Monday, October 14, 2019

ஸ்ரீ ஜகந்நாத் தரிசனம் (பயணத்தொடர், பகுதி 155 )

மூலவர்கள் இருக்குமிடம் கருவறை இல்லை... கருஹால்...... அத்தனாம் பெருசு !
பளிச்ன்னு கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் நடுநாயகமா சுபத்ரா வலதுபக்கம் பலராமர், இடதுபக்கம் கிருஷ்ணன்  !  நல்ல பெரிய உருவம். பெரிய பெரிய கண்கள். பார்வைக்குத் தப்பவே முடியாது!   ரெண்டு கைகளையும் நீட்டி வச்சுக்கிட்டு நம்மை உத்துப் பார்க்கறாங்க !!!!
ஆறடி உயர பலராமர், நாலடி உயர சுபத்ரா, அஞ்சடி உயர க்ருஷ்ணன்!!   மூணுபேரும் நல்ல உயரமான அலங்கார பீடத்தில் நிக்கறதால் (!)  இன்னும் உயரமாத் தெரியறாங்க !  ஒல்லி எல்லாம் இல்லை. நல்லா கிண்னுன்னு குண்டு உருவம்தான். (தினம்தினம் அம்பத்தியாறுவகை விருந்து சாப்பிட்டால் ஒல்லியாவா இருப்பாங்க? )

'அச்சச்சோ..... அப்படியெல்லாம் இல்லை.... எங்களை மரத்தில் செஞ்சு வச்சுருக்காங்க..... அதான்'னார்  பலராமர் :-)


வேப்பமரமாம்.  ஏன் சாமியை மரத்துலே செஞ்சு.....

நம்ம கிருஷ்ணனின் கடைசி சமாச்சாரம் யாருக்காவது நினைவிருக்கோ? (விவரம் தெரியாத நண்பர்கள் துளசிதளத்தில் பார்க்கலாம்!  )

ஜரா என்னும் வேடனின் அம்பு, இவன் காலில் தைச்சு அதனால்.... மரணம்.  ஆவிதான் பிரிஞ்சதே தவிர உடலுக்கு ஒன்னும் ஆகலையாம்!  ஜலசமாதி ஆக்கிட்டாங்க.  மரக்கட்டையாட்டம் தண்ணியிலே மிதந்து அப்படியே வந்துக்கிட்டு இருக்கான்.

இந்த மரம் தகதகன்னு நீல நிறத்தில் ஜொலிச்சுக்கிட்டு  மிதந்து  வந்தது,  ஒரு காட்டு மக்கள் கூட்டத்துலே ஒருத்தர்  கண்ணுலே பட்டதும் எடுத்துவந்து வச்சுக்கிட்டாங்க. நல்ல கட்டை, அதுலே இருந்த பளபளப்பும், அதிலிருந்து வந்த ஒரு ஆகர்ஷண சக்தியும், இனிய மணமும் இது அபூர்வப்பொருள்னு பட்டுருக்கு.  மரத்தை வச்சுப் பூஜை செய்ய ஆரம்பிச்சுருக்காங்க. கள்ளமில்லாத சனத்தின் அன்பு பார்த்துட்டு கிருஷ்ணரே அந்த மரத்தில் காட்சி கொடுத்துருக்கார்.  நீலமாதவான்னு பெயரும் சூட்டியாச்சு!

உத்கல நாட்டை ( கலிங்க நாட்டின் பழைய பெயர் உத்கல. இதுதான் நம்ம தேசிய கீதத்தில் வரும் 'த்ராவிட உத்கல வங்கா'!) ஆண்டுவந்த அரசன் இந்த்ரத்யும்னன் , மஹாவிஷ்ணுவின் பக்தன். அந்த  எதோ உளவாளிமூலம்.... காட்டுசனம் பூஜிக்கும் மரத்தைக் கேள்விப்பட்டு அதைப் பார்க்கணுமுன்னு  வர்றார். அவர் கண்ணுக்கு மட்டும் அந்த மரம் புலப்படவே இல்லை.....

ரொம்ப வருத்தத்தோடு திரும்பிப் போனவருடைய கனவில்  ஒரு இடத்தைக் காமிச்சு  'இந்த இடத்தில் இருக்கும் இந்த  மரத்தைக் கொண்டு வந்து என்னைச் செதுக்கு. நான் அதில் இருப்பேன்'னு ஸ்ரீ விஷ்ணு  சொல்றார்.  மறுநாள்  அந்த இடத்தைத் தேடிப்போக  கனவில் வந்த வேப்பமரம் அங்கே நிக்குது.  மரத்துக்குப் பூஜை செய்து அதை வெட்டிக் கொண்டு வர்றாங்க.

அடுத்த பிரச்சனை எப்படி, எதைப்போல் விஷ்ணுவை செதுக்குவது? கண்டவர் யார்?  தேவலோகத்துலே இருந்து விஸ்வகர்மாவை வரவழைக்கணுமோன்னு யோசிக்கும்போதே,    அப்போ அங்கே வந்த ஒரு கிழவனார் , 'நான் செதுக்கித் தர்றேன்.  தனி அறை வேணும். ஆனால்  என் வேலை முடியுமுன் யாரும்  அறைப்பக்கம் வந்து, ஆச்சா ஆச்சா ன்னு விசாரிப்பதெல்லாம் கூடாது'ன்னார். சரின்னு ஒத்துண்டார் அரசர்.

தனி மாளிகை ஒதுக்கப்பட்டது. பூட்டிய அறைக்குள்ளே  மரத்தைச் செதுக்கும்  'உளியின் ஓசை'  கேக்குது  :-)
ஒரு பத்துப்பதினைஞ்சு நாட்களுக்கப்புறம்,  அறையில் இருந்து ஒரு சத்தமும் வரலை.  தச்சுவேலைத்  தாத்தாவுக்கு என்ன ஆச்சோன்னு  ராணியம்மாவுக்குக் கவலை.  தொண்டுக்கிழம்... ஒருவேளை மண்டையைப் போட்டுருச்சோ....   ராஜா எவ்ளோ சொல்லியும் கேக்காமல், அறையைத் திறந்து பாருங்கன்னு நச்சரிக்கிறாங்க. மனைவி சொல்லைத் தட்டமுடியுமா?

அறைக்கதவைத் திறந்தால்.....  பாதி செதுக்கிய நிலையில் சிலை இருக்க, வேற யாரையும் காணோம்.....  கிழவர் எங்கே?  வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைஞ்ச கதையாகிருச்சேன்னு  ராணியம்மா புலம்பறாங்க.....

அப்ப அசரீரி கேட்டது.....  "வருத்தப்படாதே....  இனி இப்படித்தான் இருப்பேன்.  ஜகந்நாத் என்ற என் பெயரில் ஒரு கோவில் கட்டி இதையே வச்சு பூஜை செய்.  கோவிலை அரண்மனைக்குள் கட்டாமல் வெளியில் எல்லா மக்களும் வந்து பூஜிக்கும் முறையில்  கட்டு"

ராணியம்மாவுக்கு,  ரொம்ப துக்கமாப் போச்சு.  'அரண்மனைக்குள் பக்கத்தில் வச்சு , தினமும் உன்னைப் பூஜிக்கணுமுன்னு ஆசை ஆசையா இருந்தேன். இப்படிச் சொல்கிறீரே ஸ்வாமி'ன்னு கேட்க,  'வருஷத்தில் எட்டுநாள் உன் அரண்மனைக்கு நானே வந்து உன்னோடு இருப்பேன்,இது என் வாக்கு'ன்னு பதில் வந்துருக்கு!

அதே போல ஒரு கோவில் கட்டி (ஜகந்நாத் மந்திர்)
மரச்சிலையை வச்சு பூஜிக்கிறாங்க.  இதெல்லாம்தான் ஆதிகாலத்து சமாச்சாரம்.   அதுக்கப்புறம்தான் பலராமர் சிலையும்  கூடச் சேர்ந்தது.  கிபி ஏழாம் நூற்றாண்டில் சக்தி வழிபாடு தீவிரமான காலக்கட்டத்தில்தான்  விஷ்ணுவின் தங்கையான விஷ்ணுதுர்கை வழிபாட்டின் காரணம், கிருஷ்ணனின் தங்கை சுபத்ராவின் சிலையும்  சேர்ந்து மூணு சிலைகளாக் கருவறையில்  கூட்டமாப் போயிருச்சு.  இப்போ நாம் பார்க்கும் இந்தக் கோவிலைக் கட்ட ஆரம்பிச்சது பதினோராம் நூற்றாண்டில்தான்.
மூலவர்களைக் கையெடுத்துக் கும்பிட நமக்கு அவகாசம் கொடுக்காமலேயே  'தக்ஷிண், தக்ஷ்ண் டாலோ'ன்னு   பணம் நிறைஞ்சு வழியும்  பெரிய தாம்பாளத்தைத் தட்டித்தட்டி, கையையும் பலமா ஆட்டி ஆட்டிக் கத்தறார் பண்டா... காசை எடுக்கச் சட்டைப்பையில் கைவிடுவதைப் பார்த்துத்தான் அவர் மனசு சமாதானமாகுது. (இன்னும் கொஞ்சம் மெள்ள எடுத்துருக்கலாமோ..... அதுவரை சாமிக்கு முன்னால் நிக்க முடியுமே! ) சட்னு நம்மவர் ஒரு நல்ல தொகையைத் தட்டில் போட்டதும்,  'அங்கே மூணுபேர் (சாமிகள்தான்) இருக்காங்க. இன்னும் போடு' ன்னு அதட்டறமாதிரிச் சொல்றார் அந்த பண்டா. இன்னொருக்கா இவர் காசைப் போட்டதும், இன்னும் இன்னும்னு கை காமிக்கிறார். எல்லாம் போதுமுன்னு நான் 'நம்மவராண்டை'  சொன்னேன். (ரெண்டாவது பிடி அவலை வாயில் போட்டுக்க விடாமக் கையைப் பிடிச்சாளாம் மனைவி ! )   வெள்ளையா என்னவோ ப்ரஸாதமுன்னு  இவர் கையிலே கொடுத்தாருன்னு நினைக்கிறேன். எனக்கொன்னும் தரலை :-)

நீட்டிமுழக்கிச் சொல்றேனே தவிர இதெல்லாம் ரெண்டு மூணு நிமிஷத்துக்குள்ளேயே  நடந்துருச்சு.... தரிசனம் முடிச்சதும் அப்படியே நமக்கிடதுபக்கம் நேராப்போய் அங்கிருந்த சின்ன வாசல் மூலம் வெளியேறிட்டோம். அப்பதான் தெரிஞ்சது நாம்  படிகளேறி தரிசிக்க வந்ததும் பக்கவாட்டு வாசல்னு!  (போகட்டும் ...  இடும்பிக்கு எப்பவும் தனி வழி இல்லையோ ! ) 

ஹரிஷங்கர் முன்னால் வேகநடைபோட,   நாமும் பின்னால் ஓட(!)வேண்டியதாப் போச்சு.  மற்ற சந்நிதிகளைக் காண்பிக்கிறாராம்!  கல்பதாருன்னு ஒரு  ஆலமரச்சுவட்டில் இருக்கும் குட்டி சந்நிதியில் காசி விஸ்வநாத் மஹாதேவ் இருக்கார். வழக்கமான லிங்க ரூபத்தை விட்டுட்டு, வெறும்  படம்தான். அடுத்து இதே போல சின்னதா இன்னும் ரெண்டு சந்நிதிகள்.... விளக்கில்லை, வெளிச்சமும் இல்லை..... நல்லா உத்துப் பார்க்கணும். ஸ்ரீராம்சந்த்  &  ஸ்ரீ நர்ஸிங். கற்சிலைகள்தான்....

இந்தாண்டை மரத்தைக் கடந்துபோனால்.... பதீத பாவன சந்நிதி. ரொம்பப் பெரிய ஆஞ்சி !  பூக்கள் அலங்காரத்தில் அட்டகாசமா இருக்கார். அவருக்கு எதுத்தாப்போல் சந்து மாதிரிப் போகும் வழியில் இன்னும் சிலபல சந்நிதிகள். ஒரு புள்ளையார் இருந்தார்.

இந்தாண்டை போனால் ஆனந்த் பஸார்னு ஒரு நுழைவுவாசல்.  மார்கெட்டுக்குள் வந்துட்டோமோ ன்னு  பார்த்தால் ப்ரஸாதம் விற்குமிடம். சரியா சந்தைக்கடைப் போலத்தான் இருக்கு!  மண்சட்டிகளில்  சமைச்சு வச்சதை அப்படியே கொண்டுவந்து வச்சுருக்காங்க.  அங்கங்கே மண்சட்டிகள் பரத்தி வச்சு  ஒவ்வொரு குவியலுக்கும் ஒருத்தர் உக்கார்ந்து விக்கறார். நமக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வாங்கிக்கலாம்.   நாம் ஒன்னும் வாங்கிக்கலை....  (இங்கத்து அரிசியில் நம்ம பெயரை 'அவன்' எழுதலை)
சனம் அங்கங்கே உக்கார்ந்து சாப்பிடறாங்க. பிள்ளைகுட்டிகளுடன் பெரிய குடும்பங்கள்  அப்படியே முழுச்சட்டிகளையும் வாங்கிவந்து வச்சு வட்டம்போட்டு உக்கார்ந்துருக்காங்க.
உலகின் மிகப்பெரிய அடுக்களை இதுதானாம். விறகடுப்பில் மண்சட்டி சமையல்தான் !  தினமும் ஒரு லக்ஷம் பேர் சாப்பிடும் அளவில் சமையல் நடக்குதாம்! ஏழுநூறு  சமையல்க்காரர்கள் இருக்காங்களாம்,  ஒரு தொகை கட்டினால் அடுக்களைக்குள் போய்ப் பார்க்க முடியுமாம். இதெல்லாம் அப்புறம் தெரிஞ்சுக்கிட்ட சமாச்சாரம்.... நல்ல ச்சான்ஸை கோட்டை விட்டுட்டோமேன்னு மனசு பரிதவிச்சது உண்மை.....
ஹரிஷங்கர் அதோ  காத்திருக்கார்.... வாங்க கூடவே போய் கோவிலைச் சுத்திப் பார்க்கலாம்....

தொடரும்....... :-)

PINகுறிப்பு:  கோவிலுக்குள் படங்கள் எடுக்கத்தடை என்பதால் நம்ம கூகுளாண்டவர் அருளிச்செய்த படங்களில் சில இந்தப்பதிவில் உள்ளன!  படங்களின் உரிமையாளர்களுக்கு நம் நன்றி !


11 comments:

said...

ஜெய் ஜெகன்நாத்.
அருமை நன்றி

said...

/* மூலவர்களைக் கையெடுத்துக் கும்பிட நமக்கு அவகாசம் கொடுக்காமலேயே 'தக்ஷிண், தக்ஷ்ண் டாலோ'ன்னு பணம் நிறைஞ்சு வழியும் பெரிய தாம்பாளத்தைத் தட்டித்தட்டி, கையையும் பலமா ஆட்டி ஆட்டிக் கத்தறார் பண்டா... */

பெரிய மற்றும் புகழ் வாய்ந்த கோவில்களில் இதான் ஒரு தொல்லை நிம்மதியாகவே சாமி கும்பிடமுடியாது .ரொம்ப கஷ்டமாக இருக்கும் ஆனாலும் அந்த இறைவன் நமக்கு அருள் செய்வார் .உங்களுக்கும் அந்த பூரி ஜெகன்நாதர் அருள் வழங்கி இருப்பார் என நினைக்கிறேன்

said...

ஜகன்னாதர் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன். அடுத்த வருடத்துக்குள் அவனைப் பார்க்கலாம் என சமாதானம் செய்துகொண்டேன்.

பிரசாதங்கள், மண்பானை - என்ன மாதிரியான பிரசாதங்கள்? நம்மூர் போல சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவையா?

said...

/வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைஞ்ச கதையாகிருச்சேன்னு ராணியம்மா புலம்பறாங்க...../
கையை நீட்டுங்க. வெண்ணெய்ன்னு எழுதணும்ன்னு எவ்வளவு தடவை சொல்லியாச்சு... ரெண்டு போட்டால்தான் சரி வரும்ன்னு கோபால் சார் சொல்லறாப்டி.

/உலகின் மிகப்பெரிய அடுக்களை இதுதானாம். விறகடுப்பில் மண்சட்டி சமையல்தான் ! தினமும் ஒரு லக்ஷம் பேர் சாப்பிடும் அளவில் சமையல் நடக்குதாம்! /

அம்ரிட்ஸரிலும் லக்ஷம் பேர் சாப்பிடுவதாச் சொன்னீங்களே. இல்லையா?

said...

பூரி ஜெகனாதர் தரிசனம் கிடைத்தது மகிழ்சி.

"இரண்டாவது பிடிஅவலை போடவிடாமல்..."அப்படித்தான் இருக்கவேண்டும.:)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க செந்தில்பிரசாத்,

சின்னக்கோவில்களில் கிடைக்கும் அமைதியான தரிசனம் பெரிய கோவில்களில் இல்லைதான்..... கிடைச்சவரை போதும் என்ற மனசோடு அங்கெல்லாம் போகணும் போல.... ப்ச்....

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

சீக்கிரம் வாய்ப்பு அமையட்டுமுன்னு வேண்டிக்கறேன்.

ப்ரஸாதங்கள் எல்லாம் நம்மூர்போல கலந்த சாதங்களா இல்லை. சோறும், கூட்டும், பருப்புமாத்தான் தெரிஞ்சது. வெறுஞ்சோறுதான் அதிகம்..... ஒரு பானை ஒருமுறைதான் பயன்படுத்தறாங்க என்பதால் நிறைய வாங்கினால் பானையும் நமக்கே !

said...

வாங்க கொத்ஸ்,

என்னதான் மனசுக்குள்ளே இருந்தாலும்... எழுதும்போது சிலசமயம் இப்படி நடந்துருது.... சும்மாவா சொல்லி இருக்காங்க.... you can't teach an old dog new tricks ன்னு.

இப்ப இருக்கும் தலைமுறைக்கு எளிதாக இருக்கும். ஏன்னா அவுங்களுக்கு பழசு தெரியாது பாருங்க..... ப்ச்.... இதோ கை நீட்டிக்கறேன்..... 1, 2 3.....
அம்ரித்ஸரில் கமர்ஸியல் கிச்சன். பிரமாண்டமான பாத்திரங்களில் சமைக்கிறாங்க. இங்கே சின்னதும் பெருசுமாத் தனித்தனிச் சட்டிகளை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கி சமைக்கறாங்க. அந்த வகையில் இது பெரிய அடுக்களை. லக்ஷம்பேருக்குன்னாலும் சமையல் செய்வது இப்படியேதான் !

said...

வாங்க மாதேவி.


பேராசைக்கு அளவே இல்லாமல் இருக்கும்போது நமக்கு ரொம்ப பேஜாராப் போயிருதுப்பா.....

said...

ஆறடி உயர பலராமர், நாலடி உயர சுபத்ரா, அஞ்சடி உயர க்ருஷ்ணன்...

ஓ வாவ் ..


எவ்வொலோ பெரியவர்கள் ..உங்க விவரிப்பு கண்முன்னே எல்லாத்தையும் கொண்டு வந்து நிறுத்துது மா ...