மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் எழுந்து நின்னு விஸ்வரூபம் காண்பிக்கும் ராஜகோபுரத்தைக் கண்ணால் கண்டதும் மனசில் பரவசம் உண்டானெதென்னமோ நிஜம். எத்தனை முறை பார்த்தாலும் இதே உணர்வுதான்!
காளிமுத்துவுக்குச் சொல்லணும் னு நினைச்சுக்கிட்டே ரெங்கவிலாச மண்டபத்துக்குள் நுழைஞ்சதும் கண்ணில் பட்டார் அவர்! கேமெராச் சீட்டு ஒன்னு வாங்கிக்கிட்டோம். முதல் ப்ரகாரத்துலே இருந்து ஆரம்பிக்கலாமென்பது போல கார்த்திகை கோபுரவாசலுக்குள்ளே நுழைஞ்சவரைப் பின் தொடர்ந்தோம். கருடமண்டபத்தையும் தேவராஜன் குறடு ரெண்டு பக்கமும் இருக்கும் ஆழ்வார்கள் சந்நிதிகளை கிளிக்கிக்கிட்டே நானும் போறேன். பொதுவாக எல்லா கைடுகளும் செய்வதைப்போலவே காளிமுத்துவும் நம்ம கோபாலிடம் கோவில்கதைகளைச் சொல்லிக்கிட்டே போறார். நம்மவரும் அந்தக்காதில் வாங்கி அதே காதில் வெளியேற்றிட்டு அவர் சொல்வதைக் கேட்டு(!!!) தலையை மட்டும் ஆட்டிக்கிட்டே போறார். படம் எடுக்க ஒரு ரெண்டு விநாடி பின் தங்க வேண்டியிருக்கே!
(புதிய வாசகர்களுக்கு: இடப்பக்கம், நம்ம கோபால்!)
ஒவ்வொரு வாசலாக் கடந்து முன்நோக்கிப்போகும்போது மேளச்சத்தம் கேட்டதும் காலை வீசிப்போட்டு உள்ளே ஓடினோம். புறப்பாடு! ராஜமகேந்திரன் திருவீதியில் (கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரம்) நல்ல கூட்டம். இடது புறம் இருக்கும் திண்ணை அமைப்புலே ஏறிப்போனவரைத் தொடர்ந்தோம். மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் குடும்பத்துடன் இருக்கும் கண்ணாடிப்பெட்டி ஓரமா இருக்கும் கம்பியழி கிட்டே கிடைச்ச இடத்தில் நிக்கறோம். இங்கேயும் ஜனநெருக்கடிதான்.
கீழே ஒரு ஆறேழடி தாழ்வா இருக்குமிடத்தில் மனிதத் தலைகள். எதிரில் சந்தனு மண்டபம் வழியா நம்பெருமாள் தங்கக்குடை பிடிச்சு ஊர்வலம் வரத் தயாரா நிக்கறார். கெட்டிமேளம் கொட்டியதும் விநோதமான தலைப்பாகை அணிஞ்ச ஒருத்தர் (அரையர்?) படியேறிப்போய் பெருமாள் முன் நிற்க, ஏதோ சம்ப்ரதாயம் நடக்க, படியை மறிச்சிருந்த தண்டம் விலகுனதும் மேளச்சத்தம் ஜோராய் ஒலிக்க, ரங்கா ரங்கான்னு மக்கள் கூட்டம் அழைக்க அழகா இறங்கி வர்றார் அழகிய மணவாளர்,எம்பெருமாள் . எல்லாம் நம்ம கண்ணுக்கு முன்னால். நல்ல சமயத்துக்கு வந்து சேர்ந்துட்டோமுன்னு மனசு விம்முது!
தினம் தினம் புறப்பாடுதான். இவனுக்கு(ம்) காலில்சக்கரம். ஊர்சுத்தக் கிளம்பக் காரணமே வேணாம். அதிலும் இன்னிக்கு ஏகாதசி, வாமன ஜயந்தி(யாம்) கேக்கணுமா? தாயாருக்குப் 'படி தாண்டாப் பத்தினி'ன்னு பெருமையா ஒரு பட்டத்தைக் கொடுத்துட்டு ஹாய்யா இவன் மட்டும் சுத்தலாம். பெண்ணுரிமைன்னு போர்க்கொடி உசத்திச் சண்டைபோட அவளுக்கும் தெரியலை பாருங்க:(
புறப்பாடுகளில் ஒன்னு:-)
அடுத்த வீடியோ. இதுவும் கோவில் தேவஸ்தானமே அவுங்க வெப்ஸைட்லே போட்டது. வைகுண்ட ஏகாதசி சமயம்நடந்த புறப்பாடு. நாம் பார்த்தது இது இல்லை என்றாலும் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கட்டுமேன்னு இங்கே சேர்த்துருக்கேன்.ஏறத்தாழ இப்படித்தான் இருந்துச்சு. இந்தக் கோவில் வெப்ஸைட்லே ஏராளமான புறப்பாடுகள் கொட்டிக்கிடக்கு. ஆர்வம் இருப்பவர்கள் பார்த்து மகிழலாம்.
அழைக்கின்றான் அரங்கன் (விஜய் டிவி) தொடர் முந்திபார்த்துக்கிட்டு இருக்கும்போது ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் சொல்வார் குறைஞ்சதுஒரு வருசம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பாடுகள் உற்சவங்கள் எல்லாம் பார்க்கணும்னு. நமக்கும் ஆசைதான். அதிர்ஷ்டம் வேணாமா? வேலையில் இருந்து ஓய்வு கிடைச்சதும் போய் ஒரு வருசம் இருக்கலாமுன்னு எப்ப வும் நச்சரிப்பேன். காலப்போக்கில் அது ஆறு மாசம், மூணு மாசமுன்னு போய் குறைஞ்சது ஒரு மாசம் பூராவும் இருக்கணுமுன்னு இறங்கி இருக்கு. 16 மணி நேரப் பவர்கட்டை நீ தாக்குப் பிடிக்கமாட்டேன்னுவார். உண்மைதான். சரி ஒரு பத்து நாள் போய் இருக்கலாமுன்னு இப்போதைய நினைப்பு. திருச்சியில் தங்கலாம். ஸ்ரீ ரங்கத்துலே நல்ல ஹொட்டேல் இல்லைன்னு சாதிக்கிறார்.
எனக்கு திருச்சி வேணாம். கோவிலாண்டையே தங்கணும். நினைச்சா ஓடிப்போய் கோவிலுக்குள் நிக்கணும். அதிகாலை இருள்பிரியா நேரத்தில் கோபுரங்களை தரிசிக்கணும். சூரியனுடைய கதிர்கள் மெள்ள மெள்ள கோபுரத்தில் படர்வதைக் கண்டு பரவசமாகணும். தங்க விமானம் புலர்காலைப்பொழுதில் எப்படி இருக்குன்னு பார்க்கணும் இப்படி ஏராளமான ஆசைகள். நல்ல தங்குமிடங்கள் இருந்தால் தெரிஞ்சவுங்க சொன்னால் கோடி புண்ணியம்.
நம்பெருமாள் கிளம்பிப்போவதை வடமேற்கில் இருக்கும் பெரிய நிலைக்கண்ணாடியில் பார்க்கும் வசதி உண்டு. பெருமாள் பின்னாடி முக்கால்வாசிக்கூட்டம் போனதும் மூலவரைப் போய் சேவிக்கலாமான்னு ஒரு ஆசை வந்தது. அங்கே ஏற்கெனவே ஒரு பெரிய வரிசை தரிசனத்துக்குக் காத்திருக்கு. தரிசனம் செய்யணுமான்னு கேட்டார் கே எம்(நம்ம காளிமுத்துதான். இனிமேப்பட்டு கே எம். ஓக்கேவா?) வேணாம், நேத்து ஆச்சுன்னோம்.
நாம் நிற்கும் திண்ணையில் ஒரு பக்கம் பூட்டிய கதவுகளா இருக்கு பாருங்க.கருவூலங்கள். பெருமாளின் நகை நட்டு, கவசங்கள், தங்க வெள்ளி பண்டபாத்திரங்கள் இப்படி உள்ளே வச்சுருக்காங்க. என்னைக்கு, எந்த நேரத்துக்கு என்ன அலங்காரம்., அதுக்குத் தேவையான நகைகள் என்னென்னன்னு வளக்கமான அட்டவணை இருக்காம். அததுக்கு அதது எப்போ வெளியே போகுது, எப்பத் திரும்பிக்கொண்டு வந்து ஒப்படைக்கிறாங்கன்னு எல்லாம் கணக்காக் கவனிக்க தனி அதிகாரி இருக்கார். முத்திரை போட்டு அனுப்பி முத்திரை வச்சு வாங்கணுமாம்.
கொஞ்சம் தள்ளி வடக்குப்பக்கம் இருக்கும் அறைகள் பெருமாளின் ப்ரைவேட் ரூம்ஸ். திருமஞ்சனத்துக்கு வெந்நீர் வைக்க ( முந்தி நம்ம வீடுகளில் பாய்லர் வச்ச வெந்நீருள் ஞாபகம் வருதே! ), தோய்ச்ச துணி உலர்த்த , சந்தனம் அரைக்க, வெள்ளிக்கிழமைகளில் மூலவருக்கு புனுகு சார்த்தவும், கஸ்தூரி திருமண்காப்பு தயாரிப்புகளுக்கும் அரைச்ச சந்தனத்துக்கு வாசனை திரவியம் சேர்க்கவுமுன்னு தனியா சுக்ரவார அறைன்ற பெயரில் ஒன்னு. பெரும் ஆளுக்கு எததனையெல்லாமும் வேண்டி இருக்கு, பாருங்க.
கோவில் கணக்குகளில் சோழ மன்னர் முதலாம் பராந்தகன் (கி பி 907 )பெருமாளுக்கு ஒரு வெள்ளிக்குத்துவிளக்கு காணிக்கையாத் தந்துருக்கார்னு கோவில் கல்வெட்டு சொல்லுது. அந்த விளக்கு நிலயான முறையில் ஏத்தி வைக்கத் தேவையான கற்பூரம், பஞ்சுத்திரி, எண்ணெய் எல்லாம் ஏற்பாடாக்க 51 பொற்காசுகளும் வழங்கி இருக்கார். ரொம்பச் சரி. நியாயமானவர். அந்தக்காலத்தில் யாரையாவது அழிக்கணுமுன்னா அரசர் யானையை மட்டும் தானம் பண்ணிடுவாராம். ராஜா கொடுத்த யானையை காப்பாத்துவதுதானே முறை? அதுலேயே எல்லா செல்வங்களும் கரைஞ்சு நடுத்தெருவுக்கு வந்துருவானாம் தானம் வாங்கியவன். இது எங்க பாட்டி சொல்லிய ஏராளமான கதைகளில் ஒன்னு:-)
ஏழாம் எட்வர்ட் மன்னர் ரங்கனுக்கு ஒரு தங்கப் பாத்திரம் 1875 இல் கொடுத்திருக்கார். இதுக்கு மெயிண்டனன்ஸ் ஒன்னும் தேவை இல்லை:-))))
யானைன்னதும் இன்னொரு கதை நினைவுக்கு வருது.
பாண்டியர்களும் சோழர்களும் விஜயநகரப்பேரரசின் மன்னர்களும் நாயக்கர் கால அரசர்களும் கோவிலுக்குக் கொடுத்த நன்கொடைகளும், செய்த திருப்பணிகளும் கணக்கில் அடங்காதவை! செல்வச்செழிப்பு கண்டு பொறுக்கமாட்டாமல்தான் தில்லி அரசர்கள் கொள்ளையடிக்க வந்துருக்காங்க.
அதிலும் பாண்டிய மன்னர் முதலாம் சடைவர்ம சுந்தரபாண்டியன் (கிபி 1251-1268) கோவிலையே பொன்மயமாக்கினார்னு கல்வெட்டுகள் சொல்லுது. திருவரங்கன் சந்நிதி, விஷ்வக்ஸேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளின்னு கட்டிக்கொடுத்ததுமில்லாம, கருட வாகனம், பிரபை, பீடம், மகர தோரணம்,ஆதிசேஷன் திருவுருவம் இப்படி எல்லாத்தையும் பொன்னால் செஞ்சு கொடுத்தாராம்.
முத்துவிதானம், முத்தங்கி, மரகத மாலை, பட்டாடை, பொற்றேர் , கிரீடம் என்றெல்லாம் கணக்கு வழக்கே இல்லாமல் வாரிக்கொடுத்துருக்கார்! முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம் பெருமாள் இருக்காரே.... அதுகூட இவர்தான் கொடுத்துருப்பார்,போல!
மேலும் தன்னுடைய யானையுடன் ஒரு படகில் ஏறி, அதற்குப் பக்கத்தில் இன்னொரு படகை நிறுத்தி ரெண்டும் சரிசமமான நீர்மட்டத்துக்கு வரும்வரை பொன்னாலும் மணிகளாலும் நிரப்பி எடைக்கு எடை கோவில்கருவூலத்தில் சேர்த்தாராம். தலவரலாறு நூல் இவரைப் போற்றிப் புகழ்கிறது. ஒடிஸா நாட்டு மன்னரை போரில் வெற்றி கொண்டு அங்கே இருந்து கொண்டு வந்தவையாம் இத்தனை பொன்னும்! சிதம்பரம் கோவில் கனகசபைக்கு பொன்னோடு வேய்ந்து பொன்வேய்ந்த பாண்டியன் என்ற பெயர் அடைந்தவரும் இவரே!
திருவரங்கம் திருக்கோவில் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை போட்டிருக்கும் புத்தகத்தில் இருந்து கிடைத்த விவரங்கள் இவை. ஒரே ஒரு குறை சடையவர்மனை, சடா வர்மனாக்கி இருக்காங்க:(
கொடுத்த லிஸ்ட்டைப் படிச்சபோதும் சரி, இப்போ தட்டச்சு செஞ்சபோதும் சரி மூச்சு வாங்குது ! இவ்வளவா!!! இவ்வளவா!!!!!
பிகு: குலசேகரன் திருவீதி நுழைஞ்சதும் படம் எடுக்கத்தடைன்னு கே எம். சொல்லிட்டார்:( சில படங்களை சுட்டேன். சுட அனுமதி கொடுத்தவர்களுக்கு என் நன்றிகள்.