஆலமரம்போல வேரும் விழுதுமா ஒரு பிரமாண்டமான ஆலமரம் நகரத்துக்குள்ளில்.


தொடரும்...........
----------------

Thursday, March 29, 2007

கிடக்கறது கிடக்கட்டும், லீ' யைத் தூக்கி......

ச்சும்மா இருந்து தொலைக்கலாமா இல்லையா? மாட்டேன்.......... முடியாது.

மொதல்லே இதுக்கு ஒரு விளக்கம் யாராவது சொல்லுங்க. தலைப்பு வைக்கறதுக்குநிஜமாவே 'உக்காந்து' யோசிப்பாங்களா? என்னமோ ச்சீனாக்காரனைப் பத்திக் கதைன்னுபார்த்தா.............. லீலாதரனாம்ப்பா! அதைச் சுருக்கி 'லீ' சரியாபோச்சு.



ஒவ்வொரு ஆளா ஆரம்பத்துலே அறிமுகம் ஆகுது. அவுங்க எல்லாருக்கும் சோறு போடஒரு அக்கா என்னப்போல! உழையோ உழையோன்னு உழைச்சுக் காசு சேப்பாங்க இவுங்க.எதுக்கு? துப்பாக்கி வாங்கிக்கணுமாம். கொலை செய்யணுமுன்னா துப்பாக்கிதான். இல்லேன்னா????முடியவே முடியாத்.
போட்டுத் தள்ளப்போறது யாரை?


விளையாட்டுத்துறை மந்திரியை!


இப்பக் கிரிக்கெட்டுலே தோத்ததுக்கா?


ச்சீச்சீ....இல்லைப்பா. புட்பால் டீமை கண்டுக்காமப் போனதுக்கு.


எதுக்குக் கிரிக்கெட்டைவிட புட்பால் ஒசத்தி? ன்னு லீ விளக்கமெல்லாம் சொல்றாரு.


இவ்வ்ளோ கூட்டமாப் பையனுங்க இருக்காங்க. அப்ப கதாநாயகி இல்லையா?


ஏன் இல்லாம? ஒரு பொண்ணு இருக்கு. இருக்கு. இருக்கு. பொருத்தமா பைத்தாரஸ்பத்ரியில் வேலை வேற செய்யுதே!


படத்தயாரிப்பாளர் தன் பையனுக்காகவே மெனெக்கெட்டு செஞ்ச படம்.


யாரு.............. தயாரிப்பாளர்?


நாயகனின் அப்பா.


அவர் பேரு?


சத்தியராஜு.

ஏடு கொண்டலவாடா எக்கட உன்னாவுரா?














நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 9 )

பாலாஜி அங்கே பக்கத்துலே இருக்காராம். ச்சும்மா ஒரு பத்து நிமிஷ ட்ரைவ். விட முடியுமா? போய்ச் சேரும்போது பத்தே முக்கால் ஆயிருச்சு. வெளியே அறிவிப்புப் பலகையில் பத்தரைக்கே சந்நிதி மூடிருவாங்கன்னு போட்டுருந்தது. அடடா.....சரி. அவரைப் பார்க்க என்னாலே முடியாதுன்னாலும் என்னைப் பார்க்க அவராலே முடியுமே! ஆகட்டும்,உள்ளே போய் ச்சும்மா சுத்திட்டு வரலாமுன்னு போனேன். ஆர்ப்பாடமில்லாத ச்சின்னக் கோபுர வாசல்.
நேராப்பெருமாள் சந்நிதி. படியேறிப்போனா பெரிய மண்டபத்துலே ஒரு பக்கம் மூலவர். அட! அவருக்கு முன்னே தொங்கும் சாக்குப் படுதாவைக் கொஞ்சம் நல்லாவே விலக்கிக்கிட்டு என்னைப் பார்க்கறார்.'கண்ணும் கண்ணும் நோக்கியா'ன்னு நானும் பார்த்தேன். தரையெல்லாம் கார்பெட், ஜமுக்காளமுன்னு விரிச்சிருந்தது. குளிர் காலமில்லையா? நல்லதுதான். அப்படியே அங்கே உக்கார்ந்துக்கொஞ்ச நேரம் தியானம்(?) செஞ்சுட்டு வெளியே வந்தேன்.

எந்தக் கோயிலுக்குப் போனாலும் அங்கே இருக்கும்ஆஃபீசில் விவரம் கேட்டுக்கும் என் வழக்கப்படி இங்கேயும் கேக்கலாமுன்னு போனா ஆஃபீஸில் யாரும் இல்லை.வெளியே இருந்த கோயில் ஊழியர்கிட்டே, மேனேஜர் எங்கேன்னு கேட்டதும் பறந்துபோய் அவரைக் கூட்டிட்டு வந்தார். மூலவரைத் தவிர எங்கே வேணுமுன்னாலும் படம் எடுத்துக்குங்கன்னு அனுமதிச்சார். கூடவே இன்னொரு தேனான சேதியும் சொன்னார். 'எப்பவும் பத்தரைக்குப் பூஜை முடிஞ்சுரும். இன்னிக்கு வெள்ளிக்கிழமை, அதுவும் மார்கழி மாசம். அதனாலே விசேஷ பூஜை ஒண்ணு இருக்கு. ஒரு அரைமணி,முக்காமணி நேரமாகும். அவசரமில்லைன்னா இருந்து பார்த்துட்டுப் போங்க'ன்னார். இதைவிட வேற வேலை என்ன? கோயிலை வலம்வந்துப் படங்களா பதிஞ்சுக்கிட்டு இருந்தேன். இதுவும் பெரிய இடம்தான்.
வெளியே நாலு பக்கமும் குட்டிக்குட்டியா சன்னதிகள்.பின்பக்கம் பெரிய மண்டபம். அந்த மதில் சுவரை ஒட்டி ஒரு இஸ்லாமிய கோயில்(??) கூரை தெரியுது. கட்டுன காலக்கட்டத்தைப் பார்த்தா............. இந்தப் பெருமாள் கோயில்தான் ரெண்டாவதா வந்துருக்கணும். பேசாம வேற எங்கியாவது கட்டி இருக்கலாம் இல்லையா? அப்புறம் வீணா மதச் சண்டை, கலவரமுன்னு ஏற்படச் சான்ஸ் இருக்காதுல்லே? இன்னும் கொஞ்சம் கவனமாப் பார்த்ததுலே பக்கத்துக் கட்டிடம் புழக்கத்துலே இல்லை. விசாரிச்சப்ப, அது சரித்திரச் சின்னமா நிக்குதுன்னு சொன்னாங்க.
வலது பக்கம் நந்தவனமுன்னு ஒரு துளசிவனம் இருந்துச்சு.ஒரு பத்துப் பதினைஞ்சு நோஞ்சாளா இருக்கும் துளசிச்செடிகள். ப்ராஸ்ட் விழாம இருக்க மேலே கூரையில் வலை போட்டு வச்சுருந்தாங்க. 'காப்பாத்துங்க துளசியை' ன்னு நினைச்சுக்கிட்டுப் பேசாமப் படியிலே வந்து உக்கார்ந்தேன். குடம் தண்ணி அபிஷேகத்துக்குக் கொண்டுவந்தார் வயசான பட்டர். அப்ப ரெண்டு பிள்ளைகளோடு ஒரு தெலுங்குக் குடும்பம் வந்தாங்க. அடுத்த பக்கத்துப் படி அவுங்களுக்கு.

கொஞ்ச நேரத்துலே அபிஷேகம் அலங்காரமெல்லாம் முடிஞ்சு கோயில் மணி ஓசை வந்துச்சு. உள்ளெ போனோம்.அலங்காரமா நிக்குறார் நம்மாளு. நல்ல தரிசனம். எல்லாரையும் உக்காரவச்சுத் தொன்னையிலே பச்சைக்கற்பூரம், ஏலக்காய் மணத்தோடு சுடச்சுடச் சக்கரைப் பொங்கல். கூடாரவல்லிக்கு நேத்துக் கிடைச்சிருக்கணும். இந்தவருஷம் மார்கழிதான் தீர்த்த (???) யாத்திரையாப் போச்சே! 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா'....... இன்னிக்குக் கொடுத்துவச்சுருக்கு. மனசு நிறைஞ்ச திருப்தியா வெளியே வந்தேன்.

கொஞ்சம் பெயிண்ட் அடிச்சு வச்சிருந்தா கோயில் இன்னும் பளிச்சுன்னு இருக்கும். அதென்னவோ நம்ம பக்கங்களில் மெயிண்டனன்ஸ்ன்னு வீடுகளுக்கோ, கோயில்களுக்கு அவ்வளவா மெனெக்கெடறதில்லை. வெள்ளைக்கார நாடுகளில் பார்த்தீங்கன்னா........வருசாவருஷம் வெய்யல் சீஸன் ஆரம்பிச்சதும் பெயிண்ட் அடிக்கக் கிளம்பிருவாங்க. கடைகளில் பெயிண்ட் ஸேல்தான் மும்முரம்.எழுபது , எம்பது வருஷக் கட்டிடங்கள் கூட இதுனாலே பழசாத் தெரியாது.
இங்கேயும் நல்லதா கருங்கல் பாவுன தரைதான். இதைவிடஇப்பக் கொஞ்சம் முன்னாலே பார்த்த முருகன் கோயில் இன்னும் நல்ல கவனிப்புலே இருக்குன்னு தோணுது.

திருப்பதி தேவஸ்தானம் இங்கே தில்லியில் பெருமாள் கோயில் கட்டப் போறாங்களாம். மத்த இடங்களில் இவுங்க பட்டர்கள்செய்யும் அட்டகாசம் இங்கேயும் வரப்போகுது. பெருமாளே காப்பாத்து!

'காருள்ள போதே சுற்றிக்கொள்'னு புது மொழி இருக்காமே:-)))) பெருமாளைச் சேவிச்ச கையோடு கிளம்பியாச்சு.சரோஜினி நகர் போகலாமா இல்லே INA மார்க்கெட் போகலாமான்னு ஒரு ச்சின்ன குழப்பம். அய்யப்பன் கோவில் வழியாத்தான் போனேன். உச்சிப் பகலுக்கு கோயில் மூடியாச்சு. வெளியே மட்டும் போறபோக்குலே பார்த்ததுதான். பார்த்தவுடனே தெரிஞ்சுருது கேரளா ஸ்டைல் கோயில்ன்னு. சரி.......... அடுத்தமுறைக்கு இருக்கட்டும்.

கோயிலைச் சுத்திச் சுத்தி எடுத்த படங்கள் இத்துடன்:-))))

தொடரும்.......

Wednesday, March 28, 2007

தில்லிக்காரங்க தமிழ் பேசறாங்க.













நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 8)

வடக்கே வந்ததும் முருகன் செஞ்ச முதல் வேலை தில்லிக்காரங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்ததுதான்.

மலை....... சொல்லுங்க ம லை

மலெய்

கோவில்......... சொல்லுங்க கோ வில்

மந்திர் ம ந் தி ர்

மலைக்கோவில்
மலெய்மந்திர்

அப்படியே இருந்துட்டுப் போட்டும். அச்சா....அபி, 'மலை மந்திர் ஜாயியே.'..... இது போதும்.ராமகிருஷ்ணா நகர் உத்தர சுவாமி மலை. இன்னிக்கு கார் எனக்கு. முருகன் இங்கே வந்தது சமீபத்துலெதானாம். 1973. மெய்யாலுமா? இல்லே கிடைச்ச நியூஸ் சரிதானா?

குன்றைப் பார்த்தாக் குமரன் விடுவானா? வாகா இங்கே ஒரு இடம் கிடைச்சிருச்சு. நீலமயில் ஏறும் மயில்வாகனனுக்கு ஏத்தமாதிரி நீலக் கலர் கிரானைட் கல் இழைச்ச கோயில். சோழர்காலத்துச் சிற்பக்கலையை ஒட்டிக் கட்டப்பட்டது. முதல்லே 'தான்' வந்துட்டு, அப்புறம் அண்ணன், அம்மா, அப்பான்னு குடும்பத்தைக் கூட்டிவந்துருக்கார்.

கோயில் வளாகத்துக்குள்ளே நுழையும்போது கண்ணில் பட்டது கரும்புக்கட்டு. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாள்தானே இருக்கு. பச்சைமஞ்சள் கொத்துகளும் குவிச்சு வச்சுருக்காங்க. இந்த ஏரியாவுலே நம்ம மக்கள்ஸ்அதிகமா இருக்காங்களாம். கோயில்கள்தானே எப்பவும் சமூகக்கூடமா இருந்து வருது. அதான் பொங்கல் பண்டிகைக்குவேண்டிய சாமான்கள் இங்கே கிடைக்கறமாதிரி ஒரு வசதி செஞ்சுருக்காங்க.

முதலில் வரும் சந்நிதி நம்ம மதுரை மீனாட்சிக்கு. அப்புறம் கற்பக விநாயகர், சுந்தரேஸ்வரர்ன்னு இருக்கு.நவகிரகங்கள் ஒரு பக்கம் இருக்காங்க.முன்னாலே பெரிய முற்றம். அதுக்கு எதிரில் அரங்கம் போன்ற அமைப்பு. உற்சவ மூர்த்திகளை விசேஷத்தின்போது இங்கே கொண்டு வந்துட்டா எதிரில் ஒரு ஆயிரம்பேருக்குக் குறையாம உக்கார்ந்து பார்க்கலாம். கோயில்லே பாட்டுக்கச்சேரி எதாவது நடத்துனாலும் இந்த இடம் அருமையா இருக்கும்.

குன்றின் அமைப்பையொட்டியே ரெண்டு நிலையாக் கட்டி இருக்காங்க. படி ஏறுனதும் ஒரு பிரமாண்டமான ஹாலில் நிப்போம். ஆதி சங்கரருக்கு நேர்ந்துவிட்டுருக்காங்க. பஜனை, தியானம்னு கூட்டம் கூடும்போது வசதியா இருக்கலாம்.61 வது கந்த சஷ்டிக்காக வரைஞ்ச முருகனின் ஓவியம் அருமையா இருக்கு. இந்தக் கோயிலுக்கு வயசு 34ன்னாஇதுக்கு முந்தி வேற இடத்துலே வழிபாடு நடத்திக்கிட்டு இருந்துருப்பாங்க போல.
இடது பக்கம் இன்னும் படிக்கட்டுகள் உயரே போகுது. போய்ச் சேரும் இடம் சுவாமிநாதனின் சந்நிதி. துவாரபாலகரைக் கடந்து உள்ளே போனால் வேல் மின்ன நிக்கிறார் வேலவர். இங்கே அவர் கார்த்திகேயன். அவரை வலம் வரும்போது 'ஜெயஜெய தேவி துர்க்கா தேவி'ன்னு பாட்டுச் சத்தம் கொஞ்சம் உரக்கக் கேட்டுச்சேன்னு அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால்............ஒரே பெண்கள் கூட்டம். ஓஓஓஓஓ இன்னிக்கு வெள்ளிக்கிழமையா? அதான் ராகுகால பூஜைக்காக எலுமிச்சம்பழமும் விளக்குமா இருக்காங்க. அங்கே மலைமேல்இருந்து பார்த்தா சுத்துவட்டம் அரைவாசி தில்லி தெரியுது. நல்ல பெரிய வளாகம்தான். பக்கத்துலே அடுத்த கட்டிடத்தில் வேற எதோகோயில் இருக்கோ என்னவோ....... அந்தக் கூரை கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.
யாரையாவது கேக்கலாமுன்னா யாரை? எல்லாரும்அங்கே பஜனையில் இருக்காங்களே. எதாவது ஆசிரமமா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. தில்லியிலே தடுக்கி விழுந்தாஎதாவது ஹனுமார் கோயிலில்தான் விழோணும். அப்படி எங்கே பார்த்தாலும் நேயடே நேயடு! ( அதான் தில்லியிலே குரங்குகள் அட்டகாசமுன்னுசெய்தி வந்துச்சோ? )

அம்மாங்களோட வந்த ச்சின்னப்புள்ளைங்க ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டு இருந்தாங்க. வெயில் காலங்களில் இந்த இடத்துக்கு பயங்கரக்கூட்டம் வருமுன்னு நினைக்கிறேன். மாசக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற முருகனுடைய விசேஷ நாட்களில் கூட்டம் நெரியுமாம். கீழே ஆஃபீஸில் சொன்னாங்க. அனுமதி கேட்டுக் கொஞ்சம் படங்கள் எடுத்துக்கிட்டேன்.

பின் குறிப்பு: உங்களுக்குப் படங்கள் காமிக்கணுமுன்னு தோணுது. அதனாலே வழக்கத்துக்கு மாறாச் சின்னப் பதிவுகளா போடறேன்.

Tuesday, March 27, 2007

தலைநகரில் தமிழச்சிகள்




தலைப்பு உதவி யாருன்னு தெரியுமா?

நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 7)

இன்னிக்குக் காலையில் புறப்படுமுன்பே வலைப்பதிவாளர் ஒருவரை இங்கே கோயிலில் சந்திக்கற ஏற்பாடு இருந்துச்சு.அவுங்களுக்காகக் காத்துக்கிட்டு இருந்தப்ப நேத்து சந்திச்ச 'அண்ணாத்தை'யை நினைச்சுக்கிட்டேன். என்னவிட ஒரே ஒரு மாசம்தான் பெரியவர், பிறந்த தேதியை வச்சுப் பார்த்தா! எங்களைப் பார்த்ததும் தன்னுடைய சைக்கிளைத் தள்ளிக்கிட்டு வந்துஓட்டிக் காமிச்சார். சக்கரம் மட்டும் மூணு இருந்துச்சு. அவரோட அம்மாவை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அவுங்க இப்பத்தான் சமீபத்துலே கெஸட்டுலெ கொடுக்காமலேயே பேரை மாத்தி வச்சுக்கிட்ட லட்சுமி என்ற முத்துலெட்சுமி.

அக்ஷர்தாமுலே இருந்து வீடு பக்கம்தான்னு சொல்லி இருந்தாங்க. வீட்டைக் கண்டு பிடிக்க ஒரு நாலஞ்சுதரம் மட்டுமே செல்லுலே கூப்புட்டேன். சுத்திமுத்திப் போனப்ப நல்லகாலம் வீட்டுவாசலில் காத்துக்கிட்டு இருந்தாங்க. மாடியிலே வீடு.'அண்ணாத்தை'யுடைய அக்கா பள்ளிக்கூடத்துலே இருந்து வந்துட்டாங்க. எல்லாரும் ஜாலியாப் பேசிக்கிட்டு இருந்தோம்.இனிப்பும் காரமுமா தட்டு நிறைய வச்சுருந்தாங்க முத்துலெட்சுமி. பகல் சாப்பாடை வேற சாப்புடலை பாருங்க. அதான் கொஞ்சம் கா.மா.க.கொல்லையாப் போச்சுது.

நானோ காபி பைத்தியம். என்னடா...... இன்னும் காபி குடிக்கிறீங்களா?ன்னு கேக்கலையேன்னு நினைக்கிறப்பவே நான் நினைச்சதைக் கேட்டாங்க 'மகா'லெட்சுமி. நல்லா இருக்கட்டும். காபி போடறப்பவும் அவுங்களோட அடுக்களையில் நின்னு வாயாடிக்கிட்டே(யாருக்கு என்ன பிடிக்கும்னு அப்பத் தெரியாது பாருங்க,அதான்!!) இருந்தேன். இந்த வலை உலக நட்புலே நம்ம தருமி சொல்றது போல ஒரு கெமிஸ்ட்ரி இருக்கத்தான் செய்யுது.இவுங்க வீட்டுலே ஒரு மொட்டை மாடி இருக்குங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. தமிழ்மணம், பதிவுகள்ன்னு என்னென்னமோவிஷயங்கள் எல்லாம் அலசி ஆராய்ஞ்சோம். அவுங்க வீட்டாண்டை ஒரு அருமையான குருவாயூரப்பன்(?) கோயில் இருக்கு. வீட்டைத்தேடி அலைஞ்சப்பக் கண்ணுலே மாட்டுச்சு. இன்னொரு ஒரு குகைக்கோயில்(அமர்நாத் கோயில்?)போல ஒண்ணும்இருக்காம். எல்லாமே சாயங்காலம் அஞ்சரைக்குத்தான் திறப்பாங்களாம். ஹூம்....... கொடுத்து வச்சுருக்கான்னு தெரியலை(-:

'அண்ணாத்தை'யோட அக்கா அலங்காரமா பளிச்சுன்னு உடுத்திக்கிட்டு இருந்தாங்க. பக்கத்துலே எங்கியோ போகணுமாம். போறதுக்குள்ளே நான் வந்துருவேனான்னு கொஞ்சம் பதட்டமா இருந்தாங்களாம். நமக்குக்கூடக் காத்திருக்கும் அன்பா? ரொம்ப ஃபீலிங்காப் போச்சு எனக்கு.

இன்னொரு வேலை இருக்குன்றதாலே அதிக நேரம் தங்க முடியாமப்போச்சு. சாப்புடாமக் கிளம்பறோமுன்னு அவுங்களுக்கும் ஒரு மனத்தாங்கல் இருந்துச்சு. 'அண்ணாத்தை'வேற இப்பத்தான் கொஞ்சம் நெருக்கம் காமிக்கறார். அவரை 'ஏமாத்திட்டு' புறப்பட்டோம்.

திடீர்னு செல்லு கூப்புட்டு என் யோசனையைக் கலைச்சது.

"எங்கே இருக்கீங்க?"

" கண்ணுமுன்னாலே"

யாராவது பார்த்தாக்கூட எதோ 'ஒட்டிப் பிறந்த ரெட்டைப்பிறவி'ங்க பேசுதுங்கன்னு நினைச்சுக்குவாங்க. புது ஆளைப்பாக்குற த்ரில் மிஸ்ஸிங். நொய்டா நாதாரிகளைப் பத்தி எழுதுன மங்கை. பேசிக்கிட்டேப் படியேறி மேலே கோவிலுக்குப் போனோம். சந்நிதி பூட்டி இருந்துச்சு. கல்கருடனைப் பார்த்துக்கிட்டே பேசறோம் பேசறோம் பேசிக்கிட்டே இருக்கோம்.அவுங்க 'பணி' சம்பந்தப்பட்ட விவரங்கள் ரொம்ப சுவாரசியம். சரி........ பேசாம C.P..க்கே போயிரலாமுன்னு சொன்னாங்க.

படி இறங்கிவந்து ஆட்டோ எடுத்தோம். அவர் கேட்டது 70. எங்க பேரம் 60. படிஞ்சது. 'அடப் பாவி க்யான்சிங் இப்படி 350 உருவிட்டியே'! வாழையிலையில் சாப்புடலாமான்னு கேட்டாங்க. ஃபூ.பெரிய விஷயமா? ச்சலோ பனானா லீஃப்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னத்தைத் தின்னோமுன்றது உண்மைக்குமே நினைவில்லை. அதென்ன அப்படி ஒரு பேச்சு? :-))))

கன்னாட் ப்ளேஸ் வழக்கமான கலகலப்புடன் நெரிசலா இருந்துச்சு. இந்த இடத்துக்கு 'ராஜீவ் காந்தி சவுக்'ன்னு பெயர்மாற்றம் இருந்தாலும் இப்பவும் இது எல்லாருக்கும் கன்னாட் ப்ளேஸ்தான். ச்செல்லமாச் சுருக்கி சி.ப்பி.!

பாபா கரக் சிங் ரோடுலே ( பயந்துட்டீங்களா? அட! இது நம்ம பழைய இர்வின் ரோடுதாங்க) இருக்கற ஸ்டேட் எம்போரியத்துக்கு வந்தோம். இந்தியாவுலே இருக்கற மொத்த மாநிலங்களோட கைவினைப் பொருட்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து வச்சுட்டாங்க.அள்ளிக்கிட்டுப் போகலாமுன்னு நினைக்காதீங்க. எல்லாமே கிள்ளிக்கிட்டுத்தான் போகணும். யானை விலை!!!!!ஒவ்வொரு மாநிலமா புகுந்து புறப்பட்டோம். மங்கை, நிஜமாவே யானைகள் வாங்குனாங்க! நம்ம ஷேர் வருமுன்னு நானும் பொறுமை காத்தேன்:-)))) சில 'மாநிலங்களை' பகல் சாப்பாட்டுக்காக மூடிட்டாங்க. இதுக்கெல்லாம் பயந்தாஆகுமா? அங்கே இருக்கற கட்டை(குட்டி)ச்சுவர் வேற எதுக்கு? அங்கே உக்கார்ந்து(ம்) பேசுனோம்.

சுரங்கப்பாதையைக் கடந்து எதிர்ப்புறம் வந்தா அங்கே ரெண்டு கோயில்கள். ஹனுமார் கோயில் உள்ளே நுழைஞ்சோம். சாமி சுயம்புதானாம். கட்டிடம் மகாராஜா ஜெய் சிங் காலத்துலே(1730களில்) கட்டித் தந்ததாம். அவர்தாங்க ஜந்தர் மந்தர் கட்டுனவர். அவருக்கு வான ஆராய்ச்சி பிடிச்ச விஷயமாம். அங்கே ஜந்தர்மந்தரில் சூரியக் கடிகாரமெல்லாம் கட்டி வச்சுருக்கார். இந்த முறை அங்கே நான் போகலை. முந்தி ஒருக்காப் பார்த்தது. கோயிலில் ஒரு பஜனை கோஷ்டி அருமையாப் பாடிக்கிட்டு இருந்தாங்க. ஜமுக்காளம் எல்லாம் போட்டு, எதோ கல்யாண வீடு மாதிரி இருக்கு அந்தப் பெரிய ஹால். வலது பக்கம் 'டபுள் த லைஃப் சைஸு'லே ஒரு அம்மன் சிலை. ஜிகுஜிகுன்னு ஜிகினாப்புடவை.இந்தப் பக்கம் மாருதி. சின்னதா மூணாத் தடுக்கப்பட்ட மேடை. அதுலே வலது கைப்பக்கம் வடக்கத்து ஸ்டைலில்ஆரஞ்சு நிற ஹனுமார். எட்டிப் பார்த்துக் கன்னத்துலே போட்டுக்கிட்டோம். கோயிலைச் சுத்தி வந்தா ஒரு இடத்துலே பெரிய சிவன். லிங்க ரூபம். ஆளாளுக்கு அபிஷேகமுன்னு பால், தண்ணின்னு ஊத்தறாங்க.


இந்தக் கோயிலுக்குப் பக்கத்துலே தென்னாட்டுப் பாணியில் 'நம்ம' கோயில். ராக்ஷஸக் கடாய்லே எண்ணெய்க் கொப்பரைக் கொதிக்குது வாசலில். 'அந்நியன்' வந்துட்டானோன்னு சுத்திமுத்திப் பார்த்தேன். சனி பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபமாம்! ஆமாம். ஒரு ஓரமா ராக்ஷஸ திரி எரியுதே!
பிள்ளையார் கோயில். உள்ளே நமக்குப் பரிச்சயமான அய்யப்பன், மதுரை மீனாக்ஷி,முருகன், ஆஞ்சநேயர் எல்லாம் இருக்காங்க. சின்னக் கட்டிடம்தான். ஆனா இந்த காம்பவுண்டுலே தனியா ஒரு சிவ(ர்)ன் கோவில்கொண்டு இருக்கார். அதே அபிஷேகம் இங்கேயும் நடக்குது. நல்லாத் தரையோடு பதிந்த லிங்கம்.வெளியே இன்னொரு மரத்தடிக்குப் பக்கம் ஸ்ரீ ராமர், தன்னுடைய கூட்டத்தோடு பளிங்குலே பளிச். முந்தி எப்பவோ பார்த்த ஒரு டி.வி. சீரியலில் குடும்பம் முழுசும் ஒரே டிசைன் துணியில் உடுத்தி இருப்பாங்க. அது ஞாபகம் வந்தது. ஸ்ரீராமர் & கோ சிகப்புலே ஜிகுனா வச்ச துணியில் அலங்காரம். ஆஞ்சநேயர் முகம் அருமை. அப்படியே கபுக்ன்னு இடுப்புலே தூக்கி வச்சுக்கிட்டு நழுவிறலாமான்னு ஒரு நிமிஷம் யோசிக்க வச்சது.


ரெண்டு கோயிலுக்கும் சேர்த்து அமைஞ்ச காலி மைதானத்துலே மருதாணி போட்டுவிடறதுலே இருந்து, பழைய காசுகள்(??)விக்கறதுவரை விதவிதமான வியாபாரம். பழைய காசுன்னதும் நப்பாசை. கவனிச்சுப் பார்த்தால் சொந்தமா மிண்ட் வச்சு உண்டாக்குனது(-: நேரமாச்சுன்னு மங்கை கிளம்புனாங்க. லெட்சுமியும் கூட இருந்தாங்கன்னா மஜாவா இருந்துருக்குமுன்னு நினைச்சேன். ஆனா பொண்ணுபள்ளிக்கூடம் போகணுமே! ( அப்புறம் லெட்சுமியோட போன் பேசுனப்ப சொன்னாங்க, அன்னிக்குப் பள்ளிக்கூடம் லீவாம். அடடா..... தெரியாமப்போச்சே(-: அண்ணாத்தைக்கூட சுத்துற ச்சான்ஸை மிஸ் பண்ணிட்டேனே(-: இன்னும் மங்கையும் லெட்சுமியைச் சந்திக்கலைன்னு சொன்னாங்க. ஒரு பேரணியோடு மாநாடு நடத்தி இருக்கலாம்!))

நானாச்சும் வலையிலே எல்லாரையும் தம்பின்னுக்கிட்டு இருக்கேன். மங்கை என்னடான்னா பூரா டெல்லியையே 'பையா'ன்னு கூப்புட்டுக்கிட்டு இருக்காங்க! இது ஹிந்தி பையா:-))))

இப்படியாகத் தலைநகரில் தமிழச்சிகளின் மாநாடு நடந்து முடிஞ்சது. தலைப்புனதுக்கு மங்கைக்கு நன்றி.

பி.கு: கலெக்ஷனுக்கு ஒரு தீம் வச்சுக்கறது நல்லது. எல்லாம் 'பிறருக்கு உதவியா' இருக்கும் என்ற நல்ல எண்ணம்தான்:-)))
முன் அனுமதி இல்லாம 'அண்ணாத்தை' படம் போட்டுருக்கேன். ஒரு உரிமையோடுதான்..........பரவாயில்லைதானே?

Monday, March 26, 2007

ஏகலைவன்

அமிதாப் குரல் மட்டும் ஆரம்பத்துலே வந்து ஏகலைவன் ( ஹிந்தியிலே ஏக்லவ்யா)கதையை ஒரு ச்சின்னப்புள்ளைக்கு( இதுவும் குரல் மட்டுமே) சொல்லுது. கட்டைவிரலைக் காணிக்கையாக்குன்னு சொன்னதும் குழந்தை கேக்குது, 'அதை வெட்டும்போது வலிச்சிருக்காதுல்லே?'


'இல்லை. பயங்கரவலி. எங்கே பார்த்தாலும் ரத்தமு'ன்னு அமிதாப் குரல் சொல்லுது.


நேத்து ஒரு சினிமாவுக்குப் போனேன். இந்திப்படம் . தியேட்டரில். ரொம்ப நாளா இங்கே தியேட்டருக்குப் போகலை. தோழி ஒருத்தர் 'சாயங்காலம் ஒரு எங்கேஜ்மெண்டும் வச்சுக்காதே. உன்னை சினிமாவுக்குக் கொண்டு போறோம்'ன்னுட்டாங்க. சரின்னு கிளம்பியாச்சு. பதிவு எழுத 'அனுபவம்' வாவான்னு கூப்புடுதே!


காஃபி கல்ச்சர்லே ஒரு கப்புச்சீனோ வேற கிடைச்சது. என்னோட சேர்த்து மொத்தம் 5 பேர்.தியேட்டர்லே பயமா இருக்காதா(!!)ன்னு கேட்டப்ப, 'ரங்தே பசந்தி' பார்த்தப்ப நாங்க ரெண்டேபேர்தான்னு சொன்னார் நண்பர் (தோழியின் கணவர்.) ரொம்ப சுவாரசியமான பேர்வழி. இவர்கிட்டேகொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தால் ஆச்சரியமான விஷயங்கள் வந்து விழும். நம்ம இந்திரா நூயி இவரோட பேட்ச் மேட்!


பிடிச்ச நடிகைகளைப் பத்திப் பேச்சு வந்தப்ப 'கரிஷ்மா கபூர்'னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் மற்றொரு நண்பர். கலவரமான எங்கள் முகங்களைப் பார்த்ததும், 'முதல்லே எனக்கும் அவ்வளவாப் பிடிக்காதுதான்.ஆனா ஒரு முறை ஏர்ப்போர்ட்லே அவுங்களைப் பார்த்தேன். என்ன ஒரு அழகு தெரியுமா? கேமராதான்அவுங்களை கோரமா(???) காமிக்குது'. (நேரில்)பார்த்த நாள் முதல் பிடிச்சுப் போச்சுன்னார். நல்லவேளை,இப்ப அவுங்க நடிக்கறதில்லைன்னு அவரோட மனைவி மனசு(வயித்து)லே ஃப்ரூட் ஸ்மூதி வார்த்தோம்:-))))


அழகுன்னா மாதுரிதான். இதுக்கு அப்பீலே இல்லை. அவர்மேலே பைத்தியமா இருந்த ஓவியர் எம்.எஃப். ஹுஸைன் எடுத்த 'கஜகாமினி' இலவசமாத் தரேன்னு சொன்னேன். ஓவியரைப் பத்தி ஒரு துணுக்கு. எல்லா நாட்டுக்கும் விஸா எடுத்து வச்சுருப்பாராம். அன்னிக்கு எந்த நாடுன்னு தோணுதோ அதுக்குக் கிளம்பிப் போய்க்கிட்டே இருப்பாராம்! நாமெல்லாம் 'வியர்டு வியர்டு'ன்னு சொல்லிக்கிட்டுக் கிடக்கோம்!


பெரியமனுஷங்களுக்கு இப்படித்தான் எதாவது கிறுக்கு இருக்குமுன்னு சொன்ன தோழியைப் 'புன்முறுவலோடு'பார்த்தேன்:-)))))


காஃபியை முடிச்சுட்டு, மேலே தியேட்டர் வாசலுக்குப் போனோம். இன்னொரு தோழி நின்னுக்கிட்டு இருந்தாங்க. கணக்கு ஆறு! இல்லை....... அவுங்க குடும்பம் சேர்த்தா எட்டாச்சு. ரெண்டு நிமிஷத்துலே நண்பர் ஒருத்தர் மகளும் வந்து சேர்ந்தாங்க. 'படம் ரொம்ப சுமார்தானாம். ச்சின்னப்படம் வேற'ன்னு அவுங்க பங்குக்குச் சொல்லிவச்சாங்க. வெளியிலே இருந்த விளம்பரத்துலே,'அமிதாப்' பேர் இல்லைன்னு மற்றொரு நண்பருக்குக் கவலை!


'ஜிலோ'ன்னு இருந்த தியேட்டருக்குள்ளெ போய் உக்கார்ந்தோம். தலையை எண்ணுனா மொத்தம் 11. ஒவ்வொருமுறையும் வாசக்கதவு திறக்கும்போது ஒரு எதிர்பார்ப்பு. ரெண்டு ரெண்டா ரெண்டு பேர். பதினைஞ்சு பழுதில்லை!


'தாலிஸ்மான்'னு ஒரு ட்ரெயிலர். நம்ம லார்டு ஆஃப் த ரிங்கோட இந்தியன் வர்ஷன் போல இருக்கு. அடுத்து 'முன்னாபாய் மூணு'. நகையும் நட்டுமா சர்க்யூட்டை பெரிய திரையில் பார்த்தப்பப் பளிச். அமெரிக்காவுக்குப் போறாங்க ரெண்டு பேரும்.


இதோ மெயின் படம் போட்டாச்சு. அமிதாப் குரலோடு டைட்டில் ஆரம்பம். ராணி மரணப் படுக்கையில் இருக்காங்க. இளவரசி ராக்கிங் ச்சேர்லே ஆடிக்கிட்டு இருக்கு. ராஜா முழிச்சுக்கிட்டு நிக்கறார். ராணியின் உதடுகள் உச்சரிக்குது,'ஏக்லவ்யா ஏக்லவ்யா'னு. ராஜா, ஷேக்ஸ்பியரோட டயலாக்கைச் சொல்லிக்கிட்டே ராணியின் கழுத்தை அமுக்கிக் காரியத்தை முடிக்கிறார்.


ராணியின் சாவுக்கு, லண்டன்லே இருந்து இளவரசர் வர்றார். இப்படியே முழுக்கதையையும் சொல்லப் போறதில்லை.அப்புறம் குடும்ப கவுரவம், பழிக்குப் பழின்னு கதை போகுது. தர்மம் எது? எப்படின்னு சொல்லிக்கிட்டே போறாங்க.அதை விடுங்க. படம் பார்த்தாக் கதை தெரிஞ்சுட்டுப் போகுது.


முக்கியமாக் குறிப்பிட வேண்டியது அந்த கோட்டை கொத்தளக் காட்சிகள். அடடா......... என்ன அருமையான இடங்கள்.ராஜபுத்திர ராஜ வம்சத்து சாவு சமாச்சாரங்கள், சம்ஸ்காரங்கள் எல்லாம் எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடியுது.ஒட்டகக்கூட்டம், ஓடும் ரயிலு( கூட்ஸ் வண்டிதான்)ன்னு ஒரு சீன் அட்டகாசம் போங்க. ஒரே ஒரு பாட்டுதான். அதுவே ஒரு பெரிய ஆறுதல்.இனிமையான தாலாட்டுப்பாடல். மெல்லிய குரல். அருமையான இசை.ஷாந்தனு மொய்த்ராவாம். கலர்க்கலரா உடுப்புப் போட்டுக்கிட்டு ராஜஸ்தான் மக்கள் ஆடுறதுக்கு ஸ்கோப் இருந்தும், அதையெல்லாம் வைக்காததுக்கே ஒரு சபாஷ் போடலாம்! பின்னணி இசையில் முக்கியமாச் சொல்லவேண்டியது அங்கங்கே வந்துபோகும் காயத்ரி மந்திரம்.


யாருமில்லாத அத்துவான மணல்காட்டுலே நீண்டு போகும் ரயில் பாதை மனசை என்னவோ செய்யுது.பெரிய திரையில் பார்க்கும் அனுபவம் தனிதான் இல்லே? போட்டோகிராஃபி அற்புதம். நடராஜன் சுப்ரமணியன்னு டைட்டிலில் பார்த்த நினைவு.


அமிதாப், பொம்மன் இரானி, ஷர்மிளா டாகோர், ஸைஃப் அலிகான், வித்யா பாலன், ஜாக்கி ஷெராஃப், சஞ்சய் தத்,ஜிம்மி ஷெர்கல், ரைமா சென்னுன்னு நட்சத்திரப் பட்டாளம். அமிதாப் தன் வயசுக்கேத்த ரோல் செய்யறது ரொம்பப் பிடிச்சிருக்கு. கொஞ்சமே வந்தாலும் சஞ்சய் தத், சூப்பர். 5000 வருஷமா ஒடுக்கப்பட்ட இனமுன்னு சொல்றப்ப 'சுருக்'


இதுவரை பார்க்காத ராஜஸ்தான் கோட்டைகளுக்கு, நேரில் போகணுமுன்னு ஒரு ஆவல் முளைக்குது. தோழியின் கணவர் படத்துலே வந்த ஒரு கோட்டையைப் பார்த்துருக்காராம்.(ஆச்சரியப்படுத்துவாருன்னு சொன்னேனே!)


வெளியே வரும்போது கவனிச்சேன். எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துருக்கு!

Friday, March 23, 2007

கிறுக்ஸ் & கிறுக்ஸ்(weird)

வியர்டு...நானா?


எல்லாருக்கும் ஒரு வழின்னா இந்த இடும்பிக்கு வேற வழின்னு எத்தனைமுறை சொல்லி இருக்கேன். இதுலே இருந்து தெரிஞ்சுக்கிட்டு இருக்கவேணாம், நீங்க?



வல்லி வேற ச்சும்மா இருக்காம இப்படிச் சந்திக்கு இழுத்து விட்டுட்டாங்க.உண்மையைச் சொல்லியே ஆகணுங்கற நிலைக்கு வந்துட்டேன். இப்ப என்னன்னா நம்ம கோவியாரும் ஆட்டைக்கு வாவான்னு சுண்ணாம்பு இல்லாமக் கூப்புடறாரு:-))))


ஆங்கில ஜாதக(??) முறைப்படி நான் கும்பராசியாம். இதோட ஸ்பெஷல் குணம்என்னன்னா............ அன் பிரடிக்ட்டபிள். கரெக்ட்டாப் போட்டுருக்கான். எதுஎதுக்குக் கோச்சுக்குவேன் எதெதுக்கு இல்லைன்னு எனக்கே தெரியாது!


1. ரொம்பப் பத்திரமா இருக்கட்டுமுன்னுன்னு எங்கியாவது ( பத்திரமாத்தான்) எடுத்து வச்சுட்டு எங்கேன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருப்பேன். சரி. இந்தத் தொல்லை வேணாம். இப்பத்தான் கம்ப்யூட்டர் இருக்கே. அதுலே எழுதி வச்சுட்டாப் போதும்னு எழுதிவச்சுட்டேன். இப்ப எந்தத் தலைப்புலே சேவ் செஞ்சுருக்கேன்னு நினைவில்லே. பட்டாணி பாட்டில்னு ஒரு இடத்துலே எழுதிவச்சுருக்கேன். இதுவரை ஒரு பத்துமுறை அதைத் தலைகீழாக் கொட்டித் தேடியாச்சு.எதைத் தேடுறேன்னு தெரிஞ்சாத்தானே? தினமும் பகல்லே ஒரு மணி நேரம் தேடறதுக்குன்னே ஒதுக்கியாச்சு. தேடுவேன் தேடிக்கிட்டே இருப்பேன்...........


எதை? அது தெரிஞ்சா நான் ஏன் தேடப்போறென்?



2. காசு எடுத்து வைக்கன்னு ஒரு குறிப்பிட்ட இடம் இல்லாம அங்கங்கே டப்பாக்களில் (குறிப்பா சமையலறை அலமாரியிலே) வச்சுருப்பேன். நான் செத்துப்போயிட்டா.......... கேரேஜ் சேல் போடறதுக்கு முந்தி,எல்லா டப்பாக்களையும் செக் பண்ணிட்டுப் போடுங்கன்னு கோபால்கிட்டே சொல்லி வச்சுருக்கேன். இந்த புத்தி ஒருவேளை எங்க பாட்டிகிட்டே இருந்து வந்துச்சோன்னு ஒரு சந்தேகம். இத்தனைக்கும் அந்தக் 'குறிப்பிட்டப் பாட்டி 'நான் பிறக்கு முன்னேயே போய்ச் சேர்ந்துட்டாங்களாம். (மறுபிறவி???)



3. சாவுன்னதும் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருது. நான் மண்டையைப் போட்டதும் என்னென்ன செய்யணுமுன்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சுருக்கேன். அப்ப அந்த நிலையிலே கோபாலுக்குத் தடுமாற்றம் வந்துட்டா? ( குஷியிலேஆட்டம் போட்டுக்கிட்டு இருப்பாரோ? ) என்னென்ன உடை, காது, கழுத்துக்கு என்ன நகை( ச்சும்மா வெள்ளியிலே ஒரு செட் வாங்கி வச்சுருக்கேன்,இதுக்குன்னே.அப்பவும் அலங்காரமாப் போகணும்))சாம்பலை எங்கே போடணுமுன்னு எழுதிவச்சாச்சு. அதுவும் கணினியிலேதான். ( அடிப்பாவி! சாம்பலையா கம்ப்யூட்டர்லே போடறதுன்னு யாரு அங்கே சவுண்டு வுடறது?)ஆனா டைட்டில் பக்காவாக் கொடுத்துட்டேன், 'துளசி'ன்னு!!! !!!என் சவப்பெட்டிக்குள்ளே எங்க கப்புவோட அஸ்திப்பெட்டியையும் வச்சுரணும். ஆங்....... இந்தியக்கொடியும் வாங்கிவந்து வச்சுருக்கேன், பெட்டிமேலே போர்த்த.( ஆ......பெரிய தியாகி.கொடி கேக்குதோ?) எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்துலே ரெடியா இருக்கு.



4. எங்க அம்மா இறந்ததுக்கு நான் இன்னும் சரியா துக்கம் அனுஷ்டிக்கலைன்னு ஒரு நீங்காத குறை மனசுலே இருக்கு.அப்ப எனக்கு வெறும் 11 வயசுதானே........... தீவிரம் புரியாம இருந்துருக்கேன். அதனாலே ஒரு நாள் முழுக்க முழுக்க அம்மாவுக்காகவே ஒதுக்கி வச்சுரணும். வேளை வரலை. ஒரு மணிநேரம் மனசு அலை பாயாம இருக்கான்னு பயிற்சி எடுத்தாத்தானே ஒரு 24 மணிநேரம் ஒரே எண்ணமா இருக்க? அம்மா நினைவா ஒரு ஸ்டெத் வாங்கி வச்சுருக்கேன்.எதாவது நாடகமுன்னா அதுலேயாவது டாக்டர் வேஷம் கட்டிரணும்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.



5. ராமாயணம், மகாபாரதம்( ராஜாஜி எழுதுனது) உபன்னியாசமா செய்யணுங்கறது ஒரு எண்ணம். கேக்க ஆள் வேணுமே!நம்ம பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன். அதுவும் பேசாம உக்கார்ந்து கேக்கும். இப்பச் சொல்லுங்க நான் வியர்டா இல்லே அது என்னைக்காட்டிலும் வியர்டா?



6. ப்ளொக் எழுதறதை ரொம்ப சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டு அல்லும் பகலும் இதே நெனப்பா இருக்கறது. இதுதான் இருக்கறதுலேயே 'பெரிய வியர்டு' சமாச்சாரமுன்னு நினைக்கறேன்.



என் பங்குக்கு ஆட்டத்தில் சேர அழைப்பு இவுங்களுக்கு:


சிவஞானம்ஜி

டிபிஆர் ஜோசஃப்

மதுமிதா

அருணா ஸ்ரீனிவாசன்

செல்லி



இன்னும் யார் யாருக்கு 'உண்மை விளம்ப' ஆசை இருக்கோ அவுங்கெல்லாம் கூடச் சேர்ந்துக்கலாம்.



ஆட்டம் அன்லிமிட்டட்:-)))))

Wednesday, March 21, 2007

கல்காஜி மந்திர்





நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 6)

கடுகையும் கறுப்பு எள்ளையும் கலந்து ஒரு முறத்தில் போட்டுக் கொடுத்துருவாங்களாம். யாருக்கு?குட்டிச்சாத்தானுக்கு. அதுபாட்டுக்கு ஒரு மூலையில் உக்காந்து ரெண்டையும் தனித்தனியே பொறுக்கி எடுத்து வைக்குமாம். எல்லாத்தையும் செஞ்சு முடிச்சதும் தனித்தனியா இருக்கறதை மறுபடியும் ஒண்ணாக்கொட்டி அதுகிட்டே கொடுப்பாங்களாம். அப்படி ஒரு வேலையும் கொடுக்கலேன்னா............என்ன செய்ய? என்ன செய்ய? ன்னு கேட்டு ஆளைப் பிச்சு எடுத்துருமாம். இதை யாரோ கோபாலுக்குச் சொல்லிட்டாங்க போல. மறுநாள் வேலைக்குக் கிளம்பும்போது 'இங்கே கல்கி மந்திர்ன்னு ஒண்ணு இருக்காம்.அங்கே போயிட்டு வாயேன்'ன்னார்.

'டெல்லியிலே சுத்திப்பார்க்க இடமா இல்லை? இன்னிக்குக் கார் வேற இருக்காது. நீங்க எடுத்துக்கிட்டுப் போறீங்க. இங்கேயே பக்கத்துலே எங்கேயாவது போறேனே'ன்னு சொன்னதுக்கு, 'வாசல்லே டாக்ஸி இருக்கு.பேசாம அதுலே போயிட்டு வா. நல்ல சக்தி வாய்ந்த கோயிலாம்'ன்னார். என்னுடைய ப்ளான், இன்னிக்கு இங்கே இருக்கும் ஹரே கிருஷ்ணா கோயில். சரி, கல்கியைப் பார்த்துட்டுப் போகலாமுன்னு டாக்ஸி எடுத்தேன்.

பஞ்சாபி இளைஞர் டாக்ஸி ஓட்டிக்கிட்டே போறார் போறார், சுத்திச் சுத்தி எங்கெங்கேயோ போறார். மதுரா போற ரோடுலே நேராப் போனாலே நேரு ப்ளேஸ் வந்துருக்கும். கிழக்கு கைலாஸ் தாண்டி தாமரைக் கோயில் பக்கம் போனா ஆச்சு. ஆனாத் தொழிற்பேட்டை இருக்கும் பக்கமெல்லாம் கொண்டுபோய் காமிச்சுக்கிட்டு இருக்கார். ஏறும்போதே மீட்டர் இருக்குன்னு உத்திரவாதம் கொடுத்தவர்தான். சொந்த ஊர் எங்கேன்னு கேட்டதுக்கு லுதியானான்னு சொன்னப்பவே நான் புரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கணும்.

தலைநகரம், கனகம்பீரமா இருக்கும் தெருக்கள், எல்லாம் மாடர்ன் பியூட்டீஸ்ன்னு இருந்த காட்சி 'சட்'ன்னு மாறி ஒரு அறுதப் பழைய கிராமத்துக்கு வந்தமாதிரி இருக்கு. செம்மண் பூமி. சரியான பாதைகள் கூட இல்லை. இதுலே என்னை இறக்கி விட்டுட்டு இன்ஸ்ட்ரக்ஷன் வேற!

"யார் கிட்டேயும் பேச வேணாம். இப்படியே நேராக் கோயிலுக்குப் போயிட்டு வந்துரணும். நான் இங்கேயே காத்திருப்பேன். நான் போயிட்டா அவ்ளோதான். திரும்பிப்போக வண்டியே கிடைக்காது. பத்திரமாப் போயிட்டு வா ஆண்ட்டி"

என் மூஞ்சியில் இருந்த திகைப்பைப் பார்த்துட்டு .............

" வெயிட்டிங் சார்ஜ்கூட தர வேணாம்.இங்கேயே காத்திருக்கறேன்"

ஒரு சின்ன குன்றுமேலே கோயில் இருக்கு போல. அகலமான பாதைதான். கல் பாவி இருக்கு.

அங்கங்கே சின்ன ஏத்தம். ரெண்டு பக்கமும் கடைகள். எல்லாம் கோவில் சம்பந்தபட்ட சாமான்கள்.வளையல்களாக் குவிச்சு வச்சிருக்காங்க. சிகப்புக் கயிறுகள் கொத்துக் கொத்தா தொங்குது. வெள்ளையா பாப்கார்ன் பொறிச்சதுபோல இருக்கும் இனிப்புவகைகள் இருக்கு. சாமிக்குப் படைக்க வாங்கிக்கிட்டுப் போறாங்க மக்கள்ஸ்.

கடைக்காரர்களே செலவு செஞ்சு போட்டுக்கிட்ட பாதையோ என்னவோ சில இடத்துலே அலங்காரமா டைல்ஸ் கூட பதிச்சு இருக்காங்க. கடைகடைக்குப் பக்திபாட்டு முழங்குது. எல்லாம் சேர்ந்து கலந்துகட்டியாஒரு இரைச்சல். இதுலே கடைக்காரர்கள் போறவர்றவங்களைக் கூவிக்கூவி கூப்புடறாங்க. எதோ திருவிழா சமயம் திருத்தணியிலே இருக்கறமாதிரி ஒரு தோணல்.
பக்கா கிராமத்து ஜனங்கள். பதினைஞ்சு இருபது நிமிஷத்துலே டெல்லின்னு ஒரு இடம் இருக்குதுன்னுகூடத் தெரிஞ்சிருக்குமோ என்னவோ?

படியேறிப்போனேன். பாதுகாப்பு, பரிசோதனைகள் இப்படி ஒண்ணுமே இல்லை. படிச்சவுங்க இருக்கற இடத்துலேதான் ஆபத்து இருக்கும்போல. கோயிலில் கூட்டமான கூட்டம். ஆரஞ்சு நிறத்துலே மெழுகிவச்ச ஒரு பெரிய பாறை. இதுதான் கல்காஜி. சுயம்பு. சுத்திவந்து கும்பிடலாம். ஆனா சுத்தவிடாம வழியை மறைக்கிற மாதிரி பலர் நின்னுக்கிட்டு இருக்காங்க. அவுங்க முழங்கைவரை சிகப்புக் கயிறுகள். அதுலே இருந்து ஒவ்வொண்ணா எடுத்து ஜனங்கள் கையிலே மணிக்கட்டுலே கட்டுறாங்க. கட்டிக்கிட்டவங்க அவுங்களுக்குக் காசு கொடுக்கறாங்க.பயங்கரப் போட்டா போட்டி யாரு கட்டுறதுன்னு. 'கட்டிக்கோ கட்டிக்கோ'ன்னு என்னைப் பார்த்து கூச்சல். 'நஹி நஹி'ன்னுசொல்றதைப் பார்த்து, 'சாமிக் கயிறை வேணாங்குது! இப்படியும் ஒரு ஜென்மமா?'ன்னு ஒரு பார்வை. ஒரு மாதிரி சமாளிச்சு வெளியே வந்து அந்தச் சின்னக்கோயிலை வலம் வந்தேன். அங்கே ஒரு வாசல் போல வெளிச்சம் தெரிஞ்சது.

அதுக்குள்ளே எட்டிப் பார்த்தால்................ ச்சின்னதா ஒரு ஷாமியானா போட்டு வச்சிருக்கு. திண்டுதிம்மாசுன்னு சிலது கிடக்கு. அதுலே சரிஞ்சாப்புலே சாய்ஞ்சு உக்கார்ந்துருக்கார் தாடியும் மீசையுமா ஒரு பெரியவர். தலையெல்லாம் சடைசடையா இருக்கு. அதுலே ஒரு தலைப்பாகை. சிகப்புக் கலருலே ஒரு கோட்டுமாதிரி போட்டுருக்கார். அவருடைய வலதுகையிலே ஒரு உடுக்கை. முன்னாலே ஒரு பெரிய தாம்பாளத்துலே குங்குமம் நிரம்பி இருக்கு. உடுக்கையை அப்பப்பஆட்டிக்கிட்டு இருக்கார்.'
ட்டூஊஊஊஊங்.....டுமுரு... டுமுரு.. டுமுரு.. டுமுரு.. ட்டூஊஊஊஊஊஊங்'
ஜனங்க அவர் காலுலே வுழுந்து கும்புடுது. ஒருகையாலே குங்குமத்தை வாரி அவுங்க நெத்தியிலே பூசறார். காணிக்கையை அவர்முன்னாலே இருக்கற இன்னொரு தட்டுலே போடறாங்க.

'டமரு வாலா லால் பாபா'ன்னு அந்த ஷாமியானாவுலே ஒரு பேனர் எழுதித் தொங்குது.

எதையுமே நம்புனாத்தான் தெய்வம். மக்கள் முகத்துலே இருந்த பரவசமே அவுங்க நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காமிக்குது. கள்ளமில்லாத கிராமத்து மக்கள். கும்பலாக் குழந்தையும் குட்டியுமா சந்தோஷமாச் சிரிச்சுப் பேசிக்கிட்டு உக்கார்ந்திருக்காங்க. பிள்ளைங்க கோயிலைச் சுத்திச்சுத்தி ஓடிவிளையாடுதுங்க. இது ஒரு புது அனுபவம்தான்னு கீழே இறங்கி வந்தேன். நண்டும் சிண்டுமாப் பசங்க கூடவே ஒட்டிக்கிட்டு வருதுங்க காசு கொடு காசு கொடுன்னுக்கிட்டு.

க்யான்சிங் டாக்ஸியிலே தூக்கம். அங்கே இருந்து இஸ்கான் போனோம். வழக்கம்போலவே(!!) வெயிட் பண்ணறேன்னு சொன்னவர்கிட்டே,'வேணாம். நீங்க போகலாம். எனக்கு நேரமாகும்'னு சொன்னாலும் கேக்கற மாதிரி இல்லை. 'எனக்கு வெயிட்டிங் சார்ஜ் வேணவே வேணாம். ச்சும்மா இங்கே காத்திருக்கறேன்'. இதென்னடா வம்பாப்போச்சு. கணக்கைச் சொல்லுப்பா........ன்னு கெஞ்சறேன். 350 ரூபாய் ஆச்சு. 'மீட்டர் த்தோ பராபர் ஹை'.500 ரூபாய் நோட்டு எடுத்துக் கொடுத்தால் பாக்கி 100 ரூபாய் தரார். இன்னும் 50? 'எனக்கு இனாம் தரக்கூடாதா? பாக்கி அந்த அம்பதைக் கண்டிப்பா வேணுமுன்னா தரேன். இனாம் வச்சுக்கோன்னு சொன்னா வச்சுக்கறேன்'

தப்பிச்சாப்போதுமுன்னு இறங்கி ஓடுனேன் கோயிலைப் பார்த்து. இந்த ஹரே கிருஷ்ணா கோயிலும் ஒரு குன்று மேலேதான் இருக்கு. பிரபலமான இடங்களைப்போல இங்கேயும் பாதுகாப்புக்காக எலெக்ட்ரானிக் கேட் வச்சிருந்தாங்க. ஆனா தடவல்கள் இல்லை. கைப் பையை மட்டும் திறந்து காமிச்சாப் போதும். கோயிலுக்குள்ளே ஒரு குழு பஜனை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. மூணு மாடங்கள் அமைச்சு விக்கிரகங்கள். எல்லாமே
பளிங்குச்சிலைகள். அதுலே அந்த ராமர், லக்ஷ்மணர், சீதாவுடன் அமெரிக்கையா உக்கார்ந்துருக்கற அனுமார் கொள்ளை அழகு.உயிரோட்டமான கண்கள். ச்செல்லம்போல இருக்கார்.
இங்கே படம் எடுத்துக்கலாமுன்னு சொன்னாங்க. கோயில் வாசலில்வெளி முற்றத்தில் ஒரு கருடாழ்வார் சிலை. அமர்க்களமா இருக்கு. ராதா பார்த்தசாரதின்னு ஒரு விக்கிரகம் தாடி மீசையோடுஇருக்கு.(படம். பதிவின் ஆரம்பத்தில்)

கொஞ்சம் கீழே அஞ்சாறுபடி இறங்கிவந்தா, இன்னொரு பகுதியிலே வீடியோ படம் காமிக்கிறாங்க. ஆரம்பிக்கப்போறாங்க,உள்ளே வர்றீங்களான்னு ஒருத்தர் கேட்டார். பக்திப்படம் பார்க்கலாமுன்னு நினைச்சாலும், இப்ப வேணாமுன்னுமுடிவு செஞ்சுட்டேன்.

கொஞ்சம் உயரமான குன்றுமேலே எழும்பி இருக்கும் கோயில். குன்றின் அமைப்பையொட்டி ஒவ்வொரு நிலையிலும் ஒரு கட்டிடமா இருக்கு. புத்தகம், போஸ்ட்டர்கள் , ஜெபமாலைகள், துளசிமணிமாலைன்னு விக்கற கடைகள், பக்கத்துலேயேசிற்றுண்டி வியாபாரம். வாசலிலே ஒரு மேஜை போட்டு ஒலிஒளி, ஃபிலிம்ஷோ அறிவிப்பு செஞ்சுக்கிட்டே, ச்சின்னதா நினைவுப்பொருட்களாக கண்ணன் படம் போட்ட கீ செயின், நெத்திக்கு இட்டுக்கும் கோபிச்சந்தனம் வகையறாக்களை விற்கும் இடம், அங்கங்கே நின்னு அக்கம்பக்கத்து வியூக்களை பார்க்கும் விதமான விசாலமான காலி இடங்கள்,ஏற்றவும் கீழ் தளத்துலே 'கோபால்ஸ் ரெஸ்டாரண்டு'ன்னு சாப்பாட்டுக் கடை இப்படி நல்லாதான் கட்டி இருக்காங்க.

நேத்து ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடந்துச்சே அதைப் பத்தி யோசிச்சுக்கிட்டே படிகள் இறங்கிவந்து உள்ளே எலெக்ட்ரானிக் கேட் (எப்படியும் இதைத் தாண்டித்தானே வரணும்?)அருகே இருக்கும் கட்டைச்சுவரில் உக்கார்ந்து நண்பருக்காகக் காத்திருந்தேன்.இன்னிக்கும் நடக்கப்போவது ஒரு வலைப்பதிவர் சந்திப்பு!

தொடரும்..........

Monday, March 19, 2007

அக்ஷர்தாம் ( தொடர்ச்சி)





நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 5)


அடுத்த கட்டமா ரெண்டாவது பிரிவுக்குப் போறொம். அவ்வளவு பெரிய தியேட்டர் முழுசும் நிறைஞ்சுபோச்சு.அஞ்சு பள்ளிகளில் இருந்து பசங்க வந்துருக்காங்க. ஒவ்வொரு பள்ளிக்கூடமும் ஒவ்வொரு யூனிஃபார்ம்லே. அங்கங்கேஇருக்கும் உதவியாளர்கள் எங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் குழுக்கள் பிரிச்சு அனுப்புனாங்க. டிஸ்னிலேண்ட்லே வரிசையில் நின்னு போவோம் பாருங்க அதைப்போல இருக்கு! ஒலியும் ஒளியும் காட்சிகள். பகவான் ஸ்வாமிநாராயணின் வாழ்க்கைக் காட்சிகள். இப்பத்தானே படம் பார்த்துட்டு வந்தோம், அதனாலே சம்பவங்கள் சுலபமாப் புரிஞ்சது. முக்கால் இருட்டானஅரங்கத்துலே நல்ல மரப்பெஞ்சுகள் போட்டு வச்சுருக்காங்க. நாம் போய் உக்கார்ந்ததும் அரங்குலே வெளிச்சம் பரவுது. காட்சிகள்கண் முன்னே. எல்லாமே லைஃப் சைஸ் உருவங்கள். பொம்மையாச் சும்மா இருக்காம பேசவும் நடக்கவும் செய்யுது. தத்ரூபமாஇருக்கு. அஞ்சு நிமிஷம். இது முடிஞ்சு அடுத்துன்னு போகணும். கிராம மக்களைச் சந்திச்சுப்பேசும் நீல்கண்ட், குருகுலத்தில் மாணவர்கள், கிராமத்துலே மரத்தடியில் விளையாடும் பிள்ளைகள், பஞ்சம் வந்த காரணத்தால் குடிபெயரும் ஏழை விவசாயி இப்படிச் சரியா 15 காட்சிகள் இருக்கு. அதி சூப்பர்ன்னு சொல்லிக்கிட்டேன். ரொம்ப சிஸ்டமாடிக்காத் தொய்வு இல்லாமப் போய்க்கிட்டு இருக்கு எல்லாம்.




இப்போ மூணாம் பிரிவுக்கு வந்தோம். மறுபடியும் அமெரிக்கா , அங்கே 'பைரேட்ஸ் அஃப் கரீபியன் ரைடு' ஞாபகம்.அதைப்போலவே ச்சின்னப் படகுகளில் அஞ்சாறு பேராப் போறோம். ரெண்டு கரைகளிலும் காட்சிகள் மாறிமாறிப் பார்க்கணும்.ஆயிரக்கணக்கான வருசங்களுக்கு முன்னே மக்கள் எப்படி இருந்தாங்க, அந்தக் காலக் கல்விக்கூடம், அரசர்கள் தளபதிகளுடன் போர் சம்பந்தப்பட்ட ஆயுதங்களைப் பரிசீலிக்கிறது, வைத்தியர்கள், நோயாளிக்குச் சிகிச்சை செய்யறது, மிருக வைத்தியம்,ஆடல்பாடல் கலைகள், கடைவீதின்னு நம்மளை எங்கியோ கொண்டு போயிடறாங்க அந்த 12 நிமிஷத்துலே! படகுப்பயணம்முடியும் முன்பு ஒரு சின்னப்பாலத்துக்கடியில் படகு வரும்போது உலகத்துக் குழந்தைகள் எல்லோருமே ஒண்ணா இருக்கறமாதிரி ஒரு சீன்.




வெளியே வந்து சுத்துப்புற வெராண்டா மாதிரி இருக்கும் அமைப்பில் வலம் வர்றோம். பிரமாண்டமான தோட்டம்.அழகா நிர்மாணிச்சு வச்சுருக்காங்க. லேண்ட்ஸ்கேப் அட்டகாசம். பொருத்தமான செடிகள். தோட்டம் மட்டுமே60 ஏக்கர் நிலமாம். சொல்ல மறந்துட்டேனே...அங்கங்கே ரெஸ்ட் ரூம்கள். உண்மைக்குமே படு சுத்தமா இருக்கு. குடிதண்ணீருக்கும் அங்கங்கே குழாய்கள் வச்சிருக்காங்க.




'யக்னபுருஷ் குண்ட்'ன்ற பேரில் யாகம் செய்யும் குண்டம் போன்ற ஒரு பெரிய அமைப்பு. அதைப் பார்த்தபடி நிற்கும் ஸ்ரீ நீல்கண்ட்டின் பிரமாண்டமான உருவச்சிலை. ( இங்கே எல்லாமே பிரமாண்டம்தான். கோயிலுக்கு உள்ளே இருக்கும்சிலையும் 11 அடி உயரம். எதுக்கெடுத்தாலும் பிரமாண்டம்ன்னு சொல்லியே எனக்கு அலுத்துப்போச்சு. இந்த வார்த்தைக்குப்பதிலா வேறொரு சொல் இருக்கான்னு நம்ம 'சொல் ஒரு சொல்' மக்களைக் கேக்கணும்) முன்னூறு அடிக்கு முன்னூறுன்னு சதுரமான குண்டத்துலே எட்டிதழ் தாமரை அமைப்பில் இருக்கு. இங்கே இறங்கி வர்றதுக்கு நாலாபக்கமும் சேர்ந்து2870 படிக்கட்டுகள். அதுலே அங்கங்கே குட்டிக்குட்டி மாடங்களாச் சின்னச்சின்ன கோயில்கள் அமைப்பு 108 இருக்கு.


இந்தியா முழுசும் இருக்கும் 151 நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவந்து இந்த செயற்கை நீர் ஊற்றில் கலந்துருக்காங்களாம். மானசரோவர் ஏரியில் இருந்தும் புனித நீர் கொண்டு வந்தாங்களாம். இதுதான் போன பதிவில் இருக்கும் கோமுகங்கள் வாயில் சன்னமா வர்ற தண்ணீர். இந்த கோமுகங்களின் எண்ணிக்கைகூட 108. இங்கேதான் இசை நீர் ஊற்றுக் காட்சி நடக்கும்.இசை நீர் ஊற்றுக்கள் காட்சியும் அமர்க்களமாவே இருக்குமாம். ச்சும்மா இசைக்குப் பதிலா வேத மந்திரங்கள் ஒலிக்க அதுக்கேத்த மாதிரி தண்ணீர் மாயாஜாலம் காமிக்குதாம். ஆனா ஆறே முக்காலுக்குத்தான் ஆரம்பமாம். குளிர் காலம் முடிஞ்சதும் ஏழு மணிக்காம். அவ்வளவு நேரம் இருக்கமுடியாதுன்றதாலே கிளம்பிட்டோம்.செந்தோஷாவுலே பார்த்துருக்கோமேன்னு மனசைச் சமாதானப் படுத்த வேண்டியதாப் போச்சு.



தோட்டத்தைச் சுற்றி வந்து வெளியேறும் இடம் ஒரு பெரிய ஹால். அமெரிக்கன் ஸ்டைலில் ஞாபகச் சின்னங்கள் படங்கள், டி. ஷர்ட்டுகள்ன்னு விற்கும் இடம். இதே மாதிரி பெங்களூர் ஹரே கிருஷ்ணாவிலும் பார்த்திருந்தேன்.படம் எடுக்கத்தான் அனுமதி இல்லையே.......... அதனால் சில படங்களை வாங்கிக்கிட்டோம். கோபாலை எப்படியும் சந்நியாசியாக்கியே தீருவதுன்னு அவருக்கு ஒரு ருத்திராட்ச மாலை வேற.


இங்கே ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குன்னு போர்டுலே பார்த்தேன். ஆனா நாங்க போன அன்னிக்கு மூடி இருந்தது. கண்ணு நிறைஞ்சு மனசும் நிறைஞ்சு இருந்ததாலே பசி மறந்து போச்சு. ஒரு நாள் பகல் சாப்பாடு போனாப் போட்டும்.


பிற்பகல் மூணு மணிக்கப்புறம் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு இருந்ததாலே இன்னொரு நாள் (???) ஆறுதலா வந்து தூண்களையும், தோட்டத்தையும் ( மட்டும்) ரசிக்கலாமுன்னு மனசுக்குள்ளெ திட்டம் தீட்டிவச்சேன். போனோம் ,பார்த்தோம், வந்தோமுன்னு இருக்கறவளா நான்? அதைப் பத்தியே இண்டு இடுக்குவிடாம யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.



இந்தப் படகு சவாரியிலே போறப்ப ரெண்டு பக்கமும் அற்புதக் காட்சிகள் இருக்கு. நாம ஒரு பக்கம் பார்த்து ரசிக்குமுன்னே இந்தப் பக்கம் காட்சியைக் கோட்டை விட்டுடறோம். இதே படகு ஒருமுறை இந்தப் பக்கம் போய் சுத்தி,அதே பக்கம் மறுபடித்திரும்ப வந்தால் அடுத்த கரையில் இருக்கும் காட்சிகளை மிஸ் செய்ய மாட்டோம். நிர்வாகம் இதைக் கவனிச்சால்நல்லா இருக்கும். போனாப் போட்டுமுன்னு சொல்ல முடியாத அழகா இருக்கறதாலேதான் இந்த விண்ணப்பம். அப்படிஇல்லையா............ இன்னும் நின்னு நிதானிச்சுப் போகணும் படகு. இந்தப் பன்னிரெண்டு நிமிஷத்தை இருபது நிமிஷமாக்கினால் நல்லது.


கோயிலில் பூஜை நேரமுன்னு ஒதுக்கி வைக்கலை. அதனாலே நாம் பூஜை சாமான்கள் வாங்கிப்போறது, கற்பூரம் ஏத்தறது, தேங்காய் உடைக்கிறதுன்னு ஒண்ணும் கிடையாது. இதெல்லாம் இல்லாததாலே நம்மூர் கோயில் வாசலில்பார்க்கும் பூக்கடை, அர்ச்சனைப்பொருட்கள் விற்கும் கடைன்னு களேபரம் இல்லாம இருக்கு. முக்கியமா பிச்சைக்காரர்கள் வாசலில் வரிசையா இருக்கும் காட்சி இல்லை. இதுவே கொஞ்சம் ஆசுவாசமா இருக்கு. கோயிலுக்குள்ளும்படு சுத்தமா இருக்கு. விபூதி, குங்குமப் பிரசாதமும் இல்லை, அதனால் அதை வாங்கி நெத்தியில் இட்டது போகத் தூண்களில் கொட்டிட்டுப்போறதும் இல்லை.அங்கே தரையில் யாரையும் உக்கார அனுமதிக்கிறது இல்லை. அந்தப் படிகளில்கூட அமர அனுமதி இல்லையாம். நமக்கோ........ கோயிலுக்குப்போனா ஒரு ரெண்டு நிமிஷமாவது உக்காரணும். அப்பத்தான் பலன்னுசொல்லி வளர்த்த பாட்டிதான் நினைவுக்கு வராங்க. ஒவ்வொரு கோயிலும் ஒரு விதம். அந்தந்த வழக்கபடிக் கும்புட்டாப் போச்சு.



கலாச்சாரமையத்துக்கு ஒரு நாள் அவுட்டிங் வர்றதுபோல மக்கள்ஸ் வராங்க. அதுலே இளம்வயதுக்காரர்கள் ஏராளம். புதுக்கருக்கழியாத நகையும் நட்டுமா, கைகளில் மருதாணி இன்னும் பளிச்சுன்னு கோலம் போட, கணவன் ரகசியமா எதோ காதில் சொல்ல, அதைக்கேட்டு உலக மகா ஜோக் போல ரசிச்சுச் சிரிச்சுக்கிட்டு இருந்த சில தேன்நிலவு ஜோடிகளைக் கூடப் பார்த்தோம். நம்ம பக்கத்தைவிட வடக்கத்தி மக்கள் இன்னும் ச்சின்னவயசுலேயே கல்யாணம் பண்ணிக்கறாங்க போல இருக்கு.


நீங்க போறப்ப திங்கக்கிழமை மட்டும் போயிறாதீங்க. அன்னிக்கு வார விடுமுறையாம்.


ஏழை நாட்டுக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையான்னு ஒரு பக்கம் பேச்சு அடிபட்டுக்கிட்டு இருந்தாலும் இது ஒரு மகத்தான சாதனைன்னுதான் சொல்லணும். முந்தியெல்லாம் டெல்லின்னதும் ஆக்ராவும் தாஜ்மகாலும் உண்டாக்கும் தாக்கத்தை இனி வரும் நாட்களில் இந்தக் கோயில் ஏற்படுத்தத்தான் போகுது. ஒரு பத்தே வருசம் டைம் கொடுத்துப்பாருங்கன்னு சொன்னேன் கோபால்கிட்டே.


தாஜ்மகால் ஒரு அதிசய அழகுதான்னாலும் அது சமகாலத்துக் கட்டிடம் இல்லை. ஆனா அக்ஷர்தாம் நம்ம கட்டிடக் கலைஞர்களைக்கொண்டே கட்டப்பட்டது. கட்டுறப்ப இதோட ஒவ்வொரு நிலையையும் நல்லபடியா ஆவணப்படுத்தி வச்சுருக்காங்க. கலைகள் நசிச்சுப்போகுதுன்னுகூப்பாடு போடும் காலக்கட்டத்தில் இப்படி ஒண்ணு கட்டப்பட்டிருக்கறது அற்புதமுன்னே நான் நினைக்கிறேன். இதே மாதிரி கோயில் ஒண்ணு காந்திதாம் குஜராத்லேயும் கட்டி இருக்காங்களாம். இங்கே எங்க நியூஸியிலும் ஆக்லாந்து நகரில் ஒருகோயில் ( கோயில் மட்டும்) கட்டி இருக்காங்க. அதுக்கும் தூண் முதற்கொண்டு எல்லாமே இந்தியாவில் செஞ்சு,இங்கே கொண்டுவந்து கோயிலை எழுப்புனாங்கதான். அதே பிங் ஸ்டோனும் மார்பிளும். சுமார் மூணு வருசம்முந்தி அதைப் பர்க்கப்போனப்ப, அங்கே ஆமதாபாத்தில் கட்டி இருக்கும் கலாச்சாரமையத்தோடு கூடிய கோயிலைப்பத்தின விவரம் அடங்கிய புத்தகம் ஒண்ணு கிடைச்சது. படங்கள் எல்லாமே கண்ணைப் பறிச்சது. எழுத்துகள் ஒண்ணும் படிக்கத்தெரியலை. அப்படியும் எழுத்துக்கூட்டித் தட்டிமுட்டிப் படிச்சு(!!)பார்த்தேன். குஜராத்தியிலே அச்சடிச்சு இருந்துச்சு.முக்கால்வாசி ஹிந்தி எழுத்துக்கள்தான். அந்தப் படங்களையும், இப்ப டெல்லியிலே பார்த்த கோயிலின் அமைப்பையும் பார்த்தப்பத்தான் தெரியுது ரெண்டுமே வெவ்வேற அழகுன்னு. கலாச்சார மையங்களிலும் வெவ்வேற காட்சிகளா இருக்கு.



இவுங்கதான் உலகமெங்கும் கோயில் கட்டிக்கிட்டு வராங்களே. நியூஸி கோயில் இவுங்களோட 416வது கோயில்.அது ஆச்சு அஞ்சு வருஷம். அதுக்கப்புறம் எத்தனையோ? அதுலே அந்தந்த நாட்டுக் கட்டுத்திட்டத்தின் படித்தான்கட்டவேணும். உள்ளூர் கட்டிடக் கம்பெனியுடன் கூட்டாய்ச் சேர்ந்துதான் கட்டவேணும். நியூஸியில் ஆக்லாந்துக் கோயிலுக்கும் இந்தியாவிலே இருந்து கொண்டுவரப்பட்ட தூண்கள் கொஞ்சம் உருமாறிச் சிதைஞ்சுப் போச்சுன்னாலும், கூடவே வந்த கலைஞர்கள் ராவும் பகலுமா உக்கார்ந்து சரி செஞ்சுட்டாங்க. அலங்காரத்தூண்கள் எல்லாம் ஒண்ணு போல இருக்கே,அதுக்கும் சில டெம்ப்ளேட் பயன்படுத்துனாங்களாம். 'இந்தியாவுலே ஸ்டீல் காங்க்ரீட் எல்லாம் பயன்படுத்தாமத்தான் கட்டுறோம். இதுவரை ஒரு கோயிலும் இடிஞ்சு விழலை'ன்னு கோயில் நிர்வாகம் சொன்னாலும் இங்கே தூண்கள் வைக்கவும், இன்னும் வெளிப்புற பூச்சு வேலைக்கெல்லாம் பீம்கள் வைக்கத்தான் வேண்டி இருந்துச்சுச்சாம். இதெல்லாம் 'கட்டுமானத்துறை குமாருக்கு நல்லா விளங்கும்'. ஊரில் இருந்து வந்த பிரமாண்டமான தேக்கு மர முன்வாசக் கதவுகளைப் பொருத்துனது, ப்ரீகேஸ்ட்டா வந்த பாகங்களைப் பயன்படுத்துனதுன்னு எல்லாமே உள்ளூர் கம்பெனிக்கு ஒரு சேலஞ்சிங் ஜாப் ஆக இருந்துச்சுன்னு கம்பெனியின் சைட் மேனேஜர் சொல்லி இருக்கார்.


இந்தக் கோயில்கள் கட்டாயம் பார்க்கவேண்டியவை. உலகத்துலே நீங்க எங்கெங்கே இருக்கீங்களோ அங்கே இருக்கறதைப் பார்க்கத் தவற விடாதீங்க.


நாளைக்கு இன்னொரு கோயிலுக்குக் கூட்டிட்டுப்போவேன் உங்களை.


தொடரும்............

Friday, March 16, 2007

அக்ஷர்தாம்.





நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 4)

இடியும் மின்னலும் மழையுமா இருந்த ஒருநாள் இரவு, அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு சொந்தபந்ததையெல்லாம் உதறித்தள்ளி வீட்டை விட்டு வெளியேறுன கன்ஷ்யாம் பாண்டேவுக்கு வயசு வெறும் 11. வீட்டுக் கதவை மெதுவாச் சாத்திட்டு மழைத் தண்ணியிலே கால் வைக்கும்'சளக்' துல்லியமாக் கேக்குது. பாதம் பட்டுத் தெறிக்கும் தண்ணீர் முத்துக்கள் அப்படியே எழுந்துத்திரும்பவிழுது. 65 அடி உயரம், 85 அடி அகலமுள்ள பெரிய திரையில் படம் பார்த்துக்கிட்டு இருக்கோம்.


அயோத்திக்குப் பக்கத்தில் ஒரு ச்சின்ன கிராமத்தில் பிறந்த இவருக்குப் பெயர் சூட்டும்போதேஹரி, கிருஷ்ணா, ஹரி கிருஷ்ணா, நீல்கண்ட்ன்னு கூட நாலு பேரையும் சூட்டுனாங்களாம்.
ஏழுவருஷம், ஒரு மாசம், பதினோருநாள் பாரதத்தின் கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்குமா எட்டாயிரம் மைலுக்கு மேலே நடந்தே யாத்திரை செஞ்சிருக்கார். இந்தப் பயணத்தில் இவரை 'நீல்கண்ட்'ன்னே மக்கள் அறிஞ்சிருந்தாங்க.


இதுக்கு முந்தி ஐமேக்ஸ் திரையில் படம் பார்த்த அனுபவத்தைவிட இது முற்றிலும் வேறாய் இருக்கு. 55 நிமிஷம் ஓடும் இந்தப் படத்துலே பனி அப்படியே உறைஞ்சு கிடக்கும் இமயமலை முதல்,பசுமையான கேரளம் வரை நாமும் கூடவே பயணிக்குறோம். எல்லாமே விஸ்தாரமாவும், விவரமாவும் இருக்கு. ரொம்ப நேர்த்தியான படப்பிடிப்பு. தியேட்டரின் சவுண்டு சிஸ்டம் பிரமாதம். 'நம்மூர் சினிமாஅரங்குகளில் நம்ம காதைச் செவிடாக்கிட்டுத்தான் அனுப்புவோமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்களொ'ன்னு இப்ப ஒரு புது சந்தேகம் முளைச்சது.


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... இப்ப எங்கே இருக்கேன்? ........ டெல்லியில் இருக்கும் அக்ஷர்தாம் கோயிலில்!!


என்றுமே நிலைத்து நிற்கும் பரம்பொருளான இறைவனின் வீடுன்னு இதுக்கு அர்த்தமாம். தற்காலத்தியக் 'கட்டடமுறையில் இல்லாம கொஞ்சம்கூட ஸ்டீல் பயன்படுத்தாம முழுக்க முழுக்க பளிங்கும், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட 'பிங் ஸ்டோனு'மா இழைச்சு வச்சிருக்கு. இந்த ஆரஞ்சு நிறம்(லேசான காவி நிறமுன்னு சொல்லலாம்) பக்தியையும்,பளிங்கு வெள்ளை பரிசுத்தத்தையும் அடையாளப்படுத்தவாம்.


இன்னிக்கு இங்கே போய்வரலாமுன்னு முடிவு செஞ்சதும் எங்க இவர் ஒரு மாதிரி நேரம் அட்ஜெஸ்ட் செஞ்சுக்கிட்டு எங்கூடவே புறப்பட்டுட்டார். இதுக்குத்தான் வேலையையும் சுற்றுலாவையும் ஒண்ணா சேர்த்துப் பயணம் போகக்கூடாதுன்றது.டெல்லிக்கு வெளியே போகணுமுன்னு சொல்லிக்கிட்டே வந்தார் கார் ஓட்டுனர். ஆனா வெறும் இருபதே நிமிஷப்பயணத்துலே, ரிங் ரோடுலே டெல்லிக்குக் கிழக்கே போய் யமுனை நதிக்கு குறுக்கே இருக்கும் நிஜாமுதீன் பாலத்தைக் கடந்தவுடனே கோயில் கண்ணுலே பட்டது. இங்கே வலது பக்கம் போனா நொய்டா. போகும் பாதையில் ஒரே பனி மூட்டம். மசமசன்னு தெரியுது. இத்தனைக்கும் காலையில் பத்து மணிக்கு மேலே ஆச்சு. கோயில் வளாகத்துலே நுழையறதுக்கு முன்னே அறிவிப்புப் பலகைகள், வரப்போகும் காமன்வெல்த் விளையாட்டுக்கான ஏற்பாடுகள் அந்தப் பக்கம்தானாம். இன்னும் மூணு வருசம்தான் இருக்கு.



பெரிய காம்பவுண்டு சுவர்களைத் தாண்டி உள்ளே வந்தோம். கார் நிறுத்தும் இடம் பிரமாண்டமா இருக்கு. கோயிலையும் சேர்த்து 100 ஏக்கருக்கு மேலே நிலமாம். உள்ளே செல்பேசியோ, கேமெராவோ கொண்டுப்போகக் கூடாதுன்னு அறிவிப்புகள். சாப்பாட்டுச் சாமான்களுக்கும் அனுமதி இல்லை. சிகெரெட், புகையிலை,மதுப்பழக்கம் உள்ளவர்கள் இங்கே வரும்போது அதையெல்லாம் வெளியே விட்டுட்டு வரணும். நம்ம பைகளையும், கெமரா , செல்பேசி இதையெல்லாம் அங்கே இதுக்குன்னே இருக்கும் இடத்தில் ஒப்படைச்சுட்டுப் போகலாம். அங்கே பொருட்களைக் கொடுக்கறதுக்கு முந்தி, நம்ம பெயர், விலாசம்,என்னென்ன சாமான்கள் பையிலே இருக்குன்றதுக்கெல்லாம் ஒரு பட்டியல் போட்டுக் கொடுக்கணும்.அதுக்குன்னே ஒரு படிமம் வச்சுருக்காங்க. அதை வாங்கிப் பார்த்தப்ப எல்லாம் சரியாத்தான் இருக்கு, கடைசி ஒருவரியைத் தவிர. 'இங்கே ஒப்படைக்கும் பொருட்களுக்கு அவுங்க பொறுப்பேத்துக்க மாட்டாங்களாம். ' இது என்னடா பாதுகாப்பு? ( எல்லா இடத்துலேயும் இப்படித்தான் இருக்குன்றது வேற கதை) கார்லெயே சாமான்களை வச்சுட்டோம்.ஓட்டுனர் உள்ளே வரலைன்னுட்டார். 'காரைப் பூட்டிட்டுப் போகலாம் வாங்க'ன்னு சொன்னாலும் கேக்கலை.


பாதுகாப்புன்ற பேரில் வழக்கமா தொட்டுத் தடவல்கள் முடிஞ்சது. நல்லவேளை ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனின்னு நினைச்சுகிட்டேன். இன்னும் பனி விலகாததாலோ என்னவோ அவ்வளவாக் கூட்டம் இல்லை. காலணிகளை ஒரு இடத்தில் விட்டுப்போகணும். ப்ளாஸ்டிக் சாக்குலே வாங்கி வச்சுக்கிட்டாங்க. கோயிலுக்கு முன்னாலே நிக்கறேன், வாய் பொளந்து. அம்சம்னா அப்படி ஒரு அம்சம். படியேறிப்போனா, பூராக் கோயிலுமே கஜேந்திர பீடம்னுஒரு பெரிய பீடத்துமேலே நிக்குது. யானைகளா நின்னு கோயிலைத் தாங்குதுங்க. 'யானை சைஸிலேயே 148 யானைகளாம்'! அம்மாடியோவ்! இது இல்லாம தூண்களில் எல்லாம் குட்டிக்குட்டியா யானையோ யானை.



மொதல்லே கோயிலுக்குள்ளே போயிட்டு வந்துறலாமுன்னு நுழைஞ்சால், எங்கே திரும்ப வர்றது? அப்படியே கால்களைக் கட்டிப்போட்டுருது அங்கே இருக்கும் தூண்களும், கூண்டுபோல் மேலே இருக்கும் மேற்கூரைகளும்.'டோம்'களுக்குக் 'கிண்ணக்கூரை'ன்னு சொல்லலாமா? அண்ணாந்து பார்த்துக் கழுத்தே சுளுக்கிருச்சு. பால்போல பளிங்குக்கற்களால் செஞ்ச தூண்கள், சுவர்கள், அதுலே வேலைப்பாடுகள்ன்னு எதைச் சொல்ல எதை விட? ( வார்த்தை உபயம் :சிவசங்கரி)


தங்கத்தில் செஞ்சதுபோல ஜொலிப்புடன் நீல்கண்டின் உருவச்சிலை. சுவாமிநாராயண் சமிதியின் மற்ற குருக்களின் சிலைகள்,கையில் குழலோடு இருக்கும் வேணுகோபாலும் & ராதையும், ஸ்ரீ ராமரும் சீதையும், சிவனும் பார்வதியும்னு ஆளுயரப் பளிங்குச் சிலைகள். ஆடை அலங்காரங்கள் எல்லாம் அருமை. ராதை, சீதை,பார்வதி மூவருக்கும் முகஜாடை ஒரேமாதிரி இருக்கு. நாலுபக்கமும் பிரமாண்டமான கதவுகள். தங்கத்துலேயே இழைச்சுச் செஞ்சுட்டாங்களோ?



நுழைவாசலுக்கு நேராய் பின்பக்கம் இருக்கும் கதவுக்கு இந்தப்பக்கம் ஸ்வாமிஜி பயன்படுத்திய ருத்திராட்ச மாலை,பாதுகைகள், எழுதுகோல்ன்னு வச்சுருக்காங்க. வெளியே வர மனசில்லாமத்தான் வந்தோம். யானைகளைப் பார்த்ததும்மனசுக்கு ரொம்ப குஷியாப்போச்சு. ஹைய்யோ.......... எத்தனை விதவிதமான யானைகள்! 148 இருக்கான்னு எண்ணிப்பார்க்க ஆரம்பிச்சு நாலைஞ்சு முறை கணக்கைக் கோட்டை விட்டுட்டேன். சரி. அவுங்க சொன்னதை நம்புனா போச்சு.




வெளிப்பிரகாரம் முழுக்க ஒரு செண்டிமீட்டர் இடம் விடாம என்னமாதிரி அலங்காரம்! உத்துப்பார்த்துக் கண்ணு வலியே வந்துரும்போல இருந்தது. 'கூலிக்கு மாரடிச்சவங்க' செஞ்சதுல்லே இதுன்னு புரிஞ்சுபோச்சு. அப்படி ஒரு சிரத்தை, கவனிப்பு. எதோ அச்சுலே வடிச்சது மாதிரி ஒண்ணுபோல எப்படிச் செதுக்கி இருப்பாங்க? ஏழாயிரம் பேர் வேலை செஞ்சாங்களாம்.அஞ்சு வருசம். தன்னார்வத் தொண்டுக்கு நாலாயிரம்பேர். 200 கோடி செலவாச்சாம். உலகம் முழுக்க இருக்கும் குஜராத்திகள் சேர்ந்து செலவு செஞ்சுருக்காங்க. இப்படிக் கொடுக்கவும் மனசு இருந்துருக்கு பாருங்க. மனசுக்குப் பரிச்சயம்உள்ள கடவுளர் உருவங்களும், ச்சின்ன வயசுலே இருந்து கேட்டறிஞ்ச இதிகாச புராணக்கதைகளும் ஞாபகம் இருக்கறதாலே சுத்துச்சுவர்களில் இருக்கும் 'குட்டிக்கதைகளைப் புரிஞ்சுக்க முடிஞ்சது' கூடுதல் மகிழ்ச்சி. நின்னு நிதானமாப் பார்க்கணுமுன்னாஒரு மாசம் வேண்டி இருக்குமோ என்னவோ? 234 அலங்காரத் தூண்கள். ஒரு தூணுக்கு ஒரு நாளுன்னு வச்சுக்கிட்டா...........பேசாம அங்கேயே குடி இருக்க வேண்டியதுதான் போல!



கோயிலைச் சுத்தி செயற்கை நீர் ஊற்றுகள். கோமுகத்தில் இருந்து சன்னமா விழும் நீர்த்தாரைகள். அங்கங்கே தாமரை மலர்கள்.சாயந்திரத்தில் இசைக்கு நடனமாடுமாம். பார்க்க நமக்கு நேரம் இருக்குமான்னு தெரியலை.படிகள் இறங்கி வந்து காலணிகளை வாங்கி அணிஞ்சோம். இடது கைப் பக்கம் கலாச்சார மையம். அங்கே போய்ப் பார்க்க 125 ரூபாய்க் கட்டணம் வச்சுருக்காங்க. அந்த வளாகத்துலே நுழைஞ்சால் எதோ 'அம்யூஸ்மெண்ட் பார்க்' வந்ததுபோல இருக்கு. காபி டீ வியாபாரம் சுறுசுறுப்பா நடக்குது. சிப்ஸ், சாக்லேட்ன்னு பிள்ளைகளுக்கான தீனிகள் ஒரு பக்கம். கூட்டம் அவ்வளவா இல்லேன்னு சொன்னேனே........ எல்லாரும்இங்கே இருக்காங்க!



மொத்தம் மூணு பிரிவுக்கு டிக்கெட் கொடுத்துருக்காங்க. முதல் பிரிவுக்குள்ளெப் போக ஒரு கூட்டம் அங்கே போட்டுருக்கும் இருக்கை வசதிகளில் காத்திருக்கு. நாங்களும் ஜோதியில் கலந்தோம். அங்கேதான் இந்தத் திரைப்படம் பார்த்தோம்.


இந்தக் கோயிலை நினைக்க நினைக்க மூச்சடைக்குது. ஹப்பா.............பாக்கியை அடுத்த பதிவில் சொல்றேன்.


தொடரும்...........