Tuesday, November 29, 2005

இதைக் கொஞ்சம் கவனியுங்களேன்.

ஸ்ட்ரெஸ் ரொம்ப ஆகுற காலமாம். இன்னும் ஒரு சில வாரம்தான் இருக்காம். பண்டிகை நல்லபடியாநடக்கணும். வாங்கறதெல்லாம் வாங்கிறணும். என்ன பரிசுப் பொருள் கொடுக்கணும் இப்படியெல்லாம் மனசைப்போட்டுக் குழப்பிக்கிட்டு இருக்கறவங்களுக்குன்னே இந்த உதவிக் குறிப்புகள்.நேருக்கு நேர்.
***************
தைரியமா ட்ராகனைப் பார்க்கணும்:-))))) ????
ஒரு நண்பர்கிட்டேயோ, ஒரு கவுன்சிலர்கிட்டேயோ இதைப் பத்திப் பேசலாம். நாமே நினைச்சுக் குழப்பிக்கறதைவிட அவுங்களை விட்டுக் குழப்பச் சொன்னா எதாவது ஒரு நல்ல முடிவு வேற ஒருகண்ணொட்டத்திலே கிடைக்கலாம். மனசுக்குள்ளெயே போட்டுக் கொதிக்கிறப்ப உங்க அட்ரினலீன்ரொம்பச் சுரந்து நீங்களும் கொதிக்க ஆரம்பிச்சுருவீங்க.


காஃபி & டீக்கு 'ச்சீ போ' சொல்லலாம்:-)
****************************************
காஃபிலே இருக்கற கேஃபைன் நம்ம உடம்புலே முழுசும் ஓடி முடிக்க அஞ்சுமணி நேரம் ஆகுமாம்.காலையிலே மொதக் கப்பு காஃபி 6 மணிக்குக் குடிச்சுட்டு நாளை ஆரம்பிக்கிறிங்க. கடைசிக் கப்புராத்திரி 11 மணிக்குன்னு வச்சிக்கிட்டா கேஃபைன் உங்க உடம்புலே இருந்து ஒழியவே ஒழியாது.டீ, காஃபிலே மட்டுமில்லாம இது சாக்கலேட், குளிர்பானங்கள் இவைகளிலேயும் இருக்கறதாலேஅது இங்க ரத்த அழுத்தத்தைக் கூட்டிவிட்டுருமாம். அப்புறம் என்ன? 'தீ மிதிச்ச குரங்கு'தான்.இது உங்க அட்ரினலீன் தேவையான அளவுலே சுரக்கறதியும் பாதுக்குமாம்(-:


அதுக்காக காஃபியை விட்டுற முடியுதா? அளவோட ஒன்னு, ரெண்டோட நிறுத்திக்கணும்.


நட, ஓடு......ராத்தூக்கம்
***********************
குழப்பம் கூடக்கூட மன அழுத்தம் கூடிப்போய் ராத்தூக்கம் போயிரும். இப்ப என்னா செய்யலாம்?உடற்பயிற்சி. நடங்க நடங்க. தினமும் நடங்க. முடிஞ்சா ஓடுனாலும் தப்புல்லே. உடற்பயிற்சியைவிடாமச் செஞ்சா கொஞ்சம் தப்பிச்சுரலாம்.


சரியான சாப்பாடு
*******************
கவலையா இருக்கேன்னு சாப்பிடாம இருந்துராதீங்க. ரத்தத்துலே சக்கரை அளவு 'டக்'ன்னு குறைஞ்சுபோய்அதனாலே பல சிக்கல்கள் வந்துரும். மன அழுத்தமா இருக்கறப்ப இந்த ப்ளட் க்ளுக்கோஸ் ஏறி இறங்கி இன்னும்மோசமாப்போகும். இதை ஈடுகட்டறென்னுட்டு, ஹை எனர்ஜி ஜங்க் ஃபுட் சாப்பிட்டீங்கன்னா கதை கந்தலாயிரும்.பழங்கள், காய்கறிகள்,காட்டேஜ் ச்சீஸ், தயிர், ஹை ஃபைபர் தானியங்களாலே ஆனா சிரியல்ன்னு சாப்பிடுங்க.


குடி...... பார்த்துக் குடி
**********************
உற்சாக பானமுன்னு நினைச்சுக்கிட்டு நீங்க குடிக்கிற ஆல்கஹால் குடிவகைகள் உண்மைக்குமே உற்சாகம் தராது.இன்னும் நரம்புத்தளர்ச்சியைக் கிளப்பி விட்டுரும். அதாலே கவனமா 'அளவோடொ' குடிக்கணும். புரிஞ்சதா?


தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே.....
******************************************

( மறந்த பாட்டை நினைவுபடுத்திய டிபிஆர்ஜோவுக்கு நன்றி)வளர்ந்த மனுஷனுக்கு எட்டுமணி நேர உறக்கம் அவசியம், ஆனா சிலருக்குத்தான் ஏழுமணி நேர உறக்கம் கிடைக்குது.நல்ல தூக்கம்தான் நம்ம உடம்பை ரீ சார்ஜ் செய்யற பேட்டரி. ராத்திரியிலே வயிறு முட்டச் சாப்பாடு, கூடவே குடின்னுஇருந்தா தூக்கம் போயே போச்! ராத்திரி சூடா ஒரு டம்ளர் பால் குடிச்சா, அதுலே இருக்கற அமினோ ஆசிட் மூளையை(!)சாந்தப்படுத்தி தூக்கம் வரவைக்கும். மறந்துராதீங்க.அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸ்.....
*********************************
செஞ்சுரலாமே. அதுலே என்ன கஷ்டம்? ஒரு யோகா, ஒரு டய் சி( tai chi)ன்னு எதாவது செய்யக் கத்துக்குங்க.( நாம் இந்தியர்கள் என்ற படியாலே இந்த யோகா எல்லாம் அத்துபடின்னு இங்கே நினைச்சுக்கிட்டு இருக்காங்க!)நாம அப்படியே ரிலாக்ஸ் செய்யறப்ப நம்ம உடம்பு கார்ட்டிஸால்(cortisol ) அதிகமா சுரக்கறதை நிறுத்திருமாம்.அதனாலே நம்ம இம்யூன் சிஸ்டம் நல்லா வேலை செஞ்சு தொற்று வராமப் பார்த்துக்குமாம். மனசே மட்டுமில்லை,உடம்பும் ரிலாக்ஸ் ப்ளீஸ்!


மசாஜ்...மஜா தான்.
*********************


நல்ல அருமையான வாசனை எண்ணெயை எடுத்துக்கிட்டு அப்படியே உடம்புலே தடவிக்கிட்டு மணமா ஒரு மசாஜ்செஞ்சுக்கிட்டீங்கன்னா அப்படியே அடங்கிரும் மனசு, உடம்பு எல்லாம். தசைகளிலெ இருக்கற முடிச்சை எல்லாம்இது 'அவுத்துருமாமே'! நமக்காகவே கொஞ்சம் நேரம் ஒதுக்கிக்கிட்டு இதையெல்லாம் செஞ்சோமுன்னா புதிய நம்மை நாமே காணலாம்.


கண்டகண்ட பார்லர்களிலே நடக்கற 'வேற' மாதிரி மசாஜ்க்குப் போயிடாதீங்க. அதுலே டென்ஷந்தான் ஜாஸ்தியாயிருமாம்.ஜாக்கிரதை. சனியனை என்னாத்துக்கு விலை கொடுத்து வாங்குவானேன்?


ஆமா, இதெல்லாம் இப்ப எதுக்குச் சொல்றேன்னு புரியுதா? கிறிஸ்மஸ் பண்டிகை வருதுல்லையா, அதனாலேஜனங்களுக்கு ரொம்ப மன அழுத்தம் வந்து கஷ்டம் ஆயிருதாம். இதுலே இருந்து நம்மைக் 'காப்பாத்திக்க'Susan Erasmus ன்றவங்க கொடுத்த குறிப்புங்கதான் இதெல்லாம்!


இங்கே பண்டிகைக்குப் புதுத்துணி போடற வழக்கமெல்லாம் இல்லை. 'சீர் செனத்தி'ன்னும் கொடுக்கவேணாம்.


இவுங்களுக்கே இப்படின்னா, சென்னை சில்க்ஸ், குமரன், தங்கமாளிகை, கஜானான்னு ஊர் முழுக்கக் கடைகள்இருக்கற நம்ம ஆட்களுக்கு எப்படி இருக்கும்?


இந்த மசாஜ்,கிசாஜ் எல்லாம் கோபாலுக்குச் செஞ்சுரணும். மனுஷன் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வேணாம்? என்னமோ அம்பதாயிரம் கலருலே புடவை வந்துருக்காமே?


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday, November 28, 2005

வாங்க 'பாட்டு'க் கேக்கலாம்!!!!!

நண்பர் ஒருவரிடம் 'ச்சாட்' டில் இருந்தேன். வழக்கமா விசாரிப்பு இருக்குமுல்லே அங்கேயும் இங்கேயும்.நலாமா? சாப்பிட்டாச்சா? இப்ப அங்கே என்ன மணி?( ஆமா இது ரொம்ப முக்கியம்:-) ! இப்படிச் சின்னப்பேச்சு.அதாங்க 'ஸ்மால் டாக்' அப்ப எதேச்சையா அவர் சொன்னாரு' பாட்டுக் கேட்டீங்களாமா?'ன்னு. என்ன பாட்டு? என்ன ஏதுன்னு விசாரிச்சப்ப ஒரு லிங்க் அனுப்புனாரு. அதுலே போனா பாட்டு அட்டகாசமா வந்துக்கிட்டு இருக்கு.


என்னதான் நாம் வீட்டுலே சி.டி, டேப்புன்னு போட்டுக் கேட்டாலும், அடுத்த பாட்டு என்னன்னு மனப்பாடமா ஆயிருதே. ரேடியோலே வர்றது மாதிரி ஆகுமா? அதுலே ஒரு எதிர்பார்ப்பு, அடுத்து வரப்போறது என்னன்னு!இங்கே கொஞ்ச நாளு ரேடியோ ப்ரோக்ராம் நடத்திக்கிட்டு இருந்தேன். இந்தியாவை விட்டு வெளியிலே வந்துட்டா எல்லாமே 'ஹிந்தி'ன்னுஆன நிலமையிலே இதுவும் 'கீத் மாலா'ன்ற ஹிந்தி நிகழ்ச்சிதான். வாரம் ஒரு நாள், ஒரே ஒரு மணி நேரம்.இங்கே இருக்கற ஒரு இந்தியன் க்ளப்( இதை ஆரம்பிச்சவர் யாருங்கறீங்க? நம்ம 'கோபால்'தான். சமயம் பார்த்துகொஞ்சமே கொஞ்சம் தம்பட்டம் அடிக்கத்தாவலையா?) ரெண்டு மூணு பேர் ஆளுக்கு ஒருவாரமுன்னு நடத்துவோம். அப்ப அவுங்கெல்லாம் ஒரேடியா ஹிந்திப் பாட்டுங்க மட்டுமே போடுவாங்க. எனக்கோ ஒரே கடுப்பு. இந்தியான்னாஎல்லா மொழிகளும் இருக்கற நாடில்லையா, அதென்ன ஹிந்தி மட்டும் போடறதுன்னு? என் முறை வரும்போதுஒரு தமிழ்ப் பாட்டு, ஒரு மலையாளம், ஒரு தெலுங்கு, ஒரு குஜராத்தின்னு' கலந்துகட்டி அடிச்சுருவேன். அப்புறம்இது எல்லாருக்கும் பிடிச்சுப்போய், மத்தவங்களும் நம்மகிட்டே தமிழ்ப் பாட்டு வாங்கிட்டுப்போய் போட ஆரம்பிச்சாங்க.ஆனா அது என்ன பாட்டு, அதுக்கு அர்த்தம், பாடற காட்சி அமைப்பு, நடிகர், நடிகை யாரு,என்னன்னு எல்லாம் எழுதிக் கொடுக்கணும். அவுங்களும் அதுக்கொரு ச்சின்ன இண்ட்ரோ கொடுத்துட்டு அந்தப் பாட்டைப் போடுவாங்க. எப்படியோ ஒரு தமிழ்ப்பாட்டாச்சும் ரேடியோவுலே வருதேன்னு ஒரு சந்தோஷம்!!


இன்னிக்குப் பாட்டைக் கேட்டுக்கிட்டே இருந்தேனா,அப்படியே 'அந்தக் காலம்' போயாச்சு! இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்புலே மாஞ்சுமாஞ்சுப் பாட்டுக் கேட்ட காலம்.அதிலும் நமக்கு ஃபேவரைட்டா இருக்கற 'ஜாக்கி'ங்கன்னு சிலபேர். இன்னைக்கு யாரு வரப்போறான்றதுலேயே ஒருச்சின்னப் போட்டி. நாம சொன்னவங்க வந்துட்டாங்கன்னா தோழிகள் மத்தியிலே 'ஏதோ ஜெயிச்சுட்டோம்'ன்ற வெற்றிப் பார்வைவுடறதுன்னு இப்படியெல்லாம்........ஹூம்.


கே.எஸ், ராஜா வரும்போதே, அவரோட 'சிக்னேச்சர் ட்யூன்' கேட்டவுடனே ஒரு பரபரப்புத் தொத்திக்கும். அழகான இலங்கைத்தமிழ். அடுத்து வருவதுன்னவுடனே பாட்டோட தொடக்கம் இக்குனூண்டு கேட்டவுடனே பாட்டு, படம்,பாடுனவங்க பேருன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சுருவோம். இந்தக் கவனம் மட்டும் படிப்புலே இருந்திருந்தா,இப்ப நம்ம 'ரேஞ்சே' வேறயாயிருக்கும்:-)


இங்கேயும்தாம் எப்பப்பார்த்தாலும் 'லோலோ'ன்னு ரேடியோவும் , டிவியும் போய்க்கிட்டு இருக்கு.ஆனா நம்ம வீட்டுலே நான் வண்டியிலே ஏறுனதும் மொதவேலையா ரேடியோவை ஆஃப் செஞ்சுருவேன்.'ஆமா, பொல்லாத பாட்டு. இளையராஜாம்யூசிக் பாருங்க'ன்னு சொல்லி 'டப்'னு அதை அணைச்சாத்தான் கார் சீட் பெல்ட்டே போடமுடியும்:-)


நான் பாட்டுக்கு ஏதேதோ அளந்துக்கிட்டு இருக்கேன் பாருங்க. இந்தப் பாட்டு வர்றது ஷ்யாம் ரேடியோ. 24 மணி நேரமும்வருதாம்.டவுன்லோடு ஒண்ணும் செய்யவேணாம் . அப்படியே வரும்ன்னு சொல்றாங்க.


பாட்டுக் கேட்டுட்டு, குத்தங்குறை சொல்லாம இருக்கமுடியாதுல்லே. உடனே ஒரு 'மயில்'தட்டிவுட்டேன். 'இந்தமாதிரி உங்க சேவை நல்லா இருக்குப்பா. ஆனா போட்ட பாட்டையே ரிப்பீஈஈஈஈஈஈஈட்டு செஞ்சுகிட்டே இருக்கீங்களே.புதுப்பாட்டு ( ஆமாம். இது என்னாத்துக்கு? சிலதைத்தவிர மத்ததெல்லாம் ஒரே இரைச்சல்தான்), பழைய பாட்டுன்னு (மனசுலே அச்சாப் பதிஞ்சுபோன 70, 80களிலே வந்ததுங்க என்னமா இருக்கு. ஆஹா... .....அங்கெ யாரோ வயதுபோன ஆக்களுக்கு வேற வேலை இல்லைன்னு முணங்கறாங்க.....) எவ்வளோ இருக்குன்னு அதுலே போடுங்கப்பா'ன்னு.


என்ன ஆச்சரியம். உடனே அங்கிருந்து பதில் 'மயில்' வந்துருச்சு! நீங்க நியூஸியிலே இருந்து பாட்டைக் கேட்டுட்டு எழுதுனதுரொம்ப சந்தோஷமாயிருச்சு. உங்களுக்கு எதுனா 'இஷ்டப்பாட்டு' இருந்தாச் சொல்லுங்க . நேயர் விருப்பத்துலெ போட்டுரலாம்னு.நல்ல மரியாதைப்பட்ட மனுஷங்கதான்.


ஏதோ 'சப்ஸ்க்ரிப்ஷன்'ன்னு சொன்னதையும் கேட்டேன். அதிகமா ஒன்னுமில்லே. அதைப் பத்தியும் கொஞ்சம்யோசிக்கணும். நீங்களும் முடிஞ்சாக் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க. அப்புறம், 'இந்த அக்கா' இதைச் சொல்லாம வுட்டுட்டான்னுபேசக்கூடாது, ஆமாம்.
இதைப் பதிவு செய்யற நேரம் பாடுறது, 'சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது'!!!!

http://www.shyamradio.com/


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Friday, November 25, 2005

பெரியது கேட்கின்.

அது ஒரு கல்யாண வீடாத்தான் இருந்துச்சு. சம்பவம் நடந்தது ஒரு முப்பத்துவருசத்துக்கு முன்னாலே . இப்பத்தான் வீட்டுலே கல்யாணம் செய்யறதுன்றது கொஞ்சம் கொஞ்சமா மாறி,கல்யாணமண்டபம் கிடைச்சப்பிறகுதான் பொண்ணு பார்க்கறதே நடக்குதாமே?


அது ஒரு கல்யாண மண்டபம். இடம் சமையலறை. மறுநாள் கல்யாணவிருந்துக்காக எல்லாக் காய்கறிகளும் குமிஞ்சுகிடக்குது. கல்யாணவீட்டுக்காரங்களோட சத்தம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கிருச்சு. எல்லாரும் நல்ல தூக்கத்துலே.


காய்கறிகள் மட்டுமே முழிச்சுக்கிட்டு இருக்குதுங்க. மறுநாளோட தங்கள் வாழ்வு முடியப்போதுன்றதாலே தூக்கம்வராமத் துக்கமா இருக்குதுங்க. ஒவ்வொண்ணும் தான் பொறந்த இடத்தையும், 'வாழ்ந்த' வாழ்வையும் சொல்லிச் சொல்லி அங்கலாய்க்குதுங்க. இவ்வளவு ஆத்தாமைக்கு நடுவிலேயும் தங்களில் யார் பெரியவன்/ள் ன்ற பிரதாபம் வேற!


பூசணிக்காய் சொல்லுச்சு, 'என் உருவத்தைப் பார்த்துமா உங்களுக்கு இந்த சந்தேகம்? நாந்தான் பெரியவன்.'


புடலங்காய்: என் உயரத்தைப் பார்த்துட்டு நீங்களே முடிவு செய்யுங்க!


கத்தரிக்காய்: நான் இல்லாத ஒரு விருந்தை நினைச்சுப் பார்க்க முடியுமா? ஏழை, பணக்காரன் பாகுபாடு இல்லாம எல்லார் வீட்டு விசேஷத்திலும் நான் இருக்கேன் பாருங்க.


வெண்டைக்காய்: ச்சும்மா வழவழ கொழகொழன்னு பேசாதீங்க. என்னாலேதான் ஜனங்களுக்கு 'மூளை' வளருதாம். அப்ப யாரு பெரியவன்?


கருவேப்பிலை: என்னதான் என்னை கடைசியிலே வீசி எறிஞ்சாலும் நான் இல்லாம சமையல் பூரணமாகுமா?


இப்படி ஒவ்வொண்ணும் பிரதாபத்தை அளந்து விட்டுக்கிட்டு இருக்கும்போது பெரிய வெங்காயம் மட்டும் ஒருசிரிப்போடு எல்லாத்தையும் பாத்துக்கிட்டும் கேட்டுக்கிட்டும் இருந்துச்சு. அப்பப்ப ஒரு எள்ளல் பார்வை வேற!


பொறுத்துப் பொறுத்த்ப் பார்த்த மத்த காய்கறிகள் எல்லாம் இப்ப வெங்காயத்தைச் சுத்தி நின்னுக்கிட்டு ஒரே கூச்சல்போட்டுச்சுங்க. 'என்னமோ நீதான் எல்லாரையும் விடப் பெரிய 'வஸ்தாது'ன்றமாதிரி ஏளனமாச் சிரிக்கிறே, என்னாவிஷயம்? நீ தான் பெரியவனா? எப்படி எப்படி? கொஞ்சம் சொல்லு, சொல்லு'


வெங்காயம் சொல்லுச்சு, ' என்னை உரிக்கிறப்பயும் நறுக்கறப்பயும் மக்கள் விடுற கண்ணீரைப் பார்த்தீங்களா?உங்களை வெட்டுறப்ப யாருக்காவது துக்கம் இருக்கா? அப்படியே சரசரன்னு வெட்டிருவாங்கல்லெ. எனக்கு மட்டும்தான்இந்த சிறப்பு. ஏன்னா நான் கடவுளின் அம்சம்'!!!


மத்த காய்ங்க எல்லாம் வாயடைச்சு நின்னுச்சுங்க. பச்சமிளகாய் மட்டும், சின்னக் குரல்லே, 'என்னைத் தொட்டுட்டுக் கையைத் தெரியாம கண்ணுலே வச்சுப் பாருங்க. அப்பத்தெரியுமு'ன்னு சொல்லுச்சு.


வெங்காயம் என்ன சொல்லப்போவுதோன்னு எல்லாரும் அமைதியா இருந்தாங்க. கொஞ்சநேரமாச்சு. வெங்காயம்சொல்லுச்சு, என்னைக் குறுக்கா நறுக்கிப் பார்த்தா. மஹாவிஷ்ணு கையிலே இருக்கற சக்கரம். நெடுக்கா நறுக்கிப்பார்த்தா அது அவரோட மத்த கையிலே இருக்கற சங்கு. இப்பச் சொல்லுங்க யார் பெரியவன்?


அட! இதை நாம இதுவரைக் கவனிக்கலையேன்னு இருந்துச்சு மத்ததுங்களுக்கு. எனக்கும்தான்!அது நான் கேரளாவுலே இருந்த சமயம். மலையாளம் படிக்கக் கத்துக்கிட்டது அப்பத்தான். 'பாலரமா'ன்ற சிறுவர்பத்திரிக்கையிலே வந்த கதை இது. என்னவோ தெரியலை, அப்படியே மனசுலெ நின்னுபோன கதைகளிலே இதுவும் ஒன்னு.

Thursday, November 24, 2005

வலைஞர் சந்திப்பு. இன்றே, இப்பொழுதே!!

திடீர்னு முடிவானதாலே உங்களுக்கெல்லாம் முறைப்படி அழைப்பு அனுப்ப இயலாமப்போச்சு.


நம்மில் ஒருவரான சிங்கைச் சித்ரா வுடனான சந்திப்பு இன்னும் சிலமணி நேரத்தில்நடக்கவுள்ளது.


இவுங்க 'ஆட்டொகிராஃப்'னு ஒரு வலைப்பதிவு/வலைத்தளம் வச்சிருக்காங்க.
இந்த சந்திப்புலே சுவையான(!) கேள்வி பதில் நிகழ்ச்சி நடக்கப்போகுது. இவரிடம்ஏதாவது கேள்வி கேக்கணுமுன்னு நினைச்சீங்கன்னா, இங்கே பின்னூட்டத்துலே கேட்டுவையுங்க.நானும் அதற்கான பதிலை அவுங்ககிட்டே இருந்து வாங்க முயற்சிக்கிறேன்.


நியாயமாப் பார்த்தா நான் என்னாத்துக்கு நடுவிலே? நீங்களே அவுங்ககிட்டே ஈமெயிலில்கேக்கலாம்தான். ஆனாலும் ஒரு கெத்தா இருக்கட்டுமுன்னு இப்ப உங்ககிட்டே கேக்கறேன்.


நாலைஞ்சுநாளுக்கு முன்னே இந்தப் பதிவைப் போட்டுருந்தா ச்சிக்கலான கேள்வியைக் கேட்டுறப்போறீங்கன்னுதான் கடைசி நிமிஷத்துலே போடுறது :-)


கேக்குறவுங்க சீக்கிரமாக் கேளுங்கப்பு.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Wednesday, November 23, 2005

நியூஸிலாந்து பகுதி 29

சரித்திரம்ன்னு சொல்றது சுவாரசியமான விஷயம்தான்னு இருந்தாலும் அது நடந்த வருசங்களை ஞாபகம் வச்சுக்கறதுஒரு சல்லியம்தான். இல்லே?அப்ப, இப்பன்னு சொன்னாலும் எப்பன்னு ஆளுங்களுக்கு சம்சயம் வருமுல்லே?சரி. இப்படிப் புலம்பிக்கிட்டு இருக்காம பாடத்துக்குப் போலாம்.


ஐரோப்பியர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது இங்கே, அந்தக் காலக்கட்டத்துலே . பிரிட்டிஷ் ராஜாங்கம் நினைச்சது, 'இப்படியே வுட்டுட்டா நல்லா இருக்காது. பொழுதன்னைக்கும் இந்த மவோரிகளோட சண்டையும், சமாதானமுமாஇருந்துக்கிட்டு இருக்க ஏலாது. நம்ம ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு அவுங்களையும் இதுலே சேர்த்துக்கலாமு'ன்னுதிட்டம் போட்டாங்க. இதுக்கிடையிலே அங்கே இங்கிலாந்துலே இந்த புது நாட்டைப் பத்தி எதிர்பார்ப்பு கூடிக்கிட்டேபோகுது. ஏராளமா நிலபுலன் இருக்கு. சல்லிசா வாங்கிறலாம். அவ்வளோ குளுருகூட இல்லையாம். கூட்டம்கூடஇல்லையாம். அங்கேபோனா இன்னும் வசதியா இருக்கலாமுன்னு மக்கள் கிட்டே ஏகப்பட்டக் கனவு.


1833லே ஜேம்ஸ் பஸ்பை( James Busby)ன்றவரை பிரிட்டிஷ் ரெஸிடண்ட் ஆஃப் நியூஸிலாண்ட் பதவி கொடுத்துஇங்கே அனுப்புனாங்க. இந்தப் பதவி அம்பாஸிடர் மாதிரியாம். தூதரா இங்கே வந்தவர், ஏற்கெனவே வெள்ளைக்காரங்களோடநட்பாயிருந்த மவொரி குழுத்தலைவர்களைச் சந்திச்சுப் பேசுனார். 'என்னாத்துக்கு இப்படி நீங்க உங்க ஜனங்களுக்குள்ளேயேகுழுவாப் பிரிஞ்சுக்கிட்டு சண்டைபோட்டுச் சாவறீங்க? ஒத்துமையா இருக்கறதுதான் நல்லது. நாங்க இருக்கோம் உங்களைப்பாதுகாக்க. எங்க ராஜா/ராணிங்க உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராம பார்த்துக்க சொல்லி என்னை அனுப்பியிருக்காங்க.உங்க புள்ளைகுட்டியெல்லாம் நல்லா வாழ்க்கையிலே முன்னேறி நாகரிகமா இருக்கணுமுன்னா எங்களோட சேர்ந்துக்குங்க.நாமெல்லாம் ஒண்ணா இந்த நாட்டை மேம்படுத்தி வளமா இருக்கலாம். உங்க உயிருக்கும் உடமைக்கும் நாங்க காரண்ட்டி'ன்னுசொல்லி ஒருமாதிரி அவுங்களும் சம்மதிச்சாங்க.


ஆனாலும் சிலருக்கு இது சரியாப்படலை. ஆனா குழுத்தலைவர் சொன்னாஅனுசரிக்கணுமே!


சில மவொரித் 'தலை'ங்க சேர்ந்து மொதல்லே ஒரு கொடியை உருவாக்குனாங்க. செயிண்ட் ஜார்ஜ் சிலுவையும் கூடவேநாலு எட்டுமுனை நட்சத்திரங்களும் போட்டு ஒரு கொடி! இந்த ஜேம்ஸ் பஸ்பை தனியாத்தான் தன் குடும்பத்தோடு இருந்தார்.படைவீரர்களோ, காவலாளிங்களோ இவர்கூட இல்லை. இவர்வீட்டை ஒருசமயம் சிலபேர் கொள்ளையடிச்சப்பக்கூடஉதவி செய்ய யாரும் இல்லையாம்! அப்பப்பார்த்து இங்கே ரோந்துவந்துக்கிட்டு இருந்த இங்கிலாந்துக் கடற்படைக் கப்பல் மூலம்சில உதவி கிடைச்சதாம்.


ஃபிரெஞ்சுக்காரங்களுக்கும் இந்த நாடுமேலே ஒரு நாட்டம் இருந்துச்சுல்லே. அவுங்க என்ன செஞ்சாங்கன்னா, பிஷப் பொம்பெலியர்( Pompallier) மூலமா தகவல் சேகரிச்சுக்கிட்டு இருந்தாங்க. அவுங்க நாட்டுக் கடற்படைக் கப்பலும்அடிக்கடி வந்து போய்க்கிட்டு இருந்துச்சு. Baron Charles de Thierry ன்ற ஃபிரெஞ்சுக்காரர், இங்கே 'ஹோகியங்ஆ' லே40,000 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுருக்கேன். நாந்தான் இந்த நாட்டுக்கு அதிபதின்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.இது நடந்தது 1837. ஃபிரெஞ்சு அரசாங்கம் இவரை ஆதரிச்சு ஒண்ணும் செய்யலை.


ஆனாலும், 'பஸ்பை' என்னசெஞ்சாருன்னா, உடனே வடக்குப் பக்கம் இருந்த 34 குழுத்தலைவர்களோடு 'வைட்டாங்கி'ன்ற ஊர்லே ஒரு கூட்டம்போட்டார். அங்கேதான், இந்த நியூஸி ஒரு சுதந்திர நாடு. இதை, மத்தவங்ககிட்டே இருந்து காப்பாத்தணும். அதுக்காகபிரிட்டிஷ் ராஜாங்கம்கிட்டே பாதுகாப்பு கேக்கணும்னு முடிவு ஆச்சு. அதான் இவரு ஏற்கெனவே அவுங்ககிட்டேப் பேசிப் பேசிஅவுங்க மனசை இளக்கியிருந்தாரே. அவுங்களும் சம்மதம் சொல்லியிருந்தவுங்கதானே?


இதுக்கு நடுவுலே எட்வர்ட் வேக்ஃபீல்ட்ன்றவர், ஒரு ஐடியாக் கொடுத்தார். 'இங்கே மவொரிங்ககிட்டே இருந்துநிலம் வாங்கலாம். அதை இங்கிலாந்துலே இருக்கறவங்களுக்கு கூடதல் விலைக்கு விக்கலாம். வர்ற லாபத்துலேஅங்கே இருந்து இங்கேவந்து வேலை செய்ய விருப்பம் இருக்கறவங்களுக்கு கப்பல் டிக்கெட் வாங்கி இலவசமாத்தரலாம். அவுங்களும் இலவச டிக்கெட்டுக்குப் பதில் உபகாரமா சிலவருஷம் நமக்காக உழைக்கணும்'ன்னார்.இதுகூட ஒருமாதிரிக் கொத்தடிமைதானே? ஆனா இது நல்லாவே வொர்க்கவுட் ஆச்சு.


இதுலே ஒரு வேடிக்கை என்னன்னா, இந்த எட்வர்ட் வேக்ஃபீல்ட்க்கு இந்த ஐடியா எப்ப வந்துச்சுத் தெரியுமா?ஜெயிலிலே இருந்தப்ப! ஒரு பணக்கார தொழிலதிபரோட பொண்ணான 'எல்லன் டர்னர்'ன்ற பள்ளிக்கூடம்போற
மாணவியோட ஊரைவிட்டு ஓடிப்போயிக் கல்யாணம் பண்ணிக்கிட்டவர். மைனர் பொண்ணு. அதனாலே குற்றம் சாட்டப்பட்டுமூணு வருசம் தண்டனை, நியூகேட் ஜெயில் வாசம் . அங்கெல்லாம் ஜெயில்லே களி இருந்திருக்குமா? தெரியலையே:-)


நியூஸிலாண்ட் கம்பெனின்னு ஒண்ணு ஆரம்பிச்சாச்சு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியா நியூஸி ஆகப்போகுதுன்றசெய்தி கசிஞ்சதும், தன்னுடைய சகோதரனை 'டோரி'ன்ற கப்பலிலே அனுப்பினார். ஆர்தர் வேக்ஃபீல்ட்தான் கப்பலின்கேப்டன். கூடவே நிலத்தை அளக்கறது சில சர்வேயருங்க, இன்னும் நிலம் வாங்க சில ஆட்கள்.


மகாராணி விக்டோரியா, தன்னுடைய கடற்படையிலிருந்து வில்லியம் ஹாப்ஸன் என்ற நேவல் கேப்டனை இங்கேஅனுப்புனாங்க. மவோரிங்க தலைவர்கள்கிட்டே எப்படியாவது பேசி, தங்களுடைய ஆளுகைக்குள்ளே வர சம்மதம்வாங்கிரணுமுன்ற உத்தரவோடு ஹாப்ஸன் ஜனவரி 29, 1840க்கு இங்கே பே ஆப் ஐலண்ட் வந்து சேர்ந்தார்.


ஒருவாரம் கழிச்சு ஃபிப்ரவரி 5, வைட்டாங்கி என்ற ஊர்லே மவோரி பெருந்தலைகளைச் சந்திச்சார். ஏற்கெனவே'வைட்டாங்கி நேச உடன்படிக்கை ( Treaty of Waitangi)'ன்ற பேர்லே எழுதிக் கொண்டுவந்திருந்த தஸ்தாவேஜ் பத்திரங்களைக் காமிச்சார். 'அந்தந்த மவொரி கிராமத்தைச் சேர்ந்த இடங்களையும் சொத்துபத்துக்களையும் மவோரிங்கவச்சுக்கலாம். பாக்கி இருக்கற நிலங்களை மகாராணி வாங்கிக்கலாம். மேலும் மவோரி மக்களுக்கு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின்குடிமக்களாகிற தனியுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அவுங்க பாதுகாப்பை இனி மகாராணியம்மாவே பார்த்துக்குவாங்க.' இதுதான்முக்கியமா எழுதப்பட்டிருந்தது.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Tuesday, November 22, 2005

நியூஸிலாந்து பகுதி 28

வந்தாச்சு வளமான நாட்டுக்கு. காலு குத்தியாச்சு. நாலு காசு பார்த்துரணும். அதான் வேற யாரும் வரமுன்னேயேவந்து இடம்புடிச்சுட்டொம்லே. இப்படி திருப்தியா மனஷனாலே இருந்துறமுடியுதா?


மதம் புடிச்சிருக்கு மனுஷங்களுக்கு. தன்கூடவே தன்னுடைய மதத்தைக் கொண்டுபோறது ரொம்ப இயல்பா நடக்குதுன்னாலும்,வேற எந்த மதத்தைப் பத்தியும் ஒண்ணுமே தெரியாத ஜனங்களுக்கு தன்னுடைய மதத்தைப் பத்திச் சொல்லி அதுலே அவுங்களைச்சேர்த்துவிட்டுறமுன்னு தீர்மானிச்சுக்கிட்டு, சாமுவேல் மார்ஸ்டன் இங்கே வந்து சேர்ந்தார். ஸ்கூல் வாத்தியார்.கொஞ்சம் தச்சுவேலை தெரிஞ்சவர். இதுமட்டுமில்லே, கயிறு திரிக்கக்கூடியவர். இது போதாதா?


1814லே முதல் மிஷனரியா வந்தவர்தான் இந்த சாமுவேல் மார்ஸ்டன். கிறிஸ்துவைப் பத்தியும், கிறிஸ்த்துவத்தைப்பத்தியும் இந்த மவொரி மக்களுக்குச் சொல்லணுமுன்னு Anglican church இவரை இங்கே அனுப்புச்சு. ஆனால்யாரும் இவுங்க சொன்னதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டமாதிரி தெரியலை! இதுக்கப்புறம் 'ரோமன் கத்தோலிகச் திருச்சபையிலிருந்து ஒரு பிஷப், பேரு பொம்பெலியர்( Pompallier) இன்னும் சில மிஷனரிங்களோட வந்தார். அவுங்களுக்கும் இதே கதிதான்.


சில மிஷனரிங்க என்ன செஞ்சாங்கன்னா, 'நாங்க சொல்றதைக் காது கொடுத்துக் கேக்கறவங்களுக்கு ஒரு துப்பாக்கிகொடுப்போம்'ன்னு சொல்லிச் சிலபேரை 'பேச்சு' கேக்க வச்சாங்களாம்.


இந்தமாதிரி ஒரு 11 வருஷம் போச்சு. மிஷனரிங்க வர்றதும் போறதுமா இருந்துருக்காங்க. ஹென்றி வில்லியம், வில்லியம் கொலென்ஸொ( Henri William, William Colenso)ன்னு ரெண்டு பேர் இப்படிப் பிரசாரம் செய்யவந்தவுங்க,வேற வழி கண்டிபிடிக்கணுமுன்னு யோசிச்சிருக்காங்க. பைபிளைப் பத்தியும், ஜெபங்களைப்பத்தியும் இங்கிலீஷ்லே சொல்லறதை விட்டுட்டு, மவொரியிலே சொன்னா நல்லதுன்னு தீர்மானிச்சு,அப்படியே மொழிபெயர்த்துச் சொல்லஆரம்பிச்சவுடன் சில பேரு ஆர்வமாக் கேக்க வந்தாங்களாம். ஆஹா... இது நல்ல வழியாச்சேன்னு சந்தோஷப்பட்ட வில்லியம் கொலென்ஸோ, ஒரு ச்சின்ன அச்சடிக்கிற மெஷினை வச்சு, ஜெபங்களை மவொரியிலே அச்சடிச்சுக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கார். மவொரி மொழிக்கு எழுத்துரு இல்லைன்றதாலே, ஆங்கில எழுத்தையே உபயோகிச்சாங்க.


ஒரு மிஷன் ஸ்டேஷன்னு சொல்றதுலே என்னென்ன இருந்துச்சாம்?மத போதகரும் அவர் குடும்பமும் இருக்க ஒரு வீடு, ஜெபம் செஞ்சு சாமிகும்பிடறதுக்கு ஒரு ச்சாபல்(Chapel)ஒரு வகுப்பறை, ஒரு தூங்கறதுக்கான இடம். இது முக்கியமா 'ஆசிரியர் பயிற்சி' எடுக்க விரும்புறவங்க தங்கிக்கறதுக்கு.உள்ளூர் ஆளுங்களை டீச்சராக்கிட்டா நல்லதாச்சே. அவுங்க மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுப்பாங்களே!


எழுதறதும் அதை படிக்கறதும் பார்த்த மவொரிங்களுக்கு அது ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ச்சின்ன அச்சாபீஸ் இப்பெல்லாம்எந்நேரமும் பைபிளை அச்சடிச்சுக்கிட்டு இருக்கு. பயங்கர டிமாண்ட் ஆயிருச்சு. கொஞ்சம் கொஞ்சமா மவோரிங்ககிறிஸ்த்துவத்தைத் தழுவுனாங்க. இப்ப மிஷனரிங்களுக்கும் பொறுப்புக் கூடிப்போச்சு. ஞாயித்துக்கிழமை ஓய்வு நாள்,ஒரு ஆணுக்கு ஒரு மனைவி, முக்கியமா நரமாமிசம் தின்னுறதை விட்டுரணும். இந்த போதனையைத்தான் மெதுவாஆரம்பிச்சாங்க. அதுலே வெற்றியும் கிடைச்சுது. இல்லேன்னா, இவுங்களையே சாப்பிட்டிருக்க மாட்டாங்களா?


ஒரு குழு, இன்னொரு குழுவோட போட்ட சண்டைகளிலே இந்தத் துப்பாக்கியாலே செத்தவுங்க அநேகம். இது போதாதுன்னுவெள்ளைக்காரங்க கொண்டுவந்த வியாதிகளாலே செத்தவுங்க இன்னும் கூடுதல். அம்மை, இன்ஃப்ளூயன்ஸா, சளின்னுவந்த வியாதிகளாலே ஆயிரக்கணக்கானவுங்க இறந்திருக்காங்க. அதுக்கு முன்னாலே மவொரி ஜனங்க வியாதி,வெக்கை இல்லாம ஆரோக்கியமாத்தான் இருந்திருக்காங்க. ஆனா முப்பத்தஞ்சு, நாப்பது வயசுக்குமேலே ஆயுசு இல்லை! அல்பாயுசு.


இந்த மவோரிகளுடைய வாழ்க்கையை என்னென்னைக்குமா மாத்தியது இந்த வெள்ளைக்காரங்களும் அவுங்க கொண்டுவந்தசாமான்களும்தானாம். இரும்பு, இன்னும் மத்த உலோகத்தாலான சாமான்கள், பாத்திரபண்டங்கள்,புத்தகங்கள், கடிகாரங்கள்,காம்பஸ், இது எல்லாத்துக்கும் மேலா காசு. ஆமாம், நாணயங்களையும் அறிமுகப்படுத்தி வச்சிருக்காங்க.


வாழ்க்கைமுறையே மாறிடுச்சுல்லெ!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday, November 21, 2005

என்ன ஆச்சு?

இன்னிக்குத்தான் விஷயம் உண்மைக்குமே விளங்குச்சு. என்னவா? ஐய்யோ, இந்தத் தமிழ்மணத்துக்குஎப்படி அடிமையாக் கிடக்குறோம்ன்றது!


காலையில் இருந்து தமிழ்மணத்தைக் 'க்ளிக்' செஞ்சுசெஞ்சு இதோ பாருங்க,ஆள்காட்டிவிரல் எப்படித்தேஞ்சுபோய் கிடக்குதுன்னு.


எப்பப்பார்த்தாலும் 'கேன்னாட் ஃபைண்ட் ......'வர்றப்ப மனசு திக்.
மழைகிட்டே மயிலை அனுப்பிக் கேட்டாச்சு. அங்கேயும் இதே கதியாம். அப்புறம் சிநேகிதி அவுங்கவழியிலே வந்து 'தமிழ்மணம் வேலை செய்யுதா?'ன்னு கேட்டாங்களா, அப்ப ஒரு அல்ப சந்தோஷம்.இடுக்கண் நமக்குமட்டுமில்லைன்னு:-))))


சரி. இப்பக் கட்டக்கடைசியா வந்து பார்த்துட்டுப் போவோமுன்னு வந்தா, ஆஹா...'ஜகஜக'ன்னு ஜொலிக்கிறார்இந்த வார நட்சத்திரம். போனவார நட்சத்திரம் எப்பப் போனார்?


போச்சு. குலுக்கல் ஒரேடியாக் குலுங்கிருச்சு போல.


ரொம்ப அடிக்ட்டா ஆயிட்டோம்பா. இப்ப என்னா செய்யறது?


இதுக்குப் போய் ஒரு பதிவான்னு யாரும் கட்டையைத் தூக்கிட்டு வராதீங்க. மனசுலே இருக்கறதைக் கொட்டலைன்னா ராத்தூக்கம் போயிறாது?


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Friday, November 18, 2005

நியூஸிலாந்து பகுதி 27
அடடா.... கண்ணைப்பார்த்தீங்களா? எவ்வளோ குறுகுறுன்னு இருக்கு. ச்செல்லம்போல பார்க்குதே. எப்படிங்க இதுங்களைக்கொல்றதுக்கு மனசு வரும்?


ஹூம்.... மனசுவந்ததே.... என்னத்தச் சொல்ல?


மனுஷனைப் போல ஒரு சுயநலமி இந்த பூலோகத்துலே கிடையவே கிடையாது. மத்த எந்த மிருகமோ, பறவையோ,புழுப்பூச்சியோ எதாவது மனுஷனை விளையாட்டுக்காகவோ, பொழுது போக்காவோ கொன்னதாக் கேள்விப்பட்டுருக்கோமா?


ஆமாமாம். மனுஷன் தோலு எதுக்கு லாயக்கு? அப்படியே பிரயோஜனமான உடம்பு பாரு.....ஒன்னுத்துக்கும் ஒதவாததுதானே?


1790க்கு அப்புறம் சிட்னி, ஹோபர்ட், பிரிட்டன், வட அமெரிக்கான்னு பல இடங்களிலே இருந்தும் இங்கே வந்து தெற்குத்தீவோடதென்கோடிக்குப் போய் கூடியிருக்காங்க ஜனங்க.


எதுக்காம்?


எல்லாம் 'ஸீல்' மிருகங்களைக் கொன்னு, தோலை உரிச்சுக்கிட்டுப் போறதுக்கு. பாவம். ஒரோரு சீஸனுக்கும்சுமார் 14000, கொஞ்சநஞ்சமில்லை பதிநாலாயிரம் மிருகங்களைக் கொன்னுருக்காங்க. அந்தத் தோலையெல்லாம்ச்சீனா, அமெரிக்கா, இங்கிலாந்துன்னு அனுப்பியிருக்காங்க. தலைக்க்குத் தொப்பி செய்யறதுக்கு. அடக் கடவுளே!


இது ஒருவருஷம் ரெண்டுவருஷமில்லை, சுமார் 20 வருஷம் இப்படி நடந்துருக்கு. இதனாலே 'ஸீல்'களோடஎண்ணிக்கை ரொம்பவே பாதிக்கப்பட்டுச்சு. 1810லே இந்தத் தொப்பிங்க அதாங்க 'ஸீல் தோல் தொப்பி'ங்க ஃபேஷன்மாறிடுச்சாம். தப்பிச்சதுங்க இந்த மிருகங்கள். இல்லேன்னா இப்ப நாம, இப்படி ஒரு மிருகம் அந்தக் காலத்துலேஇருந்துச்சுன்னு யாராவது சொன்னாலும் நம்பியிருக்கமாட்டோம்லெ.


கஷ்டகாலம் இந்த 'சீல்'களுக்கு மட்டுமில்லே, திமிங்கிலங்களுக்கும்தான். இப்படித் திமிங்கில வேட்டைக்கு வர்றஆளுங்க இங்கே நியூஸிக்கும் ஒரு விஸிட் அடிக்கறது எதுக்குன்னா, சாப்பாட்டுச் சாமான்கள், குடிக்கத் தண்ணீர்,கடல்வேட்டைக்கு மாத்து ஆட்களை எடுக்கன்னு. ஒரே குழு எத்தனைநாள்தான் குளுருலே கடல்லே கஷ்டப்படும்?


அப்ப இந்த வேட்டைக்காரங்களோட சில மவோரி ஆட்களும் போகத் துவங்கினாங்களாம். அவுங்களோட நாட்டமெல்லாம்ஸ்பெர்ம் வேல்ஸ்(Cachalot - Sperm Whales)தானாம். 1820க்கு அப்புறம் இங்கேயே ஸ்டேஷன்கள் அமைச்சுக்கிட்டு(ச்சின்னக்கிராமம்மாதிரி )தங்கிக்கிட்டு ஸ்ட்ராங்காக் கட்டுன ச்சின்னச்சின்னப் படகுகளிலே போய் இந்த வேட்டையைத்தொடர்ந்துக்கிட்டு இருந்திருக்காங்க.


மே மாசம் முதல் அக்டோபர்வரை உள்ள காலங்களிலே பெண் திமிங்கிலங்கள் குட்டியை ஈன்றெடுக்க கொஞ்சம்கரையோரமா வருமாம். அப்ப இந்த ஆளுங்க அந்தக் குட்டிகளைக் கொன்னுருவாங்களாம்.( அய்யோ, அப்பத்தான் பொறந்தபிஞ்சுங்க. அடப்பாவிகளா...) இறந்த குட்டியைவிட்டுப் பிரிய மனமில்லாம அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கறஅம்மாங்களையும் சுலபமாக் கொன்னுரலாமாம். இந்தக் கொழுப்பை வச்சு ஐரோப்பாலெ விளக்கெரிப்பாங்களாம்.இந்தத்திமிங்கிலத்தின் குடலுக்குள்ளெ ஆம்பெர்க்ரிஸ்( Ambergris)ன்னு மெழுகுபோல ஒண்ணு இருக்குமாம். இதைவச்சு வாசனை திரவியம் தயாரிப்பாங்களாம்.( இதுதான் ஒண்ணும் புரியலை. குடலே நாத்தம், அதுலெ இருந்து வாசனையா?)திமிங்கில எலும்புங்களை வச்சு, குடைகம்பி,பெண்களோட உள்ளாடைகளுக்கு கம்பின்னு ஜமாய்ச்சிருக்காங்க.


சீஸன் முடிஞ்சதும் ச்சும்மா இருக்கற நேரங்களிலே ச்சின்னச்சின்னதா பயிர்பச்சைன்னு விளைச்சல் பண்ணிக்கிட்டுக்காலம் கடத்தியிருக்காங்க. இந்தமாதிரிக் கணக்குவழக்கில்லாமத் திமிங்கிலங்களைக் கொன்னு குவிச்சு, திமிங்கலங்களின்எண்ணிக்கை ரொம்பவே குறைஞ்சு போச்சு. அதுங்களும் கரையோரமா வர்றதை நிப்பாட்டிக்கிச்சுங்க. அப்படியே கொஞ்சம்கொஞ்சமா இந்த வேலிங் ஸ்டேஷன்களும் ஒழிஞ்சுபோச்சாம்.


இது இப்படி இருக்கக்கொள்ள,1815லெ இருந்து இங்கத்து ஃப்ளாக்ஸ் (Flax)செடிங்களைக் கொண்டு போறதுக்குன்னு கப்பலுங்கவர ஆரம்பிச்சதாம். நியூஸிலாந்து ஃப்ளாக்ஸ் நல்ல தரமானதா இருந்ததாலே பயங்கர வருமானமாம். இதை வச்சுகயிறு திரிச்சுக்கிட்டு இருந்தாங்களாம்.


மவோரிப் பெண்கள் இந்த ஃப்ளாக்ஸ் வச்சு நல்லா முடைவாங்கதானே. அவுங்களை வச்சே இந்த ஃப்ளாக்ஸ் ஓலைகளைசுத்தப்படுத்திக்கிட்டு இருந்தாங்களாம். கடல் சிப்பிங்களை வச்சு இந்த ஓலைகளைச் சுரண்டி, மிருதுவான பகுதிங்களைஎடுக்கணுமாம். அந்தக் காலத்துலெ ஏது கத்தியெல்லாம்? இப்படிக் கையாலெ சுரண்டிச்சுரண்டி நார் பிரிக்க நெடுநேரமாகுமுல்லே.அதனாலே, குறிச்ச நேரத்துக்கு கப்பலை நிறைக்கமுடியாமக் கஷ்டமாயிருச்சாம். அவ்வளொ ஆர்டர்களாம்! சப்ளைசெய்ய முடியாம இந்த வியாபாரம் படுத்துருச்சாம். எல்லாம் ஒரு 16 வருஷம் நடந்துருக்கு. அதுக்கப்புறம் இந்தவியாபாரிகள் ஃபிலிப்பைன்ஸ்லே இருந்து ஃப்ளாக்ஸ் வாங்க ஆரம்பிச்சுட்டாங்களாம். இத்தோட போச்சா? இல்லையே!


பிரிட்டிஷ் கடற்படைக்கு சீரான கனத்துலே, வளைவு நெளிவு இல்லாத நீண்ட மரத்தடி வேணுமாம். எதுக்காம்?கொடிமரம், பாய்மரக்கப்பல்லே பாய்கட்டன்னு பல வேலைகளுக்கு இந்த நியூஸியிலே இருக்கற மரங்களானகவுரி ( Kauri), கஹிகடீயா( Kahikatea) வெல்லாம் ரொம்ப உத்தமமாம். இதுக்கு முன்னாலே எப்படிக் கப்பல் கட்டிக்கிட்டு இருந்தாங்களாம்? ஒரு நாட்டைச் சுரண்டறதுக்கு வெள்ளைக்காரங்களுக்குச் சொல்லியாத் தரணும்? கில்லாடிங்களாச்சே!


இங்கே ஹோகியாங்கா( Hokianga)ன்ற இடத்துலே( இது ஒரு ச்சின்னத்துறைமுகம்)யும், தேம்ஸ் ( பேர்ப் பஞ்சம்தான்)என்ற இடத்துலேயும்மரம் வெட்டுற மில்லுங்களைக் கட்டிக்கிட்டாங்க. அப்பத்தானே வெட்டுன மரங்களைச் சுலபமா தண்ணிலே மிதக்கவுட்டேமில்வரை கொண்டுவரலாம்.


எல்லா வியாபாரிகளுக்கும் சாப்பாடும், குடிதண்ணீரும் தேவை தானே? அதனாலே மவோரிங்ககிட்டே பண்டமாற்றுமுறையிலே கொஞ்சம் கொடுக்கல்வாங்கல் நடந்துக்கிட்டு இருந்தது. வெள்ளைக்காரங்களை 'பாகியா (Pakeha)'ன்னு சொல்லஆரம்பிச்சாங்க. பண்டமாற்றுலே முக்கிய இடம் உருளைக்கிழங்குக்கும் பன்றிகளுக்கும்தான்.அதுக்கடுத்தபடி டிமாண்ட்பாய்களுக்கும், மவொரி கார்விங் செதுக்குச் சிற்பங்களுக்கும், பாடம்பண்ணமாதிரி இருந்த சுருங்கிப்போன மனுஷத்தலைகளுக்கும்! (ஐய்யய்யோ) இது பாகியாங்களுக்கு. மவோரிங்களுக்குத் தேவை, ஆணிகள்,கோடாரி, துப்பாக்கி,குளுருக்குப் போத்திக்கக் கம்பளிப் போர்வைங்க.


இதுலேகூடப்பாருங்க, துப்பாக்கி ரொம்பத் தேவையாம். ஏன்னா, துப்பாக்கி வச்சிருக்கற மவொரிக் குழுவுக்கு மதிப்பு ஜாஸ்தியாம்.ஹொங்கி ஹிகா ( Honki Hika a Ngapuhi Tribe Chief)தான் முதல்முதலா துப்பாக்கிவச்சு சண்டைபோட்ட தலைவராம்.உடனே மத்த குழுக்கள் எல்லாம், 'இனி துப்பாக்கி இல்லாட்டா பொழைக்கறதே கஷ்டம்'ன்ற நிலைக்கு வந்துட்டாங்களாம்.


ஒரு துப்பாக்கிக்கு என்ன விலையாம்? 25 சாக்கு உருளைக்கிழங்கு!


இந்த ஹொங்கி ஹிகா 1820லே தாமஸ் கெண்டல்( Thomas Kendall) ஒரு மிஷனரிகூட இங்கிலாந்து போயிருக்கார்.அங்கே போய் மவொரி டிக்ஷ்ணரி உருவாக்க உதவியா இருந்தாராம். ஆங்கிலேயர்களுக்கு இவரை ரொம்பப் பிடிச்சுப்போச்சாம்.அநேகவிதமான பரிசுப்பொருட்களைக் கொடுத்தாங்களாம். திரும்பிவர்றதுக்கு முன்னாலே அதையெல்லாம் அங்கேயே வித்துட்டு,அங்கிருந்து 300 துப்பாக்கிகளை வாங்கிக்கிட்டு வந்தாராம். அதைவச்சு, அவரோட பழைய எதிரிகளையெல்லாம்தேம்ஸ்-வைக்காட்டோ பகுதியிலே கொன்னுதீர்த்தாராம். கொல்றதே வேலையாப் போச்சு போலெ.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Thursday, November 17, 2005

ஒரு கஷ்டமும் இல்லை.ஒரு கஷ்டமும் இல்லை. வந்தவிவரம் தெரிஞ்சது. உடனே போய்ப் பார்க்கமுடியாமஇருந்துச்சு. கோபால் வேற ஊருலெ இல்லை. அவுங்க திரும்பி போறப்ப பார்த்துக்கலாமுன்னுஇருந்துட்டேன். கோபால் இங்கே வர்ற நாளுதான் அவுங்களும் திரும்பிப்போறாங்க.


ஏர்போர்ட்டுலே போறதுக்கு முன்னாலே வந்து பாக்கறேன்னு போன் போட்டுச் சொன்னேன். கோபாலைப்பிக்பண்ண போனப்ப விஷயத்தைச் சொன்னேன், இன்னும் மூணு மணி நேரம் இருக்குன்னு. வீட்டுக்கு வந்து குளிச்சு சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட். அப்ப போன் வந்துச்சு, அவுங்க ஏர்போர்ட்டுக்குக்கிளம்பியாச்சுன்னு. நாங்களும் கிளம்பிப் போனோம்.


அங்கேயே பார்த்துட்டு ஏறக்குறைய ஒருமணி நேரம் கதை அளந்துட்டு, மகளுக்காக ஆட்டோகிராஃப் வாங்கிக்கிட்டுவந்தோம். மகளும் தமிழ்ப்படமுன்னாலே இவரோட படங்களை மட்டுமே பார்ப்பாள். மைக்கேல் மதன காமராஜன் எல்லாம்ஒரு நூறு ஓட்டம் ஓடியிருக்கு நம்ம வீட்டுலே.


பழகறதுக்கு இனிமையான மனிதர். நல்லா ஜோக்கடிக்கிறார். அவரோட வெளிநாட்டு அனுபவங்களிலே சிலதைச்சிரிக்கச்சிரிக்கச் சொன்னார். இயல்பா இருந்தார்.


கமல் ஒரு நல்ல நடிகர் என்றதுலே யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. (ஸ்ரீ)காந்து, அப்பேர்ப்பட்ட நல்லகலைஞனைக் காத்திருந்து பார்த்தது தப்பே இல்லை.


கடவுளைக்கூட தர்மதரிசனத்துலே கால்கடுக்கக் க்யூவிலே நின்னுபார்க்கறவங்களுக்குப் புண்ணியம் கூடுதலாமே?


இதுபோல இன்னும் பலவிஷயங்கள் இருக்கு. யாராவது எழுதுனா, 'பாட்டுக்குப் பாட்டு'னு எடுத்துவிடறேன். சரியா?இல்லாட்டி, ரொம்பத் தற்பெருமை மாதிரி இருக்குமுல்லெ?


சொல்ல மறந்துட்டேனே, எங்க வீட்டுலே இருந்து இங்கத்து இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட் ஒரு 10 நிமிஷ ட்ரைவ்தான்.


இதை நேத்தே பதிஞ்சிருக்கலாம். ஆனா நம்ம ஸ்ரீகாந்தோட சந்தோஷத்தைக் கெடுக்கவேணாமுன்னுதான்........


இன்னிக்குக் கெடுத்தாப் பரவாயில்லையான்னு யாருப்பா அங்கே சவுண்டு வுடறது?:-)))))


( ஸ்ரீகாந்த், தப்பா நினைச்சுக்காதீங்க இந்தப் பதிவு போட்டதுக்கு)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Wednesday, November 16, 2005

துளசிக்குக் கண்ணாலம்!

என்ன திகைச்சுப் போயிட்டீங்களா? மெய்யாலும்தாங்க , இன்னிக்கு நம்ம துளசிக்குக் கல்யாணம்.இன்னிக்கு என்ன நாள் பார்த்தீங்களா? கார்த்திகை மாசப் பவுர்ணமி.


இது ஒரு அஞ்சுநாள் நடக்கற பழையகாலத்துக் கல்யாணம். அந்தக் காலத்து அஞ்சு நாள் கல்யாணம் எல்லாம்இப்ப அரைநாளா மாறிக்கிட்டு இருக்கறது வேற விஷயம்.


துளசியைக் கட்டிக்கப்போறது யாரு?


சாக்ஷாத் அந்த மஹா விஷ்ணுவேதான்! வேற யார்?


சரி. கதையைப் பார்க்கலாம்.


ஜலந்திரன்னு ஒரு ராஜா இருந்தார். இவர் சமுத்திரங்களுக்கு, ஜலத்துக்கு ராஜாவானவர். அமிர்தம் எடுக்கறதுக்காக பாற்கடலைக்கடைஞ்ச கதை உங்களுக்குத் தெரியும்லெ. அப்போ அமிர்தம் திரண்டு வர்றதுக்கு முன்னாலே 14 வகை செல்வங்கள்வந்துச்சாம். உங்களுக்கு வேண்டியது அமிர்தம் மட்டும்தானே. அதனாலே இந்த 14 செல்வங்களும் எனக்குரியது. எங்கிட்டேதந்துரணுமுன்னு சமுத்திரராஜா ஜலந்திரன் மஹாவிஷ்ணுகிட்டே கேட்டார். தேவர்களுக்குக் கொடுக்க மனசில்லை.( சரியானஅல்பம்!)


அசுர ராஜாவான ஜலந்திரனுக்கு, இந்த சொத்து விஷயமா தேவர்கள்கிட்டே மனஸ்தாபம் தோணிடுச்சு. எப்படியாவதுபோரிட்டு, நமக்குச் சேரவேண்டிய செல்வங்களை அடைஞ்சே தீரணுமுன்னு முடிவு செஞ்சார்.
ஜலந்திரனோட மனைவி வ்ருந்தா( பிருந்தா). ஜலந்திரனுக்கு ஒரு வரம் கிடைச்சிருந்தது. அது என்னன்னா, அவருடையமனைவி கற்போடு இருக்கும்வரை ஜலந்திரனுக்கு மரணம் இல்லை.


இந்த இடத்துலேதான் இந்தக் கதைக்கு ரெண்டு வேரியேஷன் வருது. ஒவ்வொண்ணாப் பார்க்கலாம்.


ஜலந்திரன் போருக்கு வரான்னதும் தேவர்களுக்குக் கிலி பிடிச்சுக்கிட்டது. வழக்கம்போல் மஹாவிஷ்ணுகிட்டேமுறையிடுறாங்க. ஜலந்திரனுடைய வரத்தைப் பத்தித் தெரிஞ்சிருந்த விஷ்ணு, ஜலந்திரன் இல்லாத நேரமாப்பார்த்து, தந்திரமா ஜலந்திரனுடைய ரூபத்திலே போய், வ்ருந்தாகூட இருக்கறார். பாவம் வ்ருந்தா. இது தன்னுடையபுருஷன் இல்லைன்ற விவரம் அவளுக்குத் தெரியலை. தெரியாம நடந்தாலும், கற்பிழந்துபோனதாலே ஜலந்திரனைப்போரில் தேவர்களால் கொல்ல முடிஞ்சது.
அதுக்கப்புறம் நடந்ததையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட வ்ருந்தா, விஷ்ணுமேலே கோபம் கொண்டு அவரைக் கல்லா ஆகும்படிசபிக்கிறாள். அந்த சாபம் அப்படியே பலிச்சு, கண்டகி நதியிலே கறுப்புக் கல்லாக் கிடக்குறார். இந்தக் கல்தான் 'சாலிகிராம்'அதுக்கப்புறமும் வ்ருந்தாவை மறக்க முடியாம அவளை துளசிச் செடியா மாத்திக் கல்யாணம் செஞ்சுக்கறாராம்.


அடுத்த கதை என்னன்னா,


கற்புக்கரசியும், பேரழகியுமான வ்ருந்தா மேலே ஆசைவச்ச மஹா விஷ்ணு, ஜலந்திரன் போருக்குப் போனப்ப, தன்னையேஜலந்திரனா மாத்திக்கிட்டு வ்ருந்தாவைப் பார்க்க வர்றார். விஷ்ணுவோட கெட்ட எண்ணத்தையும், இது ஜலந்திரன் ரூபத்தில்வந்த வேற்றாள் என்பதையும் தன்னுடைய கற்பின் வல்லமையாலே தெரிஞ்சுக்கிட்ட வ்ருந்தா, தன்னை உடனே ஒரு செடியாகமாத்திக்கிறாள். இதுதான் துளசிச் செடி. தன்னுடைய எண்ணம் தோத்துப் போனதை விஷ்ணுவாலே தாங்க முடியலை. சரி ,எதா இருந்தாலும் விடப்போறதில்லைன்னு தீர்மானிச்சு, துளசி இலைகளை மாலையாக்கித் தன் கழுத்துலே போட்டுக்கறார்.தனக்குப் பிரியமான வ்ருந்தா, மாலைரூபத்துலேயாவது தன்னோடு நிரந்தரமா இருக்கணுமுன்னு இந்த ஏற்பாடு.அதனாலேதான் பெருமாளுக்கு எப்பவும் துளசிமாலை விசேஷமா அணிவிக்கறது.


எப்படியோ இந்த ரெண்டு வர்ஷனிலும் துளசிச் செடியும், சாலிக்ராமும் வந்துருது. விருந்தாவாகிய துளசிக்கும்,விஷ்ணுவாகிய சாலிக்ராமுக்கும் அப்புறம் கல்யாணம்( அதான் ரெண்டுபேரும் வேற பிறவி எடுத்தாச்சே!) நடந்துச்சாம்.


கார்த்திகைப் பவுர்ணமிக்கு இந்த துளசி விவாஹம் நடக்குது. இதுக்கு முந்தி வர்ற ஏகாதசிமுதல் பவுர்ணமிவரை அஞ்சுநாள் விசேஷப் பண்டிகைக் காலம். அதான் அஞ்சுநாள் கல்யாணமுன்னு சொன்னேனே. இந்தியாவுலே வடக்கே 'சிம்லா' ன்றஊர்லேதான் இது ரொம்ப விசேஷமாக் கொண்டாடப்படுதாம். ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் இதுக்காகவே அங்கே கூடறாங்களாம். அங்கே ஏகாதசியன்னிக்கே கல்யாணம் நடந்துருது. அதுக்கடுத்துவர்ற நாலுநாளும் பண்டிகைக் காலம்.வட இந்தியாவுலே, வருஷாவருஷம் கல்யாண சீஸன் ஆரம்பிக்கறது இதுலே இருந்துதானாம்.


உண்மையான கல்யாணங்களில் நடக்கும் சாஸ்த்திரம் சம்பிரதாயம் ஒண்ணும் விடாம இந்தக் கல்யாணம் நடக்குமாம். இதைநான் கேள்விப்பட்டிருக்கேனே ஒழிய, நேரில் ஒருநாளும் பார்த்ததில்லை.


ஆனாப் பாருங்க, இந்த வருஷம் இங்கே நம்ம ஹரே கிருஷ்ணா கோவிலிலே துளசிக்கும், சாலிகிராமுக்கும் கல்யாணம்ஏற்பாடு நடக்குது. எனக்கு ஒரு விசேஷ அழைப்புவேற வந்திருக்கு. கிறைஸ்ட்சர்ச்சிலே எத்தனை ஹிந்துக் கல்யாணம்நடந்திருக்கு? எனக்குத் தெரிஞ்சு இதுவரை மூணு? ம்ம்ம்ம் ...... இல்லே நாலு.


இதுலே ஒண்ணு ஃபிஜி இந்தியக் கல்யாணம். புரோகிதர் ஃபிஜியிலிருந்து வந்திருந்தார்.


அடுத்த ரெண்டும் இலங்கைத்தமிழர் கல்யாணம். இதுலே ஒரு கல்யாணத்துக்கு இலங்கையிலிருந்து இங்கே வந்து செட்டிலான புரோகிதர்.
இன்னொண்ணு, நம்ம ஹரே கிருஷ்ணா கோயில் பண்டிட் நடத்தி வச்சார்.


இது மூணுக்கும் நமக்கு அழைப்பிதழ் வந்து போனோம். இதுலே ஒரு கல்யாணத்தை( ஹரே கிருஷ்ணா பண்டிட் நடத்திவச்சது)இங்கே எங்கள் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கொரு வேலையாச் செஞ்சுகொடுத்து ஒரு கம்யூனிட்டிக்கல்யாணமா ஆக்கிட்டோம். ரொம்ப சிறப்பா அமைஞ்சது. எல்லோருக்கும் ஒவ்வொரு'ரோல்' இருந்துச்சு.நானும், மற்றொருதோழியும் சேர்ந்து மணமாலைகள் தயாரிச்சோம். அழகான ரோஜாப்பூ மாலைகள்!!


இதெல்லாம் இல்லாம ரெண்டு சிவில் மேரேஜ் நடந்துச்சு. நம்மைப் பொறுத்தவரை அதை ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சியாவும்,சட்டத்தைப் பொறுத்தவரை அது ஒரு ரெஜிஸ்தர் கல்யாணமாவும் இருந்துச்சு. அதுலேயும் ஒரு நிச்சயம்/கல்யாணத்துக்கு நானே மாப்பிள்ளை வீட்டுக்காருங்களா இருக்கவேண்டியதாப் போச்சு. மாப்பிள்ளை வெளிக்கிட்டது நம்ம வீட்டில் இருந்துதான். மாப்பிள்ளை இங்கிலாந்திலிருந்து வந்திருந்தார். அவருக்கு ஒரு வீடு வேணுமில்லையா, அது நம்மதாப்போச்சு:-)


நானும் மாப்பிள்ளைவீடுன்ற கர்வத்தோட இருந்தேன் அன்னைக்கு!


ஒருநாள் (அன்னிக்கு வெள்ளிக்கிழமையா இருந்துச்சு)ச்சும்மா டவுன்வரைக்கும் போலாமுன்னு சிட்டிசென்டருக்குப்போனேன். இங்கேதான் ஒரு நூறுவருஷத்துக்குமேலே பழசான சர்ச் இருக்கு. அதுக்கு முன்னாலே எல்லா ஐரோப்பியநகரங்களிலும் இருக்கறமாதிரி ஒரு சதுக்கம். அந்தப் பக்கம்போனா வழக்கமா சர்ச்( இதுவும் ஒரு கோயில்தானே?)க்கு எப்பவும் ஒரு விஸிட் இருக்கு. பழக்கத்தை மாத்தமுடியுமா? அப்படிப்போனப்பப் பார்க்கறேன், அந்தச் சதுக்கத்துலே மேடை போட்டுஒரு இந்துக் கல்யாணம் நடந்துக்கிட்டு இருக்கு. என்னடான்னு பார்த்தா, ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தரெண்டுபேருக்குக் கல்யாணம். பொதுவுலே வச்சுட்டாங்க. நானும் 'டாண்'னு போய்ச் சேர்ந்திருக்கேன் பாருங்க!கொஞ்சநேரம் நின்னு அவுங்க சம்பிரதாயத்தைப் பார்த்துட்டு மணமக்களுக்கு ஆசி வழங்கிட்டு கிளம்புனா, இருந்துகல்யாணச் சாப்பாட்டைச் சாப்புடணுமுன்னு கேட்டுக்கிட்டாங்க. நல்ல சைவச் சாப்பாடு. அங்கிருந்த எல்லாருக்கும்போகவர இருந்த அத்தனைபேருக்கும் அன்னிக்கு அடிச்சது லக்.
ஆனா நான் பார்த்த நாலு கல்யாணத்துலேயும் ரொம்ப மனமகிழ்ச்சியைக் கொடுத்தது, நாங்க எல்லாம் சேர்ந்துவேலைகளைப் பகிர்ந்துக்கிட்டுச் செய்த கம்யூனிட்டிக் கல்யாணம்தாங்க. இனிமே நம்ம புள்ளைங்களுக்குக்கல்யாணம் கார்த்தின்னா இந்தியாவுக்கு ஓடவேணாம். இங்கியே நல்லபடியா நடத்தவும் முடியும், நம்மசம்பிரதாயங்களுக்குக் குறைவில்லாமன்ற எண்ணத்தைக் கொடுத்தது அந்தக் கல்யாணம்தாங்க. அதுமட்டுமா?சும்மா சொல்லகூடாது. நடத்திவச்ச ஹரே கிருஷ்ணா பண்டிதரும் ரொம்ப அருமையா மந்திரங்களைச் சொல்லி,அது ஒண்ணொண்ணுக்கும் ஆங்கில விளக்கமும் சொல்லி எல்லோருக்கும் புரிய வச்சார். வந்திருந்த வெள்ளைக்காரங்க அப்படியே அசந்து போயிட்டாங்கல்லெ. இத்தனைக்கும் அந்தப் பண்டிதர் 'ஸ்வீடன்' நாட்டைச் சேர்ந்தவர்.


இப்படித்தாங்க, நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாலும் எனக்குன்னு வருதுபாருங்க வாய்ப்புங்க!


இன்னிக்கு இந்தத் துளசி கல்யாணத்தையும் கட்டாயம் பார்த்துரணும். நான் போய் கல்யாணத்துக்குக் கிளம்பரவழியைப் பார்க்கறேன். என்ன புடவை?....ம்ம்ம்ம்.


அங்கே, இன்னும் ஏதாவது சுவையான சமாச்சாரம் மாட்டுனா சொல்றேன்.

உங்ககிட்டே சொல்லாம பின்னே வேற யார்கிட்டே சொல்றதாம்?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Tuesday, November 15, 2005

நியூஸிலாந்து பகுதி 26


கேப்டன் ஜேம்ஸ் குக்.

பொறந்தது அக்டோபர் 28, 1728.

19 வயசுலேயே நிலக்கரி கொண்டுபோற கப்பல்லே வேலை. அதுக்கப்புறம் ராயல் நேவி யிலே சேர்ந்தது 27வது வயசுலே.சரியான வழியைச் சொல்றதுலேயும், போற இடங்களைப்பற்றி ச்சார்ட் வரையறதுலேயும் கில்லாடி.


ஏபெல் டாஸ்மென் கண்டுபிடிச்ச நிலப்பகுதியைப் பத்தி மேலும் விவரம் அறிஞ்சுக்கறதுக்காக இவரை அனுப்புனாங்க.இங்கே வந்து பாக்கறதுக்கு முன்னாடியே வீனஸ் கிரகம் சூரியனை கடந்து போறதைப் பத்தித் தெரிஞ்சுக்கவேண்டி,தாஹித்தி தீவுவரை வந்தவர்தான். இவர் இங்கே வந்த கப்பலுக்குப் பேர் 'எண்டீவர்' ( HMS ENDEAVOUR).இவுங்களோட கப்பல்லே வந்தவுங்களிலே ரெண்டு பேர் ஸ்பெஷல் ஆசாமிங்க. ஒருத்தர் ஜோஸெஃப் பேங்க்ஸ்,தாவர இயல்நிபுணர்.இங்கே கிடைக்கப்போற புதுச் செடிங்க, பூச்சிபொட்டு, பறவை எல்லாத்தையும் பத்தித் தெரிஞ்சுக்க ஆர்வமா வந்தவர். அடுத்தவர் சிட்னி பார்கிஸன். அவர் ஓவியர். இங்கே பார்க்கப்போற இடங்களை அப்படியே படமா வரைஞ்சு கொண்டு போகவேவந்தவர். அதானே, அந்தக் காலத்துலே கேமெரா ஏது? எல்லாரும் கிளம்பி வந்துக்கிட்டே இருந்தாங்க.


1769 வது வருஷம் அக்டோபர் தேதி 6. பகல் 2 மணி. கொடிமரத்து மேலே குந்திக்கிட்டுப் பார்த்துக்கிட்டே வந்த ச்சின்னப்பையனான 'நிக்கோலஸ் யங்' 'நிலம் தெரியுது'ன்னு குரல் விட்டதும் எல்லாரும் வெளியே வந்து பார்த்திருக்காங்க. இங்கத்து வடக்குத்தீவின் கிழக்குக் கடற்கரை. நிக்கோலஸ்க்கு ஒரு பாட்டில் ரம் பரிசாக் கிடைச்சது.

முதல்முதல்லேநியூஸியின் கிழக்குப் பகுதியைப் பார்த்த ஐரோப்பியன். அந்தப் பகுதிக்கு 'யங் நிக்ஸ் ஹெட்' Young Nick's Head ன்னுபேர் சூட்டினாங்க.
இப்ப கிஸ்பேர்ன் Gisborne னு சொல்ற இடத்துலே கப்பலை நங்கூரம் போட்டாங்க. அங்கே இருக்கற உள்ளூர்ஆட்களைச் சந்திக்கலாமுன்னு பார்த்தா இவுங்க ஆட்களை மவோரிங்க அடிக்கவந்துட்டாங்க. அந்தச் சண்டையிலே பல மவோரிங்க செத்துட்டாங்க. உடனே குக் அந்த இடத்தை விட்டுக் கிளம்பிட்டார். அந்த இடத்துக்கு பாவர்ட்டி பேPoverty Bayன்னு பேர் வச்சாங்க. அதுக்கப்புறம் கரை ஓரமாவே பிரயாணம் செஞ்சுக்கிட்டு வந்தாங்க.
ஒரு இடத்துலே கொஞ்சம் ஆள்நடமாட்டம் பார்த்துட்டு ஒரு ச்சின்னப்படகுலே சிலர் மட்டும் இறங்கிவந்தாங்க.இப்ப ரொம்பத்தேவையா இருக்குறது கொஞ்சம் சாப்பாட்டுச்சாமான்கள், உலர்ந்த மீன்கள், அப்புறம் குடிக்கத்தண்ணி.பண்டமாற்று செஞ்சுக்கலாமுன்னு பார்த்தா இங்கேயும் அடிதடிதான். இந்தக் கலாட்டாலே படகுலே இருந்த ஒரு பையனைவேற மவோரிங்க இழுத்து எடுத்துக்கிட்டாங்க. அடக்கடவுளேன்னு பதறிப்போய் இன்னும் கொஞ்சம் ஜோராச்சண்டைபோட்டு, துப்பாக்கியாலே அந்தக் கனூவைச்சுட்டாங்களாம். இந்தசமயம் பார்த்து, கடலிலே குதிச்சு நீந்திக் கப்பல்கிட்டேபோய்ச் சேர்ந்துட்டப்பையனைக் காப்பாத்தி மீண்டும் கப்பலிலே ஏத்திக்கிட்டு போயிட்டாங்க. ச்சும்மாப் போகாம அந்த இடத்துக்கு 'Cape Kidnappers'னு பேர் வச்சிட்டுப் போனாங்களாம்!


அதானே, புது இடமா இருக்கறப்ப ஒரு அடையாளம் வேணாமா? வெள்ளரிப்பிஞ்சு வாங்குனோமே அந்த ஊர், கோயிலுக்குவெளியிலே விட்ட செருப்பு காணாமப் போச்சே அந்த ஊருன்னு நாம அடையாளம் சொல்றதில்லையா என்ன? அதுவுமில்லாமபேர் வைக்க காசா பணமா?


அதுக்கப்புறம் அப்படியே கிழக்குக் கடற்கரையோரமா வந்தப்ப சில மவோரி ஆட்களொட நட்பும் கிடைச்சிருக்கு. Whitianga ன்ற கடற்கரை ஓரமா இருக்கற ஊருலே 'மெர்க்குரி பே'( Mercury Bay (ன்ற இடத்துலே 11நாள் தங்கிடு அக்கம்பக்கம் இருந்த மவோரிகள் கிட்டே நட்பை வளர்த்துக்கிட்டு இருந்திருக்காங்க.


இவுங்ககிட்டே இருந்த துப்பாக்கிக்களை 'வாக்கிங்க் ஸ்டிக்'னு மவோரிங்க( அவுக பாஷையிலேதான்!) சொல்லிக்கிட்டுஇருந்தாங்களாம். அப்ப சில வெள்ளைக்காரங்க மரத்தைப் பார்த்து அதை நீட்டுனதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தச்சின்னப்பசங்க அதுலே இருந்துவந்த வெடிசத்தத்தையும், பறவைங்க 'தொப்'னு விழுந்ததையும் பார்த்து பயந்துபோய், அலறி அடிச்சுக்கிட்டுப் புதருக்குள்ளெ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்களாம். பாவம், இந்த மவோரிப் புள்ளைங்க.


Horeta Taniwha ன்னு ஒரு பையன் இருந்தான் . அங்கே இருந்த மவோரிக்குழுவின் தலைவரோட மகன்.அந்தப் பையனுக்கு கேப்டன் குக் ஒரு பரிசு கொடுத்தார். அது என்ன தெரியுமா? ஒரு ஆணி! அதுவரை உலோகத்தாலே செஞ்சஎதையும் பார்க்காத ஆளுங்க இந்த ஜனங்க. அந்த ஆணியை ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்து வச்சிருந்தானாம்அந்தப் பையன். தன்னுடைய மர ஈட்டிக்கு முனையிலே அதை அடிச்சு வச்சுக்கிட்டும், தன்னுடைய கனூவிலே சைடுலேஓட்டை போட்டுக்கறதுக்கும்னு பலவிதமா அந்த ஆணியை பயன்படுத்தி இருக்காங்க. பல வருசத்துக்குமுன்னே'காட் மஸ்ட் பி க்ரேஸி'ன்னு ஒரு படம் வந்துச்சே, அதுலே ஒரு 'கோகோ கோலா பாட்டில் ' உள்ளூர் ஆளுங்களைஎன்ன பாடுபடுத்துமுன்னு இருந்துச்சுல்லே, அதே கதைதான் போல , இங்கேயும்:-)))


இந்த 'ஹொரெடா டானிஃபா' பின்னாளில் அந்த ட்ரைபுக்குத் தலைவனா ஆனாராம். அப்ப அவரோட நினைவில் இருந்ததைச்சொல்லியிருக்கார். அந்தக் காலக்கட்டத்துலே இந்த வெள்ளைக்காரர்களுக்குத் தலைக்குப் பின்னாலும் கண்ணுங்கஇருந்துச்சுன்னு மவோரிங்க நம்பிக்கிட்டு இருந்தாங்களாம்!
இதுக்கப்புறம் 'மெர்க்குரி பே' யிலிருந்து கிளம்பி வடக்கு நோக்கிப் பயணம் செஞ்சு இந்த வடக்குத் தீவின் மேற்பகுதியைச் சுத்திஅப்படியே இடதுபக்கமாவந்து, மேற்குபக்கம் 'குவீன் ஷலெட் சவுண்டு( Queen Charlot Sound)லே நங்கூரம் பாய்ச்சி மூணுவாரம் தங்கி கப்பலைக் கொஞ்சம் பழுதுபார்த்துக்கிட்டு அப்படியே குக் ஜலசந்தி, இது வடக்கு,தெற்குத் தீவுகளைப் பிரிக்கறதுக்கே நடுவுலே இருக்கு (இதுக்கு குக்கோட பேரே வச்சாச்சு Cook Strait )வழியா,Cape Turnagain( பேரைப் பார்த்தீங்கல்லெ? கப்பலைத் திருப்பிக்கிட்டு போனதுக்கு இந்தப்பேரு!)போய் மறுபடி தெக்காலே வந்துருக்கார். இப்படியே அங்கங்கேநில அமைப்பையெல்லாம் ச்சார்ட்டா வரைஞ்சுக்கிட்டே போயிருக்காரு நம்ம கேப்டன் குக். அதுமட்டுமில்லாம எங்கெங்கே, எப்பெப்போ, யார்யாரைப் பார்த்தார்ன்னும்நடந்த நிகழ்ச்சிகளை ஒண்ணுவிடாம எழுதிவச்சுருக்கார் அந்தப் புண்ணியவான். இல்லேன்னா, என்னாலே விலாவரியா இப்படிக் கதை சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா?


இவுங்க வந்த கப்பலைக் கவுரவிக்கரதுக்காக இங்கே நியூஸிலாந்து அரசாங்கம் இந்தக் கப்பலோட உருவத்தைஇங்கத்து 50 செண்ட் காசுலே பொறிச்சிருக்காங்கன்னா பாருங்களேன்!


கேப்டன் குக்கோட இந்த விவரணத்தைப் பார்த்த/கேள்விப்பட்ட ஐரோப்பிய நாடுகளிலே இதே பேச்சா இருந்ததாம்.தொலைதூரத்துலே ஒரு வளமான இடம் இருக்குது. அங்கே போயிட்டா அருமையான வாழ்க்கை நடத்தலாமுன்னுஒரு கனவுலகம் எல்லார் மனசுலேயும் உருவாச்சாம்.


அப்ப கேப்டன் குக் சொன்னாராம், இந்த மவோரி ஜனங்க பெரிய வீரனுங்க, தீரனுங்க. பாக்கறதுக்கும் நல்ல உறுதியான உடல்கட்டுகொண்டவுங்க, கலைத்திறமை மிக்கவங்கன்னு. இந்த ரெண்டு தரப்பு ஆட்களுக்கும்( மவோரி & ஐரோப்பியர்கள்)ஒருத்தருக்கொருத்தர் பண்டமாற்று முறையிலே வியாபாரம் செய்யவும் ஆசை இருந்தாலும், மொழி தெரியாத காரணத்தாலெஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கமுடியாம தப்பர்த்தம் செஞ்சுக்கிட்டு வெட்டு குத்துன்னே நிறையதடவை நடந்திருக்கு.


இதே காலக் கட்டத்துலே1769லே ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Jean-Francois Marie de Surville ன்றவர் நியூஸிக்கு கப்பலைஓட்டிக்கிட்டு வந்திருக்கார். நெடுந்தூரப்பயணமாச்சா? அவரோடு வந்த கூட்டத்துலே அநேக ஆட்கள் 'ஸ்கர்வி'ன்றகடல் நோய் வந்து கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த லட்சணத்துலே 'டவுட்லெஸ் பே'(Doubtless Bay ) ன்ற இடம்( இப்ப இதுஇருக்கற ஊருக்குப் பேரு பே ஆஃப் ஐலண்ட்ஸ்( Bay of Islands ) வந்து கப்பலை நிறுத்தியிருக்கார். உள்ளூர் மவோரிங்கெல்லாம் சேர்ந்து இவுங்களோட சண்டை போட்டு ஓடஓட விரட்டிட்டாங்க. அப்பப் போனவர்தான்.திரும்ப வரவேயில்லை.


அப்படியும் விடாம மூணுவருஷம் கழிச்சு 1772 லே இன்னொரு ஃப்ரெஞ்சுக்காரர் Marion du Fresne இதே பே ஆஃப் ஐலண்ட்ஸ் வந்திருக்கார்.அவரையும் அவரோட குழுவிலிருந்த 15 மாலுமிகளையும் மவோரிங்க போட்டுத்தள்ளிட்டாங்க. அத்தோடு விடாமஅவுங்களை தின்னும் முடிச்சிட்டாங்க. இதையெல்லாம் பார்த்த, உயிர்தப்பின மத்த மாலுமிங்களுக்குக் கோபம்தலைக்கேறி, எப்படியாவது பழிவாங்கணுமுன்னு தீர்மானிச்சாங்க. மவோரி கிராமங்களுக்குத் தீவச்சுக் கொளுத்திவிட்டுட்டாங்க. அதுலே சுமார் 300 மவோரிங்க செத்துட்டாங்களாம்.


அதான் பிரிட்டிஷ்காரங்கதான் இங்கே ஆட்சி செய்யணுமுன்னு 'விதி' இருந்திருக்கே, அப்ப எப்படி மத்த நாட்டுக்காரங்க நுழையமுடியும்? நம்ம கேப்டன் குக் 1773லே யும், மறுபடி 1777லேயும் இன்னும் ரெண்டு ட்ரிப்அடிச்சுருக்கார். ஒவ்வொருதடவை வரும்போதும் புதுசா சில மிருகங்களையும், முக்கியமா பண்ணிங்களையும்,உருளைக்கிழங்கு இன்னும் சிலபல தாவர தானிய வகைகளையும் கொண்டுவந்து இங்கே அறிமுகம் செஞ்சுருக்கார்.அப்படியே அவரோட வரைபடத்துலே இருந்த சிலபல தவறுகளையும் திருத்தி சரியா வரைஞ்சு வச்சிருக்கார்.


இப்பவும் 'கேப்டன் குக்'ன்னாலே இங்கே பயங்கர மதிப்புத்தான். அவரைக் கவுரவிக்கத்தான் இங்கத்து 'சதர்ன் ஆல்ப்ஸ்'ன்னுசொல்லப்படுற மலைத்தொடர்களிலே இருக்கற மிக உயரமான உச்சிக்கு 'மவுண்ட் குக்'ன்னு பேர் வச்சாங்க. இதுதான்நியூஸியிலேயே மிகவும் உயர்ந்த மலை உச்சி. ஆனாப் பாருங்க சில வருஷங்களுக்கு முந்தி அந்த 'பீக் Peak' கொஞ்சம்உடைஞ்சு வுழுந்திருச்சு. வருஷக்கணக்காச்சேர்ந்த பனியோட கனம் தாங்காம இப்படி ஆயிருச்சுன்னு விஞ்ஞானிகள்சொன்னாங்க. இப்பவும் இதுதான் இங்கே ஹையஸ்ட் பீக். ஆனா மூக்கறுபட்ட சூர்ப்பநகை மாதிரி மொண்ணையாஇருக்கு இப்ப!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday, November 14, 2005

கடைசின்னு நினைச்சது........

கடைசின்னு நினைச்சது கடைசி இல்லையாம்!


நம்ம தமிழ்ச் சங்கத்துலே தீபாவளிக் கொண்டாட்டம் இப்பத்தான் ரெண்டு நாளைக்கு முன்னாலே நடந்துச்சு.'ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கதை' இல்லீங்க. இந்தவருஷம் நடந்த ஒம்போது தீபாவளிக் கொண்டாட்டத்துலேஇது எப்படியோ கட்டக் கடைசியாப் போச்சு. அது பரவாயில்லை. வருசம் முழுசும் கொண்டாடினாலும்நமக்கு அலுப்புத் தட்டப்போகுதா என்ன?


கலை நிகழ்ச்சிகள் ரொம்ப அருமையா அமைஞ்சுபோச்சு. அதிலும் கண்ணுலே நீர்மல்க( ஆனந்தக்கண்ணீருங்க!)ச்சின்னக்குழந்தை 'யானை வந்தது' பாட்டைப் பாடுனது ரொம்ப ஜோர். எனக்கு யானை பிடிக்குமுன்னு அந்தப்'பிஞ்சு'க்குத் தெரிஞ்சிருக்கு பாருங்களேன். பட்டு வேட்டியெல்லாம் கட்டிக்கிட்டு ஐயா அட்டகாசமாவேற வந்தாரு.


விருந்தினர்களா வந்தவுங்களும் அருமையான நிகழ்ச்சிகளைக் கொடுத்தாங்க. கண்ணுக்கு விருந்துதான் போங்க.விருந்துன்னதும் ஞாபகம் வருது பாருங்க, கட்டாயம் மெனுவைக் கேக்க ஆவலா இருப்பீங்கன்னு. ஆனா அது கொஞ்சம் கஷ்டம்தாங்க. விதம் விதமா சமைச்சுக் கொண்டுவந்துட்டாங்க நம்ம ஜனங்க. எதைச் சொல்றது எதை விடறது?ஆனாலும் கொஞ்சம் முயற்சி செய்யறேன்....


நிறைய சாப்பாடு இருக்கு, இன்னும், தட்டுலே எடுத்துக்கிட்டுவந்து சாப்புடுங்கன்னு 'மைக்'லே கெஞ்சும்படியாயிருச்சுங்க.புட்டு, இடியாப்பம், இட்டிலி, சப்பாத்தி, கறிவகைகள், கொழுக்கட்டை, வடை, ஃப்ரைடு ரைஸ், இன்னும் என்னென்னவோபோங்க.


சாப்பாடெல்லாம் ஆனப்புறம் பட்டாஸ் வெடிச்சு கொண்டாட்டத்தை முடிச்சோம்லெ. ஏதோ பிரிட்டிஷ் நரகாசுரன்'கை ஃபாக்ஸ்' புண்ணியத்துலே நம்ம பட்டாஸ் தேவைகள் ஒருவழியா பூர்த்தியாயிருது. அதுவரைக்கும் சந்தோஷம்தான்.மத்தாப்பூ இல்லாத தீபாவளியை நினைச்சுக்கூடப் பார்க்கமுடியலைங்களே!


எங்க தமிழ்ச்சங்கம் ஒரு 'வெப்சைட்'வச்சிருக்கு. அதுலே போய், அங்கே இருக்கற போட்டோ ஆல்பத்துலே பாருங்க.

http://www.canterburytamilsociety.org/


கல்யாணத்துக்குப் போன பெண்ணை, திடீர்மணமகளா ஆக்கிட்டாங்கன்னு அப்பப்ப பேப்பரிலே படிக்கறோம் பாருங்க,அதேபோலதான் இன்னொண்ணு நடந்துச்சு.


விழாவைப் பார்க்கப்போன இடத்துலேதான் தெரிஞ்சது, இந்தவருஷக் கலைகலாச்சார ஒருங்கிணைப்பாளர் வரமுடியாமப்போச்சுன்னு. என்னையே 'நடத்தித் தரும்படி'க் கேட்டுக்கிட்டாங்க. நமக்குத்தான் இதுலே 'பல வருட'அனுபவம் இருக்கேன்னுதயங்காம ஏத்துக்கிட்டேன். அதான் ஏற்கெனவே ஐட்டங்கள் எல்லாம் தயார் செஞ்சிருந்தாங்கல்லே:-))


அப்புறம்?


அப்புறமென்ன, தூள் கிளப்பிட்டோம்லெ!


ஒம்போதாவது கொண்டாட்டம் முடிஞ்சது. அப்பாடான்னு பெருமூச்சுவிடறதுக்கு முன்னாலே நியூஸ் வருது,அடுத்தவாரம் ,நம்ம ஊர் கேரளா சங்கத்துலே தீபாவளியாம்!


போற போக்கைப் பார்த்தா, அடுத்தவருஷம் தீபாவளி வர்றவரை இந்தவருஷ தீபாவளியைக் கொண்டாடப்போறலட்சணம் தெரியுது:-)))))


இன்னைக்குக் 'குழந்தைகள் தினம்' என்றபடியாலே, இந்தப் பதிவை உலகின் அனைத்துக்குழந்தைகளுக்கும் சமர்ப்பிக்கின்றேன்.


புள்ளைங்களா, எல்லோரும் நல்லா இருங்க.

Friday, November 11, 2005

நியூஸிலாந்து பகுதி 25


நொவா ஸீலாண்டியா


பத்து கோல்கொண்டா ப்ளாங்கெட்....

ம்ம்ம் இருக்கு


90 கிலோ கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி, ப்யூட்டர் (pewter)இருக்கா?

இருக்கு.

பத்து பாக்கெட் சைனீஸ் தங்கக் கம்பிங்க

ஆமா, இருக்கு.


இரும்புலே செஞ்ச பாத்திரம் 25

ஆமா.

ச்சைனீஸ் கண்ணாடிங்க ச்சின்னது 500. இருக்குல்லே? பத்திரம்.
உடைஞ்சுரப்போகுது.

முத்துமாலை 3

ஒரு பித்தளைக் கும்பா. பெரூசு.


எல்லாத்தையும் கணக்குப் பார்த்து ஒரு பாய்மரக்கப்பல்லே ஏத்தியாச்சு.
கூடவே இன்னோருபாய்மரக்கப்பலும் வருது. அதுலே இரும்புலே செஞ்ச ஷார்ட் ரேஞ் துப்பாக்கிங்க, லாங் ரேஞ்சுலேசுடற கேனன் இப்படி, சண்டைக்குத்தேவையான வஸ்துங்க. இந்தக் கப்பலுக்குப் பேரு Heemskerck.
மத்த சாமான்களை ஏத்திக்கிட்டு வர்றதுக்குப் பேரு Zeehaen.


வருஷம் 1642. டச்சு நாட்டைச் சேர்ந்த 'ஏபெல் டாஸ்மென்'( Abel Tasman)ன்றவர் டச்சு வியாபாரம் நடந்துக்கிட்டுஇருந்த இடமான ஜாவா( சாவகத்தீவு?) இந்தோனேசியாவிலே இருந்து கிளம்பி கிழக்குப் பக்கமாஏதாவது பெரிய நிலம் இருக்குமா? அங்கே இருக்கற ஜனங்களோட வியாபாரம் வச்சுக்கலாமான்னுவராங்க. அப்பக்கூடப்பாருங்க. வியாபாரம் ஒருபக்கமுன்னா, சண்டை அடுத்தபக்கமுன்னு ரெண்டுகப்பலுங்களிலே வராங்க.


அஞ்சுமாசப் பிரயாணம் முடிஞ்சது. இந்த நாட்டோட தெற்குத்தீவுலே மேற்குக் கடற்கரைப்பக்கம் வந்து சேர்ந்தாச்சு. அங்கே இறங்கலை. வடக்கு நோக்கி மேலே அப்படியே நிலத்தையொட்டி பிரயாணம் செய்யறாங்க.


சுமார் 1000 வருசத்துக்குமுன்னே இங்கே வந்து சேர்ந்துட்ட மவோரிங்க பாட்டும் கதையுமா இருந்து பல்கிப் பெருகிட்டாங்க. அங்கங்கே குழுகுழுவாப் பிரிஞ்சுபோய் தனித்தனி கிராமமா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.எல்லாம் கடலை ஒட்டி இருக்கப்பட்ட இடங்கள். சாப்பாடு அங்கெதானே இருக்கு? மீன், ச்சிப்பின்னு கடல் உணவுங்க.


மனுஷரைப் பார்த்த ஏபெலோட படகு ஒரு இடத்துலே நிக்குது. அங்கே இருந்த Ngati Tumata Kokiri Tribe கூட்டமா கனூலே( Canoe)வந்து ஏபெலோட படகை இடிக்கறாங்க. அதுலே இருக்கற டச்சு ஆட்களை mere ன்னுசொல்ற மரத்தடியாலே அடிக்கறாங்க. மூணு வெள்ளைக்காரங்களுக்கு அப்பவே மோட்சம். ஒருத்தருக்கு பயங்கர அடி.இது சரிப்படாதுன்னுட்டு ஏபெல் அங்கிருந்து கிளம்பிப்போயிடறாங்க. அடிபட்ட ஆளும் இப்ப செத்துடறார். சரியானகொலைகாரப் பசங்கடா இவுங்கன்னுட்டு அந்த இடத்துக்கு Murderer's Bay ன்னு பேர் வச்சுட்டார்.கொலைகாரன்பேட்டை?


இன்னும் அப்படியே வடக்கு நோக்கியே கப்பலுங்க போகுது. வடகோடிக்கு டச்சு நாட்டு கவர்னர் ஜெனரலுடைய மனைவியின்பேரை வச்சுட்டார். Cape Maria Van Diemen! தேசபக்தி வேணுமுல்லே?


'எல்லா உள்ளூர் ஆளுங்களுமா இப்படி இருப்பாங்க? சிநேகமான ஆளுங்க இல்லாமயா போயிருவாங்க? இன்னும்கொஞ்சம் பொறுமையாப் பார்க்கலாமு'ன்னு ஒரு தீவுகிட்டே கப்பலை நிறுத்துனாங்க. அந்தத் தீவுக்கு இப்ப மூணு ராஜாதீவு( Three Kings Islands)ன்னு பேரு. அங்கேயும் மவோரி ஆட்கள் வந்து சத்தம்போட்டு விரட்டிவிட்டாங்க.நிலத்தைப் பார்த்துக்கூட தரையிலே காலுகுத்த முடியாம ஒரு தவிப்பு. திரும்பிப் போயிடறதுதான் நல்லது.ஏற்கெனவே கடல்நோய்வந்து பலபேரும் செத்தாச்சு. மிச்சம் மீதி இருந்தவங்களிலே இப்ப நாலுபேர் அவுட்.


புதுசா நாம கண்டு பிடிச்ச இந்த இடத்துக்கு ஒரு பேரு வைக்கலாமுன்னு Staten Landtnu வச்சாராம். அதுக்குசிலவருசம் கழிச்சு ஐரோப்பாவுலே இந்த புது இடத்துக்குப் பேர் NOVA ZEELANDIA ன்னு ஆயிருச்சாம்.அப்ப நெதர்லாந்துலே ஒரு கடற்கரையோரப் பகுதிக்கு Zeeland ன்னு பேர். அதனாலே இது புது(NOVA)ஸீலேண்ட் .


திரும்பிப் போயிட்டாங்களே தவிர இந்தப் புது இடத்தைப் பத்தின பேச்சு அங்கே நிறையவே நடந்திருக்கு. கொஞ்சம்கொஞ்சமா விவரங்கள் அக்கம்பக்கத்து நாடுகளுக்கும் பரவிக்கிட்டே போய் இருக்கு. அதானே, ஜனங்க வாய் ச்சும்மாஇருக்குமா?


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Thursday, November 10, 2005

நியூஸிலாந்து பகுதி 24

கதைக்குள்ளே போறதுக்கு முந்தி இது. ஒண்ணும் இல்லைங்க. நம்ம பின்னூட்டப்பெட்டியைக்காணோம்.ரெண்டுநாளா
ஊட்டமில்லாம மெலிஞ்சுக்கிட்டே போறேன். தொழில்நுட்பவித்தகர்கிட்டே மனுப்போட்டாச்சு.
அதுவரைக்கும் பதிவோட தலைப்புலே க்ளிக்காம அதுக்குக் கொஞ்சம்மேலே 'துளசிதளம்' க்க்ளிக்குனா பெட்டி
தோன்றும் விந்தை காண திரண்டு வாரீர் மக்களே!மவோரிக்கதைகள் # 9


மறுபடியும் பெண்கள்.


உத்தியோகம் புருஷ லட்சணம். வீட்டுக்கு வேண்டியதைச் சம்பாரிச்சுக் கொண்டுவரவேண்டியவன் ஆண்.


வீட்டைக் கவனிச்சு நடத்தவேண்டியவள் பெண்.இது இங்கேயும் இருக்குங்க. ஒரு நல்ல கணவனுக்குரிய அடையாளமா இவுங்க நம்பறது என்னன்னா, தன்னுடைய
குடும்பத்துக்கும், அவன் இருக்குற கிராமம் முழுசுக்கும் சாப்பாடு போடணும்!


முழுகிராமம்னு சொன்னதும் பயமா இருக்குல்லே? ஊர் முழுக்க எப்படி சோறு போடமுடியும்? அதுவும் தினம் தினம்?

இவுங்க எப்பவுமே ஒரு குழுவாச் சேர்ந்து வாழ்ந்துக்கிட்டு இருந்ததாலே அந்தக் குழுவிலே இருக்கற ஆண்கள் எல்லாமே
எதாவது பயிரிட்டும், விலங்கு பறவைகளை வேட்டையாடியும் சாப்பாடு போட்டிருப்பாங்க போல.


பெண்ணின் இதயத்தைக் கொள்ளையடிக்கவும் உணவையே உபயோகித்த ஒரு மனிதனோட கதையைக் கேளுங்க.


'கஹுங்குனு' ன்ற ஒரு ஆள் இருந்தார். அடுத்த கிராமத்துலே இருந்த ஒரு அழகான பெண்ணை எப்படியாவது
அடையணுமுன்னு ஆசை இருந்தது அவருக்கு. அந்தப் பொண்ணோட பேரு ரோங்கோமாய்வாஹினி.


அந்த ஊருலே குளிர் காலம் வந்தா சாப்பிட ஒண்ணும் கிடைக்காது. அப்ப ரொம்ப அரிதாக் கிடைக்கிற ஃபெர்ன்ரூட்
தான் அவுங்களுக்கு சாப்பாடு. அதனாலே நம்ம கஹுங்குனு தன்னுடைய ஆளுங்களையெல்லாம் சேர்த்துக்கிட்டு
இந்த ஃபெர்ன்ரூட்( ஒருவேளை இது பெரணிச் செடியோட வேரோ?) தேடிக்கிட்டுப் போறார். நிறைய இந்த வேரைச்
சேகரிச்சு, ஒரு பெரியக் கட்டாக் கட்டி எடுத்துக்கிட்டு, அந்தப் பொண் ரோங்கோமாய்வாஹினியோட கிராமத்துக்குப்
போறார். அங்கே இருந்த ஜனங்களுக்கு இதைப் பரிசாக் கொடுத்தார். எல்லோரும் இவர் ரொம்ப நல்லவர், புத்திசாலின்னு
பாராட்டுனாங்க. அப்புறம் அவர் கடலுக்குப் போய் தண்ணீருக்கடியிலே மூழ்கிப் போய் கூடை கூடையா அபலோன்
பாவா சிப்பிகளைக் கொண்டுவந்து தர்றார். இந்தச் சிப்பிக்குள்ளே ஒருவிதமான கடலுணவு இருக்கும். அதுக்கப்புறமும்
கடலுக்குள்ளே போய் தன்னுடைய உடம்பு முழுசும் பாவா சிப்பிங்களை ஒட்டிக்கிட்டு வெளியிலே வர்றார்.

அதைப் பார்த்த அந்த கிராம மக்கள் எல்லோரும் ஆரவாரம் செஞ்சு புகழ்ந்து பேசுனாங்க,எவ்வளவு புத்திசாலின்னு!


அந்தப் பொண்ணு ரோங்கோமாய்வாஹினி ஏற்கெனவே கல்யாணம் ஆனவள். இது தெரிய வருது நம்ம ஹீரோவுக்கு.
ஆனாலும் எப்படியாவது அவளை அடையணுமுன்னு நினைக்கறார். அன்னைக்கு இரவு நிறைய பாவா இறைச்சியைச்
சாப்புடுறார். பிறகு மெதுவா ஒளிஞ்சு ஒளிஞ்சு ரோங்கோமாய்வாஹினி யும் அவ்ளொட கணவனும் படுத்துத் தூங்கற
அறைக்குப் போறார். அவுங்க ரெண்டுபேரும் நல்ல தூக்கத்துலே இருக்காங்க. கஹுங்குனு அங்கே குளிருக்காக வச்சிருந்த
போர்வையை எடுத்து அவுங்களை மூடிட்டு, அந்தப் போர்வையை கொஞ்சமா விலக்கி அதுக்குள்ளே அபானவாயுவை
வெளியேத்திட்டார். இவருக்குச் சிரிப்பா வருது. சத்தமில்லாம சிரிச்சுக்கிட்டே ஒரு பக்கம் அமைதியா ஒளிஞ்சிருக்கார்.


கெட்ட நாத்தம் அவுங்களை எழுப்பிடுது. ரெண்டுபேரும் மாத்தி மாத்தி இதுக்கு யார் காரணமுன்னு வாக்குவாதம்
செய்யறாங்க. கொஞ்ச நேரம் கழிச்சுச் சண்டை ஓய்ஞ்சு திரும்பத் தூங்கறாங்க. அப்ப மெதுவாக் கிட்டே வந்து
மறுபடி வாயுவை வெளியேத்திட்டு ஒளிஞ்சுக்கறார். மறுபடிக் கெட்ட நாத்தம், மறுபடிச் சண்டை. இந்தமாதிரி
சிலமுறை நடந்து, பெரிய சத்தமான சண்டையா ஆயிடுது. சத்தம் கேட்டு, அங்கே அந்த தூங்கும் விடுதியிலே இருந்த கிராமத்து
ஜனங்க பூரா எழுந்துவந்துடறாங்க. இந்த வாய்ச்சண்டையே பெரிசாயி கடைசியிலே அந்தக் கணவனும் மனைவியும் பிரிஞ்சு
டறாங்க.கொஞ்சநாள் கழிச்சு அந்தப் பொண்ணு ரோங்கோமாய்வாஹினியை நம்ம கஹுங்குனு( Gas Master)கல்யாணம்
செஞ்சுகிட்டு சந்தோஷமா இருந்தார். இந்தக் கதை முழுசும் இங்கே மவோரிகளின் சரித்திரத்திலேயே இடம் பிடிச்சிருச்சு.

**********************************************************************

இந்தச் சாப்பாடுன்றதுலே கூட ஆண்களுக்கு வேற பொண்களுக்கு வேற ன்னு இருக்குதாமே?

டுஹொ ட்ரைப் இனமக்களை எடுத்துக்கிட்டோம்ன்னா, பெண்கள் சிலவகைகளைச் சாப்பிடணும். ஆண்கள் சிலதைச் சாப்பிடணுமுன்னு
இருக்கு. கெரெரு என்னும் ஒரு வகைப் புறாவின் மாமிசத்தை( கவனிங்க, எலும்பே இல்லாத மாமிசத்தை மட்டும்)பெண்கள் சாப்பிடவேண்டும்.
அப்ப ஆண்கள்? அதான் அந்த எலும்பு இருக்கே! அதைச் சாப்பிடலாம். அல்லது அந்தப் பறவையை வேகவைத்து எடுக்கும் 'சூப்'
ஆண்கள் சாப்பிடலாமாம்.( இனிமே சூப்பாவது ....ச்சுப். சூப்க்கு தடாதான்!)


பெண்களுக்கு சக்தி தேவை என்பதாலும், குழந்தைகளைப் பெற்றெடுக்க இன்னும் வலிமை வேண்டுமெபதாலும்
இந்தமாதிரி ஒரு ஏற்பாட்டை உண்டாக்கி வைத்திருக்காங்களாம். ப்ரோட்டீன் வேணும் என்பதற்காம்.

இதே பறவையை சமைத்துவிட்டாலோ, அல்லது அதே பறவையில் கொழுப்பை உபயோகித்து அதைப்
பதப்படுத்தினாலோ சாப்பிட்டுக் கொள்ளலாமாம். இந்த முறையில் சமைக்கும் போது மாவ்ரி( லைஃப் ஃபோர்ஸ்)
பறவையைவிட்டு வெளியேறிவிடுமாம். பெண்களுக்கு மட்டுமே இந்த மாவ்ரி தேவையாம்.

என்னாங்கடா இது? பறவையை சமைக்கணுங்கறீங்களா, இல்லையா?

**********************************************************************

Wednesday, November 09, 2005

நியூஸிலாந்து பகுதி 23


மவோரி கதைகள் # 8


ஆந்தைக்கண்ணு Poupou Pukana


நீங்க எப்பவாவது பொவ்பொவ் பார்த்திருக்கீங்களா? இது என்னவா? இங்கே மவோரிங்க செதுக்கற மரச் சிற்பங்கள்.இதுலே இவுங்க கண்ணுக்கான இடத்துலே, மொறைச்சுப் பாக்கற பெரிய பெரிய வட்டக்கண்ணுங்களைப் பாவாசிப்பியாலே செஞ்சு பதிச்சு வச்சிருப்பாங்க.


ஆந்தை மிகவும் அறிவுள்ள பறவைன்றது இவுங்க நம்பிக்கை. இவுங்க மட்டுமா, உலகத்துலே பல இடங்களிலும்அறிவுள்ள ஆந்தை(Wise Owl)ன்ற நம்பிக்கை பரவலா இருக்குதுல்லே!


சமாதானத்துக்கான கடவுள் ரோங்கோ மக்கள் கல்வி கற்பதற்காக ஒரு வீடு/ஹால் கட்டினாராம்.( மவோரி இனத்தின்முதல் பள்ளிக்கூடம்) இது ரொம்பப் புனிதமான இடம். அங்கே எல்லாம் நல்லபடியாக நடக்கணுமுன்னு ஒருஆந்தையைப் பிடிச்சு, கட்டிடத்துக்கு அடியிலே குழிச்சு மூடிட்டாராம். அதோட கண்ணுதான் இப்படி முழிச்சுப் பார்த்துக்கிட்டுஎப்பவும் கவனமா இருக்காம்.


மவோரிப் பாட்டுகள் பாடும் போதும் ஹாக்கா செய்யும்போதும் கண்களை அகலமாவிரிச்சு உருட்டி உருட்டிப்பாக்கறதும் இந்த ஆந்தையை நினைச்சுத்தானாம்.


இந்த ஹாக்கான்னு சொல்றது ஒரு விதமான நடனம். கூடவே கண்ணை உருட்டி எதிராளிக்கு அறைகூவல்விடுவாங்க. இதை நீங்க நியூஸிலாந்து விளையாட்டுவீரர்கள் பங்கேற்குற ரக்பி விளையாட்டுகள் ஆரம்பிக்கறப்பப்பார்த்திருப்பீங்களே.


இன்னிக்கு ஒரு தமிழ் நண்பரைச் சந்தித்தேன். அப்படியே பேசிக்கிட்டு இருக்கும்போது மவோரிகளைப்பத்தி எழுதறதைச் சொன்னேன்.
அப்ப அவர் சொன்னது இந்த மவோரி என்ற பேர் 'மரவுரியுடையோர்'ன்றதுலே இருந்து மரூவி இருக்கலாமுன்னு. கூடவேஇந்தியாவுலெ இருந்து அந்தக் காலத்துலே வந்திருப்பாங்க. ராமாயணகாலத்துலே மரவுரி அணிஞ்சமாதிரி இவுங்களூம்மரவுரி தரிச்சதாலே மவோரின்னு ஆயிடுச்சுன்னு.


இது உண்மையின்னு சொல்ல முடியாது. ஆனால் கேக்கறதுக்கு சுவாரசியமா இருக்குல்லே?


நம்ம ஜனங்களுக்கு இப்படி விளக்கம் சொல்றதுக்குச் சொல்லித்தரணுமா என்ன? இப்படித்தான் அந்த நாளிலேஃபிஜியிலே COUP நடந்துச்சுல்லே. நடத்துனவர் பேர் ரம்பூக்கா. அதையும் நம் மக்கள் இவரோட பேர் 'ராம் நாம் கா பூக்கா'(ராமனின் பெயரின் மேல் கொண்ட அதீதப் பசி)ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க:-))))

ஹே ராம்.......

********************************************************************

Tuesday, November 08, 2005

நியூஸிலாந்து பகுதி 22நியூஸிலாந்து பகுதி 22

மவோரி கதைகள் # 7


வைஆட்டா WAIATA


இது என்ன புதுசாங்கறீங்களா? இதுக்கு அர்த்தம் பாட்டு.இவுங்க வாழ்வுலே நிகழ்ந்த பலநிகழ்ச்சிகளை அப்படியே பாட்டாப் பாடுறது இவுங்க வழக்கம். சில பாட்டுங்க, இவுங்கஜனங்களுக்குள்ளே வேற வேற க்ரூப்புக்கு நடந்த சண்டைங்களையும், சிலது மத்த புகழ்பெற்ற நிகழ்ச்சிகளையும், சிலதுகாதல் சம்பவங்களையும், தாலாட்டு போன்ற பாட்டுக்களையும், சிலது இறந்துபோன முன்னோர்களையும்ன்னு பலவிதமா இருக்கு.


அதேபோல சில இடங்களோட பேர்களும், வானத்திலே இருக்கற சில நட்சத்திரங்கள் பேரையும் அடையாளங்களையும்,சிலது குடும்பப் பெயர்களையும், அந்தக் குடும்பத்துலே வழிவழியா வந்தவங்க பெயர்களையும் கொண்டும் பாடிவச்சிருக்காங்க.இந்தப் பாட்டுக்களைவச்சே ஜனங்களை வாழ்த்தயும் செய்யலாம், பழிக்கவும் செய்யலாமாம். பாட்டுங்களை இயற்றிப்பாடறதுக்குக் காரணமே தேவையில்லை. எதை வேணுமானாலும் பாடலாம்.


ஒரு மனுஷன் மீன் பிடிக்கப்போனப்ப அவனோட தூண்டில் தண்ணியிலே விழுந்து காணாமப் போயிருது. அதுக்கும்ஒரு பாட்டு வந்துருச்சு. அதே மாதிரி, ஒரு பொண்ணு சாப்புட்ட அற்புதமான விருந்து சாப்பாட்டைப் பத்தியும் பாட்டுலேபாடி வச்சுருக்காங்க.இவ்வளவு என்னத்துக்கு? ஒரு மவோரி கிராமத்துலே ஒரு பன்றி இருந்துச்சாம். அந்தக் காலக் கட்டத்துலே இங்கேபன்றி இனமே இல்லையாம். வெள்ளைக்காரகள்தான் முதல்முதலா பன்றிங்களை இங்கே கொண்டுவந்து, இங்கே இருக்கறபொருட்களுக்குப் பண்டமாற்று செய்தாங்க. அப்படிக் கிடைச்ச ஒரு பன்றியை அந்த கிராமமே அதிசயமா நினைச்சுக்காப்பாத்தி வந்திருக்காங்க. அது ஒரு நாள் செத்துப்போச்சு. அதோட அருமை பெருமைகளையும் ஒரு பாட்டாப் புனைந்துபாடி வச்சிருக்காங்க.


எங்கும் பாட்டு, எதிலும் பாட்டு, எதற்கும் பாட்டு.


( எனக்கு என்னமோ தேவையில்லாம நம்ம கொல்லங்குடி கருப்பாயி ஞாபகம் வருதே!)


மேலே இருக்கற படம் 'டயமண்ட் ஹார்பர்'
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday, November 07, 2005

நியூஸிலாந்து பகுதி 21மவோரி கதைகள் # 6


சில பழக்க வழக்கங்கள்.


நாம கைகூப்பி வணக்கம் சொல்றது, வெள்ளைகாரங்க கைகுலுக்கி ஹலோ, ஹை ன்னு சொல்றது போலமவோரிங்க வணக்கம் சொல்றதுக்கு வேற ஒரு ஸ்டைல் இருக்கு. அதுதான் மூக்கோட மூக்கை தொடறது.மூக்கோட நுனிங்க உரசிக்கிறது. அதேசமயம் ரெண்டு பேரோட நெத்தியும் லேசாத் தொடும்.


இதன் பேரு ஹொங்கி. இதுக்கு என்ன அர்த்தமுன்னா இப்படிச் சொல்லலாம்.


உன் மூக்கும் என் மூக்கும் தொட்டுக்கிட்டு இருக்கறப்ப நம்ம ரெண்டு பேரோட மூச்சுக்காத்தும் ஒண்ணாக் கலந்துருது.


உன் நெத்தியும் என் நெத்தியும் ஒண்ணையொண்ணு தொடும்போது நம்ம ரெண்டு பேரோட எண்ணங்களையும்,உணர்வுகளையும் பகிர்ந்துக்கறோம்.


இப்படி இவுங்க மூணுமுறை செய்வாங்க. முதல்தடவை வாழ்த்துச் சொல்றதுக்கு,. ரெண்டாம்தடவை அவுங்க முன்னோர்களைநினைச்சு அவுங்களை மரியாதை செய்யறதுக்கு. மூணாவது தடவை இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும்கவுரவிக்கறதுக்கு.


Te Wero டெ வீரோ அறைகூவல்


உலகத்திலே பல நாடுகளிலே இருக்கற அதிமுக்கிய மனிதர்கள் சிலசமயங்களிலே மற்ற நாடுகளுக்கு விஜயம்செய்றாங்க இல்லையா. அப்படி இங்கே வர்ற வி.ஐ.பி.ங்களை இந்த மாராயி இல்லேன்னா வேற எதாவது ஸ்பெஷல்இடத்துக்குக் கூட்டிட்டுப்போய் காமிப்பங்க. இது மாதிரி சமயங்களில் வந்தவுங்கள வரவேற்க நிறைய நிகழ்ச்சிகள்ஏற்பாடு செய்திருப்பாங்க. எல்லாம் ஒருவிதம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கறதாகவே இருக்கும்.


அதுலே முதலாவதா வர்றது டெ விரோ


விஸிட்டர்கள் எல்லாரும் ஒரு இடத்துலே நிற்கணும். அப்ப ஒரு மவோரி வீரர் பழைய பண்பாட்டின்படி உடைஅணிஞ்சுக்கிட்டுக் கையிலே விரோ (ஈட்டி) மாதிரி ஒரு தடியோடு முன்னுக்கு வருவார். இது எதுக்குன்னா, வந்திருக்கறதுநண்பனா அல்லது பகைவனான்னு பழைய வழக்கப்படித் தெரிஞ்சுக்கறதுக்கு. வந்திருக்கற விஸிட்டர்களோடஸ்டேட்டஸைப் பொறுத்து சிலசமயம் மூணு வீரர்கள் வரை வரலாம்.


பயங்கரமா சத்தம் போட்டுக்கிட்டு, முகத்தைக் கடுமையா வச்சுக்கிட்டு, கையிலே இருக்கற தடியை சுழட்டிக்கிட்டுகண்ணை உருட்டி விழிச்சுக்கிட்டு அவுங்க வி.ஐ.பி முன்னாலெ வருவாங்க. இது ஒருவிதமான எச்சரிக்கை.'நீங்க தீய எண்ணத்தோட இங்கே வந்திருந்தா எங்களைக் காப்பாத்திக்க எங்களுக்குத் தெரியும். நாங்க வீரர்கள்'னுசொல்றது.


இப்படிச் செஞ்சுக்கிட்டே முன்னேவந்து ஒரு செதுக்கிய ' டாகி' மர அம்பு( ச்சின்னதுதான்.) தரையிலே குனிஞ்சு வைப்பாங்க.இது மர அம்பாத்தான் இருக்கணுமுன்னில்லே. ஒரு செடியோட ச்சின்னக் கிளையாகவும் இருக்கலாம். ஒரு கொத்துஇலையாவும் இருக்கலாம்.


இதை வந்திருக்கற விஸிட்டர்களிலே ஒரு ஆண் ( பொண்ணுக்கு இதை எடுக்கற உரிமை இல்லை) அதைக் குனிஞ்சுஎடுத்துக்கணும். வந்திருக்கவுங்க அமைதியை விரும்பி வந்தவுங்கன்னு அர்த்தம். எடுக்காம நின்னா சண்டைக்குவந்திருக்காங்கன்னு அர்த்தம்.


இந்த டெ விரோ எப்படி ஏற்பட்டுச்சுன்னா அதுக்கும் ஒரு கதை இருக்கு.


ஆகாயத்தந்தைக்கும், பூமித்தாய்க்கும் பிறந்த மகன்தான் சண்டைக்கான கடவுள் டுமடாவெங்கா. இவர்தான் போர் வீரர்களைக்காப்பாத்துறவர். இவரைச் சுருக்கமா ( செல்லமா) டு ன்னு சொல்றது. இவருக்கு கூடப்பிறந்த தம்பி, தங்கைகள் எல்லாம்இருக்காங்க. ஒரு சமயம், இவுங்க அப்பா அம்மாவான ஆகாயமும் பூமியும் பிரிஞ்சுடறாங்க. அப்ப இவரோட தம்பிடஹிரிமடெஆ க்கு இது பிடிக்கலை. அவருக்கு அப்பாவும் அம்மாவும் சேர்ந்தே இருக்கணுமுன்னு விருப்பம்.ஆனா டு வுக்கு இது பெரிய விஷயமாப் படலை. அண்ணன் தம்பிக்குள் இதன் காரணமா மனக்கசப்பு வந்து சண்டைஉண்டாயிருது. காத்து, மழை, புயல் எல்லாம் துணைக்கு வர, தம்பி டஹிரிமடெஆ அண்ணன் டு வோட சண்டை போடறார். மத்த தம்பிங்க பிரிஞ்சுபோய் ரெண்டு பேர் பக்கமும் சேர்ந்துக்கறாங்க. டு மாத்திரமே பலசாலின்றதாலே அவர்மட்டும்ஜெயிக்கிறார். மத்த எல்லாத்தம்பிங்களும் சண்டையிலே கொல்லப்பட்டாங்க.


ஆரம்பத்துல டு சண்டையைத் துவக்குனதாலேதான் இப்பவும் இந்த உலகத்துலே ஜனங்க சணடை போட்டுக்கறதுக்கு காரணம்ன்னு இந்த மவோரி மக்கள் நம்புறாங்க.


மவோரியிலே எப்படி வரவேற்கணுமுன்னு தெரிஞ்சுக்கறதுக்குப் படம் போட்டிருக்குப் பாருங்க. இன்னிக்கு சேர்ந்த புது அட்மிஷன்பைய(ர்)ன் சித்தனுக்கு அதே மாதிரி வரவேற்பு கொடுங்க, பார்க்கலாம்:-)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Sunday, November 06, 2005

விருச்சிகப் பிள்ளையார்.
பிள்ளையார் என்னைத்தேடி வீட்டுக்கு வந்திருக்கார். அதுவும் சாதாரணப்பிள்ளையார் இல்லை. விருச்சிகப் பிள்ளையார். அதென்ன ஸ்பெஷல்? இருக்கு. சொல்றேன்.


ஒரு அஞ்சாறு மாசக் குழந்தை தரையிலே உக்கார்ந்திருக்கும்போது கவனிச்சிருக்கீங்களா? ரெண்டு பாதமும்ஒண்ணையொண்ணு தொடறமாதிரி எதிரும் புதிருமா இருக்கும். பெரியவங்களான பின்னே இப்படி உக்கார்றதுபயங்கரக் கஷ்டம். அதே வயசுக் குழந்தை சைஸுலேயும் போஸ்லேயும். இதுக்கு எதாவது பேர் இருக்கும் யோகாஸனத்துலே,இல்லே?.....???? ஆஸனம்.( ஐய்யோ, உக்கார்ந்து பார்த்தா தொடையெல்லாம் வலி(-: முழங்கால் முட்டிகூடத் தரையைத் தொடமாட்டேங்குதே)கைகள் மட்டும் நாலு. சாமி இல்லையா? ரெண்டு கைகளிலும் மோதகம் போல ஒரு உருண்டை.மற்ற ரெண்டுகைகளிலே வழக்கம்போல சில பொருட்கள். கண்ணுங்க ரெண்டுன்னாலும் சாதாரணமா இல்லாம நெத்தியை நோக்கிப் போறமாதிரி வெர்ட்டிக்கலா இருக்கு! கொஞ்சம் மிரட்டற பார்வைதான்!


இப்பத் தும்பிக்கை. இதுவும் வலம்புரிதான். விசேஷமும் இதுலேதான் இருக்கு. அச்சு அசலா ஒரு தேள் வலப்பக்கம்வாலைச் சுருட்டிக்கிட்டு தும்பிக்கையா இருக்கு. அதோட கால்கை எல்லாம் அப்படியே முகத்திலே ரெண்டு கன்னத்துலேயும்படர்ந்திருக்கு.பின்னெழிலும் ஜோர்தான். பஞ்சக்கச்சம் செருகியிருக்கரதும், பூணூல் தோள் வழியாச் சரிஞ்சு முதுகுலே படர்ந்துவர்றதும், கட்டியிருக்கும் வேஷ்டியின் டிஸைனும் கூட அட்டகாசம்.( ச்சீனாக்காரன் கில்லாடிப்பா!)இங்கே ஒரு கடையில் கிடைச்சதுன்னு மகள் வாங்கிவந்தாள், எனக்குத் தீபாவளிப் பரிசாக. ச்சீனாக்காரகள் செஞ்சது.ஹேண்ட்மேட்னு எழுதியிருக்கு. பாக்கறதுக்குக்(!) கற்சிலை. ஆனா நல்ல டெர்ரக்கோட்டா நிறம் உள்புறத்துலே.
கொஞ்சம் வித்தியாசமான பிள்ளையார்தான். பேர் வச்சதுமட்டும்தான் நான். பேர் வைக்கறதுலே நான் பெரிய ஆள்னு கோபால்எப்பவும் சொல்வார். இல்லையா பின்னே?


இங்கே எங்க ஊர்லே கடற்கரையிலே நான் 'கண்டு பிடிச்ச' பிள்ளையாருக்கு பேர் என்ன தெரியுமா?


பேவாட்ச் (BAYWATCH)பிள்ளையார்.


ரெண்டுவாரமா தீபாவளி, ரமலான்னு பண்டிகைக் காலமாப் போயிருச்சு.
இப்பப் பாருங்க நம்ம சரித்திரவகுப்பு அப்படியே நிக்குதுல்லே?

விளையாட்டையெல்லாம் மூட்டை கட்டிவச்சிட்டு, நாளைமுதல் வகுப்புக்கு ஒழுங்கா வந்துசேருங்க எல்லாரும்.