Monday, October 03, 2011

விட்டகுறை தொட்டகுறையா ஒரு சொந்தமும் பந்தமும் (( சிங்கை சந்திப்புகள் 2011 பகுதி 5)

வெளிப்புறம் ஏறக்கொறைய அப்படியே இருந்தாலும் காலமாற்றத்துக்கேற்ப உள்ளே சின்னச்சின்னதாக் கடைகளின் தோற்றமும் மாறிக்கிட்டே வருது. மாடியில்தான் சாப்பாடு பரிமாறுவாங்க எப்பவுமே என்பது இத்தனை வருச சிங்கைப் பயண அனுபவங்களில் நமக்கு அத்துபடியான விஷயம். அதே குறுகலான படிகள்தான் . ஆனால் கால் வழுக்காமல் இருக்க உலோகப்பட்டை போட்டுருக்காங்க. வரிசையா மேசைகளில் வாழை இலைபோட்டு ஜாம் ஜாமுன்னு பந்தி நடக்கும் நாட்கள் மனசுலே ஓடுச்சு.

இந்தியப் பயணத்தின் இடையில் ஒரு ப்ரேக் நமக்கு எப்பவும் சிங்கையில்தான். ரெண்டு நாள் தங்கி ஊரில் இருந்து அதிரடியா வந்து சேர்ந்துருக்கும் லிஸ்ட்டைப் பார்த்துச் சாமான்கள் வாங்கிக்கிட்டு போயாகணும். நல்லவேளை இப்ப எல்லாம் இந்தியாவிலேயே கிடைக்குது. சிங்கையிலும் அப்படி தரமான பொருட்கள் இப்பெல்லாம் இல்லை. முஸ்தாஃபா முழுசும் சஸ்த்தா மால்.

நியூஸி வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருசம் ஆன நிலையில் ஒரு சென்னைப் பயணம். இப்போ நாலைஞ்சு இந்தியக் கடைகள் இருப்பது போல அப்போ இல்லை. ஹெல்த் ஃபுட் ஷாப்லே பருப்பு வச்சுருக்கும் விவரம் தெரிஞ்சு ஓடுனா, அஞ்சு கிலோ பொதியா வச்சுருக்காங்க. அதையும் ஒரு கிலோ போதுமுன்னு வாங்கிக்க முடியாது. சில்லறை விற்பனை இல்லையாக்கும் கேட்டோ! பருப்பு கிலோ பத்து டாலர். அம்பது டாலர் அழுது, அந்த அழுத கண்ணோடு பையைத் தூக்கி காரில் வச்ச கோபாலைப் பார்த்தால் பாவமாத்தான் இருந்துச்சு. அதுக்காக......பருப்பில்லா வாழ்க்கை நடத்த முடியுமா?


அப்போ, 'கோமலாஸ் ஃபாஸ்ட் ஃபுட்' 'கேஞ்சஸ்' எல்லாம் கிடையாது. சிராங்கூன் ரோடில் உள்ள கடை மட்டும்தான். அங்கே,
மாடிக்குப் போய் சாப்பிட உக்கார்ந்தோம். வாழை இலையில் சோறு பரிமாறினபிறகு, சாம்பார் பக்கெட் வருது.

"என்ன சாம்பாருங்க இன்னைக்கு?" என் ஆவலைப் பார்த்த பரிமாறுகிறவருக்கு ஆச்சரியமா இருந்திருக்கும் போல.
"முருங்கக்கா சாம்பாரும்மா" அப்டின்னார்.

"ஐய்யய்யோ, ஊத்துங்க,ஊத்துங்க, கொஞ்சம் காய்போடுங்க" அப்புறம் நாங்க சாப்பிட,சாப்பிடக் காயும், சாம்பாருமா போட்டுகிட்டே இருந்தார்.

"எந்த ஊர்லே இருந்தும்மா வர்றீங்க?"

"நியூஸிலாந்திலிருந்து வர்றோம்"

"அங்கே முருங்கக்காய் கிடைக்காதா?"

"நம்ம காயெல்லாம் கிடைக்காதுங்க. கண்லே பாத்தே 2 வருஷம் ஆச்சுங்க"

இப்ப அவர்முறை."ஐய்யய்யோ, இன்னும் நல்லா சாப்புடுங்கம்மா" ன்னு, நிறைய காய் போடறார்.

அது ஒரு காலம். இப்ப இங்கே கத்தரிக்காய், கொத்தவரைங்காய், சிலசமயம் முருங்கைக்காய்,பச்சை மிளகாய், பயறுக்காய் என்று விலை கொஞ்சம் கூடுதலுன்னாலும் கிடைக்குது. எல்லாம் ஃபிஜியிலிருந்து வருது.

பந்தி எல்லாம் போடாம சாதாரணமாக் கிடக்கு டைனிங் ஹால். முதல்லேயே காசைக்கொடுத்து டோக்கன் வாங்கிக்கணுமாம். இது தெரியாம நேராப்போய் ஏறக்கொறையக் காலியாக் கிடந்த ஹாலின் ஜன்னல்பக்க இருக்கையில் இட,ம் பிடிச்சோம். என்னன்னு விசாரிச்சவர் வட இந்தியர்.
சோறு, கூட்டு பொரியல் பச்சடி எல்லாம் ஏற்கெனவே பரிமாறின
சாப்பாடு வருது அதே மாதிரி வாழை இலையில். ஆனால் இலைக்கு அடியில் ஒரு ட்ரே. சின்னச்சின்ன ப்ளாஸ்டிக் சொப்புகளில் சாம்பார் ரசம் மோர் இத்யாதி.. பக்கெட் சாம்பாரோடு வந்து இனிய தமிழில் அன்பா விசாரிச்சுப் பரிமாறும் கலைஞர்கள் காணோம்:( ஒன்னும் ரசிக்கலை. போயிட்டுப்போகுது. இனி இங்கே வரக்கூடாதுன்ஞு மூளையில் பதிஞ்சேன்.

சாப்பாடான கையோடு மருத்துவமனைக்கு டாக்ஸி பிடிச்சுப்போனோம்.

நேத்துப் பதிவர் சந்திப்புக்குப் போகும்போதே நம்ம கோவி கண்ணன், 'சிங்கப்பூரில்தான் இப்படி விதவிதமான இடங்களில் சந்திப்பு நடத்தலாம்' னு சொன்னது இப்படிச் சட்னு பலிச்சுருச்சு பாருங்க. நம்ம சிங்கைநாதன் (அல்வா புகழ்) செந்தில் இதயமாற்று அறுவை சிகிச்சை முடிஞ்சு இப்போ பல பரிசோதனைகளுக்கிடையில் இருக்கார். எந்தப் பதிவர் சந்திப்புன்னாலும் 'டான்'னு ஆஜராகும் நண்பர். எனக்கு மரத்தடி காலம் முதல் பழக்கமானவர்கூட. அவருக்கு இதயக்கோளாறுன்னதும் நமக்கெல்லாம் மனம் உடைஞ்சது உண்மைதானே? சிகிச்சைக்குப் பிறகு அவரைச் சந்திக்கணுமுன்னு ஆவல் இருந்ததால் வருகைத் தகவல் கொடுத்துருந்தேன், அவருக்குச் சௌகரியமான நேரத்தில் ஒரு பத்து நிமிட் ஒதுக்கினால் போதுமுன்னு.

இன்னிக்கு நம்ம பேட்டைக்குப் பக்கத்திலேயே செக்கப்புக்கு வர்றதாயும் அங்கே சந்திக்கலாமுன்னும் சொன்னார். ஹார்ட் செண்டரை நோக்கிப் போகும்போதுதான் கோவில்கோபுரம் கண்ணில் பட்டது. ஆஹா..... எவ்ளோ வருசமாச்சு இங்கே வந்து! ஒரு 26 வருசம் இருக்குமா? இந்தப் பயணத்தில் கட்டாயம் போகணும். மனசில் செதுக்கி வச்சேன்.

செந்தில் நல்லா இருக்கார். பதிவுலக நண்பர்களுக்கு நம்ம துளசிதளத்தின் மூலம் அவருடைய அன்பைச் சொல்லச் சொன்னார். புது இதயம் உடலுக்குப் பொருந்தி வர்றதாயும் இன்னும் சில மாசங்கள் கவனமா இருக்கணும் மருந்துகள் எடுத்துக்கணுமுன்னும் சொன்னார். அவரோட தங்கமணிதான் பெரும் மனக்கவலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா விடுபட்டு வர்றாங்க. கண்ணுலே கவலை அப்படியே தெரியுது. இனி எல்லாம் நலமேன்னு அவுங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டுக் குடும்ப விஷயங்களைக் கொஞ்சம் பேசிட்டுக் கிளம்பினோம். மருத்துவமனை பளீரிடும் சுத்தத்துடன் விஸ்தாரமான அளவில் இருக்கு.

அறைக்குத் திரும்பிக் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு கொஞ்சம் பழங்களை வாங்கிக்கிட்டுப் பழுத்த பழங்களைச் சந்திக்கக் கிளம்பினோம். நெடுநாளைய நண்பர்கள். எனக்கு அம்மா இல்லாத குறையைத் தீர்ப்பவர்கள். இன்னும் கொஞ்சம் இவுங்களைப்பத்தி இங்கே க்ளிக்குனா தெரிஞ்சுக்கலாம்:-)

அய்யாவுக்கும் உடம்பு ரொம்பவே தளர்ந்துதான் போச்சு இப்ப. வயசும் 91 ஆகுதுல்லெ! அம்மா முகமே மாறித்தான் போயிருக்கு. குரல் மட்டும் அன்று இருந்ததைப் போலவே! ஞாபக சக்தி அபாரம். பழங்கதைகளை அலுப்பில்லாமல் பேசிக்கிட்டு இருந்தோம். 'எதுக்கு ஓட்டலில் போய் தங்கறே? பேசாம இங்கே வரவேண்டியதுதானே'ன்னு (வழக்கம்போல்) கடிஞ்சுக்கிட்டாங்க. ஊர்ப்பயணம் போக முடியாத நிலை. ஊரில் வீடு சும்மாப் பூட்டியே வச்சுப் பரமரிப்பு இல்லாமக்கிடக்குன்னாங்க. இப்பெல்லாம் இது பரவலா நிறையபேருக்கு இருக்கும் கவலை:(

வீட்டில் இருந்த செடிகள் அத்தனையும் காணோம். அவைகளைக் கவனிக்கவும் உடம்பில்' உரம்' வேணுமே! வீட்டு வேலைகளுக்கு உதவியா இப்ப வேறொரு பெண் வந்துருக்காங்க. ஊரில் மூணு பிள்ளைகளை சொந்தக்காரங்க வீட்டில் விட்டுட்டு வந்துருக்காங்களாம். மூணு வருச ஒப்பந்தம் முடிஞ்சு அடுத்த வருசம் திரும்பிப் போவேன்னு சொல்லி அவுங்க புள்ளைங்க படத்தைக் காமிச்சாங்க. நல்லமாதிரி அம்மாவையும் அய்யாவையும் கவனிச்சுக்கறாங்கன்னு வீட்டைப் பார்த்ததும் புரிஞ்சது. அவ்வளவு சிரமமான வேலை இல்லை. உங்க அம்மா என்னை நல்லா வச்சுருக்காங்கன்னு சொன்னாங்க. ஆனாலும் அவுங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள்ன்னு இருக்கும்போது எவ்வளவு நாள்தான் பிரிஞ்சு இருக்கமுடியும்? அதிலும் பெண் குழந்தை வேற இருக்காள். வளரும் பருவத்தில் தாய் கூடவே இருப்பதுதானே நல்லது?

இவுங்களுக்கு பதிலா வரும் உதவியாளர் நல்லபடியா அமையணுமுன்னு மனசில் வேண்டிக்கிட்டேன். வயசான ரெண்டு பேரைப் பார்த்துக்கணும். 'முதுமை கொடிது'ன்னு தேங்காயை உடைச்சதுபோல் ரெண்டே சொற்களில் பாடிவச்சுட்டுப் போனவங்களை எவ்வளவு புகழ்ந்தால் தகும்!!!!

"அடுத்து எப்போ?'ன்ற மனக்கனத்தோடு வணங்கி ஆசிகளை வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம். அம்மாவும் இதையே நினைச்சிருப்பாங்க போல.... கண்ணின் ஓரத்தில் ஈரம்.....

தொடரும்................:-)

14 comments:

said...

மனதைத் தொட்ட பகிர்வு. அதிலும் அந்த கடைசி பத்தி....

நல்ல பகிர்வுக்கு நன்றி டீச்சர்...

said...

உங்கப் பதிவுகளிலியே ஒரே ஒரு படம் போட்டப் பதிவுகள் வெகு குறைவு.

:)

சாப்பாடு .... படம் பார்க்க வயிற்றைக் கிள்ளுது.

60 ஆம் அகவை நிறைந்த மணாளர் எப்படி இருக்கிறார் ?
விசாரித்தேன் என்று சொல்லுங்க

said...

அம்மாவும் இதையே நினைச்சிருப்பாங்க போல.... கண்ணின் ஓரத்தில் ஈரம்...../

ஈரம் நிறைந்த பகிர்வு!

said...

மனசை நெகிழ வெச்ச பகிர்வு..

முதுமை கொடிதுதான்..

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அங்கிருந்து நேரா அம்மாவின் இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்குப்போய் வேண்டிக்கிட்டேன். வேறென்ன செய்ய முடியும்?

said...

வாங்க கோவியார்.

படங்கள் நிறைய எடுத்தாலும் குடும்ப அங்கத்தினர்கள் இருப்பதால் போடலை:(

60 நலம்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வருகைக்கும் புரிதலுக்கும் நன்றிப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நமக்கும் அது ஓசைப்படாம மெள்ள மெள்ள நெருங்கிக்கிட்டே இருக்கே:(

தவிர்க்க முடியாதவைகளில் இதுவும் ஒன்னு.

மகள் சொல்றாள், நியூஸிக் கணக்குப்படி 80 தான் ஓல்டாம்:-))))))

said...

நல்ல பகிர்வு. கடைசி வரிகள்.....

said...

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்.."

said...

வாங்க கோவை2தில்லி.

எனக்கும் மனசு ரொம்ப பேஜாராப் போச்சுப்பா:(

said...

வாங்க மாதேவி.

உண்மைதான்! அதிலும் இது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு அன்பு!!!!

said...

அந்த அம்மாவும் அப்பாவும் நல்லா இருக்கட்டும்.
சாப்படும் இலையும் தூள்.

said...

வாங்க வல்லி.

நல்லா இருக்கணும் என்பதோடு ரொம்ப சிரமப்படாம 'கடைசி வரை' இருந்தால் சரி என்ற நினைப்புதான் எனக்கு.