Wednesday, December 02, 2020

கணக்கெடுப்பும் கதீட்ரலும் பின்னே ----------- (ரோட்டோருஆ பயணம் . பகுதி 19 )

இன்றைக்கு மார்ச் 7 ஆம் தேதி.  நியூஸியில் ரொம்ப முக்கியமான நாள்.  ரெண்டு மாசமா இதை நினைவூட்டிக்கிட்டே இருந்தது அரசு. நேத்து அதாவது 6 ஆம் தேதி, ராத்ரி நாம் எங்கே இருந்தோமுன்னு அரசுக்குச் சொல்லணும். நாம்தான் நம்ம வீட்டில் இல்லையே.... ஊர் சுத்திக்கிட்டு இருந்தமே...   அதனால் என்ன, எங்கே இருக்கியோ அங்கே  இதுக்கான படிமத்தில் விவரம் சொல்லு.  பொழுது விடிஞ்சதும் முதல் வேலையா படிமங்களை நிரப்பி வச்சாச்.  நாடு முழுக்க வீடுகளுக்கு அனுப்பி வச்சதுமில்லாம, ஊர் சுத்திகள், ஆஸ்பத்ரியில் தங்கி இருப்பவர்கள் எல்லோருக்கும் அங்கங்கே படிமங்கள் காத்திருக்கு !  இதுக்கும்  வழி இல்லைன்னா.......   ஆன்லைனில் கூட  செஞ்சுக்கலாம்.  செல்லில்லாத மக்கள் உண்டா என்ன ? மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள், 2018. 

மணி ஏழானாலும், இன்னும் வெளிச்சம் வந்தபாடில்லை. ஒரே மூட்டம் போட்டுருக்கு. நேத்துப் பேய்ஞ்ச மழை இன்னும் பாக்கி வச்சுருக்கு போல..... கடமைகளை முடிச்சு ரெடி ஆனோம். இன்றைக்கு  இந்த ஊரைவிட்டுக் கிளம்பறோம். செக்கவுட்  டைம் காலை பத்து.  நமக்கு ஒரு மணி நேரம் லேட் செக்கவுட் கிடைச்சது. 

நாம் இன்னும் பார்க்க இடங்கள் பாக்கி இருக்கே.... அதை முடிச்சுக்கணும். நல்ல வேளையா எல்லாமே இங்கே ரொம்பப்பக்கத்துலேதான். இதே மெரீன் பரேடுலே !

நம்மவருக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் வரலைபோல்..... வலையில் இருக்கே வழின்னு தேடிக்கிட்டு இருந்துருப்பார்....   அதான் வண்டியை இடிச்சுட்டாரில்லையா....    அதை ரிப்பேர் பண்ணிக்கலாமுன்னு.....   கொஞ்சம் விசாரிச்சுட்டு அப்புறமா ஊர் சுத்தலாமுன்னார்.  ரிப்பேர் கடைகளைத் தேடிக்கிட்டுப் போனோம்.  


  பார்த்துட்டு, ஒரு நூத்தியெழுபத்திரெண்டு டாலர்  ஆகுமுன்னு  எஸ்டிமேஷன் கொடுத்தாங்க.  செஞ்சுக்கலாமுன்னா ..... அஞ்சாறுமணி நேரம் ஆகுமாம். அதுவும் பகல் ஒரு மணிக்கு மேலேதான் நேரம் இருக்காம்.  நமக்கு நேரம் இல்லையே.... பகல் மூணரை மணிக்கு வண்டியை ஏர்ப்போர்ட்டில் விடறதாச் சொல்லியிருக்கோமே.  போகட்டும்..... ரென்டல் கம்பெனியே ரிப்பேர் பண்ணிக்கட்டும். வேற வழி ? 

நியூஸி , போஸ்ட் பெர்ஸன்களுக்கு த்ரீ வீலர் கொடுத்துருக்கு. மழையில் நனையாமப் போகலாம்.
கிளம்பி அடுத்த பத்தாவது நிமிட்  சர்ச் வாசலுக்கு வந்துட்டோம்.  முந்தாநாளில் இருந்து கண்ணுலே பட்டுக்கிட்டே இருக்கு.... 

Waiapu Cathedral னு பெயர்.  1862 லே கட்டுனது செயின்ட் ஜான்'ஸ் சர்ச். பிஷப் இங்கே இதே ஊரில் இருந்துருக்கார். அப்புறம் 1869 லே கதீட்ரல் என்னும் அந்தஸ்து கிடைச்சது.  இதுவும்  'அந்த ' நிலநடுக்கத்துலே  முழுசா இடிஞ்சு விழுந்துருச்சு.  அதுக்கப்புறம் ஒரு இருபத்தியஞ்சு வருஷம் மரக்கட்டடத்தில்  சர்ச் நடத்தி இருக்காங்க.   

ரொம்ப வருஷங்கள் கழிச்சுத்தான் இப்ப நாம் பார்க்கும் கதீட்ரலைக் கட்டி இருக்காங்க. 1967 இல் கட்டி முடிச்சாச்சு. பத்து வருஷமாச்சாம் வேலை முடிக்க !  வெளியே பார்க்க சிம்பிளாத் தெரிஞ்சாலும் உள்ளே சூப்பரா இருக்கு!  3700  குழாய்களோடு இருக்கும்  ஆர்கன்,  நியூஸியில் இருக்கும் சர்சுக்களுக்கான பெரிய  ஆர்கன்களில் ஒன்னு !  வாசிக்கும்போது கேட்டால் அட்டகாசமா இருக்குமில்லே !   சர்வீஸ் நடக்கும் சமயத்தில் நாம் போகலையேன்னு ஒரு குறை இருக்கு எனக்கு....  


அரைவட்ட வடிவமாக் கருவறை (! )பின்பக்கச் சுவரில்  பூ டிசைனில்  ஒரு ரோஸ்விண்டோ !  ஏகப்பட்ட பெஞ்சு வரிசைகள். முக்கியமாச் சொல்லவேண்டியது..... ஸ்டேண்டு மேலே நிக்கும்  கருடன் !  (பெரிய திருவடி, இல்லையோ ! ) Eagle lectern. கிறிஸ்துவர்களின் வேதப்புத்தகத்தை இதுலே இருக்கும் பலகையில்  வச்சு, நின்னுக்கிட்டு  வாசிப்பாங்களாம். ஆனால் இங்கே குத்துவிளக்கு ஸ்டேண்டில் நிக்கிறார் ! 
கருடரை எல்லா  Anglican churchகளிலும்  வச்சுருப்பாங்க.  எனக்கும் சர்ச்சுகளில் போய் சாமி கும்பிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மனசுக்குள்ளே இருக்கும் பெருமாளை எங்கே கும்பிட்டால் என்ன ? போதாததுக்குப் பெரிய திருவடி வேற இருக்கார் ! 

நம்ம ஊர் நிலநடுக்கத்தில்கூட க்றைஸ்ட்சர்ச் கதீட்ரல் இடிஞ்சு விழுந்தப்ப, உள்ளே இருக்கும் பெரிய திருவடிக்கு ஒன்னும் ஆகலை. புதுசாக்கட்டுன கார்ட்போர்ட் (!) சர்ச்சில் இப்போ ஜம்னு உக்கார்ந்துருக்கார் !

 
அஞ்சு நிமிட் உக்கார்ந்து,  ஆடும் மனசை நிக்க வச்சு ஒரு நிமிட் மனசாரக்கடவுளை நினைச்சுத் தியானம் செஞ்சுட்டு,  விளக்கு ஏத்தி வச்சேன். இந்தப் பக்கங்களில் எல்லாம்  சர்ச்சுகளுக்குப் போகும்போது நாம் மெழுகுவத்தி வாங்கிப்போக வேணாம்.  அங்கேயே நமக்காக வச்சுருப்பதை எடுத்து விளக்கேத்திவச்சால் போதும்.  அதுவும் ஆச்சு :-)



பொதுவாச் சர்ச்சுகளுக்கே உரித்தான  ஸ்டெய்ன்டு / கட்  க்ளாஸ்  விண்டோக்கள்,  சம்ப்ரதாயமும், மாடர்ன் ஆர்ட்டுமாப்  பளிச்ன்னு  அழகு !  






நமக்குப் பதினொன்னுக்குதான் செக்கவுட் . ஆனால்.... பதினொரு  மணிக்கு எங்கே சுத்திக்கிட்டு இருப்போமோ... அதுக்குன்னு ஓடி வர முடியுதா? இன்னும்  நமக்கு சில இடங்கள் பாக்கி இருக்கே.  பேசாம இப்பப்போய் செக்கவுட் பண்ணிக்கலாம்.  பொட்டிகளை வண்டியில் வச்சால் ஆச்சு !  கதீட்ரலில் இருந்து  ஒரே ஒரு கிமீதான் . ஆனாலும்  சுத்திக்கிட்டுத்தான் வரணும்.  கிளம்பும்போதுதான்  ஹொட்டேல் ம்யாவ் கண்ணில் பட்டது. கொஞ்சம்  நம்ம கோகி ஜாடை இருக்கோ ?    

தொடரும்........... :-) 




2 comments:

said...

அழகாக இருக்கிறது.

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !