சண்டிகர் போன நாள் முதல் என் தலை பூவுக்கு அழுதுக்கிட்டே இருக்கு. துருக்க சாமந்தி (மெரிகோல்ட்) பூவை விட்டால் வேறெதுவுமே அங்கே இல்லையோன்னுதான் நினைச்சுக்கணும். கோவில்களுக்கோ, இல்லை விழாக்களுக்கோ, சுருக்கமாச் சொல்லப்போனா மனுசன் பிறப்பு முதல் இறப்புவரை எல்லாத்துக்கும் இதுதான். தெற்கு வாழ் மக்களான நாம் கோவிலுக்கு வேற, தலைக்குச் சூட வேறன்னு விதவிதமா வகைப்படுத்தி வச்சுருக்கோமுல்லெ? சென்னை வாசத்தில் தினம் சாப்பிடறேனோ இல்லையோ பூ மட்டும் மறக்காமல் வாங்கிக்குவேன். நம்ம சாமிக்கும் ஆச்சு, இல்லை! நியூஸியில் ஏராளமான பூக்கள் வீட்டைச் சுற்றி இருந்தாலும் இந்த ஊரில் யாரும் தலைக்குப் பூச் சூடிக்கறதில்லையாக்கும் கேட்டோ:( ஊரோடு (இதிலாவது) ஒத்து வாழ வேணாமா?
ஒரு சிங்கைப் பயணத்தில் பழம் வாங்கிக்க ( அழகா துண்டுகள் வெட்டித் தனியா அடுக்கி வச்சுருப்பாங்க. அப்படியே சாப்பிடலாம்) டேகா மால் பேஸ்மெண்டில் இருக்கும் சூப்பர் மார்கெட் போனபோது மல்லிகை மலர்கள் சின்னப் பொதியா இருப்பதைப் பார்த்தேன். உடனே வாங்கி வந்து ஹொட்டேலில் நம்ம வசதிக்காக ஊசி நூல் வச்சுருப்பாங்க பாருங்க, அதை வச்சுக் கோர்த்துச் சூடிக்கிட்ட அனுபவத்தைக் கடாச முடியுமா? இந்த முறை அதே நினைவில் மறக்காம ஒரு நூல்கண்டு எடுத்துப் பெட்டியில் பயணச்சாமான்களுடன் போட்டு வச்சேன். (ஹொட்டேலில் ரெண்டு முழம் நூல் கூடுதலா வச்சுட்டாலும்..... :(
(ஓசின்னாக்கூட அளந்து பார்த்துருவேன்லெ)
இன்னிக்கு மாலை இங்கிருந்து கிளம்பறோம். இந்தப் பயணத்தில் கடைசி முறையாச் சீனுவைப் பார்த்து மாலை போட்டு 'பைபை' சொல்லிக்கணும். கோவிலில் கூட்டம் இல்லை.அங்கொன்னும் இங்கொன்னுமா சிலர் மட்டும். மாலையைப் பட்டரிடம் கொடுத்ததும் அதை நேராக் கொண்டு போய் பெருமாளுக்குச் சார்த்தினார். ஏற்கெனவே அங்கிருந்த 'துளசி'யுடன் இதுவும் சேர்ந்து ஜொலிக்குதுன்னு என் நினைப்பு. ( நம்ம வெங்கடநாராயணா சாலை திருப்பதி தேவஸ்தானக் கோவிலில் துளசி மாலை சம்பந்தமா கசப்பு அனுபவம். சாமிக்குன்னு மக்கள் பயபக்தியா கொண்டு வந்து கொடுப்பதை அலட்சியமா ஒரு கையால் வாங்கி சாமி காலில் கடாசுவார் அங்கே ஒரு பட்டர். அதைப் பார்த்த நாள் முதல் அந்தக் கோவிலுக்குப் பூக்கள் கொண்டுபோகும் பழக்கத்தை விட்டுட்டேன். துளசியைக் கொண்டுவர வேண்டாமுன்னுகூட ஒரு அறிவிப்பு போட்டு வச்சுருக்காங்க இப்போ! வெளங்கிரும்)
சிங்கையில் துளசிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பக்தர் ஒருவர் துளசியைப் பதமா ஆய்ஞ்சு வைக்கிறார் பாருங்க.
நாங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிச்சு முடிச்சோம். கடைசிநாளாச்சேன்னு எல்லா சந்நிதிகளையும் க்ளிக்கிட்டே நான் வலம் போக, கோபால் ஒரு தூணருகில் 'சாந்தமா' உக்கார்ந்துருந்தார். நான் திரும்பி வரும்போது யாரோ ஒரு பெண் கோபால்கிட்டே பேசிக்கிட்டு இருக்காங்க. தெரிஞ்ச முகமா இருக்கேன்னு பார்த்தால் நம் சென்னை வீட்டு ஹவுஸ் ஓனரம்மா. சிங்கையில் ரெண்டு வருச ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்துருக்காங்களாம். வேலைக்குப் போகும் வழியில் சாமிக்கு ஒரு கும்பிடு போட வந்துருக்காங்க. கொஞ்சம் குசலம் விசாரிச்சுட்டு உலகம் ரொம்பவே சின்னதா ஆகிப்போச்சுன்னு சொன்னேன். இன்னும் மூணு மாசத்தில் சென்னைக்குத் திரும்பிருவாங்களாம். சென்னைக்கு வந்தால் சந்திக்கணுமுன்னு அப்பீல் பண்ணினதை பெரியமனசோட ஏத்துக்கிட்டேன்:-) பொழைச்சுக் கிடந்தால் பார்க்கலாம். ( ஓனர் பாராட்டும் டெனண்ட் நாங்க.)
மால் முகப்பு
நாம் தங்கி இருந்த பார்க் ராயலின் எதிரே முந்தி கட்டிக்கிட்டு இருந்த மால் இப்போ வா வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்னு அதுக்குள்ளே நுழைஞ்சு கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு வந்தோம். சிடி ஸ்கொயர் மால். (ECO Friendly Mall) மால் வாசலுக்கு முன்னே ஒரு தோட்டம் இருக்கு. அங்கிருக்கும் படிகளில் இறங்கி நடந்தால் சாலையைக் கடந்து நேர் எதிரில் இருக்கும் ஃபேர்ரர் பார்க் எம் ஆர் டி நிலையத்துக்குப் போயிறலாம். அஞ்சடுக்கில் கம்பீரமா நிக்குது. கடைகள் எல்லாம் கண்ணை இழுத்தாலும் நம்ம மக்கள் முஸ்தாஃபாவில் கூடுவது போல் இங்கே வர்றதில்லை. நமக்கு ஏதும் 'தேவை' இல்லை என்பதால் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு சாலையைத் தாண்டி அறைக்குப்போய்ச் சேர்ந்தோம். பொட்டியை அடுக்கி வச்சுட்டுக் கிளம்பினோம். மதியம் மூணு வரை லேட் செக்கவுட் கிடைச்சிருக்கு.
பதிவர் சந்திப்பு நடந்த மெரினா பே வரும்போதே பார்த்து மனசில் வச்சுக்கிட்டு இருந்ததை மெள்ள வெளியே எடுத்தார் கோபால். இவர் போன பிறவிகளில் கருடனாகத்தான் இருந்துருக்கணும்! எந்த ஊருக்குப் போனாலும் உசரக்கே ஏறி ஒரு கருடபார்வை பார்க்கணும். அப்படியே இங்கேயும் ஒன்னு இப்போதைக்கு ஆச்சு:-) ஒரு டாக்சி எடுத்து மெரீனா பே போய்ச் சேர்ந்தோம். ஸாண்ட்ஸ் ஹொட்டேல். சிங்கைக்குப் புதுசு. சீட்டுக்கட்டுகளை உதறிப்போட்டு அடுக்கி வச்சுக் கட்டியது போல கோபுரம். லேசான ஒரு வளைவுடன் உசரமா நிக்குது. இதே போல் அடுத்தடுத்து மூணு கோபுரம் கட்டி மூணையும் இணைக்கும் வகையில் ஒரு வளைஞ்ச படகு உச்சாணியில் உக்கார்ந்துருக்கு! வடிவமைச்சவர் Moshe Safdie. ஏற்கெனவே உலகப்புகழ் பெற்றவர். இப்போ புகழ் இன்னும் கூடிப்போயிருக்கு!
பூ வடிவ அமைப்புக்குள்ளேதான் கலைப்பொருட்களுக்கான ம்யூஸியம்.
அம்பத்தியஞ்சு மாடிக்கட்டிடங்களில் 2561 அறைகள் உள்ள ஹொட்டேல். ஏகப்பட்ட ரெஸ்ட்டாரண்டுகள், கன்வென்ஷன் செண்ட்டர், ம்யூஸியம், நீச்சல் குளம், தியேட்டர்கள், தனிப்பட்ட க்ளப்புகள், கடைகள், அது இதுன்னு எக்கச்சக்கமான விஷயங்கள். அங்கே ஒரு நாள் தங்கிக்கலாமுன்னா..... நியூஸிக்குப்போய் வீட்டை வித்துட்டு வரணுமாயிருக்கும். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு கெஸீனோ வேற வச்சுருக்காங்க.
மாடல்
டேக்ஸா?
வரவேற்பில் நுழைஞ்சாலே 'ஆ'ன்னு வாயைப் பிளக்கும் உயரமான மேற்கூரை. ஸாண்ட்ஸின் மாடலைச் செஞ்சு வச்சுருக்காங்க.
பிரமாண்டமான மரச்சாடிகளில் மரங்கள். அஜ்மீர் தர்கா டேக்ஸா அளவில் விளக்குகள். அங்கங்கே தண்ணீர் வழிந்தோடும் பளிங்குக்கரைகள். சிலதில் தண்ணீர் வழியும் அடையாளமே இல்லாமக் கிடக்கு. ஆனால் ஓசைப்படாமல் ஆடாமல் அசையாமல் தண்ணீர் வழிஞ்சு போய்க்கிட்டே இருக்கு! அரக்கு மாளிகையைப் பார்க்க வந்த துரியோதனன் மட்டும் இங்கே வந்திருந்தால்....... நம்ம கதையெல்லாம் பாரதமாகி இருக்கும்:-))))
மரச்சாடி
அப்சர்வேஷன் டெக் (Sky Park) அம்பத்தியேழாவது மாடியில் . அங்கே போய்ப் பார்க்க ஆளுக்கு இருபது சிங்கை வெள்ளிகள் கட்டணம். இந்தக் கட்டிடங்கள் கட்டி முடிக்க ஆன செலவு எட்டு பில்லியன் சிங்கை டாலர்களாம். அதுலே நாப்பது இன்னிக்கு நம்ம உபயம். மேலே போக அதிவேக மின்தூக்கிகள். ஒரு இருபத்தியஞ்சு விநாடியில் பறந்துபோய் நம்மைத் தள்ளிவிட்டுருது! நான் ஸ்டாப். வழியில் நிக்காது:-)
சிங்கை முழுசையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். அக்கம்பக்கத்து நாடுகளையும் அங்கிருந்து பார்த்து ஆசீர்வதிக்கலாம். கடல் பகுதி முழுசும் கணக்கில்லாத படகுகள் கப்பல்கள் சின்னதும் பெருசுமா நிக்குது. சிங்கப்பூர் ஃப்ளையர் என்னும் ராட்சஸ ராட்டினம் கைக்கு எட்டும் தூரத்தில்!
விர் விர்ருன்னு காத்து ஆளைத் தள்ளப்பார்க்க, ஐயோ விழுந்துட்டான்னு நமக்கு பயம் வராத வகையில் கண்ணாடித் தடுப்புகள் தலை உசரத்துக்கும் மேலே சாய்ஞ்சு நின்னு காத்தைக் கண்ட்ரோல் செய்யுது. சுத்தி நடக்கும்போது ஒரு கோணத்தில் அந்த பிரத்தியேக க்ளப்பின் நீச்சல் குளம். கண்ணில் பட்டவர் ஒரு வெளிநாட்டு'அழகி' ( தினப்பத்திரிகை மொழியில் இப்படித்தானே சொல்லணும் இல்லை?)
தரையில் இருந்து 191 மீட்டர் உயரத்தில் 376,500 கேலன் தண்ணீரை ரொப்பி வச்சுருக்காங்க. 422000 பவுண்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்திக் கட்டுன நீச்சல் குளம். அடடா...... எவர்ஸில்வர் குளமா அது!!!!! குளித்த களைப்பு நீங்கவும் வெய்யில் காயவும் இருக்கைகள், நிழல்தரும் மரங்கள்(??!!) இப்படி...... காசுள்ளவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களையெல்லாம் செஞ்சு வச்சுருக்காங்க.
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லைடி மீனாட்சி
கீழே அழகுபடுத்தி, சாலைகள் அமைச்சுப் பொலிவாக்கும் புது நிர்மாணங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. சிப்பிகளைக் கவுத்து வச்சதுபோல் ரெண்டு கண்ணாடிக் கட்டிடங்கள். இன்னொரு பக்கம் டூரியன் பழங்களை வெட்டிக் கமுத்தி வச்சுருக்காங்க! அநேகமா அடுத்த வருசத்துக்குள் இந்த வேலைகள் முடிஞ்சு வேறொரு புதுமை செய்ய ஆரம்பிச்சு இருப்பாங்க.
அங்கிருந்து கீழே தரைக்கு இறங்கி வந்தபின் கெஸீனோவுக்குள் போனோம். உள்ளுர் மக்களுக்கு நுழைவுக் கட்டணம் 100 வெள்ளி. வெளிநாட்டவர்களுக்கு? நம்ம கடவுச் சீட்டைக் காமிச்சால் இலவச அனுமதி. உள்ளுர் மக்களின் சூதாடும் பழக்கத்தைக் குறைக்க எடுத்த நடவடிக்கையாம். ஆனால் வருசத்துக்கு 2000 வெள்ளி அடைச்சால் வருசம் முழுவதும் போய்வரலாமாம். அளவுக்கு மிஞ்சிப்பொருள் உள்ளவர்களுக்கு இந்த ரெண்டாயிரமெல்லாம் ஜூஜுபி இல்லையோ?
கொஞ்ச நேரம் ஒரு சதம் ரெண்டு சதம் மெஷீன்களில் விளையாடிட்டுக் கிளம்பினோம். பத்து டாலருக்கு ரெண்டு பேருக்கு ஒரு மணிநேரம் பொழுது போக்கு. நாட் பேட்!
இன்னொரு டாக்ஸி எடுத்து நேரா நேத்துப்போன சீனக்கோவிலுக்கு எதிர்க் கடை. மிளகாய்ச் சரம் வாங்கணும். வாங்கியாச்சு. என் வழக்கபடி எண்ணிப்பார்த்தேன். நூத்தியெட்டு மிளகாய்ப் பழங்கள்! இவுங்களுக்கும் 108 முக்கிய எண்ணா!!!!!!
ஹொட்டேலுக்குத் திரும்பி கணக்கை முடிச்சுக்கிட்டு டாக்சிக்குக் காத்திருக்கும்போதுதான் இங்கே நம்ம நியூஸியில் இருந்து நேற்று வந்த குடும்பத்தைப் பார்த்தோம். அவுங்க விமானத்தில் இருக்கும்போதுதான் நிலநடுக்க சேதியை விமானஓட்டி சொன்னாராம். கவலை படிஞ்ச முகங்கள். ஊருக்கு எப்போ வரப் போறீங்கன்னாங்க. நாலைஞ்சு மாசம் ஆகுமுன்னு சொன்னோம்.
'பரம சாதுவான' பெண் புலியுடன் 37 வருசமா வாழ்ந்ததுலே பயம் சுத்தமா விட்டுப்போச்சு போல! இங்கே வெண்புலியுடன்............
சாங்கி விமானநிலையம் போனதும் செக்கின் செஞ்சுட்டு PPS லவுஞ்சில் போய் பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வேடிக்கை எல்லாம் பார்த்துட்டு தில்லி விமானம் ஏறி, இறங்குனப்ப ராத்திரி பத்தரை. ஏற்கெனவே பதிவு செஞ்சுருந்த ஹொட்டேலில் இரவு தூங்கி எழுந்து மறுநாள் காலை பத்தரைக்குக் காரில் சண்டிகர் பயணம். பகல் சாப்பாட்டுக்கு அதே ஹவேலி. இவ்வளவு சுத்தமான உணவிடமும் வசதியும் ஏன் தமிழ் நாட்டில் ஹைவேக்களில் இல்லை என்ற பொருமலோடு பாக்கி தூரத்தையும் கடந்து வீடு வந்தப்ப மணி நாலே கால்.
பயணம் நிறைவு:-)
PIN குறிப்பு: சிலபல காரணங்களால் இந்தப் பயணம் முடிஞ்சு எட்டு மாசம் கழிச்சுத்தான் பதிவு செய்ய முடிஞ்சது. சில குறிப்புகள் செய்திகள் வீட்டுப்போயிருக்க வாய்ப்பு உண்டு. ஞாபக சக்தி குறைகிறது. வயசாகுதுல்லெ?