ஒருவேளை உணவை ஒழி என்றால் ஒழியாய்....... பகல் சாப்பாட்டுக்கான நேரம் நெருங்கிருச்சுன்னு கடற்கன்னிக்கு எதிர்வாடை சாலையைக் கடந்து போனோம். இந்த மெரீன் பரேடு இருக்கு பாருங்க..... நேப்பியரில் இதை அடிச்சுக்க முடியாது. நல்ல அருமையான ஏரியா ! நடந்தே போய் எல்லாத்தையும் பார்த்து ரசிச்சு அனுபவிக்கலாம். இங்கே தங்குமிடம் தெரிஞ்செடுத்த 'நம்மவருக்கு' ஒரு பாராட்டுப் பத்திரம் (கூடக்)கொடுக்கலாம் :-)
முந்தாநாள் இங்கே வந்து சேர்ந்ததும் சாப்பிட்ட அதே இடம் போனோம். இங்கத்துக் கடைசி சாப்பாடும் இங்கேயே ஆகட்டும். நல்ல கூமரா ஸாலட் கிடைச்சது. கூடவே ஒரு ச்சீஸ் கேக்கும் ! எனக்கு எங்கே போனாலும் உயிர்காக்கும் உணவு அந்தப் பாழாப்போன பொட்டேட்டோதான். (இந்தியா விதிவிலக்கு, கேட்டோ ! )அதுக்கு இந்த கூமரா எவ்வளவோ தேவலை. மாற்றமும் வேண்டித்தானே இருக்கு, இல்லையோ ? கூமரா = சக்கரைவள்ளிக்கிழங்கு .
சிட்டுக்குருவிகளும் என்னைப்போலத்தான்.... இல்லே....? உருளையை ஒரு பிடி பிடிக்குதுகள் :-)
அக்கம்பக்கத்துக் கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டே போனப்ப, குழந்தைக்கோமாளி கண்ணில் பட்டான். அட! இவனுடைய அப்பா அங்கே நம்ம வீட்டில் இருக்காரே..... குழந்தையைக் கூட்டிப்போய்க் காமிச்சால் சந்தோஷப்படுவாரே.... புள்ளை பெரிய படிப்பாளி போல! புத்தக அலமாரியிலே உக்கார்ந்துருக்கான். அவனை 'வாங்கி' பையில் போட்டாச்.
முந்தாநாள் ராத்ரி பார்த்த இண்டியன் அலங்காரச்சாமான் கடை திறந்துருக்கு. ச்சும்மா எட்டிப்பார்த்தேன். அவ்ளோதான். இந்தக் கடை நம்மூரில் இருக்கப்டாதோ ? பொதுவா, நியூஸியில் பல வியாபார நிறுவனங்கள் எல்லாம் செயின் ஸ்டோர்ஸ் வகைதான். மெயின் ஸ்ட்ரீம்ஸ் என்பதால் எல்லா ஊரிலும் வியாபாரம் அமர்க்களம். விலையும் ஒன்னு போல என்பதால்.... எங்காவது போகும்போது இங்கிருந்து அன்பளிப்பு வாங்கிப்போகணுமுன்னு இல்லை. என்ன கொடுக்கப்போறோமுன்னு இங்கே பார்த்து வச்சுக்கிட்டு அங்கங்கே போய் வாங்கிக்கலாம். சுமைகூலி மிச்சம் :-) இந்தியன் கடைகள் மட்டுமே விதிவிலக்கு. புத்தர் அரைவிலை. நல்லா இருக்கார். இருக்கட்டும் ! யானை வந்து பார்த்ததுக்கு அடையாளமா ஒரு யானை....
ஓப்பன் மால்தான் இந்த இடம். இதைப்போல் எங்கூரிலும் கடற்கரைப் பேட்டையில் ஒன்னு இருக்கு! சனம் உக்காரப் போட்டு வச்சுருக்கும் மேடைகள் ஒவ்வொன்னிலும் விதவிதமான ஓட்டோவியம். என்ன இருந்தாலும் ஆர்ட் ஸிட்டி என்ற பெயரைக் காப்பாத்தணும்தானே !
இன்னும் ஒரு மணி நேரம் கைவசம் இருக்கு. ச்சும்மா ஒரு ட்ரைவ் போயிட்டுப்போகலாமா? அப்பத்தான் நினைவு வந்தது... படகுத்துறை போகலையேன்னு... ச்சலோ.....
ஏகப்பட்டவை நிக்குதுகள். மூரிங் பார்க் :-) கொடிமரம் உள்ளவைதான் அதிகம். காத்தாடப் போவாங்க இல்லே ?
ஸ்லிப்வே யில் லேடி ஹேமில்டன், கரையில் ஏறி நிக்கிறாள். 5558 இதுகளை எல்லாம் இடுப்புக்கு மேலேதானே எப்பவும் பார்க்கிறோம். இப்பக் காலையும் பார்க்க முடியுது. ரிப்பேர் வேலைக்கு வந்துருக்காள்.
கடலையொட்டியே போகும் சாலையில் போனால் ஹாக்ஸ் பே ஏர்ப்போர்ட். போற போக்கில் வண்டிக்குப் பெட்ரோல் நிரப்பிக்கிட்டோம். திருப்பி விடும்போது ஃபுல் டேங் இருந்தால் நமக்கு நல்லது. இல்லைன்னா அதுக்கொரு சார்ஜ் பண்ணிக்குவாங்க, ரென்டல் கார்க்காரர்கள். வண்டியை, த்ரிஃப்டி பார்க்கிங்லே விட்டுட்டு, உள்ளே போய் சாவியைக் கொடுத்துட்டு, வண்டியில் கீறல் விழுந்ததைச் சொல்லி, அதுக்கான படிவம் ( சரியா சாந்தி ? ) நிரப்பிக்கொடுத்தாச். ஒரு முன்னூறு டாலர் நம்ம கணக்குலே இருந்து எடுத்துக்கிட்டாங்க. ரிப்பேர் வேலை முடிஞ்சதும் அதுக்குண்டான காசைக் கழிச்சுக்கிட்டு, மீதியை நம்ம கணக்குலே சேர்த்துருவாங்க. போகட்டும்.... (அப்புறம் ஒரு வாரத்துலே மீதியைப் போட்டாச்சுன்னு தகவல் வந்தது )
செல்ஃப் செக்கின் பண்ணி, பொட்டிகளை ஒப்படைச்சாச். இனி காத்திருப்புதான். முக்கால் மணி நேரம் வேடிக்கை. இங்கத்து முக்கிய சமாச்சாரம் என்னன்னு கோடி காமிக்குது லவுஞ்சில் போட்டு வச்சுருக்கும் காஃபி டேபிள்ஸ்.
பக்கத்துலே வந்து உக்கார்ந்த லேடியுடன் சின்னப்பேச்சில் ஆரம்பிச்சு, அவுங்க ஓவியர் என்றதும் கொஞ்சம் பெரிய பேச்சாகிருச்சு :-)நம்மூருலே மகள் வீட்டுக்குப் போறாங்களாம். தனிநபர் ஓவியக் கண்காட்சி நடத்தறாங்க. நம்மூரிலும் நடந்துருக்கு. நமக்குத் தெரியாமப்போச்சே..... செல்ஃபோனில் அவுங்க ஓவியங்களைக் காமிச்சாங்க ! வாவ்...... அருமை ! நேரம் இருந்தால் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லி விவரமும் கொடுத்தேன்.
ஓவியம்னதும், நம்ம நெருங்கிய தோழி நினைவுக்கு வந்தாங்க. சிங்கையின் பிரபல எழுத்தாளர், (தமிழ் & இங்லிஷ் மொழிகளில் எழுதறாங்க )பிரபல ஓவியராகவும் டபுள் ஆக்ட் இப்போ! நமக்காக வரைஞ்சு கொண்டுவந்து கொடுத்தவைகளைப் பத்திச் சொல்லாமல் இருக்க முடியுதா? இதுவரை இந்திய டிஸைனில் ஒன்னும் வரைஞ்சதே இல்லையாம்..... ஆரம்பிங்கன்னு சொன்னேன்.
ஒன்னேமுக்கால் மணி நேர ஃப்ளைட். குட்டி விமானம். ஆடி ஆடிப்பறந்து வர இம்மாநேரம் எடுக்குது. அஞ்சு நாப்பதுக்குத் தரை.
ஆறேகாலுக்கு வீடு வந்தாச். நம்ம ரோட்டோருஆ பயணமும் முடிஞ்சது.
கோவிட் காரணம் இனி ரெண்டு வருஷங்களுக்கு நாட்டைவிட்டுப்போக எங்களுக்கு அனுமதி இல்லை. தடுப்பு ஊசி அடுத்த வருஷம் முதல் கிடைக்கலாமாம். அதுவரை உள்நாட்டுப் பயணங்கள் செஞ்சுக்கலாம். நமக்கும் ஏகப்பட்ட இடங்கள், நியூஸியிலேயே பாக்கி இருக்கு. ஒவ்வொன்னாப் போய்ப் பார்த்துட்டு வரணும்.
ஏர்நியூஸிலாந்துக்கு, போன ஜென்மக்கடன் எவ்ளோ இருக்கோ ?
போகட்டும்.
பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும். ஆனா ஒன்னு.... உடலில் கொஞ்சம் வலு இருக்கும்போதே போய் வந்தால் நல்லது. முட்டிவலி, முழங்கால் வலி, தலை சுத்தல் இப்படி வலிகள் வர்ற வயதான காலம்வரை தள்ளிப்போடாதீங்க.....
பொறுமையாகத் தொடர்ந்துவந்த வாசகப் பெருமக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்!
PIN குறிப்பு : கொஞ்ச நாளைக்கு லீவு விடலாமா ? எப்படியும் கிறிஸ்மஸ் லீவு வேணுமா இல்லையா ?
பொழைச்சுக்கிடந்தால் புது வருஷத்தில் ஆரம்பிக்கலாம்.
கொரோனா ஒழிக !