Wednesday, October 30, 2019

சப்பன் சப்பன்னு....அந்த அம்பத்தியாறு........ !!!!! (பயணத்தொடர், பகுதி 162 )

தினம் தினம் இப்படி அம்பத்தியாறு வகைன்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போய்க்கிட்டு இருக்கேன் நான்.  அதென்ன அப்படி? என்னென்ன இருக்குமாம்னு ஒரு  ஆர்வம்தான்......
தேடுனதில் கிடைச்சுருச்சு......  ரொம்பத்தெளிவா இல்லைன்னாலும்,  இருக்கு.....    அப்படியே பார்த்துக்கிட்டே போனேன்.....
அப்பதான் இந்த ரஸ்குல்லா சமாச்சாரம் கண்ணில் பட்டது.....   ஆஹா..... அல்வாவுக்குப் பதில் ரஸ்குல்லாவா இருந்ததைச் சொன்னேனோ.....

ராணியம்மா Gகுன்டிச்சாவின்  கோவிலுக்குத் தன் அண்ணன் தங்கையுடன்  கிளம்பிப்போன  ஸ்ரீகிருஷ்ணன்,  அங்கே போய்ச் சேர்ந்ததும் ஒரு நாள் பூராவும் ரதத்தை விட்டு இறங்காமல், அங்கே கிடைச்ச வரவேற்பு, வழிபாடு எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு, மறுநாள்தான் கோவிலுக்குள்ளே போய் உக்கார்றது. அங்கேயும்   உபசாரத்துக்குக் குறைவே இல்லை. தினம் அம்பத்தியாறு வகையும் குறையொன்றுமில்லாமல்  விளம்பறாங்க.

எட்டுநாள் அங்கே விருந்து, பூஜை, உபசாரம்னு  கொண்டாடிட்டு, கிளம்பி  ஸ்ரீக்ஷேத்ராவுக்கு  வர்றாங்க. இதுக்கு பஹூடா யாத்ரான்னு பெயராம்.  வந்தவுடனே கோவிலுக்குள் போகாம வெளியே இருந்தே எல்லோருக்கும் தரிசனம் கொடுக்கறதுதான்.  அப்போ தங்கம், வைரம்னு விலை உயர்ந்த நகைநட்டுகளைப் போட்டு அலங்கரிப்பாங்களாம்.
அன்றைக்கு இரவு முழுசும் வெட்ட வெளியில் தங்கத்தோடு தரிசனம்.  சாமிகளுக்கும் சரி, ஆசாமிகளுக்கும் சரி ராமுழுக்கத் தூக்கமில்லை.  சனம் அப்படிக் குவியுமாம். பார்க்கப்பார்க்கத் தெவிட்டாத அழகும் ஜொலிப்பும். Suna Bhesa ன்னு பெயர்.  (ஸோனா வேஷம்!  ஸோனா = தங்கம்.   அதானே....   அலங்காரப்ரியனுக்கு வேஷங்கட்டிக்கக் கசக்குமா?  )

கையும் காலும் இல்லாத சாமிகளுக்குத் தங்கக்கைகளும் கால்களும்,  சங்கு சக்கரம், தலை அலங்காரமா  தங்கக்ரீடம், காது குண்டலங்கள், விதவிதமான  நெக்லஸ்கள்  இப்படி.... (இதுக்கும் ஒரு பெரிய லிஸ்ட்   கிடைச்சது ! )    120 கிலோ தங்கம் வச்சுருக்கார் நம்ம ஜகந்நாத்.

பலராமருக்கான தங்கக் கலப்பையும் உண்டு. ஆண்களுக்கே இப்படின்னா சுபத்ராவுக்குச் சொல்லணுமா?
இந்த ரதங்கள் எல்லாம் ரொம்பவே  பெரிய சைஸ். ஒரு மாடி வீடு அளவு இருக்கு.  அப்படியே வீட்டை உருட்டிக்கிட்டுப் போறதுதான்.  இங்கே  நியூஸியில்  மரவீடுகளை பெரிய ட்ரக்கில் ஏத்திக்கிட்டுப் போவாங்க. இதுக்கான ஸ்பெஷலிஸ்ட்களும்,  ரொம்ப கனம் இழுக்கும்  வண்டிகளும் உண்டு. ஏகப்பட்ட  டயர்கள்  இருக்கும். அதைப்போலத்தான்  பூரி ரதங்களிலும். என்ன ஒன்னு சக்கரங்கள் ரெண்டு பக்கங்களிலும் நீளவாட்டில் இல்லாமல் சதுர வடிவில் இருக்கு.  அதுக்குமேல் மாடிவீடு!  எஞ்சின் இழுக்காது. சனம்தான் இழுத்துக்கொண்டு போகும். வடம் பிடிக்கவே லக்ஷக்கணக்கான சனம்!  அற்புதம்தான் , இல்லே !
ரதவீட்டைப் பெருக்கிச் சுத்தம் பண்ணுவார் பூரி அரசர் !
'அவன்' அரசருக்கெல்லாம் அரசன் இல்லையோ !  பேரரசன் ! ஜகத்துக்கே அதிபதி !

மறுநாள் காலை பூஜை முடிஞ்சு கோவிலுக்குள் போகலாமுன்னா.... கோவில் வாசல் அடைபட்டுக் கிடக்கு. 'ஆ.....  யாரங்கே.... கதவைத் திற ' எல்லாம் வேலைக்காகாது....   அடைச்சுச் சாத்தியவள் அவன்   தங்கமணி,  ருக்குமிணி.
"பெண்டாட்டியை இங்கே அம்போன்னு விட்டுட்டு அண்ணன் தங்கைகூட எட்டுநாள் ஊர்சுத்திட்டா வர்றே? " 

 (அண்ணன்கூடப் பரவாயில்லை.... மூத்தார்னு விட்டுடலாம்.... இந்த நாத்தனாருக்கு  இப்படி உபசாரமா? எவ்ளோ நகையும் நட்டுமா  ஜொலிக்கிறாளே......  சாமியே ஆனாலும்... நாத்தனார்...... நாத்த  .... நார் தான், இல்லையோ..........! )

கோபமா இருக்கும் பெண்டாட்டிக்கு அல்வா ஊட்டி விட்டுத் தாஜா பண்ணலாம்தான்... அல்வா எங்கே? திருநெல்வேலிக்கு ஓடிவரவா முடியும்?  அன்னிக்குப் பார்த்து  அந்த  அம்பத்தாறில் ஒன்னா  இருக்கும் ரஸகுல்லாதான் கண்ணில் பட்டது. எடுத்து ஊட்டவேண்டியதுதான்....

கண்ணே  ருக்கு.... கோச்சுக்காதடா.....  வாக்குக் கொடுத்ததுக்காக அங்கே போனேனே தவிர,  சந்தோஷம்  கொண்டாடவா போனேன்? என் உடல்தான் அங்கே இருந்துச்சே தவிர, நீதான் என் மனசு முழுசும்....  பாவம்.... இங்கே தனியா நீ எப்படி இருக்கியோ? வேளா வேளைக்குச் சாப்பிட்டயோன்னு  எவ்ளோ மனக்கவலை இருந்தது தெரியுமா? போன இடத்துலே  காமிச்சுக்க வேணாமேன்னு  அங்கே சந்தோஷமா இருக்கறாப்போலே 'நடிச்சேன்' !  என்னை நம்பும்மா... செல்லம்.....

பைத்தாரி ருக்கு..... சட்னு உச்சி குளிர்ந்து போச்சு....

"நிஜமாவா சொல்றீங்க....  நிஜமாவா..... ?" 

"இல்லையா பின்னே  ? இதைப்பாரு புதுசா ஒரு இனிப்பு உனக்காகக் கொண்டுவந்தேன்... சாப்பிட்டுப் பார்த்துட்டு நல்லா இருக்கான்னு சொல்லு. நீ மொதல்லே சாப்பிடணுமுன்னுதான் யாருக்கும் கொடுக்காம இங்கே கொண்டு வந்துருக்கேன். முதல்லே நீ 'ஆ' காட்டு! "

அடைச்ச கதவு  திறந்தது.... ரஸகுல்லா வாயில் போச்சு.....  சண்டையும் சமாதானமாச்சு.....

நம்ம ஸ்ரீரங்கம் பெருமாளுக்குக் கிடைக்கும்  மட்டையடி  ஞாபகம் வந்துருக்கணுமே.....

இப்படியாக இந்த ரஸ்குல்லா, சமாதான இனிப்புன்னு பெயர் வாங்கிட்டதால்..... வருஷத்துக்கு ஒரே ஒரு முறை மட்டுமே அல்வா வேலையைச் செஞ்சுக்கிட்டு இருக்கு !
இப்பப் பாருங்க..... வகைகளை....

1. Sadha Anna – Simple Rice water
2. Kanika – Rice, Ghee and Sugar
3. Dahi Pakhal – Curd Rice and water
4. Ada Pakhal – Rice, Ginger and water
5. Thali Khechedi – Lentil, Rice with Sugar and Ghee
6. Ghea Anna – Rice mixed with Ghee
7. Khechedi – Rice mixed with Lentil
8. Mitha Pakhal – Rice , Sugar and water
9. Oria Pakhal – Rice, Ghee, Lemon and Salt
Sweets
10. Khaja – Made of wheat
11. Gaja – Made of wheat, sugar and Ghee
12. Ladu – Made of wheat, sugar and Ghee
13. Magaja Ladu
14. Jeera Ladu
15. Jagannath Ballav – Wheat, Sugar and Ghee
16. Khuruma – Made of wheat, Sugar and Salt
17. Mathapuli – Made of Ghee, Ginger and a kind of beans ground in to a thick paste
18. Kakara – Made of Ghee and Wheat
19. Marichi Ladu – Made of Wheat and Sugar
20. Luni Khuruma – Made of Wheat, Ghee and Salt
(Onreturn of Bahuda Yatra during Suna Vesha, Rasagolla are offered as Bhogas but on no other day Rasagollas are allowed for Bhog)
Cakes, Pancakes and Patties
21. Suar Pitha – Made of wheat and Ghee
22. Chadai Lada – Made of Wheat, Ghee and Sugar
23. Jhilli – Rice Flour, Ghee and Sugar
24. Kanti – Rice Flour and Ghee
25. Manda – Made of wheat and Ghee
26. Amalu – Made of wheat, ghee and sugar
27. Puri – Made of wheat and Ghee and deeply fried like a small thin pan cake
28. Luchi – Made of Rice, Flour and Ghee
29. Bara – Made of Curd, Ghee and a kind of beans
30. Dahi Bara – Cake made of a kind of a beans and curd
31. Arisa – A flat cake made of Rice flour and Ghee
32. Tripuri – Another flat cake made of Rice, Flour and Ghee
33. Rosapaik – A cake made of wheat and
Milk Preparations
34. Khiri – Milk, Sugar with Rice
35. Papudi – Prepared from only the cream of milk
36. Khua – Prepared out of Pure Milk slowly boiled over many hours to a soft custard like consistency
37. Rasabali – Made of Milk, Sugar and Wheat
38. Tadia – Made of fresh cheese, sugar and Ghee
39. Chhena Khai – Made of fresh Cheese, milk and sugar
40. Bapudi Khaja – cream of milk, sugar and ghee
41. Khua Manda – Made of milk, wheat and Ghee
42. Sarapulli – This is the most famous and most difficult milk dish to prepare. It is made of pure milk boiled slowly for hours and spread in to a large pizza shaped pan.
Curry with Vegetables
43. Dali
44. Biri dali
45. Urid Dal
46. Muga Dal
47. Dalama – This is one of the typical dishes in Oriya Home. It is a combination of Dahl and Vegetable. Usually eggplant, beans, sweet potato and tomatoes, although tomatoes are not used in Temple preparations. Coconuts and a dried root of vegetables known as Bodhi which looks like a mush room and is high in protein are added.
48. Maur
49. Besar
50. Sag – A spinch dish
51. Potala Rasa
52. Goti Baigana
53. Khata
54. Raita – a yogurt like dish with curd and radish.
55. Pita
56. Baigilni

போதுண்டா சாமி.... தாங்காது....

ஆனாலும் கிச்சா ரொம்பவே கொடுத்து வச்சவன்..... வருஷத்துக்கு ஒரே ஒருமுறைதான் மனைவி கோச்சுக்கறாள் !!!   நம்ம வீடுகளில்?  ஒருநாள்தான் கோச்சுக்காம இருக்காள்..... ஆஹா.... எப்படி இந்த அற்புதம்?  அந்த ஒருநாள், கணவனோ மனைவியோ யாராவது ஒருத்தர் ஆஃபீஸ் டூர் போயிருந்தால்தான்.....

 பட்டியல் போட்டவருக்கு நம் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு...........

தொடரும்......  :-)

PINகுறிப்பு : கூகுளாண்டவர் அருளிய படங்களுக்கு நன்றி ! மஹாப்ரஸாத் மாதிரிதான்... :-)

Monday, October 28, 2019

புத்தம் புது உடல் கிடைச்சுக்கிட்டே இருக்கு !!!!!(பயணத்தொடர், பகுதி 161 )

ஒரு மூணு மணி ஆனதும்  'வெறுங்கை'யோடு இதோ கிருஷ்ணனைப் பார்க்கக் கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்கோம். காசுக்கு மட்டும்தான் அனுமதி என்பதால் அது சட்டைப்பையில்.
 வாசலில் இருந்த ஆட்டோக்காரரிடம் பீச் ரோடு வழியா ஊருக்குள் போகச் சொன்னோம். எம்பதுன்னார். சரின்னோம்.
நேத்துப்போனது போலவே பக்கத்துத் தெருவழியா கோவில்வரை கொண்டுபோய் விடச் சொல்லி ஆட்டோக்காரரிடம் கேட்டதும் அப்படியே ஆச்சு. நேராப்போய் கொஞ்ச தூரத்தில் ரைட் எடுத்து அந்த குறுகிய சந்தில் நடந்தால் ரதங்களாண்டை போயிடலாம்.

அம்போன்னு நிற்கும் ரதங்களைப் பார்த்தால் மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. வெயிலிலும் மழையிலும் வருஷம் பூரா நிக்கறதால் சீக்கிரம் மரங்கள் உளுத்துப் போயிருது. வருஷாவருஷம் ரதயாத்திரைக்கு ஒரு மூணு மாசம் இருக்கும்போதே பழுதுபார்க்கும் வேலையை ஆரம்பிச்சுடறாங்களாம்.  பழுதுன்னு சொல்ல முடியாது....  ஏறக்கொறைய புதுசுதான்.  இதுக்குண்டான மரங்களை Daspalla என்ற ஊரில் (147 கிமீ தூரம்)  இருந்து  வெட்டி எடுத்து, அதை  மஹாநதியில் மிதக்க வச்சுப் பூரி நகருக்குப்பக்கம் வரை ஓடம் போலத் தள்ளி வந்து, அப்பாலே வெளியில் எடுத்து வண்டியில் ஏத்திச் சாலை வழியாக் கோவிலாண்டை கொண்டு சேர்க்கணுமாம்.  தச்சு வேலை செய்பவர்களுக்கு கிருஷ்ணன் படியளந்துக்கிட்டு இருக்கான்.

கோவில் வாசலுக்கு எதிர்ப்புறம் (நாம் நுழைஞ்சு வரும் சந்தின் முனையிலேயே ) இன்னொரு காலணி காப்பகம் இருக்கு. அங்கே விட்டுட்டு வந்தால், கோவில்வாசல் நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.  கோவில்வாசலில் கம்பித்தடுப்பு வச்சு பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனிவரிசையா உள்ளே விடறாங்க. செக்யூரிட்டிச் செக்கப் வசதிக்காகத்தான்.  ஒரே ஒரு கேள்விதான் 'செல்ஃபோன் ஹை?' நாமும் ஒரே ஒரு பதில்  'நஹி ஹை' ஆச்சு.  கம்பித்தடுப்பு கடந்ததும் குடும்பத்தோடு சேர்ந்துக்கலாம்.

கல்மரத்தைக் கும்பிட்டுக்கிட்டு வாசலுக்குள் நுழைஞ்சோம். நம்ம பக்கங்கள் போல கொடிமரமுன்னு தனியா ஒன்னும் இல்லை.  அதான்  கோபுர உச்சியில் கொடி பறந்துக்கிட்டு இருக்கே!
வாசலுக்குள்  மரமாடத்தில் ப்ரமாண்டமான டிவி பொட்டியில்  தெரிவதைப்போல  ஜகந்நாத் காட்சி கொடுக்கறார்.  முகப்பு வாசலுக்கந்தாண்டை அந்த இருபத்தியிரண்டு படிகளில் ஏறி  சந்நிதி மண்டபத்துக்குள் போய் தரிசனம் ஆச்சு.  இன்றுதான் பூரியில் கடைசிதினம். இதுதான் கடைசி தரிசனம் என்பதால் மனம் குழைஞ்சது உண்மை.  'போயிட்டு வரேண்டா'ன்னு சொல்லிக்கிட்டேன்.

நைவேத்யம் எல்லாம்  முடிஞ்சு திருப்தியாச் சாப்பிட்ட களை முகத்தில் இருக்கோ? ப்ரகாசமா ஜொலிக்குதே.... ராமேஸ்வரக் குளியல், த்வாரகை அலங்காரம்,  பூரி சாப்பாடு முடிஞ்சுருக்கு. இனி நேரா பத்ரிநாத் போய் தியானம்தான் பாக்கி.   உண்டமயக்கத்தில் லேசாக் கண்ணை மூடி இருந்தாலும் தியானத்துக் கணக்குதான் கேட்டோ :-)
கோவிலின் மற்ற சந்நிதிகளைச் சுத்திப் பார்த்துக்கிட்டு அங்கங்கே தரிசனம் பண்ணிக்கிட்டு  ஆனந்த பஸாராண்டை வரும்போது  எதிர்ப்புறம்  ஒரு  ஓலைப் பந்தல் மாதிரி இருக்கும் இடத்தில் நிறைய பானைகளில் பொங்கி நிற்கும் சோறும்,  சோற்றின் வெண்மை தெரியாத அளவில்  நிறைச்சு மொய்க்கும் ஈக்களுமா.....  ஐயோ.....

நாம் கிட்டே போனதும் விர்னு எல்லா ஈக்களும் டேக் ஆஃப் ஆகி , திரும்பப்போய் சோற்றில் கால் வைக்குதுகள்.
மூடி வைக்கப்படாதோ?  இல்லே....  அதுகளுக்கும் உணவளிக்கும் கடமையை இப்படிச் செய்யறானோ? ப்ச்....

கொஞ்சூண்டு வாங்கிப் பார்க்கலாமான்னு நினைச்சதை  சட்னு  மாத்திக்கிட்டேன். பெருமாளே.... மன்னிச்சுரு......  இன்னும் பத்துநாள் பயணம் பாக்கி இருக்கு. ரிஸ்க் எடுக்க முடியாது....

பெரிய விமானங்களிலும், கருவறை கட்டட வெளிப்புறங்களிலும் நிறைய சிற்பங்கள் இருக்குன்னாலும், கிட்டப்போய்ப் பார்க்க முடியாதபடி கூட்டம் அங்கங்கே.... கிடைச்ச இடத்துலே உக்கார்ந்து சாப்புடறாங்க.
எக்கச்சக்கமான மண்டபங்கள் சின்னதும் பெருசுமா.....   கங்கா, ஜமுனா, சரஸ்வதி, கோதாவரின்னு நதிகளுக்காக ஒரு பெரிய மண்டபம்.  காவிரி பெயர் இருக்கான்னு தெரியலை.....  ஒரியாலே எழுதி இருக்காங்க....  இன்னொருபக்கம்  காயத்ரி, சாபித்ரி,புபனேஸ்வரி, சஷ்டி, ஷசின்னு  தேவிகளுக்கு.....  தவிர நிறைய இடங்களில் யானை வரிசைகள்தான் !

படிக்கத்தெரியலைன்னு கூச்சப்படாம,  கொஞ்சம் விவரமுள்ள  ஆள் போல கண்ணுக்குத் தெரியும் நபர்களிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம், தப்பே இல்லை.... 'ஜி... இஸ்மே க்யா லிக்கா? ' ....   இது போதும்.

ஒரு  சந்நிதிக்குப் பக்கம் இருந்த மேடையில் கொஞ்சநேரம் உக்கார்ந்தோம். கோவிலுக்குப் போனால் கொஞ்சம் உக்கார்ந்துட்டு வரணும் என்பது  சம்ப்ரதாயம்.   ரதயாத்ரை சமயம்   வந்துருந்தால் ஒன்னையுமே சரியாப் பார்த்துருக்க முடியாதுன்னு பேச்சு வந்தப்ப, ரெண்டு வாரத்துக்கு  முன்னால் ஜொலிச்ச ரதங்கள் எப்படி இருக்கு இப்பன்னு ஆதங்கப்பட்டேன்.  மரமுன்னா அப்படித்தான்.

நம்ம ஜகந்நாத் பரிவாரமும் மரம்தானே.... கோவிலுக்குள் பாதுகாப்பாக இருப்பதால்  அவ்ளவு சீக்கிரம் பழுதாகாது...... ஆனாலும் மரம் என்பதால்  புதுப்பிக்கத்தான் வேணும். இதை ஒரு பெரிய திருவிழாவாத்தான் நடத்தறாங்க.  'நபகளேபரா'ன்னு பெயர்.

வ வர்றதில்லையே.... அதுதான் ....   நப என்றால் நவ (புதிது) களேபரான்னா உடம்பு. புது உடல். ஆஹா.... நாம்தான் களேபரத்தை ...குழப்பம் என்றதுக்குப் பயன்படுத்தறோமோ.... என்னவோ போங்க.... ஒரெ களேபரமா  இருக்கு :-)

பனிரெண்டு வருஷத்துக்கொருக்கா, புது உடம்பு கிடைச்சுருது.  பனிரெண்டுன்னா .... கரெக்ட்டா பனிரெண்டு இல்லை. சிலசமயம் பத்தொன்பது  வருஷம் கூட ஆகிருமாம். ஒருமுறை எட்டு வருஷத்தில்  உடல்மாற்றம் நடந்துச்சுன்னு கோவில் குறிப்புகள் சொல்லுது.

ஆடி மாசத்துலே ரெண்டு அமாவாசை வரும் வருஷம்தான்  கணக்காம். அநேகமா பனிரெண்டு வருஷத்துக்கொரு முறை  இப்படி அமைஞ்சுருதாம்.

இந்த நபகளேபரா சமாச்சாரத்துலே  முக்கிய அங்கம் வகிப்பது  Daitapati   Sevayats    என்னும் விசேஷ பண்டாக்கள்தான்.  கோவிலில் ஆறாயிரம் பண்டாக்கள் இருக்காங்கன்னாலும்  வெவ்வேற க்ரேடு, வெவ்வேற வேலை, வெவ்வேற படிநிலைகள் எல்லாம் உண்டு.  இந்த பண்டாக்கள் வாரிசுகள்  எல்லோருமே ரொம்ப நல்லாப் படிச்சு, பெரிய வேலைகளில்  இருப்பவர்கள்தான். ஆனாலும்   இந்த விழா சமயம்  ஜகந்நாத் சேவைகளைச் செய்யன்னு   லீவு எடுத்துக்கிட்டு வந்துருவாங்களாம். பாத்யதையை விட்டுக்கொடுக்கலாமோ? எத்தனை பேருக்கு இந்தக் கொடுப்பினை இருக்கு சொல்லுங்க !

நபகளேபராவின் ஆரம்பத்தில்  இங்கே அடுத்து ஒரு அம்பத்தியேழு கிமீ தூரத்தில் இருக்கும் ககட்பூர்  என்ற இடத்தில் இருக்கும் மங்களா  தேவி கோவிலில் போய்  பூஜை செஞ்சு, தேவியின் அனுமதியோடு, அந்த ஊர்க் காட்டில் இருக்கும்  மரங்களில் , சாமி செய்யறதுக்குப் பொருத்தமான வேப்ப மரங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும் இந்த  ஸ்பெஷல் பண்டாக்கள்தான். பூஜை முடிஞ்சதும் தேவி சந்நிதிக்கு எதிரில்   இந்த ஸ்பெஷல் பண்டாக்களில் (Daitas) மூத்தவர்களா நாலுபேர் மட்டும்  அன்றைக்கு இரவு  படுத்துத் தூங்குவாங்க. மரங்கள் இருக்கும் இடத்தைக் கனவில் வந்து தெரிவிப்பாளாம் மங்களா தேவி !

எதாவது ஒரு மரத்தை செலக்ட் பண்ணிட முடியாது. ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு குணவிசேஷமுள்ள  மரம் தெரிஞ்செடுக்கணும்.  ஸ்ரீ பலராமருக்கு..... மரப்பட்டைக்குள்ளில்  ரொம்ப லைட் ப்ரவுன் நிறமா இருக்கும் (அநேகமாவெளுப்பு நிறமுள்ள)  மரம். இது  வளைவு நெளிவில்லாம நேரா வளர்ந்து மேலே போகப்போக ஏழு கிளைகள் பிரிஞ்சு இருக்கணும். (  ஆதிசேஷன் அவதாரம்  இல்லையோ  ஸ்ரீ பலராம் !)

சுபத்ரைக்கான மரம், அஞ்சு கிளைகளோடு  இளமஞ்சள் நிறத்தில்... அஞ்சு  இதழ் தாமரைப்பூ போல   இயற்கையாவே  ஒரு அடையாளம் இருக்கணும்.

நம்ம கிருஷ்ணனுக்கோ....  அதிகம் ஆட்கள்  புழங்காத  காட்டில்  ஆத்தங்கரையோரமாவோ இல்லை எதாவது நீர்நிலைக்குப் பக்கமாவோ, நாலு கிளைகளோடு வளர்ந்து நிக்கும்  அழுத்தமான ப்ரவுன்/ சிகப்பு கலந்த  நிறமுள்ள  மரம். இதெல்லாம் போதாதுன்னு மரத்துலே சங்கு சக்ர அடையாளம் வேற இருக்கணுமாம்!

ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட உயரம், பருமன் அளவுகள் கூட இருக்கணுமாம். இப்படியெல்லாம் கிடைக்குமான்னு யோசிச்சால்...... இதுவரை கிடைச்சுக்கிட்டுத்தானே இருக்கு ! எல்லாம் அவன் கணக்கும், அவன் அருளும் இல்லையோ !

இந்த மூவரைத்தவிர சுதர்ஸனத்துக்கும் ஒரு மரம்  உண்டு. சிகப்பு நிறமும் மூணு கிளைகளும், ஒரு இடத்தில் சக்கர வடிவமும், மரத்துக்கு நடுவில் கொஞ்சம் குழிஞ்சாப்லெயும் இருக்கணும்.
மரங்கள் தெரிவானதும்  'வெட்டுனேன் கட்டுனேன்'னு முடியாது. அந்தந்த மரங்களுக்கு முன் ஹோமம் செஞ்சு, மரத்துக்கு அபிஷேகம் பூஜைகள் செய்து, மரத்தின் அனுமதி வாங்கியபின்  வெட்ட ஆரம்பிப்பாங்க.  மரம் வெட்டும் ஆட்களும்  இதுக்குண்டான நியமங்களை அனுசரிச்சுச் சுத்தபத்தமா இருப்பாங்க.
மரங்களை வெட்டி எடுத்ததும்  மரங்களுக்கு அபிஷேகம் ஆராதனை, ஸ்நானம் எல்லாம்  செஞ்சு இன்னொரு ஸ்பெஷல் பூஜை முடிச்சு,  மாட்டுவண்டிகளில் ஏற்றி ஸ்ரீக்ஷேத்ரத்துக்கு (ஸ்ரீ ஜகந்நாத் கோவில்) கொண்டு வருவாங்க.

அதன்பின் நல்ல நாள் பார்த்து மரத்தில் தெய்வங்களைச் செதுக்கும் வேலை தொடங்கும்.   மஹாராணாக்கள் என்ற தச்சுப்பணியாளர்கள்  அம்பது பேர்,  21 நாட்களுக்குள்   இவர்களைச் செதுக்கி முடிப்பார்கள்.
அதுக்குப்பிறகு  பழைய சிலைகளை எடுத்துட்டு அந்த இடத்தில் புதுச்சிலைகளை வைக்கணும். விசேஷ பண்டாக்கள்தான் இதைச் செய்வாங்க.  பழைய சிலைக்குள் ப்ரம்மபதார்த்தம் என்ற  ஆத்மா இருக்கு. அதைப் புதுச்சிலைக்கு மாத்தணும்.

இந்த  ப்ரம்மபதார்த்தத்தை இதுவரை யாருமே பார்த்ததில்லையாம். பார்க்கக்கூடாது. மீறினால் மரணம் நிச்சயம். ரொம்பவே ரகசியமாச் செய்யும் பணி என்பதால் பண்டாக்கள் கண்களைக் கட்டிக்கிட்டு,  பழைய சிலைகளின் மேல் போட்டுருக்கும் துணிகளைக் கையில் சுத்திக்கிட்டு (தொட்டு உணர்தலும் கூடாது !) பழசில் இருந்து எடுத்துப் புதுசுக்கு மாற்றி வைப்பாங்க. ரகசிய வேலை என்பதால் அன்று நள்ளிரவுக்குப் பணி தொடங்குமுன் ஊர் முழுக்க  இருட்டாகிரும். அரசே மின்சாரத்தை நிறுத்தி வச்சுரும். ஒரு ஆள் வாயத் தொறக்கப்டாது.

ரகசிய வேலை முடிஞ்சதும்,  பழைய சிலைகள் வெறும் உடல்கள்தான். அதனால் முறைப்படி சடங்குகள் செஞ்சு , கோவில் வளாகத்துக்குள் கொய்லி வைகுண்ட்   என்ற  இடத்தில் புதைச்சுருவாங்க. (Koili Vaikuntha . கோவிலில் இருக்கும் வைகுண்டம்?)
ஆக மொத்தம் நாலு மாசம் நடக்கும் விழா இது !  சாஸ்த்திர, சம்ப்ரதாயங்கள் அதிகம் என்பதால் இவ்ளோ நாட்கள்  எடுக்குது.  இந்த விழா போனமுறை நடந்தது 2015 ஆம் வருஷம். அஞ்சு லக்ஷம் பேர் விழாவுக்கு வருகை தந்தாங்கன்னு கோவில் குறிப்பு.

எப்படி இந்த  சிலைமாற்றம் ஆரம்பிச்சதுன்றதுக்கும் ஒரு வரலாறு இருக்கு. அந்நிய மதத்தினர் கலிங்கநாட்டுக்குள் புகுந்து  ஹிந்துக் கோவில்களை அழிக்கத் தொடங்கியப்ப,  மூலவர் சிலைகளைக் காப்பாத்தறதுக்காக ரகசியமா  வெளியே தொலைதூரத்துக்குக் கொண்டுபோய் மண்ணில் புதைச்சு ஒளிச்சு வச்சுருக்காங்க.

ஆபத்து நீங்கின பிறகு வெளியே எடுத்தப்ப, சிலைகள்  ஆண்டுக்கணக்காய் மண்ணில் புதையுண்டு சிதைஞ்சு போயிருந்ததால், புது சிலைகளைச் செய்ய வேண்டி வந்ததுன்னும், 1733 ஆம் ஆண்டு முதல்முறையாகப் புதிய சிலைகள் செஞ்சாங்கன்னும் கோவில் குறிப்பு. மரச்சிலைகள்  எப்படியும் சிலபல ஆண்டுகளில் பழுதாகிருது என்பதால்  புதுச்சிலை செய்ய  விழா  எடுக்க ஆரம்பிச்சு அப்படியே தொடர்ந்து வருது, இப்பவும். அடுத்த புதுச்சிலைக்கான நபகளேபரா 2035 ஆம் வருஷம்தானாம்.
நம்ம வெங்கட் நாகராஜ், அவருடைய வலைப்பதிவில் சுருக்கமாகவும் அழகாகவும்  இந்த விழா பற்றி எழுதி இருக்கார். கோவில் அதிகாரிகளே எடுத்துச் சொன்ன விளக்கங்கள் அவை.  அவ்ளோ சுருக்கமா என்னால் சொல்ல முடியுமோ?  அதான்.... ஹிஹி....   குறிப்புகள் எல்லாம் கோவில் வலைப்பக்கத்தில் இருந்தும், உள்ளுர் மக்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்து வாங்கிய தகவல்களில் இருந்தும் எடுத்துதான் 'துளசிதளத்தில்'  பகிர்ந்துள்ளேன்.

நமக்கும் இப்படி ஒவ்வொரு பத்து வருஷத்துக்கும் புது உடம்பு கிடைச்சால் எவ்ளோ நல்லா இருக்கும் இல்லே?  பளிச் கண்கள், சுருக்கமே இல்லாத  தோல், தலைநிறைய முடி, நல்லாவே கேக்கும் காது....  மொத்தத்துலே வியாதி வெக்கை இல்லாத ப்ராண்ட் நியூ உடல்! பேராசைதான்.....

இன்னும் கொஞ்சம் சுத்திப் பார்க்கலாமுன்னு  மேற்குவாசலாண்டை  போனதும்தான் , கோபுரத்துலே இருக்கும் நரசிம்ஹர் சந்நிதிக்குள் போய் வரலாமேன்னு  படிகள் வழியா மேலேறிப்போனோம்.   கொஞ்சம் உயரமான இரும்புப் படிகள்தான்.  நிதானமா ஏறிப்போனால், உள்ளே ஒரு பெரிய குழு . அவுங்க வெளியே வரும்வரை மேலேயே ஒருபக்கம் காத்திருந்தோம்.  சின்ன சந்நிதிதான். பெரிய உருவம் ஸ்ரீ நரசிம்ஹர். மேற்கு வாசலைப் பார்த்தபடி இருக்கார்.  நாமும் கும்பிட்டு முடிச்சுக் கீழே இறங்கி வந்தால்.....   கொடிமாற்றம் நடந்து முடிஞ்சு, கூடி இருந்த பக்தர்கள் எல்லாம் கலைஞ்சு போய்க்கிட்டு இருந்தாங்க.   ஆஹா..... கோட்டை விட்டுட்டோமே............ 'அதான் முந்தாநாள் பார்த்தாச்சே'ன்னார் நம்மவர்.

கோபுரத்தில் பறக்கும் கொடியை நோக்கி வணங்கிட்டு, போயிட்டு வர்றோமுன்னு சொல்லிக்கிட்டு நாமும் கோவில் முகப்பு வாசலுக்குப் போனோம்.  இனி சாலையைக் கடந்து எதிர்வாடையில் இருக்கும் காலணி பாதுகாப்பகம் போய் நம்ம காலணிகளை எடுத்துக்கணும்.

எல்லாம் ஆச்சு.  சந்து முனையில் ஒரு ஆட்டோ கிடைச்சது நம்ம பாக்கியம். சட்னு ஏறிக் கிளம்பி ஜமீந்தார் மாளிகைக்கு இருட்டுமுன் வந்தாச்சு.

படங்கள் எடுக்கமுடியலை என்பதைத் தவிர வேறு குறையொன்றுமில்லை.........

நாளைக்கு இங்கிருந்து கிளம்பறோம்.  புபனேஷ்வர் போகணும். வண்டிக்கு ஏற்பாடு செஞ்சுட்டு,  பூரிக் கடற்கரையில்  ஒரு  நடையும்  ஆச்சு.


ராத்ரி சாப்பாடு ரூம் சர்வீஸில்தான்.  சாஹி பனீர், தயிர், சாதம்..... எல்லாம் இது போதும்.....
காலையில் ஏழரைக்கு செக்கவுட் என்பதால்  சீக்கிரம் எழுந்துக்கணும்னார் 'நம்மவர்'.

இல்லையே.... எட்டுமணின்னு  பார்த்தேனே.... எதுக்கும் இருக்கட்டுமுன்னு க்ளிக்கிட்டும் வந்தேனே.....
இதோன்னு காமிச்சதும்..... அட! அப்ப எதுக்கு ஏழரைன்னான் என்னிடம்?

ஹாஹா.... அப்படிச் சொன்னால்தான் எட்டுக்காவது ரெடி ஆவாங்கன்னு  இருக்குமோ?

 சரி. தூங்கலாம். ராத்ரி மழை வராமல் இருக்கணும், பெருமாளே!

தொடரும்...... :-)


Friday, October 25, 2019

பூரிக்குள்ளே புகுந்து பார்க்கலாமா ? !!!!(பயணத்தொடர், பகுதி 160 )

நல்லவேளை மழை இல்லை. வெயிலும் வந்துருக்கு.  பீச்சில் நல்ல கூட்டம்....   இன்னும் இருபத்திநாலு மணி நேரம்தான் இங்கே இருக்கப்போறோம் என்பதால் கொஞ்சம் ஊருக்குள் போய் சுத்திப் பார்த்துட்டு வரணும்.
காலையில்  தயாராகி, கீழே ரெஸ்ட்டாரண்டுக்குப்போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சோம். ராவோடராவா தரையெல்லாம் சுத்தப்படுத்தி இருக்காங்க. எல்லாம் பளிச் !
மூணுநாளா அடிச்சுப் பேய்ஞ்ச மழையில் குளிரில் நடுங்கிக்கிட்டு இருந்த செல்லங்கள் எல்லாம் நிம்மதியா அங்கங்கே படுத்து சூரியக் குளியலில்:-)


வைஷ்ணவத்துக்கு  ஜெகத்துக்கே நாதர் இருந்தால்  சைவத்துக்கு லோகத்துக்கே நாதர் இருக்க வேணாமோ?   இப்போ நாம் போகும் கோவில்  ஸ்ரீ லோகநாத் மந்திர்.  புபனேஷ்வரில் பார்த்த பக்தர்கள் (தோளில் காவடியுடன் நடைப்பயணத்தில் வர்றவங்க ) அவுங்க கொண்டுவரும் தீர்த்தத்தை இங்கே இந்தக் கோவில் சிவனுக்குத்தான் அபிஷேகம் பண்ணறாங்க.
பீச் ரோடுவழியா அந்தக் கோவில் பார்க்கிங்கில் கொண்டுவிட்ட ஆட்டோக்காரர், 'வெயிட் பண்ணவா'ன்னு கேட்டார்.  கொஞ்ச நேரம் கோவிலைச் சுத்திப் பார்க்கலாமேன்னு வேணாமுன்னுட்டோம்.  இறங்கி கோவில் முகப்பு அலங்கார வாசலாண்டை போனால்.... கோவிலுக்குள் முழுசும் வெள்ளக்காடு! இவ்ளோ தீர்த்தமா அபிஷேகம் பண்ணி இருப்பாங்க?

இந்தக்கோவில், ஜகந்நாத் கோவிலைவிட வயசில் மூத்தது. திரேதா யுகத்து சமாச்சாரம். நம்ம ஸ்ரீராமன், தன்கையால் பிரதிஷ்டை செய்து பூஜித்த சிவலிங்கம் இங்கே இருக்கு. கங்கை, தலையில் உக்கார்ந்துருப்பதால்  சதா அபிஷேகம்தான். இதனால் சிவன் எப்பவும் தண்ணீருக்குள் உக்கார்ந்துருப்பாராம். (ஜலகண்டேஸ்வரர் ? )

ஆனால் இப்ப என்னன்னா....முக்கால்வாசிக் கோவிலே தண்ணிக்குள்ளே இருக்கே....
இந்தப் பக்கங்களில்  கோவில்களின் கருவறைகள் எல்லாம்  தரை மட்டத்துலே இருந்து கீழே இறங்கிப்போய் தரிசிக்கும் வகையில்தான்  அமைச்சு இருக்காங்க. நேத்து போன 'மா ராம சண்டி கோவில்'கூட இப்படித்தானே இருந்துச்சு!

ஸ்ரீ ஜகந்நாத் கோவிலை மட்டும்  ரொம்ப உயரமா பூரா நிலத்தையும் உயர்த்திட்டுத்தான் கட்டுனாங்களாம்!  வெள்ள பாதிப்பு இருக்கக்கூடாதுன்னு அரசர் இந்த்ரத்யும்னன் போட்ட கணக்கு !

நீந்திப்போய்  தண்ணிக்குள் இருக்கும் சிவனைத் தரிசிக்க நம்மால் முடியாதுன்றதால் திரும்பிப்போகலாமுன்னு  பார்த்தால்  வண்டி ஒன்னும் கிடைக்காதுன்னார் அங்கிருந்த ஒரு நபர். இந்த களேபரத்தில்  லோகநாத் கோவிலைக் கிளிக்க மறந்து போச்சு. தண்ணீர் பார்த்த அதிர்ச்சிதான்...

   அப்புறம் வலையில் தேடி ரெண்டு படம் போட்டுருக்கேன். 
கூகுளாண்டவருக்கு நன்றி.  ஆனாலும்  நாங்க பார்த்ததைவிடப் படத்துலே தண்ணீர் கொஞ்சம் குறைவுதான்...

 'அட ராமா'  வெயிட்டிங் போடவான்னு கேட்ட ஆட்டோக்காரரை அனுப்பிட்டோமேன்னு  கார்பார்க்கில் இருந்து சாலையைத் தேடி நடந்தால் .... ஆ.... நாம் வந்த ஆட்டோக்காரர் நம்ம வரவை எதிர்பார்த்து நிக்கிறார்!!   எப்படியும் இதுகள் வரத்தான் போகுதுன்னு  தெரியாமலா இருக்கும்  :-)
இப்பத் திரும்பிப்போக  டபுள் ரேட் !  வேற வழி!  ஜகந்நாத் கோவிலாண்டை இறக்கி விடச் சொன்னோம். அதான், அந்த பக்கத்துச் சந்தாண்டை.


இறக்கி விட்ட இடத்துலே பார்த்தால்....  நம்ம  இஸ்கான் கோவில் !  க்ருஷ்ணனே நம்மை வரவச்சுட்டான்.  குறுகலா இருந்த மாடிப்படியேறி மேலே போனால்.... பெரிய ஹாலின் ஒரு பக்கம் சந்நிதி.  அழகான மண்டபத்தில்  ஸ்ரீ கிருஷ்ணனும் ராதையும்.  கிருஷ்ணனுக்கு வலப்புறம்  ஸ்ரீ சைதன்யா.  (ஒருவேளை  பூரி என்பதால்  கிருஷ்ணனும் அண்ணன் தங்கையுமோ என்னவோ?) அங்கே இருந்த பட்டரைக் கேட்டுருக்கலாம். அவர் கண்மூடி ஜெபிச்சுக்கிட்டு இருந்ததால் தொந்திரவு பண்ணலை.... மண்டபத்தையொட்டி  உயரமான பீடத்தில் ஒரு தொட்டியில்  'நான்' !சந்நிதிக்கு எதிரில் வழக்கமா இருக்கும் ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் உருவச்சிலை மட்டுமில்லாமல் இன்னொரு சிலையும் வச்சுருக்காங்க. சச்சிதானந்த பக்திவிநோத தாக்கூர். ஸ்ரீ சைதன்யா மஹாப்ரபுவின் உபதேசங்களையும் பக்திமார்கத்தையும் பரப்பியவர். கௌடியா வைஷ்ணவம் என்ற பிரிவை உண்டாக்கியவர்.  இவர் மறைவுக்குப்பின் இவருடைய புதல்வர் பக்திசித்தாந்த சரஸ்வதி அவர்கள்(சந்யாசாஸ்ரமப் பெயர்) கௌடியா மடத்தை  உருவாக்கினார். இந்தக் கோவிலே கௌடியா மடத்தைச் சேர்ந்ததுதான்.
சந்நிதியைச் சுற்றி வரும்போது என் கேள்விக்கு விடை கிடைச்சது.


நாங்கள் கொஞ்ச நேரம் அமைதியாக, சந்நிதி முன்னால் உக்கார்ந்து தியானம் செஞ்சுட்டுக் கீழே படி இறங்கி எதிர்வாடையில் இருக்கும் கௌடியாமடத்துக்குள் போனோம்.   முற்றத்தில்  அழகான  மாடத்தில் 'நான்' ! (வரவர தற்பெருமை அதிகமாகிக்கிட்டே போகுதே.... பெருமாளே.....  ) 
உள்ளே கோவில் இருக்கு. சந்நிதியில் மூவர். சைதன்யா, க்ருஷ்ணன், ராதை ! சந்நிதிக்கதவு மூடியிருந்தாலும் கம்பி வழியா தரிசனம் ஆச்சு.
'நம்மவர்'  செல்லில் விவரம் பார்த்தவர் 'பக்கத்துலே ஸ்வர்கத்வார்னு ஒன்னு இருக்கு'ன்னார். ஆஹா.....

அஞ்சு நிமிட் நடக்கணுமாம்.  அதனால் என்ன சொர்கவாசல்  பார்க்க ஆசையாத்தானே இருக்கும், இல்லையா? என்ன கோவிலுன்னு தெரியலையேன்னு ஆர்வமா நடந்து போனா.... அட!   உண்மையிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம்தான்!
கடற்கரையை ஒட்டியே பீச்சில் அமைச்சுருக்காங்க.... பூரி நகரின் சுடுகாடு ! இந்த இடத்து பீச்,  ஸ்வர்கத்வார் பீச். ரொம்பப் புனிதமான இடம். இந்த இடத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வது உத்தமம்.  ஒவ்வொரு அமாவாசைக்கும்  நம்ம ஜகந்நாத் இந்தக் கடற்கரைக்குத்தான் வந்து போறாராம் !

காசியைப்போல்....  இதுவும் ஒரு புண்ணிய பூமி. இங்கே எரியூட்டும் உடம்பின்  ஆத்மா நேரடியா ஸ்ரீ வைகுண்டம் போயிருமுன்னு ஒரு நம்பிக்கை இருப்பதால், அக்கம்பக்க கிராமங்களில் இருந்தும் உடல்கள் வந்துக்கிட்டேதான் இருக்குமாம். சிதையின் வெளிச்சம் இரவெல்லாம் இருக்கும்னு சொல்றாங்க. எரிக்கக் கொண்டுவரும்  ஒரு உடலுக்குப்  பூரி முனிசிபாலிட்டி   வசூலிக்கும் சார்ஜ் எவ்ளோ தெரியுமா?  வெறும் முப்பத்தியொன்பது ரூபாய்தான் !
ஆஹா.... இவ்ளோதானான்னு நினைச்சுக்கப்டாது.....  இதைக் கட்டுனதும் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். அவ்ளோதான். மத்தபடி எல்லா இடங்களையும் போலவே  'ஸ்கை இஸ் த லிமிட் !' ( காசியில் பார்த்த பேரம் படியாத உடல் தண்ணிக்குள்ளே கிடந்தது நினைவுக்கு வருதே....)

நாம் அங்கிருந்த சொல்ப நேரத்தில் ரெண்டுமூணு பேர் சொர்கத்துக்குப் போய்க்கிட்டு இருந்தாங்க.  ஸ்மசானத்துலே ஒரு காளி கோவில்கூட இருக்கு!  'அவளுக்கு'ப் பொருத்தமான இடம்தான் !
எரிஞ்சுக்கிட்டு இருந்த ஒருவரின் உறவினர்கள் கூட்டம் ஒன்னு பேசுறது யதேச்சையாக் காதில் விழுந்தது....  ஏகாதசி மரணம், த்வாதசி தகனம்னு....  லேசா விசாரிச்சேன்.... இன்றைக்கு துவாதசியாமே!  பயணத்துலே நாள் கிழமை ஒன்னும் சரியாத் தெரியறதில்லைப்பா.....

அப்ப நேத்து ஏகாதசியா?  பெருமாளும், ஜயவிஜயர்கள் அரக்கர்களாப் பிறந்தபோதும் எவ்வளவு கருணை செஞ்சுருக்கார் பாருங்க..... தினம் தினம் கோபுரதரிசனம் கண்டு கோடி கோடிப் புண்ணியம் சேர்த்துக்கிட்டவருக்கு ஏகாதசி மரணம் அமைஞ்சது அவன் பெருங்கருணைதானே !  ஆனாப் பாருங்க.....  தகனம் இல்லைன்னு நினைக்கிறேன்....  புதைக்க இடம் கேட்டு 'தவம்' இருப்பதாக  வலைச்சேதி ஒன்னு கிடைச்சது,  இன்றைக்குக் காலையில்....  எப்படியோ  நல்லது நடந்தாச் சரி....

உள்ளே மணலில் இறங்கி எல்லாம் நடக்கலை. முகப்புக் கட்டடத்தாண்டை நின்னு கொஞ்சம் க்ளிக்கிட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடிச்சோம்.

இதே பீச் ரோடு வழியாகவே போகலாம்....   நியூ மரீன் ட்ரைவ் ரோடுன்னு பெயர்.  இந்த ரோடும், ஸ்வர்கத்வார் ரோடும்  சந்திக்கும் இடத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவுக்கு ஒரு சிலை வச்சுருக்காங்க. அழகான சிலைதான்!
இந்த ஜங்ஷன் நிறைய கடைகளோடு கலகலன்னு இருக்கு. பீச்சில் எக்கச்சக்கமான சிறு தள்ளுவண்டி வியாபாரங்கள்....  இன்னும் கடைகளைத் திறக்கலை.... பயணம் வந்த   சனமும் தண்ணீராண்டை நிக்கறாங்க...

மணி பத்தரைதான் ஆச்சு.....கையில் கெமெரா இருப்பதால் இப்பக் கோவிலுக்கும் போக முடியாது....   அறைக்குப் போய், அடுத்து என்ன செய்யலாமுன்னு  பார்க்கலாம்.

வெயில் வந்ததால்...வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பிக்கிட்டு இருக்கு.....

இன்னும்  எட்டுநாளில்  இந்தியாவை விட்டுக் கிளம்பறோம். பூரியில் இருந்து சென்னை போனதும்  செய்ய வேண்டிய வேலைகள், கடமைகள் என்னென்ன, அதுக்கு எவ்ளோ நேரம், நாள் ஒதுக்கணும்னு 'பேசி'க்கிட்டு இருந்ததில் நேரம் ஓடியே போச்சு. சட்னு ஒரு முடிவுக்கு வர முடியுதா?  வாண்ட் லிஸ்ட் பெருசா இருக்கே எனக்கு....

பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுக் கோவிலுக்குப் போகலாமுன்னு  ரூம் சர்வீஸ் மெனு பார்த்தால்  ஒன்னும் சரிப்படலை.  ஸ்ப்ரிங் ரோலும், சிப்ஸும் சொன்னோம். வந்தது.  பூரிக்குள் காய்கறி வச்சுச் சுருட்டிப் பொரிச்சுருக்காங்க. ஸ்ப்ரிங் ரோலாம்!  போகட்டும்....
 பூரியில் பூரி சாப்பிடலை என்ற குறை வேணாம்.... கேட்டோ :-)

தொடரும்......... :-)

நண்பர்கள் அனைவருக்கும்   உங்கள் துளசிதளத்தின் அன்பான தீபாவளி வாழ்த்து(க்)கள்!