தோழியின் நாட்டியப்பள்ளியின் வருஷாந்திரக் கொண்டாட்டம் முடிஞ்சதும் கிளம்பி அடிச்சுப்புடிச்சு ஓடி ஷேர்லி ஹாலுக்குப் போனப்ப மணி எட்டரை. இங்கே நிகழ்ச்சி ஏழரைக்குத் தொடங்குது. ஏற்பாட்டாளரிடம், கொஞ்சம் தாமதமாகத்தான் வரப்போறோமுன்னு ஏற்கெனவே சொல்லி இருந்தோம்.
நம்ம ஊரில் ஒரு மாரியம்மன் கோவில் கட்டறதுக்கான ஏற்பாட்டில், பூமிப்பூஜையில் கலந்துக்கிட்ட விவரம் இங்கே சொல்லி இருந்தேன் பாருங்க..... அந்தக் கோவில் கட்டட நிதிக்கான நிகழ்ச்சிதான் இது. அதனால் தவறவிடும் எண்ணமில்லை.
உள்ளே போகும் போதே..... நம்மிடம் நுழைவுக் கட்டணம் வாங்க மறுத்தாங்க. காரணம்.... ? ஏற்கெனவே கோவில் கட்டட நிதிக்கு ஒரு தொகை கொடுத்துருந்தோம். பரவாயில்லை.... கோவிலுக்குப் போகும் காசை ஏன் வேண்டாமுன்னு சொல்றீங்கன்னு கேட்டு வம்படியாக் கொடுத்துட்டு ஹாலுக்குள் நுழைஞ்சோம்.
மேடையில் தெருக்கூத்துக்கான பாடல் கோஷ்டி திரைக்குப்பின் இருந்து பாடிக்கிட்டு இருக்காங்க. கூத்து நிகழ்ச்சியைக் கூடவே இருந்து நடத்திக்கொண்டுபோகும் கட்டியக்காரன் ( விதூஷகன் / ஜோக்கர்) நடை போட்டுக்கிட்டு இருக்கார் !
நல்லவேளையா இப்பத்தான் முக்கிய ஐட்டம் ஆரம்பிக்குது. ஏழரைன்னு சொன்னாலும், வரவேற்பு, சாமி விளக்கேத்தித் தேங்காய் உடைச்சு, தீப ஆரத்தி காமிச்சுட்டுக் கோவில் கமிட்டித்தலைவர், பிரமுகர் பேச்சு, மாலை மரியாதை, தெருக்கூத்து ஆரம்பிக்குமுன் சூடம் ஏத்தி கும்பிட்டுக்கறதுன்னு எல்லாம் நடந்து முடிய எட்டரை ஆகி இருக்கு !
இன்றைக்கு நம்ம தெருக்கூத்தில் வீரபாகு கதையைச் சொல்லப்போறோம். இது விஷ்ணுபுராணத்தில் இருக்கும் கதைன்னு கூத்து இயக்குநர், மைக்கில் சம்பவத்தை விவரிக்க, எனக்குத் தூக்கிவாரிப்போட்டது......
வீரபாகு, தன்னைப்பெற்றவர்கள் யாருன்னு தெரியாமல் மனக்கவலையில் இருக்கார். அப்போ இன்னொரு 'தம்பி' சமாச்சாரம் கிடைக்குது.
வீரபாகு தனக்கொரு தம்பி இருப்பதைத் தெரிந்துகொண்டு தம்பியைத்தேடி அலைகிறார். தம்பியும் தனக்கொரு உடம்பொறந்தான் இருப்பதாகத் தெரிந்தவுடன், அண்ணனைத் தேடித் திரியறார். ஒரு கட்டத்தில் ரெண்டுபேரும் சந்திக்கறாங்க.
ஆஹா.... என்னைப்போல் ஒருவன் ! ஒரே மாதிரி (ஏறக்கொறைய) உடை நடை பாவனை ! அண்ணா..... தம்பின்னு கட்டிப்புடிச்சு குதிச்சு குதிச்சு நடந்து ஆடி..... ன்னு அந்தக் கணத்தை அனுபவிக்கறாங்க. ஆமாம்.... இதுலே யாரு அண்ணன்? யாரு தம்பி ? கண்டுபிடிக்க அவுங்களுக்கும் சரி, நமக்கும் சரி ஒரு கஷ்டமும் இல்லை உருவத்தில் அண்ணன் கொஞ்சம் பெரிய சைஸ், தம்பி கொஞ்சம் சின்ன சைஸ்! ஹாஹா....
இப்போ அண்ணனும் தம்பியுமாச் சேர்ந்து 'தாய்தகப்பன் யாருன்னு தெரியலையே.... அநாதைகளா ஆகிட்டோமே'ன்னு சின்னதா ஒப்பாரி வச்சு அழுதுட்டு, தேடும் வேலையில் இறங்க...... நாரத மஹரிஷி அங்கே வர்றார். அவரை வணங்கி, 'எங்க நிலையைப் பார்த்தீங்களா ? எங்க தாய்தகப்பனைத் தேடிக்கிட்டு இருக்கோம். நீர்தான் மூவுலகமும் சுத்திவர்றவராச்சே..... எங்களுக்கு உதவணுமுன்னு கெஞ்சிக் கேக்கறாங்க.
'எனக்கு அவ்வளவா விவரம் தெரியாது..... நீங்க மாதா பார்வதியைக் கும்பிட்டு, நோம்பு இருங்க. நல்லதே நடக்குமு'ன்னு சொல்லிட்டு, 'நாராயணா நாராயணா'ன்னு கிளம்பிப்போனார்.
விரதம் இருந்து பார்வதி தேவியை மனசில் இருத்திக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க அண்ணனும் தம்பியும் ! அன்ன ஆஹாரமில்லை........... ப்ச்.....
மனம் நெகிழ்ந்து போன மாதா பார்வதி தரிசனம் தர்றாங்க. லோகமாதா இல்லையோ ?
தாயன்பு எப்படி இருக்குமுன்னு இவுங்களுக்கும் இப்போதான் தெரியுது. அண்ணந்தம்பியின் கவலையைக் கேட்ட தேவி, 'நீங்க ரெண்டு பேரும் சிவனை நினைத்து தவம் செய்யணும். அப்போ அவரே உங்களுக்குத் தரிசனம் தந்து உங்க அவதார ரகசியத்தை விளக்குவார்'னு சொல்லிப்போனாங்க.
திரும்பவும் தவம் ஆரம்பிச்சது மேடையில். இங்கே என் பக்கத்தில் இருந்த 'நம்மவர்' குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சார். 'இப்பவே ரொம்ப நேரமாச்சு. கிளம்பு வீட்டுக்குப் போகலாம்.....'
நானும் பார்க்கிறேன்.... இங்கே நியூஸி வந்த பிறகு ஏழெட்டுமுறை தெருக்கூத்துப் பார்க்கப்போயிருந்தாலும், ஒருமுறை கூட கடைசி வரை இருந்து பார்த்ததே இல்லை.......... ப்ச்.....
ஆங்..... சொல்ல விட்டுப்போச்சே..... இந்த நிகழ்ச்சியில் எல்லோருக்கும் ஃப்ரீ டின்னர் வேற உண்டு. உள்ளே நுழையும்போதே... நம்ம டிக்கெட் கூடவே டின்னர் டிக்கெட்டும் தந்துருவாங்க. எப்பவும் ஒரே மாதிரி ஒரு செட் மெனுதான் இருக்கும் இப்பவும் அதே அதே ! ஃபிஜி ஸ்டைல் வெஜ் பிரியாணி, ச்சனா அண்ட் ஆலூ சேர்த்த கறி, டொமாட்டோ சட்னி. கூடவே ஒரு 500 மில்லி ....... ஜூஸ் பாட்டில்.
அப்புறம் கூத்து பார்த்துக்கிட்டே கொறிக்க, வறுத்த வேர்க்கடலை, பஜ்ஜியா, பொடேட்டோ ஃபிங்கர் சிப்ஸ், வறுத்த மஸாலாப் பட்டாணி அது இதுன்னு தீனிவகைகள். இதெல்லாம் தனியா காசு கொடுத்து வாங்கிக்கணும். எல்லாம் ஒரு டாலர், ரெண்டு டாலர்தான். எல்லாமே கோவில் நிதிக்கான ஏற்பாடுகள்தானே...... வாங்காம இருக்க முடியுமோ ? ஹிஹி....
மேடையில் கூத்து நடந்துக்கிட்டு இருக்கும்போதே.... கீழே சனம் டின்னர் கொண்டுவந்து சாப்பிட்றதும், தீனி வாங்கிக் கொறிக்கறதுமா இருக்கு. நாமும் ஜோதியில் கலந்தோம்.
அப்ப சைடு ஷோவா... ஒரு குட்டிச்செல்லம் மேடைப்பாட்டுக்கு ஏத்தாப்லே கீழே நின்னு ஆட்டம் காமிக்குது. வான்னு கை அசைச்சேன். ஓடி வந்து மடியில் இடம் பிடிச்சது. ச்சும்மாச் சொல்லக்கூடாது.... செம க்யூட் !
கொஞ்ச நேரத்தில் குழந்தை இறங்கிப்போனதும் மேடையைக் கவனிச்சால்.... தவம் முடியும் நேரம், ஷிவ்ஜி வரப்போறார்னு கூத்து டைரக்டர் சொல்லிக்கிட்டு இருக்கார்.
கிளம்பலாமான்னு கேட்ட 'நம்மவரிடம்' சிவன் என்ட்ரி ஆகட்டும். பார்த்துட்டுப் போகலாமுன்னு சொல்லி வச்சேன்.
இடைக்கிடையே மேடையில் கோவில் நிதிக்காகச் சின்னதும் பெருசுமா அன்பளிப்பு தர்றவங்க பெயர்களை அறிவிச்சதும், நாங்களும் விடாமக் கைதட்டி ஆரவாரம் செஞ்சுக்கிட்டு இருந்தோம்.
டமருகம் ஒலிக்க....... இதோ சிவன் தோன்றினார் !
சிவனைப் பார்த்தாச்சுல்லே.... போகலாமுன்னு இவர் எழுந்ததும், வேற வழி இல்லாம நானும் கூடவே கிளம்பவேண்டியதாப் போச்சு.......
மணி இப்பவே பதினொன்னு.... அநேகமா இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் போல.... வழ்க்கம்போல் முடிவு தெரியலையேன்னு புலம்பிக்கிட்டே வீடு வந்து சேர்ந்தாச்.
நூத்தி நாப்பத்திரெண்டு வருஷங்களுக்கு முன்னால் தென்னிந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில், கிராமத்தில் நடக்கும் தெருக்கூத்து எப்படி இருந்திருக்குமுன்னு இப்ப அங்கே போனால் தெரியுமா? எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுருக்காது ? ஆனால்....
நீங்க ஃபிஜிக்கு வந்தீங்கன்னா.... அப்போ எப்படின்னு இப்போ(வும்) தெரிஞ்சுக்கலாம். காலம் உறைஞ்சு போச்சுன்னு சொல்வாங்க பாருங்க..... அதே தான்.......
1879 இல் கரும்புத்தோட்டத்தில் வேலை செய்யவைக்கறதுக்காக, வெள்ளைக்காரன் பிடிச்சுக்கிட்டு வந்த மக்களுக்குக் காலம் உறைஞ்சுதான் போச்சு. இப்போ மாதிரி இன்டர்நெட்டும், ஃபேஸ்புக்கும், இன்ஸ்ட்டாக்ராமும், வாட்ஸ்ஸப்புமா அப்போ ?
சரியான கல்வியறிவு இல்லாமல் இருந்த கிராமத்து மக்கள், வேலை நேரம் போக, தாங்கள் விட்டுவந்த ஊரையும் வீட்டையும் கோவிலையும் வேறெப்படி நினைவில் வச்சுக்க முடியும், சொல்லுங்க ?
சுமார் ஏழு தலைமுறை கடந்தும், பாட்டன் சொல்லித்தந்த கலையையும், கடவுளையும் மறக்காமல், அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து நடத்திக்கிட்டுப் போறதில் , இந்தக் காலக்கட்ட இளைஞர்களும் ஏராளமாக் கலந்துக்கிட்டு சிறப்பாக நிகழ்ச்சிகளைக் கொடுக்கறது மனசுக்கு மகிழ்ச்சியான விஷயமா எனக்கு இருக்கு ! உங்களுக்கும் அப்படித்தானே ?
ஆமாம்..... வீரபாகு கதை என்ன ? விஷ்ணுபுராணத்துலே வராறா என்ன ?
PINகுறிப்பு : ரொம்ப நாட்களா துளசிதளம் செயல்படாம இருந்ததுக்கு மன்னிக்கணும். எழுத எவ்வளவோ இருந்தாலும், மனசு முடங்கிப்போனதுக்குக் காரணம்...... அந்த பாழாப்போன கொரோனாதான்.... ப்ச்....