Wednesday, April 29, 2015

கிருஷ்ணனின் பூஜையில் லக்ஷ்மணன் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 45)

வழக்கம்போல் எழுந்து மெயில் பார்த்து, குளிச்சுக் கிளம்பி காலை ஆகாரத்துக்குக் கீழே போனோம்.  அறைவாடகையில் இது சேர்த்தி. பஃபேதான். உள்நாடு வெளிநாடுன்னு ரெண்டு வகைகளையும் வச்சுருந்தாங்க.  இட்லி வச்சுருந்த இட்லிப்பாத்திரம் எனக்கு ரொம்பப்பிடிச்சது.
எத்தனை வகை இருந்தால்தான் என்ன? நமக்கு வழக்கமான இட்லி வடைதான்:-) சாப்பிட்டு முடிச்சு, ஒரு கோவிலுக்குப் போறோம்.  நமது பட்டியலில்  இந்தப் பகுதியில் தரிசிக்க வேண்டிய கோவில் இப்ப இது ஒன்னுதான்.

  அட!  பாயஸம் இருக்கே! காலங்கார்த்தாலை வேணாம்,போ........


திருமூழிக்களம். ஸ்ரீ லக்ஷ்மணப்பெருமாள் மஹாக்ஷேத்ரம்.  108 திவ்ய  தரிசனக்கோவில்களில்  ஒன்னு. ஏர்லிங்க் ஹொட்டேல் பணியாளரிடம்  வழி கேட்டோம்.  அங்கமாலி  வருமுன் ஒரு சர்ச் இருக்கும். அதுலே லெஃப்ட் எடுத்துப்போனால் அத்தானி, மெலக்காடு, எலாவூர் ரோடு. அதிலேயே போனால்  கோவில் வந்துரும்.  ஏகதேசம் ஒரு எட்டுகிலோ மீட்டர் என்றார்.

 ஐயோ.... எந்த சர்ச்?  வழியெல்லாம் சர்ச்சுகள்தானே?  செயிண்ட் ஜோஸஃப்னு உண்டாகும் என்றார். லக்ஷ்மணப்பெருமாள் என்னு சோதிச்சால்  மதி.

பெருமாள் மேலேயே பாரத்தைப்போட்டுட்டுக் கிளம்பிட்டோம். செங்கமநாடு பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் வரை சரியா வந்தபின்  திருப்பத்துலே  ரைட் எடுக்காம கொஞ்சம் தூரம் போனபின்,  எட்டுகிமீக்கு மேலேயே  ஆச்சேன்னு  வழியில் இருந்த ஒருவரிடம் கேட்டு சரியான வழி பிடிச்சுக் கோவிலுக்கு வந்து சேர்ந்துட்டோம். திருமூழிக்களம்  ஸ்ரீ லக்ஷ்மணப்பெருமாள் க்ஷேத்ரம் என்ற அலங்கார வளைவின் முகப்பில்  நடுவிலே ராமலக்ஷ்மணர்கள் சீதையுடன். ரெண்டு பக்கமும் புள்ளையாரும், ஐயப்பனும்.


சட்னுபார்க்கத்  திண்ணைகள் வச்ச சாதாரண வீடு போலத்தான் கோவில்முகப்பு இருக்கு.  ஆனால் உள்ளே  ரொம்பவே பெருசுதான்.  திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு,   அவுங்க ஆட்சியின் கீழ் உள்ள எல்லாக் கோவில்களுக்கும்  ஒரே டிஸைனில்  தரையில் டைல்ஸ் பதிச்சுருக்காங்க.

 மேலும்  வட்டக் கருவறைகள்,  முன்மண்டபங்கள், திண்ணைகள்,  உம்மரம் எல்லாம்  ஒன்னுபோலவே இருப்பதாலும்  கோவில் கட்டிடத்தைப் பார்க்கும்போது வரம் பரவசம் மிஸ்ஸிங்.  கொஞ்சூண்டு  போரடிக்குதுன்னும் சொல்லலாம்.    ஆனால் 108 தரிசிக்கணும் என்ற ஆவல்தான் என்னை இழுக்குது.  நல்லவேளை....  பெருமாளுக்கு வெவ்வேற பெயர்களும் கதைகளும் இருப்பதால் கொஞ்சம் சுவாரசியம்  ஒட்டிக்கிட்டு இருக்கு.


இங்கேயும் துலாபார வழிபாடு விசேஷம்.  கோவிலுக்குள் நுழைஞ்சவுடன் பெரிய தூண்களுடன் இருக்கும் மண்டபத்தில் தராசு வச்சுருக்காங்க.  அதுக்குப் பக்கத்தில் ஒரு   ஏழடுக்கு தீபம். வெண்கலம்.  ஆனால் காலப்போக்கில் களிம்பேறிக்கிடக்கு. அதுலே உச்சியில் இருக்கும் பெரிய திருவடி அட்டகாஸம்!  அந்த மூக்கு ஒன்னே போதும்!  ஹைய்யோ!  அதைப்போல ஒன்னு கிடைச்சால்....   கிடைச்சால்?  எனக்கு அதிர்ஷ்டம்தான்!  என்ன மூக்குமா!

அதுக்கப்பால் கொடிமரம், பலிபீடம் அதைக்கடந்தால் கோவில்  உள்ப்ரகாரம்போகும் நடை!

இந்தப்பக்கம் இதுவரை நாம் பார்த்து தரிசிச்ச கோவில்கள் எல்லாம் கிருஷ்ணாவதார காலம் என்றால் இந்தக் கோவில் அதுக்கும் முந்தின ராமாயணகாலத்துக்குக் கொண்டு போயிருது!


ராமனை காட்டுக்கு அனுப்பியாச்சு.  மகனுக்குப் பட்டம் கட்டப்போறாங்கன்னு மனசு நிறைய மகிழ்ச்சியா இருக்காள்  கைகேயி.  மகிழ்ச்சியை முழுசுமாக் காமிச்சுக்க முடியாத நிலை. ஒரு பக்கம்  கணவர் இறந்து போயிருக்காரே:(  தாத்தா  வீட்டுக்குப்போயிருந்த  பரதன் அவசரச் சேதின்னு  தகவல் வந்ததும்  அவசரமா அயோத்திக்குத் திரும்பறான். வந்ததும்தான்    தாய் செஞ்ச களேபரம் புரியுது.

தகப்பனுக்குரிய ஈமக்கடன்களைச் செஞ்சு முடிக்கிறான்.  மகன் பட்டம் கட்டி அரசாளப்போகிறான் என்று கனவு கண்ட கைகேயியின் தலையில் இடி விழுந்தாப்போல.....  ' இப்பவே போய் அண்ணனைக் கூட்டி வந்து அவரையே பட்டம் சூட்டிக்கச் செய்யறேன் பார்'ன்னு ராமனைத்தேடி காட்டுக்குப் போறான் பரதன்.

அரசமரியாதையுடன்  ராமனைக்கூட்டி வரணும்  என்று பெரும்படையுடன்  வந்த பரதனை, தூரக்கே இருந்து பார்த்த லக்ஷ்மணன்,  ராமனுடன் போர் புரிய வந்துருக்கான் இவனென்று தவறுதலா நினைச்சுக்கிட்டு,  பரதனை இப்பவே கொல்லப்போறேன்னு கிளம்பறான்.  அண்ணன் ராமன் விடுவானோ?  அப்படியெல்லாம் இருக்காதுன்னு  சமாதானப்படுத்தறான்.  உண்மையில் அப்படித்தான் இல்லையாக்கும்.

ராமாயணமுன்னு ஒரு சொல் சொன்னதுக்கே கதை எப்படி நீண்டுபோகுது பாருங்க:-)

14 வருஷம் முடிஞ்சு  ராமலக்ஷ்மணர்கள்  அயோத்யா திரும்பி ராமர் பட்டாபிஷேகம் எல்லாம் நடந்து நல்லாட்சி செய்யும்போது, பரதனை இப்படித் தப்பா நினைச்சுட்டோமேன்னு மனம் வருந்திய லக்ஷ்மணன்,  திருமூழிக்களம் என்ற பெயரில் இப்ப இருக்கும் இந்த க்ஷேத்ரத்துக்கு  வந்து  பெருமாளை சேவித்து மன்னிப்பு கேட்டான்.  ப்ராயச்சித்தமா  கோவிலை நல்லா கட்டிக் கொடுத்துருக்கான். அப்போதிருந்து  இங்கே மூலவருக்கு லக்ஷ்மணப்பெருமாள் என்ற பெயர் வந்தது.

அதே சமயம் பரதன் இங்கே வருகை தந்து லக்ஷ்மணனைத் தழுவி அன்புமொழிகள் பேசினார்.  அவர்  ராமாவதாரத்தில்  சங்கு (பாஞ்சஜன்யம்)  அம்சம் என்பதால் ,   அவர் நினைவாக  இங்குள்ள தீர்த்தம்  சங்கு தீர்த்தம் என்ற பெயரை க் கொண்டிருக்கு.  (லக்ஷ்மணன்  ஆதிசேஷனின் அம்சம்)

மூலவருக்கு  திருமூழிக்களத்தான்  என்ற பெயரும் உண்டு.  ஆனால் லக்ஷ்மணப்பெருமாள் என்னும் பெயரே எல்லோருக்கும் தெரிஞ்சுருக்கு.   தாயார் பெயர்   மதுரவேணி நாச்சியார்.  தாயாருக்குத் தனி சந்நிதி கிடையாது.  பெருமாள் திருமார்பில் இருக்கிறாள் என்றே நினைச்சுக்கணும்.

 வட்டக்கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்குநோக்கி ஸேவை சாதிக்கிறார்.  நான்கு கைகள். சங்கு சக்கரம் கதை தாமரைப்பூ!  பூ இருக்கும் கை இடுப்பில் இருக்கு!

ஒரு சமயம் ஹரித மகரிஷிக்கு இங்கே தரிசனம் கொடுத்த பெருமாளிடம், மக்கள்  அனைவரும்  உன்னிடம் வந்து சேர எளிய வழியைச் சொல்லணுமுன்னு  விண்ணப்பிக்க, அவர்  ஸ்ரீ ஸூக்தியை என்னும் திருமொழியை  வழங்கினாராம்.  அதான் ஊருக்கு திருமொழிக்களம் என்று பெயர் வந்து அது காலப்போக்கில் திருமூழிக்களமா ஆகிக்கிடக்கு.

ஆழ்வார்கள்  வந்து பாடி மங்களசாஸனம் செய்த  108 திவ்ய தேசக்கோவில்களில்  இதுவும் ஒன்னு.  நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும்  வந்து தரிசனம் செஞ்சு  மங்களசாஸனம் செஞ்சுருக்காங்க.

கோவில் காலை 5 முதல் 11 வரையும், மாலை   5 முதல் எட்டுவரையும் திறந்துருக்கும்.  இங்கெல்லாம் இதுவரை கவனிச்சதில் மாலை கோவில்திறக்கும் நேரம் அநேகமா அஞ்சு முதல் எட்டு. காலை நேரம்தான்  கோவிலுக்குக்  கோவில் மாறுபட்டு இருக்கு. பயணம் போகுமுன் பார்த்து வச்சுக்கிட்டால் நல்லது.

த்வாபர யுகத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன்,பூஜித்து வந்த  ராமர் அண்ட் ப்ரதர்ஸ்  சிலைகள்  , த்வாரகையைக் கடல்கொண்டபோது நீரில் முழுகிப்போனது,  பின்னொரு காலத்தில் வாக்கேல் கைமல் என்ற மகரிஷிக்குக் கிடைத்தன.  தனக்குக்கிடைச்ச பாக்கியத்தை நினைச்சுக்கிட்டே  அன்றைக்கு  இரவு தூங்கும்போது கனவில் வந்த  பெருமாள், இந்தச் சிலைகளை பாரதப்புழாவின் கரையில்  பிரதிஷ்டை செய்யும்படிச் சொல்லி இருக்கார்.

சரின்னு கொண்டு போன மகரிஷி,  ஒரு இடத்தில்  அவைகளைச்சேர்த்து வைக்காமல்  நாலு சிலைகளையும் நாலு இடத்தில் பிரதிஷ்டை செய்துட்டார்.  ஒன்னு சொன்னா  நாலாச் செய்யறவர் போல! த்ருப்பறையாரில் ஸ்ரீ ராமன்,   திருமூழிக்களத்தில்  லக்ஷ்மணன், இரிஞ்ஞாலகுடாவில் கூடல்மாணிக்யம் கோவில் பரதன்,  பயம்மல் (Payammal ) என்ற ஊரில்  சத்ருக்னன்  என்ற இந்த நான்கு கோவில்களைத்தான் நாலம்பலம் என்று  சொல்றாங்க.  இன்னும்  யாரும் ஆரம்பிக்கலை போல..... இந்த நாலு கோவிலையும் ஒரே நாளில் தரிசனம் செஞ்சா இன்னின்னது கிட்டும் என்று.

நாம் வேணுமானால் ஆரம்பிச்சு வைக்கலாம்.  மூழிக்களம்  லக்ஷ்மணப்பெருமாள் கோவிலில் இருந்து கிளம்பினால் 27.7 கிமீ  சத்ருக்னன்  கோவில், அங்கிருந்து  ஒரு 6 கிமீ பரதன்,   பின்னே த்ருப்பறையார்  ஸ்ரீராமன் ஒரு 15.3 கிமீ.  ஆக மொத்தம்  49  கிமீதான்.  தமிழ்நாட்டுலே கோவையில் ஆரம்பிச்சு வச்சாப்போதும். பக்தர்களை திரிஸ்ஸுர்   கொண்டு வந்து நாலம்பலம் வழிபாடு கொண்டுபோய் தரிசனம் செய்ய வச்சுட்டு நேரா குருவாயூர்கொண்டுபோய் அங்கே  நைட் ஹால்ட். காலையில்  க்ருஷ்ணனை ஸேவிச்சுக்கிட்டு மதியம் கிளம்பினால் நேரா கோவை!  ப்ளான் நல்லா  வொர்க்கவுட் ஆகுமுன்னு நினைக்கிறேன்.  அதுக்குமுன்னே நாம் செய்ய வேண்டியது ஒரு ஏழெட்டு டெஸ்ட்டிமனி செட் செஞ்சுக்கணும். பிரபலமான(!)  ஒரு ஜோஸியரோ, இல்லை ஸ்வாமிகளோ  நாலம்பலம் ஒரே நாளில் தரிசனம் செஞ்சா  பலன்கள் இதிதுன்னு  சொல்லணும்.  பிரச்சனை இல்லை.சொல்லுவாங்க.

இல்லைன்னா பேசாம நாம் ஆரம்பிக்கப்போகும் ஆஸ்ரமத்தில்,  துளஸியானந்தமயா  சொல்வாங்க பாருங்களேன்!


ஒரு முக்கால்மணிக்கூறில் தரிசனம் நல்லபடியா நமக்குக் கிடைச்சது. ஏகாந்த தரிசனம்தான், இங்கேயும்!  காலை நேரப்பூஜைகள் முடிஞ்சு  பெருமாளும் பட்டரும் விஸ்ராந்தியா இருந்தாங்க.   மற்ற கோவில்களில்  பூஜை நேரத்துலே  வாத்தியங்கள் முக்கியமா இடைக்கா  வாசிப்பதைப்போல்  இங்கே இல்லையாம்.  ஸ்வாமிக்கு சப்தம் வேணாமுன்னு இருக்கு போல!  சைலன்ஸ் ப்ளீஸ்.......

வெளிப்ரகாரம் சுத்தும்போது நமக்கு வலது  பக்கம் வரும் கோவில்  சுவரில்(!)  மரச்சட்டங்களில்  கேரளத்துக்கே உரிய பித்தளை அகல்கள்.   கூரையும் சுவரும் தொடும் இடத்தில் இருக்கும் யாழிகள்தான்  வேறமாதிரி ! அசப்பில் வரிக்குதிரை:-)

அலங்காரவளைவின் அருகில் ஒருகடையில் பழுத்த நேந்திரம்.  இதுவரை  இங்கே  சாப்பிடலையே. அப்புறம் கேரளம் வந்து என்ன பயன்? மூணு பழங்களை வாங்கி  ஆளுக்கொன்னா உள்ளே தள்ளிட்டுக் கிளம்பி  ஆலுவா அறைக்கு வந்தோம். இப்போ சரியான வழி தெரிஞ்சுட்டதால்  பதினைஞ்சே நிமிசம்தான் ஆச்சு.

நம்மைப் பார்த்தவுடன்  ஏர்லிங் பணியாளர்  விஜய் , ஓடிவந்து  அம்பலம் கிட்டியோன்னார்.  நல்லோணம் கிட்டின்னு சொல்லிட்டு  அடுத்த  ஊருக்குப்போக மூட்டையைக் கட்டுனோம். சரியா பத்துமணி!  அபிமன்யூவும்   வரவேற்பினருகில் இருந்தார். அஞ்சு நிமிசப்பேச்சோடு  முடிச்சுக்கிட்டோம். இந்த  இடுகைகளின்  லிங்கை அவருக்கு அனுப்பணும். அனுப்பறேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன்:-)


தொடரும்..........:-)Monday, April 27, 2015

ஓணம் ஆரம்பிச்சது இங்கே இருந்துதானாக்கும், கேட்டோ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 44)

எளிய மனிதர்களுக்குள் எத்தனை அன்புன்னு  மாய்ஞ்சு மாய்ஞ்சு பேசிக்கிட்டே  திரும்பி  ஆலுவா  ஹொட்டேலுக்கு வர்றோம். 31 கிலோ மீட்டர் கடந்ததும் தெரியலை. அறைக்குப்போய்  கொஞ்சம் ஃப்ரெஷப் செஞ்சுக்கிட்டு  இதோ காக்கரையப்பனைக் காணான்  புறப்பட்டு. காலையில் வரும்போது பார்த்து வச்சுக்கிட்ட இடம்தானேன்னு கொஞ்சம் மெத்தனம். குள்ளர் ஒரு போடு போட்டார் நம்ம அகம்பாவத்தில்!

வழியைத் தவறவிட்டு ஒரு சுத்து சுத்தினதும்  அட  இந்தக் கட்டிடத்தைப் பார்த்த நினைவு இருக்கேன்னு  சீனிவாசனைக் கொஞ்சம் மெதுவாப் போகச் சொன்னேன். ஆ.....  கிடைச்சுடுத்து! இதையொட்டியே இருக்கு கோவில் வளாகம். கொஞ்ச தூரம் போய் இடது பக்கம் திரும்பிக்கணும்.
திருவோணம் ஓடிட்டோரியத்தைத் தொட்டடுத்தா ஈ க்ஷேத்ரம்!

தெருவுக்கு ரொம்பவே கீழே இருக்கு. அதான் நேர்ப்பார்வையில்  கண்களில் படலை!  படிகளிறங்கிப் போறோம். வளாகம் ரொம்பவே பெரூசு. கீழே கோவில் வாசலுக்கருகில் வண்டி ஒன்னு நிக்குது.  அப்ப  கார் உள்ளே வர ஒரு பாதை இருக்கணும்தான்.  சீனிவாசன் கண்டுபிடிச்சு நிறுத்திட்டு வருவார்தானே?திட்டிவாசல் போல் ஒரு சின்னக் கதவு.  கொடிமரத்தின் உச்சி கண்ணில் பட்டது. கடந்தால்  காம்பவுண்டு சுவருக்குள் அங்கங்கே  சந்நிதிகள்.  முதலில் அப்பனை தரிசிக்கலாமுன்னு போனோம். கோவில் முகப்பிலேயே  உள்ளே இருப்பது யார்ன்னு தெரிஞ்சு போகுது!  கையில் கிண்டி ஏந்தி நிற்கும்  வாமனர்!  கொடிமரம் கடந்து  முன்னே இருக்கும்  உம்மரத்தினுள்ளில் தகதகன்னு பிரகாசத்தோடு பலிபீடம்(!)கேரளப் பாரம்பர்யம் அனுசரிச்சு  உள்பிரகாரம் போகும் வழியில்  ரெண்டு பக்கங்களும் திண்ணை வச்ச  நடை.  இங்கேயும் வட்டமா இருக்கும் கருவறைதான். ஆனால் சின்ன  சைஸ்.  வாமனரின் அளவுக்கேத்தபடி வச்சுருக்கார்,  கோவிலைக் கட்டிய  பரசுராமர்.

வாமன அவதாரம் நடந்த இடமே இதுதான் என்கிறார்கள்.  உங்களுக்கு மாவேலியைத்தெரியுமோ?

சுருக் என்று சொல்லிப்போகவா....

அந்தக் காலத்துலே மகாபலி ன்னு ஒரு அசுர ராஜா நாட்டை ஆண்டுக்கிட்டு இருந்தார். ரொம்பவே நல்லவர்.அசுரனா இருந்தாக் கெட்டவனாத்தான் இருக்கணுமா என்ன? நாட்டுமக்களைக் கண்போல காத்துவந்தார்.வாரி வழங்குறதுலே அவர் கர்ணனைப் போலவே இருந்தார்.

( அட, இது என்ன? அப்போ கர்ணன் பிறந்திருக்க வழியே இல்லையே? இது நடந்தது கிருஷ்ணாவதாரம் நடக்கறதுக்குக் கனகாலம் முந்தியாச்சே. கொடைன்னதும் கர்ணன்தான் நினைவுக்கு வர்றான். புரிஞ்சுக்கிட்டீங்கெல்லெ) 

அவருடைய பெருமையையும் புகழையும் பார்த்த தேவர்களுக்குப் பொறுக்கலே. மஹா விஷ்ணுகிட்டே போய் போட்டுக் குடுத்தாங்க. 'இப்படி இவர் புகழும், பெருமையும்கூடிக்கிட்டே போகுது. நாளைக்கு அவரே நம்மையெல்லாம் தள்ளிட்டு மூணு லோகத்துக்கும் அதிபதியா வந்துட்டாருன்னா நமக்கெல்லாம் கஷ்டம்'னு! ( சரியான பொறாமை பிடிச்ச கூட்டம்?)

மஹாவிஷ்ணு பார்த்தார், என்ன செய்யலாமுன்னு. அப்ப மகாபலி ஒரு யாகம் செய்யத் தீர்மானிச்சு அதை நடத்திக்கிட்டு இருந்தார். பொதுவா ஒரு யாகம் செஞ்சு முடிச்சவுடனே, அதுலே பங்கேத்து அதை நடத்திவச்ச அந்தணர்களுக்கும்,மற்றபடி யாசகம் பெறவந்தவங்களுக்கும் செல்வங்களை வழங்கறது பதிவு. அதிலும் இவர் வாரிவாரி வழங்கறதுலே மன்னராச்சே! எப்பவும் இல்லை என்ற சொல்லே இவர் வாயிலே இருந்து வராது. இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட மஹாவிஷ்ணு, ஒரு ச்சின்ன அந்தணச் சிறுவனா உருமாறி அங்கே யாகம் நடக்குற இடத்துக்குப் போனார்.

அப்ப கேட்டவங்களுக்கெல்லாம், கேட்டது கேட்டபடி தானம் நடந்துக்கிட்டு இருக்கு. ச்சின்னப்பையன் தானம் வாங்கவந்ததைப் பார்த்த மகாபலிச் சக்ரவர்த்திக்கு சந்தோஷம் தாங்கலே. குழந்தைப் பையன் முகத்துலே ஒரு வசீகரம் இருக்கு.இருக்காதா பின்னே? வந்திருக்கறது யாரு? ஈரேழு பதினான்கு லோகத்துலேயும் செல்வத்துக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியோட கணவனாகிய மஹாவிஷ்ணுவாச்சே!

என்ன வேணுமுன்னு பவ்யமாக் கேட்டாரு ராஜா. ச்சின்ன உருவமான 'வாமனர்' சொன்னார், பெரூசா ஒண்ணும் வேணாம். என் காலடிஅளவுலே ஒரு மூணடி மண் தானம் வேணுமுன்னு. ஆஹா..அப்படியே தந்தேன்னு சந்தோஷமாச் சொன்னார் மகாபலி. அப்ப அவருடைய ஆச்சாரியனான சுக்ராச்சாரியாருக்கு வந்திருக்கறது சாதாரணச் சிறுவன் இல்லேன்னு தெரிஞ்சு போச்சு. 'இது நல்லதுக்கில்லே. வேணாம்'னுராஜாகிட்டேத் தனியாப் பேசித் தடுக்கப் பார்த்தார். ராஜா சொல்லிட்டார், கொடுத்தவாக்கு கொடுத்ததுதான். வந்தவர் விஷ்ணுன்னா எனக்கு இன்னும் சந்தோஷம்தான். எங்க தாத்தாவோட இஷ்ட தெய்வமாச்சே மஹாவிஷ்ணு. அவரே வந்து என்கிட்டே தானம்கேக்கறாருன்னா அதைவிட எனக்கு வேற பாக்கியம் வேணுமா'ன்னு சொல்லிட்டார்.

 ராஜாவோட தாத்தா யாரு தெரியுமா?ஹிரண்யகசிபுவோட மகன் பிரஹலாதன். 'நாராயணா நமஹ' ன்னு எப்பவும் சொல்லிக்கிட்டு இருந்தாரே, அவர். அப்பதான்அவருடைய அப்பாவான ஹிரண்யனைக் கொல்ல மஹாவிஷ்ணு நரசிம்ஹ அவதாரம் எடுத்தது! இப்படி ஒவ்வொண்ணாச் சொல்லிக்கிட்டே போகலாம். இருக்கட்டும், இப்ப நடக்குற விஷயத்துக்கு வாரேன்.

அந்தக் கால வழக்கப்படி தண்ணி ஊத்தக்  கெண்டியைக் கொண்டுவரச் சொன்னார். தானம் வாங்கறவங்க கையிலே, கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு நீங்க கேட்டதைக் கொடுத்தேன்னு சொல்லணும்.  சுக்ராச்சாரியாருக்குப் பொறுக்கலை. அரசனுக்குஆபத்து வருதேன்ற பதைப்புலே என்ன செய்யலாம் இதைத்தடுக்கன்னு யோசிச்சு, ஒரு வண்டு ரூபம் எடுத்து,அந்தக் கெண்டியிலே இருக்கற மூக்கு ஓட்டையை அடைச்சுக்கிட்டு உக்காந்துட்டார்.

ராஜா தண்ணி ஊத்தக் கெண்டியைச் சரிக்கிறார். வாமனர் கையை நீட்டிக்கிட்டு இருக்கார். தண்ணி வரலை. அதான் அடைபட்டுப் போச்சே! அப்ப ஏதோஅடைச்சுக்கிட்டு இருக்குன்னுட்டு, அங்கே யாகம் செஞ்ச இடத்துலே இருந்த தர்ப்பைப்புல் ஒண்ணு எடுத்து அந்த வளைஞ்ச கெண்டிமூக்கு ஓட்டையிலே குத்துறார் ராஜா. அது ஆச்சாரியருடைய கண்ணுலே குத்தி ரத்தமா வருது. திடுக்கிட்டுப் போய் உள்ளெ என்னன்னு பரிசோதிக்கிறாங்க. வெளியே தொப்புன்னு விழுந்த வண்டு பழையபடிஆச்சாரியனா உருமாறிடுது. ஒரு கண்ணுலே ரத்தம் வழியுது.

( அதுக்குத்தான் பெரியவுங்க சொல்றது, யாருக்காவது எதாவது தானம் கொடுக்கறப்ப அதைத் தடை செய்யக்கூடாதுன்னு! நீ கொடுக்கலேன்னாப் போ. அடுத்தவன் கொடுக்குறதை ஏன் தடுக்கறே?)

அப்புறம் வேற கெண்டி கொண்டுவந்து தண்ணி ஊத்தி தானத்தை வழங்கிடறார் மகாபலி. மூணே மூணு அடி!  இதோ தந்தேன்!

வாமனர் உருவம் விஸ்வரூபம் எடுக்குது. வளர்ந்து வளர்ந்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் நிக்கறார். முதல் அடி இந்த பூமி முழுசும். ரெண்டாவது அடி அந்த ஆகாயம் முழுசும் ஆச்சு. இப்ப மூணாவது அடி எங்கே வைக்கறது?மஹாவிஷ்ணுவோட விஸ்வரூப தரிசனம் லேசுலே கிடைக்கிற சமாச்சாரமா? ஆனா அன்னிக்கு அங்கே இருந்த எல்லாருக்கும் லபிச்சது. 'ஆ'ன்னு வாயைப் பொளந்துக்கிட்டு எல்லோரும் மெய்மறந்து நிக்கறாங்க. அப்ப ராஜா மகாபலி , மூணாவது அடி என் தலையிலே (சிரசில்)வையுங்கன்னு பணிவாச் சொல்றார்.

( வீடுங்களிலே எப்பவாவது  கைவேலையா இருக்கறப்ப  , சில சாமான்களை எங்கே வைக்கறதுன்னு, நாம  யாராவது கேட்டாங்கன்னா,'ஏன், என் தலையிலெ வையேன்'ன்னு சொல்றோமே இதுகூட இந்த சம்பவத்தாலே வந்ததுதானோ?)

அப்ப மஹாவிஷ்ணு கேக்கறார், 'உன்னுடைய கடைசி ஆசை என்ன?'ன்னு.ஒரு உயிரைப் பறிக்கிறதுக்கு முன்னே கேக்கவேண்டிய நியாயமான கேள்வி. அப்ப ராஜா வேண்டுறார்,'நான் என் நாட்டு மக்களை ரொம்ப நேசிக்கிறேன்.அதனாலே வருசத்துக்கு ஒருமுறை இந்த நாளில்              ( அன்னைக்கு நட்சத்திரம் திருவோணமா இருந்தது) ஜனங்களை வந்து பார்த்துட்டுப் போறதுக்குஅனுமதி தரணும்'ன்னு. அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டு அவர் தலைமேலே மூணாவது அடியை வச்சு அப்படியே அவரை பாதாள லோகத்துக்கு அனுப்பிட்டார் மஹாவிஷ்ணு.

அதுக்கு அடுத்த வருசத்துலே இருந்து சம்பவம் நடந்த சிங்கமாசம் ( நம்ம தமிழ்மாசம் ஆவணி), திருவோண நட்சத்திர நாளிலே மகாபலி பூலோகம் வந்து தன்னுடைய ஜனங்களைப் பார்த்துட்டுப் போறாருன்னு ஒரு ஐதீகம்.  ஓணம் பண்டிகையின் ஆரம்பம் இங்கே இதே இடத்தில் இருந்துதான்!

 அவரை வரவேற்கறதுக்காக ஒவ்வொருத்தரும்அவுங்கவுங்க வீட்டு வாசலிலே கோலம் போட்டு, அதை பூக்களாலேயே அலங்கரிக்குறாங்க. அதுதான் பூக்களம்னு சொல்றது.எல்லோரும் நல்ல புது ஆடைஆபரணங்கள் எல்லாம் அணிஞ்சு, அருமையான விருந்து சாப்பாடு தயாரிச்சு வச்சுஅவுங்களோட இஷ்ட ராஜாவான மகாபலிச் சக்ரவர்த்திக்கு அர்ப்பணிக்கிறாங்க. திருவோணத்தன்னிக்கு இது நடந்ததாலே இந்தப் பண்டிகைக்குப் பேரே 'ஓணம்'னு ஆகிருச்சு.

இந்தக்கோவிலில்  ஓணம் பண்டிகையை விசேஷமாக்  கொண்டாடுறாங்க. ஆதி காலத்தில் 28 நாட்கள் நடந்த விழா இப்போ பத்து நாள் பண்டிகையா ஆகி இருக்கு. இப்பெல்லாம் வீடுகளில்  மூணுநாள் பண்டிகையா சுருங்கிட்டாலும்  இங்கே கோவிலில் பத்து நாட்களுமே கொண்டாட்டம்தான். வீடுகளிலும் பூக்களத்தில் மரத்தினால் செஞ்ச த்ருக்காக்கரையப்பன் சிற்பத்தை வச்சுக்கும்பிடுவது வழக்கம்தான்.

இது நம்ம கேரளா க்ளப்பில் ஓணசமயத்து  வச்சுருந்த ஓணத்தப்பன்,  த்ருக்காக்கரையப்பன்

வட்டக் கருவறைக்குள்ளே   சங்கு சக்கரம், தாமரை, கதாயுதம்  ஏந்திய நாலு கைகளுடன்  தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்  வாமன மூர்த்தி,  திருக்காட்கரை அப்பன். (த்ருக்காக்கரையப்பன் என்று கேரள மக்கள்ஸ்க்கு)
கருவறையை வலம் வர்றோம். முக்கால் வாசி சுத்தி கிழக்கு வாசலுக்கு வரும்போது,  நடுவிலே சின்ன சங்கிலியில் ஒரு தடை! திரும்ப வந்த வழியே இடம் வந்து  மீண்டும்  பெருமாள் சந்நிதியில்  முடிக்கணுமாம்.!   ஆகட்டும் அப்படியே!


சந்நிதிதான் சிறுசே  தவிர  கோவில் ரொம்பவே பெருசுதான். வெளிப்ரகாரத்தில் சட்டத்தில் பிடிப்பிச்சுருக்கும் பித்தளை அகல்களில் விளக்கேற்றினால்   எவ்ளோ ஜ்வலிப்பாக இருக்குன்னு  தோணுச்சு. வலம் வர்றதுக்கு எளிதாக நல்ல காங்க்ரீட் பாதை போடு வச்சுருக்காங்க. கல்லிலும் மண்ணிலும் நடக்க வேணாம்!  மற்ற சந்நிதிகளுக்குப் போகவும் பாதை போட்டு வச்சுருப்பது விசேஷம்.

தாயாருக்குத் தனி சந்நிதி.  வாத்ஸல்யவல்லி  என்னும் பெருஞ்செல்வ நாயகி.
நம்மாழ்வார் வந்து பெருமாளை ஸேவித்து, பாடல்கள் பாடி மங்களசாஸனம் செய்த  108 திவ்யதேசக் கோவில்களில் இதுவும்  ஒன்னு.   நடை திறந்திருக்கும் சமயம்  எல்லாம் பதிவுபோல! காலை 5  முதல் 11, மாலை 5 முதல் எட்டு.
 வாமனமூர்த்தியின் திருக்கோவிலுக்குப் பக்கத்திலேயே  ஒரு சிவன் சந்நிதி!   மகாபலி சக்ரவர்த்தி வழிபட்ட  லிங்க ரூப சிவன் இவர்.  பிறை நிலா ஏழு ஒன்றின் கீழ் ஒன்றாய்  சிவலிங்கத்தின்  இருக்கும் அலங்காரம். இங்கேயும் போய் ஸேவிச்சுக்கிட்டோம்.


கோவில் தீர்த்தம் என்ற போர்டு போட்ட சின்னக்குளம் கபில தீர்த்தம்.  கபில மகரிஷிக்கு  இங்கே காட்சி கொடுத்தாராம் வாமனர்.கோவிலில் பூஜை செய்பவர்களைத்தவிர வேற யாரும் இறங்கக்கூடாதுன்னு  எழுதிப் போட்டுருக்காங்க. இந்தத் தீர்த்தத்தைக் கெண்டியில்  முகர்ந்து அதைக் கொண்டுதான்  நீர் கேட்ட மூன்றடி நிலம் தந்தேன்னு மாவேலி  தாரை வார்த்ததாக ஐதீகம்!திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, போர்டு வைப்பதில் மட்டும்  எவ்ளோ கெட்டிக்காரத்தனம்   காமிக்குது பாருங்க. தேவையான ஒரு வரி மட்டும் தமிழில்!

ப்ரம்ம ராக்ஷஸனுக்கு ஒரு சந்நிதி ! கோவிலுக்குள் ராக்ஷஸன் எப்படி வந்தான்?  கதை இருக்கான்னு  கேட்டால்   இருக்கு!இந்தப் பகுதியில்  ஒருத்தர் வாழைத்தோட்டம் வச்சுருந்தார். இலைகள் பெருசாவும் செழிப்பான மரங்களுமா இருந்துச்சே தவிர  எதுவும் குலை தள்ளவே இல்லை. மனம் உடைஞ்சு போனவர்,  பெருமாள் சந்நிதியிலே வந்து  பிரார்த்திச்சு வேண்டிக்கறார்.  பெருமாள் கருணைக்கண்களை  (நேத்ரம்) அவர்மீது  திருப்பினார். அவர் பார்வை பட்ட தோட்டம்  இன்னும் செழிப்பா வளர்ந்து பெரிய  பெரிய காய்களோடுள்ள குலைகளைத் தள்ளுச்சு.
பெருமாளின் நேத்திரம்  அருளிச்செய்ததால்   இதுக்கு நேத்திரவாழைன்னு பெயர்!  காலப்போக்கில் நேந்த்ரம்  என்றாச்சு:-)

 நன்றிக்கடனா  பெருமாளுக்கு  தங்கத்திலே ஒரு வாழைக்குலை செஞ்சு கொண்டு வந்து சமர்ப்பிக்கிறார்.

மேலே:  கோவிலில் அன்னதானம் நடக்கும் ஹால்  

கொஞ்சகாலத்துக்குக்கப்புறம்,  யோகி ஒருவர்  வந்து கோவிலில்  தங்கி பெருமாளை  வணங்கி வர்றார்.  நாட்கள்  கடந்து போகுது. ஒருநாள் தங்கப்பழக்குலை  காணாமப்போச்சு. அரசருக்கு சேதி  போனதும்,  அவர் வந்து பார்த்துட்டு,  தீர விசாரிக்காமல்  யோகிதான் திருடி இருக்கணுமுன்னு தண்டனையா சிறையில் அடைச்சுச்  சித்திரவதைகள்  செய்யச் சொல்லிட்டார்.
சிலநாட்களில் வாழைக்குலை சந்நிதியிலேயே  ஒருபக்கம்  இருக்குன்னு தெரியவருது. இதுக்குள்ளே  அவமானம் தாங்காத யோகி ,  சாபம் கொடுத்துட்டுத் தற்கொலை செஞ்சுக்கிட்டார். செத்துப்போனதும் ப்ரம்மராக்ஷஸனாக  ஊருக்குள்ளே  உலவறார்.  மனம் கலங்கிய அரசனும் ஊர்மக்களும்  சேர்ந்து சாபம் நீங்கறதுக்காகக் கோவிலுக்குள்ளேயே அவருக்கு ஒரு தனிச்சந்நிதி கட்டி தினமும் விளக்கேற்றி, நைவேத்யம் செஞ்சு பூஜிக்கறாங்க.கோவிலில்  நேந்திரப்பழக்குலையை  சமர்ப்பிக்கறது  இப்ப வழிபாட்டில் ஒன்னு. அதுவும் ப்ரத்யேகிச்சுப் பத்து நாள் கொண்டாடும்  ஓணப்பண்டிகையில் திருவோண நக்ஷத்திர திவஸம்  வாழைக்குலை சமர்ப்பணம் செய்ய  மக்கள் கூட்டம் முண்டியடிக்குமாம். கோவில்  கூரையில்  கட்டித் தொங்க விடுவாங்களாம்! ஹைய்யோ!!!ஒருமணி நேரத்தில் நல்லாச் சுத்தி தரிசனம்  ஆச்சு.  ஆறரை கூட ஆகலை அதுக்குள்ளே  இருட்டு வந்தாச்சு.  கிளம்பலாமுன்னு  வெளியே வந்தால் நம்ம சீனிவாஸன் வண்டியைக் கொண்டுவந்து  பரம்பிலேயே இடம் பார்த்து நிறுத்தி இருந்தார். திருவோணம் ஓடிட்டோரியத்தை அடுத்தே  பள்ளமா கீழே இறங்கும் வழி இருந்துருக்கு. நாம்தான்  கவனிக்கலை.
மேலே போகும் ரோடில் எதுத்தாப்லெ ஒரு  டீக்கடை இருக்கேன்னு  போனோம். இப்ப டீக்கடைகளின்  ஒப்பனைகள் மாறிப்போயிருக்கே!  பேக்கரி கம் டீக்கடை.  மூணு சாய்!  சூடாக் குடிச்சுட்டு  ஆலுவா அறைக்குத் திரும்பிட்டோம்.

இன்னிக்கு ரொம்பவெ சுத்தியாச்சு. ராச்சாப்பாட்டுக்கு ரூம் சர்வீஸ்தான். ஃப்ரைடு ரைஸ்.

தொடரும்...........:-)Friday, April 24, 2015

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், வரிசையில் வெல்லிவுட் வைக்கலாமா :-))) (தலைநகரத்தில் ! பகுதி 3)

எங்களைப் பார்த்ததும்  காருக்குள் இருந்த  கிவியனின் தங்க்ஸ் ஓடி வந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டாங்க.  ஆள் கொஞ்சம் கூட மாறலை.  உருவம், உள்ளம் எல்லாமே  முன்பிருந்ததைப்போல!  ஒன்பதரை வருசத்தைத் தூக்கிக் கடாசிட்டு,  அப்போ விட்டுப்போன எங்கள் பேச்சைத் தொடந்தோம்.

சாப்பிட்டீங்களா என்பதே முதல் கேள்வி!  ஆச்சு ஆச்சு. இந்தியாவின் விசேஷமே இதுதான்!  விருந்தோம்பல்!  ஒரே பார்வையில் ஊர் முச்சூடும் பார்க்கக் கூட்டிப் போனாங்க. அதே மவுண்ட்  விக்டோரியாதான்.  உச்சிவரை போகக்  கார்ப்பாதை இருக்கு.  நான்  ஒரு 22 வருசங்களுக்கு முன் வந்துருக்கேன்.  நம்ம விஜயா அக்கா வீட்டுக்கு விருந்தாளியாப் போயிருக்கோம் நானும், மகளும்.  அப்போ  மாமா கொண்டுபோய் காமிச்சார். ஸோ எனக்கு இது இரண்டாம்முறை. நம்ம கோபாலுக்கு இது முதல்:-)

பயணிகள் தவறாமல் வந்து போகும் இடம்.  காசிக்குப்போய் கங்கையைப் பார்க்காமல் வருவார் உண்டோ?   ரொம்பப் பெரிய மலை இல்லைன்னாலுமே ஊரைப் பறவைப் பார்வை பார்க்க இதைவிட வேற ஒரு சிறந்த இடம் கிடையாது.  196 மீட்டர் உயரம்தான். அடிகளில் மாத்தினால்  நிறைய உசரமாப்போயிரும்:-)

என்ன ஒன்னு.... இங்கே வருமுன் கால்களில் பாறாங்கல்லைக் கட்டிக்கணும். கொஞ்சம் ஏமாந்தால் பறந்துருவோம். ' விண்டி வெலிங்டன் ' என்றும் சொல்லலாம்.  ஏற்கெனவே  பயங்கர காத்தடிக்கும் ஊர். இதுலே கொஞ்சமே கொஞ்சம் உசரமான இடமுன்னாலும் கேக்கவா வேணும்?

உச்சிக்குப்போய்ச் சேர்ந்தோம்.கார்பார்க்கில் வண்டியை நிறுத்திட்டு இறங்கலாமுன்னு பார்த்தால்  கார்க்கதவைத்  திறக்க முடியாமல் காத்து தள்ளுது.  கண்ணுக்கு முன்  ஒரு டைல்ஸ் பதிச்ச கூடாரம்.  இந்தவகைக் கூடாரங்கள் அன்ட்டார்க்டிக் பகுதிகளில்  பயன்படுத்துவது. அங்கேயும் பனிப்புயல் கடுமையா வீசுமே!


Byrd Memorial என்று சொல்லும் இது ஏன் இங்கே?  இவர்தான் Richard E. Byrd.அமெரிக்கர்.  முதன்முதலில்  தென் துருவத்துக்கு  விமானத்தில் போய்ப் பார்த்தவர். செல்ஃப் ட்ரைவிங்!  இதுக்கு முன்னாலும் ரெண்டு முறை கப்பலில்  தென்துருவம் போய் வந்தவர்.  அமெரிகக் கடற்படை உத்தியோகஸ்தர்.  ரியர் அட்மிரல்  பதவி!  நியூஸியை  அடித்தளமா வச்சுக்கிட்டு  தென் துருவத்தை ஆராய்ஞ்சவர்.தென் துருவத்துக்கு மிகவும் அருகில் இருக்கும் நாடு இது என்பதால்  இப்பவும்  அன்டார்க்டிக்  ஆராய்ச்சிக்கும்,  அங்கு போய்வரவும், தங்கி இருப்பவர்களுக்கு  தேவையான உணவு,மருந்து,  உடைகள், கருவிகள் இப்படி சப்ளைகள்  செய்யவும் நியூஸிதான்  பெஸ்ட் ப்ளேஸ்.  அதிலும்  எங்க ஊர் கிறைஸ்ட்சர்ச் (தெற்குத்தீவு) விமான நிலையத்தில்தான்  இதுக்கான  விசேஷ ஏற்பாடுகள்  இருக்கு.  எங்கூர் துறைமுகத்தில் இருந்துதான்  தென் துருவ ஆராய்ச்சிக்குக் கப்பல்களும் போய்  வருது. ஏற்கெனவே சொல்லி இருக்கேனோ? அப்படியெல்லாம்  விட்டு வச்சிருப்பேனா என்ன:-)
கூடார நினைவுச் சின்னத்தில்,  தென் துருவத்தில் இருந்து கொண்டு வந்த கற்களையும் பதிச்சு வச்சுருக்காங்க. பக்கத்துலேயே  அந்தக் காலக்கட்டத்துலே இங்கிருந்த  மவோரியர்களின் சமூக அமைப்பைக் கோடிகாட்டும் சில குறிப்புகள். சரித்திரம் முக்கியம் அமைச்சரே!
நியூஸியின் வடக்குத்தீவு முடிவில் இருக்கும் வெலிங்டனுக்கும், தெற்குத்தீவின் ஆரம்பத்தில் இருக்கும்  பிக்டன் என்ற  ஊருக்கும்  இடையில்தான்  வடக்கு தெற்கு போய் வரும் கடல்பாதை!  குக் ஸ்டெர்ய்ட். முப்பது கிமீ  இடைவெளிதான் .  ஆனால்  கொந்தளித்துப் பொங்கும் கடல்பகுதி.  அதனால் எப்பவும் வெலிங்டனில் வீசும் கொடும்காற்றுக்கு  இதுதான் காரணமுன்னு  சொல்லலாம்.   40 knot காற்றே போதுமாம் ஆளைத் தூக்க!


அக்கம்பக்கம் எல்லாம் கொஞ்சம் க்ளிக்கிட்டு அருகில் இருக்கும் லுக்கவுட் மேட்டுக்கு  ஏறினோம்.  ஒரு அம்பதறுவது படிகள் இருக்கு. என் தடுமாற்றம் பார்த்த கிவியன், இங்கிருந்தே பார்க்கலாமா இல்லை  மேலே போகலாமான்னார்.  அஞ்சாநெஞ்சள்  சும்மா இருந்ததா சரித்திரம் உண்டோ?

முதல்  செட் ஆஃப் படிகள் ஏறுனதும்  பீரங்கி ஒன்னு ரெடியா இருக்கு!  உலகப்போர் நடந்த சமயம்  எங்கே எதிரி இங்கே இந்த நாட்டுக்கு வந்துருவானோ என்ற பதற்றத்தில் வருபவனை ஓட்ட  அங்கங்கே பீரங்கிகளைக் கொணாந்து நிப்பாட்டி வச்சவங்க நாங்க.  இதைவிட பெரிய சைஸ் பீரங்கி தளம் கூட தென்கோடிப் பயணத்துலே பார்த்தது நினைவிருக்கோ?


எதிரியும்  வந்து, போர்க்கைதிகளை ஒருவேளை பிடிச்சுட்டோமுன்னா அவுங்களை   அடைச்சு வைக்க முன்னேற்பாடா  சிறைச்சாலை கூட கட்டி வச்சொம்லெ:-)  கடைசியில் வராம ஏமாத்திப்பிட்டானே!!!!

அட... இதுதான்  பிக்டனில் இருந்து ஃபெர்ரி வரும் வழி.  தூரக்கப்பாரு....ஒன்னு வந்துக்கிட்டு இருக்கு!

அதுதான் பழைய க்ரிக்கெட் ஸ்டேடியம்.  விளையாடிக்கிட்டு இருக்காங்க பாருங்க. ஸ்லிப்புலே நாலுபேர்  என்றார்  கிவியன்.

இந்தப்பக்கம்  இருக்கே  இதுதான் வெஸ்ட்பாக் ஸ்டேடியம்.  உலகக்கோப்பையில்  பார்த்தீங்கதானே?

ஆமாம். இது புத்தம் புதுசாச்சே!
அதையொட்டுனாப்போல  போர்ட்.கண்டெய்னர்  டெர்மினல் போல இருக்கே!
360 டிகிரி  வ்யூ!  எதுவும் மறைக்காது.  இங்கிருந்து  பவுர்ணமி நிலா,  முக்கியமாக க்ரஹணக் காலங்களில்  சந்திரனை பாம்பு விழுங்குவதை பார்க்கவே  கூட்டம் வருதாம்!
தூரக்கே   வெல்லிவுட்   என்று ஒரு ஸைன்  போர்டு வச்சாக் கொள்ளாம் என்ற பேச்சு  எழும்புது. நாட்டின் புகழை உலகநாடுகளில் பரப்பிய சினிமாத் தொழிலால்  இங்கே வருசத்துக்கு  285 மில்லியன் டாலர்கள் தலைநகரத்துக்குள் வந்துக்கிட்டுருக்கு!  சினிமா எடுத்ததோடு நிற்காமல்,  படப்பிடிப்பு நடந்த இடங்களையே ஒரு ஷோவா ஆக்கிட்ட திறமையை என்ன சொல்றது!  அந்த இடங்களைப் பார்க்கணுமுன்னே  உலக மக்கள் பலர் சுற்றுலா வர்றாங்க.  வந்திறங்கும் விமான நிலையத்தில்  ஊரின் முக்கியத்துவம் காமிக்க இப்படி ஒரு  விளம்பரப்பலகை வைக்கணும்.  விமானத்துலே வந்து இறங்கும்போதே கண்ணில் பளிச்ன்னு படணும் என்பதுதான் ஐடியா.

நகரமக்களும் நாட்டு மக்களுமா இதுக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் காமிச்சாங்க.  விமான நிலையத்துக்கு பெரிய பாகஸ்த்தர்  வெலிங்டன் சிடிக்கவுன்ஸில்தான்.  ஊருக்கு வரும் வருமானத்தை வேணாமுன்னு தள்ள மனசு வருமா?  பொதுமக்களிடம்  வாக்கெடுப்பு நடத்தினாங்க.   வெல்லிவுட் தோத்துப்போச்சு.

மேலே தோல்வி  , கீழே வெற்றி:-)
கடைசியில்  2012  ஜூலை மாசம், 'அடிக்கும் காத்து  ஊரையேத் தூக்கிட்டுப் போயிரும்  என்ற உண்மை நிலையை  உரப்பிக்கும் விதமா  வெலிங்டன் ப்ளோன் அவே' ன்னு குறிப்பால் சொல்லும் விதம் இப்படி ஒன்னு  வச்சாங்க. வேட்டா தான் தயாரிச்சுக்கொடுத்துச்சு. செலவு எம்பதினாயிரம் டாலர்:(   இப்பக் காத்துலே உண்மையாவே பிய்ச்சுக்கிச்சுன்னு  சொன்னாங்க.
இன்னொரு பக்க மலை அடிவாரத்தைக் காமிச்சு அங்கேதான் ஃபால்ட் லைன் ஓடுதுன்னார் கிவியன். பெருமாளே....  ஆபத்து ஒன்னும் இல்லாமக் காப்பாத்துன்னு  வேண்டிக்கிட்டேன்.  ரொம்பவே நெருக்கமான  கட்டிடங்கள் அதுவும் ஒவ்வொன்னும்  20, 25 மாடிகள்!   அழிவைக் கண்ட கண்ணுக்கு இதையெல்லாம்  நினைச்சாவே நடுக்கம்தான்:(

எங்கூர்லே ரெண்டே ரெண்டுதான் ஒரு ஆசைக்குக் கட்டுனோம். அதில் ஒன்னு நிலநடுக்கத்தில் போயிருச்சு.  இப்ப கண்ணே கண்ணு ஒன்னே ஒன்னுதான்.

நம்மைப்போல் வந்த பயணிகள் கூட்டம் இங்கே அதிகம்தான்.  ஒரு இருபது ஆட்களுக்கு மேலேயே!

சுற்றுலாப்பயணிகளைச்சுமந்து வந்த  பஸ் ஒன்னு வந்து நின்னதும் வெள்ளை உடுப்பு மக்கள்ஸ்  இறங்கினாங்க.  ப்ரம்மகுமாரிகள் சங்கமாம்.
சுத்துமுத்தும் பரந்து விரிஞ்சு போகும் ஊர். மலைகளிலும் குன்றுகளிலும்   ஏகப்பட்ட வீடுகளும் கட்டிடங்களும்.  இரவு நேரத்தில் பார்த்தால் கார்த்திகை தீபம் ஏத்துனாப்போல வெளிச்சம் மின்னும், இல்லே?

மேலே இருந்து பார்க்கும்போது ஒரு சர்ச்சின் தலை தெரிஞ்சது. அப்புறமா கீழே இறங்கி  அதே சர்ச் 'பார்த்துக்கிட்டு' இருக்கும் பீச்சுக்குப் போனோம். குட்டியூண்டு பீச்!
பிய்ச்சுக்கிட்டுப்போகும் கடற்காற்றில் எதிர்நீச்சல்போட்டு சிறகுகள்  ஓய்ஞ்சு போன நிலையில் கடற்காக்கைகள் எனும் ஸீகல்ஸ்  எல்லாம் சொல்லி வச்சமாதிரி வரிசையில் அடங்கி உக்கார்ந்து இருந்தது சூப்பர்! கண்ணு முழிச்சுருக்கே தவிர அசைவொன்றுமில்லை!


ஹொட்டேலில் நம்மை சந்திக்க வந்தவரிடம்  மாலையில் கோவிலுக்குப்  போகணும் என்றதோடு எங்களை முழுசுமா கிவியன் தம்பதிகள் வசம் ஒப்புக்கொடுத்துட்டதால் கவலை இல்லாமல் இருந்தோம்.  அடுத்த திட்டத்தைச் சொன்னாங்க.


நேரா கிவியனின் பெற்றோர்களைப்போய்ப் பார்த்துட்டு அப்படியே  கோவிலுக்குப் போறோமாம். அறைக்கு வந்து விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகங்களை எடுத்துக்கலாமுன்னு  ஹொட்டேலுக்கு வந்தோம். கூட வந்தா எங்கே நடக்க வச்சுருவாரோன்னு  கிவியனை வண்டியிலேயே விட்டுட்டு நாங்க மூணுபேர்  மட்டும் வழி தேடிப்போறோம்:-)  முதலில் கண்ணில்பட்ட ஒரு  லிஃப்ட்க்குள் போய் 19 அமுக்கிட்டு ஒரு வெற்றிப்பார்வை பார்த்தார் கோபால். லிஃப்ட்  கிளம்பவே இல்லை! 26 மாடின்னு காமிக்குதே தவிர எந்த  எண்ணைத் தொட்டாலும் அசையலையே!

சரிதான். இது ஆஃபீஸ்களுக்கு மட்டும் இருக்கும். இப்போ வீக் எண்டில்லையோன்னு  அடுத்த பக்கம் எதாவது இருக்கான்னு எட்டிப் பார்த்தால்  எட்டாவது  மாடி ஹொட்டேல் லாபிக்குப்போகும்  கண்ணாடிக்கதவு!  அதன்வழியாப்போய்  இன்னொரு லிஃப்ட்லே 19க்கு ஏறியாச்.  புத்தகங்களை எடுத்துக்கிட்டுப் போனவழியாகவே  கார்பார்க் பக்கம் வந்துட்டோம். அஞ்சே நிமிசம்!  ஆச்சரியப்பட்ட கிவியனிடம்  ......    அதெல்லாம் ஈஸி வழி கண்டுபுடிச்சுருவொம்லெ !

 தன்னுடைய  வலைத்தலைப்பை மட்டும் அனுசரிக்கிறாரேன்னு  'ஏன் இப்பெல்லாம்  எழுதறதில்லை?' ன்னு கேட்டதுக்கு, எழுதணுமுன்னு தோணலைங்கறார்.  பத்து வருசமா பதிவர். கடைசிப்பதிவு போட்டு ஒரு வருசமாகுது !   மௌனம் காத்தால் எப்படி?  ட்விட்டர், ஃபேஸ் புக் இப்படி அடிச்சு ஆடிக்கிட்டு இருப்பதுகூட காரணமா இருக்கலாம்!

வாசகர்கள் சந்திப்பு நடக்கப்போகுதுன்னு அப்ப எனக்குத் தெரியாது!

தொடரும்............:-)