Friday, August 22, 2025

ஏறக்கொறைய 'இன்றே இப்படம் கடைசி'ன்னுதான் சொல்லணும்..... (2025 இந்தியப்பயணம் பகுதி 61 )

காலையில் வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமா ப்ரேக்ஃபாஸ்டுக்கு போனோம். வழக்கமான உணவு வகைகள் ஆனால்....  மகள் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவதில் தனி மகிழ்ச்சி!
ரெஸ்ட்டாரண்ட் மேனேஜர் எப்பவும்போல நட்பாக இருந்தார். அவருடனும் ஒரு க்ளிக் ஆச்சு. இதுதான் லோட்டஸில் நமது கடைசி ப்ரேக்ஃபாஸ்ட்... ப்ச்....
மகளும் மருமகனும் கிளம்பறாங்க. இன்னும் ஒரு பதினொரு மணி நேரப்பயணமோ!!!  எதோ சில பொருட்கள் வாங்கிக்கணுமாம். மகளின் அணிகலன்கள்  செய்யத்தேவையான பொருட்கள் என்பதால்.... மொத்தவியாபாரம் என்றால் நல்லது.   நம்ம விஜி,  சௌகார்பேட்டையில் கொண்டு போய் விட்டுட்டு வந்தார். அந்தக்கூட்டத்தில் ரொம்ப நேரம் ஆகுமோன்னு நினைச்சால்.....  ஒரு மணி நேரத்தில் திரும்பிவந்துட்டார். நாம் ஒரு முறை குங்குமப்பூ வாங்க அங்கே போனோமில்லையா ?  அந்த அனுபவம் !!!
ராத்திரி ஒன்பதுக்கு,  வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததா சேதி அனுப்பினாங்க. 

நம்ம அடையார் அநந்தபதுமன் கோவிலில் ப்ரம்மோத்ஸவம்  நாளை நிறைவு.   அதுக்கடுத்தநாள்   காலை உற்சவருக்கு  சாந்தி அபிஷேகம். தினமும் காலை நேரங்களில் திருவீதி உலா உண்டு.  தினம் தினம் ஒவ்வொரு அலங்காரமாய் ஊர்வலம் போய் வந்தவனுக்கு திருஷ்டி பட்டுருக்காதா என்ன ?  இன்றைக்குக் காலை ஆலிலைக் கிருஷ்ணன் !!!!  நமக்குத்தான்  ஒருநாளும் காலை ஏழுமணிக்குக் கோவிலில் இருக்க முடியலை.... ப்ச்... போகட்டும்.... இந்த முறை இப்படி....


நாம் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப.... பெருமாள்,  வழக்கம்போல் தாய்ச்சுண்டு,  விஸ்ராந்தியா இருந்தார்.  இனி மதியம்  மூணுமணிக்குத் திருக்கல்யாணம்.  அதுவரை காத்திருக்க முடியாதே.....   மணி இப்பத்தானே காலை பதினொன்னே முக்கால்.   போயிட்டு வரறோமுன்னு விடை வாங்கிக்கிட்டு ஒரு பத்து நிமிட் போல உக்கார்ந்துட்டுக் கிளம்பினோம்.

சென்னைப்பயணங்களில் இந்த ஏரியாவில் எப்பவும் ஒரு சந்திப்பு உண்டு. அம்மாவை சந்திக்கணும்.  நம்ம சிங்கை சித்ராவின் பெற்றோர். எல்லாம் நம் மரத்தடி மக்கள்தான் !  ஏற்கெனவே சிலமுறை ஃபோன் செஞ்சப்ப பதில் இல்லை.  ஊரில் இல்லையோன்னு தோணுச்சு. நம்மவர்தான் சொன்னார், 'இவ்வளவுப் பக்கம் வந்துட்டோம்.... நேரில் போய் ஒரு ஹை & பை சொல்லலாம்'.  போனால் வீடு பூட்டி இருக்கு.  பக்கத்து ஃப்ளாட் பெண்மணி, கீழே கார்ப்பார்க்கில் இருக்கார். இப்போ  வந்துருவார்னு சொன்னதும் லிஃப்ட்க்கு முன்னால் போய் நின்னோம்.  லிஃப்ட் கதவு திறந்ததும் வெளியே வந்தவருக்கு நம்மைப் பார்த்துத் திகைப்பு !
வீட்டுக்குள் போனதும் முதல் கேள்வி, மாமி எங்கே ?  உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்து நேற்றுதான் வெளியே வந்துருக்காங்க. அதனால் மகன் வீட்டு வாசம் கொஞ்சநாளைக்கு !  அங்கே  போகலாமான்னார்..... உத்தண்டிவரை போய் வர நேரமில்லை என்பதால் ... கொஞ்சநேரம் மாமாவுடன் பேசிட்டுக் கிளம்பினோம். 
பெசன்ட் நகர் வழியா வரும்போது.... அங்கே லஞ்சு முடிச்சுக்கலாமுன்னு போனது தாஜ் ப்ளாசாவுக்கு !  ஃபைன் டைனிங் வெஜ் ரெஸ்ட்டாரண்ட்.  நேபாள நாட்டு மக்கள் நடத்தறாங்க.  யாருமே இல்லாததால் நமக்கு ஸ்பெஷல் கவனிப்பு.  மூணு தாலி மீல் சொன்னதுக்கு, ரெண்டு போதும் உங்களுக்குன்னார் ஓனர் !  உண்மைதான். என்னால் அவ்வளவும் சாப்பிட முடியாது !
தட்டு டிஸைன் பார்த்தீங்களா ? எதாவது அழுக்கு ஒட்டி இருந்தாலும் தெரியாது.... ஹாஹா


ஒவ்வொன்னா சமைச்சுக் கொண்டுவந்து  விளம்பி, சாப்பிட்டு முடிக்கவே ரெண்டு மணி ஆச்சு !
திரும்ப லோட்டஸுக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட்.  நாலரைக்குக் கிளம்பி நம்ம காப்பிக்கடையில் கடைசி டீ !
                     
அப்புறம் தில்லக்கேணிக் கிளம்பியாச்சு. கோவிலில் வழக்கம்போல்  சுமாரான கூட்டம்தான். அஞ்சு பெருமாளையும், ஆண்டாளையும், ஆஞ்சியையும் வணங்கி 'விடை' வாங்கியாச்சு.  பட்டர், சாமந்திப்பூச் சரத்தை நம்மவர் கழுத்தில் போட்டார் ! க்ளிக் க்ளிக்....
              

              
பீச் ரோடு வழியா லோட்டஸ் திரும்பல்.  ராத்ரி டின்னர் எடுக்க யாருக்குமே பசி இல்லை. லேட் லஞ்ச் இல்லையோ ?  அப்படி வேணுமுன்னா....கீழே ரெஸ்ட்டாரண்டில் ரூம் சர்வீஸில் ஏதாவது வாங்கிக்கலாம்தானே ?

விஜியை அனுப்பிட்டு, பெட்டிகளை அடுக்க உக்கார்ந்தோம்.  மறுநாளைக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்து வச்சுட்டு அடுக்கி முடிக்கும்போது மணி பத்தே முக்கால். நம்ம பாலராமரைத் தனியா பபுள்ராப் சுத்தி, கேபின் பேகில் வச்சுட்டோம்.  இனி நியூஸி போனதும்தான் வெளியே வருவார். 

வெறும் வயித்தில் மருந்து எடுத்துக்கமுடியாதுன்னு ஆளுக்கு ரெண்டு இட்லி கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து. 
நாளைக்குக் காலை சீக்கிரமா எழுந்து ரெடி ஆகணும். குட் நைட் !

தொடரும்........... :-)




























0 comments: