Showing posts with label weird. Show all posts
Showing posts with label weird. Show all posts

Friday, March 23, 2007

கிறுக்ஸ் & கிறுக்ஸ்(weird)

வியர்டு...நானா?


எல்லாருக்கும் ஒரு வழின்னா இந்த இடும்பிக்கு வேற வழின்னு எத்தனைமுறை சொல்லி இருக்கேன். இதுலே இருந்து தெரிஞ்சுக்கிட்டு இருக்கவேணாம், நீங்க?



வல்லி வேற ச்சும்மா இருக்காம இப்படிச் சந்திக்கு இழுத்து விட்டுட்டாங்க.உண்மையைச் சொல்லியே ஆகணுங்கற நிலைக்கு வந்துட்டேன். இப்ப என்னன்னா நம்ம கோவியாரும் ஆட்டைக்கு வாவான்னு சுண்ணாம்பு இல்லாமக் கூப்புடறாரு:-))))


ஆங்கில ஜாதக(??) முறைப்படி நான் கும்பராசியாம். இதோட ஸ்பெஷல் குணம்என்னன்னா............ அன் பிரடிக்ட்டபிள். கரெக்ட்டாப் போட்டுருக்கான். எதுஎதுக்குக் கோச்சுக்குவேன் எதெதுக்கு இல்லைன்னு எனக்கே தெரியாது!


1. ரொம்பப் பத்திரமா இருக்கட்டுமுன்னுன்னு எங்கியாவது ( பத்திரமாத்தான்) எடுத்து வச்சுட்டு எங்கேன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருப்பேன். சரி. இந்தத் தொல்லை வேணாம். இப்பத்தான் கம்ப்யூட்டர் இருக்கே. அதுலே எழுதி வச்சுட்டாப் போதும்னு எழுதிவச்சுட்டேன். இப்ப எந்தத் தலைப்புலே சேவ் செஞ்சுருக்கேன்னு நினைவில்லே. பட்டாணி பாட்டில்னு ஒரு இடத்துலே எழுதிவச்சுருக்கேன். இதுவரை ஒரு பத்துமுறை அதைத் தலைகீழாக் கொட்டித் தேடியாச்சு.எதைத் தேடுறேன்னு தெரிஞ்சாத்தானே? தினமும் பகல்லே ஒரு மணி நேரம் தேடறதுக்குன்னே ஒதுக்கியாச்சு. தேடுவேன் தேடிக்கிட்டே இருப்பேன்...........


எதை? அது தெரிஞ்சா நான் ஏன் தேடப்போறென்?



2. காசு எடுத்து வைக்கன்னு ஒரு குறிப்பிட்ட இடம் இல்லாம அங்கங்கே டப்பாக்களில் (குறிப்பா சமையலறை அலமாரியிலே) வச்சுருப்பேன். நான் செத்துப்போயிட்டா.......... கேரேஜ் சேல் போடறதுக்கு முந்தி,எல்லா டப்பாக்களையும் செக் பண்ணிட்டுப் போடுங்கன்னு கோபால்கிட்டே சொல்லி வச்சுருக்கேன். இந்த புத்தி ஒருவேளை எங்க பாட்டிகிட்டே இருந்து வந்துச்சோன்னு ஒரு சந்தேகம். இத்தனைக்கும் அந்தக் 'குறிப்பிட்டப் பாட்டி 'நான் பிறக்கு முன்னேயே போய்ச் சேர்ந்துட்டாங்களாம். (மறுபிறவி???)



3. சாவுன்னதும் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருது. நான் மண்டையைப் போட்டதும் என்னென்ன செய்யணுமுன்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சுருக்கேன். அப்ப அந்த நிலையிலே கோபாலுக்குத் தடுமாற்றம் வந்துட்டா? ( குஷியிலேஆட்டம் போட்டுக்கிட்டு இருப்பாரோ? ) என்னென்ன உடை, காது, கழுத்துக்கு என்ன நகை( ச்சும்மா வெள்ளியிலே ஒரு செட் வாங்கி வச்சுருக்கேன்,இதுக்குன்னே.அப்பவும் அலங்காரமாப் போகணும்))சாம்பலை எங்கே போடணுமுன்னு எழுதிவச்சாச்சு. அதுவும் கணினியிலேதான். ( அடிப்பாவி! சாம்பலையா கம்ப்யூட்டர்லே போடறதுன்னு யாரு அங்கே சவுண்டு வுடறது?)ஆனா டைட்டில் பக்காவாக் கொடுத்துட்டேன், 'துளசி'ன்னு!!! !!!என் சவப்பெட்டிக்குள்ளே எங்க கப்புவோட அஸ்திப்பெட்டியையும் வச்சுரணும். ஆங்....... இந்தியக்கொடியும் வாங்கிவந்து வச்சுருக்கேன், பெட்டிமேலே போர்த்த.( ஆ......பெரிய தியாகி.கொடி கேக்குதோ?) எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்துலே ரெடியா இருக்கு.



4. எங்க அம்மா இறந்ததுக்கு நான் இன்னும் சரியா துக்கம் அனுஷ்டிக்கலைன்னு ஒரு நீங்காத குறை மனசுலே இருக்கு.அப்ப எனக்கு வெறும் 11 வயசுதானே........... தீவிரம் புரியாம இருந்துருக்கேன். அதனாலே ஒரு நாள் முழுக்க முழுக்க அம்மாவுக்காகவே ஒதுக்கி வச்சுரணும். வேளை வரலை. ஒரு மணிநேரம் மனசு அலை பாயாம இருக்கான்னு பயிற்சி எடுத்தாத்தானே ஒரு 24 மணிநேரம் ஒரே எண்ணமா இருக்க? அம்மா நினைவா ஒரு ஸ்டெத் வாங்கி வச்சுருக்கேன்.எதாவது நாடகமுன்னா அதுலேயாவது டாக்டர் வேஷம் கட்டிரணும்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.



5. ராமாயணம், மகாபாரதம்( ராஜாஜி எழுதுனது) உபன்னியாசமா செய்யணுங்கறது ஒரு எண்ணம். கேக்க ஆள் வேணுமே!நம்ம பூனையை உக்காரவச்சு அதுக்குப் படிச்சுக் காமிப்பேன். அதுவும் பேசாம உக்கார்ந்து கேக்கும். இப்பச் சொல்லுங்க நான் வியர்டா இல்லே அது என்னைக்காட்டிலும் வியர்டா?



6. ப்ளொக் எழுதறதை ரொம்ப சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டு அல்லும் பகலும் இதே நெனப்பா இருக்கறது. இதுதான் இருக்கறதுலேயே 'பெரிய வியர்டு' சமாச்சாரமுன்னு நினைக்கறேன்.



என் பங்குக்கு ஆட்டத்தில் சேர அழைப்பு இவுங்களுக்கு:


சிவஞானம்ஜி

டிபிஆர் ஜோசஃப்

மதுமிதா

அருணா ஸ்ரீனிவாசன்

செல்லி



இன்னும் யார் யாருக்கு 'உண்மை விளம்ப' ஆசை இருக்கோ அவுங்கெல்லாம் கூடச் சேர்ந்துக்கலாம்.



ஆட்டம் அன்லிமிட்டட்:-)))))