Friday, June 30, 2006

பிடித்த சண்டைக் காட்சிகள்

சினிமாலே பாட்டுங்களுக்கு எப்படி மண்டையை உடைச்சுக்கிட்டு( டான்ஸ் ஆடறப்பஏன் மண்டையை உடைச்சுக்கணும்னு கேக்காதீங்க. யோசிக்கறதைச் சும்மா அப்படிச் சொல்ற வழக்கம்!)மூவ், ஸ்டெப்ஸ் எல்லாம் சரியா தீர்மானிச்சுச் செய்ய நடனக்கலைஞர்கள் எவ்வளோ கஷ்டம் எடுத்துக்கறாங்க. இதுக்குக் கொஞ்சமும் குறைவில்லாம, இன்னும் சொல்லப்போனா இதுக்கும் மேலேயே யோசிக்கணும் சண்டைக்காட்சிகளை 'கம்போஸ்' செய்யறதுக்கு.


நடனத்துலே உயிருக்கு ஆபத்துன்னு ஒண்ணும் இல்லீங்களே. ஆனா சில சண்டைக்காட்சிகளில் கரணம் தப்புனா மரணம்தான். சமீபத்துலே ஒகேனக்கல்லேகூட ஒரு சண்டைக் காட்சிலே ஒருஉயிர் இழப்பு ஏற்பட்டுப் போச்சு. மலையாள நடிகர் ஜெயன் இப்படித்தான் ஒரு காட்சியிலே நடிச்சப்ப எக்குத்தப்பாப்போய் இறந்துட்டார்.

பெரிய நடிகர்கள்ன்னா சுண்டுவிரல்லே சின்ன அடிப்பட்டாலும் 'மயிரிழையில் உயிர் தப்பினார்'னுசெய்திகள் வந்துரும். ஆனா, இந்தச் சண்டைக்காட்சிகளிலே நடிக்கிற துணை நடிகர்களுக்கு எவ்வளோ ஆபத்துன்றதும், அடிகிடி பட்டுட்டா எப்படி அதுக்கு முக்கியத்துவம் இல்லாமப் போயிருதுன்றதும், சில சமயம் அவுங்க மீண்டும் தொழிலுக்கே வரமுடியாத நிலை உண்டாகி வாழ்க்கையிலெ எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்றதும் வெளியெ தெரியாமயேப் போயிருது.


நம்ம ஆஸாத் முந்தி மரத்தடியிலே இந்த சண்டைக்காட்சிகள் அமைக்கிற ஸ்டண்ட் வீரர்களைப்பத்தி எழுதி இருந்தார். அதுக்கப்புறம்தாம் இந்தக் காட்சிகளைக் கொஞ்சம் கவனிச்சுப் பார்க்கஆரம்பிச்சேன். ஆனாலும் பறந்து பறந்து அடிக்கிற சண்டைகள் எல்லாம் விருப்பமே கிடையாது.கொஞ்சம் கூட ரியலிஸ்டிக்கா இல்லாம ச்சும்மாக் கையைத் தூக்குனவுடனே நாலுபேர் நாலுபக்கம் பறக்கறது எல்லாம் 'நம்ம கையிலே ரிமோட்' இருக்கற வசதியைப் பாராட்டும்படி ஆச்சு.

நம்ம தோழி ஒருத்தர் இருக்காங்க. அவுங்களுக்கும் அவுங்க வீட்டுக்காரருக்கும் சண்டைக் காட்சிகள்ன்னா வெல்லம். ரிமோட்? நோ.....

எனக்குப் பிடிச்சது எது?

கொஞ்சம் நகைச்சுவையோட இருக்கற காட்சிகள். இதுவரை நான் ரசிச்சுப் பார்த்தது,அதாவது மனசுலெ நிக்கும்படியான காட்சிகள்ன்னா 'காக்கிச் சட்டை'யிலே கமல், ஒரு போஸ்டர் ஒட்டற பையனோட ச்சின்ன ஏணியை வச்சுக்கிட்டுப் போடற சண்டை. தேவர் மகன்லே வந்த 'சாந்துப்பொட்டு' பாட்டோடுவர்ற சிலம்பம், 'வெற்றிவிழா'வில் வர்றதுன்னு சிலதைச் சொல்லலாம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேஸ்ட். இல்லீங்களா?

உங்களுக்குப் பிடிச்ச சண்டைக் காட்சிகள் எதுன்னு சொல்லுங்களேன்.

Thursday, June 29, 2006

விக்ரம் தர்மா

இந்தப்பேர் அநேகமா சினிமாப் பார்க்கறவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும் தானே?'ஸ்டண்ட் மாஸ்டர்'


இவர் மாரடைப்பில் காலமானதாக இன்னிக்கு ஒரு நியூஸ் வந்திருக்கு. வயசு 50.


'டிஷ்யூம்' படம் பார்த்ததில் இருந்து 'ஸ்டண்ட் மாஸ்டர்'ன்னா எவ்வளோ ரிஸ்க் இவுங்க வேலையிலேன்னு மனசு நினைக்கத் தொடங்கி இருக்கு.


அவர் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

லவ்வர்ஸ்

மாதவனும் ஜோதிகாவும் இருக்காங்கன்னு டைட்டில் பார்த்தப்பவே அட, நாம பார்க்காத படமாச்சேன்னு நினைச்சேன்.


கம்ப்யூட்டர் காலத்துலே 'அறம் செய்ய விரும்பு'ன்னு சொல்லித் தர்ற மாதவனின் அப்பா(வாம்)


வேக்குவம் க்ளீனர் விக்கற சேல்ஸ் மேன் வேலை மாதவனுக்கு. ஒரு வீட்டுலேவாடகைக்குக் குடி போறார். வீட்டு உரிமையாளர் செளகார் ஜானகி.
அவுங்களுக்கு கம்ப்யூட்டர் ஹோம்வொர்க் செஞ்சு கொடுக்கறது ஜோதிகா. பீட்ஸாபார்லர்லே பார்ட் டைம் வேலை. கம்ப்யூட்டர் படிச்சுட்டு அமெரிக்கா போகக் காத்திருக்கற பொண்ணு.


பணக்கார அப்பாவான நாஸர், அவர் பொண்ணு ஷோபனா, பேரன் ஒரு குட்டிப் பையன்.நாஸரோட மருமகன் கே.எஸ். ரவிகுமார்( டைரக்டர் ரவிகுமார்தான்) டிவோர்ஸ் கேஸ் நடந்துக்கிட்டு இருக்கு ஷோபனாவுக்கும் ரவிக்கும்.


செளகார் வீட்டுலே அவுங்க வயசுப் பாட்டிங்க பட்டாளம்.
சினிமா மேலே இருக்கற ஆசையாலே குறும்படம் எடுத்துக்கிட்டு, பூனா பிலிம் இன்ஸ்ட்டிட்யூட்லே டீச்சரா இருந்த ஒருத்தர். செஸ் பிரியர். மாதவனும் செஸ்லே கில்லாடி(யாம்)


இப்படி வித்தியாசமான கூட்டத்தைப் பார்த்தவுடன் நல்ல படம் மாட்டியிருக்குன்னு ஏகப்பட்ட குஷி.


முதல் பாதிவரை பலே பேஷ் பேஷ்......அதுக்கப்புறம் ஒரே சொதப்பல். மாதவன், மும்பை தாதாவாம்! அங்கே ஒரு பொண்ணைக்கல்யாணவீட்டுலே பார்த்துட்டு ஒரே லவ்வாம். அந்தப் பொண்ணு ரொம்ப சுமார். அதெயெல்லாம் நாம கண்டுக்கக்கூடாது, இல்லே?

ஜோதிகா அப்பாவுக்குச் சின்ன வீடு இருந்துருக்காம். அந்த 'வீட்டையே' விக்கறாங்களாம்.குழந்தையைக் கடத்தறது, ஹார்ட் அட்டாக் இப்படி இன்னும் சில சில்லரை சமாச்சாரம் வேற.

மின்னலே படத்துலே வர்றதுபோல நாயகி மழையிலே கார்லே இருந்து இறங்கி ஆடுது.

மாதவனோட ப்ளாஷ்பேக் சொல்றதுக்கு மும்பையிலே இருந்து வர்ற சங்காதி......

தலைவாசல் விஜய்- போலீஸ் இன்ஸ்பெக்டர்( சொந்தமா யூனிபாரம் தச்சு வச்சுக்கிட்டார் போல)

நல்ல நடிகர்களை வச்சுக்கிட்டு படத்தை எப்படி வேஸ்ட் செய்யணுமுன்னு சொல்லித்தந்திருக்காங்க.

பேசாம முதல் பாதியை மட்டும் பார்த்துட்டு, நம்மளே ஒரு கதையை மனசுலே முடிச்சு வச்சுருக்கலாம்.

ரொம்பப் பழைய படமோன்னு நினைச்சா.......

சென்னையிலே வந்த சுநாமி..... இப்படி ஒரு வசனம்.

காதல் படத்துலே வந்த மெக்கானிக்..... இப்படி ஒரு வசனம்

படம் வந்த(???) காலக்கட்டத்தை இப்படிச் சரித்திரப்பூர்வம் ஆராயணுமா?


ஹூம்.... விதி யாரை விட்டது?

Wednesday, June 28, 2006

நியூஸிலாந்து பகுதி 48

தில்லானா மோகனாம்பாள் படத்துலே இப்படி ஒரு வசனம் வரும். மனோரமா நடனம் ஆடத் தயாராகிக்கோயிலுக்குப் போய்க்கிட்டு இருப்பாங்க. அப்ப வில்லன் சொல்வார், 'அங்கே கோயில்லே திருவாரூர் மோகனாங்கிநடனம் இருக்கு. உன் ஆட்டம் அங்கே செல்லாது'ன்னு."அதுக்கென்ன? நான் ஒரு ஓரமா ஆடிக்கிட்டுப் போறேன். அவுங்களுக்கு ஒரு கூட்டமுன்னா எனக்கும் ஒரு கூட்டம்இருக்காதா?"ன்னு! அதே கதைதான் உலகம் பூராவும்.


பைத்தியத்தைச் சுத்திப் பத்துப்பேர்னு சொல்றது நினைவு இருக்கா. இது பைத்தியத்துக்கு மட்டுமில்லை.எது சொன்னாலும் அதுக்கும் சில பேர் இருப்பாங்கதான், இல்லையா?


புது மதத்துக்கும் கூட்டம் சேர்ந்துச்சு. 1000க்கும் மேலே இருக்காங்க. இந்தக் கோயில் இருக்கற இடம்வேற ரொம்ப தூரத்துலே ஒரு மலைமேலே இருந்துச்சுல்லையா, அதுனாலே அங்கே போன வெள்ளைக்காரங்க ஒண்ணு ரெண்டுபேர்தான்.


எல்லாச் சாமியாரையும்போல நம்ம ருஆ வைப் பத்தியும் பயங்கரமான கதைகள் வந்துச்சு. இதைக் கேட்ட வெள்ளைக்காரங்க யாரும் இந்தப் பக்கம் தலைவச்சுப் படுக்கலை. கதை கட்டிவிடறதும் பரவலா இருக்கற மனுஷ சுபாவம்தான் போல. தமிழ்நாட்டுலே 'சாமியார்' கதைகளை எவ்வளோ கேட்டுருக்கோம்.


அப்பப் பார்த்து உலக மகா யுத்தம் வந்துச்சு. முதலாம் யுத்தம். அப்ப, ருஆ சொல்லிட்டார்,'நீங்க யாரும் சண்டைபோடப் போக வேணாம். இங்கே நிலத்துக்காக நாம் போட்ட சண்டையே போதும். இனி நமக்குச் சண்டை ன்னு ஒண்ணும் கிடையாது. அந்தக் காலமெல்லாம் போச்சு'ன்னார்.


இதைக் கேள்விப்பட்ட வெள்ளையர்கள், 'ருஆ , ஜெர்மனிக்கு ஆதரவாப் பேசறார். இவர் நம்ம எதிரிதான்'னு வதந்தி கிளப்பி விட்டாங்க. இவரைப் பிடிக்க போலீஸ்படை வந்துச்சு. 70 போலீஸ் வீரர்கள் வந்தாங்களாம்.இது நடந்தது மார்ச் 1916.


ருஆ வுக்கு ரெண்டு மகன்கள் இருந்தாங்க. ஒருத்தர் ஃபாட்டு, ஒருத்தர் டோகொ ( Whatu & Toko)


போலீஸ், இவரைக் கைது செஞ்சப்ப, துப்பாக்கி வெடிச்ச சத்தம் கேட்டுச்சு. யார் யாரைச் சுட்டாங்கன்னு இதுவரைக்கும் தெரியாது. ஒரே மர்மம். ஆனா வெடிச் சத்தம் கேட்டதும் டோகோ தன்னுடைய துப்பாக்கியை வெளியே எடுத்து தடதடன்னு நாலு போலீஸை சுட்டுட்டார். மத்த போலீஸ் படை இவரை வளைச்சுச் சுட்டுக் கொன்னாங்க. இந்த துப்பாக்கிச் சண்டை ஓய்ஞ்சப்ப ருஆ, ஃபாட்டு, இன்னும் நாலுபேர்னு ஆறு ஆட்களைக் கைது செஞ்சாங்க.


ருஆ மேலே தேசத்துரோகம், ராஜத்துரோகம் குற்றம் சுமத்துனாங்க. கூடவே 'ஆ.. போனமாசம் 12 தேதி கைது செய்ய வந்தப்ப ஆள் கிடைக்கலையே'ன்னும் ஒரு 'குற்றம் சுமத்துனாங்க. இந்த வழக்கு 47 நாள் நடந்துச்சாம்.ஒண்ணரை வருஷம் கடுங்காவல். அப்புறம் ஒரு வருஷம் கடின உடல் உழைப்புன்னு தண்டனை கொடுத்தாச்சு.மக்கள் சிலருக்கு இது ரொம்ப அநியாயமாப் பட்டுச்சு. எட்டு ஜூரர்கள், இந்த தண்டனையே ரொம்ப அதிகமுன்னு மகஜர்கூட கொடுத்தாங்களாம்.


கேஸ் நடந்தப்ப ஆன செலவுக்கு இவரோட மதத்து மக்கள் எஞ்சி இருந்த அவுங்க நிலத்தை விக்கும்படி ஆச்சு.அரசாங்கம் ஒரு உதவியும் செய்யலை. 1918லே இவர் விடுதலை ஆகி வந்து பார்த்தா, மாஉங்காபொஹடு Maungapohatu செட்டில்மெண்ட்டுலே இருந்து ரொம்பப்பேர் வெளியேறி இருந்தாங்க. ஒரு சிலர் மட்டுமே சாமியார்க்கூட இருந்தாங்களாம். பதினெட்டு வருசம் கழிச்சு 1937லே சாமியாரும் செத்துப்போனார்.


இவர் ஜெயிலிலே இருந்தப்ப, இன்னொரு மதத்தலைவரும் புதுசா முளைச்சார். இவர் சாதாரணக் குடியானவர்தான்.இவருக்கு ஒரு அற்புதக் காட்சி தெரிஞ்சதாம், 1918 நவம்பர் 8ந் தேதி. 'மவோரிகளை ஒன்று சேர்'னு ஒரு அசரீரிவேறகேட்டுச்சாம். விஷயம் வெளியே பரவுச்சு. ஜனங்கள் இவரைத்தேடி இவரோட பண்ணைக்கு வந்தாங்க. கூட்டம்சேர ஆரம்பிச்சது. 1920 கிறிஸ்மஸ் பண்டிகையன்னிக்கு இவர் 'பேச்சை' கேக்க சுமார் மூவாயிரம் பேர் கூடுனாங்களாம்.


இவரோட பேர் டஹுபொடிகி வீரெமு ரடனா (Tahupotiki Wiremu Ratana). இவர் ஒரு இடத்துலே உக்காந்துக்காம,நாடெங்கும் சுற்றுப்பயணம் போனார். எல்லா மவோரி குழுக்களையும் சேர்த்துக்க ஆரம்பிச்சார். எண்ணி அஞ்சே வருசத்துலே 'ரடனா சர்ச்' உருவாச்சு.


மவோரிகளோட நிலையை அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்லறதுக்கு மனச்சோர்வடையாத நல்ல திடமான ஆட்கள், சட்டசபையிலே இருக்கணுமுன்னு சொல்லி, ரடனா லேபர் கட்சிக்கு ஆதரவு தந்தார். 1928லே நாலு பேர் இவர் சார்பாதேர்தல்லே நின்னு ஜெயிச்சாங்க. அதுக்கப்புறமும் மவோரிகள் ஒண்ணா இணைஞ்சு செயல்படணுமுன்னு சொல்லிக்கிட்டேஇருந்தார். ஒற்றுமைதான் பலமுன்னு சொன்னது மக்களுக்குப் போச்சு. வெள்ளையர் உலகத்துலே எப்படித் தப்பிப் பிழைச்சுக்கறதுன்னு மவோரிகளும் புரிஞ்சுக்கிட்டாங்க. இவரும் 1939லே உலக வாழ்வை விட்டுப் போனார்.


இதுக்கிடையிலே இன்னொரு தலைமையும் தோன்றி வேற வழியில் மவோரி முன்னேற்றத்துக்குப் பாடு பட்டது.இளவரசி பூஆ. Princess Te Puea Herangi of Waikato


மவோரிகள் தங்களுக்கு ஒரு அரசரைத் தேர்ந்தெடுத்தாங்கன்னு முந்தி படிச்சோம் பாருங்க. அந்த வம்சாவளியிலேவந்த அரசர் King Tawhiao வோட பேத்தி இவுங்க. இவுங்க அம்மாத்தான் இந்த அரசரோட மூத்த பொண்ணு. பட்டத்துஇளவரசி. அம்மா சாகறப்ப இந்த இளவரசி பூஆவுக்கு 15 வயசுதானாம். ஆனாலும் தன்னுடைய தாயாரை ஆதரிச்சகுடிமக்கள் நலனுக்காக இவுங்க பொறுப்பேத்துக்கிட்டாங்களாம். இவுங்க இருந்த ஊர் வைக்காட்டோ. இந்தப் பகுதிமக்களுக்கு வெள்ளைக்காரங்கன்னா ஒரே எரிச்சல், கோவம். சண்டைபோட்டு நம்ம நிலத்தை எல்லாம் பிடுங்குன அக்கிரமக்காரர்கள் இவுங்க என்ற எண்ணம் ஆழமா வேரூன்றி இருந்துச்சு. 'வெள்ளைக்காரங்க சங்காத்தமே கூடாது.அவுங்க நடத்துற ஆஸ்பத்திரிக்குப் போகக்கூடாது. அவுங்க பள்ளிக்கூடத்துக்கு நம்ம புள்ளைங்களை அனுப்பக்கூடாது.அங்கே போனா வெள்ளைக்கார மொழிதான் பேசணும். அப்ப நம்ம மவோரி மொழி என்னாறது? நம்மை அழிச்ச மாதிரி நம்ம மொழியையும் இவுங்க அழிச்சுருவாங்க' ன்னு இருந்தாங்க.


இவுங்களுக்கு போறாத காலம் அப்ப. பெரிய அம்மை நோய் பரவுச்சு. எக்கச்சக்கமான மவோரிங்க செத்தாங்க. அந்தக் கிராமத்துலே மவோரிகள் எண்ணிக்கை கணிசமாக் கொறைஞ்சு போச்சு. 'பட்ட காலிலே படும்' பழமொழி பொய்யாகுமா?சில வருசங்கழிச்சு 'ஸ்பானிஷ் ப்ளூ' காய்ச்சல் கடுமையா வந்துச்சு. அந்த கிராமத்துலே 197 பேருக்குக் கடுங்காய்ச்சல்.காய்ச்சல் வராம தப்பிச்சவங்களும் இருந்தாங்க. வெறும் 3 பேர். 200 பேர் இருக்கற கிராமம் முழுசும் சுகமில்லாமக்கிடக்கு. அரசாங்கம், 'யாருக்கு வந்த விருந்தோ?'ன்னு விட்டேத்தியா இருந்துச்சு.


ரொம்ப அக்கிரமம்.

Monday, June 26, 2006

நியூஸிலாந்து பகுதி 47இந்த மவோரி கிராமங்களும் ரொம்பச் சின்னதுதான். 50 பேர் ஒரு கிராமத்துலே இருந்தாலே அதிகம். மண்ணு,மரப்பட்டைன்னு வச்சுக் கட்டிக்கிட்ட ச்சின்னச்சின்ன வீடுங்கதான். அடுக்களை எப்பவும் வீட்டுக்கு வெளியில்.கழிப்பறைகள் எல்லாம் கிடையாது. அக்கம்பக்கத்துலே வாய்க்கால் ஓடுனா அதுலே இருந்து குடிக்கத் தண்ணீர் எடுத்துக்குவாங்க. ஃப்ளாக்ஸ் செடிகளைத் தேடிப்போய் சேகரிச்சுப் பாய் முடையறது, கவுரி மரப் பிசினைச் சேகரிச்சு பெயிண்ட் கம்பெனிக்கு விக்கறதுன்னு அலைஞ்சாங்க. வேற வழி இல்லாமப் போனப்ப வேலை தேடி, வெள்ளைக்காரங்க நடத்துற பண்ணைகளில் சேர்ந்தாங்க கொஞ்சம் பேர். சிலர் டவுனுக்குப் போய் அங்கே எதாவது வேலை தேடிக்கிட்டு அங்கேயே இருந்துட்டாங்க. வயிறுன்னு ஒண்ணு இருக்குல்லையா?பிழைக்கணுமே!


அதுவரை ஆரோக்கியமா இருந்தவங்களுக்கு, 'வெள்ளைக்கார நோய்கள்' பரவ ஆரம்பிச்சது. தட்டம்மை, கக்குவான் இருமல், ப்ளூ காய்ச்சல்ன்னு வந்து நிறைய மவோரிங்க சாக ஆரம்பிச்சாங்க.


தன்னோட இன மக்கள் இப்படி இருக்கறதைப் பார்த்து மனசு வேதனைப்பட்டார் ஒருத்தர். இவர் பேர் Apirana Ngata. இந்த இனத்து முதல் பட்டதாரி. கேண்டர்பரியிலே பி.ஏ. முடிச்சுட்டு, ஆக்லாந்துக்குப் போய் வக்கீலுக்குப் படிச்சவர்.தம்மக்களுக்கு சேவை செய்யணுமுன்னு மவோரிங்க நிறைய இருக்கற பகுதியிலே இருந்து பார்லிமெண்டுக்கு வந்தவர்.


இன்னும் ஒருத்தரும் இதைப்போலவே நினைச்சார். இவர் ஒரு மருத்துவர். 'பீட்டர் பக்' ன்னு பேர் வச்சுக்கிட்டவர்.இவரோட மவோரிப் பேர் Te Rangi Hiroa. 'நேடிவ் ஹெல்த் ஆஃபீஸரா' வேலை செஞ்சவர். இவரும் இவரைப்போலவே வேலை செஞ்சுக்கிட்டு இருந்த இன்னோரு மவோரி டாக்டரான Maui Pomare வும் பார்லிமெண்டுக்குள்ளெவந்தாங்க. மவோரிகள் நிறைஞ்ச இடத்துலே கிழக்கு, வடக்கு, மேற்குன்னு தொகுதிகளிலே இருந்து வந்தவுங்க.


அப்பதான் ஆரம்பிச்சுப் பரவிக்கிட்டு இருந்த யங் மவோரி கட்சி( Young Maori Party)யைச் சேர்ந்தவுங்க இவுங்க மூணு பேரும். தங்களுடைய கல்வியறிவை வச்சு, தன் இனத்தை எப்படியாவது மேம்படுத்தணுங்கற வெறி இவுங்களுக்கு இருந்துச்சு. இல்லாட்டி இவ்வளோ படிச்சு என்ன பயன்?னு நினைச்சாங்க.


மொதல்லே, இந்த வெள்ளைக்காரங்களைப் பார்த்து தங்களுடைய வாழ்க்கை முறைகளைக் கொஞ்சம் மாத்திக்கணுமுன்னு தம் மக்களுக்குச் சொல்லி கொஞ்சம் மாத்துனாங்க. ஆனா அந்தக் காலக்கட்டத்துலே இது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு.ஏற்கெனவே சொன்னபடி நிலம் இல்லை, வேலை வெட்டி இல்லை, காசு இல்லை இப்படி நிறைய இல்லைகள்.அரசாங்கமும் ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வச்சது. வெள்ளைக்காரப் பண்ணை முதலாளிகளுக்கு அரசாங்கக் கடன் உதவி. வெள்ளைக்காரர்கள் இருக்கும் இடத்துலே புதுசுபுதுசா பள்ளிக்கூடம்,ஆஸ்பத்திரி. மவோரிகளுக்கு இது எதுவுமே இல்லை. தப்பித்தவறி புள்ளைங்களைப் படிக்க வைக்கலாமுன்னாபுத்தகம் வாங்கறதுக்கோ, உடம்பு சரியில்லாத புள்ளைகளை கவனிக்கக்கொள்ள டாக்டருங்களைத் தேடிப்போறதுக்கோ போதுமான வசதியும் இல்லை.


ஒரு கட்டத்துலே, எல்லா நிலச்சண்டைகளும் ஓய்ஞ்சபிறகு, 'வெளி ஆளுங்க பேச்சை இனியும் கேக்கக்கூடாது.நம்ம இனம்தான் நமக்கு உதவும் அதுனாலே நம்ம இனத் தலைவர்களே மேல்'ன்னு முடிவு செஞ்சாங்க. அப்ப இருந்தசில மவோரித் தலைவர்கள் சொந்தமா நமக்குன்னு ஒரு மதம் இருக்கணுமுன்னு தீர்மானிச்சு அதையும் செஞ்சாங்க.ஜனங்களுக்கும், அவுங்க மூதாதையர்களோட ஆவிகள் துணையும் கடவுள் துணையும் இருக்குன்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு.புது மதம் ஆரம்பிச்சது. ஸ்தாபகர் டெ கூட்டி ரிகிராங்கி( Te Kooti Rikirangi)
'யூதர்களுடைய பழைய ஏற்பாடு' போல இந்த மதமும் இப்படிச் சொல்லுச்சு.
" அதிகாரத்துலே இருக்கற மனுஷர்களாலே மவோரிகளின் நிலங்களும் உரிமைகளும் பறிக்கப்பட்டு, ரொம்பக் கேவலமாவும், அநியாயமாவும் மவோரி மக்கள் நடத்தப்பட்டிருக்காங்க.ஆனால் எப்படி யூதர்களைக் கடவுள் காப்பாத்துனாரோ அதே போல கடவுள் மவோரிகளையும் காப்பாத்துவார்.

இதுக்கு முதல் படியா வெள்ளைக்காரர்களை இனி ஒரு போதும் நம்பக்கூடாது"
"எனக்கப்புறம் உங்களை எல்லாம் வழிநடத்த இன்னும் 14 வருசத்துலே இந்த மலைகளிலெ இருந்து ஒரு மனுஷன் வருவார். அவர்தான் புது தீர்க்கதரிசி."னு சொல்லிட்டு டெ கூட்டி ரிகிராங்கி ஒருநாள் மரணமடைஞ்சார்.


ருஆ கெனானா Rua Kenana தான் புதுசா வந்த தீர்க்க தரிசி. இவரும் ஸ்தாபகர் சொன்னமாதிரியே தன் இன மக்களை யூதரோடு ஒப்பிட்டுப் பிரசங்கமெல்லாம் செஞ்சார். இவரைப் பின்பற்றிய Tuhoe ன்ற மவோரி குழுவைச் சேர்ந்த ஜனங்கள், நம்ம தான் அந்தக் காலத்துலெ கஷ்டப்பட்ட இஸ்ரேலி மக்கள் . இனிமே நமக்குன்னு ஒரு பேர் வேணும், அது இதுதான் Nga Iharaira ( the Israelites) அதுக்கப்புறம், இங்கே மாஉங்காபொஹடு Maungapohatu என்ற ஊர்லெ இருக்கற உரவெரா குன்றில் Urewera hills ஒரு கோயில் கட்டுனாங்க. மரத்தாலெயே வட்டமாக் கட்டுன இந்தக் கோயிலுக்கு புது ஜெருசலேம் New Jerusalemனு பெயர் சுட்டுனாங்க.


படங்கள்: அப்போ இருந்த மவோரிகளின் வீடும், புதுசாக் கட்டுன கோயிலும்.

Saturday, June 24, 2006

எவ்ரிடே மனிதர்கள் - 6

எவ்ரிடே மனிதர்கள் 6

Betty- பூனைப் பாட்டி

----------------
" ஹல்லோ டார்லிங். ஹவ் ஆர் யூ ? யூ ஆர் ஸோஓஓஓஓஓஓஓஓஓ ப்யூட்டிஃபுல். ஆர்ன்'ட் யூ?"


ஏதோ முணுப்புச் சத்தம் கேட்டு ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தால், ஒரு வெள்ளைக்காரப் பெண்மணிநம்ம வீட்டு, கேட்டுப் பக்கம் குனிஞ்சு நின்னுக்கிட்டு இருக்காங்க. யார் கிட்டே பேசறாங்கன்னு புரியலை.ஜன்னலை இன்னும் நல்லாத் திறந்து எக்கிப் பார்த்தால்.........

அவுங்க முன்னே நின்னுக்கிட்டு, வாலை செங்குத்தாக் கொடி உயர்த்திக்கிட்டு நிக்குது நம்ம வீட்டுப் பூனை!

ஆஹா.... நம்ம பூனைதான் மத்த ஆட்களைக் கண்டாவே ஓடிருமே. இதென்ன அதிசயம்? வாசக் கதவைத்
திறந்து வெளியே போனேன். 'ஹாய் ஹாய் ' குசலவிசாரிப்பு எல்லாம் முடிஞ்சது. இங்கே பக்கத்துலேதான்
இருக்காங்களாம். கடைக்குப் போறவழியில் நம்ம வீட்டுப் பூனை, நம்ம 'ட்ரைவ் வேயில்' உக்கார்ந்திருந்ததைப்
பார்த்தாங்களாம்.


இப்படி ஆன பரிச்சயம்தான். பெட்டி வீட்டுக்கும், ஷாப்பிங் செண்ட்டருக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.சரியாப் பாதி வழியிலே நம்ம வீடு இருக்கு. நம்மைக் கடந்துதான் போகணும் வரணும்.

பூனைன்னா அசாத்தியப் பிரியமாம். அதனாலே போற வழியிலே எங்கெல்லாம் பூனையைப் பாக்கறாங்களோ,அங்கெல்லாம் ஒரு ஸ்டாப் போட்டுக்கிட்டே போய் வருவாங்களாம். அட.. இது நல்ல ஐடியாவா இருக்கே!


நல்ல ஒல்லியான உருவம். உயரம் ரொம்ப இல்லேன்னாலும், ஒல்லியா இருக்கறதாலேயே கொஞ்சம் கூடுதல்
உயரமாத் தெரியுது. வயசு 72. பெயர் எலிஸபெத். இந்தப் பேரோட சுருக்கம்தான்,'பெட்டி'. ஹூம், என்ன பேர்
இருந்தென்ன? இவுங்களுக்கு எங்க வீட்டுலே வச்ச பேரு 'பூனைப் பாட்டி'.

இளவயசுலே அழகா இருந்திருப்பாங்க.பல்லெல்லாம் வரிசையா ஒண்ணுபோல பளிச்சுன்னு அழகா இருக்கும்.'
பூனைப் பாட்டி, இங்கே அரசாங்கக் குடியிருப்புலே இருக்காங்க. வசதி ரொம்ப இல்லை. எப்பவும் நடந்துதான்'கடைகண்ணிக்குப் போவாங்க. அதுவும் ஒரு நாளைக்கு ஆறேழு தடவை. இந்த நடையே அவுங்களை ரொம்பஃபிட்டா வச்சுருக்கு.வீட்டுக்காரர், அவ்வளவாக உடம்பு சரியில்லாதவராம். வெளியே போகவே அவருக்கு அவ்வளவாப் பிடிக்காதாம்.இத்தனைக்கும் அவருக்கு வயசு 61 தான்.'


தினமும் பலமுறை நம்ம வீட்டுவழியாப் போனாலும். வாரம் ஒரு நாள் மட்டுமே வீட்டுக்குள்ளே வந்து உக்காந்து பேசிட்டுப் போவாங்க. மத்த நாட்களிலே, நான் வாசல் பக்கம் இருந்தா ஒரு அஞ்சு நிமிசம் அங்கேயே நின்னு பேசறதோட சரி.


ஒவ்வொரு வியாழக்கிழமையும் பதினொரு மணிக்கு வருவாங்க. நாங்க உக்கார்ந்து பேச ஆரம்பிச்சவுடனே நம்ம பூனை, (எங்கிருந்துதான் பார்க்குமோ) ஓடிவந்து சபையிலே உக்கார்ந்துக்கும். நான் ஒருக்கா எங்கியோ இந்த பூனைகளைப் பத்திய விவரம் படிச்சது இப்ப ஞாபகம் வருது பாருங்க. பூனைங்க யாரைப் பார்த்து பயமில்லாமல் சிநேக உணர்வைக் காமிக்குதோ, அவுங்களை நாம நம்பலாமாம். நல்லவங்களாத்தான் இருப்பாங்களாம். பூனை ஜோஸியம்?


ஒரு டீ மட்டும் போட்டுக் கொடுப்பேன். கிட்டத்தட்ட மதியம் ஒருமணிவரை இருப்பாங்க. சிலநாள் சமையல் முடிஞ்சிருக்காது. சப்பாத்தி செய்யறதா இருந்தா, அடுக்களையிலே ஒரு நாற்காலியை அவுங்களுக்குப் போட்டுருவேன்.பேசிக்கிட்டே வேலை நடக்கும். சப்பாத்தி சுட்டு எடுக்கறதை ஒரு அதிசயமாப் பாப்பாங்க. ஒரு நாள் சாப்புட்டுப் பார்க்கறீங்களான்னு கேட்டதுக்கு சரின்னாங்க. சப்பாத்தியை மெல்லும் போது,பற்கள் முழுசா அசையற மாதிரி எனக்குத் தோணுச்சு. பழக்கம் இல்லாததாலே பல்லிலே ஒட்டிக்கிட்டதை நாக்கைச் சுழட்டிச் சுழட்டி எடுக்க முயற்சி செஞ்சப்பத்தான் தெரிஞ்சது அந்த 'அழகான பல்வரிசை'களின் ரகசியம்!


இதுவரை, இப்படி இந்திய உணவு எதையுமே சாப்புட்டது இல்லையாம். இது அப்புறம், இட்டிலி, தோசைன்னு கொஞ்சம் விரிவடைஞ்சிருச்சு. சாப்பாடு மட்டுமில்லே, எந்த இந்தியர் வீட்டுக்கும் போனதெ இல்லையாம். அப்ப, இங்கே அவ்வளவா நம்ம ஆட்கள் வராத காலம். நம்ம வீட்டுலெ இருக்கற ஒவ்வொரு பொருளும், முக்கியமா சமையல் பாத்திரங்கள் அவுங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சாம். புட்டுக்குழாய், இட்டிலித்தட்டுன்னு அதிசயங்கள் ஏராளம்.


சிலநாள், எங்க இவர் சீக்கிரமாப் பகல் சாப்பாட்டுக்கு வந்துருவார். அவரோட அவசரம் அவருக்கு. ரெண்டு வார்த்தை அவுங்களோட ஒரு மரியாதைக்குப் பேசிட்டு, நாலுவாய் அள்ளிப் போட்டுக்கிட்டுப் போயிருவார். கையாலே எடுத்துப் பரபரன்னு சாப்புடறதைப் பார்த்தும் அதிசயப்பட்டுப் போவாங்க. 'உன் கணவர் ரொம்ப ஹேண்ட்சம். கவனமா இரு.யாராவது தட்டி எடுத்துக்கப் போறாங்க'ன்னு சொல்றப்ப எனக்குச் சிரிப்பா வரும்.


இந்திய திருமண முறைகள், கூட்டுக் குடும்பம் இப்படி எதாவது விவரம் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. சிலநாட்களிலே முகம் கொஞ்சம் சோகமா இருக்கும். எதிர்வீட்டுப் பெண்மணி, இவுங்களை ரொம்பக் கேவலமாப் பேசுனாங்கன்னு சொல்வாங்க. பூனைப்பாட்டியின் வீட்டுக்காரர் ரே. அவர் பாட்டியைவிட இளைய வயசுன்றதாலே பாட்டியோட காசுக்காக மட்டும் கூடவே இருக்கார்னு சொன்னாங்களாம். அந்தக் குடியிருப்பில் அநேகமா எல்லாருமே அரசாங்க உதவியில் இருக்கறவங்கதான். இங்கே முந்தி இருந்த ஒரு பிரதமர், கணவன் மனைவியில் யாருக்கு 60 வயசானலும் ஓய்வுஎடுத்துக்கலாம். அப்ப ரெண்டு பேருக்கும் அரசாங்கம் ஓய்வு ஊதியம் கொடுக்குமுன்னு ஒரு சட்டம் கொண்டுவந்தார்.அதும்படி, இங்கே ஒரு கார்பெட் செய்யற கம்பெனியிலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்த பெட்டியும், ரேவும் ரிட்டயர்ஆகிட்டாங்க. ரே விரும்பி இருந்தா வேலை செஞ்சிருக்கலாம். ஆனா அவருக்கு உடல்நிலை அவ்வளவா சரியில்லை.


பாட்டிக்கும் இப்ப வயசாயிட்டதாலே, ரே தான் வீட்டுவேலைகள் முடிஞ்சவரை செய்வார். கடைகண்ணிக்குப் போய்வர்ற வேலையைப் பாட்டி எடுத்துக்கிட்டாங்க. சில நாள் பாட்டி வரும்போதே டென்ஷனா வருவாங்க. நான் ஒண்ணும் கேக்கலைன்னாலும் அவுங்களா ஆரம்பிப்பாங்க. 'இன்னிக்கு வெல்ஃபேர் ஆஃபீஸுக்குப் போய் வந்தேன். எதாவது வசதிகளுக்கு உதவி கேட்டா, 'யூ ஆர் ஆல்ரெடி அபவ் த லிமிட்'ன்னு சொல்றாங்க. எது லிமிட்டுன்னே சொல்லமாட்டேங்கறாங்க.இதுமட்டுமில்லை, எப்பப் போனாலும் பார்ட்னர் விவரம் எல்லாம் கேக்கறாங்க. ரே என்ன எனக்குப் பார்ட்னரா? அவர் என்னோட ஹஸ்பெண்ட். இப்பப் புதுசா இந்த 'பார்ட்னர்'னு ஒரு சொல்லை வச்சுக்கிட்டு இருக்காங்க. எனக்கு அது ரொம்பக் கேவலமா இருக்கு.'


"அது என்னவோ இப்ப இந்த லிவிங் டுகெதர் பழக்கம் கூடிப்போச்சுன்னு இப்படி மாத்திட்டாங்க அரசாங்கத்துலே. ஆமாம்.உங்க கல்யாணம் நடந்து எத்தனை வருசமாச்சு?"


"24 வருசம்"

நான் ஒண்ணும் சொல்லாம இருந்தேன். 'என்னை மனநிலை சரியில்லாதவ' ன்னு ஹோம்லே சேர்த்துட்டாங்கன்னு ஆரம்பிச்சதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. ஏன்? எப்படி? யார் சேர்த்துட்டாங்க?


எனக்கு 10 வயசா இருந்தப்பவே, என்னோட அப்பா இறந்துட்டார். அதுக்கப்புறம் அம்மா இன்னொரு கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. எனக்கு அந்த ஆளைப் பிடிக்கலேன்னு சொல்ல முடியாது. ஆனா, என்னன்னு தெரியலை. என்னை ஒரு ஹோம்லே கொண்டு போய் விட்டுட்டாங்க என்னோட அம்மா. அதுக்கப்புறம் என்னைப் பார்க்க யாருமே வரலை.


நான் அங்கேயே இருந்தேன். எனக்கு 30 வயசான பிறகும்கூட அங்கேதான் இருந்தேன். அப்ப ஒருதடவை அஸ்ஸெஸ் செய்யறவங்க வந்து பேசி, உனக்கு மனநிலை எல்லாம் சரியாத்தான் இருக்கு. எப்படி நீ இங்கெ வந்தேன்னே தெரியலை.நீ வெளியே போய் இருக்கறதா இருந்தா இருக்கலாம்னு சொன்னாங்க. நான் எங்கே போறதுன்னு தெரியாம அங்கேயேவேலை செஞ்சுக்கிட்டு சில வருசங்கள் இருந்தேன். அப்புறம் ஒரு இடத்துலே அவுங்களே வேலைக்குச் சேர்த்து விட்டாங்க.


நான்பாட்டுக்கு வேலை செஞ்சுக்கிட்டு ஒரு சின்ன வீட்டுலே இருந்தேன். அப்புறம் வேலை இந்த ஊர்லே கிடைச்சதுன்னுஇங்கே வந்தேன். இங்கேதான் ரேவை சந்திச்சேன். அவரும் நானும் ஒரே இடத்துலே வேலை செஞ்சோம். ரொம்பவருசம் கழிச்சுத்தான் கல்யாணம் செஞ்சுக்கலாமுன்னு தோணுச்சு.

ரேவோட அக்கா ஒருத்தர் இருக்காங்க. அவுங்களோடத்தான் தங்கி இருந்தார். பெருசான்னு சொல்ல முடியாது. பக்கத்துலே ஒரு சர்ச்சுலே சட்டப்படி கல்யாணம் ஆச்சு.


'சரி. கவலைப்படாதீங்க. இப்ப சந்தோஷமா இருக்கீங்கல்லே. அதுதான் முக்கியமு'ன்னு சொன்னேன். கொஞ்ச நேரம் ஏதும் பேசாம ச்சும்மா உக்கார்ந்துக்கிட்டு இருந்தவங்க திடீர்னு,' நீ டான்ஸ் க்குப் போயிருக்கையா?'ன்னு கேட்டது,முதல்லெ எனக்கு விளங்கலை.


'இளவயசுலே நடக்குற ஒருவித வேடிக்கை விநோத அனுபவங்களும் இல்லாமயே என் இளவயசு போயிருச்சு.'


எல்லோருக்கும் இப்படி எதாவது ஒரு சோகம் அடிமனசுலே பதிஞ்சிருக்கோ? ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் இப்படித்தான் 'சட்'ன்னு வெளியே வருமோ?


கிறிஸ்மஸ் வரப்போகுதுன்னாலே பாட்டிக்கு இன்னொரு விதமான கவலை. நவம்பர் தொடக்கத்துலேயே ஆரம்பிச்சிரும்.பண்டிகை கொண்டாட நாத்தனார் வீட்டுக்குப் போகணும். அது ஒண்ணுன்னா, இன்னொண்ணு நாத்தனார் வீடு இருக்கறது வெலிங்டன்லே. பாட்டிக்குப் பறக்க பயம். வெறும் 35 நிமிஷ ஃப்ளைட்தான். கண்ணை மூடிக்கிட்டுத்தான் எப்பவும் ப்ளேன்லே உக்கார்ந்திருப்பேன்னு சொல்வாங்க. வருசாவருசம் இதே கவலைதான். ஆனா இந்தக் கவலைக்கெல்லாம்ஒரு முடிவு வந்துச்சு.


சில்வியா ( நாத்தனார்) வீட்டுக்கே போயிரலாம்னு ரே சொல்லிக்கிட்டு இருந்தாராம். பாட்டிக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.தள்ளிப் போட்டுக்கிட்டே வந்திருக்காங்க. கடைசியில் கணவர் விருப்பத்துக்கு சரின்னு சொல்லிட்டாங்க.


போயிட்டுவரேன்னு சொல்லிட்டுப் போகவந்த அன்னிக்கு, நம்ம பூனையைத் தடவிக்கிட்டே ஒரே அழுகை. இந்த வயசுலே நாத்தனார்கிட்டே பயப்படணுமுன்னா? அதுவும் இங்கே, இந்த நாட்டிலே?


எனக்கும்தான் வருத்தமா இருந்துச்சு. ஒண்ணா ரெண்டா பதிநாலு வருசப் பழக்கமாச்சே.
------------

அடுத்தவாரம்: நாயினம்மா

Friday, June 23, 2006

நியூஸிலாந்து பகுதி 46

தேர்தல் திருவிழா ஆரம்பமாச்சு.

தொழிற்சங்கமும் அப்பத் தேர்தலுக்கு நின்னுச்சு.

அவுங்களுக்கு?

அதே ஆப்புதான். லிபரல் கட்சிக்கு ஓட்டுப் போட்டு உள்ளுக்குள்ளே இருந்த எதிர்ப்பைக் காமிச்சாங்க. மெஜாரிட்டி யாருக்கும் இல்லை. அப்பத்தான் ஒரு வேடிக்கை நடந்துச்சு. மொத்தம் 80 சீட்டுங்க. இதுலே லிபரல் கட்சி 33 இடமும். ரீஃபார்ம் 41 ம் ஜெயிச்சாங்க. சோஷலிஸ்ட் கட்சி Socialist Party, சோஷியல் டெமாக்ரேடிவ் கட்சி Social Democratic Partyன்னு மத்த கட்சிங்க ஒரு 6 ஸீட். பாதிக்கு மேலெ இருந்தாலும் , (அதான் 41 இருக்கே)லிபரல் பார்ட்டியும், ரீஃபார்ம் பார்ட்டியும் சேர்ந்து கூட்டு மந்திரிசபை அமைச்சாங்க. இந்த நாட்டின் முதல் கூட்டு மந்திரி சபை. (இன்னிக்கு இருக்கற நிலமையிலே திமுகவும், அதிமுகவும் கூட்டு சேர்ந்தா எப்படி இருக்கும் ?)
என்னடா கதை இப்படி ஆயிருச்சேன்னு பார்த்தா, ரெண்டு வருசத்துலே ஏன்னா லேபர் கட்சின்னு ஒண்ணு புதுசா ஆரம்பிச்சது 1916 ல். அடுத்து வந்த 5 தேர்தல்களிலெ இந்தக் கூட்டு அப்படியே இருந்துச்சு. ஆனா 1935 வருசத் தேர்தல் வந்துச்சு பாருங்க. எல்லாம் தலைகீழா மாறிப்போச்சு. இத ரெண்டு கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தமே 17 சீட்தான். 53 இடம் பிடிச்சு தொழிற்கட்சி லேபர் அரசாங்கம் முதல் முதலா நாட்டின் ஆட்சியைப் பிடிச்சது.
இதுவரை ஆண்ட லிபரலும் ரீபார்மும் என்னடா செய்யலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தாங்க. மூனு வருசம்யோசனை. இனித் தனித்தனியா இருந்து ஒண்ணுத்துக்கும் ஆகாதுன்னு 1938 லே இந்த ரெண்டு கட்சிகளும் ஒண்ணாவே சேர்ந்து நேஷனல் கட்சியா பேரை மாத்திக்கிட்டாங்க.


நம்மூர்லே பார்த்துருப்போமே, கட்சி ரெண்டா ஒடைஞ்சுருன்னா, பிரிஞ்சு போனவங்களைத் தாய்க் கட்சியிலேஇருந்து போனவுங்கன்னு சொல்வாங்க. அப்புறம் அதுலே இருக்கறவங்களுக்குத் திருப்தி இல்லேன்னா இன்னும்அதுலே இருந்தும் பிரிஞ்சுபோய் இன்னொரு பேர்லெ புதுக் கட்சி...... இப்படி. ஆனா, இங்கே இதெல்லாம் உல்ட்டாவாஅதான் தலைகீழா நடந்துச்சு.

ரெண்டு பெரிய கட்சிகள் ஒண்ணு சேர்ந்துக்கிச்சு.

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.

ஒரு பக்கம் இப்படி இருக்குன்னா அடுத்த பக்கம் பொதுமக்கள் நிலமை எப்படி இருந்துச்சு?

குடும்பங்கள் பெருசா வளர்ந்துச்சு. ஒரு குடும்பமுன்னா ஆறேழு பிள்ளைகுட்டிங்க. சுகாதாரக்கேடு இருந்ததாலேயும், சுத்தமான பழக்கவழக்கம் இல்லாத்தாலேயும் சீக்குங்கள் பரவுச்சு. ஆயிரம்பிள்ளைங்க பிறந்தால், அதுகளுக்கு மொத வயசு முடியறதுக்குள்ளே அம்பத்தோரு பிள்ளைங்க மண்டையைப் போட்டுருதுங்க. அப்ப டாக்டரா இருந்த ப்ரெட்ரிக் ட்ரூபி கிங் Frederick Truby King என்றவர், தன்னுடைய மனைவியைத் துணைக்குச் சேர்த்துக்கிட்டு1907லே 'ப்ளங்கெட் சொசைட்டி' Plunket Society ன்னு ஒண்ணு ஆரம்பிச்சார்.பெண்கள், குழந்தைகள் ஆரோக்கியத்தைக் கவனிச்சு, அதுக்குண்டான சேவைகள் செய்யறதுக்குன்னு. தாய்சேய் நலன். இந்தஅமைப்பைச் சேந்த நர்சம்மாக்கள் வீடுவீடாப்போய் அம்மாக்களைப் பார்த்து பிள்ளைகளைச் சுத்தமாவச்சுக்கறது, எந்த மாதிரிஆகாரம் கொடுக்கணும், உடம்பு சரியில்லைன்னா என்ன செய்யணும்ன்னு சொல்லிக் கொடுத்தாங்க.


மூணுவருசம் கழிச்சு 1912லே, பள்ளிக்கூடப் பசங்களும் ஆரோக்கியமா இருக்காங்களான்னு பார்க்கறதுக்காக அரசாங்கத்தின் சுகாதார இலாக்கா மருத்துவ சோதனைகளைப் பள்ளிக்கூடத்துலேயே செய்ய ஆரம்பிச்சது.
அப்ப இங்கே டாக்டர்கள் ரொம்பக் குறைவா இருந்தாங்க. அவுங்களும் வெள்ளைக்காரங்களுக்கு மட்டுமே வைத்தியம் செய்வாங்களாம். மத்த இனம் அதாவது மவோரிகளுக்கு வைத்தியம் பார்க்க ஒரு சிலரைத்தவிரயாரும் விரும்பலை.


மவோரிகளுடைய வாழ்க்கைதான் ரொம்பப் பரிதாபமா ஆயிருச்சு. நல்ல நிலங்கள் எல்லாம் போச்சு. பாதியை இவுங்களே வித்தாங்கன்னா, பாதியை அவுங்க பிடுங்கிக்கிட்டாங்களே! கிராமத்துலேதான் இருந்தாங்கன்னாலும், நிலத்தையும் பறி கொடுத்தப்புறம் எங்கே போய் பயிர்பச்சைன்னு விளைவிக்கறது? கையிலே காசு இல்லை.

Wednesday, June 21, 2006

ஆ.............விரல்!!! 11 & 12

ஆ.............விரல்!!! 11 மீண்டும் ஆம்புலன்ஸ்


என்ன செய்வதென்று புரியாத நிலையில் வீட்டுக்கே திரும்ப வந்தோம். தோழியும் அவர்வீட்டிற்குப் போய்விட்டார். இன்னும் இரண்டுமுறை கழிவறை விஜயம். மூன்றாம் முறை போனபோது வெறும் ரத்தம் வெளியேறியது. அவ்வளவு ரத்தத்தைப் பார்த்த இவர் மயங்கிச் சாய்ந்துவிட்டார். அவரை மெதுவாக வெளியில் கொண்டு வந்தபின், இனியும் தாமதிப்பது சரியில்லை என்று ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தேன்.


அவர்கள் வருமுன்பு மற்றொருமுறை கழிவறை. இந்த தடவை எதற்கும் இருக்கட்டுமென்று ஒரு ப்ளாஸ்டிக் பாத்திரத்தை டாய்லெட்டில் வைத்து அதை பயன்படுத்தச் சொன்னேன். அது பூராவும் ரத்தம். இவரோ,அழ ஆரம்பித்துவிட்டார், 'அன்னிய நாட்டில் உன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விடப்போகிறேன்' என்று. எனக்கும் பயத்தில் நெஞ்சு படபடக்கிறது என்றாலும், 'கடவுளே! என்னைக் கைவிட்டுவிடாதே. இவருக்கு நல்லபடியாக குணம் ஆனால் -------'என்று மனதில் கடவுளுடன் பேரம் பேசிக்கொண்டே 'அதெல்லாம் ஒன்றும் இல்லை. இப்பவே ஆஸ்பத்திரிக்குப் போறொம். அங்கே போனால்எல்லாம் சரியாகும்' என்று தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தேன். வயிற்றில் பயங்கர வலி என்று துடித்துக்கொண்டிருந்தார். கண்கொண்டு காண முடியாது.


ஆம்புலன்ஸ்காரர்கள் வீட்டிற்குள் தபதபவென்று நுழைந்தார்கள். விவரம் சொல்லி, கழிவறையைக் காண்பித்தேன்.அவருக்கே ஒரு ஷாக்! நல்லவேளை சாம்பிள் இருக்கிறது என்று சொல்லி, ஆம்புலன்ஸ் வண்டியில் இருந்துசில ப்ளாஸ்டிக் டப்பாக்களைக் கொண்டுவந்து கழிவை அதில் எடுத்துத் தனியாக வைத்தனர். இவரை மெதுவாக வண்டியில் ஏற்றிக்கொண்டு மீண்டும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குப் போய்ச் சேர்ந்தோம்.


இதற்குள், தோழிக்கு விவரம் சொல்லி, அவர்களும் ( அவர் கணவருடன்)அங்கே வந்து விட்டனர். ஏற்கெனவே அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டையும், வாங்கிய மருந்துகளையும் கையோடு கொண்டு போயிருந்தேன்.அங்கேயும் ஒரு பத்து நிமிடக் காத்திருப்பு இருந்தது. அதற்குள் அங்கே இருந்த மற்றொரு மருத்துவர், மருந்துச்சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, குடலில் உள்ள லைனிங் பிரிந்து இப்படி ரத்தவெள்ளமாக வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார். சிலருக்கு இந்த மருந்து ஒத்துக்கொள்வதில்லையாம். முன்பே தோழியும் இதைத்தான் சொல்லியிருந்தார்."ஐய்யய்யோ, இந்த மருந்தா சாப்பிடுகிறார். ரொம்ப ஸ்ட்ராங் ஆச்சே" என்று.சாம்பிள் கழிவை உடனே பரிசோதனைக்கு அனுப்பினார்கள். இவருக்கு உடனே 'ட்ரிப்' ஏற்ற ஆரம்பித்தனர். ஒரு மணிநேரமானதும், கொஞ்சம் வலி குறைந்தாற்போல் இருந்தது. கண்மூடித் தூங்க ஆரம்பித்திருந்தார்.


'நீங்கள் வீட்டிற்குப் போங்கள். அவசியம் என்றால் நான் ஃபோன் செய்கிறேன்' என்று கூறி தோழியையும் அவர் கணவரையும் வீட்டிற்கு அனுப்பினேன். மெதுவாகப் பொழுது புலர்ந்தது. இதுவரை நான்கு பாட்டில் ட்ரிப் ஏற்றி இருந்தார்கள்.நானும் கடவுளைப் பிரார்த்தித்தபடி அங்கே உட்கார்ந்திருந்தேன். மனது ஒன்றும் சரியாகவே இல்லை. என்னென்னவோ குழப்பமான சிந்தனைகள்.


காலை ஏழு மணியானபோது, ஒரு ஸ்பெஷலிஸ்ட் வந்து பரிசோதித்துவிட்டு, முன்பு எழுதித் தந்த மருந்துக்குப் பதிலாக வேறு ஒரு மருந்து எழுதிக் கொடுத்தார். வீட்டிற்குப் போகலாம் என்றும், எதாவது பிரச்சனை என்றால்உடனே திரும்ப வரவேண்டுமென்றும் சொன்னார். அதிகாலையில் யாரையும் தொந்திரவு செய்யவேண்டாமென்றுஒரு வாடகைக்காரில் வீடு வந்து சேர்ந்தோம். அதன்பின் தோழிக்கு தகவல் சொன்னேன். அவர்கள் வந்து இந்த மருந்துச் சீட்டைப் பார்த்தபின் மருந்து வாங்கலாம் என்றிருந்தேன்.


இவருக்கும் வயிற்றுவலி நன்றாகவே குறைந்திருந்தது. தூங்கி விட்டார். உணர்ந்ததும் கொஞ்சம் கஞ்சி தயாரித்துக் கொடுத்தேன்.

வயிறு முற்றிலும் சரியாக ஒருவாரமானது. கைக்கட்டைப் பிரித்துப் புதுக் கட்டு போட்டுக்கொள்ள ஆஸ்பத்திரியில் அதற்கென்று இருந்த பிரிவுக்குப் போனோம். நன்றாக ஆறிவருவதாகச் சொன்னார்கள். இன்னும் ஒரு வாரம் கழித்து அடுத்த ட்ரெஸ்ஸிங்.


இதற்குள் நம் வண்டியைச் சரி செய்துவிட்டதாக ஃபோன் வந்தது. மகளுடன் சென்று அதைக் கொண்டு வந்தேன்.நன்றாகப் புதியது போல இருந்தது. அடி வாங்கின சுவடே இல்லை! இதே போல இவருக்கும் குணமாகி விட்டால் எவ்வளவு நல்லது.


ஆஸ்பத்திரியில் இருந்து நம் ஜிபிக்கு ரிஸல்ட் வந்திருக்குமே. அது உண்மையாகவே வைரஸ்தானா? அப்படியானால் என்ன வைரஸ்? என்று மண்டைக் குடைச்சல். இரண்டு முறை ஃபோன் செய்து கேட்டதற்கு நம் மருத்துவரின் வரவேற்பாளர் இன்னும் வரவில்லை என்று சொன்னார்.

விடாமல் ஆஸ்பத்திரிக்குப் போன் போட்டேன். இங்கேப்ரைவஸி ஆக்ட் என்று ஒன்று இருக்கிறது. விவரங்களைச் சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமே சொல்வார்கள். ஃபோன் பில்லோ.எலக்ட்ரிசிடி பில்லோ கட்டவேண்டிய சமயம், நாம் தொலைபேசியில் விவரம் கேட்டால் நம் பெயர் ஏற்கெனவே அங்கே கொடுத்திருக்கவில்லை என்றால் சொல்ல மாட்டார்கள்.அதனாலெயே எல்லா இடங்களிலும் கணவன், மனவி இருவர் பெயரும் பதிந்து வைக்க வேண்டும்.வீடு வாங்கினால் கூட ரெண்டு பேர் பேரிலும்தான் பதிவார்கள்.


ஆஸ்பத்திரியில் ஜிபிக்கு அனுப்பிவிட்டோமென்று சொன்னார்கள். கிடைத்த பத்து நிமிஷ இடைவெளியில் மருத்துவரைப் பார்க்கப்போனேன், எதிர்வரிசைதானே?


என்னைப் பார்த்ததும் வரவேற்பாளரின் முகத்தில் 'சட்'டென்று ஒரு மாற்றம். ஒருவேளை அப்படித் தோன்றியதோ?

இன்னும் ரிப்போர்ட் வரவில்லை என்றார்கள். நான் உடனெ ஆஸ்பத்திரியில் அனுப்பி ரெண்டு நாளாயிற்றாம். ஏன் தாமதம் என்றேன். உடனே கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு, எழுந்துபோய் அடுத்த பகுதியில் இருக்கும்அலமாரிகளில் குடைந்து எங்கள் ஃபைலைத் திறந்து பார்த்துவிட்டு அங்கெயே வைத்துவிட்டு, மறுபடி என்னிடம் வந்து,ஆமாம். வந்திருக்கிறது, வைரல்தான் என்றார்கள். நானும் விடாமல், என்ன வைரஸ்? என்றதற்கு 'ராட்டா வைரஸ்' என்றார்கள்.


அவர்கள் நடவடிக்கை, பாடி லேங்குவேஜ் என்று சொல்கிறொமே ( அதானே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது)அது சந்தேகம் தருவதாகவே இருந்தது. அன்று பிற்பகல் வீட்டிற்கு வந்த மருத்துவர் தோழியிடம் விவரம் சொல்லி,அது என்ன வைரஸ் என்று விசாரித்தேன்.


" அதுவா, நம்மூரில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பேதியில் கழியும்போது, அதான் குழந்தைக்கு தோஷம் என்று சொல்வோமே அதற்குக் காரணமானது.( இது பற்றி நம்ம வலைஞர்களில் இருக்கும் மருத்துவர்கள் கருத்துச் சொன்னால் நல்லது)


இப்போது எனக்கு நிச்சயமாகியது, இவர்கள் என்னவோ செய்துவிட்டு அதற்குச் சப்பைகட்டு கட்டுகிறார்கள்.ஆனால், அப்போதிருந்த நிலையில் என்னால் என்ன செய்திருக்க முடியும்?


இங்கே டாக்டர்கள் மேல் எல்லாம் வழக்குப் போட முடியாது. எதற்கெடுத்தாலும் ஏ.சி.சிதான்.


ஆ.............விரல்!!! 12. இனி எல்லாம் சுகமே
---------------

காயம் முழுவதும் ஆறிவிட்டது. புதிய தோல் வளர ஆரம்பித்து மொட்டையாக இருந்த விரலை மூடத்துடங்கியது.இன்று முதல் 'பிஸியோ தெரபி' பிரிவுக்குப் போக வேணும். வாரம் மூன்று முறை. அங்கே இருந்த தெரப்பிஸ்ட்க்கு என் மகள் வயசுதான் இருக்கும். சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே எந்தமாதிரி பயிற்சி செய்யவேண்டுமென்று சொன்னது எங்களுக்குப் பிடித்திருந்தது. மூன்று வாரப் பயிற்சி முடிந்த போது நல்ல குணம் தெரிந்தது. உள்ளங்கையை முகத்துக்கு நேராக வைத்துப் பார்த்தால் அபூர்வ சகோதரர்கள் மாதிரி இருக்கிறது. குள்ளக் கமல்!


இவரும் தானே காரை எடுத்துக் கொண்டு ஓட்ட ஆரம்பித்து விட்டார்.

கார்? அதே கார்தான்!

'சனியன், வந்ததும் வராததுமாக இரத்தக்காவு வாங்கிவிட்டது.'

நண்பர்கள் வரும்போதெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

" முதலில் இதை ஒழித்துக் கட்டி விடுங்கள்"

" அருமையான வண்டி. ஆனால் எப்படி இந்த விபத்து நேர்ந்தது? ப்ரீக்."

" இன்னுமா இந்த வண்டியை வைத்திருக்கின்றீர்கள்?"

" அதான், ரத்தம் பார்த்துவிட்டதே. இனிமேல் ஒன்றும் ஆகாது"

" வந்த விலைக்குத் தள்ளி விடுங்கள்"

" வேறு எதாவது பெரிதாக ஆகாமல் அந்தவரை சுண்டுவிரலோடு போச்சு"

" நம் நேரம் சரியில்லை என்றால் வண்டி என்ன செய்யும்?"

இப்படிப் பலரும் பலவிதமாக.

ஆமாம். நேரம்தான். நேரம் என்று சொன்னவுடந்தான் கவனத்துக்கு வந்தது, இந்தக் காரில்கடிகாரமே கிடையாது. அதற்கென்று இருக்கும் இடம் வெறுமையாக இருக்கிறது. அதெப்படி?எல்லா வண்டிகளிலும் கடிகாரம் கட்டாயமாக இருக்கிறதல்லவா?


அப்புறம் மூன்று மாதம் போனவுடன்,'ஹோண்டா கார்ஸ் சர்வீஸ்' அழைப்பு அனுப்பி இருந்தது.ஒரு இலவச செக்கப்,காருக்குத்தான்! கொண்டு போனோம். எல்லாம் பர்ஃபெக்ட்தான். இந்த மாடலில் கடிகாரம் கிடையாதாம்!!!! ஆஹா.......


ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் இவர் போய்த் திரும்பும்வரை ஒரு படபடப்பு இருந்தது.அப்புறம்அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது.

ரெண்டு வருசம் வைத்திருந்த பிறகு, போனவருடம் மகளுக்குத் தந்துவிட்டோம். அவளுடைய வண்டிகொஞ்சம் தகராறு செய்ய ஆரம்பித்திருந்த நேரம். இரவு, நேரம் கழித்துத் திரும்பும்போது ரிப்பேராகிவழியில் நின்றால் ஆபத்தாயிற்றே. அதனால் அதை விற்றுவிட்டோம். அதுவும் ஒரு ஹோண்டாதான். சிகப்பு நிறம்.


இதற்கிடையில் நாங்களும் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு இடம்பெயர்ந்து விட்டோம். இந்த வீடு இவரின் அலுவலகத்துக்கு ரொம்பவே சமீபம். ஆறேழு நிமிஷ நடை. பல நாட்களில் இவர் நடந்தே போய்விடுகிறார். பகல் சாப்பாட்டுக்கு வந்து போவது, மாலை வீடு திரும்புவது என்று, நாளுக்கு நாலுமுறை ஏழு நிமிஷ நடைப்பயிற்சி.

தேவைப்பட்டால் மட்டுமே என் காரை எடுத்துக் கொண்டு போவார். மற்றபடி வீக் எண்ட் சுற்றல் மட்டும்தான்.


இன்னொரு கார் வாங்க வேண்டும். அதுதான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். சிலசமயம், 'கொஞ்சம் நல்லதாகஒரு பெரிய வண்டி வாங்கிக்கலாம்' என்றும், சிலசமயம்,'எல்லாம் இதுவே போதும். ஓடும்வரை ஓடட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்' என்றும் இருக்கிறது.

இந்த வீடு கட்டியதும் கூட 'வீட்டைக் கட்டிப்பார்' என்ற தலைப்பில் எழுதி வைத்துக் கணினியில் சேமித்து வைத்துள்ளேன்.உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால், அதுவும் ஒரு தொடராக வெளிவரலாம்!.


அதுவரை இனி எல்லாம் சுகமே என்று சொல்லியும் முடித்துவிட முடியாது. ஒரு ஏழெட்டு மாதத்துக்குமுன்பு,பலகைக்கு ஆணியடிக்கிறேன் பேர்வழி என்று, ஒரு ஆங்கிளில் சுத்தியை வைத்து அடித்து, இடதுகை ஆள்காட்டி விரலில் நகம் பெயர்ந்து தொங்கி, அவசர சிகிச்சைக்கு ஓடி.........


இப்போது புது நகம் வந்துவிட்டது. இப்படி எத்தனையோ அட்வெஞ்சர்கள்.


இங்கெல்லாம் 'டூ இட் யுவர்செல்ஃப்' படி எல்லா வேலையும் நாமெ செய்கிறொம் அல்லவா. அந்தக் கணக்கில் இவர் எதாவது வேலை செய்ய ஆரம்பித்தால், நான் காரை வெளியே எடுத்து வைத்துத் தயாராக இருக்க வேண்டும். எங்களுக்கும் இப்போது ஆஸ்பத்திரியின் அவசரசிகிச்சைப் பிரிவுகள் நடபடி எல்லாம் அத்துப்படி:-)


சுருக்கமாகச் சொன்னால், இவர்தான் நம் வீட்டு 'டிம் த டூல் மேன் டெய்லர்'


இனி உங்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி!


இப்படியே முடித்துக் கொ(ல்)ள்கின்றேன். பொறுமையாகப் படித்து பின்னூட்டிய நண்பர்களுக்கு நன்றி.

சிஜி ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சஸ்பென்ஸ்: திடீரென்று யாராவது என்னை 'மொட்டைத்தலை'யுடன் பார்த்தால் வியப்படைய வேண்டாம்

Tuesday, June 20, 2006

ஆ.............விரல்!!! 9 & 10

ஆ.............விரல்!!! 9 அழைப்பு வந்தது.எட்டுமணிக்கு திடீரென்று ஒரு டாக்டர் வந்து, இப்போது தியேட்டர் ரெடி. இவரைக் கொண்டு போகலாம் என்று சொல்லும்போதே,மருத்துவமனைப் பணியாளர் ஒருவர் வந்து கட்டிலோடு இவரைக் கொண்டு போனார். நானும் கூடவே போனேன். அங்கேயும் வெளியிலேயே சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு இவரை உள்ளே 'உருட்டிக் கொண்டு' போய்விட்டார்கள். ஒரு முக்கால்மணி நேரம் ஆகும். நீங்கள் இங்கே அமர்ந்து கொள்ளலாம். காஃபி, டீ எல்லாம் இருக்கின்றது. கொஞ்சம் ஓய்வாக இருங்கள். கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார்கள். 'மகளுக்கு இந்த விவரம் தெரியாதே, அவள் வந்து தேடுவாளே ' என்றுநினைத்து நான் மறுபடி இவர் இருந்த வார்டுக்கே வந்து கொஞ்சநேரம் காத்திருந்தேன். அதற்குள் மகளும் வந்துவிட்டாள்.அவளுக்கு விவரம் தெரிவித்து, நாங்கள் இருவருமாக அறுவை சிகிச்சை நடக்கும் இடத்திற்கு மறுபடி வந்து காத்திருந்தோம்.முக்கால் மணியாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. மனதுக்குள் கொஞ்சம் கலவரமாக இருந்தது. இன்னும் அரைமணிநேரம் சென்றபின் மருத்துவர் வெளியேவந்தார். சிகிச்சை முடிந்துவிட்டது. மறுபடி அவரை வார்டுக்குக் கொண்டு போகலாம் என்றார். கையில் ஒரு பெரிய கட்டுடன் சிரித்த முகத்தோடு வெளிவந்தவரைப் பார்த்து மனம் கொஞ்சம் நிம்மதி ஆனது.


'எப்போது வீட்டிற்கு அனுப்புவீர்கள் என்று கேட்டபோது, 'இப்போதே போகலாம். அதற்குமுன் நீங்கள் பழைய வார்டுக்குப்போய் அங்கே சில சாங்கியங்களை முடித்துக் கொண்டு, அங்கே கிடைக்கும் மருந்துச் சீட்டு வாங்கிக்கொண்டு போகலாம் 'என்று பதில் வந்தது.


கட்டிலோடு அவரைத் தள்ளிக் கொண்டே லிஃப்டில் ஏறி நான்காம் மாடிக்கு வந்தோம். மேலும் ஒரு முக்கால்மணிநேரம் போனது. ஒருவழியாக மருந்துச் சீட்டு கிடைத்ததும், ட்ரெஸ்ஸிங் மாற்றுவதற்கான அடுத்த அப்பாய்ண்ட்மெண்ட்க்கு நாளும் நேரமும் குறித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அப்போது நேரம் கிட்டத்தட்ட இரவு 11 மணி.


வீட்டுக்குள் நுழைந்ததும்தான் காலையில் இருந்து காலியான வயிற்றின் கூப்பாடு கேட்கிறது. இவருக்கும் பயங்கரப்பசி. டென்ஷன் குறைந்ததும் மனசு வழக்கமானவைகளை நினைக்க ஆரம்பிக்கிறதோ? ஆறி அவலாகப்போயிருந்த சாப்பாட்டைச் சுடவைத்து சாப்பிட்டு முடித்தோம். அடுத்த இரண்டு நாட்கள் இவர் வேலைக்குப் போகவில்லை. ஆனாலும் ஃபோன் வழியாகவே அங்கே செய்ய வேண்டிய வேலைகளுக்கு அவரின் உதவியாளர்களுக்குக் குறிப்புகள் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஒரு நாள் கூட ஆஃபீஸை தரிசிக்காமல் இருக்க இவரால் முடியாது.மூன்று வாரங்கள் வரை ஓய்வெடுக்கலாம் என்று சொன்னாலும், கேட்டால்தானே?


இதற்கிடையில் விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட நண்பர்களின் வருகையால் வீட்டில் எப்போதும் யாராவது இருந்துகொண்டே இருந்தார்கள்.


வேலைக்குப் போக ஆரம்பித்ததும், வழக்கமில்லாத வழக்கமாக பகலுணவு கையோடு கொண்டு போவதாகச் சொன்னார்.இல்லையெனில், எனக்குத்தான் கஷ்டமாம்.நாந்தானே இவரை வீட்டுக்குக் கூட்டிவந்து மறுபடி கொண்டுபோய் விடவேண்டும்.நம்ம ஊர்போல இங்கே சோறு கொண்டு போய் சாப்பிட முடியாதாம். ஊரோடு ஒத்து வாழணுமாமே! 'சாண்ட்விச்'களைக்கொண்டு போவதாகச் சொன்னார். நம் வீட்டருகில் உள்ள சூப்பர் மார்கெட்டில் இருந்து 'சிக்கன் ஸ்லைஸஸ்' வாங்கிவந்து சாண்ட்விச் தயாரித்துக் கொடுத்தேன்.
தினமும் ஆண்ட்டிபயாடிக், பெயின் கில்லர்ஸ் என்று சிலவகை மருந்துகளும் எடுத்துக் கொண்டிருந்தார். எல்லாம் ஆஸ்பத்திரியில் எழுதிக் கொடுத்தவைதான்.


மறுநாளே இவருக்கு வயிற்று அசுகம் வந்தது. கழிவறைக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். எனக்குச் சந்தேகம் என்னவோ அந்த 'சிக்கன் ஸ்லைஸஸ்' மீதுதான். ஆனால் ஊர் ஜனங்கள் அதைத்தான் வாங்கித் தின்னுகிறார்கள்.இவருக்கு மட்டுமா ஃபுட் பாய்ஸனிங் வரும்? அந்தக் கடையில் விசாரித்த போது, இதுவரை புகார் ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள். இதனிடையில் என் இந்தியத் தோழி ஒருவர்( மருத்துவர்) வீட்டிற்கு வந்திருந்தவர், இவருக்கு எழுதித்தந்த மருந்துகளைப் பார்த்துவிட்டு, இந்த ஆண்ட்டிபயாடிக் நல்லதில்லையே. அதனால் இப்படி வரச் சான்ஸ் இருக்கிறது. எதற்கும் உங்களுடைய குடும்ப (?)டாக்டரைப் பார்க்கலாம் என்று சொன்னார்கள்.
ஆ.............விரல்!!! 10 குடும்ப மருத்துவர்.
----------------------இங்கே உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு மருத்துவரிடம் பதிந்து வைத்திருப்பது முக்கியம். விசேஷ மருத்துவரைப் பார்க்கணும் என்றாலும் இவர்கள் பரிந்துரைக்க வேணும். அதேபோல் அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனாலும் நம்முடைய மருத்துவக் குறிப்புகளை ஒரு பிரதி இவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆஸ்பத்திரியில் முதலில் கேட்கும் கேள்வியே உங்க மருத்துவர் ( GP) யார்? என்பதே.


இங்கே சில மருத்துவர்கள் சேர்ந்து ஒவ்வொரு க்ளீனிக்-இல் வேலை செய்கிறார்கள். அங்கே இரண்டு நர்ஸ்களும் இருப்பார்கள். நாம் ஒவ்வொருமுறை போகும் போதும் வெவ்வேறு மருத்துவர்கள் இருப்பதன் காரணம் முதலில் எனக்குப் புரிபடவில்லை. பின்னர் நான் சென்ற முறை பார்த்த மருத்துவரின் பெயரைச் சொல்லி அவர்களைப் பார்க்க வேண்டும் என்றதற்கு, அவர்கள் இன்னின்ன கிழமைகளில் மட்டுமே வருவார்கள் என்று சொன்னார்கள். அதன் பிறகு நானும்ஒரே மருத்துவராக இருந்தால் நல்லதுதானே, (புதுப்புது ஆட்கள் என்றால் நம் 'சரித்திரம்' திரும்பத் திரும்பச் சொல்லவேணுமே) என்று நினைத்து, அவர்கள் வரும் நாட்களில் மட்டுமே அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க ஆரம்பித்தேன்.இந்த க்ளீனிக்கில் முதல்முதலாக ( 19 வருடங்களுக்கு முன்) நான் சேர்ந்ததும் ஞாபகம் வருகிறது. அப்போதெல்லாம் இங்கே அவ்வளவாக வேற்று இனத்தவர்கள் இல்லை. நாங்கள் அப்போதுதான் இந்தப்பகுதியில் வீடு வாங்கிக் குடிபுகுந்திருந்தோம்.அப்போது பனிகாலம் வேறு. வீடு மாறும் அலைச்சலில் கொஞ்சம் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. நம் வீட்டுக்கு எதிர்வரிசையில் இருந்த ஒரு க்ளீனிக்கில் சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.


வரவேற்பில் இருந்த பெண்மணி, என்ன ஏற இறங்கப் பார்த்துவிட்டு, நாங்கள் புது நோயாளிகளை இங்கே பார்ப்பதில்லை என்றார். எனக்கோ ஜூரம் காய்ந்து கொண்டிருக்கிறது.


" நான் இங்கே இந்தப் பகுதியில்தான் வசிக்கிறேன். இதுதான் எனக்கருகாமையில் இருக்கும் மருத்துவமனை. வேறுஇடம் போக என்னால் முடியாது"


" ஓ..... அப்படியானால் டாக்டர் உங்களை நாளைக்குப் பார்ப்பார்"


" அதெப்படி? எனக்கு இப்போதுதான் உடல்நிலை சரியில்லை. நாளைவரை காத்திருக்க முடியாது.எனக்கு இன்றைக்கே டாக்டரைப் பார்க்க வேண்டும்"


" ம்ம்....இரண்டு மணி நேரம் கழித்துத்தான் பார்க்க முடியும். மீண்டும் இங்கே உங்களால் வர முடியுமா?"'


" ஏன் முடியாது? இதோ இந்தத் தெருவைக் கடந்து எதிர் வரிசைக்குப் போனால் என் வீடு. ஒரு நிமிட நடைதான்"


"இங்கே நீங்கள் 32 டாலர்கள் அடைக்கவேண்டும். தெரியுமா?"


" ஏன் தெரியாது? அதான் அங்கே எழுதி வைத்திருக்கின்றீர்களே"


" உங்களால் அவ்வளவு காசு தரமுடியுமா? நீங்கள் வேலை செய்கிறீர்களா?"


"நான் வேலை செய்யவில்லைதான். ஆனால் என் கணவர் வேலைசெய்கிறார்."


"ஓ....சரி. .....இந்த நேரத்திற்கு உங்களை மருத்துவர் பார்ப்பார்"


இதுவும் ஒருவகை இனத் துவேஷமோ என்றுதான் பட்டது. ஆனால் அப்போது நான் இருந்த நிலைமையில் ஒரு டாக்டரைப் பார்த்து மருந்து வாங்க வேண்டியது ரொம்ப முக்கியம். இதே நம் ஊராக இருந்தால் மருந்துக்கடையில் போய் விஷயத்தைச் சொல்லி தாற்காலிகமாகவேனும் சில மாத்திரைகள் வாங்கிக் கொள்ளலாம். அதுவும், ஆண்ட்டிபயாடிக் பேர் தெரிந்திருந்தால் அதையே கூட வாங்கிவிடலாம். இதுசரியான முறை இல்லை என்றாலும் ஒரு அவசர ஆபத்துக்கு இப்படித்தான் நடக்கிறது.


அப்புறம் அவர்கள் சொன்ன நேரத்துக்குப் போய் என் பெயரைப் பதிவு செய்யும்போதுதான் முழு விவரமும் கிடைத்தது. அந்த க்ளினிக்கின் வரலாற்றில் அங்கே பதிவு செய்து கொண்ட முதல் வேற்று இனத்தவர் நாந்தான்! இதுவரை வெள்ளையர்களுக்கு மட்டுமே சிகிச்சை செய்திருக்கிறார்கள். அவர்கள் நிறத்தைப் பார்த்து மற்றவர்களுக்குப் பயம் என்றால், நம் நிறத்தைப் பார்த்து அவர்களுக்கும் உள்ளுக்குள் ஒரு பயம்.


இன்னும் அதே வரவேற்புப் பெண்மணியும், மருத்துவரும்தான் நாங்கள் தொடந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள் கூட!


இவருக்கு இப்படியாக இருக்கிறதே என்று, கிளினிக்குக்கு ஃபோன் செய்து நம் டாக்டரைப் பார்க்க முடியுமா என்று கேட்டபோது, இன்று அவர் வரவில்லை என்றும், அவசரம் என்றால் வேறு ஒரு மருத்துவர் இருக்கிறார் அவரிடம் காட்டலாம் என்றும் சொன்னார்கள்.


இவரோ கழிவறைக்குப் போய்வந்து போய்வந்தே தளர்வடைந்துவிட்டார். இனியும் நீடிப்பது நல்லதல்ல என்றுஉடனே அங்கெ போனாம். அதுதான் ச்சும்மா ரோடைக் கடந்தால் போதுமே!


நாங்கள் பார்த்த மருத்துவரிடம், என் தோழியையும் அறிமுகப்படுத்தினேன். அவரும் மருத்துவர் என்பதை அறிந்ததும், ஒரு வினாடி வெள்ளைக்கார மருத்துவர் முகம் மாறியதுபோல இருந்தது. இவருடைய வயிற்றுப்போக்குக்குக் காரணம் எதோ வைரஸ் என்றும், இதற்கு மருந்து ஒன்றும் தேவையில்லை. தானே சில நாளில் சரியாகும் என்றும் சொன்னார். சில நாட்களா? இதே நிலையிலா?


அப்போது என் தோழி,'தயவு செய்து இவருடைய 'ஸ்டூல் சாம்பிளை லேபு'க்கு அனுப்பி டெஸ்ட் செய்தால் நல்லது' என்று கூறியது அவருக்கு அறவே பிடிக்கவில்லை. 'எனக்குத் தெரியாதா? இந்த இந்தியன் டாக்டர் என்ன சொல்வது?'என்ற பாவனை முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. நாம் இதற்கெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க முடியுமா? நமக்கு வேலை ஆக வேணாமா?


'அதற்கெல்லாம் தேவை இல்லை. நீங்கள் போகலாம்' என்று சொல்லி விட்டார்.


இன்னும் வரும்

நியூஸிலாந்து பகுதி 45

ஒரு நாட்டோட முதுகெலும்பு என்னவா இருக்கும்? இதுலெ என்ன சந்தேகம்? விவசாயம்தான்.எல்லா ஜனங்களுக்கும் வயிறு காயாம சோறு இருந்தாத்தானே மத்ததைப் பத்தி நினைக்க முடியும்?


ரீஃபார்ம் பார்ட்டின்னு ஒண்ணு மும்முரமா அரசியலிலே ஈடுபட்டுச்சு. 20 வருசமா லிபரல் பார்ட்டிஆண்டாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. எப்பவும் எல்லாத்துலேயும் எல்லாரும் ஒரே கருத்துவச்சிருப்பாங்களா என்ன?பில் மாஸ்ஸெ இவரை, பார்மர் பில் மஸ்ஸென்னாத்தான்( Farmer William Massey) நிறையப்பேருக்குத் தெரியும். விவசாயி.அரசியல் ஆர்வம். ரீபார்ம் கட்சி ஆளு. கடினமான உழைப்பாளி. பண்ணையிலே உழைக்காம இருக்க முடியுமா?


ஒரு நாள் வைக்கோலை எல்லாம் பிட்ச்ஃபோர்க்( இதுக்குத் தமிழ் என்ன?) வச்சு சேகரிச்சுக்கிட்டு வயல்லேஇருக்கார். அப்ப அவருக்கு தந்தி வந்துச்சு. தந்தி டெலிவரி பண்ண வந்தவர், கரையிலெ நின்னுக்கிட்டுஇருக்கார். பிட்ச்ஃபோர்க்கை நீட்டுனதும் அதுலே அந்தக் காகிதத்தை வச்சார்.பிரிச்சுப் பார்த்தா.........அடுத்து வரப்போற இடைத்தேர்தலுக்கு நிக்கச் சொல்லி அழைப்பு வந்திருக்கு.


விட்டுறமுடியுமா? நின்னார். ஜெயிச்சார். அப்புறம் 1911 லே இந்தக் கட்சிக்குத் தலைவராவும் ஆனார்.அப்ப நடந்த தேர்தல்லே ரெண்டு கட்சிகளுக்கும் சரிசமானமா ஒட்டு விழுந்துச்சு. அப்படியும் லிபரல் கட்சியேஆட்சி அமைச்சாங்க. அதுலே ஏகப்பட்டக் குழப்பங்கள். ஒரே வருசத்துலே நம்பிக்கையில்லாத் தீர்மானம்கொண்டுவந்து அதுலே ஜெயிச்சு, ரீஃப்ஃஃர்ம் கட்சி ஆட்சியைக் கையிலே எடுத்துச்சு. பிரதமர் யாருங்கறீங்க?நம்ம 'ஃபார்மர் பில் மஸ்ஸெ' தான்.


அவர் செஞ்ச முதல் வேலை விவசாயிங்களுக்குத்தான். நிறையவிதத்துலே உதவி ஆரம்பிச்சது. அவுங்க உழைப்புலே விளைஞ்சது, உண்டாக்குனது எல்லாம் பிரிட்டனுக்கு ஏற்றுமதியாச்சு. இந்த சமயத்துலே நகரங்களும் வளர ஆரம்பிச்சது.டவுன் ஆளுங்க முணுமுணுக்கத் தொடங்குனாங்க. "இது நியாயமே இல்லை. எல்லாம் பண்ணைங்களுக்கே போனால்எப்படி? எங்களை யாரு பார்த்துக்குவா?" நியாயம்தான்.


டவுன்லே வீட்டு வாடகை, சாப்பாட்டு சாமான்கள், துணிமணிங்க எல்லாம் விலை ஏறிக்கிட்டேப் போகுது. ஆனாத் தொழிலாளிகளுக்கு சம்பளம் அதுக்கேத்தமாதிரி உயரலை. அப்படிக்கு அப்படியே இருக்கு. இதை இப்படியே விட்டாக் கஷ்டம்தான். பேசாம வேலை நிறுத்தம் செஞ்சாத்தான் சம்பளம் உயருமுன்னு சிலர் ஆரம்பிச்சாங்க. எல்லாருக்கும் வேலையும் கிடைக்கலை. வேலை தேடி அலையற கும்பல் வேறக் கூடிக்கிட்டே போகுது.


சுரங்கம், ரெயில்வே, துறைமுகம் இங்கெல்லாம் வேலை செய்யறவங்களுக்கு சம்பளமும் கம்மி, ஆபத்தும் ஜாஸ்த்தி. பாதுகாப்பு சரியில்லைன்னு அவுங்களும் வேலை நிறுத்தம் செய்ய நினைச்சாங்க. 1909 லே வெஸ்ட்கோஸ்ட் West Coast நிலக்கரி சுரங்க ஆட்களும்,வய்ஹி Waihi சுரங்க ஆட்களும் சேர்ந்து ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிச்சாங்க.ஃபெடரேஷன் ஆஃப் லேபர் Federation of Labour. தொழிற்சங்கமுன்னு சொன்னதும் சிகப்பு கலர் கவனத்துக்கு வருமுன்னு இதுக்கு'ரெட் ஃபெட்ஸ் Red Fedsன்னு பேர்.கம்யூனிஸ்ட் நாடுகளிலே நிறைய சிகப்புக் கலர் கொடிகள் இருக்காமே. எப்படியோ சிகப்புக்கும் கம்யூனிஸத்துக்கும் தொடர்பு ஏற்பட்டுப் போச்சு.


மூணுநாலு வருசம் இழுபறியிலெ போய்க்கிட்டு இருந்தப்ப வாய்ஹி சுரங்கத்தைச் சேர்ந்த சிலர், மொதலாளிகளோடு கூட்டு வச்சுக்கிட்டு இன்னொரு யூனியனை ஆரம்பிச்சாங்க. ரெண்டு யூனியனுங்களுக்கும் சண்டையின்னா சண்டை.அப்படி ஒரு சண்டை( யூனியன்களுக்குள்ளே யூனிட்டி இல்லாமப் போச்சு!) அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்க முன்வந்துச்சு.யாருக்கு? மொதலாளிங்க இருக்கற யூனியனுக்கு!
60 தொழிலாளர்களைப் புடிச்சு ஜெயிலிலே போட்டுச்சு. இந்தக் களேபரத்துலே ஒரு எஞ்சின் ட்ரைவரும், ஒரு போலீஸ்காரரும்செத்துட்டாங்க.
இதோட எல்லாம் ஓய்ஞ்சதா? அதெப்படி? அப்படிச் 'சட்'ன்னு முடியற விஷயமா இது?


இதுக்கு முந்தி 9 வருசம் இந்தமாதிரி வேலை நிறுத்தம் எல்லாம் இல்லாம ( 1894 - 1905) நல்லாப் போச்சு.அதுக்கப்புறம் 1906 லே ஒரே ஒரு வேலை நிறுத்தம். இப்ப என்னடான்னு எதுக்கெடுத்தாலும் வேலை நிறுத்தமுன்னு ஆயிருச்சே(-:


அதுவும் ரெண்டு சாவு வேற நடந்துருச்சு. இதைப் பார்த்துக்கிட்டு அரசாங்கம் சும்மா இருக்குமா? அடுத்த வேலைநிறுத்தம் வர்றதுக்குள்ளேயே அரசாங்கம் பக்காவா ஏற்பாடு செஞ்சது. கூடுதல் போலீஸ் கொண்டு வரணும். விசேஷப் பயிற்சிகொடுத்துச்சு. போலீஸ் வேலைக்கு ஆளுங்களைக் கூப்புட்டாங்க. எல்லாருக்கும் ஒரு குதிரையும், கையிலே தடியும்(Baton).இவுங்களை 'ஸ்பெஷல்ஸ்'ன்னு அரசு சொல்லுச்சு. ஆனா மக்கள் கூப்பிட்டது வேற பேருலே, மாஸ்ஸேஸ் கொசாக்ஸ்( Massey's Cossacks).


ஆக்லாந்து துறைமுக ஊழியர்கள் வேலை நிறுத்தம் 1913, நவம்பர் 8 லே ஆரம்பம் ஆச்சு. ஆயிரம் ஸ்பெஷல்ஸ்அங்கே போனாங்க. வேலை நிறுத்தத்தை முறியடிச்சாங்க. நாடு தழுவிய வேலை நிறுத்தம் வேணுமுன்னு ரெட்ஃபெட்ஸ் Red Feds, அறிவிச்சுக்கிட்டு இருந்துச்சு. டனேடின், வெலிங்டன், லிட்டில்டன் இப்படி இன்னும் சிலதுறைமுகங்களிலும் ஆக்லாந்துக்கு ஆதரவா வேலை நிறுத்தம் ஆரம்பிச்சாங்கதான்.


அரசாங்கத்துக்கும், மொதலாளிமாருங்களுக்கும் எதிரா ஒண்ணும் நடக்கமுடியாதுன்னு மக்களுக்குத் தெரிஞ்சுபோச்சு.அதேமாதிரிதான் ஆச்சு. ரெண்டே மாசத்துலே எல்லாரும் வேலைக்குத் திரும்பிட்டாங்க. மக்கள் சக்தின்றது எவ்வளோபெருசு. இந்த வேலை நிறுத்தமெல்லாம் அவுங்களுக்குப் பிடிக்கலை. அதே சமயம் அரசாங்கம் செஞ்சதை மனசு ஒத்துக்கவும் இல்லை. வச்சாங்க அரசாங்கத்துக்கு ஆப்பு.

எப்ப?

அடுத்த தேர்தல் வந்துச்சுல்லே, அப்ப.(அதென்னவோ சரித்திர வகுப்புக்கு நேரமே வாய்க்க மாட்டேங்குதப்பா (-:. அதான் கையோட வகுப்பை எடுத்துட்டுஅப்புறமா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்)

Monday, June 19, 2006

ஆ.............விரல்!!! 7 & 8

ஆ.............விரல்!!! 7 அவசரச் சிகிச்சைப் பிரிவில்
அவசர சிகிச்சைப்பிரிவுக்கு எங்களைக் கொண்டு சேர்த்தது ஆம்புலன்ஸ். உள்ளே போனவுடன், அவர்கள் எல்லா விவரங்களையும் பதிந்துகொண்டார்கள். கோபாலின் கையில்( அடிபடாத கையில்) ஒரு பட்டை கட்டிவிடப்பட்டது. அதில் அவருடைய ஜாதகம் முழுவதும் நக்ஷத்திரம், ராசியைத் தவிர மற்றெல்லாம் இருந்தது.


விரல்துண்டை, நிறைய ஐஸ் கட்டிகள் இருக்கும் ஒரு 'க்ளியர் ஃப்ரீஸர் ' பையில், போட்டு என்னிடம் கொடுத்தார்கள். அதற்குள் அது நீலம், நீலமென்ன நீலம் ஏறக்குறைய கருப்பான நிறமாக மாறிவிட்டிருந்தது. சில மருத்துவர்களும் வந்து சில, பல கேள்விகளைக் கேட்டார்கள். எப்படி ஆனது என்ற விவரத்தைக் 'கீறல் விழுந்த ரிக்கார்ட்' போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன்.


எலும்பு மருத்துவரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தோம்.முதலில் அவரது உதவி மருத்துவராக ஒரு அம்மணி வந்து பார்த்துவிட்டு,மற்ற மருத்துவர்களுடன் சிறிது நேரம் விவாதித்துவிட்டு, அந்தத் துண்டை, மறுபடி விரலில் பொருத்துவது கொஞ்சம் கஷ்டம். சரியாக நகத்துக்கு அடியில் துண்டுபட்டிருக்கிறது. அதை உடல் மறுபடி ஏற்குமா என்ற சந்தேகம் உள்ளது. ஒரு பத்து சதமானம்தான் வெற்றிகிட்டும் நிலை. அப்படிப் பொருத்தியபின், உடல் அதை ஏற்காவிடில்,'காங்ரீன்' ஏற்பட்டு முழு விரலையும் எடுக்க வேண்டியதாகிவிடும் என்றார்.


"நீங்களே இனி முடிவு செய்ய வேண்டும்! ஒரு மனிதன் தன்னுடைய சுண்டு விரலை உபயோகிப்பது வெறும் ஐந்து சதமானம்தான். ஆகையால் யோசித்துச் சொல்லுங்கள்."


இதற்குள் ஐஸ் கட்டிகள் மெதுவாக உருக ஆரம்பித்திருந்தது. விரல் துண்டு கறுப்பாக மிதக்க ஆரம்பித்தது! ரத்தம் இன்னும் வந்துகொண்டேஇருந்தது. காயத்தின்மேலே ஒரு வேறு ஒரு துணியை மாற்றினார்கள். தலைக்கு முக்காடு போல விரலுக்கு முக்காடோ?ஒரு படுக்கையில் கோபாலை உட்கார வைத்து, மடியில் ஒரு தலையணையை வைத்து, முழங்கையைத் தாங்கினாற்போல வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். தலையணை மேல் மெதுவாக ரத்தம் சொட்ட ஆரம்பித்திருந்தது.அதன்மேல் ஒரு 'டவல்' போடப்பட்டது!


டாக்டர் அம்மணி மறுபடி வந்தார். நான் தவறாகச் சொல்லிவிட்டேன். விரல் துண்டைத் தைத்தால் அதை உடல் ஏற்கும் வாய்ப்பு பத்துசதமானம் அல்ல. பதினைந்து சதமானம்!!!


நாங்கள் எங்கே போய் தலையை முட்டிக்கொள்வது! ஐயோ ஐயோ ஐயோ.....


மகளும் இப்போது வந்துவிட்டிருந்தாள். என் கையில் உள்ள ஐஸ் பையை ஒரு மாதிரிப் பார்த்தாள்!! எல்லாம் உருகிப்போய், தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது விரல் துண்டு!

மருத்துவர் மறுபடியும் வந்து,' டெட்டனஸ் ' ஊசியும், வலி தெரியாமலிருக்க ஒரு ஊசியும், போட்டார். கடைசியாக உணவு உட்கொண்டதுஎப்போது என்றும் கேட்டார். காலை 'ப்ரேக்ஃபாஸ்ட்'டோடு சரி. அப்புறம் ஒன்றுமில்லை. அதுவும் நாலு மணி நேரத்துக்கு முன்னால் என்றதும் திருப்தியான ஒரு பார்வையை வீசிவிட்டு, கோபாலுக்கு 'ட்ரிப்' கொடுக்க ஏற்பாடு செய்தார்.


கொஞ்ச நேரமானது. மறுபடி மருத்துவர் வந்து, கோபாலை , மேலே 'வார்டு'க்கு மாற்றியிருப்பதாகவும், ஒரு விசேஷ மருத்துவருக்காகக் காத்திருப்பதாகவும், அவர் வந்தவுடன் அறுவை சிகிச்சை நடக்கும் என்றும் சொன்னார். கொஞ்ச நேரத்தில் தான் வந்து பார்ப்பதாகவும் சொல்லிப் போனார்.


ஆ.............விரல்!!! 8 சாமியாட்டம்!நேரமோ போய்க் கொண்டிருக்கிறது! டவல் முழுவதும் ரத்தம்! விரலின் முக்காடும் முழுக்க நனைந்திருந்தது ரத்தத்தில்! மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்! எனக்குப் பசிக்குமே என்று அவருக்குக் கவலை. அடிக்கடி, கீழே உள்ள காஃபிட்டீரியாவுக்குப் போய் ஏதாவது சாப்பிடுஎன்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். எனக்கோ பசி மரத்துவிட்டது. யாருமே வந்து பார்க்கவில்லை. டாக்டர் வருவார் என்று சொன்னாரே,எப்போது வருவார் என்று தெரியவில்லையே!


நான் தாதிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றேன். அங்கே ஆளுக்கு ஒரு காஃபிக் கோப்பையைக் கையில் வைத்துக்கொண்டு, பேச்சுக்கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. ஒரே சிரிப்பும், பேச்சுமாக இருக்கிறார்கள். மூன்று பேர்! என் மனநிலையில் அந்தச் சிரிப்பும் பேச்சும் ஒரு எரிச்சலைக் கிளப்புகிறது. நான் நின்று கொண்டே இருக்கிறேன். ஏன், என்ன என்று கேட்க நாதியில்லை!
நானே வலுக்கட்டாயமாக அவர்களைக் கூப்பிட்டு, 'மணி மூன்றாகப் போகிறதே. எப்பது டாக்டர் வருவார்?' என்று கேட்டேன்.


"வருவார்.வருவார்."

"அதுதான் கேட்கிறேன். வருவார் என்று தெரியும். ஆனால் எப்போது?"

"அது தெரியாது. எல்லோரும் பிஸியாக இருக்கிறார்கள். வந்துவிடுவார்."

"எப்போது வருவார் என்று கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள்."

"நாங்கள் விசாரித்துச் சொல்கிறோம். நீங்கள் உங்கள் இடத்திற்குச் செல்லுங்கள்."

"இப்போதே விசாரிக்கலாமே!"

"இப்போது நாங்கள் கொஞ்சம் 'பிஸி"


என்ன பிஸி? அரட்டை அடித்துக் கொண்டு காஃபி அருந்திக் கொண்டிருப்பதற்குப் பேர் 'பிஸி'யா? ( ஒருவேளை அதுதான் நிஜமான 'பிஸி'யோ?)


"உங்களுக்கு 'பிஸி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? எது பிஸி? இப்படி உட்கார்ந்து சிரித்துக்கொண்டு அரட்டை அடிப்பதுதான் நீங்கள் சொல்கின்ற 'பிஸியா? இந்தியாவில் இருக்கும் ஆஸ்பத்திரிகளில் போய்ப்பாருங்கள். 'பிஸி' என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்னஎன்று தெரியும்.."

வெடித்துக் கொண்டு வெளிவந்தது வார்த்தைகள் என் வாயிலிருந்து! என் குரலில் இருந்த கோபம் எனக்கே தெரிந்தது!விடுவிடுவென்று அந்த இடத்தைவிட்டு மறுபடி இவருடைய அறைக்கு வந்தேன்.


என் முகம் போன போக்கைப் பார்த்தே இவர் புரிந்து கொண்டதுபோல,' என்ன சண்டை போட்டியா? 'என்று நிதானமாகக் கேட்டார்.

என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற ஆற்றாமை என் கண்களில் கண்ணீராக வழிந்துகொண்டிருந்தது.

எண்ணி மூன்றாவது நிமிடம் ஒரு டாக்டர் அறை வாசலில் தோன்றினார்! 'ரொம்பக் கோபமாக இருக்கின்றீர்கள் போலிருக்கிறதே! என்னால்ஏதாவது உதவ முடியுமா?' இனிப்புப் பேச்சு! ஹ்ஹ, யாருக்கு வேணும் இந்த மிட்டாய்ப் பேச்சு?

"எவ்வளவு நேரம் இன்னும் காத்திருப்பது? விபத்து நடந்து நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டது? எந்த மாதிரி 'சேவை' செய்கின்றீர்கள்?"

"இங்கே இப்போது இயங்குவது ஒரு 'ஆபரேஷன் தியேட்டர்'தான்.

அதனால்தான் கால தாமதம். தியேட்டர் ரெடி ஆனவுடன் உங்களுக்குஅறுவை சிகிச்சை நடக்கும்."

"என்ன? இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் ஒரே ஒரு தியேட்டர்தானா? மத்த தியேட்டர்கள் எல்லாம் என்ன ஆச்சு?"

"அது தெரியாது. இப்போது இயங்குவது ஒன்றுதான்!"

மறுபடி எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும். எனக்குக் கோபம் வந்தால் ஒரே சாமியாட்டம்தான். கைகால் எல்லாம் தடதட என்று ஆடும். என்ன பேசுகிறேன் என்ற நிதானம் எல்லாம் அம்பேல்.வார்த்தைகள் படபடவென வந்துவிழும்.

'இதுதான் சேவையா? இதற்குத்தான் நாற்பத்தியேழரை சதவீதம் வரி செலுத்தறோமா? அங்கே என்னன்னா நர்ஸம்மாங்க எல்லாம் அரட்டைக்கச்சேரி செஞ்சுகிட்டு இருக்காங்க. ஒரு ஃபோன் செஞ்சு டாக்டரைக் கூப்பிடக்கூட முடியாத 'பிஸி'யாம். எல்லா வார்டுலேயும் நோயாளிங்களே இல்லே. மிஞ்சிபோனா இந்த வார்டுலெயே அஞ்சு பேருதான் இருக்காங்க. அதுக்கு மூணு நர்ஸ்ங்க!'

'நோயாளிக்கு மட்டுமில்லை, அவுங்ககூட இருக்கறவங்களுக்கு எவ்வளவு மனசு பாதிக்கப்படுதுன்னு புரியாதா? எதுக்கெடுத்தாலும் உயிருக்குஆபத்து இல்லேன்னு சொல்றீங்க. அப்ப உயிர் போனாத்தான் சிகிச்சை செய்வீங்களா?'

'உங்க மனக்கஷ்டம் புரியுது. ஆனா எங்க சேவையை மேம்படுத்த என்ன செய்யலாம்ன்னு உங்க கருத்துக்களைச் சொல்லுங்க.' மெதுவா 'டிஷ்யூ பாக்ஸ்' எடுத்து என்பக்கம் நீட்டறார். கண்ணைத் தொடைச்சுகறதுக்காம்!

கையால ஒரே தட்டு! அந்த பாக்ஸ் எகிறி சுவரோரம் போய் விழுந்தது.

'சேவையை மேம்படுத்தறதா? மொதல்லெ சேவை எங்கே? இருந்தாத்தானெ அதை மேம்படுத்தறதைப் பத்திக் கருத்து சொல்ல முடியும்?'

'இங்கே டாக்டருங்க நர்ஸ்ங்கெல்லாம் இப்ப ரொம்பக் குறைவா இருக்காங்க. அரசாங்க நிதி வேற குறைவாத்தான் கிடைக்குது. எல்லோரும் மற்ற நாடுகளுக்கு வேலைக்குப் போயிடறாங்க.ஆளுங்க பற்றாக்குறையா இருக்கு.'


'அப்ப மற்ற நாடுகளிலே இருந்து இங்கே வந்து வேலை இல்லாம தவிக்கற டாக்டருங்களை வேலைக்கு எடுக்கணும். என்ன நிதி வேற குறைவு?நாங்க கட்டற வரிகள் எல்லாம் எங்கெ போகுது? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி ஆஸ்பத்திரியை அலங்கரிச்சு வச்சுட்டாப் போதுமா?அலங்காரம் முக்கியமா? ஆளுங்களுக்குச் சிகிச்சை முக்கியமா? பத்துநாளுக்கு தியேட்டர் கிடைக்கலேன்னா, இப்படியே பத்துநாளும் வச்சிருப்பீங்களா?'


'ஐயாம் சாரி, ஐயாம் சாரி'ன்னு சொல்லிகிட்டே இருக்கார். எனக்கோ எரிச்சல்ன்னா எரிச்சல்.


'உங்க நிலமை புரிகிறது. நான் உடனே என்ன செய்யலாம் என்று பார்க்கிறேன். இவருக்கு ரத்தம் தொடர்ந்து வெளியாவதை நிறுத்த ஒரு ஊசிபோடுகிறேன். தொற்று ஏற்படாமல் இருக்க இன்னோரு ஊசி ஏற்கெனவே போட்டாயிற்று. வலியும் உணர முடியாதபடி மருந்து கொடுத்தாயிற்று.பசிக்காமலிருக்கவும் சோர்வு நீங்கவும் 'ட்ரிப்' தொடரச் சொல்கின்றேன். சரியா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை தொடரும்.தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம்' மெதுவா நழுவிட்டார்!


ஆன்னா ஊன்னா ரத்த அழுத்தம் பார்க்க ஆள் வந்துருது. இப்ப இருக்கற நிலையிலே எனக்குத்தான் ப்ரெஷர் செக் செய்யணும்!

மகள் கீழே போய், எனக்கு ஒரு காஃபி வாங்கிக் கொண்டு வந்தாள்.

இப்போது ஒரு நர்ஸம்மா வந்து, தியேட்டர் இரவு பத்துவரையே வேலை செய்யும் என்றும், இன்றிரவு அறுவை சிகிச்சை நடக்கவில்லையெனில்,மறுநாள் காலை 6 மணிக்குக் கட்டாயம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

மகளை வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு, அப்பாவுக்கு மாற்றுடை கொண்டுவரும்படிச் சொன்னேன். இவரும் மெதுவாகக் கண்ணயர்ந்தார்.

எனக்குதான் எண்ண ஓட்டம். நம்மூரில் ஆஸ்பத்திரிகளில் எவ்வளவு நோயாளிகள். படுக்கைகள் இல்லாமல் கட்டிலின் இருபுறமும் கால்வைத்டு இறங்கக்கூட முடியாதபடி எத்தனைபேர் வெறும் பாய்களில் படுத்துக் கொண்டிருப்பார்கள். இருவது 'பெட்' இருக்கும் இடத்தில் இருநூறு நோயாளிகள்! அந்த நர்ஸ்களுக்கும், டாக்டர்களுக்கும் எவ்வளவு வேலைச்சுமை! பாவம்தானே?


இன்னும் வரும்

பூசாரிணி?

கண்டதைக் கற்றால்.....


ஏங்க கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆவாங்களாமே. உண்மையா?


இது எப்படிங்க சரியாகும்? கண்டதையும் கற்றால் அறிவு வளர்ந்து(!!!!) பண்டிதன் ஆனாலும் ஆயிருவாங்களோ?

இல்லேன்னா, கண்டதை எழுதுனாலும் ...........?

எழுதறதுன்னு ச்சும்மா எழுதி வைக்கறதில்லை. அதை நாலு பேர் படிச்சுப் பாராட்டணும்.அப்படீன்னா அது அச்சுலே வந்தாத்தானே நாலு மனுஷா படிக்கமுடியும். எண்ணிப் பார்த்தா ரெண்டு கையிலே இருக்கற பத்து விரல்லே எண்ணிக்கற மாதிரிதானே பத்திரிக்கைகள் முந்தி வந்துக்கிட்டு இருந்துச்சு.


நாம எழுதி, அதுவும் நல்ல வெள்ளைக் காகிதத்துலே ஒரு பக்கம் மட்டுமே அடித்தல் திருத்தல் இல்லாம அழகா, புரியுற( எழுத்து புரியணும். கதை இல்லை!) எழுதி, அதுக்கு வேண்டிய ஸ்டாம்ப்பு ஒட்டி, இன்னும் அது அவுங்களுக்குப் பிடிக்கலைன்னா அதை அவுங்க திருப்பி அனுப்பறதுக்கும் தேவையான ஸ்டாம்ப்புன்னு உள்ளெவச்சு அனுப்பிட்டு, 'தேவுடு காத்து' இருக்கணும். இதுக்கெல்லாம் எவ்வளோ செலவுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.


இப்ப இந்த இணையம் வந்தபிறகு, பரபரன்னு எழுதுனோமா, நம்ம பதிவுலேயே போஸ்ட் பண்ணிக்கிட்டமா,நாலுபேர் வந்து பார்த்தாங்களா, கையோடு பூமாலையோ, இல்லை அழுகல் முட்டையோ வீசிப்போட்டாங்களா,நமக்கும் நம்ம எழுத்தோட லட்சணம் புரிஞ்சு போச்சான்னு எல்லாமே ஏறக்கூடி வந்தா ஒரேநாள்தான் வெயிட்டிங்.


இப்படியெல்லாம் மக்கள்ஸைப் பரிசோதிச்சதுக்கு கூலி சரியாக் கிடைச்சிருச்சு.


'நீ ரொம்பப் படிச்சுக் கிழிச்சுட்டே. எழுதியும் ஏட்டைக் கெடுத்திட்டே. இனிமேப்பட்டு நீ ஒரு பண்டிதை ஆகக்கடவாய்'ன்னு அசரீரி சொல்லிருச்சு.

தேசிகள் உலகில் நான் ஒரு பண்டிட். இப்பத்தானே எடுத்தாங்க. அதனாலே நமக்கெல்லாம் நல்லாத் தெரிஞ்ச ஒரு வலைஞருக்கு அசிஸ்டெண்ட்டா( அப்ரண்ட்டீஸூ!) உத்தியோகம் கிடைச்சிருக்கு.


அதான் உங்ககிட்டே சொல்லிக்கலாமுன்னு இன்று ஒரு தகவல்.


அதுசரி, பெண்கள் பூசாரியா ஆகலாமா? கூடாதா?

Sunday, June 18, 2006

ஆ.............விரல்!!! 5 & 6

ஆ.............விரல்!!! 5 கார் வந்தது! கூடவே?
----------
மறுநாள், இவர் வேலைக்கு மகள் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். நானும் என் வேலைகளைச் சீக்கிரம் முடிக்கமுயன்று கொண்டிருந்தேன்.


அப்போது பார்த்து, நம் வீட்டுக் குளியலறையில் ஒரு ஒரு ஹீட்டர்/விளக்குப் போட,எலக்ட்ரீஷியன் வந்தார். அவரை, மற்றொருநாள் வருமாறு சொன்னதற்கு, நீங்கள் பதினோரு மணிக்குத்தானே போகவேண்டும். நான் வேலையை ஆரம்பித்து செய்துகொண்டிருக்கின்றேன்.அதற்குள் முடிக்க முடியும் என்று நினைக்கிறேன். அப்படி முடிக்க முடியவில்லையென்றால், மீதி வேலையை நாளை வந்து முடிப்பேன் என்றார். சரி, சின்ன வேலைகளுக்கு ஆட்கள், எலக்ட்ரீஷியன், ப்ளம்பர் போன்றவர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதே. செய்யும்வரை செய்யட்டும் என்று வேலையை ஆரம்பிக்கச் சொன்னேன்!


அந்த ஆள் வேலை செய்யும் வேகத்தைப் பார்த்தால் இந்தச் சின்ன வேலைக்கே ஒரு பத்து நாட்கள் வேண்டும்போல் இருந்தது. அப்போது கோபால் தொலைபேசியில் கூப்பிட்டு, நான் வங்கிக்குப் போய்வந்தேனா என்று கேட்டார். நான் இன்னும் இல்லை என்று காரணத்தைக் கூறியவுடன், அவரே வங்கிவேலையை முடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அன்று பிற்பகல் 'மிகவும் முக்கியமான' ஒரு வேலை இருப்பதால் நான் 11 மணிக்குத் தயாராக இருந்தால் போய் வண்டி 'டெலிவரி' எடுத்துவிடலாம் என்றும் சொன்னார்.


நான் சமையலை முடிப்பதில் தீவிரமானேன். அதே சமயம் 'எலக்ட்ரீஷியன்'க்கும் ஒரு குரல் கொடுத்தேன், மறுநாள் வந்து வேலையை முடிக்குமாறு.

ஒரு இருபது நிமிட இடைவெளியில், கோபால் வீட்டுக்குள் வந்தார்.
"வங்கிக் காசோலை எடுத்தாச்சா?"


எல்லாம் ஆச்சு. வண்டியைக் கொண்டாந்துட்டேன்!

எப்படிப் போனீங்க?

மகளுக்கு ஃபோன் செய்தேன். அவள் வருகிறேன் என்றதாலே , நாங்க ரெண்டுபேருமாப் போனோம். என்னை அங்கே இறக்கிவிட்டு, அவள் அவளுடைய வண்டியைக் கொண்டு போனாள்.

பின்னாலே 'எலக்ட்ரீஷியன்' வண்டி நிக்குதே, எங்கே நிறுத்தினீங்க?

முன் பக்கம்தான். வந்து பாரேன்!

நான் வெளியே வந்து பார்த்தபோது, புது ஜ்வலிப்புடன் சாதுவாக நிற்கிறது நம் 'சில்வர் ஹோண்டா'

எல்லாம் சரியா இருக்கா?

நல்லாதான் இருக்கு. நீ பாரு! உள்ளே உக்காந்து பாரு, ஸீட் உயரம் உனக்கு சரியா இருக்கான்னு!

நான் 'ட்ரைவர் ஸீட்'டில் அமர்ந்தேன். இவர் கார் கதவை வெளியில் இருந்து சாத்தினார்.

நான் 'ஸீட்டின் உயரத்தை அதிகரிக்கும் குமிழைத் திருப்பிக் கொண்டே, தற்செயலாகத் திரும்பினால், இவர் கையைத் தூக்கியவாறே, பேயறைந்த முகத்துடன் நிற்கிறார். தூக்கிய கையிலிருந்து, ரத்தம் வழிகிறது. நான் அலறிக்கொண்டே வெளியிலிறங்கி," ஐயோ ! கைக்கு என்னாச்சு?" என்று கேட்க "விரலு துண்டாயிடுச்சு" என்கிறார். " எப்படி ? என்னாச்சு? ஐயோ! விரல் எங்கே? என்று நான் கதறிக்கொண்டே கேட்க, 'கீழே பாரு, உன் காலடியிலே!"
ஐய்யய்யோ ஐய்யய்யோ என்று கத்திகொண்டே நான் பார்க்க, அங்கே ஒரு நகத்துடன் கூடிய விரல்துண்டு!


இன்னும் வரும்


ஆ.............விரல்!!! 6 ஆம்புலன்ஸ் ---------------


நான் அழுதுகொண்டே அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்து, அதை ஒரு glad wrap -ல் சுற்றி,ஃப்ரிஸரில் வைத்துக்கொண்டே, தொலைபேசியில் 'ஆம்புலன்ஸ்' ஸைக் கூப்பிட்டேன். இங்கே, போலீஸ், ஆம்புலன்ஸ், தீ விபத்து எல்லாவற்றுக்கும் ஒரே எண்தான், 111.


நான், ஹிஸ்டீரியா வந்தவள்போல, அழுது, அரற்றிக்கொண்டு அவர்களிடம் ஆம்புலன்ஸ் அனுப்பச் சொல்கிறேன்.


Please calm down. What happened to your husband ? Listen to me, please listen to me.You are the only person who could be a help till we come. What have you done with that piece of the finger?


I kept it in the freezer.


Good girl. tell your husband to hold the hand above his head. Don't panic! We are on the way.


நான் 'எலக்ட்ரீஷியனை' உடனே போகும்படிச் சொல்லி விட்டு, அடுப்பையும் அணைத்துவிட்டு வெளியே பாய்ந்தேன்.


மகள் ஓடி வருகிறாள் அம்மா,அம்மா என்று கூப்பிட்டபடி. எப்படி அவள் இங்கே என்று அழுதுகொண்டே கேட்கிறேன்.


"அப்பாதான் கைத்தொலைபேசியில் கூப்பிட்டார். கவலைப் படாதே அம்மா, என் நண்பனுக்கு கால்விரல் துண்டாகி,அதை மறுபடி வைத்துத் தைத்துவிட்டார்கள். அப்பாவின் விரல்துண்டு எங்கே?"


"ஃப்ரீஸரில்"


ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. 'நீங்க ரெண்டுபேரும் போங்க. நான் வீட்டைப் பூட்டிக்கொண்டு, அந்த 'எலக்ட்ரீஷியனை' அனுப்பிவிட்டுஆஸ்பத்திரிக்கு வருகிறேன்' என்றாள்.


பத்தொன்பதே வயதான பெண்ணுக்கு என்ன மனவுறுதி பாருங்கள்! பெரிய மனுஷி போல பொறுப்பாகப் பேசுகிறாள்!


கோபாலும், நானும் ஆம்புலன்ஸில் பயணிக்கிறோம். என் மூடிய கையில் விரல்துண்டு! போகும்வழியிலேயே இரத்தஅழுத்தம் போன்றவைகள் சரிபார்க்கப் படிகின்றன! கோபாலும், கைத்தொலைபேசியில் ஆபீஸுக்கு விவரத்தைச் சொல்லி, பிற்பகல் நடக்கவிருந்த மீட்டிங்கை, மற்றொருவர் மேற்பார்வையில் நடத்தும்படியும், அடுத்த நாள் வேலைகளைப் பற்றி மாலையில் தெரிவிப்பதாகவும் சொல்கிறார்.தாற்காலிகமாக ஒரு 'ஸ்டெரலைஸ்' செய்த துணியை, விரல் வெட்டுப்பட்ட இடத்தில் போட்டிருந்தாலும் ரத்தம் வருவது நிற்கவில்லை. அவருடைய சட்டையெல்லாம் ரத்தம்!


ஒரு கையால் கைத்தொலைச் பேசியில் பேசியபடியும், ரத்தம் வழியும் கையைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் உட்கார்ந்திருக்கும் கோபாலைப் பார்க்கிறேன். வெறும் தலைவலி என்றால்கூட அரற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் கோபாலா இது? சாந்தமாக பேசிக்கொண்டிருக்கிறாரே?

இன்னும் வரும்

Saturday, June 17, 2006

ஆ.............விரல்!!! 4 'சில்வர் ஹோண்டா'


திரும்பி, வீட்டுக்கு வரும் வழியில், கோபால் "இன்று ஏலம் விடுவதை வேடிக்கைப் பார்த்துவிட்டுப் போகலாம்" என்றதால் மறுபடியும் ஏலம் விடும் இடத்திற்குப் போனோம். அங்கே ஏலம் நடந்து கொண்டிருந்தது. ஒரு மேடை போன்ற அமைப்பு ஒளி வெள்ளத்தால் பளிச்சிட்டுக் கொண்டிருக்க, அதில் ஒரு கார் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அட்டகாசமான ஸூட் அணிந்திருந்த இளைஞன் அதை ஓட்டிக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, 'ஸ்டைலாக' இறங்கிவந்து அதனருகே நின்றான். பின்னால் இருந்த பிரமாண்டமான திரையில் அந்தக் காரைப் பற்றிய விவரங்கள் பளிச்சிட்டன. எந்த வருடம், என்ன மாடல், எத்தனை கை மாறியது, எந்த கம்பெனி கார் என்ற அதன் 'ஜாதகம்' முழுதும் இருந்தது. 'மைக்'கிலும் அதன் வர்ணனை தொடர்ந்தது. பார்வையாளர்களுக்கு அதை மனதில் எடை போட்டுப் பெருமூச்சுவிட சில நிமிடஇடைவெளி தந்த பிறகு, அதற்கான ஏலம் ஆரம்பமானது.


முதலில், ஐயாயிரம் என்று ஆரம்பித்தார்கள். யாரும் வாயைத் திறக்காததால் நாலு, மூன்று, இரண்டு என்று இறங்கிவந்து, பின் ஆட்கள் கேட்க ஆரம்பித்ததும், இரண்டாயிரத்து ஐந்நூறு, மூவாயிரம் என்று உயரப் போக ஆரம்பித்து ஏழாயிரத்திற்கு முடிந்தது.அடுத்த வண்டி மேடைக்கு வரும் சில நிமிடங்கள் வரை அங்கிருந்த பார்வையாளர் அனைவரும், ஏதோ ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்போல அன்யோன்யத்துடன், ஏழாயிரம் ரொம்ப மலிவு. வாங்கியவன் அதிர்ஷ்டசாலி. வெளியே இதே வண்டி பத்துக்குக் குறையாது என்றெல்லாம் கருத்து மழை பொழிந்து கொண்டிருந்தனர். அடுத்த வண்டி வந்தது. எல்லாம் முன்போலவே. விலை மட்டும் கூடுவதும், குறைவதுமாகப் போய்க்கொண்டிருந்தது.


ஆனால் ஒன்று. அந்த விற்பனையாளர் வண்டிகளை வெகுவாக வர்ணனை செய்யும்போது, சும்மா வேடிக்கைப் பார்க்கப் போனவருக்கும் ஒரு வண்டியை வாங்க வேண்டுமென்ற துடிப்பு வந்துவிடும்! அந்த அளவுக்கு இருக்கும் அந்த வசீகரமான வர்ணனைகள்!


அப்போது, ஒரு வண்டி மேடைக்கு வந்தது. வெள்ளி நிறத்தில் ஒரு 'ஹோண்டா ஸ்போர்ட்ஸ் மாடல் கார்' மூன்று கதவு. அதன் வர்ணனையைக் கேட்கும்போதே ரொம்ப ஆசையாக இருந்தது. ஒளிவெள்ளத்தில் நிற்கும் வண்டி ஏதோ தேவலோகத்திலிருந்து வந்திறங்கிய புஷ்பக விமானம்போல ஜ்வலித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் கோபாலுக்கு ஒரு நப்பாசை வந்தது போலும்! மெதுவாக என்னிடம் " ரொம்ப நல்லா இருக்குல்லே! ஏலம் கேளு" என்றார். நம் வீட்டுலே இந்த ஏலம் கேக்கறது போன்ற முக்கியமான விஷயங்களிலே நான் தான் 'எக்ஸ்பர்ட்!'எல்லாம் இங்கே வந்து கற்றுக்கொண்ட அனுபவம்தான்!


"ஏங்க, இந்த வண்டி 3 கதவாச்சே, நமக்கு 5 கதவுதானே சரிப்படும்!"

"ரொம்ப குறைஞ்ச மைலேஜ். பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. விலையும் மலிவாதான் போய்கிட்டிருக்கு!"

"ஐயோ, இதை நான் அங்கே ஹாலில் இருந்தபோது கவனிக்கலையே ! உள்ளே 'இன்டீரியர்'எப்படி இருக்கோ!"

"இங்கே இருந்து பார்த்தா நல்லாதான் இருக்கற மாதிரி தெரியுது!"

"இதை வாங்கற எண்ணம் இருந்திருந்தா, ஏலம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே ஓட்டிப் பார்த்திருக்கலாமே! ஸ்போர்ட்ஸ் கார் மாடல்என்பதாலே, ஸீட் குள்ளமா, உயரக்குறைவா இருக்குமே?"

"ஹோண்டா நல்ல கம்பெனிதான். இந்த வண்டியை நான் எடுத்துக்கறேன். நீ நம்ம 'டொயொடா'வை எடுத்துக்கோ. சரி, நீ கேக்கஆரம்பி!"


இரண்டு, மூன்று, நாலு, ஐந்து என்று ஏலம் ஏறிக் கொண்டே போகிறது. இப்போது எனக்கும், மற்றொரு ஆளுக்கும்தான் போட்டி.ஆறு என்று நான் கையை உயர்த்துகிறேன்! மற்ற ஆள் பேசாமல் இருந்தபோது, ஏலம் விடும் ஆள் சொல்கிறார், இனி நூறு நூறாய்கூட்டிச் சொல்லலாம் என்று.
மற்றொரு ஆள் "ஆறாயிரத்து நூறு" என்றவுடன், " பேசாம விட்டுடலாம். ரொம்ப ஏறிகிட்டே போகுது" என்றேன். கோபால்" இன்னும் நூறு சேர்த்துக் கேளு" என்றதும் என் கை உயர்ந்தது ஆறாயிரத்து இருநூறு என்று. அதன்பின் ஒரு சத்தமும் இல்லை.ஏலம் விடுபவர் இன்னும் யாராவது கேட்கவேண்டும்,அதுதான் 'ஃபைனல்' என்றவுடன் கோபால், பரவாயில்லை கேளு என்றார். கேட்டேன்,"ஆறாயிரத்து முன்னூறு" ஏலம் முடிந்தது. விதி நமக்கு முன்னால் நின்று கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருப்பது நம்கண்ணுக்குத் தெரியவேயில்லை!!!!


அதன் பின் அங்கேயுள்ள அலுவலகத்தில் சென்று முறைப்படி செய்ய வேண்டியவைகளைச் செய்யச் சொன்னார்கள். புதிய 'ரெஜிஸ்ட்ரேஷன்' எடுப்பது, 'ஃபிட்னஸ், 'ரோட் டாக்ஸ்' என்று மேலும் சுமார் 700 ம் சேர்த்து மொத்தம் 7,000 டாலர்கள்ஆனது. அன்று முன்பணம் 2000 கட்டிவிட்டு, மறுநாள் மீதிஉள்ள 5000க்கு வங்கிக் காசோலை கொண்டுவந்து தரவேண்டும் என்றும்,அதற்குள் அவர்களும் செய்யவேண்டிய ஃபார்மாலிட்டி' யை முடிப்பதாகவும் சொல்லப்பட்டது.


அதன்பின் 'நம் கார்' எங்கே என்று தேடி, அருகில் போய்ப் பார்த்துவிட்டு, நல்ல வண்டிதான். விலையும் பரவாயில்லை.என்று எங்கள் 'சாமர்த்தியத்தை' நாங்களே மெச்சிக் கொண்டு வீடு திரும்பினோம். மறுநாள் காலையில் நான் போய் வங்கிக் காசோலை எடுத்துவர வேண்டுமென்றும், கோபால் மதிய உணவுக்கு வீடு வரும்போது, அவருடன் ஏலம் நடந்த இடத்திற்குச் சென்று அதைக் கட்டிவிட்டு'புது' வண்டியை அவர் எடுத்துக் கொண்டு வந்துவிடுவார் என்றும், நான் மகளின் வண்டியை ( அதையல்லவா கடன் வாங்கியுள்ளோம்)எடுத்துக்கொண்டு வீடு திரும்புவது என்றும் 'பக்கா'வாக திட்டம் போட்டோம்!


இன்னும் வரும்

Friday, June 16, 2006

ஆ.............விரல்!!! 3 கார் ஏலம்!

மறுநாள், ஞாயிறு என்பதால், திங்களன்றுதான் காரை, மதிப்பீடு செய்யுமிடத்திற்குக் கொண்டுபோனோம். முன்பகுதியில் 'ஹெட்லைட் உடைந்துவிட்டிருந்தது. 'பானட்'டின்மேல் அம்மைத் தழும்புபோல கொத்தியிருந்தது. எல்லாம் செங்கல் செய்த வேலை.ஆனால் ஓட்டும் நிலையில் இருந்ததால் பிரச்சனையில்லாமல் ஓட்டிக்கொண்டு போக முடிந்தது.


அங்கே அவர்கள், பழுது பார்க்கும் ஓரிடத்தின் விலாசம் சொல்லி, அங்கே கொடுத்தால் வண்டி விரைவில் கிடைக்கும் என்று பரிந்துரை செய்தனர்.உடனே அவர்கள் சொன்ன இடத்திற்கு வண்டியை கொண்டுபோனோம். அவர்களும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, வெள்ளிக்கிழமை தயாராகிவிடும் என்றும் சொன்னார்கள். சரி ஒரு நான்கு நாட்கள்தானே. சமாளித்துவிடலாம் என்றிருந்தோம்.


மகளுக்காகத் தனிக்கார் வாங்கியிருந்தோம். நம் வீட்டு 'கராஜ்'-ல் இரண்டு வண்டிகள் மட்டுமே நிறுத்த இடம் என்பதால், என்னுடையவண்டியை ஏற்கெனவே விற்றுவிட்டேன்.எனக்கும், கோபாலுக்கும் இப்போது ஒரு கார் தான் இருந்தது. எனக்கு வண்டி தேவையாக இருந்தால்அவரைக் கொண்டுபோய் அலுவலகத்தில் விட்டுவிட்டு, வண்டியை நான் எடுத்துக்கொண்டு போவேன். நம் வீட்டிலிருந்து ஒரு 3 நிமிட ட்ரைவ்தான் அவருடைய அலுவலகம்!


போன வருடம், மகளும் தனி வீடு பார்த்துக் கொண்டு போய்விட்டதால், இன்னுமொரு கார் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்துவிட்டோம். வாங்கியிருந்தால் எவ்வளவு உபயோகமாக இருந்திருக்கும். இப்போது, ஒரு வண்டிகூட இல்லையே என்ற கவலை. கோபாலின் அலுவலகம் ஒரு 20 நிமிட நடையில்தான் இருந்தது என்றாலும், இங்குள்ள குளிர் காரணம் நடந்தெல்லாம் போக முடியாது .மேலும், மடிக் கணினியையும் தூக்கிக்கொண்டு போக வேண்டுமல்லவா?


மகளும், அவளுடைய வண்டியை சில நாட்களுக்குக் கடன் கொடுத்தாள். வெள்ளியன்று வண்டி கிடைக்கவில்லை. இன்னும் சிலநாட்கள் தாமதிக்கும் என்றும் சொன்னார்கள். வீக் எண்டும் வந்துவிட்டது.


ஞாயிறன்று, இங்கே ஒரு கார்களை ஏலம் விடும் இடத்திற்குப் போகலாம் என்று கோபால் கூறினார். மேலும் இன்று 'ரிசர்வ்' கிடையாது என்றார். நான், உங்களுக்கு எப்படித் தெரியும் என்றதற்கு, 'செய்தித்தாளில்' நேற்றே வந்திருந்ததே என்றார். இந்த ஊரில் ஞாயிறு அன்று நாளிதழ் கிடையாது. சனியன்றே வார இறுதிக்கென்று 'பேப்பர்' வரும்.


இங்கு புதிய வண்டிகள் வாங்க வேண்டுமென்றால் செலவு கூடுதல். குறைந்தது நம் இந்திய ரூபாயின் மதிப்பில் பத்து லட்சங்கள் ஆகும்.ஆனால், 'செகண்ட் ஹேண்ட்' வண்டிகள் என்றால் 2500 ரூபாய்க்குக்கூட கிடைக்கும். அது மிகவும் பழையதாகவும், பல கைகள் மாறியும் இருக்கும்! இதுவே நியூஸிலாந்து நாணய மதிப்பில் சொல்வதென்றால் 100 டாலரிலிருந்து 35,000 டாலர் வரை ஆகும். எல்லாம் காரின் 'மேக் & மாடல்' பொறுத்து. இவையுமே டொயோடா, சுபாரு, மிட்சுபிஷி, ஹோண்டா இந்த மாதிரி வண்டிகளுக்குத்தான்.பென்ஸ், பென்ட்லி என்றால் அவ்வளவுதான்! அதோட 'ரேஞ்சேஏஏஏஏஏ வேறே!'


நமக்கு வேண்டியது அதிகம் ஓடியிருக்காத, ஒரு மூன்று வருடப் பழக்கமான வண்டி. தானியங்கியாக இருக்கவேண்டும்.உள்ளே வசதியாகவும், ஹீட்டர் நன்கு வேலை செய்வதாகவும், நம்பிக்கையான 'ப்ராண்ட்' ஆகவும் உள்ளதுதான். 5 கதவுகளுள்ள, 'ஹாட்ச் பேக்' வண்டியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். விற்று விட்ட என் வண்டியை நினைக்கும்போதே நெஞ்சம் நடுங்கிவிடும். ஹீட்டிங்கும் சரியில்லை, சைடு வியூ மிர்ரர், பவர் ஸ்டீரிங் இப்படி ஒன்றும் இல்லை. அதையும் நான் ஏழரை வருடம் வைத்து ஓட்டி இருக்கிறேன் என்றால் என் நெஞ்சுரத்தை மெச்சவே வேண்டும். இது என்னிடம் வந்த கதையை பின்பு ஒருநாள் சொல்லுவேன்.


இங்கெல்லாம் உபயோகப்படுத்திய கார்களை விற்பதற்கென்றே கணக்கில்லாத இடங்கள் இருக்கின்றன. நகரம் முழுவதும் கொஞ்சம்பெரிய இடமாக, ஒரு பத்து, இருபது வண்டிகளை நிற்கவைப்பதற்குத் தோதான இடமாக இருந்தால் போதும். அடுத்த நாளே அங்கேஒரு 'கார் யார்ட்' முளைத்துவிடும்! அவைகளை வாங்குவதற்கும் ஆட்கள், ஏதோ பிரார்த்தனைக்குக் கோவில் கோவிலாக சுற்றுவது போல பார்த்துக்கொண்டே போவார்கள்.முக்கியமாக வார இறுதிகளில் இந்தக் கூட்டம் அதிகரித்துவிடும். நல்ல வண்டி வைத்திருப்பவர்களும்ஏதோ 'டைம் பாஸ்' போல இதில் கலந்துகொள்வார்கள்.


நாங்கள் இருவரும் ஏலம் விடும் இடத்திற்குச் சென்றோம். அங்கே, அன்று ஏலம் போடும் கார்களையெல்லாம் நம் பார்வைக்கு வைத்திருந்தார்கள்.பார்த்த எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒன்றும் சரிவரவில்லை.


அப்போது, அடுத்த ஹாலில் நல்ல வண்டிகள் இருந்தது கண்ணில் பட்டது. அதில் ஒன்று எனக்குப் பிடித்தமாதிரி இருந்தது. ஆனால் அது மறுநாள் மாலைதான் ஏலம் விடப்படும் என்றார்கள். சரி, நாளையே வரலாம் என்று வெளியே போனோம். அப்படியே போகிற வழியில்ஏதாவது 'கார் யார்ட்'ல் இதே மாடல் என்ன விலை என்று பார்க்கலாம். அப்போது நாளை ஏலம் கேட்க வசதியாக இருக்கும் என்றுபோய்ப் பார்த்தோம்.

இன்னும் வரும்

Thursday, June 15, 2006

நியூஸிலாந்து பகுதி 44

இருவதாம் நூற்றாண்டு ஆரம்பிச்சது. இதுலே மொதல் இருபது வருசத்துலே வளர்ச்சியோட வேகம் ரொம்ப அதிகம். உள்ளூர் தபால் சேவை ஓஹோன்னு நடந்துச்சு. ஸ்டாம்ப்பு வந்துருச்சு. ஒரு பென்னி தலையை ஒட்டிட்டா நாட்டுக்குள்ளே எங்கே வேணுமாலும் தபால் அனுப்பிறலாம். 1902 லே மட்டும் ஜனங்க அனுப்புன தபால்கள் 13 மில்லியன்!( தபால்தலை ஆரம்பிச்சு இப்ப 150 வருசமா ஆனதுக்குக்காக புது ஸ்டாம்புகள் போட்டுருக்கு அரசாங்கம்)


ரெயில்பாதை போடறவேலை தீவிரமாச்சு. 1908லே வடக்குத் தீவோட 'மெயின் ட்ரங் ரெயில்வேஸ்' பாதை முடிஞ்சது. சரியா 40 வருஷமாயிருக்கு வேலை முடிய. (இந்தக் கணக்குலே பார்த்தா, இந்தியாமுழுசும் ரெயில்பாதை போட்டுருக்காங்களே, எவ்வளவு நாளாகி இருக்கும்?) ரெயில் ஓட ஆரம்பிச்சதும் ஜனங்கள் சுலபமா இங்கேயும் அங்கேயுமா வெவ்வேற எதிர்ப்பார்ப்புகளோடு போய்வந்தாங்க.


ஆனா வருமானத்துக்கு பஞ்சமில்லாம இருக்கணுமுன்னா பண்ணை வசுக்கிட்டாத்தான் நல்லதுன்னு பலரும் நினைச்சாங்க. குளிரூட்டற(ரெஃப்ரிஜெரேஷன்) வசதிகள் வந்ததாலே இறைச்சியும், வெண்ணெயுமா உலகத்தோட அடுத்த பக்கத்துலே விற்பனை சக்கைப்போடு போட்டுச்சு. 15000 பால்பண்ணைங்க இருந்துச்சாம்,1911லே.


அப்ப, இந்தப் பண்ணைங்களிலே வேலை செஞ்சவங்க கடினமா உழைச்சிருக்காங்க. குடும்பத்துக்கு 40 ஏக்கர். ச்சும்மா அப்படியே போட்டு வைக்க முடியுமா? மனுஷனுக்கு மட்டுமில்லே இந்த உழைப்பு. குதிரைகளும் சரிக்குச் சரியா உழைச்சதாம். காலையிலே அஞ்சரைக்கு எந்திருச்சு, மொதல்லே இந்தக் குதிரைகளுக்குத் தீனி வைக்கணும். திரும்ப ராத்திரி 10 மணிக்கு இதுங்களைக் கொட்டடியிலே அடைக்கிறப்ப தீவனம் வைக்கணும்.இதுக்கு நடுவிலே அப்பப்ப இதுங்க தானே புல் மேஞ்சுக்கும், வேலைகளுக்கு இடையிலே. பண்ணையிலே நிலத்தை உழுவறதுலே இருந்து, அறுப்பைக் கொண்டுவந்து தள்ளுரவரைக்கும் செமவேலை இந்தக் குதிரைகளுக்கு.ஒவ்வொரு பண்ணையிலேயும் குதிரைகள் கூட்டம். குதிரைங்க எவ்வளோ தண்ணீ குடிக்குமாம்?ஒருதடவைக்கு 20 வாளித் தண்ணீர் வேணுமாம் ஒரு டீமுக்கு. அநேகமா ஒரு டீமுன்னா ரெண்டு, இல்லேன்னா நாலு குதிரைங்க இருக்கலாம். அப்ப 20 வாளிக் கணக்குச் சரிதான் போல.


ஆட்டுமந்தைகளை எங்கேயும் பிரிஞ்சுபோக விடாம ஒரே இடத்துலே மேயவைக்கற வேலை யாருக்கு? நாய்களுக்கு. மந்தையைப் பார்த்துக்க மேய்ப்பன் இருந்தாலும், வேலை என்னவோ நாய்ங்களுக்குத்தான். ஷீப் டாக்(sheep dog)ன்னு சொல்ற இதுங்க வேலை செய்யற நேர்த்தியே தனிதாங்க. ஆடுங்க மேலே கவனமுன்னாக் கவனம், அப்படி ஒரு கவனம்.நம்மளைமாதிரி டவுனு ஆளுங்களுக்கு, இதைப் பார்க்கற கொடுப்பினை இல்லையின்னு, வருசம் ஒருக்கா, பெரிய ஊர்களிலே மூணு நாள் திருவிழா நடத்தறாங்க. அக்கம்பக்கக் கிராமங்களிலே இருந்து வந்து நடத்திக் கொடுக்கறாங்க.காளை, பசு, பன்னி, ஆடு, நாய்ன்னு கோலாகலமா இருக்கும்.


வயக்காட்டுலே இருக்கற எலித் தொந்திரவுக்காக பூனைகளையும் எக்கச்சக்கமா வளர்த்துக்கிட்டு இருந்தாங்க. குடும்பத்துலே எல்லாருக்கும் ஒவ்வொருவேலை காத்துக்கிடக்கும். கோழிங்க, பூனை, நாய் இதுங்களுக்குச் சாப்பாடு போட்டுப் பாத்துக்கறதுச்சின்னப் புள்ளைங்களோட வேலை. கொஞ்சம் வளர்ந்த பசங்களும், பொம்பளைங்களும் காய்கறித் தோட்டம், பழத்தோட்டம் பார்த்துக்கறது. அந்தந்த சமயத்துக்குத் தகுந்தாப்புலே கிடைக்கிற பழங்களைப் பதப்படுத்தறது, ஜாம் உண்டாக்கறது,அடுக்களை வேலை இப்படி. ஆம்புளைங்க வயக்காட்டைப் பாக்கறது, விவசாயம், ஆட்டு மந்தையிலே இருக்கற ரோமம் கூடுதலா இருக்கற ஆடுங்களைப் பிடிச்சு ரோமத்தைக் கையாலேயெ கத்தரிச்சு, பெரிய பெரிய பேலுங்களா உருட்டிவச்சு, ரெயில்லே ஏத்தி அனுப்பறதுன்னு இருந்தாங்க. ( இப்ப எல்லாத்துக்கும் மெஷீன் வந்துருச்சு. ஆட்டுரோமம் மழிச்சு எடுக்கறதை ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷனாக்கிட்டாங்க. நம்ம வெளிகண்ட நாதர் படம் காமிக்கறார் பாருங்க) ரெண்டுங்கெட்டான் வயசுன்னா, அடுப்பெரிக்க விறகு பொறுக்கறது, கோழிங்க வெவ்வெற புதருலே போட்டு வைச்சிருக்கற முட்டைகளைச் சேகரிக்கிறது, பன்னிங்களுக்கு தீனி போடறதுன்னு எப்பவும் எதாச்சும் வேலை. இடுப்பு ஒடியற மாதிரி. ஆனா எல்லாம் வாரம் ஆறு நாளைக்குத்தான். ஒரு நாள் கட்டாய ஓய்வு.

பசங்க கைச்செலவுக்குக் காசு சேர்க்கவும் ஒரு வழி இருந்துச்சு. காட்டு முயலுங்களைப் பிடிச்சு தோலை உரிச்சு,அந்தத் தோலை வித்துருங்களாம். இறைச்சியை? சமைச்சுக்கறதுதான். ரேபிட் ஸ்ட்யூ. பறவைகளைக் கண்டாலே யாருக்கும் பிடிக்காதாம்,விவசாயம் செஞ்சு விளைஞ்சுருக்கறதைத் தின்னுருதுங்களே. ஆலோலம் பாடி ஓட்டற முறையெல்லாம் தெரியாது போல. இந்தத் தொல்லையை ஒழிக்க வழி வச்சிருந்தாங்க அந்தந்த ஊர்லே உள்ளூர் ஆட்சி நடத்தறவங்க. ஒரு டஜன் பறவை முட்டைகளையோ, இல்லே ஒரு டஜன் பறவைத் தலைகளையோக் கொண்டுவந்து கொடுத்தா இவ்வளோ ( அப்ப ரெண்டு செண்ட்) காசுன்னு கொடுத்தாங்களாம். இப்படியே அரிதானபல பறவைகளுக்கு மோட்சம் கொடுத்துட்டாங்க.


வடக்குத்தீவுலே மவோரிகள்கிட்டே இருந்து போரிட்டுப் பிடிச்ச நிலத்தை வாங்கி பண்ணை அமைக்கறதுக்கு ஏகப்பட்ட போட்டி. இங்கே தெக்குத்தீவை விட அங்கே குளுரும் கொஞ்சம் குறைவுதான். பாகீஹா( வெள்ளைக்காரர்)குடும்பங்கள் அங்கே போய் குடியேற ஆரம்பிச்சாங்க. 1901 லே கணக்கெடுத்தப்ப இங்கே தெக்கே இருந்த மக்களைவிட வடக்கே ஜனம் கூடிப்போச்சு. இப்பவும் இருக்கற நாலு மில்லியன்லே மூணு மில்லியன் வடக்கேதான் இருக்கு.


நம்ம நாடுதான் ஒரே அழுக்கு. ஃபாரீன்லே சுத்தமுன்னா அப்படிச் சுத்தமுன்னு சொல்றவங்க ஒரு 106 வருசத்துக்கு முன்னாலே (??!!) இங்கெ வந்து பார்த்துருக்கணும்.


டவுன் லே நிறையப்பேர் குப்பைகளை தெருவுலே வீசிப் போடுவாங்க. இல்லேன்னா வீட்டுப் புழக்கடையிலே வீசிறது. இதெல்லாம் அங்கங்கே அழுகிக் கெட்டு நாறி, அதனாலே வியாதி வெக்கைன்னு பரவ ஆரம்பிச்சது. பண்ணை வச்சுருக்கறவங்க பரவாயில்லாம சுத்த பத்தமா இருந்தாங்க. எல்லாம் நகர மக்கள் பண்ணற அட்டூழியம்தான். இதுலேயும் பணக்கார வீடுகளிலே உள்ளே குழாயெல்லாம் போட்டு வச்சிருந்தாங்க. ஆனா முக்காவாசி இடங்களிலே வீட்டுக்கு வெளியே தோட்டத்துலே ஒரு மூலையிலேதான் கழிப்பறை. வெளியே ஒரு பாத் டப்( இதுக்கொண்ணும் கொறைச்சல் இல்லை!)வச்சிருப்பாங்க. அதுலேதான் குளிக்கிறது, அதுவும் வாரத்துக்கு ஒரு தடவை.


சுத்தம் இல்லாம கேடு வர ஆரம்பிச்சதும், 1900லே அரசாங்கத்தோட சுகாதாரத் துறை தலையிட்டு, தண்ணீர் சப்ளை,கழிவு போற குழாய்ங்க எல்லாம் சுத்தமா இருக்க வேண்டிய அவசியம் பத்தி ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி ஒரு மாதிரி முன்னேற்றம் கொண்டு வந்துச்சு.


இருவது வருஷமா அரசாண்டுக்கிட்டு இருந்த லிபரல் கட்சிக்கு ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக் குறைய ஆரம்பிச்சது.

எல்லாம் காலம்!


கடுமையான குளிர்காலம்.

ஒரு வீட்டில் தாயும், மகளும் உரையாடுகின்றனர்.

ஏம்மா வெளியே போறயா?

ஆமாம்மா.

ரொம்பக் குளுரா இருக்கே?


பரவாயில்லைம்மா.

அதுக்கேத்த மாதிரி கம்பளி உடுப்புப் போட்டுக்கிட்டுப் போம்மா.

சரிம்மா. இதைப் போட்டுக்கறென்.குளிர் தெரியவே தெரியாது.

மொட்டையா இருக்கு பாரு, காது கழுத்தெல்லாம். கொஞ்சம் நகை போட்டுக்கோ.

சரிம்மா, இப்பப் பாருங்க. இதெல்லாம் போட்டுக்கறென். போதுமா?

மறக்காமச் சின்னதையும் கொண்டு போ.

அதெப்படிம்மா மறக்க முடியும். என்னோட உயிராச்சே அது.


அதுக்கும் கொஞ்சம் நகையெல்லாம் போடும்மா. எத்தனை டிசைன் அதுக்குன்னே வந்திருக்கு பார்த்தியா?


சரிம்மா. இன்னிக்கே வாங்கி போட்டுவிடறேன்


கூடவே பனிக்குல்லாயும் போட்டுவிடு. குளிருலே நடுங்கப்போகுது.


கட்டாயம் வாங்கிப் போடறென்மா. என் ஜீவனாச்சே.இதில்லாமல் ஒரு நிமிஷம்கூடஎன்னாலே உயிரோடு இருக்க முடியாது. என் செல்லம். உனக்காகவே என்னென்ன கண்டுபிடிச்சிருக்காங்க பார்த்தியா? இப்பவே வாங்கிறலாம், வா.
---------

ஆ.............விரல்!!! 2. கடைச் சுவர்!

யாரோ பின்னால் இருந்து லேசாக தள்ளியதுபோல கார் தானாக நகர்ந்து கடையின்சுவரைத் தொட்டது.

அவ்வளவுதான்!

சினிமாவில் கடைசிக் காட்சியில் கதாநாயகன், வில்லன் வீட்டிற்குள் சுவரை இடித்துக் கொண்டுகாரில் நுழைவானே அந்த 'ஸீன்' நடந்துகொண்டிருக்கிறது. ஒரே ஒரு மாற்றம். கதாநாயகனுக்குப் பதிலாக நான் அந்த 'ஸீனில்' நடித்துக் கொண்டிருக்கின்றேன்! வீட்டுக்குப் பதிலாகக் கடை!சுவரிலிருந்த செங்கல்கள் அப்படியே இடம் பெயர்ந்து காரின்மேல் அழகாய் அப்படியே ஆடாமல்,அசங்காமல் வரிசையாக ஏதோ கொத்தனார் அடுக்கி வைத்தாற்போல் நிற்கின்றன.ஒரே ஒரு வினாடியில் எல்லாம் நடந்துவிட்டது. என் கண்களையே நம்பமுடியாமல், நான் இன்னும் காருக்குள்தான் இருக்கிறேன்!என்ன நடந்தது என்ற விவரம் கூட என் மூளையில் இன்னும் பதிவாகவில்லை!


அதே சமயம், என் தோழியும் வந்து சேர்ந்தார். என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று கேட்டுக்கொண்டே என் காரின் கதவைத் திறக்க முயன்றார். அதற்குள் நானும் சுதாரித்துக் கொண்டு மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே வந்தேன். எப்படி இது நடந்தது என்று யோசனை செய்து கொண்டே காரின் சக்கரத்தைப் பார்த்தவுடன், புரிந்துவிட்டது. கீழே முழுவதும் 'ப்ளாக் ஐஸ்'. கறுப்பு ஐஸ் வழுக்கிவிட்டது. என் தோழியும்எனக்கு ஏதாவது அடி பட்டதா என்று திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் 'ஷாக்'தான்.


அன்று சாவியின் தேவை இல்லாமலேயே கடைக்குள் சுவர் வழியாகவே போக முடிந்தது!


உடனே, எங்கள் 'இன்ஷூரன்ஸ் கம்பெனி'க்குப் ஃபோன் செய்தேன், விபத்தைப் பற்றிச் சொல்ல.அங்கிருந்து வந்த பதில் என்ன தெரியுமா? என்னுடையது பதினேழாவது ரிப்போர்ட்டாம்!! கார் ஓடும் நிலையில் இருந்தால், அதை அவர்களின் விபத்து மதிப்பீடு செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்லும்படிக் கூறினார்கள்.


இப்போது, மிகவும் முக்கியமாகச் செய்ய வேண்டியது, கடைச் சுவரின் ஓட்டையை அடைப்பது தான்!


தோழியின் கணவருக்கு ஃபோன் மூலம் செய்தி போனது. உடனே ஓடி வந்தார். கட்டிடத்தின் உரிமையாளருக்கும் விவரம் அறிவிக்கப்பட்டது. சுவரை மீண்டும் கட்ட ஆட்கள் உடனே கிடைக்க மாட்டார்கள் என்பதால் ஒரு தாற்காலிக ஏற்பாடாக ஒரு பலகை வைத்து மூடலாம் என்று முடிவானது.


இதற்கிடையில், கோபால், ஆக்லாந்து வந்து சேர்ந்துவிட்டு, அங்கேயிருந்து ஃபோனில் கூப்பிட்டார்.நான் விபத்தைப் பற்றிச் சொல்லலாம் என்று ஆரம்பித்தபோது, என் தோழி, என்னைத்
தடுத்தார்.

"வீணாக அவரைக் கலவரப்படுத்த வேண்டாம். உங்களுக்கு அடி ஏதும் இல்லையே. அவர் பிற்பகல் வந்தவுடன்,நேரில் சொல்லலாம்" என்றார்.
தோழியின் கணவர் எங்களுக்கு உதவியாக, இடிந்த சுவரை அப்புறப்படுத்தவும் அந்த இடத்திலுள்ள மண்,சிமெண்டு முதலானவைகளை சுத்தம் செய்யவும் ஆரம்பித்திருந்தார். எங்களிடம், 'ப்ரூம் ஸ்டிக்' இல்லாதகாரணத்தால், நம் பக்கத்துக் கடையிலிருந்து கடன் வாங்கி வந்தேன். மண்ணை அள்ளும்போது, அதன் கைப்பிடி 'மளுக்'கென்று உடைந்துவிட்டது.'பட்ட காலிலே படும்' என்பது இதுதானோ?


அவர்களிடம் சென்று விவரத்தைக்கூறி மறுநாள் புதிய பிடியுடன்திருப்பித்தருகிறேன் என்று சொல்லியதற்கு, அவர்கள் கடையைச் சுத்தம் செய்வதற்கு இன்றே தேவை என்றார்கள்.நமக்கு அருகிலுள்ள கடைகளிலும் புதியது கிடைக்கவில்லை. ஆகவே, என் மகளைத் தொலைபேசியில் அழைத்து,விவரம் சொல்லி, நம் வீட்டிலிருந்து கொண்டுவரச் சொன்னேன்.


என் மகளும் உடனே நான் கேட்டதைக் கொண்டுவந்தாள். கடையின் சுவர் இருந்த கோலத்தைப் பார்வையிட்டு,என் கையைப் பிடித்துக் கொண்டு மெல்லிய குரலில்"அம்மா, உனக்கு அடி, காயம் ஒன்றுமில்லைதானே?" என்று கேட்டாள். அவளிடம், அப்பா விமான நிலையத்திலிருந்து வாடகைக் காரில் வீட்டுக்கு வந்துவிடுவார். அவரிடம் வீட்டுச்சாவி இல்லை. நீ வீட்டுக்குப் போய் அங்கேயே இரு என்று அனுப்பி வைத்தேன்.


பிற்பகல் கோபால் வந்ததும், இதைப் பற்றி மகளிடம் அறிந்தவுடன் உடனே இருவருமாகக் கடைக்கு வந்தனர். கடை,கார் எல்லாம் பார்த்துவிட்டு நான் என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டேன் என்று தெரிந்துகொண்டபின், தோழியின் கணவருடன் சேர்ந்து பலகைகள் வாங்கிவந்து, கடைக்கு காபந்து செய்யப்பட்டது.

இன்னும் வரும்.

Wednesday, June 14, 2006

ஆ.............விரல்!!! 1.கறுப்புப் பனி.

பின்குறிப்பாக எழுதப்பட்ட ஒரு முன்குறிப்பு உங்களுக்காக. நேரம் சரியில்லாத ( அதாவது உங்களுக்கு)காரணத்தினால்இதுவரை ஒளிந்து கொண்டிருந்தது வெளியில் வந்தேவிட்டது.

பி.கு: இந்த எழுத்து நடை, நீங்கள் இதற்குமுன் படித்த பதிவுகளில் இருந்து மாறுபட்டிருக்கிறது. அப்போதுதான் எதாவது எழுதலாமேஎன்று நினைத்து, சுயப்பரிசோதனையை ஆரம்பித்த நேரம். 'மரத்தடி'கூடப் பரிச்சயமில்லாத காலக்கட்டம். எப்படி,எந்த நடை என்று புரியாமல் வெவ்வேறு நடைகளில் நடந்து பார்த்ததில் இதுவும் ஒன்று. ( போடு ப்ளேடை!!)

----------


இது நடந்தது மூன்று வருடம்முன்பு, இதே போல ஒரு குளிர்காலப் பனி நாள்! முழு சம்பவத்தையும் சொன்னால்தான் இதன் தீவிரம்(!) புரியும்!2003 வருடம். நானும் என் நண்பரான ஒரு மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண்மணியும் சேர்ந்து இங்கேநம் ஊரான 'கிறைஸ்ட்சர்ச்'சில் பெண்களுக்குத் தேவைப்படுமோ(!) என்று ஒரு இந்திய ஆடை அணிகலன்,கலைப் பொருட்கள் விற்கும் கடையை ஆரம்பித்தோம். இதன் திறப்பு விழாவை சிறப்பாகவும் செய்தோம்.இங்குள்ள இந்திய, தமிழ், குஜராத்தி சங்கங்களின் அப்போதையத் தலைவர்களையும், நமது 'ஸிடி கெளன்சில்' எத்னிக்' குழுவின் தலைவரையும் அழைத்திருந்தோம். இந்தியப் பண்பாட்டின்படி குத்துவிளக்கு ஏற்றி கடவுள் வழிபாட்டுடன் திறப்புவிழா நல்லமுறையில் நடந்தது. கடையின் பெயர் 'கோலம்'.


இங்கே இது போன்ற கடை இது ஒன்றுதான் என்பதால் எங்களுக்குப் போட்டியாளர்களே இல்லை.நாங்களும், ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே கடையைத் திறப்போம். வியாழனும் வெள்ளியும் பிற்பகல் ஒன்று முதல் மாலை ஆறு மணிவரையும், சனி, ஞாயிறுகளில் காலை பத்து முதல் மாலை நான்குவரையும்தான் எங்களது கடை நேரம்.


குளிர்காலம் நடந்துகொண்டிருந்தது. என் கணவர் கோபால் இங்கே ஒரு தொழிற்சாலையில் வர்த்தகப்பிரிவில், மேலாளராக இருக்கிறார். அவருக்கு எப்போதும் அயல் நாட்டுப் பயணங்கள் இருக்கும்.ஜூலை மாதம் பனிரெண்டாம் தேதி, சனிக்கிழமையன்று காலை நான் வழக்கம்போல கண்விழித்தேன்! முதல் நாள் இரவு பனிமழை அதிகமாக இருந்தது. காலையில் பார்த்தபோது ஊரெங்கும்வெள்ளைப் போர்வை போர்த்தியிருந்தது. ஜப்பானுக்குப் போயிருந்த கோபால் அன்று காலை 'ஆக்லாந்து'நகரில் வந்திறங்கி, அன்று பிற்பகல் நம் ஊருக்கு வருகிறார். என் மகள், அப்பா வரும்போது வீட்டில் இருப்பதாகச் சொல்லியிருந்ததால் நான் சமையலை முடித்துவிட்டு கடை திறக்கச் சென்றேன்.


சூரியனும் எட்டிப் பார்க்கப் பனி உருக ஆரம்பித்தது. ஆனால் குளிர் காற்றும் கடுமையாக வீசிக்கொண்டிருந்தது. சாலைகளில் கார்களில் பயணிக்கும்போது இதுபோன்ற நேரங்கள் கொஞ்சம் ஆபத்தானவைதான். பனி உருகி வர ஆரம்பித்தவுடன் வீசும் குளிர்காற்று பனியை மீண்டும் 'ஐஸ்'ஸாகி உறையச் செய்துவிடும்!


நானும் கவனமாகவே காரைச் செலுத்திக்கொண்டிருந்தேன். வரிசையாக பத்துக் கடைகள் இருந்த ஒரு இடத்தில்தான் எங்கள் கடை இருந்தது. கடைகளுக்குப் பின்புறம் அவரவர் கடையின் பின்கதவருகில் அவரவருக்கு கார் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டிருக்கும். வழக்கமான இடத்தில் நான் காரை நிறுத்தினேன்.எஞ்சினை அணைத்துவிட்டு 'ஹேண்ட் ப்ரேக்' போட்டுவிட்டு காலை 'ப்ரேக்'கிலிருந்து எடுத்தேன்.

இன்னும் வரும்.

Tuesday, June 13, 2006

நியூஸிலாந்து பகுதி 43


இன்னிக்கு ஒரு கதை சொல்லப்போறேன். இதுக்கும், நம்ம இந்தியப் புராணக்கதைகளுக்கும்கூட லேசுபாசா ஒரு தொடர்பு இருக்கறதாத்தான் தோணுது.நியூஸியிலே தென் தீவுலே மேற்குப்பக்கமா ஒரு மலைத்தொடர் இருக்குதுங்க. ஐரோப்பாவுலே ஆல்ப்ஸ் மலைத்தொடர் இருக்கு பாருங்க. அதே ஞாபகத்துலே, இதுக்கு 'சதர்ன் ஆல்ப்ஸ்'ன்னு பேர். இங்கே ஏற்றவும் உயர்ந்தசிகரத்துக்கு 'மவுண்ட் குக்'ன்னு பேர். கேப்டன் குக் தானேங்க இந்த நாட்டைக் 'கண்டு பிடிச்சார்'. அவர் நினைவாத்தான்இந்தப் பேர் வச்சாங்க. நல்ல உயரத்துலே இருக்கறதாலே எப்பவுமே கோடையானாலும் சரி அங்கே பனி உக்கார்ந்துக்கிட்டு இருக்கும்.


மவோரிகளுடைய நம்பிக்கையின் படி அவுங்களுக்கு பூமிதான் தாய். வானம் தான் தகப்பன்.Ranginui (the Sky Father)
இந்த ஆகாய அப்பாவான ராங்கிநூஇ க்கு நாலு ஆம்பிளைப் பசங்க இருக்காங்க. அதுலே மூத்தவன் ஆவ்ராகி (Aoraki) யும் மத்த பசங்களுமாச் சேர்ந்து அம்மாவை பூமி மாதா (Papatuanukuthe Earth Mother) சுத்திப் பார்க்கலாமுன்னு கிளம்பறாங்க. எதுலே? ஒரு நீளமான படகுலே. இந்தப்படகு canoe போற வழியிலே ஒரு புயல் காத்துலே மாட்டிக்கிச்சு. இவுங்க எப்படியோ தப்பி ஒரு reef லே இறங்கிடறாங்க.


அப்ப கடுமையான குளிர் காத்து தெக்காலெ இருந்து அடிக்குது. குளிருக்குப் பயந்து படகுலே இருந்த ஆவ்ராகியும், அவன் தம்பிகளும், இன்னும் கூட வந்த மத்த ஆட்களும் ஒரு பக்கமா சேர்ந்து நிக்கிறாங்க.தனித்தனியா அங்கங்கே நிக்கறதைவிடக் கும்பலா ஒரே இடத்துலே இருந்தா குளுருலே இருந்து தப்பிக்கலாமுன்னு.


காத்தோ இன்னும் கடுமையா வீசிக்கிட்டே இருக்கு. இந்த ஆளுங்க எல்லாருமே அப்படியே கொஞ்சம் கொஞ்சமா உறைஞ்சு போயிக் கற்சிலைகளா ஆயிட்டாங்க. எல்லாரையும் விட ரொம்ப உயரமானவனா இருந்த ஆவ்ராகியைச் சுத்தி மத்தவங்கன்னு சேர்ந்து ஒரு மலைத்தொடரா மாறிடறாங்க. அவுங்க ஏறிக்கிட்டு வந்த படகுஒரு நிலப்பரப்பா மாறிடுது. அதுதான் இப்ப தெற்குத்தீவு.


இந்த மலைத்தொடருலே 30 சிகரங்கள் இருக்குன்னாலும், 19 சிகரங்கள்தான் 3000 மீட்டருக்கும் மேலேஉயரமா இருக்கு. இதுலேஉயரம் அதிகம் கூடிய சிகரம்தான் நம்ம ஆவ்ராகி 3754 மீட்டர். மத்ததெல்லாம் அவனோட தம்பிகளும், கூட வந்த மத்த ஆட்களும்.


வெள்ளைக்காரங்க இங்கே வந்தபிறகு இந்த மலைமேலே உயரமான சிகரத்துலே ஏறிப்போறதெல்லாம் மவோரிகளுக்குச் சுத்தமாப் பிடிக்கலை. இவுங்களைப் பொறுத்தவரை இது புனிதமான இடம்.அவுங்க முன்னோர்களின் தலைகள்தானே இப்பச் சிகரமா நிக்குது. அங்கே போய் கால் வைக்கறதான்னு இவுங்களுக்கு ஒரே கோவம்.( ஏங்க கைலாச மலைச் சிகரத்துக்கும் இப்படித்தானே இந்துக்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்க?)


மொதலாவது இந்த மலைச்சிகரத்துக்கு 'மவுண்ட் குக்'குன்னு பேர் வச்சதே தப்பு. எங்க முன்னோர்கள் பேர்தான் வைக்கணுமுன்னு போராடி, சமீபத்துலே 1998லேதான் இந்த சிகரத்துக்கு Aoraki/Mount Cookனு பேரை மாத்தி இருக்காங்க. மவோரிகள் அந்தக் காலத்துலே மகாராணியோடு செஞ்சுக்கிட்ட ஒப்பந்தப்படி மவோரி பேர்களை மாத்தக்கூடாதுதான். ஆனா எல்லாத்துக்கும் போராட வேண்டியில்லே இருக்கு. இந்தAorakiஎன்ற பேருக்கே அர்த்தம் "Cloud Piercer". 'மேகத்தைத் துளைப்பவர்'அவ்வளோ உயரம்னு அர்த்தம்.


மேகத்தையும் துளைச்சுப்போகும் உயரமாம். அம்மாடியோ....

( எனெக்கென்னவோ அந்தக் காலத்துலே அமெரிக்காவுலே அடுக்குமாடிகள் வச்சுக் கட்டின கட்டிடங்களையெல்லாம்ஸ்கை ஸ்க்ராப்பர்னு சொல்லிக்கிட்டு இருந்தது ஞாபகம் வருது)


எப்பவும் இந்த சிகரத்தோட முகட்டுலே பனி தொத்திக்கிட்டு இருக்குன்னு சொன்னேன் இல்லையா. காலங்காலமா இப்படி பனி விழுந்து விழுந்து 1991 ஆம் வருசம் இந்த சிகரத்தோட மேல் முடி அப்படியே பெயர்ந்து வுழுந்துருச்சு. 20 மீட்டர் உயரம் குறைஞ்சு போயிருச்சு. ஆனாலும் இதுதான் இப்பவும் இந்த நாட்டின் உயரமான சிகரம். ஆனாப் போச்சு 65 அடி(-:


ஒருவேளை 'மலைக்கு அடியிலே பூகம்பம் வந்திருக்கலாமுன்னும், பனிப்புயல் அடிச்சு மலைச்சரிவு ஏற்படறப்ப அதோட வேகத்தாலே இப்படி ஆயிருக்குமுன்னும், பனி சேர்ந்து கனம் கூடிப்போய் வுழுந்துச்சு'ன்னும் ஏகப்பட்ட கதைகள் சொல்லிக்கிட்டு இருக்காங்க. (பீலிப்பெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்' குறள்ஞாபகம் வந்து தொலைக்குதேங்க. உடனே, ஆஹா....வள்ளுவர் அப்பவே சொல்லிட்டுப் போயிட்டாருன்னு சொல்லாதீங்க)


மலைக்கு அடிவாரத்துலே 7000 ஹெக்டேருக்கு மேலே (173000 ஏக்கர்) பரந்த இடம் இப்ப நேஷனல் பார்க்கா ஆகி இருக்கு.மரங்கள் கிடையாது. எல்லாமே ஆல்ப்பைன் செடிகள்.காடு போல நிறைஞ்சு இருக்கு. 72 glaciers பனிப்பள்ளத்தாக்குங்க இருக்கு. கொஞ்சம் சுலபமாப்போய் பார்க்கற செளகரியத்தோட. இதுலே ரொம்பப் புகழ்( ரோடுக்குச் சமீபமா) பெற்றது ஃபாக்ஸ்ம், ஃப்ரான்ஸ் ஜோசஃப்ம்.(Fox Glacier & Franz Josef Glacier) ஒவ்வொரு வருசமும் ரெண்டு மலைகளுக்கு நடுவிலே இருக்கற பள்ளத்தாக்குலே பனி விழுந்து கொஞ்சம் வெய்யில் வந்தவுடன் லேசா உருகி ஐஸ்கட்டியாகி அப்படியே நின்னு போயிருது. வருசாவருசம் புதுசு புதுசா அதும்மேலேயே பனி பெய்ஞ்சு உறைஞ்சு உறைஞ்சு கெட்டிப்பட்டு அப்படியே பள்ளத்தாக்கு ரொம்பி வழிஞ்சுகிடக்குது. இதைத்தான் க்ளேஸியர்ன்னு சொல்றாங்க.


இந்த மலைத்தொடர் இருக்கற இடத்துக்குப்பேர் மெக்கன்ஸி கண்ட்ரி.1850லே இந்த ஜேம்ஸ் மெக்கன்ஸ்ஸி( James McKenzie) சட்டத்துக்குப் புறம்பான காரியம் செஞ்சுக்கிட்டு இருந்தார். இவர் கிட்டே ஒரு நாய் இருந்துச்சு. அதும்பேரு வெள்ளிக்கிழமை( Friday)


அங்கங்கே ஆட்டுமந்தைகள் மேயுதுல்லெ அதுலெ இருந்து அப்பப்ப ஆடுங்களைத் திருடுவார். இதுக்குக் கூட த்துணை போனது இந்த வெள்ளிக்கிழமை.இதுதான் ஷீப் டாகாச்சே. நைசா ஆடுங்களை மந்தையிலே இருந்து பிரிச்சுத் தனியாக்கொண்டு வந்துரும். அப்புறம் அப்படியே தூக்கிக்கிட்டு ஓடிறதுதான்.எவ்வளவோ முயற்சி செஞ்சும் இவரைப் பிடிக்க முடியலை. போலீஸ் பார்த்துக்கிட்டே இருந்து இவரை ஒரு சமயம் கைது செஞ்சிருச்சு. ஆட்டுக்கள்ளன். அஞ்சு வருசம் திருடுன ஆட்டுக்கள்ளனை 1855 லெ பிடிச்சாங்க. ஒரு வருசம் ஜெயில்லே போட்டுட்டாங்க.

ஜெயிலுக்குள்ளேயும் ச்சும்மா இல்லாம பலமுறை தப்பிக்கறதுக்கு முயற்சி செஞ்சு பலனில்லாமப் போச்சு. இதுக்கிடையிலே ஆளுக்குச் சீக்கும் வந்துருச்சு. அதுக்கப்புறம் வெளியே வந்த ஆள், அப்படியே காணாமப்போயிட்டார். எங்கே ஏதுன்னு ஒரு அடையாளமும் இல்லையாம்!


இவரு ஞாபகார்த்தமா இந்த ஏரியாவுக்கு இவர் பேரையும் வச்சு, இவரோட ஃப்ரைடேக்கு ஒரு சிலையும் வச்சுருக்கு ஜனங்கள். இங்கே இருக்கற பெரிய ஏரிதான் லேக் டெக்கெபொ. ஏரி எங்கே இருக்குன்னு யாராவது கேட்டப்ப, 'தெக்காலே போ'ன்னு யாரோ சொல்லி இருப்பாங்க போல. தெக்கெபோன்னு ஆயிருச்சு. இங்கே இருந்து பார்த்தா இந்த மவுண்ட் குக் அருமையாத் தெரியும். தெனாலி சினிமா பார்த்தீங்கல்லெ? அதுலே கமலும் ஜோதிகாவும் (என்ன சொல்லி என்னைச் சொல்ல)பாடி ஆடறாங்கல்லே அந்த இடம்தான். இங்கே ஒரு அழகான சர்ச் இருக்கு. குட் ஷெப்பர்ட் சர்ச். பொருத்தமான பெயர்தானே?


இங்கே இருக்கற ஜன்னலிலே இருந்து பார்த்தா, ஆடாம அசையாம இருக்கற நீலக் கலர் ஏரித்தண்ணி, அதோட பின்புலத்துலே மலைத்தொடர்கள்ன்னு மூச்சே நின்னுபோயிடறது போல ஒரு இயற்கைக் காட்சி. அப்பப்பா.... கொடுத்துவச்சிருக்கணும் இதையெல்லாம் பார்க்க.


பி.கு: நேத்து ஒரு தோழியும் அவர் கணவரும் வீட்டுக்கு வந்திருந்தாங்க, நம் புது(?!) வீட்டுக்கு முதல்முறையாக வந்ததால் ஒரு அன்பளிப்புடன். திறந்து பார்த்தவுடன் எனக்கும் மூச்சு நின்னுபோச்சு. லேக் தெக்கப்போ! அருமையானபடம்.( கிடைக்கணுங்கறது....)

இந்த[ப் பதிவுலே ஒரு படம் டெக்கபொ ஏரி. இன்னொண்ணு ஃபாக்ஸ் க்ளேஸியர்.

நண்பர் சமீபகாலமா ஃபோட்டோக்ராஃபியை ஹாபியா வச்சுக்கிட்டு இருக்கார். படங்களுக்காகவே ஒரு ப்ளொக் தொடங்கற ஐடியா இருக்காம்.

Monday, June 12, 2006

சுடச்சுட முதல் பனி
குளிர்காலம் ஆரம்பிச்சுச் சரியா இன்னிக்கு 12வது நாள். நேத்துப் பகல் வெய்யில் இருந்தது. கொடுங்காற்று வருதுன்னு வானிலை அறிவிப்பு இருந்துச்சு தான். ஆனா,ஹெட்ஜ்ஹாக் காலநேரம் தெரியாமப் பகலிலேயே வந்து உக்காந்திருந்தார்.

ராத்திரி வந்துட்டுத் திரும்பப் போகலை போல. போய்ப் போய் வரச் சோம்பலோ என்னவோ?


காலையில் சுருண்டு கிடக்கறதைப் பார்த்துட்டு ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். அப்புறம் தெரிஞ்சது ஆள் 'இருக்கார்'ன்னு. ராத்திரிவரை, டைம் டைமுக்குச் சாப்புட்டுக்கிட்டு 'டெக்'லேயே உலாத்திக்கிட்டு இருந்தார்.


ராத்திரி மழை ஆரம்பிச்சது. பொழுது விடிஞ்சு பார்த்தா வருசத்தின் முதல் பனி பெய்ஞ்சுக்கிட்டுஇருக்கு. ஹெட்ஜ்ஹாக்( பேரு முள்ளீ. நம்ம மானுவோட உபயம்) காணோம். பதுங்கிட்டார்போல.


நான் நல்ல நாளிலேயே நாழிப்பால். இதுலே ஸ்நோ வேறயா? கேக்கவே வேணாம். இணையப் பக்கம் சுத்தலாமுன்னு வந்தா எல்லாமே அவுட்.
முழு விவரம் இங்கே

இன்னிக்கு என்னோர ராசிக்குப் பலன் : சுகம். தினக் கேலண்டர்லே போட்டுருக்கு!!

கிடைச்ச நேரத்தைப் பாழ் செய்ய வேணாமேன்னு, முந்தி எழுதி முடிக்காம வச்சுருந்ததை முடிச்சேன்.படிச்சுப் பார்த்தா ,'நாட் பேட்'.


இருங்க, இருக்கு உங்களுக்கெல்லாம்:-)))))


நடுவிலே சில நிமிஷத்துக்கு கனெக்ஷன் கிடைச்சது( விடாமுயற்சியே வெற்றி தருமாமே!)இப்ப மறுபடி அவுட்.


திரும்ப வந்தா எங்க முதல் பனியை போடறேன்.

ஒரே படத்தைத் தவறுதலா ரெண்டுதடவை போட்டுட்டேன் போல. இப்ப இருக்கும் நிலைமையிலே எடிட் பண்ணா வம்புதான். அதுபாட்டுக்கு அது இருக்கட்டும். நீங்கள் அதைப் பார்க்கவேணாம்.

Saturday, June 10, 2006

எவ்ரிடே மனிதர்கள் - 5

மோர் உண்டோ?
-------------------------


இப்படிக் கேக்கறதுலே என்ன தப்பு?


தப்பு இல்லைதான். ஆனா ஒரு தடவை இல்லை ரெண்டு தடவை கேட்டா தப்பே இல்லைதான். ஆனா இதுவே ஆயிரம் தடவைன்னா? (ச்சும்மா ஒரு பேச்சுக்கு தான் இந்த ஆயிரம் கணக்கெல்லாம்). அதுவும் கல்யாண விருந்துலே! என்ன, கல்யாண வீட்டுலையா? அப்ப இது டூ மச். கல்யாண விருந்துலே மோர் இல்லாம இருக்குமா?


ஏன், இல்லாமலும் இருக்கலாமே! குழப்பறேனா? இது ஒரு கிறிஸ்தியானிகள் வீட்டுக் கல்யாணம். பொண்ணு வீட்டுலே கல்யாண விருந்து. பிரியாணியும், இன்னும் என்னென்னவோ நான்வெஜ் அயிட்டங்களுமா விருந்து தூள் பறக்குது.


நாமோ பையன் வீட்டு சைடு! அதாங்க, நம்ம அவராச்சனுக்குக் கல்யாணம். கூட வேலை செய்யற நண்பர்களை விட்டுறமுடியுமா? இந்த செட்டுலே ரெண்டு பேருதான் ஏற்கெனவே, அதாவது செட் சேர்றதுக்கு முன்னேயே கல்யாணம் ஆனவங்க. நம்ம கிருஷ்ணமூர்த்திக்கு ரெண்டு வயசுலே ஒரு பையன்கூட இருக்கான். இன்னொருத்தர் நாங்க. போன வருசம் கல்யாணம் முடிச்சோம்.


பொண்ணு வீடு பக்கத்து ஊர். அதனாலே கல்யாணத்துக்குப் போகவர, மாப்பிள்ளையே வண்டி ஏற்பாடு செஞ்சுருந்தார். நாங்களும் பரிசுப் பொருள்களை எடுத்துக்கிட்டுப் புறப்பட்டாச்சு. இதுலே என்ன ஒரு 'சிக்கல்'ன்னா நாங்க எல்லாருமே வெஜிடேரியன்கள். அதனாலே ஒரு ச்சின்னத் தயக்கம் இருந்துச்சுங்க. மாப்பிள்ளை சொல்லிட்டாரு, 'அதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. உங்களுக்கு ஸ்பெஷலா சாப்பாட்டுக்குச் சொல்லி இருக்கு. கவலைப்படாம கல்யாணத்துக்குவந்து சேருங்க'ன்னு.


இதோ அங்கே போய்க்கிட்டே இருக்கோம். போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் நம்ம கிருஷ்ணமூர்த்தியைப் பத்திச் சொல்லவா?

அவருக்குச் செட்டிநாட்டுலேக் காரைக்குடிபக்கம். பொண்ணும் அந்தப் பக்கத்துலெ இருந்துதான் எடுத்தாங்களாம்.பொண்ணு வீட்டுலே கொஞ்சம் செல்வாக்கு அதிகமாம், அவரே சொன்னதுதான்.


நாங்க, காதல் கல்யாணம். ரெண்டு வீட்டுப் பக்கமும் ஆதரவு இல்லை. அதனாலே ரொம்ப அடக்கி வாசிச்சுக்கிட்டு இருந்தோம்.ரொம்பச் சாதாரண வாழ்க்கை முறைதான். செட்டாக் குடித்தனம். அலட்டிக்க எல்லாம் முடியாது. வருமானத்துக்குள்ளேயேஎல்லாம் அடக்கி வைக்கணும். ச்சும்மா சொல்லக்கூடாது....அப்படி வைக்கத் தெரிஞ்சவளாக்கும் நான்! க்கும்


ஒரு நாள் கிருஷ்ணமூர்த்தியோட வீட்டுக்குப் போயிருந்தோம். கேள்விப்பட்டதையெல்லாம் வச்சு, கற்பனை செஞ்சுக்கிட்டுப் போனது 100 % தப்பாப் போச்சு. பாயைக் கொண்டு வந்து விரிச்சாங்க அவுங்க மனைவி. கொஞ்ச நேரம் பேச்சுலே போனது. ஒவ்வொரு வார்த்தையிலும், 'கவனமா' அகங்காரத்தோட பேசுனாங்க. இன்னிக்கு என்ன சமையல்னு கேட்டாங்க.நானும், பீன்ஸ் பொரியல், ரசம்னு சொன்னேன்.


"ரசம்ன்னா எங்க வீட்டுலே தக்காளி ரசம்தான்."


"அப்படீங்களா? நாங்களும் ரசத்துலே தக்காளி போடுவோம்"

" ஊஹூம்... நாங்க தக்காளியை அப்படியே கையாலே நசுக்கிக் கரைச்சு ரசம் வைப்போம்"சரிதான், இவுங்ககூடப் பேசிக்க ஒண்ணுமில்லைன்னு மெதுவாப் பேச்சை மாத்திட்டேன். காஃபி கொண்டு வரேன்னு சொன்னாங்க. வேண்டாங்க, தண்ணி மட்டும் தாங்கன்னு சொல்லிட்டு, அவுங்களுக்கு உதவியா அடுக்களைப் பக்கம் போனேங்க. போனா...... என்னாத்தைங்க சொல்றது?


எங்க வீடே மேலுங்க, பாத்திரம் பண்டமுன்னு அழகா அடக்கமா இருக்கு. முக்கியமா சுத்தமா பளிச்சுன்னு இருக்கு.ஆனா இங்கே?...............என்னத்தைப் பெரிய இடமோ?


அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, அவர் மனைவி ஊருக்குப் போயிட்டாங்க. இவர் மட்டும் தனியா இருந்தார். அப்ப அவருக்கு உடம்பு சரியில்லாமப்போய் ஜுரமாப் படுத்துக்கிட்டார். மழைக்காலம் வேற. சொல்லணுமா?எங்க இவர்தான், போய்ப் பார்த்துட்டு வந்து, பாவமா இருக்குமா. கொஞ்சம் ரசம்சாதம் செஞ்சு கொடுக்கலாமுன்னு சொன்னார். நானும் அவசர அவசரமா சாதம், ரசம், ஜுரக்காரருக்குத் தொட்டுக்க எளிதாயும், ருசியாவும் இருக்கட்டுமேன்னுபருப்புத் துவையல் செஞ்சேன். அப்பெல்லாம் மிக்ஸியெல்லாம் நம்ம ஐவேஜுலே இல்லாத அயிட்டம். இருக்கவே இருக்கு அம்மிக்கல். அடிக்கற மழையிலே தனியாக் குடையும், சோறுமாப் போகவேணாமுன்னு நானும் கூடவே போனேன்.


நிஜமாவே மனுஷர், பாவமாப் பாயிலே படுத்துக்கிட்டு இருக்கார். அப்பத்தான் நல்லாப் பார்க்கறென், அங்கெ ஒரு கட்டில்கூட இல்லைங்க. ச்சில்லுன்னு இருக்கு தரையெல்லாம். செல்வத்துக்கும், அந்த வீட்டுக்கும் சம்பந்தமே இல்லாதது போலஇருந்துச்சுங்க. அவர் வீட்டுக்குத் தகவல் அனுப்புனாராம். ஆனா அவுங்க தனியா வரமுடியாதுன்னுட்டு வரலையாம்.அதுக்கப்புறம் அந்தம்மா ரெண்டு மாசம் கழிச்சுத்தான் வந்தாங்க. இவர்தான் போய்க் கூட்டிட்டு வந்திருக்கார்.


சரி சரி. கல்யாணவீடு வந்துருச்சு. எல்லாரும் இறங்குங்க. இந்தக் கல்யாணத்துக்குக்கூட மனைவியைக் கூட்டிட்டுவரலை அவர்.
உள்ளே நுழைஞ்சதும், எல்லாருக்கும் கலர் உடைச்சுக் கொடுத்தாங்க. அப்புறம் பக்கத்துலே இருக்கற சர்ச்சுலே கல்யாணம். மாப்பிள்ளை கூடவே நடந்து போனோம். அங்கெ அவுங்க சம்பிரதாயப்படிக் கல்யாணம். மோதிரம் மாத்துனாங்க. தாலியும் கட்டுனாங்க. அப்புறமும் நிறையப் பாட்டுக்கள் பாடுனாங்க. மூணுநாலுவாட்டி ஜெபம் செஞ்சாங்க. நாங்களும் ஒண்ணும் சரியாப் புரியலைன்னாலும், அங்கே இருக்கற மத்தவங்க செய்யறதையெல்லாம் காப்பி அடிச்சுக்கிட்டே இருந்தோம். முட்டி போட்டு, எழுந்து, பாட்டுப் பாடி, திரும்பவும் முட்டு குத்தல், ஜெபம், பாட்டுன்னு இருந்ததுலே பசி கபகபன்னு வந்துருச்சு.


கறிமீன் தின்னாதவங்களுக்குன்னு கல்யாண வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலே சாப்பாடுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.எங்களையெல்லாம் மாப்பிள்ளையே அங்கே கூட்டிக்கிட்டுப் போனார். அப்பவே இவர் ஆரம்பிச்சுட்டார்,'மோர் உண்டோ?'ன்னு.


சாப்பாடெல்லாம் பரிமாற ஆரம்பிச்சதும் பருப்புச் சாதத்துலேயே இன்னொருக்காக் கேட்டார் மோ.உ?' இருக்கு. இதோ கொண்டு வர்றோம்' ன்னு சொல்லிட்டு உள்ளே போனாங்க ஒருத்தர். போனவர் போனவர்தான்.ரொம்ப நேரமா வரலை. அதுக்குள்ளெ நம்ம 'கி.மூ.' 'மோ.உ' ன்னு கேட்டுத் தள்ளிட்டாரு! 'மோருக்காக ஒருத்தர் பக்கத்து வீட்டுவரை போயிருக்கார். கொஞ்சம் பொறுத்துக்குங்க'ன்னு சொன்னாங்க.இதென்ன சிட்டியா? பக்கத்து பக்கத்துலே ஒட்டிக்கிட்டு வீடுங்க இருக்கறதுக்கு? கிராமம். ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்குமே வேலி சுத்திக்கிட்டுப் போக அஞ்சு நிமிஷ நடை!


இங்கேயோ, ஒரு ஜீவன் மோருக்காகத் துடிக்குது, துவளுது. அதைப் பாக்கப் பாக்க எங்களுக்கெல்லாம் மானக்கேடா இருக்கு. வந்த இடத்துலெ ஒண்ணு இல்லேன்னா ச்சும்மா வாயை மூடிக்கிட்டு இல்லாமஇப்படி இருந்தா எப்படிங்க? ஒரு வேளை, ஒரே ஒரு வேளை, அந்த மோரை ஊத்திக்கலேன்னாதான் என்ன?


நாங்க சொன்னதையெல்லாம் காதுலே வாங்குற நிலமையிலேயே கி.மூ.இல்லை.


பாவம், அலறிஅடிச்சுக்கிட்டு வேகவேகமா ஒரு ச்சின்னச் சொம்புலே மோர் கொண்டுவந்து கொடுத்தார் ஒருத்தர்.எங்கே அலைஞ்சு வாங்கி வந்தாரோ?


எங்களுக்கு இருந்த வெறுப்புலே, நாங்க யாருமே மோர் ஊத்திக்கலை. இதெயெல்லாம் கொஞ்சம்கூட சட்டை செய்யாம மோர் சாதம் சாப்பிட்ட கி.மூ. ஒண்ணுமே நடக்காதமாதிரி கம்பீரமாப் போய்க் கையைக் கழுவிக்கிட்டு வந்தார்.


அதுக்கப்புறம் சம்பிரதாயமான பேச்சுகள் எல்லாம் முடிஞ்சு நாங்க திரும்ப எங்க ஊருக்கு அதெ வண்டியிலே வந்து சேர்ந்தோம்.
டவுனுக்குள்ளே ஆரம்பத்துலேயே நம்ம கி.மூ வோட வீடு இருக்கறதாலே, அவர்தான் மொதல்லே இறங்கிக்கிட்டார்.அப்பத்தான் கவனிச்சோம், கல்யாணப் பரிசா அவர் கொண்டு வந்திருந்த ச்சின்ன பேக்கெட், அவரோட சட்டைப் பாக்கெட்டிலேயே இருந்தது.


"அடடா.... கிஃப்டைக் கொடுக்க மறந்துட்டீங்க போல இருக்கே?"


ஆமாமாம். இவர் பண்ண கலாட்டாலே அது எப்படி ஞாபகம் இருக்கும்? மனசுக்குள்ளெ முணுமுணுக்கறென்.


" இல்லை. சாப்பாடே சரியில்லை. ஒரு மோருக்கு என்ன பாடு படவேண்டியதாப் போச்சு. அதான் கொடுக்கவேணாமுன்னு திருப்பிக் கொண்டு வந்துட்டேன்"


"......................."


-----------
அடுத்த வாரம்: Betty

நன்றி: தமிழோவியம்