Friday, May 27, 2022

பொட்டிகள் தினம்

இங்கிலாந்திலே பெரிய ப்ரபுக்கள் வீட்டில் க்றிஸ்மஸ்  தினத்துலே உற்றார் உறவினர் நண்பர்களுக்காக  அட்டகாசமான  விருந்து (டின்னர்) நடக்குமாம். விதவிதமான கேக் வகைகள் செஞ்சுக்கறதுதான்.  சாப்புடறமோ இல்லையோ விருந்தினர் முன்னே அவரவர்கள் பவிஷூ காமிச்சுக்க வேணுமே !  
முதல்நாள் இரவு விருந்தில்  மீந்துபோன  உணவுப்பொருட்களையெல்லாம்,  அட்டைப்பொட்டிகளில் போட்டு, அநாதாலயத்துக்கு  அனுப்பிருவாங்க.  இதுக்காவே ஒருநாள் லீவு விடுவாங்கன்னா பாருங்க.  எல்லாம் விருந்தில் அளவிலாத மது அருந்திட்டு, நடனம் ஆடித் தளர்ந்துபோய்  மறுநாள் காலையில் எழுந்திரிக்க முடியாமப் படுக்கையில் கிடப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் லீவுன்னு எனக்குத் தோணுது ! பொட்டிகளில் போட்டு அனுப்பும் வேலையையை எல்லாம்  வேலையாட்கள் செய்வாங்க. Bபாக்ஸில் போட்டு அனுப்பறதால் இதுக்கு பாக்ஸிங் டே ( Boxing Day )ன்னே  பெயர் வந்துருக்கு.  காலப்போக்கில்  தருமம் பண்ணறது குறைஞ்சுட்டாலும்.... பாக்ஸிங் டே லீவை மட்டும்  இன்னும் தொடர்ந்துக்கிட்டே இருக்காங்க. 
இப்ப இந்த நாளை வியாபார நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனைக்காக  ஒதுக்கியாச்சு. நம்ம அட்சயத்திருதியை மாதிரின்னு வச்சுக்குங்க.  தானம் தருமத்துக்கு உண்டான பண்டிகையைக் கடைசியில் தங்கம் வாங்கிக்கும் விழாவா ஆக்கிவைக்கலை ? 

 இத்தனைநாள் வரை பண்டிகைக்காக புதுப்புது ஐட்டங்கள் ஏகப்பட்ட விலையில் வித்துக்கிட்டு இருந்தாங்களே...  அதெல்லாம் அரைவிலைக்கு வந்துரும்.  அதுவும் இந்த ஸேல் ஒருநாளோடு போகாது.  அப்படியே புதுவருஷம் வரை இழுத்துக்கிட்டே போகும்.  பத்துடாலர்னு  இருந்த பொருட்கள் எல்லாம்  பாக்ஸிங் டேயில் அஞ்சு டாலருக்கு வித்து...... அப்படியே டிசம்பர் கடைசிநாளில் 99 சென்ட்டுக்கு வந்துரும். என்ன ஒன்னு கடைசிநாள் வரை காத்திருந்தால்  நமக்கு வேணுமுன்னு நினைச்சவை எல்லாம் பலசமயம் வித்தே போயிருக்கும். 

இதுலே ஒரு வேடிக்கை என்னன்னா....  டிசம்பர் 24, சாயங்காலம் 6 மணியோடு கடைகள் எல்லாம் மூடிருவாங்க. மறுநாள் பண்டிகை தினம்....  ஊரே மூடிக்கிடக்கும். டிவியில் கூட கமர்ஸியல் விளம்பரங்கள் வராது. அதுக்கு அடுத்த பாக்ஸிங் தினத்தில் ஸேல் ஆரம்பிச்சுரும். இதுலே பெரிய ஐட்டங்கள் என்னென்னெல்லாம்  எத்தனை சதமானக் கழிவில் வரப்போகுதுன்னு டிசம்பர் 24 ஆம்தேதியே அறிவிப்பும் வந்துரும். தப்பித்தவறி  அன்றைக்குக் கடைக்குப்போக நினைச்சவனும்  அன்றையத் தேவைக்கு  இல்லாதவைன்னா பாக்ஸிங் தினத்துக்குன்னு தள்ளிப்போட்டுருவான் :-)

அதனால் எல்லோரும் காத்துநிக்கும் தினமா இது அமைஞ்சுருது. பொழுது விடிஞ்சவுடன்  கடைகண்ணிக்கு ஓடும் சனம்! நான் பொதுவா வேடிக்கை பார்க்கப்போவேன். அலங்காரச்சாமான்கள்  பார்த்துவச்சுக்குவேன். கடைசிநாள் போனால் ரொம்பவே மலிவாக வாங்கியாறலாம்.  இந்த வருஷம் பூச்சாடிகள் கொஞ்சம் பெருசா வேணும் நமக்கு.  ஏகப்பட்ட   லில்லிப்பூங்கொத்துகளை நமக்கு   அன்பளிப்பா கொடுத்துக்கிட்டு இருக்காங்க  ஒரு அண்ணி.
 
நம்ம வீட்டுலே லில்லிச்செடிகள் இருக்குன்னாலும்...   நான்  நம்ம தோட்டத்துப் பூவைப் பறிக்கவே மாட்டேன்.  செடிகளிலேயே விட்டு வைப்பதால் இன்னும் சில நாட்களுக்குக் கண்ணுக்கு விருந்தாக இருக்குமே! ஸ்வாமிக்குப் பூஜை பண்ணும்போதும், 'புஷ்பம் ஸமர்ப்பியாமி'ன்னு தோட்டத்துப்பக்கம் கை காமிச்சால் போதாதா ? அவரே போய்ப் பார்த்து அன்றைக்கு என்ன வகை பிடிக்குமோ அதை எடுத்துப்பார் !

இங்கே ஸேல்னு சொன்னால்.... உண்மையில் நல்ல ஸேல்தான். விலை ஏத்திட்டு, அப்புறம்  குறைப்பதெல்லாம் இல்லை.  வருஷம் முழுக்க எதாவது  கண்டுபிடிச்சு ஸேல் நடக்கும். பாக்ஸிங் தின ஸேல் வருஷக்கடைசிவரை இருக்குமுன்னா.... மறுநாள் முதல் ஒரு வாரம் புதுவருஷ ஸேல், ஃபிப்ரவரி மாசம்  வைட்டாங்கி தினம்,  வாலண்டைன் டே,  மார்ச்சில்  ஈஸ்டர், ஏப்ரலில் ஆன்ஸாக் டே,  மே மாசம் மதர்ஸ் டே, ஜூனில் எங்க மாட்சிமை தாங்கிய மஹாராணி அவர்களின் பொறந்தநாள், இந்த வருஷம் முதல்  மாட்டாரிகின்னு ஒரு மவொரி புதுவருஷப் பண்டிகை ஆரம்பிச்சுருக்கு , அதுக்கான ஸேல்,  அக்டோபரில் லேபர் டே, நவம்பரில் எங்க  மாநிலம் ஷோ டே, டிசம்பரில் க்றிஸ்மஸ்னு ... அது பாட்டுக்குப் போகும். இதுக்கிடையில் ஒவ்வொரு சீஸன் மாறும்போதும், சம்மர், ஆட்டம், விண்ட்டர், ஸ்ப்ரிங்னு ஸேல்கள்,  கடைகளுக்கான பொறந்தநாள் ஸேல்கள் இப்படி....... !  ஆனாலும் இந்த பாக்ஸிங் டே ஸேலுக்கு மக்கள் மத்தியிலே ஒரு நல்ல பெயர் கிடைச்சுருச்சு :-)  விடப்டாது ! நமக்கு ஒரு ப்ரிண்டர் ஆச்சு :-)
ஓசிப்பூக்களுக்கு ஜாடி வாங்கிக்கக் கடைக்குப் போனோம். ஒன்னு போதுமுன்னா ரெண்டா வாங்கித்தந்தார் நம்மவர். உண்மையில்,  கிடைச்ச லில்லி மலர்கள் எல்லாம்  உதிர்ந்தே போயிருச்சு.  அதுக்காக .... பூச்சாடி வாங்காமல் இருக்கலாமோ ?  அடுத்த வருஷம் ஓசிப்பூக்கள் கிடைக்காதா என்ன ? 

அடுத்த பண்டிகைன்னா புதுவருஷம்தான். ரொம்ப மெனெக்கெட வேணாம்.  க்றிஸ்மஸ் அலங்காரங்களை அப்படியே வச்சுடலாம்.  ஒரு வாரமே இடைவெளி என்பதால் ரெண்டும் சேர்த்துத்தான்  இங்கே கொண்டாடுறாங்க. என்ன ஒன்னு.....  கிறிஸ்மஸ் தினத்துக்கு முந்தினநாள்  பிற்பகலில் இருந்து  மால்களில் ஸாண்ட்டா இருக்கமாட்டார்.     
நமக்கும்  அடுத்துவரும் முக்கியமான பண்டிகை பொங்கல் என்பதால் அதுக்குண்டான அலங்காரத்துக்கு இந்த வருஷம் என்னெ செய்யலாமுன்னு யோசிச்சு, முதல்முதலா  ஒரு புதுக்கிணறு வெட்டினேன் !!!! 

மற்றவைகளை 'உக்கார்ந்து ' யோசிக்கணும். 


Wednesday, May 25, 2022

எங்களுக்குத் தனி மரம் :-)

வீடுகளில்  பண்டிகை  அலங்காரத்துக்காக க்றிஸ்மஸ் மரம் வைக்கிறது உங்களுக்கெல்லாம் தெரியும்தானே ? ஊசி இலைக்காடுகள்னு நாம் சின்னப்புள்ளைங்களா இருந்த சமயம் பள்ளிக்கூடத்தில் படிச்சுருக்கோம் இல்லை !  அந்த  Pine   மரம், இல்லைன்னா  அதே இனம் சார்ந்த Fir மரத்தின் கிளைகளை ஊருலகமெங்கும்  பயன்படுத்தினா... எங்க நியூசிக்கு மட்டும் விசேஷ க்றிஸ்மஸ் மரம் இருக்கு!  

Pohutukawa என்ற பெயருள்ள மரம்.  இது டிசம்பர் மாசம்தான் ரத்தச் சிகப்புப் பூக்களுடன்  இருக்கும்.  எங்க ஊரின் கடற்கரை பக்கம் இருக்கும் பேட்டையில்  இந்த மரங்களைத்தான் எல்லா இடங்களிலும் நட்டுவச்சுருக்காங்க. பார்க்கவே அழகுன்னு ஒருநாள் பார்க்கப் போனோம்.  இந்த மரத்தில் மஞ்சள் நிறப்பூக்களும்  வரும் என்பதை அப்பதான் முதல்முறையாப் பார்த்தேன்.  இந்த மரம்  இங்கத்து மவொரி மக்களுக்கு முக்கியமான ஒரு மரமும்  கூட ! 

பண்டிகைக்கு முதல்நாள்  ராத்ரி, எங்க பக்கத்துப்பேட்டையில்  ஒரு தெருவில் விளக்கு அலங்காரம் பார்க்கப்போனோம்.  நாலைஞ்சு வீடுகள் சேர்ந்து அலங்கரிச்சுட்டாங்க.  க்றிஸ்மஸ் லைட் ஷோ !

கீழே படம்: நம்மூட்டு அலங்காரம் :-)
இப்படி அப்படின்னு க்றிஸ்மஸ் தினம் வந்தே வந்துருச்சு.  முந்தி மாதிரி முதல்நாள் நடுராத்ரிக்குச் சர்ச்சுக்குப்போகும் பழக்கம் எல்லாம்  காணாமப்போயிருச்சு.  அதான் நிலநடுக்கம் வந்ததும், எங்கூர் கதீட்ரல் இடிஞ்சு விழுந்துருச்சே.... 


வீட்டாண்டை இருக்கும் சர்ச்சுகளுக்கு ஒரு விஸிட். பண்டிகைநாளும் அதுவுமா.... கோவிலில் யாருமே இல்லை.  ஏகாந்த தரிசனம்தான் ! 
இங்கெல்லாம்  கோவிலில் அலங்காரம் டிசம்பர் முதல் வாரமே  செஞ்சுருவாங்க. ஆனால்  மாட்டுக்கொட்டாயில் புள்ளை மட்டும் இருக்காது.  க்றிஸ்மஸ் ஈவ்  நடுராத்ரி 12 ஆனதும்தான்  புள்ளை பெறக்குறதா ஐதீகம்.  அப்பதான் கொழந்தையைக் கொண்டுவந்து கிடத்துவாங்க.

இன்னொரு சர்ச்சுக்குள்ளே போய் பார்க்கவே இல்லை. நம்ம பேட்டைதான். நிலநடுக்கத்தில் இடிஞ்சு விழுந்து பத்துவருஷமாத் திருப்பிக்கட்டக் காசில்லாமல் தவிச்சோம். இத்தனைக்கும் இது  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ரொம்பவே பழைய சர்ச்.  ஏழுவருஷம் திட்டம்போட்டு, 1858 ல் கட்டி இருக்காங்க.
1800 களில் மரணமடந்தவர்களின் கல்லறை இதைச் சுத்தி இருக்கு.  அவ்ளோ பழசு ! எங்கூர் சிட்டிக்கவுன்ஸில் தண்டச்செலவு பண்ண எப்பவும் ரெடியா இருக்குமே தவிர,  இதைப்போன்ற ஹிஸ்ட்டாரிக்கல் சமாச்சாரத்துக்கு  ஒரு பைஸா கொடுக்காது. 

ஒருவழியாப் பணம் சேர்த்து பழுதுபார்த்து,  28, February, 2021 திறப்புவிழா வச்சாங்க. தினம் என்ன வேலை நடக்குதுன்னு  வெளியே போறப்பவும் வர்றப்பவும் பார்த்துக்கிட்டே இருந்தோம். சர்ச்சோடு சேர்த்து ஒரு காஃபி ஷாப் வேறவச்சுருக்காங்க.    சர்ச்சுக்கு வர்ற சனம் காஃபி வாங்கிக்குடிச்சு, சர்ச்சுக்கான வருமானத்தைப் பெருக்குமாம்!  மறுநாள் திறப்பு விழாவுக்குப் போக முடிவும்  பண்ணிட்டோம். அன்னைக்கு ராத்ரி அரசாங்கத்தின் லாக்டௌன் அறிவிப்பு.  விழா கேன்ஸலாகிருச்சு.  அப்புறம் சில மாசங்களுக்குப்பின் லாக்டௌன் போயிருச்சுன்னாலும்.... நமக்கு அங்கே உள்ளே போக வாய்ப்பே கிடைக்கலை.  இத்தனைக்கும் அதுக்கு எதிர்வாடையில் இருக்கும் காய்கறிக்கடைக்கு வாரம் ரெண்டுமுறையாவது போய்வர்றோம்தான்.  ப்ச்....

அதேமி பழமொழி? விடியாமூஞ்சி வேலைக்குப்போனாலும்......  அதேதான்  க்றிஸ்மஸ் தினமாவது போய் வந்துறலாமுன்னு போனால்.... மூடி வச்சுருக்காங்க. போயிட்டுப்போகுது போ....

இடிஞ்சு போன கதீட்ரலை மீண்டும் கட்டி எழுப்பும்வரை தாற்காலிக சர்ச்சுன்னு அட்டைக்கோவில்  ஒன்னு  கார்ட்போர்டுலே கட்டி இருந்தாங்க. அங்கேயும் போய் வரலாமுன்னு போனால்..... அதே பழமொழி !!!! 
கண்ணாடிவழியாப் புள்ளையை எட்டிப்பார்த்துட்டு வந்தோம்.

அட்டைக்கோவில் விவரம் வேணுமுன்னால்  இந்தச் சுட்டிகளில் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2012/05/blog-post_17.html

http://thulasidhalam.blogspot.com/2015/

அன்னைக்கு சனிக்கிழமை வேற . வழக்கமாப்போகும் ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கு மாலை ஆரத்திக்குப்போய் வந்தோம்.
இப்படியாக நம்ம வீட்டு அலங்காரத்தோடு பண்டிகை அமர்க்களமா நடந்தது :-)


Monday, May 23, 2022

பண்டிகைப் பலகாரம் செய்ய வேணாமா ?

உண்மையில் சமைக்கிறதொன்னும் அவ்வளவு கஷ்டமில்லை. 
 
ஹா.... அப்ப எது கஷ்டம் ? 
 
என்ன சமைக்கணுமுன்னு யோசிக்கிறதுதான் ரொம்பவே கஷ்டம்....
இதென்ன இந்தியாவா, சிங்கப்பூரா இல்லை அமெரிகாவா....  குறைஞ்சபட்சம் ஃபிஜி ? 

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர்,  உருளைக்கிழங்கு, பீன்ஸ்ன்னு  ஒரு நாலைஞ்சு வகைகளை வச்சே.... வாரம் ஏழுநாளும் சமைக்கணுமுன்னா....  ப்ச்....  (ஏதோ சீனவன் புண்ணியத்தில் பெங்களூர் கத்தரிக்காய், பாவைக்காய், பூசணின்னு எப்பவாவது  கிடைக்குது ) 

வீட்டுத்தோட்டத்தில் சில காய்கறிகளைப் பயிர் செஞ்சுக்கறோம். அதிலும் நிறைய வகைகள் எல்லாம் இல்லையாக்கும்.....    இந்தக் குளிரில் எங்கே நல்லா விளையுது ? சுரைக்காய்ச் செடி ஒன்னு சீனக்கடையில் வாங்கி நட்டுவச்சதில் பூ விட்டுருக்கு. சின்னப்பிஞ்சுகளும்! 
வீட்டுலே என்ன இருக்குன்னு பார்த்து என்ன சமைக்கப் போறோமுன்னு முடிவு பண்ணுவது சிரமம்தான். நேத்து என்ன செஞ்சோம், அதே காய் ரிப்பீட் ஆகாம இன்னைக்கு வேறென்ன செய்யலாம், குழம்பு என்ன வைக்கலாம், கூட்டு வேணுமா.... இல்லை எதாவது பொரியல்/ கறி போதுமா ? காரம் போட்டதா.... இல்லை போடாததா..... , சோறா இல்லை சப்பாத்தியா?  அது இதுன்னு   ஏகப்பட்ட தலையிடி. 
இதுலே பாருங்க.... நேத்து சமையல் என்னன்னு ஃப்ரிட்ஜ் திறந்து பார்த்தால் ஓரளவு பிடிகிட்டும்:-)  முந்தாநாள் ? சுத்தமா மறந்து போயிருது. கல்யாணம் ஆன புதுசுலே வந்த சண்டை எல்லாம்  எல்லா டயலாகோடு நினைவு இருக்கும் போது முந்தா நேத்து சமாச்சாரம் எப்படி மறந்து போகுதுன்றது..... அதிசயத்திலும் அதிசயம் !!!!

நல்லவேளை காலையில் டிஃபன் செஞ்சு கொடுக்கும் பழக்கம் எப்படியோ நின்னு போச்சு....  இல்லைன்னா என்ன டிஃபன் செய்யறதுன்னு அதுக்கொருக்கா  மண்டையைப் பிச்சுக்கணும். மாவு அரைப்பதும், முக்கியமா அதைக் கொஞ்சமாவது புளிக்க வைப்பதும் ஒரு சாலஞ்சுதான்.

 வெயில்காலம்னு வரும்போது.... அதுவும் மறுநாள் நல்ல வெயில், 27 இல்லை 28 டிகிரி வரை போகுமுன்னு  வெதர் ரிப்போர்ட் வந்தால்தான்  இன்னைக்கு  ராத்திரி அரிசியை ஊறவைக்கணும். பொழுது விடிஞ்சாட்டு உளுந்து ஊறவச்சால் போதும். 
அபூர்வமா என்னைக்காவது நல்ல வெயில்  வந்து , மாவு அரைச்ச நாளே மாவு புளிச்சுப் பொங்கி வர்றதெல்லாம் 'அவன்' அருள் !  பொதுவா நம்ம வீட்டில் இட்லி, தோசை எல்லாம்  ராச்சாப்பாட்டுக்குத்தான். 

R & D, Planning, Work order  எல்லாம் சமையலுக்கும் வேணும் !

பலகாரம் செய்யலாமுன்னு தோணுச்சுன்னு கொஞ்சம் சக்கரைப்பொங்கல், இட்லி, வடை, மூணு சட்னி வகைகள் ( தக்காளி, தேங்காய், கொத்தமல்லி ) தூத்பேடான்னு செஞ்சு வச்சேன். அப்புறம் இன்னும் சிலவகைகளா தோசை, இடியப்பம், ஹல்வா, ஜாங்கிரி, முறுக்குன்னு மொத்தம் பனிரெண்டு வகை.  மனசுக்குத் திருப்தியா இருந்தது :-)
யோகா குழு மக்கள் பார்த்துட்டு, இதோ கிளம்பிவர்றோமுன்னு சொன்னாங்க :-)

பாலி  ஐட்டம்ஸ் விற்கும் கடையில் நமக்கு ஒரு புள்ளையார் கிடைச்சார்.  பாலியில் இருந்து அனுப்பி வைப்பவர்களும் சரி,  கடைக்காரருக்கும் சரி, விற்பனை செய்யும் மக்களுக்கும் சரி.... யாருக்கும் கவனமே போதாது. சாமி என்ற உணர்வு இருந்தால்தானே ? எதோ கைவினைப்பொருட்கள், அலங்காரபொம்மைகள் என்ற எண்ணம்தான். எதையெடுத்தாலும் அதுலே சின்னதா ஒரு பழுது இருக்கும். இப்பெல்லாம் நான் ரிப்பேர் பண்ணறதில் நிபுணத்துவம் அடைஞ்சாச் :-)  செஞ்சபலகாரங்களைப் புதுப்பிள்ளையாருக்கு நிவேதனம் செஞ்சதும் அவருக்கும் திருப்தி :-)
மகள் தானம் கொடுத்த கள்ளியில் முதல்முறை பூ வந்தது!  சின்னதா ஒரு மொட்டு வர ஆரம்பிச்சுச் சரியா ஒரு  ஒன்னரை மாசம் ஆனதும்  பெருசாப் பூக்கும் பூவின் வாழ்க்கை வெறும் ரெண்டே நாட்கள் ! ஆனால் நல்ல அழகு !   நிலையாமைக்கு  எடுத்துக்காட்டு !

இதுக்கிடையில் நம்மூர் மால்கள்தான் க்றிஸ்மஸ் அலங்காரங்களோடு ஜமாய்ச்சுக்கிட்டு இருக்குதுங்க. ஒவ்வொன்னும் ஒரு விதத்தில் அழகு !  அடுத்த பேட்டை மாலுக்குப் போயிட்டு வரும்போது நம்மூட்டு சாண்ட்டா, ஒரு சாண்ட்டா வாங்கித்தந்தார்.  நம்மூட்டுக்கு அலங்காரத்துக்குத்தான்!  "ஸாண்ட்டா.... என்பவர் நீர்தானோ ? "

"எஸ் ரஜ்ஜூ !  ஹௌ ஆர் யூ ?"