பின்னூட்டங்களில் விதவிதமான ஐடியா கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இதுக்கெல்லாம் கூடப் பயன்படித்திக்கலாமான்னு ஒரே வியப்புதான்:-)
சரியான விடையை ஒருத்தர் சொல்லி இருக்காங்க. படம் பாருங்க.
ஏஞ்சலீன் அவர்களுக்கு எல்லாருமாச் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்க!!!!!!
ஓ ஃபார் Onion:-)
நகரவிடாமல் பிடிச்சு வச்சுக்கிட்டு நறுக்கித் தள்ளிறலாம். ரெண்டா வெட்டித் தோல் உரிச்சதும் ஒரே அமுக்:-)
Tuesday, November 29, 2011
சீத்தலை சாத்தள் (புதிர்- விடை)
Posted by துளசி கோபால் at 11/29/2011 10:44:00 PM 22 comments
Labels: அனுபவம்
Monday, November 28, 2011
சீத்தலை சாத்தள்
சரியா ரெண்டு வாரம் மனசை அலைபாயவிட்டுட்டு அதன்போக்கிலேயே போய்வந்தாச்சு. இனி அடங்கிருமுன்னுதான் நினைக்கிறேன்:-)
எழுதலையே தவிர........ வாசிப்புகளைக் குறைச்சுக்கலை. இத்தனைநாள் திடீர்னு எடுத்துக்கிட்ட விடுமுறையும் தோட்டவேலை, சமையல், ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் இப்படி நல்லாதான் போச்சு. Neat bug caught me. ஆனால்....மனக்குரங்கு மட்டும் ஒரு மூலையில் உக்கார்ந்து பிராண்டிக்கிட்டே இருந்துச்சுன்றதை ஒத்துக்கறேன். அதுவும் பகல் 2 மணி ஆனதும் கை பரபரக்கும், பொழுது விடிஞ்சுருச்சுன்னு! (இந்திய நேரம் அப்போ காலை ஆறரை) வாளாவிருந்தால் ஒரு மணிநேரத்தில் எல்லாம் ஆ(டி)றி அடங்கிப்போகும்.
அதை அடக்கவோ, இல்லை எழுதலாமுன்னு நினைச்சதை எப்படி ஆரம்பிக்கணுமுன்னு முடிவு செஞ்சுக்கத் தலை சொறியவேண்டியோ என்னவோ ...........இப்படி ஒரு பொருள்.
புதிரா இருக்கா? படம் பார்த்து என்னன்னு சொல்லுங்க:-)
Posted by துளசி கோபால் at 11/28/2011 02:10:00 PM 24 comments
Labels: அனுபவம்
Tuesday, November 15, 2011
உடம்பா இல்லை மனசா?
கொஞ்ச நாளா ரெண்டும் தகராறு. ஒரு ஒத்துழைப்போ, ஒரு புரிதலோ இல்லாமல் எல்லாத்துக்கும் தாறுமாறா தறிகெட்டு ஓடுனா...........
கணினி முன்னால் உட்காரும்வரை மனசிலே வரிசை வரிசையாப் பதிவுகள் எழுதி எழுதி சேமித்தாலும் அதுக்கு வடிவம் கொடுக்க உக்கார்ந்தால் ஏதோ ஒரு இனம் புரியாத அலுப்பு. பேசாம வாசிச்சுக்கிட்டே இருந்துடலாமான்னு......... ஊரில் இருந்து கொண்டுவந்தவைகளைக் கையில் எடுத்திருக்கேன். தற்சமயம் ஒரு பக்கம் தி.ஜா.ராவின் சிறுகதைத் தொகுப்பு(1) இன்னொரு பக்கம் புலிநகக்கொன்றை
(அம்மாடியோ!!!!!)
போனவாரம் நம்ம கோபாலின் தகப்பனார் இவ்வுலக வாழ்வை நீத்தார். என்னதான் கல்யாணச்சாவு என்றாலும் வெற்றிடம் கொஞ்சம் வெருட்டத்தான் செய்கிறது:(
இதுவும் கடந்து போகும். போகணும். அதுக்காக அப்படியே விட்டு வைக்க முடியாது. இருக்கும் காலத்தின் அளவும் குறைஞ்சுகிட்டே போகுதே......
ஊஹூம்......... இது வேலைக்காகாது. சிலநாட்கள் மனசை அதன் பாதையிலே ஓடவச்சுட்டு மீண்டும் வருவேன். கண்ணைத் திறந்தாலே ஏகப்பட்ட சமாச்சாரங்கள் எழுதக் காத்திருக்குதே!
எழுத்தில்லையேல் இருப்பில் சுகமில்லை என்ற அன்புத்தோழியின் சொற்களை திரும்பத்திரும்ப மனசில் கொண்டு வந்து நிறுத்தியாறது.
Posted by துளசி கோபால் at 11/15/2011 03:20:00 PM 31 comments
Labels: அனுபவம்
Wednesday, November 09, 2011
இந்த வருச தீபாவளி...இப்படி!
அம்பதுக்கு ரெண்டாயிரத்து ஐநூறுன்னா.....'காலுக்கு' எவ்வளவு?
ஒரு பண்டிகையை ஒரு நாளோ ரெண்டு நாளோ கொண்டாடினமா, அப்புறம் அதை விட்டுட்டு நம்ம வேலையைப் பார்க்கப்போனோமான்னு இல்லாம பத்துப்பனிரெண்டு முறை கொண்டாடிக்கிட்டு இருந்தோம். காரணம் ஒன்னும் பிரமாதம் இல்லை...... அந்த 'குறிப்பிட்ட' பண்டிகைக்கு இங்கே அரசு விடுமுறை கிடையாது. அதனால் என்ன.... ஒரு நாள் நாமே லீவு போட்டுட்டுக் கொண்டாடித் தீர்க்க முடியாதா?
அதெப்படிங்க? வீட்டுலே ஆக்கித்தின்னு டிவி பார்த்துக் கொண்டாடுனாப் போதுமா? நம்ம சனங்களோடு சேர்ந்து ஆட்டம்பாட்டமுன்னு இருந்தாத்தானே.....திருப்தி கிடைக்கும்! ஒட்டு மொத்தமா எல்லோரும் லீவு எடுத்துக்க முடியுமா? அதுவுமில்லாம நம்ம அக்கம்பக்கத்து மக்களும் வந்து கலந்துக்கிட்டாத்தானே 'நாங்க இப்படி'ன்னு அவுங்களுக்கு(ம்) காமிக்கமுடியும்? நம்ம நகரசபை வேற , நம்ம கொண்டாட்டங்களுக்குன்னு கொஞ்சம் நிதி ஒதுக்கி வச்சு அப்பப்பக் கண்ணுலே காட்டும். அதை(யும்) விடமுடியுங்களா?
நாமோ (அடிப்படையில்) இந்தியர்கள். நமக்குன்னு ஒரு ஸ்டைல் வேற இருக்குதுங்களே! நமக்குள் எத்தனை மொழியோ அத்தனை விதத்துலே(யும்) ஒரு காரியம் செஞ்சு 'தனித்தனி'க்குழுவா கூட்டமாச் சேர்ந்துதான் கொண்டாடுவோம். நியூஸி இண்டியன், ஃபிஜி இண்டியன், சிங்கப்பூர் இண்டியன், மலேசியா இண்டியன், இந்தியா இண்டியன்( இதுலே ஒரு இருவத்தியஞ்சு வகை!) போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு ஆன்மீகம் சம்பந்திச்ச கோவில்களின் வகையில் சிலது. இந்தக் கணக்கில் ஒரு வருசம் 13 தீபாவளிகூட கொண்டாடி இருக்கோம். முழுசா ரெண்டு மாசம் ஆச்சு கொண்டாடி முடிக்க! வார இறுதியா இருந்தால்தானே எல்லோராலும் வரமுடியும். எல்லாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது வெவ்வேற தனிக் குழுன்னு நினைக்காதீங்க. ஒரு தனிக்குழு கொண்டாடும்போது 'எல்லோரும்' போய் கலந்து ஆதரவு தருவோம். எல்லோரும், எல்லா இடத்திலும், எப்போதும் என்றுதான் நீங்கள் புரிஞ்சுக்கணும் கேட்டோ:-)))))
இந்த வருசம் 'நிலநடுக்கம்' ஸ்பெஷலாப் போனதால் கொண்டாட்டங்களின் எண்ணிக்கை குறைஞ்சு போச்சு. ஹால் கிடைக்கலை, மக்கள் வெளி ஊர்களுக்கு இடம் பெயர்ந்துட்டாங்க என்றதெல்லாம் காரணமுன்னு சொன்னாலும் சங்கங்களின் 'தலை'களுக்கு மனதில் உற்சாகம் குறைஞ்சு போச்சு, முன்னேற்பாடாக் காரியங்கள் செய்ய சோம்பல், ஹால் கிடைக்கலைன்னு சொல்றதெல்லாம் ஒரு சாக்கு இப்படி(யும்) ஒரு பேச்சு ரகசியமா உலாத்திக்கிட்டு இருக்கு. இந்த அழகில் எரியறவீட்டில் பிடுங்குவதுவரை லாபமுன்னு 'ஒரு' சிலர் ஆதாயம் தேடுனதும்,. அதை எதிர்த்துப் பேசின சங்கக்கூட்டங்களில் அமளிதுமளியானதும் இன்னொரு கதை!
பாருங்களேன், ஒரு இருபத்தியாறு மாசங்கள் நாட்டைவிட்டுப்போனதில் என்னென்ன நடந்து போச்சுன்னு!! கட்டி எழுப்பின சாம்ராஜ்யங்கள் எல்லாம் கண் எதிரில் சரிஞ்சுபோய்க் கிடந்துச்சு இந்த ஊர் பாரம்பரியக் கட்டிடங்களைப்போல:(
ஒவ்வொரு குழுவும் தனித்தனியா நம்மைக் கண்டு அவரவர்கள் 'நியாயத்தை' நமக்குத் தெளிவுபடுத்திப் போனாங்க. இதெல்லாம் கிடக்கட்டும் ஆன்மீக நிறுவனங்கள் மீது கொஞ்சம் கவனம் செலுத்தலாமுன்னு பார்த்தால் இருந்த ஒன்னும் இடிஞ்சு போயிருச்சே!
முன்னே ஒரு பதிவில் குறிப்பிட்ட புதுக்கோவில்தான் கொஞ்சம் செயல்பாடா இருக்கு இப்போதைக்கு. அங்கே முற்றிலும் மொழிப்பிரச்சினை இல்லை. ஒரே ஒரு இனம் மட்டும் கூடிச்செஞ்ச ஏற்பாடு இது. (இதே இனத்துக்குள்ளில் கருத்து வேறுபாடு இருக்கு., இன்னொரு குழுவும் தனியாக இயங்குதுன்னாலும் அங்கேயும் இதே மொழியும் இனமும்தானே?
பண்டிகை வருதே என்னதான் நடக்கப்போகுதுன்னு குழம்பிக்கிடந்த சமயம், ஃபிஜி இந்தியக்குழு ஒன்னு (மட்டும்) தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு அறிவிப்பு கொடுத்துச்சு. அங்கத்தினர்களுக்கு முற்றிலும் இலவசம். மற்றவர்களுக்கு பத்து டாலர் டிக்கெட். (நாம் நாட்டைவிட்டுப் போனதால் நம்ம மெம்பர்ஷிப் எல்லா க்ளப்புகளிலும் காலாவதி ஆகிக்கிடக்கு. இனிமேல்தான் ஒவ்வொன்னாப் புதுப்பிக்கணும்.)
நம்ம பேட்டைக்குப் பக்கத்தில்தான் ஒரு பள்ளிக்கூட ஹாலில் விழா நடக்குது. விழா நடத்தும் குழுவினரின் சொந்தப்பேட்டை அழிவில் கிடக்கு. அதை மீண்டும் சரியாக்க இன்னும் பல ஆண்டுகள் பிடிக்குமாம். அதுக்காக அந்த மக்களின் ஓட்டுகளை வேணாமுன்னு விடமுடியுமா? அந்த ஏரியா எம் பி. நாம் போய்ச் சேர்ந்தபோது கார்ப்பார்க்கில் வண்டிக்குள் தன் கணவருடன் காத்திருந்தாங்க. வெள்ளைக்காரர் என்பதால் நம்ம டைமிங்கை புரிஞ்சுக்கலையேன்னு எனக்கு கவலையாப்போச்சு. 'புரிதல்' இருந்ததால் நாங்கள் அரைமணி தாமதமாத்தான் போனோம். மொழி இனம் இதிலெல்லாம் வேறு பட்டாலும் இந்தியர்களுக்கான பொது குணம் ஒன்னை இதுவரை கைவிட்டதே இல்லை என்ற பெருமைதான் நம் மக்களுக்கு!
ஹால் சாவி வச்சுருப்பவர் இன்னும் வந்து சேரலை. வந்திருந்த நாலைஞ்சு வண்டிகளுக்குள்ளேயே உக்காந்துருந்தோம் நாங்க, குளிருக்குப் பயந்து. ஒரு வழியா ஹால் திறந்ததும் உள்ளே போனோம். மகாலக்ஷ்மி, புள்ளையார் படங்கள் பூஜிக்கத்தயாரா இருந்துச்சு. மேடையும் க்ளப்பின் பேனரோடு அலங்கரிச்சுருக்கு. மெம்பர் இல்லாத பலர் உள்ளேவர அனுமதிக்காகக் காத்திருந்தாங்க. நம்ம கோபால்தான் காசை வசூலிச்சுக்கிட்டு 'நான்மெம்பர்' டிக்கெட்டை முதலில் கொடுத்து உள்ளே அனுப்ப வேண்டிய ஏற்பாட்டை அங்கே முழிச்சுக்கிட்டு நின்ன குழுவின் அங்கத்துக்குச் சொல்லிக் கொடுத்தார். அதானே ..... வருமானத்தை கோட்டை விட்டால் எப்படி? ஹால் வாடகைக்காவது காசு தேற வேணாமா? அனுபவஸ்தர் இல்லையோ:-))))))
கூட்டம் வர ஆரம்பிச்சு ஹால் நிறைஞ்சது.
எம்.பி. அம்மா கொஞ்சம் பழைய ஆளு. நாம் இங்கே வந்த அஞ்சு வருசத்துக்குப்பிறகுதான் முதல்முறையா பார்லிமெண்ட் அங்கம் ஆனாங்க. அப்போ முதல் இப்போவரை ஒரு தேர்தலிலும் தோற்காம அதே ஏரியாவில் மணைபோட்டு உக்காந்துட்டாங்க. லேபர் கட்சி. இப்போதைக்கு எதிர்க்கட்சி இதுதான். ஒரு மாசத்துலே தேர்தல் வேற வருது. நம்ம கம்யூனிட்டியைக் கண்டுக்காம விடமுடியுமா அரசியல் வியாதிகளால்?
எம் பி Ms.ரூத் டைஸனுடனும் கணவருடனும் உள்ளூர் நடப்பை விசாரிச்சுக்கிட்டு இருந்தேன். நிலநடுக்க டேமேஜுக்கு அவுங்க என்ன மாதிரி உதவி செய்யறாங்க? என்ன திட்டம் என்றெல்லாம் கொஞ்சம் விஸ்தரிச்சு (சின்ன) பேசிக்கிட்டு இருந்தோம் முன்வரிசையில் உக்கார்ந்து. ஏன் லேட்டா ஆரம்பிக்கிறாங்கன்னு கேட்டதுக்கு ஆமாம்..... 'ரன்னிங் லேட் அஸ் யூஷுவல்'ன்னு சொல்லிவச்சேன்.
ஒரு வழியா மேடை ஏறுன சங்கத்தலைவர் 'வழக்கம்போல் லேட்டாயிருச்சு சொல்லிக்கிட்டே' நிகழ்ச்சியை ஆரம்பிச்சார். மகாலஷ்மிக்கு விளக்கேத்தி ஆரத்தி செஞ்சாங்க முதலில். நாங்க சிலர் ஆரத்தி எடுத்தோம். இன்னும் எல்லோரும் வாங்க வாங்கன்னு மக்களைக் கூப்பிட்டா....... யாரும் அசையலை:( லக்ஷ்மியின் அனுகிரகம் வேணாமுன்னு ஆகிப்போச்சோ? ஆரத்திப் பாட்டு மேடையில் முழங்குது .... மக்கள்ஸுக்கு நிலநடுக்க டிப்ரஷனோ என்னவோ?
உள்ளூரில் நடனப்பள்ளி நடத்தும் தோழி அனுவின் பரதநாட்டியத்தைத் தவிர வேற நிகழ்ச்சி ஒன்னும் ரஸிக்கும்படியா இல்லை:( சாப்பாடும் இதே கதியில்தான்............. எம்.பி. அம்மாவும் வேற ஒரு நிகழ்ச்சிக்குப் போகணுமுன்னு சொல்லி தப்பி ஓடிட்டாங்க. ஒன்பது மணி அளவில் நாங்களும் 'எஸ்' ஆனோம்.
அசல் தீபாவளிநாள் வந்துச்சு. மாலை ஆறரைக்குக் கோவிலுக்குப் போனோம். வழக்கமான லக்ஷ்மண ரேகையைக் காணோம். வரிசையா குடும்ப சமேதரா பக்தர்கள் உட்கார்ந்திருக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் முன்னால் ஒரு தட்டு. ஒரு பெரிய கொட்டைப்பாக்கு, பூக்கள், குங்குமம், விபூதி, சிகப்பு நூல் கயிறுகள், மூணு சின்ன கிண்ணங்களில் ஒன்னில் தண்ணீரும், இன்னொன்னில் அரிசியும், ஒன்னு காலியும்.
கோவில் பண்டிட் மந்திரம் சொல்லச்சொல்ல அதை ரிபீட் பண்ணறோம். என்ன செய்யணுமுன்னு அவர் சொல்லச்சொல்ல அதைச் செய்யறோம். அரிசி அபிஷேகம் எல்லாம் அந்தக் கொட்டைப்பாக்குக்குத்தான். அந்த நிமிஷம் அது பெருமாள்! கூட்டு ஆக்ட்டிவிடி. நல்லாவே இருந்துச்சு. கூடவே மனத்திருப்தியும்தான். கோவிலின் தன்னார்வலத் தொண்டர்கள் 'மொழி' புரியாத மக்களுக்கு என்ன செய்யணுமுன்னு சொல்லி உதவி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஆரத்தி முடிஞ்சு, ரெண்டு இனிப்புகளோடு சாப்பாடும் அங்கேயே!
மூணு நாள் கழிச்சு ஞாயிறன்று அன்னக்கூட் திருவிழா. அடுக்கடுக்கா படிகள் கட்டி தட்டுகளில் பலகாரங்களின் கொலு! கோவர்தன பூஜைன்னு வடக்கே செய்யறாங்க பாருங்க அதுதான் இது. பொதுவா தீபாவளிக்கு மறுநாள் இந்த விழா நடக்கும். ஆனால்....இங்கே நாங்கதான் வீகெண்ட் மனிதர்களாச்சே! ஆக்லாந்து நகர் ஸ்வாமிநாராயண் கோவில் குரு'ஜி' (பூர்வ ஜென்ம நாஸா சயிண்டிஸ்ட்) வந்துருந்தார். அங்கே இருந்தே ஒரு பஜனை கோஷ்டியும். ரொம்ப அருமையான பஜனைப்பாடல்கள் நிகழ்ச்சி. ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை
இந்த BAPS ஸ்வாமி நாராயண் கோவில் ஆமடாவாடில் ஆரம்பிச்சு அம்பது வருசமாச்சாம். ரெண்டாயிரத்து ஐநூறு வகைகள் செஞ்சு வழிபாடு நடத்துனாங்களாம். ஆனால் எண்ணிக்கை முக்கியமில்லை. எவ்வளவு அன்போடும் பக்தியோடும் செய்யறோம் என்பதுதான் அதிமுக்கியமுன்னு சொல்லி எங்க மனசில் பாலை வார்த்தார் குரு'ஜி'. ( இன்னிக்கு லக்ஷ்மண ரேகா திரும்ப வந்துருச்சு) அதானே....இங்கே கோவில் ஆரம்பிச்சே 'கால் வருசம்'தானே ஆச்சு! நாங்களும் அவ்வளவு கணக்கா இல்லை. ஒரு நூத்தியம்பது வகை செஞ்சு அசத்தி இருந்தோம்.
வழக்கம்போல் பிரிவினை:-)
பரிமாற ஆரம்பிச்சு, முடிக்க வகை இல்லாமல் தட்டுதட்டாத் தீனிகளை மேசையில் நிறைச்சு வேணுங்கறதை எடுத்துத் தின்னுங்கன்னு கடைசியில் முடிஞ்சது உடம்பில் சக்கரை எட்டிப்பார்க்க ஆரம்பிச்சுருக்கேன்னு நானும் கவனமா ஒரு ஏழெட்டு வகையோடு நிறுத்திக்கிட்டேன்.இனி அடுத்த அன்னக்கூட் வரை இனிப்பைக் கண்ணால் மட்டும் தின்ன முடிவு.
Posted by துளசி கோபால் at 11/09/2011 02:48:00 PM 20 comments
Labels: அனுபவம்
Wednesday, November 02, 2011
அட! இப்படி ஒரு பயனா!!!!!
நம்மூர் சிட்டி செண்ட்டர்லே கேஷல் ஸ்ட்ரீட் மால் என்பது ரொம்ப பிரசித்தமான இடம். சுற்றுலாப்பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த இடத்தை ரொம்பவே கலகலப்பா வச்சுருப்பாங்க. நானும் சில சமயம் ச்சும்மானாச்சுக்கும் கிளம்பிப்போய் ஒரு மூணு மணி நேரம் சுத்திட்டு வருவேன். அதென்ன மூணு மணி கணக்கு? ( இப்போ ரெண்டு மணி நேரமாக் குறைச்சுட்டாங்களாம்) நகர மைய்யத்துக்குப் போகணுமுன்னா எனக்கு பஸ் பிடிச்சுப்போறதுதான் ரொம்பப்பிடிக்கும். பார்க்கிங் இடம் தேடி அல்லாட வேணாம். பஸ் எக்ஸ்சேஞ்சு மேலே அடுக்கு மாடி பார்க்கிங் இருக்குது. அங்கே காரைக்கொண்டு விட்டால் முதல் ஒரு மணி நேரத்துக்கு இலவசம். அடுத்து வரும் நேரத்துக்கு மணிக்கு ரெண்டரை டாலர் கொடுக்கணும்.
பேருந்துக் கட்டணம் மூணு டாலர் இருபது செண்ட்.($3.20) ரெண்டு மணி நேரத்துக்குள்ளே திரும்பி வந்துட்டால் அதே பயணச்சீட்டைக் காமிச்சுட்டு பயணிக்கலாம். கூடுதல் கட்டணம் இல்லை. நகரத்தின் வேற பகுதிகளுக்கு இன்னொரு வழித்தடத்துலே போகணுமுன்னாலும் அதே சீட்டில் பயணிக்கலாம். எல்லாம் அந்த ரெண்டு மணி நேரத்துக்குள்ளே இருக்கணும். நம்மூர்லே பாருங்க மக்கள்ஸ் எல்லாம் பொதுவா கார் வச்சுக்கிட்டு அங்கே இங்கேன்னு பறக்கறதால் பேருந்துகளுக்குப் பயணிகளை வரவழைக்க என்னெல்லாமோ சலுகைகள் கொடுத்துருக்காங்க.
அதுலே ஒன்னு டெபிட் கார்டு மாதிரி பஸ் கார்டு ஒன்னு. பத்து டாலர் கொடுத்து ஒரு கார்டு வாங்கிக்கிட்டால் ஒவ்வொரு முறை பேருந்தில் ஏறும்போது அங்கே வச்சுருக்கும் ஒரு ரீடர் மெஷீனில் நம்ம கார்டைக் காமிச்சவுடன் அது ரெண்டு டாலர் முப்பது செண்ட் ( $2.30) எடுத்துக்கும். ரெண்டு மணி நேரத்துக்குள் இதுலேயே சிட்டிக்குப்போய் குறிப்பிட்ட ஒரு வேலையை முடிச்சுக்கிட்டுத் திரும்பிடலாம். கூடுதல் நேரம் ஆயிருச்சுன்னா இன்னொரு $2.30 கார்டுலே இருந்து போயிரும். ஆனால்.... ஒரு நாளைக்கு ரெண்டு முறைக்கு மேலே காசு எடுக்காது. ஒரு முறை $4.60 எடுத்துக்கிட்டால்.... அன்றைக்கு முழுசும் இனி செய்யப்போகும் பயணங்கள் எல்லாமே இலவசம். சுற்றுலாப் பயணிகள் நாள் முழுக்க வெவ்வேற வழித்தடங்களில் பயணம் செஞ்சாலும் மெட்ரோ கார்டு நாலு அறுபதுக்கு மேல் காசு கழிச்சுக்காது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 4.60 கொடுத்துப் பயணம் செஞ்சவங்களுக்கு (அதான் $23 பேருந்துக்காசு கொடுத்துருப்பீங்களே)வார இறுதி சனி ஞாயிறு முழுசும் 48 மணி நேரம் முற்றிலும் இலவசமே இலவசம்.
கார்டுலே அஞ்சு டாலர் பாக்கி இருக்கும்போது அந்த ரீடர் மெஷீன் மஞ்சவிளக்குப்போட்டுச் சொல்லும். காசு ஒன்னும் இல்லைன்னா சிகப்பு விளக்கு. கார்டுலே காசு டாப் அப் பண்ணிக்கணுமுன்னா டிரைவர் கிட்டே காசு கொடுத்து செஞ்சுக்கலாம். (இங்கெல்லாம் வண்டிக்கு ட்ரைவர் மட்டும்தான். கண்டக்ட்டர் கிடையாது) தனியா காசு கொடுத்து டிக்கெட் வாங்காம கார்டு வச்சுக்கிட்டுப் பயணிச்சால் முதலில் கார்டு எடுத்துக்கும் $ 2.30க்கு முதல் ரெண்டு மணி நேரத்தில் எத்தனை பஸ்களில் வேண்டுமானாலும் ஏறிப்போய்க்கிட்டே இருக்கலாம்.
பதினெட்டு வயசுக்குக் கீழ் உள்ள பயணிகளுக்கு மேலே சொன்ன எல்லாத்துக்கும் அரை வாசி கட்டுனால் போதும். அஞ்சு வயசுக்குக் கீழேன்னா (பெரியவங்க யாராவது கூட வரும் பட்சத்தில் ) கட்டணமே இல்லை! ( இங்கே 15 வயசுவரை பிள்ளைகளைத் தனியா விடமுடியாது. குறைஞ்சபட்சம் பேபி சிட்டராவது இருக்கணும். நோ ஹோம் அலோன் அலௌட்.பதினெட்டு ஆச்சுன்னா பசங்க தனியா ஃப்ளாட் வாடகைக்கு எடுத்துக்கிட்டுப் போயிடலாம். அது தனிக்கதை)
இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் பாதிக்குமேல் காலியாத்தான் பஸ் ஓடுது. சிலசமயம் நாம் ஒரே நபராக்கூட இருப்போம்.
நிலநடுக்கம் வந்து எங்க செண்ட்ரல் சிட்டி அழிஞ்சே போச்சு. நகர மைய்யத்துக்கு வரும் சாலைகளை எல்லாம் வேலி போட்டு அடைச்சுட்டாங்க. யாருக்கும் அங்கே என்ன ஆச்சுன்றது தொலைக்காட்சி காமிக்கிறதை வச்சுத்தான் தெரியவந்துருக்கு.
உயிரிழப்பு, பாரம்பரியம் உள்ள நல்ல கட்டிடங்கள் இடிஞ்சு விழுந்ததுன்னு பலவித நஷ்டங்கள் ஆச்சுன்னாலும் செண்ட்ரல் சிட்டி வர்த்தகம்தான் ஒரேடியா பாதிக்கப்பட்டுருச்சு. அதுலே முதலீடு போட்டு வியாபாரம் செஞ்சவங்களுக்கு இன்ஷூரன்ஸ் காசு கொடுத்தாலும் அங்கே வேலை செஞ்சுக்கிட்டு இருந்த தொழிலாளிகள் அனைவருக்கும் வேலை போயிருச்சே!
ஊர்மக்கள் எல்லாம் நகரமே கண்முன்னால் காணாமப்போனதால் மனசு ஒடைஞ்சு போயிட்டோம். நகரில் மீண்டும் கொஞ்சம் கலகலப்பைக் கொண்டு வரணுமுன்னால் கடை கண்ணிகள் வந்தால்தானே நடமாட்டம் இருக்கும்?
புதுமாலில் அங்கங்கே பூச்செடிகளை வச்சுக் கொஞ்சம் கண்ணுக்கும் விருந்து வச்சுருக்காங்க.
சிட்டி மாலை திரும்பக்கட்டி எழுப்பணுமுன்னா நிறைய வருசங்கள் ஆகும். இப்போ இருக்கும் நிலையில் யாரும் முதலீடு செய்ய முன்வரலை. அப்பத்தான் இந்த ரீ ஸ்ட்டார்ட் எண்ணம் வந்து இதைக் கண்டெயினர் மாலா ஆக்கிடலாமுன்னு வேலை நடக்க ஆரம்பிச்சு செஞ்சும் முடிச்சுட்டாங்க. முழு மாலையும் இல்லை. மூணுலே ஒரு பாகமுன்னு வச்சுக்கலாம்.
நாவ்வாலு கண்டெய்னர்களைப் பக்கம்பக்கமா அடுக்கி உள்புறம் வெட்டி எடுத்து ஒரு பெரிய அறையா மாற்றி உள் அலங்கார வேலை, தண்ணீர், மின்சார இணைப்புகள் எல்லாம் கொடுத்து, மாடி வேணுமுன்னா இன்னொரு கண்டெயினரை அதன் தலையில் ஏத்தின்னு இப்ப 61 கண்டெயினர்களை வச்சு பக்காவா ஒரு ஷாப்பிங் ஏரியா உருவாகிருச்சு.
அழிவுக்குப்பின் முதல்முறையா குடும்பம் நகரத்துக்குள்ளே வந்துருக்கோ?
நாலு நாளைக்கு முந்தி சனிக்கிழமை அதுக்குத் திறப்பு விழாவும் ஆச்சு. எங்கேயும் போக இடமில்லாத வெறுப்பில் இருந்த ஊர் மக்கள் கிடைச்ச சான்ஸை விடுவோமா? முதல் நாள் திருவிழா மாதிரி நகர இடமில்லை(யாம்) டிவியில் காமிச்சாங்க.
நாங்க மறுநாள் ஞாயிறு கிளம்பிப்போனோம். ஏவான் நதியின் மறுகரையில் ஒரு பார்க்கிங் கிடைச்சது. பாலத்தைக் கடந்தால் ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரன்ஸ். அதுக்கு நேரெதிரில் சிட்டி மால்.
Ripley's believe it or not vice president (archives and exhibitions) Edward Meyer வந்து பார்த்துட்டு, பாராட்டிப்பேசிட்டு படங்கள் எடுத்துக்கிட்டுப் போனாராம். அடுத்த வருச புத்தகத்துலே கண்டிப்பாப் போடவேண்டிய விஷயமுன்னும் சொல்லிட்டுப் போயிருக்கார். உண்மைதான்..... தலையை உயர்த்திப் பார்க்காதவரை இது கண்டெயினர் என்று நம்புவது கஷ்டம்தான்!
அம்மாவை எதிர்பார்த்து........செல்லங்களுக்கு உள்ளே அனுமதி இல்லை:(
மாலுக்கு நடுவே ட்ராம் பாதைக்கு ரெண்டு பக்கமும் தெற்கு வடக்குன்னு ரெண்டு பகுதியாப் பிரிச்சு கடைகளை உருவாக்கிட்டாங்க. கொஞ்சமா செலக்டட் கடைகள். இங்கிலாந்து பழைய ஸ்டைலில் ஒரு க்ரோஸரி ஷாப் எனக்குப் பிடிச்சது. நம்மது 'தெ மோஸ்ட் இங்லீஷ் ஸிட்டி அவே ஃப்ரம் இங்லாண்ட்' ஆச்சே:-)
ஏற்கெனவே அந்த ஸ்டைலில் இங்கே இருந்த பேலண்டைன் (Ballantynes) என்ற கடையின் ஒரு பகுதியை மட்டும் பெரிய Barn ஸ்டைலில் வச்சுருக்காங்க. அடுக்களைக்கான சின்னச்சின்னக் கருவிகள் மீது எனக்கு மோகம் என்பதால் அதைப் பார்வையிட்டேன். பீன்ஸ் வெட்டும் கருவி சரி. வாழைப்பழம் துண்டு போடும் கருவிதான் ஏமாத்தமாப் போச்சு. பழத்தை ஸ்லைஸ் மட்டும்தான் செய்யுது. நல்லா இருக்கே! அப்போ யார் உரிச்சுக் கொடுப்பாங்களாம்?
இந்தக் கடையின் மறுமுனை சரியா நகர மைய்யத்து சாலையில் இருக்கு. நகரைப் பார்க்க முடியாதபடி மரச்சட்ட வேலிபோட்டு அடைச்சுருக்காங்க. ஆனாலும் நகரம் இப்போ எப்படி இருக்குன்னு பார்க்கும் ஆர்வம் இருக்காதா? அதான்....... உட்கார அமைச்சிருக்கும் மேடையில் ஏறி கண்ணுலே எதாவது படுதான்னு பார்க்குது சனம்.
மரச்சட்ட வேலியின் இன்னொரு பக்கம் எங்க கதீட்ரலைப் பார்த்த மாதிரி இருக்கு, அந்த சட்டங்களுக்கிடையில் உள்ள இடுக்குகளில் கண்ணை வச்சுப் பார்த்தால்.................. இடிஞ்சு விழுந்த கோவில்................... அதென்னவோ ஒவ்வொரு முறை கதீட்ரலை நினைச்சாலும் பார்த்தாலும் அடிவயத்தில் இருந்து ஒரு துக்கம் கிளம்பி பந்து போல் நெஞ்சை அடைச்சு.................... என்னதான் அடக்கினாலும் பீறிவரும் கேவலையும் பெருகி வரும் கண்ணீரையும் அடக்கவே முடிவதில்லை:(
எனக்கே இப்படி இருந்தால் 'சம்பவம்' நடந்த சமயம் ஊரில் இருந்த மக்களுக்கு எப்படி இருந்துருக்கும்? கடவுளே..... கண்ணுக்கு முன்னால் ஒரு நகரம் அழிஞ்சு கிடப்பதைப் பார்க்கும்படி ஆச்சே............. மற்ற பயணங்களில் எதாவது அழிவுகள் நடந்த இடங்களைப் பார்க்கும்போது 'ஐயோ' என்ற ஒற்றைச் சொல்லுடன் கடந்து போயிருப்போம். இடாலி பொம்பெய் (Pompeii) அழிவுகளைப் பார்த்தது நினைவில் வந்து போச்சு.
எங்க நகரசபை, மக்களுடைய மனசைப் புரிஞ்சுக்கிட்டு இடிபாடுகளை அகற்றவும் பழுதான கட்டிடங்களை இடிச்சு எடுக்கவும் வெளிநாட்டு மக்களை ஏற்பாடு செஞ்சுருக்கு. எந்த விதமான எமோஷனல் அட்டாச்மெண்டும் இல்லாமல் அவுங்கபாட்டுக்கு வேலைகளை செஞ்சுக்கிட்டே இருக்காங்க.
பண்டிகைக்காலம் வேற சமீபிக்குது. மக்கள் கொஞ்சமாவது உற்சாகமா இருக்கணும். போனதைப்பற்றித் துக்கப்படாமல் வாழ்க்கையை முன்னோக்கிப் பார்க்கணுமுன்னு நகர சபை ஏற்படுத்தி இருக்கும் தாற்காலிக மால் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து இழுக்குமுன்னு நினைக்கிறேன். நகருக்கு வருமானமும் வேண்டித்தானே இருக்கு?
PIN குறிப்பு: எங்க ஐடியாவைத் திருடிட்டாங்கன்னு இங்கிலாந்தில் ஒருவர் புலம்பிக்கிட்டு இருக்காருன்னு ஒருநாள் தொலைக்காட்சியில் காமிச்சாங்க. மெய்யாலுமா??????
Posted by துளசி கோபால் at 11/02/2011 02:09:00 PM 28 comments
Labels: அனுபவம்