அநேகமா ஓட்டுச்சாவடிக்குப் போவது இதுவே கடைசி முறை என்றே நினைக்கிறேன். நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நாள் வந்துருச்சு. காலை 9 மணி முதல் மாலை 7 வரை ஓட்டுச்சாவடி திறந்திருக்கும். எப்பவும் இது ஒரு சனிக்கிழமையாகவே இருக்கும் என்பதால் தேர்தலுக்குன்னு லீவெல்லாம் விடறதில்லை.
ஒவ்வொரு பேட்டைக்கும் குறைஞ்சது நாலு இடங்களில் வாக்குச்சாவடி. (பொதுவா பள்ளிக்கூட ஹால்கள், சமூகக்கூடங்கள். சர்ச்சுகளில் உள்ள கூடங்கள் இப்படித்தான் இருக்கும்) எல்லா இடங்களிலும் சக்கரநாற்காலிகள் பயன்படுத்தும்விதமான அமைப்புகளும் இருக்கணும் என்பது விதி. நடக்கமுடியலைன்னு ஓட்டுப்போடாம இருந்துடக்கூடாது பாருங்க.
எலக்ஷன் கமிஷனுக்கு வேற வேலை இல்லையோன்னு சலிச்சுக்கும் வகையில் தகவல்களா அனுப்பிக்கிட்டே இருப்பாங்க. தேர்தல் வரப்போகும் நாளை அரசு அறிவிச்சவுடன், நாட்டின் எல்லா நூலகங்களிலும் வாக்காளர்கள் பட்டியல் வந்துரும். நாம் அதைப் பார்த்து நம்ம பெயர் விட்டுப்போயிருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம். எழுதித்தரச் சோம்பலா இருந்தால்.... இலவசமா ஒரு தொலைபேசி எண் (0800 நம்பர்) கூப்பிட்டுச் சொன்னால்கூடப் போதும். தொலைக்காட்சியிலும் அறிவிப்புகள் வந்துக்கிட்டே இருக்கும். "சீக்கிரம் என்ரோல் பண்ணிக்கோ. உன் உரிமையை விட்டுக்கொடுத்துராதே! " சூப்பர் மார்கெட், ஷாப்பிங் செண்ட்டர்கள் வாசலில் மேசை,நாற்காலி போட்டுக்கிட்டு என்ரோல் பண்ணிக்கோன்னு கூப்புட்டுக்கிட்டே இருப்பாங்க.
ஏற்கெனவே பதிவு செஞ்சுருக்கும் நபர்களுக்கு , வீட்டுக்குக் கடுதாசி வரும். நம்ம விவரம் எல்லாம் அச்சடிச்சு, விவரம்சரியா இருக்கான்னு பார்த்துக்கோ. இல்லைன்னால்.... இதுகூடவே வச்சுருக்கும் தாளில் புதுவிவரம் (ஊர்விலாசம் மாறினால்) எழுதி தபாலில் போட்டுரு. ஸ்டாம்ப் கூட ஒட்ட வேணாம். இலவச போஸ்ட்தான் என்று சொல்லும். ஒரு முறை வந்தால் போதும்தான். ஆனாலும் பலமுறை கடுதாசு அனுப்பிக்கிட்டே இருப்பாங்க. இவ்ளோ செஞ்சும், ஓட்டுப்போடாமல் போகும் மக்களும் உண்டு. நம்ம அண்டை நாட்டில் (அஸ்ட்ராலியா) வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டுப்போடணும். ஓட்டுப்போடத்தவறினால் அபராதம் செலுத்தணும் என்ற சட்டம் இருக்கு, கேட்டோ! உண்மைக்கும் அப்படி இருப்பது எனக்கு ரொம்பப்பிடிச்சுருக்கு.
தேர்தல் நடக்கும் நாள், நாம் ஊரில் இருக்கமாட்டோம், இல்லை வேறெதாவது (இதைவிட ) முக்கிய அலுவல் இருக்குன்னா தேர்தல் நடக்கும் தேதிக்கு 17 நாட்கள் இருக்கும்போதே ஏர்லி ஓட்டு போட்டுக்கலாம்.
எப்படி ஓட்டுப்போடணுமுன்னு விளக்கிச் சொல்லும் குறிப்பு ஒன்னு 25 மொழிகளில் ஒரே தாளில் அச்சடிச்சு நம்ம வீட்டுத் தபால்பெட்டிக்கு அனுப்பி வைக்குது எலக்ஷன் கமிஷன். இதுலே தமிழ் மொழியும் இருக்கு!!!!
இதில்லாம, எத்தனை கட்சிகள் பங்கெடுக்கறாங்க, தேர்தலில் வேட்பாளர்கள் யார் யார் என்ற விவரமும் அனுப்பி வச்சுடறாங்க. பொதுவா, மேலைநாடுகளில் ரெண்டே கட்சிகள்தான் என்று நினைப்போம் பாருங்க.... அந்த மாயை உடைஞ்சுருது. இத்துனூண்டு நாடான நியூஸியில் தேர்தலில் நிக்கும் கட்சிகள் இப்போதைக்கு 14 கட்சிகள்.
மொத்தம் 121இடங்கள் என்பதால் பெரிய (!) கட்சிகள் நிறைய இடங்களில் குறைஞ்சது 61 இடங்களில் நிக்கறாங்க. இந்தவாட்டி, தேசியக் கட்சி (நேஷனல்) 65 இடங்களிலும். தொழிற்கட்சி (லேபர்) 64 இடங்களிலும் நின்னாங்க. பசுமைக் கட்சி (க்ரீன் ) நின்னது 59 இடங்களில். மற்றவை எல்லாம் 40, 35, 32,20, 14, 8 இப்படி. போதை மருந்தை சட்டப்படி பயன்படுத்த விடணும் என்றுகூட ஒரு கட்சி இருக்கு( Aotearoa Legalise Cannibis Party) இது ஒரு 13 இடங்களில் நின்னுச்சு.
ஆளுக்கு ரெண்டு ஓட்டு போடலாம். ஒன்னு நல்ல ஓட்டு ஒன்னு கள்ள ஓட்டா? நோநோ நோநோ. ஒன்னு உங்க தொகுதியில் நிக்கும் வேட்பாளர்களில் ஒருவருக்கு. இன்னொன்னு உங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிக்கு. இதுலே நாட்டின் மொத்த வாக்களித்தவர்கள் எண்ணிக்கையில் குறைஞ்சது அஞ்சு சதமானம் ஓட்டு வாங்கிய கட்சிகள், தங்கள் பிரதிநிதியாக ஒருவரை பார்லிமெண்டுக்கு அனுப்பலாம். எத்தனை அஞ்சு சதமானமோ அத்தனை அங்கங்கள் அங்கே இடம்பெறும். பார்ட்டி ஓட்டுக்கு பார்ட்டி ஸீட்! MMP (Mixed-member proportional representation ) System.
எல்லா அரசியல் கட்சிகளும், பார்ட்டி ஸீட்டுக்காக அனுப்பப்போறவங்களை, பட்டியல் போட்டு அதை சிலபல மாசங்களுக்கு முன்பே வெளியிட்டுருவாங்க. ( முடிவு தெரிஞ்சபின் கடைசி காலத்துலே பேரம் படிஞ்சு அப்புறம் ஆளை அனுப்பற வேலையெல்லாம் இங்கே இல்லையாக்கும் கேட்டோ!)
இங்கே மவோரி கட்சி ஆரம்பிச்சபோது Hone Harawira என்றவர் அந்தக் கட்சி சார்பில் நின்னு தேர்தலில் வென்று பார்லிமெண்ட் அங்கமானார். ரெண்டு முறை (ஆறு ஆண்டுகள்) தொடர்ச்சியா வெற்றிதான். அப்புறம் எதோ கருத்து வேறுபாடுன்னு சுயேச்சையா நிக்கப்போறேன்னு சொல்லி மானா ( Mana =குடும்பம்) ஆரம்பிச்சார். இங்கேயும் தேர்தலில் ஜெயிச்சு MP பதவியைக் காப்பாத்திக்கிட்டார். அவருடைய கெட்ட நேரம் பாருங்க....... புதுசா இந்த வருசம் , சரியாச் சொன்னா ஒரு 6 மாசத்துக்கு முன்னால் ஆரம்பிச்ச, இண்டர்நெட் கட்சியோடு கூட்டு சேர்ந்து Internet Mana Party உள்ளதும் போச்சுடா என்ற கதைதான், இப்போ.
இந்த இண்ட்டர்நெட் கட்சியை ஆரம்பிச்சது கிம் டாட் காம் என்ற நபர். ஏற்கெனவே சிலநாடுகளில் க்ரிமினல் குற்றவாளின்னு பதிவு செய்யப்பட்டவர். மெகா அப்லோட் என்று copyright infringement சட்டத்துக்குப் புறம்பான pirated contents சமாச்சாரங்களால் கோடிகோடியா சம்பாரிச்சவர். இங்கே பிஸினெஸ் மைக்ரேஷன் என்ற வகையில் காசு கட்டிட்டு, நாட்டுக்குள்ளே வந்து இடம் பிடிச்சு உக்கார்ந்துருக்கார். (இவர் 'கதை' சொல்ல ஆரம்பிச்சா பத்து பதிவு கேரண்டீ!) அரசு எப்படி இவரை உள்ளே விட்டதுன்னு தெரியலை. (காசாலே அடிச்சுட்டார்ப்பா மனுஷன்!) அப்புறம் முழிச்சுக்கிட்டு, அமெரிக்க அரசு கேட்டுக்கிச்சுன்னு( costing the entertainment industry $500 million through pirated content ) அரெஸ்ட் பண்ணினாலும்..... சட்டத்திலுள்ள ஓட்டைகளில் நுழைஞ்சு வெளிவந்துட்டார். ஆஹா.... என்னையா கைது பண்ணே? உன் அரசை என்ன செய்யறேன்பார்ன்னு அரசியல் கட்சி ஆரம்பிச்சு, வெகுளியா நின்ன மானா பார்ட்டியை அதே காசு, பணம், துட்டு, மணி உதவியால் இழுத்துக்கிட்டு, இப்போ ஒரேடியா மானாவை கவுத்துட்டு, 'மன்னிக்கணும். மானாவுக்கு விஷம் வச்சது என்னோட தவறு' ன்னு அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கார்.
இந்த முறை ஆளும்கட்சி அண்ட் எதிர்கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில்(!) தொலைக் காட்சியில் தோன்றி வரப்போகும் தேர்தல் வாக்குறுதிகளைச் சொன்னாங்க. ஏற்கெனவே போன தேர்தலில் ஒருக்கா இப்படிச் செஞ்சாங்கன்னாலும், இந்த முறை ஒவ்வொரு சேனலும் ஒருநாள்ன்னு ஏற்பாடு பண்ணி இருந்துச்சு. நாங்களும் ஒன்னையும் விடாம நாட்டுக்கு இனி என்னதான் செய்யப்போறாங்கன்னு ஆவலோடு பார்த்தோமுன்னு வையுங்க.
இந்த முறை என்ன ஆச்சுன்னா.....தொழிற்கட்சிக்குப் புதுத்தலைவர் வந்துட்டார். தலைவராகி சரியா ஒருவருசம்தானாகி இருக்கு. பிரதமராகணுமுன்னு ஏராளமான கனவுகள். கொஞ்சம் பெரிய வாய்! (சுருக்கத்துலே சொன்னால் நம்ம சுப்ரமணிய சுவாமி மாதிரி!) தொலைக் காட்சியில் நடந்துக்கிட்டு இருக்கும் விவாதங்களில் தன்னுடைய முறை வரும்போது பேசலாமேன்னு இல்லாமல் மற்றவரிடம் கேள்விகேட்டு அவர் பதில்சொல்லும்போதே குறுக்கேகுறுக்கே புகுந்து வாய் ஓயாமல் இவருடைய சமாச்சாரத்தைப் பேசிக்கிட்டே இருந்தார். உண்மையைச் சொன்னால் இந்தக் குழறுபடியில் யார் என்ன பேசுனாங்கன்னே விளங்கலை. ஒரே இரைச்சல்தான். மூணு நாட்களும் இதேதான்:( பார்த்துக்கிட்டு இருக்கும் மக்களுக்கு எரிச்சல்தான் கட்டாயம் உண்டாகி இருக்கணும். இது ஒரு பெரிய தவறுன்னு அப்போ அவருக்குத் தெரியலை!)
இதுலே நான்வேற இதே போல் ஒரு விவாதம் நம்ம தமிழ்நாட்டுலே முன்னாள் & இந்நாள் முதலமைச்சர்கள் பேசுனா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்:-) நடக்கற சமாச்சாரமா!!!!
போகட்டும்...... இப்ப தேர்தல் முடிவு பார்க்கலாம்.
சரியா மாலை 7 மணிக்கு ஓட்டுச்சாவடியை மூடுனாங்க. உடனே ஓட்டு எண்ணத்தொடங்குனாங்க. நம்ம ஓட்டுச் சீட்டுலே அடியில் ஒரு பார்கோடு ஒருக்காம். நான் கவனிக்கலை. அதை ஒரு ரீடருக்குள் நுழைச்சால் போதுமாம். கோபால் சொன்னார். தொலைக் காட்சியில் ஓட்டு விவரங்கள் உடனே வர ஆரம்பிச்சது. சரியா இரவு பத்து மணிக்கு மொத்த ஓட்டும் எண்ணி முடிச்சு வெற்றி தோல்வியை அறிவிச்சுட்டாங்க.
நேஷனல் கட்சி 61 இடம் பிடிச்சது. நேரடி ஜெயிப்பு 41 பார்ட்டி சீட்டுகள் 20. முதல்முறையா முழு மெஜாரிட்டி! யார் தயவும் இல்லாம மந்திரி சபை அமைக்கலாம். இது இந்தக் கட்சிக்கு இப்போ மூணாவது டெர்ம் ஜெயிப்பு. நாங்க நியூஸியில் பொதுவாகவே ஒரு கட்சிக்கு மூணு முறை வாய்ப்புகளைத் தொடர்ந்து கொடுப்போம். முதல்முறை சரி இல்லைன்னா, போகட்டும் இன்னொருக்கா இருந்து நல்லா நடத்தட்டுமேன்னு. ரெண்டாம்முறையும் சரி இல்லைன்னா, கடைசியா ஒரு வாய்ப்புன்னு மூணாம் முறை கொடுப்பதுதான். நியூஸியின் அரசியல் வரலாறு பார்த்தால் இது புரிஞ்சுரும்:-) ரொம்பத் தாங்க முடியாத அராஜகமுன்னால்தான் சட்னு ஆப்பு வைப்பது வழக்கம், கேட்டோ!
ஹிரண்யகசிபுவை, நரசிம்ஹம் வதம் செஞ்சபோது, மெல்ல மெல்ல வயித்தைக் கிழிச்சதாம். இப்போவாவது அவன் திருந்தினால் விட்டுடலாமேன்னு. அவ்ளோ இரக்கமுள்ள அவதாரம் நரசிம்மர்ன்னு ஒரு உபன்யாசத்துலே கேட்டேன்!
தொழிற்கட்சி , 27 ஜெயிப்பு, 5 பார்ட்டி சீட்டுன்னு 32 தான். போன தேர்தலைவிட இது ரெண்டு குறைவு. 1922 வது வருசத்துக்குப்பின் இதுதான் அதிக மோசமான தோல்வியாம். இன்னைக்கு தொழிற்கட்சி அவுங்களுக்குள்ளே கூடி புதுசா போன வருசம் தெரிவு செய்த தலைவரை போஸ்ட் மார்ட்டம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. என்ன முடிவுக்கு வந்தாங்கன்னு ஆறுமணி செய்தியில் தெரியவரும்!
தொழிற்கட்சி , மற்ற இதர கட்சிகளுடன் கூட்டு வச்சுக்கிட்டாவது ஆட்சியைப் பிடிக்கலாமுன்னா அதுக்கும் வழி இல்லை! இதுலே நியூஸிலாந்து ஃபர்ஸ்ட் என்ற கட்சி கூட்டு சேரவே சேராது. அவுங்களுக்கு 11 இடம்! நேரடி ஜெயிப்பு ஒன்னும் இல்லை என்றாலுமே, பார்ட்டி ஓட்டுகள் நிறையக் கிடைச்சிருக்கு. அந்தக் கட்சியின் கொள்கைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நியாயமான கொள்கைகள். ஆனால்..... நாட்டுக்கு நல்லதுன்ற உண்மையை உரக்கச் சொன்னா யார் காது கொடுத்துக் கேட்கப்போறாங்க? பாழும் அரசியல்:(
பசுமைக் கட்சி 13 இடங்கள். இங்கேயும் நேரடி வெற்றி யாருக்கும் இல்லை!
போட்டியிட்ட 14 கட்சிகளில் எட்டுக் கட்சிகள் ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாமப் போயிருச்சு. நேரடியா ஜெயிக்க முடியலை என்றாலும் ஒரு அஞ்சு சதமானம் பார்ட்டி ஓட்டு கிடைச்சிருந்தால் ஒரு ஆளாவது மக்கள் சபை வரை போயிருக்கலாம். இதுலே அந்த இண்ட்டர்நெட் மானா பார்ட்டியும் ஒன்னு.
ஒவ்வொருத்தராக் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கும் சடங்கு முழுசும் முடியறதுக்குள்ளே பார்த்தவரை போதுமுன்னு வேற வேலையைப் பார்க்கப் போயிட்டேன். தொழிற்கட்சித்தலைவர், நாளை முதலே அடுத்த தேர்தலுக்கான வேலையை ஆரம்பிக்கப்போறாராம்.
ஈஸி ஓட்டு என்று நம்ம முழு விவரம் அடங்கிய கடுதாசியை எலக்ஷன் கமிஷன் நம்ம வீடுகளுக்கு அனுப்பி வைக்குது. அதைக் கொண்டு போனா.... ஸர் நேம் தகராறு ஒன்னுமில்லாமல் போனோமா, ஓட்டைப் போட்டோமா, வந்தோமான்னு இருக்கலாம். எல்லாம் ஒரு ரெண்டு நிமிச வேலைதான்.
நம்மூட்டாண்டை இருக்கும் பள்ளிக்கூட ஹாலுக்குப் போனோம். நாலு நிமிச நடைதான். நாங்க ஓட்டுப்போடப்போனபோது நமக்கு முன்னால் ரெண்டு பேர் வரிசையில் இருந்தாங்க. நமக்குப்பின்னே ரெண்டு பேர் வரிசையில் வந்து சேர்ந்துக்கிட்டாங்க. வாக்குச்சாவடி பணியாட்கள் மூணு பேர் என்று பயங்கரக் கூட்டம். ஒன்பது பேர் இருந்தோமே!
(ஆத்தா........ நான் ஓட்டுப் போட்டுட்டேன்!)
ஓட்டுச்சாவடி வரை போகாமல், ஆன் லைனில் ஓட்டுப்போட மக்கள் ஆவலாக இருக்கோம் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் அநேகமா வந்துரும். அடுத்த தேர்தல் 18 நவம்பர் 2017 . நாட்டில் உள்ள எல்லாருக்கும் ஒரு IRD நம்பர் இருக்கு. இல்லைன்னா வரி கறப்பது எப்படி? அந்த எண்ணை நம்ம பாஸ்வேர்டா வச்சுக்கிட்டால் ஓட்டுப்போடுவது சுலபமுன்னு கோபால் சொல்றார்.
மூணாவது முறையா பதவிக்கு வந்த ஜான் கீ அரசு(John Key Govt) நல்லபடி நடக்கட்டுமுன்னு வாழ்த்துகின்றேன்.